Monday, November 30, 2009

கடன் அட்டை...தெரிந்ததும் தெரியாததும்!

பதிவுக்கு முன் "கடன் அட்டை...தெரிந்ததும் தெரியாததும்!" என்ற தலைப்பில் என் பதிவை விகடன் மற்றும் யூத்புல் விகடன் இணையதளங்களில் வெளியிட்டு என் தளத்தை குட் பிளாக்ஸ் வரிசையில் இணைத்ததற்கு "ஆனந்த விகடன் குழுவுக்கு" என் மனமார்ந்த நன்றி!.



இந்த பதிவை விகடன் தளத்தில் படிக்க இங்கு யூத்புல் விகடனில் சொடுக்கவும்.



மேலும் மேனகாவின் அன்பு விருதுக்கும் என் நன்றி.




"கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்." எது எப்படி இருந்தாலும் நம்மிடம் இருப்பதை வைத்து சந்தோஷமாக வாழ கற்றுக் கொள்ளவேண்டும். கடன் இல்லாத வாழ்கையே இன்பமானது,' என என் தந்தை அடிக்கடி சொல்வார்.

அதாவது, ஈஸ்வரன் என்ற பெயருடைய இலங்கை மன்னன் எல்லாவற்றுக்கும் மேலாக தன் உயிர் என்று இத்தனையையும் இழக்க போகும் நேரத்தில், அவனது மன நிலை இப்படி இருந்ததாம். 'இது எல்லாவற்றையும் விட கடன் பட்டவன் மனம் அதிகமாக வருந்தும்,' என்பது இதன் பொருள்.

ஆனால், இன்றைய ஆடம்பர உலகத்தில் கடன் அட்டை (கிரெடிட் கார்ட்) என்பது ஒரு சமுதாய அந்தஸ்தாகி விட்டது. இத்தனை கடன் அட்டை அல்லது இவ்வளவு கடன் மதிப்புள்ள கடன் அட்டைகளை வைத்திருக்கிறேன் என்பது ஒரு பகட்டாகிவிடாது.

ஒரு பொருள் வாங்கும் இடத்தில் சொந்தமாக காசை கொடுத்து வாங்குபவரை விட, கடன் அட்டையை கொடுத்து கடனுக்கு வாங்குபவர்களுக்கு ஒரு தனி மதிப்பு கிடைப்பது கூட ஒரு காரணமாக இருக்கலாம்.

அது மட்டுமில்லாமல் இன்று தனியார் வங்கிகள் தொழில் போட்டி காரணாமாக முன்பு போல்
இல்லாமல் பல சலுகைகள் தருகின்றன, குறைந்த சேவை நேரம், அதிக சான்று பத்திரமோ, இதர விளக்க சான்றிதல்களோ தேவை இல்லை, அதிக பட்சமாக வருமான வரி அல்லது மாத ஊதிய சான்றிதல் இருந்தாலே போதுமானது, ஒரு பத்து நாட்களில் உங்கள் ஊதியத்தை விட இரு மடங்கு கடன் தகுதியுள்ள அட்டைகள் உங்கள் வீடு தேடி வந்து விடும்.

இது போல் ஒரே நேரத்தில் மூன்று முதல் ஐந்து வங்கிகளில் ஒரே நபர் கடன் அட்டையை பெறுவது இன்று மிக எளிதாகிவிட்டது.

ஆனால், இதில் எத்தனை பேருக்கு அதன் முழு வட்டி விபரம் மற்றும் இதர சேவை கட்டண விகிதம் முதலியன தெரியும் என்றோ அல்லது இதில் எத்தனை பேருக்கு கடன் அட்டை(யை)களை முறையாக பராமரிக்க தெரியும் என்றோ கேட்டால் கிடைக்கும் பதில் மிக வேடிக்கையாகவே இருக்கும்.

மேலும், இதன் அடிப்படை புரியாததால் இன்று எத்தனையோ பேர் நல்ல வேலை மற்றும் ஊதியத்தில் இருந்தும் கூட வாங்கும் முழு ஊதியத்தையும் கடன் அட்டைக்கு வட்டி கட்டி விட்டு, மீண்டும் அந்த மாத வாழ்க்கைக்கு அதே அட்டையை பயன்படுத்தி பணம் எடுத்து எப்போதும் மன உளைச்சலுடன் கடனிலேயே வாழ்கிறார்கள் என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.

