Thursday, August 6, 2009

காதலும் கடவுளும்

மதம் மற்றும், மற்ற மத நம்பிக்கைக்கு மதிப்பு கொடுப்பதை பற்றி பார்த்தோம், இனி இந்த பதிவில் தவறாக பயன் படுத்தப்படும் மத மாற்றம் பற்றியும், அதன் விளைவுகள் பற்றியும் சொல்வதை தவிர, எந்த மதத்தையும் இழிவு படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை என்பதை முதலில் தெளிவு படுத்திக்கொள்கிறேன்.

எனக்கு தெரிந்த ஒரு கதையை சொல்ல விரும்புகிறேன், ஒரு ஆண் தன் மதமில்லாத ஒரு வேறு மத பெண்ணை காதலித்து பெற்றோர்களுக்கும், யாருக்கும் தெரியாமல் அரசாங்க சட்டப்படி பதிவு திருமணம் செய்து கொண்டார்கள்.



திருமணத்திற்கு பிறகும், நாம் மட்டுமே புத்திசாலி என்ற நினைப்போடு அவரவர் வீட்டில் இருந்து கொண்டார்கள் (சினிமாவில் வரும் எல்லா நல்ல விசையத்தையும் விட்டு விட்டு, இது போல் சிந்தனைகளை மட்டும் எடுத்துக்கொள்வது தானே இன்று நிஜத்தில் நடக்கிறது).

இது நடந்து சில மாதங்கள் சென்ற பின் இரு வீட்டாருக்கும் விஷயம் தெரிய வர, வழக்கம் போல் இரு வீட்டிலும் பல பிரச்னைகள். சரி, நடந்தது நடந்து விட்டது, இனி என்ன செய்யலாம் என்றும் இரு வீட்டாரும் பேச முன் வரும் போது மணமகன் தரப்பு வேண்டுதல் இது.

எங்கள் மதத்தில் எனக்கு இருநூறு பவுன் முறை செய்ய தயாராய் இருப்பதால் தான், இந்த திருமணத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள், அதனால் நீங்கள் அதில் பாதியாவது செய்து விட்டால் மற்றதை பேசி சரி செய்ய முடியும் என்பது கருத்து.

உண்மையில், அந்த பெண்ணை பெற்ற தகப்பனுக்கு அந்த அளவு வசதி இல்லை, அவர்கள் ஒரு நடுத்தர குடும்பம் என்பது அந்த பெண் மற்றும் பெண்ணை மணந்த ஆண் இருவருக்குமே தெரியும்.



எது எப்படியோ, தன்னால் செய்ய முடியாத ஒன்றை கேட்டதாலும், தன் மகள் தனக்கு தெரியாமல் வேறு மதத்தில் திருமணம் செய்து கொண்ட கோவத்திலும், தனக்கு அவ்வளவு வசதி இல்லை என்றும் இதை தன்னால் செய்ய முடியாதென்றும் சொல்ல, அங்கு ஆரபித்தது வினை.

தன் மதத்திற்கு அந்த பெண்ணை மாற்றினால் தான் வாழ முடியும் என்றும், அதற்க்கு இந்த பெண்ணின் தாய் தகப்பன் என்ற முறையில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்று எழுதி தரும் படி பெற்ற தந்தையிடம் சொல்லப்பட்டது.

மத மாற்றத்தில் விருப்பம் இல்லாத அந்த தந்தை, அப்படியானால் அதன் பெயர் "விடுதலை பத்திரம்" அதை இரண்டு பக்கமும் செய்ய வேண்டும் என்று சொல்ல,வாக்கு வதம் வளர்ந்தது, இதில் அந்த பெண்ணும் பிடிவாதமாக இருக்க அந்த பெண்ணினின் வாழ்கைக்காக அந்த தகப்பன் அவர்கள் கேட்ட படி எழுதிக்கொடுத்த பின் தான் அவர்களுடன் அதன் பெண்ணால் வாழ்கையை குடும்ப ஆரம்பிக்க முடிந்தது.

