"யானைக்கும் சரி, மனிதனுக்கும் சரி, " மதம் " பிடித்துப்போனால் மற்றவர்களுக்கு ரொம்பவே தொல்லை தான்" இது நான் சமிபத்தில் ரசித்த ஒரு வசனம்.

சரி, இதை இங்கு குறிப்பிட்டு சொல்லுவானேன் என்றால், ஒரு மதத்தின் பலன் என்பது, நாம் அதன் மீது வைத்து இருக்கும் நம்பிக்கையை பொருத்து மாறுபடுகிறது, அதே போல் எந்த ஒரு மத வேதத்திலோ இதிகாசத்திலோ மற்ற மதத்தின் நம்பிக்கையை காயப்படுத்தி எந்த ஒரு வார்த்தையும், எந்த ஒரு இடத்திலும் சொல்லவில்லை, அந்த அந்த மத நூல்கள், தன் மத வழிபாட்டு பாதையில் இறை ஜோதியில் கலக்க வழி காட்டுகிறது.
எல்லாம் வல்ல இறவனை சென்று அடைய இரு பக்கங்களும் அழகான பூக்கள் நிறைந்த பசுமையான ஒரு பாதை தான் மதம், இதில் கதம்ப ரோஜாக்கள் நிறைந்த மஞ்சள் பாதையானாலும் சரி, மல்லிகை கலந்த பச்சை பாதையானாலும் சரி, திராச்சையும் மெழுகுவர்த்தியின் ஒளியும் கலந்த வெள்ளை பாதையானாலும் சரி, இறுதில் சென்று அடையும் இறை அருள் ஒன்று தான்.
எல்லா மதங்களுமே தீவினை செய்தால் கடவுளால் தண்டிக்கப்படுவாய்; நல்லவனாக இருந்தால் கடவுளால் ரச்சிக்க படுவாய் என்ற கருத்தைதான் சொல்லுகின்றன.

இந்து மதம் கர்மவினைக்கேற்ப பிறவி பல எடுத்து, இறுதியில் முக்தி பெறவேண்டுமெனக் கூறுகிறது.
கிறித்துவம் - பாவம், கடவுளின் மோட்சம், சாத்தானின் நரகம் எனவும்,
இஸ்லாம் - இஸ்முர், அல்-ஜன்னத், ஜன்னத் என்று அதே கோட்பாடுகளைத்தான் கொண்டுள்ளன.
ஜைனம், புத்தம், தாவோயிஸம் என்ற சமயங்கள் இறுதி நிலையை ‘நிர்வாண நிலை’ என்றழைக்கின்றன.
இந்த உண்மையை அறிந்தவர்கள், அவர் எந்த மதத்தை சார்தவராக இருந்தாலும் சரி, அவர்கள் அடக்கத்திலேயே அது தெரியும், சற்று உற்று கவனித்தால், அவர்கள் தன் மதத்தை மதிக்கும் அதே அளவு , மற்ற மத நம்பிக்கைக்கும் மதிப்பு கொடுப்பார்கள்.
ஒரு உண்மையான இந்துவோ, இஸ்லாமியரோ அல்லது கிறிஸ்துவரோ தன் மதத்தின் மீது வைத்து இருக்கும் நம்பிக்கை என்பது, தன் கடவுள் தன்னோடு இருக்கிறார் அவர் தம்மை என்றும் காப்பாற்றுவார், இது அவர்கள் தங்கள் மதத்தின் மீதும் தங்கள் கடவுளின் மீதும் வைத்து இருக்கும் நம்பிக்கை, நிச்சயமாக இது என்றும் பொய்க்காது.
இதை அறியாத பலர், இன்று கடவுளின் மீது வைத்து இருக்கும் நம்பிக்கையின் அளவை மற்றவர்களுக்கு முன் காட்டி நடிப்பதயே விருப்புகிறார்கள், அதுவும் குறிப்பாக தன் மதமில்லாத மற்ற மதத்தினர் முன் அப்படி நடந்து கொள்வது ஒரு நாகரிகமற்ற செயல் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள விரும்புவது இல்லை.