இதில் நம் கணினி துறையின் சதவீதம் தான் அதிகமாக இருக்கும் என்று இங்கு நான் தனியாக ஒரு முறை சொல்ல தேவையில்லை.

நான் எதோ, இன்றைய அவசர உலகத்தில் கடன் அட்டையின் அவசியத்தை மற்றும் பாதுகாப்பை பற்றி புரியாமல், கடன் அட்டைக்கு எதிராக சொல்வதாக நினைக்க வேண்டாம். நானும் கடன் அட்டையை வைத்து இருக்கிறேன், முறையாக கடன் அட்டையை பயன்படுத்தும் வழி முறைகளை தேடியதில், எனக்கு கிடைத்த அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.



கடன் அட்டையைப் பொறுத்த வரை மூன்று முக்கிய பகுதிகளாக பிரிக்கலாம். இதில் சொல்வதற்கு நிறைய இருந்தாலும் சுருக்கமாக வேண்டியதை மட்டும் பார்ப்போம்.

I- கடன் அட்டையை தேர்வு செய்வது எப்படி?

II- தினசரி வாழ்கையில் எவ்வாறு பயன்படுத்துவது?

III- கடன் அட்டை(யை)களை எவ்வாறு பராமரிப்பது?

கடன் அட்டையை தேர்வு செய்வது எப்படி?

கண்ணில் பட்ட வங்கிகளில் எல்லாம் விண்ணப்பிக்காமல், முதலில் நீங்களாகவே அதன் இதர ஒப்பந்தங்களை கவனமாக ஆராய்ந்து சில அடிப்படை தகவல்களை சேகரியுங்கள்.

கடன் அட்டைக்கான மாத அல்லது வருட சேவை கட்டணம், மேல் சொன்னபடி தனியார்
வங்கிகள் தொழில் போட்டிக்காக இதில் பல சலுகைகள் தருகின்றன. மூன்று வருட இலவச சேவை, ஐந்து வருட இலவச சேவை மற்றும் சில வாழ்நாள் முழுவதும் இலவச சேவை, அதாவது அந்த வங்கியின் கடன் அட்டையை பயன்படுத்த நீங்கள் கட்ட வேண்டிய சேவை கட்டணத்தை குறையுங்கள்.

இதில் கவனிக்க வேண்டியது, வங்கி விற்பனை ஏஜன்ட்களின் வெறும் வாய் பேச்சை மட்டும் நம்பாமல் அதற்கான எழுத்து ஆதாரத்தை பத்திரமாக வைத்து இருங்கள். இதனால் இடைப்பட்ட இலவச சேவை காலத்தில் உங்களிடம் சேவை கட்டணம் வசூலித்தால் நீங்கள் உங்கள் பணத்தை திரும்ப பெற இது உதவும்.

உங்கள் மாத ரசீதை கவனமாக படியுங்கள். நீங்கள் பயன்படுத்தாத அல்லது குறிப்பிட்ட இலவச சேவை காலத்துக்கு முன் உங்களிடம் சேவை கட்டணம் வசூலித்து இருந்தால், உடனே சம்மந்தபட்டவர்களை அழைத்து, அதை திரும்ப உங்கள் கணக்கில் சேர்க்கும் படி செய்யுங்கள். உங்களுடைய அட்டையின் மொத்த கடன் அளவை தெளிவாக தெரிந்து வைத்திருப்பது மிக அவசியமாகும்.

இது தவிர எந்த ஒரு கடன் அட்டை கணக்கை துவங்கும் முன், அந்த அட்டை சார்ந்த வட்டி விகிதத்தை பாருங்கள், மற்ற வங்கி அல்லது மற்ற கடன் அட்டை முறை (மாஸ்டர், விசா) விட அதிகமாக வட்டி இருந்தால், அந்த அட்டையை தவிர்த்துவிடுங்கள்.

