Thursday, November 12, 2009

சிங்கப்பூரிடம் கற்றுக்கொள்ள வேண்டும்

பதிவுக்கு முன் ஜலீலாவின் அன்பு விருதுக்கு நன்றி.




பொருளியல் மந்தம் ஆட்குறைப்பு!?

நம் கணினி துறை மட்டுமில்லாமல் பொதுவாக எல்லா துறையை பொறுத்த வரையுமே இது ஒரு மோசமான காலம் என்பதை நாம் அனைவரும் நன்றாகவே அறிவோம், கடந்த 2001-2002-ம் ஆண்டு கூட இதே நிலை இருந்தாலும், அதன் பாதிப்பு இந்த அளவு இல்லை என்பதே உண்மை.

ஆகவே, நானும் இத்துறையை சார்ந்தவன் என்ற முறையில், இதன் வருங்காலத்தை பற்றி அறிந்து கொள்ள இது சம்மந்த பட்ட அனைத்து தகவல்களையும் படிப்பதை சமீபகாலமாக வழக்கமாக்கிகொண்டேன்.

சில மாதங்கள் முன் வரை எங்கு திரும்பினாலும், "பொருளியல் மந்தம்", " வேலை குறைப்பு", "சம்பள குறைப்பு" போன்ற தகவல்கள் மட்டுமே வந்து வேலை இழந்தவர்களை விட, "வேலை பார்ப்பவர்களைத்தான்" கடும் மனஉளைச்சலுக்கு ஆளாக்கின.

இப்போது உண்மையில் மந்தநிலை ஓரளவுக்கு மாறிவிட்டாலும், இன்னும் இந்த பொருளியல் மந்த நிலையை சாதகமாக்கி கொண்டு பல நிருவனங்கள் குறிப்பாக மென்பொருள் துறையில் தங்களுக்கு தேவையானதை சாதித்து கொள்வது என்பது, நாம் அனைவரும் நன்கு அறிவோம்.

அதாவது நீண்ட நாட்களாக பணி செய்த அனுபவத்தில் உயர்ந்த சம்பளத்தில் இருப்பவர்களை நீக்கி விட்டு அல்லது அவர்களை குறைந்த சம்பளம் உள்ள வேறு நாட்டு கிளைகளுக்கு மாற்றிவிட்டு, அதே வேலையை குறைந்த சம்பளத்தில் வேறு ஒருவரை நியமிப்பது .

ஏன் இப்படி? இந்த நிலை மாற நாம் என்ன செய்யவேண்டும்? என்ற தேடலின் ஆரம்பமே இந்த பதிவு.



சமீபத்தில் சிங்கையில் நான் தங்கி இருந்த நண்பரின் வீட்டில் சில தின பத்திரிகை செய்திகளை படிக்க முடிந்தது.

ஆகா, என்ன ஒரு தன்னம்பிக்கை தரும் தகவல்கள், மேலும் ஒரு தின பத்திரிகையில் எல்லா மக்களையும் சென்று அடையும் படி எவ்வளவு அழகாக "SWAT" சூத்திரத்தை (Strength.Weakness,Analysis,Target) விளக்கி சொல்லி இருக்கிறார்கள்.

அது மட்டுமில்லாமல், எவ்வளவு துல்லியமான புள்ளி விபரங்களையும், நாட்டின் வளர்ச்சி பாதையையும், அதில் மக்கள் பங்கையும், எவ்வளவு அழகாக எடுத்துச்சொல்லி வழி காட்டுகிறார்கள்.

இதனால் எல்லா தரப்பு மக்களுக்கும், நாம் ஒரு மோசமான பொருளியல் சூழ்நிலையில் இருந்தாலும், எல்லா வகையிலும் நம்மை முன்னேற்ற ஒரு வலுவான, தரமான அரசாங்கம் நம்முடன் இருக்கிறது என்ற நம்பிக்கையை கொடுக்கும் இல்லையா?

இதன் மூலம் மக்கள் எந்த வகையான மனஉளைச்சலுக்கும் ஆளாகாமல், நாம் செய்ய வேண்டியது எல்லாம், நம் நாட்டிற்க்கு ஒத்துழைக்கும் வகையில், "ஒற்றுமையுடன் கூடிய கடுமையான உழைப்பு" மட்டுமே என்ற பாதைக்கு எளிதாக மக்களை கூட்டிச் செல்ல இது வழி வகுக்கும் இல்லையா?

அத்தகைய செய்திகளில் சிலவற்றை, இங்கே உங்கள் பார்வைக்கு கொடுத்துள்ளேன், படித்து பாருங்கள்.

