Wednesday, November 4, 2009

நான் ஆத்திகனா! நாத்திகனா! - இறுதி பாகம்.

அருமையான ஒரு சிங்கப்பூர் பயணம், நண்பர் கிரியைத்தான் சந்திக்க முடியவில்லை, மன்னிக்கவும் கிரி.

ஆனால், என் நண்பர் முரளியையும் அவர் நண்பர் விக்னேஷ்சையும் சந்திக்க முடிந்தது, அவர்களுடன் நான்கு நாட்கள் நேரம் போனதே தெரியவில்லை.

சரி, இப்போது போன பதிவில் விட்டதை தொடர்வோம்.


யார், என்ன சொன்னால் நமக்கென்ன, நம் மனதை கேட்டு பார்ப்போம், உண்மைல நீ யாரூடா செல்லம்? என்று எனக்குள் நானே குழம்பியபோது...

ஒரு வேளை நம்மையும் அறியாமல் நமக்குள் ஒரு நாத்திகனோ?

ஈ.வெ.ராவின் கொள்கையைத்தான் விரும்புகிறோமோ? என்று அதில் உள்ளே போக, என்ன ஒரு ஆச்சரியம்!

மனிதனை மதி என்று சொன்ன அந்த பகுத்தறிவு-வாத நாத்திகரின், ஒரே ஒரு கொள்கைதான் கடவுள் இல்லை என்பது.

அது தவிர, சமூக சீர்திருதத்திற்காகவும், சாதி வேற்றுமையினை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் அந்த பகுத்தறிவு தலைவர், இன்னும் எத்தனையோ முத்து முத்தான உயர்ந்த கொள்கைகளுடன் போராடியிருகிறார்.

இதை பற்றி அவரே "குடி அரசு பத்திரிகை மே 1 1927 ம் ஆண்டு "குடிஅரசின் இரண்டு ஆண்டு பணி" என்ற தலைப்பில் எழுதியதில் " என்னென்னவற்றையோ, யார் யாரயோ கண்டித்திருக்கிறேன், எதை கண்டித்திருக்கிறேன், யாரை வையவில்லை என்று எனக்கு ஞாபகத்துக்கு வரவில்லை" என்று எழுதியும் இருக்கிறார்.



அந்த ஒரே ஒரு நாத்திக கொள்கையை தவிர, அவரின் மற்ற அனைத்தும் எனக்கும் பிடித்து இருக்கிறதே.

ஒரு வேளை அவர் வாழ்ந்த காலத்தில் இருந்த வாழ்கை முறை நாகரீகத்தின் படி, கடவுள் நம்பிக்கைதான் மற்ற சமுதாய இன்னல்களுக்கு அடிப்படை, என்று அவர் நினைத்து இருக்கலாம் இல்லையா?

ஆனால், இன்று தலைமுறைகள் மாறிய பின்னும், ஏன்? அவரின் அந்த ஒரே ஒரு நாத்திக கொள்கை மட்டும் முன்னிருத்த படுகிறது என்றேன்?

அப்போது தானே, கடவுளை நம்பும் இந்த முட்டாள்களின் ஓட்டை பெற்று ஆட்சியை பிடிக்க முடியும் என்றது பதில்.

என்னடா இது? அவர் கொள்கையும் திரித்து விட படுகிறதா?

கடவுளை நம்புவர்களை முட்டாள் என்று மட்டும் தான் சொன்னார், ஆனால் இதை பயன் படுத்தி பலன் அடைபவனை மகா மகா அயோக்கியன் என்று சொன்னாரே?

மேலும் நல்ல சமூக சீர்திருத்த பகுத்தறிவு இயக்க தலைவன் என்பவன், எந்த கட்சி, அரசியல் பதவிக்கும் ஆசை பட கூடாது என்று சொல்லிதானே தனக்கு கிடைத்த மற்றும் தன்னை தேடி வந்த பதவிகளை வேண்டாம் என்று மறுத்தார்?