எனக்கு மேல் சொன்ன மூன்று மதம் மட்டுமில்லாமல் பல மத நண்பர்கள் உண்டு, நான் பார்த்த வரை யாரும் மற்ற மத நம்பிக்கை மற்றும் வழிபாட்டு முறைகளை ஆர்வமுடன் கேட்டு தெரிந்து கொள்வார்களே தவிர, எந்த நம்பிக்கையையும் கேலியோ, கிண்டலோ பண்ணியதில்லை, அதே போல் தன் மதம் மட்டுமே உயர்ந்தது என்று சொல்லியதில்லை.

இந்துவுக்கு "பெருமாளே" அல்லது "ராமா" என்பதும், கிறிஸ்துவருக்கு "இயேசுவின் கிருபையால்" என்பதும், இஸ்லாமியருக்கு "இன்ஷா அல்லா" என்பதும் மற்ற "புத்தம் சரணம் கச்சாமி" போன்ற சுவாசத்துக்கு இணையான பல மத சார்பான வார்த்தைகள் வழக்கத்தில் உள்ளன, ஆனால் இவற்றிக்கு கூட இடம் பொருள் ஏவல் உண்டு என்பதை உணர்ந்து, நம் நம்பிக்கையும் மதமும் எந்த விதத்திலும் மற்றவர் நம்பிக்கையோ, மதத்தையோ புண்படுத்தாமல் நடப்பதே, நம் மதத்தின் பொருளை நாம் உணர்ந்ததுக்கு அர்த்தமாகும்.
அப்படி இல்லாமல், அதாவது நாம் நம் நம்பிக்கையை நம்மை சுற்றி இருப்பவர்கள் தெரிந்து கொள்ள வைக்க வேண்டிய அவசியம் என்ன? அதுவும் நம் மதமில்லாத மற்றவர்கள் முன் நடந்தால் இதை எப்படி எடுத்துக்கொள்ள முடியும்?
உதாரணமாக, ஒரு அமைதியான கிறித்துவ அல்லது இஸ்லாம் திருமணத்திற்கு போன ஒருவர், "பெருமாளே இந்த மண மக்களை காப்பாற்று "கோவிந்தா கோவிந்தா"" என்று கத்தினால் அது எப்படி இருக்கும்? இங்கு நம் நம்பிக்கை நிச்சயம் மற்றவர்களை காயப்படுத்தும் இல்லையா?
இத்தகைய செயல் , பார்த்தாயா நான் எப்படி என் மதத்தை அல்லது என் கடவுளை நினைக்கிறேன் என்று மற்றவர்களுக்கு கட்டுவதாக தானே அர்த்தமாகிறது?
இதில் பக்தி எங்கே இருக்கிறது? இது நடிப்புக்கு சமம் தானே? அது மட்டுமில்லாமல் இது கடவுளுக்கு புரியாதா?
ஆக, இது கடவுளின் பெயரால் மற்றவர்களை ஏமாற்றுவதாக நினைத்து, கடவுளிடம் நாம் ஏமாந்து போகும் ஒரு செயல் இல்லையா இது?
இல்லை என்றால் , பிறகு ஏன் மற்றவர் நம்பிக்கைக்கு புறம்பான ஒரு வார்த்தையையோ, செயலையோ, நாம் மற்றவர் முன் அல்லது அவர்கள் கவனிக்கும்படி செய்ய வேண்டும்?.
நாம் நம்புகிறோம் என்பதற்காக மற்றவர்களும் நம்பவேண்டும் என்பதர்காகவா? அல்லது மற்றவர் நம்பிக்கையை பொய் என்று சொல்லி அவர்களை அல்லது அவர்கள் நம்பிக்கையை காயப்படுத்துவதர்காகவா?