இதில் பெண்ணை பெற்ற அந்த தகப்பன் எதையும் எழுதி வாங்க வில்லை, ஒரு கோபத்தில் கேட்டதோடு சரி.

இத்தகைய முட்டாள்தனமான செய்கைகளில் இன்று வரை எனக்கு புரியாதது என்ன என்றல்?

இதில் காதல் எங்கு இருக்கிறது? அல்லது காதலித்த துணையுடன் வாழ, மதம் ஒரு தடையாய் இருப்பது உண்மயான இறை நம்பிக்கையா?

தான் விரும்பி திருமணம் செய்த ஒருவருடன் குடும்பம் நடத்த, உண்மையில் எந்த மதம் அல்லது எந்த கடவுள் தடை சொல்கிறது?



வேறு ஒரு மதத்தில் நீ காதலிக்கலாம், பதிவு திருமணம் செய்யலாம் ஆனால், குடும்பத்தில் சேரும் முன் என்னை வணங்க சொல் என்றோ!, அல்லது என்னை தவிர மற்ற யாரையும் வணங்ககூடாது என்றோ!, எந்த மதம் அல்லது எந்த கடவுள் சொல்கிறது? அப்படி இல்லை என்றால் இதில் காதல் எங்கே இருக்கிறது?

சரி, இப்படி வைத்துக்கொள்வோம், மேல் சொன்னபடி பெண்ணின் தகப்பனால் அந்த மணமகன் கேட்ட முறையை செய்ய முடிந்து இருந்தால், அப்போது இந்த மத மாற்றம் தேவை இல்லையா? அப்படி இல்லை என்றால் இதில் இறை நம்பிக்கை எங்கே இருக்கிறது?

இது எல்லாவற்றையும் தாண்டி, ஒரே ஒரு கேள்வி?

காதலின் பெயரால் விரும்பிய ஒருவரை அதுவும் பதிவு திருமணம் செய்த பின், எப்படி காதலித்தமோ அப்டியே ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றால் அது காதலாகுமா? அல்லது தன் வாழ்கை துணையுடன் (பதிவு) திருமணத்திற்கு பின் குடும்பம் நடத்துவதற்காக ஒரு மதமோ, மதமாற்றமோ தேவைப்பட்டால், அது உண்மையான பக்தியாகுமா?

ஆனாலும் இத்தகைய நல்ல!!! உணர்வுக்கு நாம் வைத்துக்கொள்ளும் பெயர் தான் என் " காதல்" என் " கடவுள்" என்"மதம்".

இதுவா காதல் அல்லது இதுவா மதம், இறை நம்பிக்கை?

நான் போன பதிவில் சொன்ன படி, நம் நம்பிக்கைக்காக அல்லது சொந்த சுக, துக்கங்களுக்காக மற்றவர் நம்பிக்கையை உடைப்பதுதானே இது?

ஒருவர் விருப்பபட்டு மதம் மாறுவதில் என்ன பின் விளைவுகள் இருக்கப்போகிறது, அல்லது தனிப்பட்ட ஒருவர் மதம் மாறுவதில் மற்ற யாருடைய நம்பிக்கை கெட போகிறது என்று, எதிர் வாதம் செய்ய முடியும்? பதில் சொல்கிறேன்.

மேல்சொன்ன மாதிரியான ஒரு நிகழ்ச்சிக்கு பின், அந்த (ஆணோ அல்லது பெண்ணோ) பிறந்த குடும்பமும் அவர்கள் உடன் பிறந்தவர்களும், இன்றைய நம் சமுதாயத்தில் எவ்வாறெல்லாம் பெருமை படுத்த படுவார்கள் (கேலிக் கூத்தாக) என்பதை இங்கு நினைத்து பார்க்க வேண்டும், இது நம் எல்லோருக்கும் தெரியாத ஒரு விசயமல்ல.

இதை மட்டுமில்லாமல் இதில் தனிப்பட்ட ஒருவரை தவிர மற்ற யாருடைய நம்பிக்கை உடைகிறது என்றால், மதம் என்ன அரசியல் கட்சி அல்லது கொள்கையா? நினைத்து நினைத்து மாற்றிக்கொள்ள?