சமூகத்தில் இறங்கி வேலைசெய்து சுத்தப்படுத்த நினைக்கும் பகுத்தறிவு லட்சியவாதியான நாம், ஏன் கட்சி பதவி ஆட்சியை பற்றி கவலைப்பட வேண்டும், போட்டியிட வேண்டும்? மாற்று கொள்கை உள்ள வேறுகட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டும்?

(இந்த கொள்கை பிடிக்கவில்லை என்று, இங்கிருந்து பிரிந்து போனவர்கள்தானே அனைவரும்)

அப்புறம் நமக்கும் மற்ற அரசியல் வாதிகளுக்கும் என்ன வித்தியாசம்?

அப்படி என்றால் ஈ.வெ.ரா என்ற சமூக சீர்திருத்தவாதியின் நல்ல சிந்தனைகள் மற்றும் எண்ணங்கள் இங்கு நம்மாலேயே சிதைக்கப் படுகிறதே? அவரின் உண்மையான அடிப்படை கொள்கை இங்கு அடிபடுகிறதே? என்றேன்?

இந்த முறை அவர்கள் கையை காட்டும் முன் நானே..

இவற்றால் பலனை அடைகிறவன் மகா மகா அயோக்கியன் என்று அந்த தலைவனின் வார்த்தையை திரும்ப ஒரு முறை சொல்லிவிட்டு வர...

என்னப்பா இது ரஜினி மாதிரி சாமி இருக்குன்ன, அப்புறம் கமல் மாதிரி எல்லாமே எல்லோருமே சாமின்ன, இப்ப சத்தியராஜ் மாதிரி மாத்தி மாத்தி பேசுற, ஏதாவது ஒரு முடிவுக்கு வந்தாத்தான, அதுக்கு பொருத்தமான ஒரு பொண்ண பாக்க முடியும்? என்றார்கள் பெற்ற கடைமை தவறாமல்.

ஓ, நம்ம கலாச்சார வாழ்க்கைபடி, பெண் கொடுக்க இது எல்லாம் முக்கிய தகுதியாச்சே! என்று.


போங்கடா...அணு குண்டே போட்டு சுடுகாடானாலும், உழைப்பை நம்பி உயர்ந்த ஜப்பானுக்கு போக போகிறேன் என்று சொல்லிவிட்டு, போய்விட்டேன்.

இடையில் உழைப்பை மட்டும் நம்பும் இவனுக்கு, நம்பி பெண்ணை கொடுக்கலாம்னு, என்னையும் நம்பி ஒரு நல்லவர் என் தங்கமணியை கொடுத்து விட்டார்.

அங்க போனா, செஞ்சது இயந்திரம் என்றாலும், அவர்களும் குனிந்து குனிந்து கும்பிட்டார்கள்! சிறந்த தலைவர் என்றார்கள்! என்னடா இது ஜப்பனுமா? யார் இது எல்லாம் என்றால்?

என்னை, ஏற இறங்க பார்த்து கேட்டார்கள், நீ உண்மையில் இந்தியனா? புத்தரை, சுபாஸ்சந்திரபோசை எல்லாம் யார் என்று கேட்கிறாய்? என்றார்கள்.

ஓ, நம் நாட்டில் உள்ள உள்குத்து பிரச்சனைகளில், நம் நாட்டில் பிறந்த நல்லவர்களை நாம் மறந்தாலும், உலகம் அவர்களை கொண்டாடுகிறது என்று பெருமை பட்டு கொண்டேன்.

சரி, ஜப்பானே கடைபிடிக்கும் போது, நாமும் அம்பேத்காரை போல புத்த கொள்கைகளுக்கு போய்விடுவோம் என்று பார்த்த போது, இலங்கை, ஜப்பான், சீனா, வியட்னாம், தென்கொரியா நாடுகள் என்னை வரவேற்றது.