I - புயலைக் கடந்தோம், வலுவாக எழுவோம்.

பொருளியலைப் பொறுத்தவரை புயலை நாம் கடந்து விட்டோம் என்றாலும் சூழ்நிலை இன்னமும் தெளிவாக இல்லை. இருந்தாலும் இந்தச் சிரமத்தைச் சமாளித்துச் சாதிக்க சிங்கப்பூரிடம் பல சாதக அம்சங்கள் இருக்கின்றன என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார். உலக சூழ்நிலை நிலைபெறுகிறது.சிங்கப்பூரின் தொழிலாளர் சூழல் நிலைபெற்று இருக்கிறது. சில நிறுவனங்கள் மீண்டும் ஊழியர்களைச் சேர்க்கத் தொடங்கியுள்ளன. இவை அனைத்தையும் வைத்துப் பார்க்கையில் மூன்றாம் காலாண்டு நன்றாக இருக்க வேண்டும் என்றார் திரு லீ சியன் லூங்.

அதற்கு அப்பால் பார்க்கையில் நிலவரம் தெளிவாக இல்லை என்பதையும் அவர் குறிப்பிட்டார். ஹைஃபிளக்ஸ் போன்ற உள்ளூர் நிறுவனங்கள் நன்றாகச் செயல்படுகின்றன. புதிய தொழில் துறைகள் அரும்புகின்றன. ஊழியர்கள் மறுபயிற்சி பெறுகிறார்கள். பொருளியல் வளர்ச்சிக் கழகம் பன்னாட்டு நிறுவனங்களுடன் பத்து ஆண்டுத் திட்டம் ஒன்றைத் தீட்டி வருகிறது. அத்தகைய நிறுவனங்களை ஊக்குவித்து அவற்றின் அதி நவீன தயாரிப்பு ஆலைகளை, தலைமையகங்களை கட்டுப்பாட்டு நிலையங்களைச் சிங்கப்பூரில் அமைக்கும்படி செய்வது இலக்கு.

இந்த மாற்றங்களுக்குத் தோதாக ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்கும் நோக்கத்தில் பாய லேபார் செண்ட்ரல், ஜூரோங் லேக் வட்டாரத்தில் புதிய பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படும் என்று பிரதமர் அறிவித்தார். ஏற்கனவே 50 பயிற்சி நிலையங்கள் தீவு முழுவதும் இருக்கின்றன. இது பற்றிய விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று பிரதமர் சொன்னார். புதிய உத்திகள், முதலீடுகள், ஊழியர்கள் மேம்பாடு ஆகியவற்றுடன் நாம் வலுவாக மறுபடியம் முன்னேறுவோம் என்று திரு லீ நம்பிக்கை தெரிவித்தார்.

II - எதிர்பார்த்ததை விட அதிக லாபம் ஈட்டியது டிபிஎஸ் வங்கி.

டிபிஎஸ் குரூப் ஹோல்டிங்ஸ் இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் எதிர்பார்த்ததை விட அதிகமாக $552 மில்லியன் லாபம் ஈட்டியிருக்கிறது. இது முதல் காலாண்டை விட 21 விழுக்காடு அதிகமாகும். ஓராண்டுக்கு முன்பு கிடைத்த $652 மில்லியன் நிகர லாபத்தோடு ஒப்பிடுகையில், இது 15 விழுக்காடு குறைவாகும். ஆனால் ஆய்வாளர்கள் கணித்திருந்த $455 மில்லியனைவிட அதிகமாகும். சென்ற ஆண்டு இரண்டாம் லாண்டோடு ஒப்பிடுகையில், இவ்வாண்டு இரண்டாம் காலாண்டில் வருமானம் 8 விழுக்காடு அதிகரித்து $1.79 பில்லியனை எட்டியது. டிபிஎஸ் குழுமத்தின் வலுவான அடிப்படைக்கும் வாடிக்கையாளர்களுடனான ஆழமான உறவுக்கும் 2009ம் ஆண்டு முதல் ஆறு மாதங்களின் பலாபலனே சான்று என்று டிபிஎஸ் தலைவர் கோ பூன் ஹுவீ கூறினார். டிபிஎஸ் குழுமம் பங்கு ஒன்றுக்கு 14 காசுகள் லாப ஈவை அறிவித்தது. முந்திய காலாண்டிலும் இதே லாப ஈவு வழங்கப்பட்டது.

III - அதே ஒற்றுமையுடன் மேலும் சாதிப்போம் மேம்படுத்தவும் உழைக்கவும் தயாராக இருந்தால் வேலைகள் உண்டு.