மாத தவணை முறை என்பது ஒவ்வொரு அட்டைக்கும் மாறுபட்டாலும், பொதுவாக 29 முதல் 31 நாட்களுக்குள் வருமாறு தான் இருக்கும். எனவே நீங்கள் பயன்படுத்திய தொகைக்கு முதல் முப்பது நாள் வரை வட்டி இல்லை என்று சொன்னாலும், உங்களுக்கு வரும் ரசீது முதல் முப்பது நாள் தாண்டி வட்டியுடன் வராதவாறு பார்த்து கொள்ளுங்கள் அல்லது முதல் முப்பது நாளுக்குள் உங்களால் அந்த தொகையை திரும்ப கட்ட முடியுமா என்று சம்பந்தப்பட்ட வங்கியை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

முடிந்த வரை அந்தந்த வங்கி கடன் அட்டைகளை மட்டும் பயன்படுத்துங்கள். இரு மாறுபட்ட வங்கிகள் தொழில் கூட்டணியில் இருக்கும் கடன் அட்டைகளை தவிருங்கள் அல்லது சம்மந்தப்பட்ட இரு வங்கிகளுக்காக தனியான சேவை கட்டணம் எதுவும் இல்லை என்பதை முதலில் உறுதிபடுத்திக் கொள்ளுங்கள்.

ஆக மொத்தத்தில், எந்த ஒரு கடன் அட்டையை தேர்வு செய்யும் முன், அது முடிந்த வரை அதிக இலவச சேவை கட்டணம் மற்றும் குறைந்த வட்டியுடைய வங்கி மற்றும் இதர வரிகள் இல்லாத கடன் அட்டையாக இருக்கும்படி முடிவு செய்ய வேண்டும்.

தினசரி வாழ்கையில் எவ்வாறு பயன்படுத்துவது?

ஆசையே துன்பத்துக்கு காரணம் என்று படித்து புரிந்து இருந்தாலும், எல்லோராலும் அதை
முழுவதும் கடை பிடிப்பது என்பது சாத்தியமில்லை என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் அதை கட்டுப்படுத்தவாது நாம் நிச்சியம் தெரிந்து இருக்க வேண்டும்.

அப்படியும் முடியாதவர்கள், எல்லா நேரமும் கடன் அட்டையை கையில் வைத்து இருப்பதை தவிர்க்கலாம். இதனால் திட்டமிட்ட அவசியாமான பொருள்களை மட்டும் வாங்கும்படி நம்மை நாமே கட்டுப்படுத்திக்கொள்ள முடியும்.

கடன் அட்டையை பயன்படுத்தி எந்த ஒரு பொருளையும் வாங்கும் முன், உங்கள் கடன் அட்டையில் மீதமுள்ள உங்கள் கடன் அளவை தெரிந்து வைத்திருப்பது மிக அவசியம். மேலும், நம் அன்றாட வாழ்கையில் வாங்கும் அந்த பொருளின் தேவையை ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.

வெறும் ஆடம்பரத்துக்காக எதையும் வாங்கி உங்கள் கடன் சுமையை கூட்டிகொள்வது என்பது புத்திசாலித்தனமல்ல. அவசர காலத்தில் இது மேலும் உங்ககளை மன உளைச்சலுக்கு ஆளாக்கும். முடிந்த வரை கையிருப்பை பயன்படுத்தி வாழ்வது நல்லது. மிக அவசியமான அல்லது அவசரமான காலத்துக்கு மட்டும் கடன் அட்டையை பயன்படுத்துவது மிக பாதுகாப்பனது.

எப்போது கடன் அட்டையை பயன்படுத்தினாலும் அடுத்து வரும் மாத தவணை ரசீதோடு ஒப்பிட்டு சரி பார்க்கும் வரை அந்த பொருள் வாங்கிய ரசீதை பாதுகாத்து வைத்திருக்க வேண்டும். முடிந்த வரை அந்த பொருளின் விலை உங்கள் ஊதிய "மாத சேமிப்பில்" மூன்று முதல் நான்கு தவணைக்குள் அடங்குமாறு இருப்பது நல்லது. இதனால், உங்கள் இதர வாழ்க்கை தரம் பாதிக்காது என்பது மட்டுமில்லாமல், கடன் அட்டையின் வட்டி விகிதம் அதிகபட்சமாக 14.58% முதல் 29.99% வரை இருக்ககூடும் என்பதை நினைவில் வைத்து இருங்கள்.

மேலும் எந்த ஒரு தொகையும் மாத தவணையில் குறைந்தது மூன்று வருடம் அதாவது 36-க்கு தவணை வருமாறு வட்டியுடன் சேர்த்து வருவதால், குறைந்த பட்ச தவணை மட்டும் கட்டுவதை தவிர்த்து, முடிந்த வரை அதிகமாக கட்டுங்கள், தவணை கூட கூட வட்டியும் கூடும் என்பதால், அந்த மொத்த தொகைக்காக நீங்கள் கட்டும் வட்டியின் அளவை குறைக்க முடியும்.