அன்பே கடவுள் என்று சொல்லும் புத்தரையும், இயற்கை வளமான தகுதியையும் வைத்து இருப்பதால் சிங்கப்பூரை போல, ஆசியாவில் மிகசிறந்த இடமாக வந்து விடும் என்ற பயந்த நாடுகளின் சதியில் சிக்கி, அன்பின் அடையாளமே இல்லாத போர்களமாக மாறி விட்டதால் அப்போது, இலங்கை செல்ல என் மனம் விரும்பவில்லை.

இந்தியாவில் பிறந்த புத்தரின் கொள்கைகளை ஜப்பானில் ஆரமித்து வியட்னாமில் தொடந்து தென்கொரியாவில் வாழ்ந்து பார்க்க, முடிவில் கிடைத்து ஒரு சிறிய கதை.



அதாவது அரண்மனை, நாட்டை விட்டு காட்டுக்கு சென்று, போதி மரத்தடியில் முக்தி பெற்று, புத்தர் பல வருடங்கள் கழித்து தன் சொந்த நாட்டுக்கு வருவதாய் தகவல் வர, நாடே

அந்த மகானை வரவேற்க திருவிழா கோலம் கொண்டது, புத்தரும் வந்தார்.

அவரை வரவேற்ற அவரின் மனைவி, கடவுளை தேடி சென்றீர்களே! கண்டுவிட்டீர்களா அந்த கடவுளை என்று கேட்டார்?

புத்தரும் "ஆம்" என்றார்.

அப்படியா மிக்க மகிழ்ச்சி, யார் அந்த கடவுள்! எங்கே அவர்! என்றார்?
புத்தரும் "அன்பே கடவுள்" என்றார்.

அவர் மனைவி மீண்டும் சொன்னார், இதை தேடவா எங்களை எல்லாம் தனியாக தவிக்க விட்டுவிட்டு போனீர்கள்?

நானும், உங்கள் பெற்றோரும், இந்த நாட்டு மக்களும், உங்கள் மீது வைத்துதிருக்கும்
உண்மையான அன்பில் அந்த கடவுள் உங்களுக்கு தெரியவில்லையா என்று?

(கடவுளே ஆனாலும், பொண்டாட்டி கேள்விக்கு பதில் சொல்ல முடியாதுன்னு இங்கதான் புரிஞ்சுகிட்டேன்.)

அட்ரா சக்கை, சோக்கா கேட்டாங்க பாரு கேள்வி? ஆமா உண்மை தான? இதை தேடவா அவரு போதி மரம் தேடி போனாரு என்று நானும் கேட்க?

"குங்பு" தெரிந்து இருந்தாலும், புத்தமத துறவி என்பதால் அடிக்க கூடாது என்று நினைக்கிறேன், என்பது போல அவர் பார்க்க, நானே வீட்டிற்கு ஓடி வந்து விட்டேன்.

ஓடி வந்து, முகம் கழுவி துடைக்கும் போது கண்ணாடியில் பார்த்தால்...பாதி வாழ்கை முப்பது ஆண்டுகள் முடிந்து போய் இருந்தது.

பாதி வாழ்க்கையே முடிந்து விட்டது, இது வரை என்ன கிழித்து விட்டோம் என்று நினைத்து கொண்டு, தின தேதியையாவது கிழிப்போம் என்று கிழித்தபோது கண்ணில் பட்டது, வீரத்துறவி விவேகானந்தரின் படமும் வாக்கும்.

சரி ஆனாது ஆச்சு, இவர் என்ன சொல்கிறார் என்று பார்க்கும் முடிவில், படித்தால் அவர் சொல்கிறார்.

"நீ என்னவாக ஆக நினைக்கிராயோ, அதுவாகவே ஆகிறாய்."

"ஒருவர் சொல்வதை நம்பாதே, ஏன் என்றால் அது இன்னொருவர் சொன்னது,

படித்ததை நம்பாதே, ஏன் என்றால் அது இன்னொருவர் எழுதியது,

உண்மையை நீயாக உணரவேண்டும், அந்த அனுபவமே உண்மை, அப்போது உனக்கே புரியும், நீ யார் என்று."

