Thursday, January 28, 2010

கெட்டும் "ஃபாரின்" போ-1.0

நான் சிறுவயதில் இருந்து பயணம் ,புதிய மக்கள், கலாச்சாரம் போன்றவற்றை தெரிந்து கொள்வதில் அதிக ஆர்வம் கொண்டவன்.

எனக்கு விவரம் புரிந்த நாள் முதல், நீ என்ன படிக்க விரும்புகிறாய் என்று கேட்பவர்களிடம் "நான் மக்களை மற்றும் வாழ்கையை படிக்க விரும்புகிறேன்", ஏன் என்றால் நான் எப்போதும் நானாகவே இருக்க விரும்புகிறேன் என்று சொல்வதுண்டு.



இதன் காரணமாகவோ என்னவோ, ஆக கீழ் மட்டம் முதல், எனக்கு கிடைக்கும் ஆக மேல் மட்டம் வரை அனைத்து தரப்பு மக்களிடமும் அவர்ககளின் நடை முறை பழக்கத்தை ஒட்டி சமமாக பழகுவது என்பது எனக்கு மிக பிடித்த ஒரு விசையம்.

நான் எந்த இந்திய நகரம் மற்றும் வெளிநாடு என்று சென்றாலும் சரி, எனக்கு தெரிந்த அல்லது இந்திய மொழி பேச தெரிந்த அனைவரிடமும் நான் முடிந்த வரை தொடர்பில் இருப்பேன்.

வாழ்க்கை அனுபவம் கற்று தரும் பாடம் மிக அருமையானது, மக்களை தவிர அதை வேறு எங்கும் படிக்கவும் முடியாது.

அதனால்தான் வெறும் இருபது வருடம் மட்டும் பார்க்க போகும் ஒரு வேலைக்கு, பதினைத்து வருட படிப்பு கூட இன்னும் அடிப்படை தகுதியாய் மட்டும் எடுத்துக்கொண்டு, அனுபவத்துக்கு எங்கும் முன்னுரிமை தரப்படுகிறது.

ஆனால், எல்லா அனுபவத்தையும் ஒரே மனிதன் தன் வாழ்கையில் கடந்து வர முடியுமா? என்றால், அது கண்டிப்பாய் சாத்தியமில்லை. வேறு என்ன வழி என்று பார்த்தால்!, மக்களை படிப்பது, அவர்களின் அனுபவத்தை உணர்வதுதான் ஒரு மிக சிறந்த வழியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

இப்படி நான் பார்த்த மற்றும் மற்றவர்களிடம் படித்த அனுபவத்தின் பகிர்வை ஒரு புத்தகமாக தரவேண்டும் என்பது என் நீண்ட கால ஆசை!.



ஆனால், வாழ்க்கையை படிக்க படிக்க, ஒவ்வொரு வினாடியும் அது புது புது அனுபவத்தை கற்று கொடுக்கும் போது!, எனக்கு இன்னும் வாழ்கையை பற்றி புத்தகம் எழுதும் அளவுக்கு அனுபவமும், சந்தர்பமும் சரியான நேரமும் வரவில்லை என்றே நினைக்க தோன்றுகிறது.

அதே போல் "நேரம்" என்பதும் மிக முக்கியம். காலம் கடந்து பகிரும் அனுபவத்திலும் மற்றவர்களுக்கு பலன் எதுவும் இல்லாமல் போய்விடும். அதனால் பதிவுலகம் வந்த பின் ஒரு சில பகுதியை இடுகையில் கொடுக்கலாம் என்ற எண்ணம் சமீபத்தில் தான் வந்தது.

ஒரே இடுகையில் கொடுக்க முடியாது, மற்ற என் இடுகைகளும் தடை படக்கூடாது என்று சிந்தித்து கொண்டு இருக்கும் போது!, பதிவுலக நண்பர்களின் சிலர், தங்கள் தனி தலைப்பு இடுகைகளை அவர்களின் மற்ற இடுகைகளுக்கு நடுவில் தொடர்ந்து பகிர்வதை பார்த்தவுடன் எனக்கும் இந்த முறையே சரி என்று தோன்றியது.

சரி, "கெட்டும் பட்டணம் போ" என்பதுதானே சரியான பழமொழி, பின் ஏன் தலைப்பை "கெட்டும் "பாரின்" போ" என்று வைக்க வேண்டும் என்று நினைக்க தோன்றும்!. "கற்றது கை அளவு", நமக்கு தெரிந்ததைத்தானே சொல்ல முடியும்!.



நம் தாய் நாட்டுக்காக இனி வரும் இளம் தலைமுறைகள் உழைக்க, நம் நாடு முன்னேற நிறைய இடுகைகள் எழுதியாகி விட்டது. மற்ற பதிவுலக நண்பர்களும் எழுதி இருக்கிறார்கள், இன்னும் முடிந்ததை வரும் காலத்தில் தொடர்ந்து எழுதுவோம்.

ஆனால், வெளிநாடு வருவதே குற்றம் என்று சொன்னால் அது மிக தவறு, நம்மை நாமே தனித்து நிறுத்துவது என்பது, நம்மை ஒரு இருண்ட கண்டமாக மாற்றி விடும் என்பதும் உண்மை.

புது தொழில்நுட்பத்தை மற்றும் நமக்கு தெரியாததை, நாமும் அங்கு சென்று கல்வி, தொழில், வேலை வாய்ப்பு மூலம் அறிந்து கொண்டு, அங்கு கற்றதை நம் நாட்டுக்கு கொண்டு வந்து நடை முறை படுத்த வேண்டும் என்று சொல்வதே சரியாகும்.