ஒரு குழந்தை பிறந்தது முதல் ஒவ்வொரு சடங்கு சம்பிரதாயங்களையும் பார்த்து பார்த்து பண்ணிய ஒரு ஒட்டு மொத்த குடும்பத்தில் உள்ள மற்ற எல்லாருடைய நம்பிக்கையும் இங்கு ஒருவரின் சுய நலத்துக்காக உடைகப்படுகிரதல்லவா?

மற்றும் இதனால் அந்த குடும்பத்தில் உள்ள மற்ற உடன் பிறந்தவர்களின் எதிர்கால வாழ்கை பாதிக்கப்படுமா இல்லையா? அந்த அளவு ஒரு முற்போக்கான சமுதாயத்திலா வசிக்கிறோம் நாம்!? இதை யாரவது இங்கு மறுக்கமுடியுமா?

சரி, இதன் பிறகு, இப்படி மதம் மாறிய ஒரு பெண்ணோ ஆணோ, தன் குடும்பம், சுற்றம், சொந்தத்தில் ஒரு மாற்று மத கலாச்சாரத்துடன், எப்படி எந்த ஒரு சுக அல்லது துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியும்? அப்படி செய்தால் அந்த நிகழ்ச்சியை விட இவர்கள் அங்கு பெரிய காட்சிப்பொருளாகி விடுவார்கள் இல்லையா?

இதனால் அவர்கள் அந்த நிகழ்ச்சிக்கு வாரமல் இருந்து விட்டால், தன் குடும்ப உறுப்பினர் ஒருவர் இல்லாத அந்த நிகழ்ச்சியில் மற்றவர்கள் எப்படி சந்தோசமாக இருக்க முடியும்?

இதனால் அந்த தாய் தந்தை குடும்பத்தினர் எப்படி கலங்காமல் இருக்க முடியும்?

இப்படி செய் என்று எந்த கடவுள் எந்த வேதத்தில் சொல்கிறது?

அல்லது உன் சொந்த நம்பிக்கை மற்றும் சுக, துக்கங்களுக்காக, நீ இத்தனை நாளும் நம்பி வந்த நம்பிக்கைக்கு புறம்பான வார்த்தையையோ செயலையோ, உன் தாய் தந்தை குடும்பத்தினர் முன் அல்லது அவர்கள் கவனிக்கும்படி செய் என்று எந்த கடவுள் எங்கு சொல்லி இருக்கிறார்?

இதைத்தான் நான் "இது கடவுளின் பெயரால் மற்றவர்களை ஏமற்றுவதாக நினைத்து, கடவுளிடம் நாம் ஏமாந்து போகும் ஒரு செயல்" என்று சொன்னேன்.

சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், நாம் ஒரு மதத்தின் நம்பிக்கைக்கு புறம்பான பாவம் அனைத்தையும் செய்து விட்டு, இன்னொரு மதத்திற்கு ஓடி விட்டால்? அது எந்த மதமாக இருந்தாலும் சரி, அந்த மதத்தின் கர்மவினையோ அல்லது இஸ்முர்-ரோ அல்லது சாத்தானின் நரகமோ நம்மை விட்டு விடுமா?

சிந்தித்து பார்த்து, இனி வரும் தலைமுறையாவது தங்கள் சுயநலத்துக்காக கடவுளையும், காதலையும் கலக்காமல் இருக்க வேண்டுகிறேன்.



இங்கு மீண்டும் சத்தம் போட்டு சொல்கிறேன் "மதம் என்பது அதன் புனித அறநெறி வழிகளை கடைப்பிடித்து நடப்பதர்க்காக மட்டுமே தவிர மற்றவர் முன் நடிப்பதர்க்காக அல்ல".

எனவே மத மாற்றம் என்னும் பாவம் தவிர்த்து, எல்லா மத நம்பிக்கைக்கும் சம மதிப்பு கொடுத்து, நம்மை மட்டுமில்லாமல் நம் வருங்கால சந்ததியையும் பாவத்தில் இருந்து காப்பாற்றி எல்லாம் வல்ல இறை அருள் பெறுவோம்.