இது எதுவுமே இல்லாமல், நாம் நம் கடவுள் பாசத்தை, பக்தியை காட்ட நினைத்தால், அதே வார்த்தைகளை, நாம் ஏன் மனதிற்குள் சொல்ல கூடாது? நமக்கு தெரியும் மற்றும் நாம் நினைக்கும் கடவுளுக்கு கண்டிப்பாக தெரியும் இல்லையா? ஆக, இது போல் நடந்து கொள்வது ஒரு அர்த்தமில்லாத செயலாகி, நம் மத புனிதத்தை நாமே கெடுப்பதற்கு சமமாகிறது.

உன் மதமில்லாத மற்ற மதத்தினர் முன் எப்போதும், நீ என்னை நினைப்பதை (நினைப்பதாக) காட்டு என்றோ, அல்லது அவர்கள் கேட்கும், பார்க்கும் படி நீ என்னை நினைதால் மட்டுமே நான் உன்னை காப்பேன் என்றோ, நான் அறிந்த வரை எந்த ஒரு மத வேதமும், கடவுளும் சொல்லவில்லை.
எனக்கு தெரிந்த வரை, எந்த ஒரு உயிரோ அல்லது நம்பிக்கையோ காயப்படும்படி செய்யும் போது, நாம் எந்த மதமாக இருந்தாலும் சரி, நம் பக்தியின் பலனை இழந்து பாவத்திற்கு ஆளாகிறோம் , அதுவே தாய் தந்தை ரத்த உறவாகவாகும் போது , இங்கு நம் பிறப்பின் பலனை இழந்து விடுகிறோம்?
இதுவே இந்து மதத்தில் கர்மா என்றும், கிறித்துவ மதத்தில் சாத்தானின் வேதம் என்றும், இஸ்லாம் மதத்தில் ஈமான் என்றும் அழைக்கப்பட்டு மதிப்பளிக்கப்படும் இதயசுத்தியான நம்பிக்கை, இதன்படி பார்த்தால், ஒருவர் ஒரு மதத்தின் அடிப்படை கொள்கைகளை விளங்காமல், அந்த மதத்தின் கடமைகளை மட்டும் தன் சுயநலத்துக்காக அல்லது சுக, துக்கங்களுக்காக செய்வதன் மூலம், அவருக்கு எந்த பயனும் ஏற்படாது என்ற ஒரே கருத்தைதான் கூறுகிறது.
அதாவது ஒவ்வொரு ஆத்மாவும் அதனதன் செயலுக்கு பொறுப்பு .
மனிதனாய் பிறந்தவன், மனிதனாய் இறப்பது எந்த அளவு உண்மையோ அதே அளவு, நீ எப்படி, எங்கு இருந்து வந்தாயோ, அப்படியே, அங்கு திரும்ப சென்று அடைவாய், இதற்கு நீ தகுதி அடையும் மன பக்குவம் வந்து உன்னை சுற்றி இருக்கும் மாயைகளை உணர்ந்து உன்னை நீயே அறியும் வரை, அதாவது உன் சொந்த சுக, துக்கங்களுக்காக இயற்கை நடை முறைகளை உன் வசதிக்கு ஏற்றவாறு மற்றும் பாவத்தை செய்யும் வரை, நீ மீண்டும் மீண்டும் பாவப்பட்ட மனிதனாய் பிறந்து கொண்டே இருப்பாய் என்று வேதங்கள் சொல்கிறது.
அதனால் தான் இந்த உலகில் உள்ள அத்தனை பாவத்தையும் துரோகத்தையும் மனிதனால் மட்டுமே செய்ய முடிகிறது, எங்காவது ஒரு சிங்கமோ, புலியோ அல்லது ஒரு பாம்போ தன் இனத்திர்க்கோ, குடும்பத்திற்கோ துரோகம் செய்வதாய், பாவம் செய்வதாய் பார்க்க முடியுமா?