அட இது நல்லா இருக்கே, நம் அனுபவத்தை நாமே ஏன் உணர்ந்து பார்க்க கூடாது? என்று அத்தனையையும் எழுதி பார்த்தால், நம்ப மறுக்கலாம் ஆனால் அதுவே நிஜம்.

சொல்வது வெவ்வேறு மொழியானாலும், நானறிந்த தமிழில் மொழிபெயர்த்த போது அத்தனைக்கும் அர்த்தம் என்னவோ ஒரே அர்த்தம்தான் வருகிறது.

அதாவது எல்லா சந்தர்ப்ப சூழ்நிலையையும், மாறுபட்ட மனித குணாதிசையங்களையும் தொகுத்து கொடுத்து, ஒரு தனிப்பட்ட மனித வாழ்கையில், எப்படி வாழ வேண்டும், எப்படி வாழ கூடாது, என்பதை மட்டும்தான் அத்தனை வேதமும் சொல்கிறது.

இதில் அடிப்படையாக இருப்பது "நம்பிக்கை", கடவுள் உண்டு, கடவுள் இல்லை, எல்லோரும் கடவுள், இவர் மட்டுமே கடவுள், அன்பே கடவுள் இப்படி கொள்கை எதுவானாலும், அந்த கொள்கைவாதி அதன் மேல் வைத்திருக்கும் நம்பிக்கை மட்டுமே இங்கு பொதுவானது.

சரி, இப்படி உணர்ந்து பார்த்தால், நீ யார் என்று உனக்கே தெரியும் என்றாரே? அப்படி பார்க்கும் போது நான் யார் என்று பார்த்தால்.

முதலில், கஷ்டத்தில் மட்டும் காப்பாற்ற சொல்லி கடவுளை வேண்டும் ஆத்திகனாக, ஒரு பிச்சைகாரனை போல இருந்தேன்.

பின், என் சந்தோசங்களில் மற்றும் நிரந்தரமில்லாத சிற்றின்பம் தான் வாழ்கை என்று, கடவுளை நினைக்காத ஒரு நாத்திகனாக இருப்பதாக நினைத்து, என்னை மறந்த மமதையில் ஒரு மிருகத்தை போல இருந்தேன்.

அதெல்லாம் சரி, இதெல்லாம் உணர்ந்து இப்போது நான் என்னவாக இருக்கிறேன் என்று பார்த்தால்.....

சுகமோ துக்கமோ, காலை எழுத்தவுடன், படுக்கும் முன் மற்றும் ஒவ்வொரு வேலையை துவங்கும் போதும், முடிக்கும் போதும் என் கடமையை நான் ஒழுங்காக செய்து விட்டேன் என்று கடவுளுக்கு நன்றி சொல்லி, மற்ற எல்லா நேரமும் பொய், துரோகம், அரசியல் இல்லாத நேர்மையான வாழ்க்கையை மற்றும் என் உழைப்பே கடவுள் என்று ஜாதி மத பேதம் இல்லாத மனிதனாக இருக்கிறேன்.


இதைத்தான், அவர் எல்லா உயிரினங்களிலும் உயர்ந்தது மனிதன், என்று சொல்லி இருக்கிறார் என்பதும் புரிந்தது.

இப்போது நிமிர்த்து பார்த்தால், நான் என் மதத்தில், இனத்தில் (மனிதஇனம்), நம்பிக்கையில், கொள்கையில் இன்னும் கடை பிடித்து நடக்க எவ்வளவோ நல்ல சிந்தனைகள், செய்கைகள் உள்ளது.

அதை முழுதாக தெரிந்து கொண்டு உண்மையாக கடைபிடிக்கும் முயற்சியில் இறங்கிய போது, மற்ற எந்த மதமும், கொள்கையும் தவறென்று குறை, குற்றம் கண்டுபிடிக்க எனக்கு உண்மையில் நேரம் இல்லை.