இல்லை நான் கடவுள் நம்பிக்கை இல்லாத நாத்திகவாதி என்றால், இங்கு கடவுளின் பெயரை சொல்லி நடிக்க வேண்டி இருக்காது, ஆனால் மனிதனை மதிக்க தெரிந்து இருக்க வேண்டும்.
அதாவது நம்மை சுற்றி இருக்கும் மனித உறவுகளை நம்சுயநலத்துக்காக காயப்படுத்த கூடாது, மற்றும் நம் நம்பிக்கையை மற்றவர்கள் மதிப்பது போல், மற்றவர்கள் நம்பிக்கைக்கு நாம் மதிப்பு கொடுக்க தெரிந்து இருக்க வேண்டும்.

உங்கள் வருகைக்கும், நேரத்திற்கும் நன்றி.

Wednesday, July 29, 2009

மனமும் மதமும்

Religious is Something to Behave.... Not to Act....

"யானைக்கும் சரி, மனிதனுக்கும் சரி, " மதம் " பிடித்துப்போனால் மற்றவர்களுக்கு ரொம்பவே தொல்லை தான்" இது நான் சமிபத்தில் ரசித்த ஒரு வசனம்.




சரி, இதை இங்கு குறிப்பிட்டு சொல்லுவானேன் என்றால், ஒரு மதத்தின் பலன் என்பது, நாம் அதன் மீது வைத்து இருக்கும் நம்பிக்கையை பொருத்து மாறுபடுகிறது, அதே போல் எந்த ஒரு மத வேதத்திலோ இதிகாசத்திலோ மற்ற மதத்தின் நம்பிக்கையை காயப்படுத்தி எந்த ஒரு வார்த்தையும், எந்த ஒரு இடத்திலும் சொல்லவில்லை, அந்த அந்த மத நூல்கள், தன் மத வழிபாட்டு பாதையில் இறை ஜோதியில் கலக்க வழி காட்டுகிறது.

எல்லாம் வல்ல இறவனை சென்று அடைய இரு பக்கங்களும் அழகான பூக்கள் நிறைந்த பசுமையான ஒரு பாதை தான் மதம், இதில் கதம்ப ரோஜாக்கள் நிறைந்த மஞ்சள் பாதையானாலும் சரி, மல்லிகை கலந்த பச்சை பாதையானாலும் சரி, திராச்சையும் மெழுகுவர்த்தியின் ஒளியும் கலந்த வெள்ளை பாதையானாலும் சரி, இறுதில் சென்று அடையும் இறை அருள் ஒன்று தான்.

எல்லா மதங்களுமே தீவினை செய்தால் கடவுளால் தண்டிக்கப்படுவாய்; நல்லவனாக இருந்தால் கடவுளால் ரச்சிக்க படுவாய் என்ற கருத்தைதான் சொல்லுகின்றன.



இந்து மதம் கர்மவினைக்கேற்ப பிறவி பல எடுத்து, இறுதியில் முக்தி பெறவேண்டுமெனக் கூறுகிறது.

கிறித்துவம் - பாவம், கடவுளின் மோட்சம், சாத்தானின் நரகம் எனவும்,

இஸ்லாம் - இஸ்முர், அல்-ஜன்னத், ஜன்னத் என்று அதே கோட்பாடுகளைத்தான் கொண்டுள்ளன.

ஜைனம், புத்தம், தாவோயிஸம் என்ற சமயங்கள் இறுதி நிலையை ‘நிர்வாண நிலை’ என்றழைக்கின்றன.

இந்த உண்மையை அறிந்தவர்கள், அவர் எந்த மதத்தை சார்தவராக இருந்தாலும் சரி, அவர்கள் அடக்கத்திலேயே அது தெரியும், சற்று உற்று கவனித்தால், அவர்கள் தன் மதத்தை மதிக்கும் அதே அளவு , மற்ற மத நம்பிக்கைக்கும் மதிப்பு கொடுப்பார்கள்.