நாம், நம் மதம் மற்றும் அதன் புனிதத்தை மதிப்போம் அதன் வழி நடப்போம், அதே போல் மற்ற மதத்தின் வழியில் நடக்க தேவையில்லை என்றாலும், அதன் மீது ஒருவர் வைத்து இருக்கும் நம்பிக்கைக்கு நம் மதத்தை எந்த அளவு மதிக்கிறோமோ அதே அளவு கண்டிப்பாக நாம் மதிப்பு கொடுக்க வேண்டும், அதுவே நாம் நம் மதத்திற்கு செய்யும் பெரிய தொண்டு ஆகும்.
இன்னும் சொல்லப்போனால் கடவுள் உண்டு (உருவம் இல்லாதவர்,உருவம் உள்ளவர், அன்பே கடவுள்) என்று ஏதோ ஒரு வகையில் சொல்பவர்களை நான் மதிக்கிறேன் அவர்களின் கடவுள் நம்பிக்கைக்காக, அதே போல் கடவுளே இல்லை என்று சொல்பவர்களை நான் இன்னும் அதிகமாக மதிக்கிறேன் அவர்கள் மனிதனை மதிப்பதற்காக, மேலும் கடவுளே இல்லை என்பது கொள்கையானாலும் இவர்கள் எந்த கோவிலையும் இடித்ததாக சரித்திரம் இல்லை.
ஆனால் கடவுள் உண்டு என்று சொல்லிக்கொண்டு, நான் வணங்கும் கடவுள் மட்டுமே கடவுள் என்றும், மற்ற அனைத்தும் பொய் என்று சொல்லி எல்லாம் வல்ல இறைவனையும் தன் கீழ்த்தரமான சின்ன புத்தி போல, மொழி, முறை கொண்டு தன் சொந்த சுக, துக்கங்களுக்காகவும், அரசியல், வியாபாரத்துக்காகவும், கடவுளையும் ஒரு குறுகிய வட்டத்துக்குள் கொண்டு வர நினைப்பவர்களை மட்டும், என்றும் மதிக்க அல்ல மனிதனாய் நினைக்கவே என் மனம் இடம் தரவில்லை.
இவர்கள் மட்டுமே இந்த உலகின் சாத்தான்கள், இவர்கள் சமுதாயத்தில் விதைப்பது தான் மத மாற்றம் என்னும் விஷ செடி, இது விருச்சமாகும் முன் வேரோடு அழிப்போம்.
மதம் என்பது அதன் புனித அறநெறி வழிகளை கடைப்பிடித்து நடப்பதர்க்காக மட்டுமே தவிர, மற்றவர் முன் நடிப்பதர்க்காக அல்ல... என்பதை சத்தம் போட்டு சொல்லவே இங்கு விரும்புகிறேனே தவிர, மற்ற மதங்களை இழிவு படுத்தும் நோக்கம் இல்லை.
சரி, எத்தனயோ பிரச்சனைகள் இருக்கும் இந்த சமுதாயத்தில், இதனால் என்ன பிரச்சனை வந்து விட போகிறது என்று நீங்கள் கேட்கலாம்? அதை எனக்கு தெரிந்த ஒரு உண்மை கதை மூலம் இனி வரும் "கடவுளும் காதலும்" பதிவில் பார்ப்போம்.
மீண்டும் சந்திப்போம் நன்றி.
அது வரை மதம் பிடித்து இருந்தால், வந்து ஓட்ட போட்டு அப்படியே ஒரு பின்னூட்டத்த போட்டுட்டு போங்க, இல்ல என் மனம் பிடித்து இருந்தாலும் போடுங்க ....!
அட, எதுவுமே பிடிக்கலைனாலும் வந்து நாலு வார்த்தை திட்டிடாவது போங்கையா ..... !