முடியாத பட்சத்தில் கண்டிப்பாக குறைந்த பட்ச தவணையை மட்டும் கட்டுவது மிக மிக அவசியமாகும். இதனால் மேலும் வட்டி, தாமத கட்டணம் மற்றும் இதர சேவை கட்டணம் போன்றவற்றில் உங்கள் பணம் வீணாவதை தவிர்க்க முடியும்.

மிக முக்கியமாக உங்கள் கடன் அட்டையில் மீதம் உள்ள கடன் அளவை உங்கள் சேமிப்பு தொகையாக நினைக்க வேண்டாம். எதிர்பாராத விபத்து, வேலை இழப்பு போன்ற அவசர காலங்களுக்காக ஒரு சேமிப்பு எப்போதும் உங்கள் கைவசம் இருப்பது அவசியம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

கடன் அட்டை(யை)களை எவ்வாறு பராமரிப்பது?

மேலே குறிப்பிட்ட கருத்துகளை பின்பற்றும் போது, கடன் அட்டை(யை)களை பராமரிப்பது ஒன்றும் பெரிய சூத்திரம் இல்லை. இருந்தாலும் தேவையற்ற இடங்களில், நேரங்களில் கடன் அட்டையை பயன்படுத்தாதது போல, அது சம்மதப்பட்ட தகவல்களையும் பயன்படுத்தக்கூடாது.

நண்பர்களிடம், மின் அஞ்சல் போன்றவற்றில் கடன் அட்டை விபரங்களை தவிர்க்க வேண்டும். அதன் ரசீது காகிதங்களை கிழித்தபின்தான் குப்பையில் போட வேண்டும். கடன் அட்டை முறைகேடு தொகைக்கு அதன் உரிமையாளரே முழுவதும் பொறுப்பு என்பதை எப்போதும் நினைவில் வைத்து இருங்கள்.



எப்போதும் உங்கள் கடன் தொகை, உங்கள் கடன் அட்டையின் மொத்த கடன் அளவுக்குள் இருக்குமாறு கடை பிடிப்பது மிக முக்கியம். இதனால் தேவையற்ற இதர வரி மற்றும் வட்டியை குறைக்க முடியும்.

மேற்ச்சொன்னபடி குறைந்த பட்ச மாத தவணையை கூட கட்ட முடியாவிட்டாலும், அது சம்மதப்பட்ட வங்கிகளின் தொடர்பு எல்லைக்கு அப்பால் போகாமல், நீங்களாகவே அவர்களை தொடர்பு கொண்டு உங்கள் அடுத்த தவணை நேரத்தை மாற்றி அமைப்பதே சிறந்தது.

எந்த ஒரு சூழ்நிலையிலும் எங்கே முழு தொகையையும் உடனே கட்ட சொல்லி விடுவார்களோ என்று பயந்து ஓடி ஒழிய வேண்டாம். உங்கள் மாத தவணையை மட்டும் வட்டியுடன் கட்ட முழு உரிமை உண்டு என்பதால், உங்கள் மாத தவணையை தவறாமல் கட்டும் வழியை மட்டும் பாருங்கள்.

வங்கிகளுக்கான பொதுவான தகவல் களஞ்சியம் "சிபில் தளத்தில்" உங்களை பற்றிய தகவல்களுடன் உங்கள் அணைத்து வங்கி மற்றும் கடன் அளவை மற்றும் தனிப்பட்ட வாடிக்கையாளராக உங்கள் தவணை கட்டும் திறனை, அதாவது நேர்மையை எல்லா வங்கிகளும் பார்க்க முடியும் என்பதால் உங்கள் வாக்கில் நேர்மையை கடைபிடியுங்கள்.

அதாவது, உண்மையில் முடியாத ஒரு சூழ்நிலையில், உண்மையான மறுதவணை காலத்தை மட்டும் சொல்லுங்கள். 'இந்த மாதம் முடியாது; அடுத்த மாதம் இதற்கான தாமத கட்டணத்துடன் சேர்த்து கட்டி விடுகிறேன்,' என்று சொல்வதால் மற்றும் செய்வதால் யாரும் உங்களை பிடித்து "தூக்கில் போட போவதில்லை".