ஒரு உண்மையான இந்துவோ, இஸ்லாமியரோ அல்லது கிறிஸ்துவரோ தன் மதத்தின் மீது வைத்து இருக்கும் நம்பிக்கை என்பது, தன் கடவுள் தன்னோடு இருக்கிறார் அவர் தம்மை என்றும் காப்பாற்றுவார், இது அவர்கள் தங்கள் மதத்தின் மீதும் தங்கள் கடவுளின் மீதும் வைத்து இருக்கும் நம்பிக்கை, நிச்சயமாக இது என்றும் பொய்க்காது.

இதை அறியாத பலர், இன்று கடவுளின் மீது வைத்து இருக்கும் நம்பிக்கையின் அளவை மற்றவர்களுக்கு முன் காட்டி நடிப்பதயே விருப்புகிறார்கள், அதுவும் குறிப்பாக தன் மதமில்லாத மற்ற மதத்தினர் முன் அப்படி நடந்து கொள்வது ஒரு நாகரிகமற்ற செயல் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள விரும்புவது இல்லை.

எனக்கு மேல் சொன்ன மூன்று மதம் மட்டுமில்லாமல் பல மத நண்பர்கள் உண்டு, நான் பார்த்த வரை யாரும் மற்ற மத நம்பிக்கை மற்றும் வழிபாட்டு முறைகளை ஆர்வமுடன் கேட்டு தெரிந்து கொள்வார்களே தவிர, எந்த நம்பிக்கையையும் கேலியோ, கிண்டலோ பண்ணியதில்லை, அதே போல் தன் மதம் மட்டுமே உயர்ந்தது என்று சொல்லியதில்லை.



இந்துவுக்கு "பெருமாளே" அல்லது "ராமா" என்பதும், கிறிஸ்துவருக்கு "இயேசுவின் கிருபையால்" என்பதும், இஸ்லாமியருக்கு "இன்ஷா அல்லா" என்பதும் மற்ற "புத்தம் சரணம் கச்சாமி" போன்ற சுவாசத்துக்கு இணையான பல மத சார்பான வார்த்தைகள் வழக்கத்தில் உள்ளன, ஆனால் இவற்றிக்கு கூட இடம் பொருள் ஏவல் உண்டு என்பதை உணர்ந்து, நம் நம்பிக்கையும் மதமும் எந்த விதத்திலும் மற்றவர் நம்பிக்கையோ, மதத்தையோ புண்படுத்தாமல் நடப்பதே, நம் மதத்தின் பொருளை நாம் உணர்ந்ததுக்கு அர்த்தமாகும்.

அப்படி இல்லாமல், அதாவது நாம் நம் நம்பிக்கையை நம்மை சுற்றி இருப்பவர்கள் தெரிந்து கொள்ள வைக்க வேண்டிய அவசியம் என்ன? அதுவும் நம் மதமில்லாத மற்றவர்கள் முன் நடந்தால் இதை எப்படி எடுத்துக்கொள்ள முடியும்?

உதாரணமாக, ஒரு அமைதியான கிறித்துவ அல்லது இஸ்லாம் திருமணத்திற்கு போன ஒருவர், "பெருமாளே இந்த மண மக்களை காப்பாற்று "கோவிந்தா கோவிந்தா"" என்று கத்தினால் அது எப்படி இருக்கும்? இங்கு நம் நம்பிக்கை நிச்சயம் மற்றவர்களை காயப்படுத்தும் இல்லையா?

இத்தகைய செயல் , பார்த்தாயா நான் எப்படி என் மதத்தை அல்லது என் கடவுளை நினைக்கிறேன் என்று மற்றவர்களுக்கு கட்டுவதாக தானே அர்த்தமாகிறது?

இதில் பக்தி எங்கே இருக்கிறது? இது நடிப்புக்கு சமம் தானே? அது மட்டுமில்லாமல் இது கடவுளுக்கு புரியாதா?

ஆக, இது கடவுளின் பெயரால் மற்றவர்களை ஏமாற்றுவதாக நினைத்து, கடவுளிடம் நாம் ஏமாந்து போகும் ஒரு செயல் இல்லையா இது?