சிங்கப்பூர் வரலாற்றின் முதல் 50 ஆண்டுகளில் ஐக்கியமாக சிங்கப்பூரர்கள் சாதித்ததைப் போல் அடுத்த 50 ஆண்டுகளிலும் பலவற்றையும் ஐக்கியமாகச் சாதிக்கும் பெரும் பயணம் தொடங்கி விட்டது என்று பிரதமர் லீ சியன் லூங் அறிவித்தார். உடனடி, நீண்டகால அடிப்படைகளில் செயல்பட்டால் சிங்கப்பூரின் எதிர்காலம் ஒளிமயமாக இருக்கும். ஐக்கியமாக இருந்தால் பொருளியல் பிரச்சினைகளைச் சமாளித்து வளரலாம். சமூகப் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்தலாம். சிங்கப்பூருக்குச் சேர்ந்து உருக்கொடுக்கலாம் என்றார் பிரதமர் லீ. சிங்கப்பூர் ஆறு, வீடுகள், புதுநகர்கள், சமூக நிலையங்கள், பள்ளிவாசல்கள் அனைத்தும் மேம்பட்டன.
சிங்கப்பூர் ஆறு முதல் மெரினா பே வரை முற்றிலும் சிங்கப்பூர் உருமாறி விட்டது. முதல்தர கல்வி முறை, எல்லாருக்கும் வசதியான பொதுப் போக்குவரத்து, வசிக்க, வேலைபார்க்க, விளையாடி மகிழ தலைசிறந்த இடமாகச் சிங்கப்பூர் உருவாகும். ஒன்றாகச் சேர்ந்து பணியாற்றி, இணக்கமிக்க பிணைப்புமிக்கச் சமூகமாகத் தொடர்ந்தால் அடுத்த 50 ஆண்டுகளில் கற்பனைக்கு எட்டாத மாற்றம் ஏற்படும் என்றார் திரு லீ.

IV - சிங்கப்பூர் வர்த்தகம் இரண்டாம் காலாண்டில் 3.8% அதிகரிப்பு.

சிங்கப்பூரின் மொத்த வர்த்தகம் இவ்வாண்டு முதல் மூன்று மாதங்களில் 14 விழுக்காடு சுருங்கிய பிறகு, இரண்டாம் காலாண்டில் 3.8 விழுக்காடு அதிகரித்திருக்கிறது. சென்ற ஆண்டு நான்காம் காலாண்டுக்குப் பிறகு மொத்த வர்த்தகம் வளர்ச்சி அடைந்திருக் கும் முதல் காலாண்டு இது. ஓராண்டுக்கு முன்போடு ஒப்பிடுகையில், மொத்த வர்த்தகம் இரண்டாம் காலாண்டில் 27 விழுக்காடு சுருங்கியது. முதல் காலாண்டில் வர்த்தகம் 28 விழுக்காடு சுருங்கியது. திங்கட்கிழமை காலை ஐஈ சிங்கப்பூர் புள்ளிவிவரங்களை வெளியிட்டது.

எண்ணெய் சாராத உள்நாட்டு ஏற்றுமதிகள் முதல் காலாண்டில் 7.4 விழுக்காடு சுருங்கியபிறகு, இரண்டாம் காலாண்டில் 7.6 விழுக்காடு அதிகரித்தது. சென்ற ஆண்டோடு ஒப்பிடுகையில், எண்ணெய் சாராத உள்நாட்டு ஏற்றுமதிகள் இரண்டாம் காலாண்டில் 14 விழுக்காடு குறைந்தன. முதல் காலாண்டின் சரிவு 26 விழுக்காடு. மின்னணுப் பொருட்கள், மின்னணு அல்லாத பொருட்கள் ஆகியவற்றின் ஏற்றுமதி குறைந்தது இதற்குக் காரணம். இவ்வாண்டில் மொத்த வர்த்தகம் 25 முதல் 22 விழுக்காடு சுருங்கும் என முன்னதாகக் கணிக்கப் பட்டிருந்தது. புதிய புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்ட பிறகு, மொத்த வர்த்தகம் 23 முதல் 21 விழுக்காடு வரை சுருங்கும் என்று கணிப்பு மாற்றப்பட்டிருக்கிறது. அதே வேளையில், எண்ணெய் சாராத உள்நாட்டு ஏற்றுமதிகள் 12 முதல் 10 விழுக்காடு வரை சுருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டாம் காலாண்டில் நடந்த மொத்த வர்த்தகத்தின் மதிப்பு $178 பில்லியன். இது முதல் மூன்று மாதங்களின் $165 பில்லியனைவிட அதிகம். மொத்த ஏற்றுமதிகளும் மொத்த இறக்குமதிகளும் இரண்டாம் காலாண்டில் முறையே 25 விழுக்காடும் 28 விழுக்காடும் சுருங்கின. மின்னணுப் பொருட்களின் உள்நாட்டு ஏற்றுமதி முதல் காலாண்டில் 32 விழுக்காடு சரிந்த பிறகு, இரண்டாம் காலாண்டில் 23 விழுக்காடு சரிந்தது. மின்னணுப் பொருட்கள் அல்லாத எண்ணெய் சாராத உள்நாட்டு ஏற்றுமதி முதல் காலாண்டில் 21 விழுக்காடு சரிந்த பிறகு, இரண்டாம் காலாண்டில் 8.6 விழுக்காடு சரிந்தது.