ஆனால் அவர்களில் பலர் பிரச்சனைக்கு உட்படுவதன் காரணம் அறியாமை, புதிய கலாச்சாரம், நாகரீகம், வாழ்க்கை முறை, கட்டுப்பாடில்லாத அதிக வருமானம் போல இன்னும் எவ்வளவோ உண்டு.

குடும்ப சூழ்நிலை, வறுமை, அடிப்படை கூலி வேலை, நடுத்தர இயந்திரதுறை, கணினிதுறை, கல்வி, இப்படி ஏதாவது ஒரு காரணத்தில் இங்கு வருபவர்களையும் நாம் தடுக்க கூடாது, அவர்களுக்கு பயன்படும்படி ஏதாவது இருக்க வேண்டும் என்பதுதான் நோக்கம்.




அட! சொல்வதை நேராக இடுகையை போட்டு சொல்ல வேண்டியதுதானே!, இதுக்கு ஏன் ஒரு முன்னுரை விளக்கம் எல்லாம் என்று நினைக்க வேண்டாம்.

வாழ்க்கை அனுபவ பகிர்வு என்பது சற்று நிலை மாறினாலும் அறிவுரை போல தெரிந்து விடும். அறிவுரைகள் மதிக்கப் படுவதில்லை என்ற காரணத்தால் மட்டுமல்ல, அடிப்படையாகவே எனக்கு அதில் நம்பிக்கை இல்லை.

காரணம், தானாக பட்டு உணர்வதை தவிர மற்றவர் அனுபவ அறிவுரையால் மட்டும் யாரையும் மாற்றி விட முடியாது என்ற நம்பிக்கை கொண்டவன் நான்.

மேலும் உலகில் மொத்த பெண்கள் அனைவரும் அல்லது ஆண்கள் அனைவரும் தவறு செய்வபர்கள் என்று, ஒரு சாரமான கருத்தை சொல்வதாய் யாரும் நினைத்து விட கூடாது என்பதே என் நோக்கம்.

இங்கு சொல்லியுள்ள இடுகை ஆரம்ப நோக்கத்தை படித்து விட்டு "இந்த இடுகை தொடரை" படிக்கும் போதுதான் இடுகைகளின் மொத்த நோக்கம் சரியாக புரியும்.

இதன் காரணத்தை நான் இங்கு முன்பே விளக்கி சொல்லிவிடுகிறேன்.

"இது எந்த ஒரு தனிப்பட்ட நாட்டையோ அல்லது மக்களையோ அல்லது குறிப்பிட்ட காலாச்சாரத்தையோ மட்டும் அடிப்படையாக கொண்டு எழுதப்படுவதில்லை".



பொதுவாகவே ஆண்கள் உடல் பலம் கொண்டவர்கள் போல, பெண்கள் மன பலம் கொண்டவர்கள், தங்களை காத்து கொள்வதில் அல்லது இழந்து விடாமல் இருப்பதில் ஆண்களை விட பெண்கள் அதிக சக்தி கொண்டவர்கள், அதிலும் வெளிநாடு என்றால் இன்னும் கவனமாகவே இருப்பர்கள்.

இந்த உலகில் ஒழுக்கமானவர்களும், நல்லவர்களும் கெட்டவர்களும் ஆண்களிலும் பெண்களிலும் சரிவிகிதத்தில்தான் கலந்து இருக்கிறார்கள்.

இதில் "நல்லது கெட்டது" என்று நாம் வகை படுத்தும் விசையங்கள் அந்தந்த நாட்டு, மக்கள் நடை முறை கலாச்சாரத்தை பொறுத்து மாறுபடுகிறது.

இங்கே கொடுக்க பட்டுள்ள படங்களில், நம் நாட்டு மருதாணி வர்ணத்தை பார்த்தவுடன் "வாவ் என்ன அழகு" என்று சொல்ல தூண்டிய நம் மனது!, இதே போல் வெளிநாட்டில் அவர்கள் தீட்டி இருக்கும் வர்ணத்தை பார்த்தவுடன் "ஐயோ என்ன இது?" என்று ஏன்? சொல்ல தூண்டுகிறது! என்பதுதான் சரியான உதாரணம்.

நம் நாட்டில் தவறு, குற்றம் என்று இருக்கும் சில விசையங்கள், மற்ற பல நாடுகளில் சர்வ சாதாரணமாய் இருக்கும். மேலும் சில நேரம் நல்ல விசையங்கள் கூட "சந்தர்பம் மற்றும் சூழ்நிலையால்" குற்றமாகி தண்டிக்க பட்டு விடும்.

இப்படி நான் சந்தித்து, கேட்டு, மற்றவர் வாழ்கையில் பார்த்து, மொத்தத்தில் வாழ்க்கையிடம் படித்த பாடத்தின் எதிரொலியே இந்த தலைப்பில் நான் தொடர போகும் நல்லது, கெட்டது, நம்பிக்கை, தூரோகம், செக்ஸ் எல்லாம் கலந்த "கெட்டும் பாரின் போ"!.

"வெளிநா(ட்டு)டு வாழ்க்கை, உங்களை அன்புடன் வரவேற்கிறது!."



தொடர்ந்து படிக்கும் போது, இத்தனையையும் அனுபவிக்காமல் எப்படி எழுத முடியும்? அப்படின்னா "அவனா நீ" என்று நினைக்க வேண்டாம். "சுடுகாட்டை" பற்றி எழுத பிணமாக இருந்திருக்க வேண்டியதில்லையே!.

மொத்தத்தில் இதை ஒரு இடுகை என்று சொல்வதை விட, இடுகையின் ஆரம்பம் என்று சொல்வதே சரியாகும்.

இது இனி வரும் என் இடுகைகளுக்கு நடுவில் தொடரும்...!
 

Blogger Widgets