இல்லை என்றால் , பிறகு ஏன் மற்றவர் நம்பிக்கைக்கு புறம்பான ஒரு வார்த்தையையோ, செயலையோ, நாம் மற்றவர் முன் அல்லது அவர்கள் கவனிக்கும்படி செய்ய வேண்டும்?.

நாம் நம்புகிறோம் என்பதற்காக மற்றவர்களும் நம்பவேண்டும் என்பதர்காகவா? அல்லது மற்றவர் நம்பிக்கையை பொய் என்று சொல்லி அவர்களை அல்லது அவர்கள் நம்பிக்கையை காயப்படுத்துவதர்காகவா?

இது எதுவுமே இல்லாமல், நாம் நம் கடவுள் பாசத்தை, பக்தியை காட்ட நினைத்தால், அதே வார்த்தைகளை, நாம் ஏன் மனதிற்குள் சொல்ல கூடாது? நமக்கு தெரியும் மற்றும் நாம் நினைக்கும் கடவுளுக்கு கண்டிப்பாக தெரியும் இல்லையா? ஆக, இது போல் நடந்து கொள்வது ஒரு அர்த்தமில்லாத செயலாகி, நம் மத புனிதத்தை நாமே கெடுப்பதற்கு சமமாகிறது.



உன் மதமில்லாத மற்ற மதத்தினர் முன் எப்போதும், நீ என்னை நினைப்பதை (நினைப்பதாக) காட்டு என்றோ, அல்லது அவர்கள் கேட்கும், பார்க்கும் படி நீ என்னை நினைதால் மட்டுமே நான் உன்னை காப்பேன் என்றோ, நான் அறிந்த வரை எந்த ஒரு மத வேதமும், கடவுளும் சொல்லவில்லை.

எனக்கு தெரிந்த வரை, எந்த ஒரு உயிரோ அல்லது நம்பிக்கையோ காயப்படும்படி செய்யும் போது, நாம் எந்த மதமாக இருந்தாலும் சரி, நம் பக்தியின் பலனை இழந்து பாவத்திற்கு ஆளாகிறோம் , அதுவே தாய் தந்தை ரத்த உறவாகவாகும் போது , இங்கு நம் பிறப்பின் பலனை இழந்து விடுகிறோம்?

இதுவே இந்து மதத்தில் கர்மா என்றும், கிறித்துவ மதத்தில் சாத்தானின் வேதம் என்றும், இஸ்லாம் மதத்தில் ஈமான் என்றும் அழைக்கப்பட்டு மதிப்பளிக்கப்படும் இதயசுத்தியான நம்பிக்கை, இதன்படி பார்த்தால், ஒருவர் ஒரு மதத்தின் அடிப்படை கொள்கைகளை விளங்காமல், அந்த மதத்தின் கடமைகளை மட்டும் தன் சுயநலத்துக்காக அல்லது சுக, துக்கங்களுக்காக செய்வதன் மூலம், அவருக்கு எந்த பயனும் ஏற்படாது என்ற ஒரே கருத்தைதான் கூறுகிறது.

அதாவது ஒவ்வொரு ஆத்மாவும் அதனதன் செயலுக்கு பொறுப்பு .

மனிதனாய் பிறந்தவன், மனிதனாய் இறப்பது எந்த அளவு உண்மையோ அதே அளவு, நீ எப்படி, எங்கு இருந்து வந்தாயோ, அப்படியே, அங்கு திரும்ப சென்று அடைவாய், இதற்கு நீ தகுதி அடையும் மன பக்குவம் வந்து உன்னை சுற்றி இருக்கும் மாயைகளை உணர்ந்து உன்னை நீயே அறியும் வரை, அதாவது உன் சொந்த சுக, துக்கங்களுக்காக இயற்கை நடை முறைகளை உன் வசதிக்கு ஏற்றவாறு மற்றும் பாவத்தை செய்யும் வரை, நீ மீண்டும் மீண்டும் பாவப்பட்ட மனிதனாய் பிறந்து கொண்டே இருப்பாய் என்று வேதங்கள் சொல்கிறது.

