வாழ்கை என்பதே ஒரு பயணம், அதில் நமக்கு சொந்தமானது என்பது எதுவுமே இல்லை என்பதை உறுதியாக நம்புகிறவன் நான்.
ஆனால், வாழும்வரை நம்மை சுற்றி இருக்கிற விசையங்கள் மற்றும் நடக்கும் நிகழ்சிகளை பொறுத்தே நம் வாழ்கை முறையும் இருக்கும் என்பதையும் நான் மறப்பதில்லை.
அதனால்தான் என்னவோ, நான் வசிக்கும் ஊர் மற்றும் இருக்கும் இடத்தை தேர்வு செய்வதில் மிக கவனமாக இருப்பேன்.
தென்கொரியாவில் முழுதாக நான்கு ஆண்டுகள் ஓடிவிட்டாலும், தென்கொரியா என்னவோ எனக்கு சலிப்பே தட்டவில்லை, அவ்வளவு நிம்மதியான மற்றும் அழகான வாழ்கை முறை அங்கு.
இருந்தாலும், ஒரு தனிமனிதன் குடும்ப சக்கரத்தில் நுழைந்தவுடன், சில சொந்த விருப்பு வெறுப்புகளை கட்டாயமாக மாற்றி கொள்ள வேண்டிய சூழ்நிலை வந்து விடுகிறது.
இதில் தப்பி விட நான் ஒன்றும் அவதாரம் இல்லை என்பதால், சில தனிப்பட்ட காரணத்தை கருத்தில் கொண்டு தென்கொரியாவை விட்டு வரவேண்டிய நிர்பந்தம் உண்டாகி விட்டது.
இந்த முறை இந்தியா அல்லது இந்தியாவிற்கு அருகில் இருக்கும் நம் தமிழ் கலாச்சாரத்தை கொண்ட இடத்திற்குத்தான் போக வேண்டும் என்ற ஒரு கட்டுப்பாடும் இதில் சேர்ந்து கொண்டது, காரணம் தென்கொரியாவை விட்டு வரும் நோக்கமே குழந்தைகளின் ஆரம்ப கல்விக்காகத்தான்.
வெறும் ஆங்கில வழி அல்லது கொரிய மொழி கல்வி என்பதில் எனக்கும் சரி, என் குடும்பத்தினருக்கும் சரி விருப்பமில்லை,. தாய் மொழி இல்லாத வாழ்கை என்ன ஒரு வாழ்கை என்பதே அதன் உண்மையான காரணம்.
அதன் காரணமாகவே இந்த முறை மிக கவனமாக நான் தேர்ந்து எடுத்தது "சிங்கப்பூர்".

சிங்கப்பூரை பொறுத்த வரை எல்லாம் பார்த்து பழகிய இடங்கள்தான், அதே போல மாற்றம் என்பது சிங்கையில் புதிது இல்லை என்றாலும், நான் பார்த்த சிங்கை இப்போது ரொம்பவே மாறி இருக்கிறது, மக்கள் தொகையும் அதிகமாக தெரிகிறது.
மொத்த சிங்கப்பூரையும் கையடக்க ஆப்பில் தொலைபேசியில் அடக்கி வைத்து இருக்கிறார்கள், போகும் இடம், வழி முதல் அடுத்த பேருந்து வரும் நேரம், அருகில் இருக்கும் இடம், வாடகை வீடு, அங்காடி, மருத்துவமனை என்று அனைத்தையும் தொலைபேசியே சொல்லி விடுகிறது.
மாற்றம் பல இருந்தாலும் எப்போதும் போலவே பொலிவு குறையாத "புது பெண்" போல சிங்கை வழக்கத்தை விட அதிகமாகவே என் மனதை கவர்கிறது,
முதல் நாள் சாலை ஓர உணவு விடுதியில் இரவு உணவுக்காக சென்ற நான், என் தேவையை கேட்டு உதவி செய்ய வந்த பெண்ணிடம் பேசிய போதுதான், கேட்டு பழகிய உள்ளூர் தமிழ் வார்த்தைகள் என்றாலும், கடந்த நான்கு ஆண்டு கொரிய வாழ்கையில் சுத்தமாக அதை நான் மறந்து விட்டேன் என்று புரிந்தது.
கோழி சோறுடன் டைகர் பீர் (புலிப்பால்) கேட்க நினைத்து, ஆன்டி டைகர் பீர் கேன் (beer can) என்று சொல்ல, சற்றும் தன் புன்னகை மாறாமல் "கேன் கேன் லா" (can can la), "போத்தில் ஆர் டின்"(Bottle or Tin) என்று பதில் கேள்வி கேட்க, "பீர் டின்" என்று சொல்லவேண்டும் என்பதை நினைத்து இருவருமே சிரித்து விட்டோம்.
இனி தென்கொரியாவை போல என்னை சுற்றி இருக்கும் நகரத்தை பற்றி எழுதுவது என்பது சற்று சிரமம் என்பதை நான் நன்கு அறிவேன், காரணம் என்னை விட மூத்த பதிவர்கள் இங்கு அதிகம் மற்றும் அவர்கள் எழுதாத புதிய இடம் எதுவும் இங்கு என் கண்ணில் பட்டு விடப்போவதில்லை.
ஆகவே, வழக்கம் போல என்னை சுற்றி நடக்கும் விசையங்களை சார்ந்த நல்ல பதிவுகளுடன் உங்களை இனி அடிக்கடி இணையத்தில் சந்திக்க முயற்சிக்கிறேன்.
மொத்தத்தில் சிங்கையின் நாற்பத்தி ஆறாவது பிறந்தநாளை கொண்டாடும் சிங்கை மக்கள் மற்றும் தமிழ் பதிவர்களுடன் நானும் சேர்ந்து கொண்டேன்.
ஆம், வாழ்கை பயணத்தில் அடுத்தது என்ன என்று தெரியும்வரை...!
இனி நான் சிங்கைவாசி...! மறுபடியும் மறந்து விட்டேன் பாருங்கள், மன்னிக்கவும், இனி நான் சிங்கைவாசி "லா" :-).
நன்றி மீண்டும் சந்திப்போம்.