இதை விட்டுவிட்டு, 'இதோ இன்று கட்டி விடுகிறேன், நாளை கட்டி விடுகிறேன்' என்று தவறான சாக்கு போக்குகளை தந்து உங்கள் பெயரை சிவில் தளத்தில் கெடுத்துக் கொள்வதால், பிற்காலத்தில் தேவையான நேரத்தில் சில சிக்கல்கள் வரக்கூடும் என்பதை நினைவில் வைத்திருங்கள். ஒரு முறை இந்தத் தளத்தில் உங்கள் பெயரில் நம்பிக்கை இல்லாத வாடிக்கையாளர் என்று கருப்பு புள்ளி விழுந்து விட்டால், அது மாற உங்கள் நிதி நிலையை பொறுத்து மூன்று முதல் ஏழு வருடங்களாவது ஆகும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் உள்ள கடனுக்கு உங்களை ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு மேல் ஒரு வங்கி தொடர்ப்பு கொள்ள முடியவில்லை என்றால், அவர்கள் உங்கள் மேல் சட்டப் படி நடவடிக்கை எடுக்க முடியும் என்பதை தவிர, வேறு முறைகளில் உங்களை அணுகி துன்புறுத்தவோ மனஉளைச்சல் கொடுக்கவோ சட்டத்தில் இடம் இல்லை என்பதையும் நினைவில் வைத்து இருங்கள். அதனால் ஓடி ஒளிவதில் எந்த பயனும் கிடைக்கப் போவதில்லை.

பல கடன் அட்டைகளை வருமானத்துக்கு மேல் பயன்படுத்தி விட்டு, அதில் இருந்து வெளியே வர துடிப்பவர்கள், ரவுண்டு - ராபின் மற்றும் மாற்று வங்கியின் குறிப்பிட்ட கால வட்டி இல்லா பண மாற்று முறையை கடை பிடித்தால், சீக்கிரம் உங்கள் கடன் தொகையை கட்டுக்குள் கொண்டு வர முடியும்.

மேலே சொன்ன இரண்டு முறைகளையும் பயன்படுத்த நினைக்கும் போது, குறைந்த வட்டி மற்றும் சேவை கட்டண முறையை பார்த்து தேர்ந்து எடுக்க வேண்டியது மிக முக்கியம்.

கடன் இல்லாத மனிதன் மிக குறைவு என்பதால் அதை அவமானமாக நினைக்காமல், குடும்பத்தாரிடம் மற்றும் உண்மையான நண்பர்களிடம் கலந்து ஆலோசித்து "தேவை என்றால் உதவி பெற்று" முடிந்த வரை உங்கள் கடனை அடைத்து விட்டு, தவறாமல் உங்களுக்கு சரியான நேரத்தில் உதவியவர்களுக்கு திரும்ப கொடுத்து விடுவதால் நல்ல உறவை அல்லது நட்பை இழக்காமல் பார்த்துக்கொள்ள முடியும்.

அதுவும் முடியாதவர்கள் அருகில் உள்ள அரசாங்க கடன் அட்டை மற்றும் கடன் ஆலோசனை மையங்களை உடனடியாக தொடர்பு கொண்டு முடிந்த வரை விரைவில் உங்கள் கடன் சுமையில் இருந்து விடுபட முயற்சி செய்வதில் தவறில்லை.

ஆக மொத்தத்தில் கடன் அட்டை என்பதை அவசர கால துருப்பு சீட்டாக பயன்படுத்தவும், தினசரி வாழ்க்கை பயணச்சீட்டாக பயன்படுத்தாமல் இருக்கவும் கற்று கொள்ள வேண்டும்.

இப்படி சந்தோஷம் என்பது வெறும் ஆடம்பரத்தில் மட்டும் இல்லை என்பதை உணர்ந்து, இருப்பதை வைத்து வளமோடு வாழ்வதே நமக்கும் நம் குடும்பத்துக்கும் ஆனந்தம் தரும்.

நீங்கள் கடன் அட்டையை மற்றும் அதன் பாதிப்பை பற்றி இன்னும் அதிகமாக தெரிந்து கொள்ள வேண்டும் நினைத்தாலோ அல்லது மேல் சொன்னபடி கடன் அட்டையை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தி உள்ளே சென்று விட்டு வெளியே வர வழி தெரியாமல் உதவியை எதிர்பார்த்தோ நட்பு முறை இலவச ஆலோசனைக்கு, இங்கே பின்னூட்டமாக கேட்கலாம்.