இரண்டாம் காலாண்டில் தைவான் தவிர்த்து மற்ற பத்து முக்கிய சந்தைகளுக்கும் எண்ணெய் சாராத உள்நாட்டு ஏற்றுமதி சரிந்தது. ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, மலேசியா ஆகிய நாடு களுக்குச் செல்லும் ஏற்றுமதியே மிகப்பெரிய சரிவைக் கண்டது. “மொத்த வர்த்தகத்தின் சரிவு ஓரளவு நிலைப்படுகிறது என்பதற்கான சில அறிகுறிகள் தெரிகின்றன. “உலகப் பொருளியலும் நிலைப்படுவதாகத் தெரிகிறது. இருந்தாலும், மந்தநிலை இன்னும் முடியவில்லை என்பதால் பொருளியல் மீட்சி மிதமாகவே இருக்கும்” என்று ஐஈ சிங்கப்பூர் தெரிவித்தது.

இவ்வாண்டின் எஞ்சிய மாதங்களில், வெளி நிலவரங்கள் தொடர்ந்து நலிவடையும் என்று எதிர்பார்க்கப் படுவதாகவும் அது எச்சரித்தது.


நம் பாரதி கனவு கண்ட "சுதேசிமித்திரன்" பத்திரிக்கையை போல, வியாபார நோக்கம் மட்டுமே குறியாக இல்லாமல், சிறந்த மக்கள் சேவை செய்துவரும் சிங்கை "தமிழ் முரசு" என்னும் அந்த பத்திரிகைக்கு மேலும் வளர மற்றும் தன் மக்கள் சேவையை தொடர "என் மனமார்ந்த வாழ்த்துக்கள்".

சரி, இனி நம் பதிவை பார்ப்போம்.

இந்த தகவல்களை படிக்கும் போது நமக்கு என்ன தோன்றுகிறது? எவ்வளவு நம்பிக்கையான தகவல்கள், எவ்வளவு கடைமை உணர்வு மற்றும் நாட்டின் வளர்ச்சியின் அக்கறை கொண்டுள்ள உண்மையான தலைவர்கள்.

இதை போல வழிகளை, நாம் ஏன் கடை பிடிக்க கூடாது! என்ற எண்ணம் வருகிறது இல்லையா?

அதெல்லாம் சரி, இதற்கு தனிப்பட்ட நாம் அல்லது பதிவராகிய நாம் என்ன செய்ய முடியும்?

இதை நடிகைக்கு "வரும் காதல் எஸ்.எம்.எஸ்-சையும்", "குடும்ப விவாகரத்து மற்றும் விபச்சார பிரச்னைகளையும்" கலர் படத்துடன் முதல் பக்கத்தில் போடும் சில பல "பத்திரிக்கைகள்" அல்லவா இதை செய்ய வேண்டும் என்று நினைக்க கூடும்.

நிச்சியம் இல்லை நண்பர்களே, "இணையம்" இன்று இதுதான் உலகின் முன்னணி மற்றும் வேகமான "லாப" நோக்கம் மட்டும் குறியாக இல்லாத பத்திரிக்கை.

எந்த பத்திரிக்கை பிரதிகளும் செல்லாத இடம், நாடு, எல்லாம் நம் மக்களை வீட்டில் சென்று நேரில் சந்திப்பது உங்கள் தமிழ் பதிவுகள் இல்லையா?

அது மட்டுமில்லாமல், அனேகமாக நம் எல்லா பத்திரிக்கைகளும் இன்று பதிவுலக பதிவில் இருந்து, நல்ல தகவல்களை எடுத்து மக்களுக்கு கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளன இல்லையா?