ஹலோ, இப்ப எதுக்கு தேவைஇல்லாம, இது எல்லாம் பேசுகிறீர்கள் என்று கேட்பவர்களுக்கும்...

என்ன பேசுவதென்று புரியாமல்தான் இதெல்லாம் பேசுகிறான் என்று புரிந்தவர்களுக்கும்...

சொல்ல நினைத்தது என்னான...

தனிப்பட்ட நாம் ஒவ்வொருவரும் விரும்பும் கொள்கை, நம்பிக்கையில், நாம் எல்லாம் தெரிந்து கொண்டோம் என்று நடிக்காமல், உண்மையில் அதை முழுதாக புரிந்து அறவழி நடக்க, அதில் எவ்வளவோ நல்ல பாதை மற்றும் கருத்துகள் இன்னும் நாம் அறியாமல் இருக்கிறது, முதலில் அதை சரியாக செய்கிறோமா என்று மட்டும் பார்ப்போம்.

உங்கள் கொள்கை, நம்பிக்கை எதுவானாலும், அதன் கருத்துகளை முழுமையாக புரிந்து கொண்டு அது படி நடப்பதை தவிர்த்து, மற்றவர்களின் கொள்கை, நம்பிக்கையில் குறைகளை தேடி, விவாதிக்க முயற்சிப்பது,நான் ஒரு முட்டாள் என்று, நானே என் நெற்றியில் எழுதிகொள்வதற்கு சமமாகும்.

இதன் முடிவில் கிடைப்பது ஒன்றும் இல்லை, ஆனால் இழப்பது நிச்சியம் பொன்னான காலம், வாழ்கை என்பது உறுதி.

அப்படியும் மற்றவர் நம்பிக்கையில் குறையை தேடினால், நீங்கள் நம்பும் கொள்கை, மதத்தில் சொல்லி உள்ள எந்த ஒரு பாவத்தையும் செய்யாத (பாவத்தை செய்யாத மாதிரி நடிப்பவர் அல்ல) ஒருவர் வந்து மற்றவர் நம்பிக்கையின் மீது குறை என்னும் முதல் கல்லை எறியட்டும் என்று, அந்த இடத்தை காலியாகவிட்டு பாருங்கள், நிச்சியம் அது காலியாகவே இருக்கும்.

ரமலானுக்கு நோன்பு கஞ்சி வாங்கி குடித்தோமா, தீபாவளிக்கு லட்டு வாங்கி ருசிச்சோமா, கிரிஸ்மஸ்க்கு பிலம்கேக் வாங்கி அடிச்சோமா, என்று எல்லோரும் எல்லா நேரமும் மகிழ்ச்சியாக வாழ்கையை வாழ்வதை விட்டு விட்டு, மதவாதிகளின் அரசியல் சூழ்ச்சிக்கு ஆளாவதில் பயன் ஒன்றும் கிடைக்கபோவதில்லை.

ஆனா ஒன்னு, இப்ப எல்லாம், நான் ஆத்திகனா நாத்திகனா என்று நினைப்பதே இல்லை, அதனால் எனக்கே தெரிகிறது, புரிகிறது, என் வாழ்க்கை என் கையில் மட்டுமே.

பிறப்பில் வருவது யாதென இறைவனை கேட்டேன்?
பிறந்து பாரென்று இறைவன் சொன்னான்!

வாழ்வில் வருவது யாதென கேட்டேன்?
வாழ்ந்து பாரென்று சொன்னான்!

இறப்பில் வருவது யாதென கேட்டேன்?
இறந்து பாரென்று சொன்னான்!

இறைவனை பார்த்து சிரித்து கேட்டேன்...

அனுபவித்தே அத்தனையும் புரிந்து கொண்டால்? ஆண்டவனே நீ எதற்கு?

பலமாய் சிரித்து இறைவன் சொன்னான்...

அந்த அனுபவமே நான்தானடா.


என் பதிவில் உங்கள் நேரத்துக்கு நன்றி.

Wednesday, October 28, 2009

நான் ஆத்திகனா! நாத்திகனா!