கடன் அட்டையை நேசிக்கும் உங்கள் நண்பர்களிடம் இந்தக் கட்டுரையைப் பகிர்ந்து கொண்டு அவர்களும் பயன் பெற நீங்கள் உதவலாமே!

21 comments:

  1. விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடிய நல்ல கட்டுரை என்பதைக் கூறி இங்கேயும் பாராட்டிக் கொள்கிறேன் சிங்கக்குட்டி!

    ReplyDelete
  2. விகடன் மற்றும் யூத்புல் விகடனில் வெளிவந்ததற்க்கு வாழ்த்துக்கள்!!


    கடன் அட்டையை பற்றிய பதிவு கலக்கல்.நன்றி சிங்கக்குட்டி!!

    ReplyDelete
  3. உங்கள் அன்புக்கும் கருத்துக்கும் நன்றி ராமலக்ஷ்மி.

    எப்போதும் உங்கள் முதல் பின்னூட்டம் எனக்கு ஒரு தனி ஊக்கத்தை கொடுக்கிறது :-)

    ReplyDelete
  4. நன்றி மேனகா, எல்லாம் உங்கள் ஆதரவுதான் :-)

    படம் புதிதாக இருக்கிறது :-)

    ReplyDelete
  5. விகடனில் வந்தமைக்கு வாழ்த்துகள்..! பயனுள்ள கட்டுரை..!

    ReplyDelete
  6. தகவல் களஞ்சியம்.. பகிர்வுக்கு நன்றி மற்றும் விகடனுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. தேவையான பதிவு

    ReplyDelete
  8. அருமையான தெளிவான கட்டுரை நண்பரே..!

    ReplyDelete
  9. நன்றி,

    கலகலப்ரியா,

    நசரேயன்,

    அம்மு மற்றும் சென்ஷி.

    ReplyDelete
  10. நான் கடன் அட்டை பயன்படுத்துகிறேன் ..சரியாக பணம் கட்டி விடுகிறேன்...வாங்கி 6 வருடத்தில் ஒரு முறை கூட பிரச்சனை ஆனது இல்லை.

    ReplyDelete
  11. கடன் அட்டை முறையாகப் பயன்படுத்தி முறையாகப் பராமரித்தால் பிரச்சினைகள் இல்லை தான்...ஆனாலும் கடன் அட்டைகள் பயன்படுத்தாதிருப்பதே சாலச் சிறந்தது என்பது அனுபவ ரீதியான உண்மை,நல்ல பயனுள்ள பதிவு சிங்கக்குட்டி ,வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. சிங்கக்குட்டி ...
    நல்லா விளாவாரியா சொல்லிருக்கீங்க.... அது என்னமோ ஏதோன்னு நெனச்சுட்டு இருந்தேன்... இப்போ புரியுது... நன்றி... நன்றி..

    ReplyDelete
  13. நன்றி கிரி.

    உங்களை போலவே, நம் மக்கள் அனைவரும் புரிந்து பயன்படுத்த வேண்டும் என்பதுதான் என் ஆசை.

    ReplyDelete
  14. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தேவ்.

    ReplyDelete
  15. நன்றி ஸ்வர்ணரேகா .

    இப்போ புரியுதுன்னு வாங்கி விளையாடிராதீங்க!

    எதையும் பிளான் பண்ணாம பண்ணக்கூடாது, ஓகே :-)

    ReplyDelete
  16. விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடிய நல்ல கட்டுரை. நன்றி...வாழ்த்துக்கள்

    ReplyDelete
  17. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி "Good News" (உங்கள் பெயரை குறிப்பிடவில்லை)!

    ReplyDelete
  18. தமிழ்மண வெற்றிக்கு வாழ்த்துக்கள். :)

    ReplyDelete
  19. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஊர்சுற்றி.

    ReplyDelete
  20. மிக்க சந்தோஷம் சிங்கக்குட்டி! இந்த இடுகை வெற்றி பெறுமென எதிர் பார்த்தேன். தமிழ்மணம் விருதுக்கு என் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  21. உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

    ReplyDelete