அதனால் தான் இந்த உலகில் உள்ள அத்தனை பாவத்தையும் துரோகத்தையும் மனிதனால் மட்டுமே செய்ய முடிகிறது, எங்காவது ஒரு சிங்கமோ, புலியோ அல்லது ஒரு பாம்போ தன் இனத்திர்க்கோ, குடும்பத்திற்கோ துரோகம் செய்வதாய், பாவம் செய்வதாய் பார்க்க முடியுமா?

நாம், நம் மதம் மற்றும் அதன் புனிதத்தை மதிப்போம் அதன் வழி நடப்போம், அதே போல் மற்ற மதத்தின் வழியில் நடக்க தேவையில்லை என்றாலும், அதன் மீது ஒருவர் வைத்து இருக்கும் நம்பிக்கைக்கு நம் மதத்தை எந்த அளவு மதிக்கிறோமோ அதே அளவு கண்டிப்பாக நாம் மதிப்பு கொடுக்க வேண்டும், அதுவே நாம் நம் மதத்திற்கு செய்யும் பெரிய தொண்டு ஆகும்.

இன்னும் சொல்லப்போனால் கடவுள் உண்டு (உருவம் இல்லாதவர்,உருவம் உள்ளவர், அன்பே கடவுள்) என்று ஏதோ ஒரு வகையில் சொல்பவர்களை நான் மதிக்கிறேன் அவர்களின் கடவுள் நம்பிக்கைக்காக, அதே போல் கடவுளே இல்லை என்று சொல்பவர்களை நான் இன்னும் அதிகமாக மதிக்கிறேன் அவர்கள் மனிதனை மதிப்பதற்காக, மேலும் கடவுளே இல்லை என்பது கொள்கையானாலும் இவர்கள் எந்த கோவிலையும் இடித்ததாக சரித்திரம் இல்லை.

ஆனால் கடவுள் உண்டு என்று சொல்லிக்கொண்டு, நான் வணங்கும் கடவுள் மட்டுமே கடவுள் என்றும், மற்ற அனைத்தும் பொய் என்று சொல்லி எல்லாம் வல்ல இறைவனையும் தன் கீழ்த்தரமான சின்ன புத்தி போல, மொழி, முறை கொண்டு தன் சொந்த சுக, துக்கங்களுக்காகவும், அரசியல், வியாபாரத்துக்காகவும், கடவுளையும் ஒரு குறுகிய வட்டத்துக்குள் கொண்டு வர நினைப்பவர்களை மட்டும், என்றும் மதிக்க அல்ல மனிதனாய் நினைக்கவே என் மனம் இடம் தரவில்லை.

இவர்கள் மட்டுமே இந்த உலகின் சாத்தான்கள், இவர்கள் சமுதாயத்தில் விதைப்பது தான் மத மாற்றம் என்னும் விஷ செடி, இது விருச்சமாகும் முன் வேரோடு அழிப்போம்.

மதம் என்பது அதன் புனித அறநெறி வழிகளை கடைப்பிடித்து நடப்பதர்க்காக மட்டுமே தவிர, மற்றவர் முன் நடிப்பதர்க்காக அல்ல... என்பதை சத்தம் போட்டு சொல்லவே இங்கு விரும்புகிறேனே தவிர, மற்ற மதங்களை இழிவு படுத்தும் நோக்கம் இல்லை.

சரி, எத்தனயோ பிரச்சனைகள் இருக்கும் இந்த சமுதாயத்தில், இதனால் என்ன பிரச்சனை வந்து விட போகிறது என்று நீங்கள் கேட்கலாம்? அதை எனக்கு தெரிந்த ஒரு உண்மை கதை மூலம் இனி வரும் "கடவுளும் காதலும்" பதிவில் பார்ப்போம்.

மீண்டும் சந்திப்போம் நன்றி.

அது வரை மதம் பிடித்து இருந்தால், வந்து ஓட்ட போட்டு அப்படியே ஒரு பின்னூட்டத்த போட்டுட்டு போங்க, இல்ல என் மனம் பிடித்து இருந்தாலும் போடுங்க ....!

அட, எதுவுமே பிடிக்கலைனாலும் வந்து நாலு வார்த்தை திட்டிடாவது போங்கையா ..... !
 

Blogger Widgets