அப்படி இருக்கும் போது, நாம் ஏன் நம்மால் ஆனா முயற்சியை செய்ய கூடாது?

சரி, அப்படி என்னதான் செய்ய முடியும்?

இன்று பதிவு உலகில் கணினி துறை மட்டுமில்லாமல் எல்லா துறைகளையும் சார்ந்தவர்கள் இருப்பதால், உங்கள் பதிவுகளில் உங்கள் துறை சார்ந்த நல்ல தகவல்களை, பொதுவான வளர்ச்சி விகிதத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்.

பொருளியலைப் பொறுத்தவரை நிலைமை இன்னும் முழு சீராகாவிட்டாலும், கீழ் நோக்கி சென்ற "மந்தநிலை மாறிவிட்டது" என்பதே உண்மை இதை அனைத்து தரப்பு மக்களிடமும் சென்றடைய செய்யலாமே?



உங்கள் துறை, அலுவலகத்தின் சென்ற காலாண்டு வளர்ச்சியோடு ஒப்பிட்ட இந்த மற்றும் வரும் காலாண்டு வளர்ச்சியை பற்றி பொதுவாக கொடுக்கக்கூடிய புள்ளிவிபரத்தை கொடுங்கள்.

உங்கள் துறை, அலுவலகத்தின் வேலை வாய்ப்பை மற்றும் வேலைக்கு எடுக்கும் தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்கள், வளர்ந்து வரும் தொழில்துறை மற்றும் உங்களுக்கு தெரிந்த புதிய வேலை வாய்ப்பு முறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.

உங்கள் பதிவின் மூலம், எந்த தரப்பு மக்களுக்கும் நியாயமான ஊதியம் கிடைக்கும், எந்த தரப்பு வேலையையும் செய்யமுன் வரும் ஒரு விளிப்புணர்ச்சியை ஏற்படுத்துங்கள்.

உங்கள் பதிவுகளை போல் பத்திரிகைகளும், ஊடகங்களும் சரியான, உண்மையான நிலையை மற்றும் "இன்று மக்களுக்கு உண்மையில் தேவையான தகவல்களை" கொடுக்க முன் வரும்.

அப்படி இல்லாமல் நாட்டு வளர்ச்சிக்கும், நாட்டு மக்களின் முன்னேற்றத்துக்கும் முக்கியத்துவம் இல்லாத செய்திகளுக்கு முன்னுரிமை, அங்கிகாரம் தருவதை தவிர்த்து பாருங்கள்.

இத்தகைய நம் போக்கு, இது வரை வேலை இழந்தவர்களுக்கும், இனி புதிதாக வேலைக்கு வர இருப்பவர்களுக்கும், எதிர்காலம் பற்றிய மனஉளைச்சலை முதலில் நீக்கி தன்னபிக்கை கொடுக்கும்.

இதனால் நம் மூத்த தலைமுறை மக்கள் மற்றும் நம் நாடு, நம்மை ஒரு நல்ல பாதையை நோக்கி அழைத்து செல்கிறது என்ற நம்பிக்கையில் மக்கள் மனம் சீராகி, தங்கள் தகுதிக்கும் திறமைக்கும் தேவையான எந்த வேலையானாலும் கடின உழைப்போடு செய்ய மகிழ்ச்சியாக தயார் ஆவார்கள்.

தம் "திறமையையும், கடின உழைப்பையையும்" மட்டும் மக்கள் நம்பும் நிலை வெகுவிரைவில் வர, இந்த பொருளியல் மந்த நிலையை சாதகமாக்கி கொண்டு, "ஒழுக்கமான வாழ்கைக்காக ஒரு வேலை என்ற நிலையை மாற்றி, வேலை மட்டுமே வாழ்கை என்று மனஉளைச்சலை" தரும் சூழ்ச்சகங்கள் பலன் தராமல் போகிவிடும்.

இதன்பின் மனித நேயம் இல்லாத வெறும் "லாப" நோக்கம் மறைந்து, மீண்டும் தகுதிக்கும், திறமைக்கும் தகுந்த வேலையுடன் அதற்கு தகுந்த ஊதியத்துடன் வாய்ப்புகள் மக்களை தேடி வர ஆரம்பித்து விடும்.

பிகு:- இந்த பதிவின் கருத்து நம் மக்களுக்கு பயன்படும் என்று நீங்கள் நினைத்தால், உங்கள் நண்பர்களுடன் இந்த பக்கத்தை நீங்கள் பகிர்ந்து கொள்ளலாமே.
 

Blogger Widgets