குறை நிறைகளை மட்டும் தேடும் ஒரு மனிதனின் மனநிலையை சொல்வதை தவிர, இங்கு எந்த மத மற்றும் மத இதிகாசங்களை இழிவு படுத்துவது என் நோக்கமல்ல.

எந்த ஒரு தனிப்பட்ட மதத்தை மட்டும் விரும்பும் மதவாதிகளின் புத்திக்கு புரிந்தாலும், "மதவாத" மனம் ஏற்றுக் கொள்ளாது என்பதால், அவர்கள் இந்த பதிவை தவிர்ப்பதால், நாம் "தேவையற்ற" விவாதத்தை தவிர்க்கலாம்.


பிறந்தவுடன் நீ ஒரு இந்துவகிறாய் என்றார்கள் கீதையை படித்தேன், ஆகா எத்தனை அருமையான அறநெறி கருத்துகள்.



ஆனால், பிறப்பின் தவறுக்கு காரணமான அந்த பெண்ணுக்கு கிடைக்க வேண்டிய எல்லா துன்பமும் அவமானமும், ஏன் கர்ணனுக்கு மட்டும் இறக்கும் வரை துரத்தியது?

இத்தனைக்கும் அவன் நல்லவன் ,கொடைவள்ளல், அவனுக்கு மட்டும் "செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்தது" என்று ஏன் இங்கு ஒரு சப்பை கட்டு?

அதே போல் எந்த ஒரு "கடனும்" அந்த தாயை கடைசிவரை ராஜ மாதா அந்தஸ்தில் இருந்து இறக்கிவிட வில்லையே? என்றேன்!

ஏனிந்த "பக்(bug)" என்றேன்?

இந்துவாகிய பிறப்பின் காரணத்தால், உன்னை மன்னிக்கிறோம் என்று, என் கேள்வியே எனக்கு பதிலாய் தர பட....

அது கூட சரி, ஆனால் எல்லாம் "நானே" என்றுதானே சொல்லி இருக்கிறது!, பின் ஏன்? நாம் சைவம், வைணவம் என்று பேசுகிறோம்? அப்படி என்றால் ஹரியும் சிவனும் ஒன்னு இதை அறியாதவன் வாயில் மண்ணு என்பது உண்மை இல்லையா?

மேலும் இதில் மற்ற மத கோவில்கள் அவமதிப்பதை பற்றி இதில் ஒரு வார்த்தை கூட இல்லையே?

பின் ஏன்? வரலாற்றை காரணம் காட்டி, இப்போதுள்ள புனித கோவில்கள் இடிக்கப்படுகின்றன (இது எல்லா மதத்துக்கும் பொதுவான கேள்வி?) என்றேன்.

பகவத்கீதையை மதிக்க தெரியாத நீ... எப்படி இந்துவாக இருக்க முடியும் ஓடிப்போ என்றார்கள்.

எனக்கு வந்தது கோவம், கீதையில் படித்ததை போல பிடி சாபம் என்று,

"எது நடந்ததோ, நடக்கிறதோ, நடக்க போகிறதோ, அது நன்றாகவே நடந்தது, நடக்கிறது, நடக்கும்" என்ற கீதை வாசகத்தை நினைத்து கொண்டு...

கிரிஸ்துவ பள்ளியில் போய் சேர்ந்து விட்டேன், இங்கு படித்த ஏழு ஆண்டுகளில்,

கருனையின் திரு உருவமான இந்த மகானை வணங்கும் போது இருக்கும் நம் பணிவு, கருணை, ஏன்! மற்ற எல்லா இடத்திலும் நமக்கு மறந்து போகிறது என்றேன்?, நீ புதிது நன்றாக படி என்றது பதில்.

சரி என்று, பழைய ஏர்பாடு, புதிய ஏர்பாடு என்று இன்னும் ஆழமாக போக, முத்து முத்தான அன்பு, அமைதி வாழ்கையின் வழிகாட்டி கருத்துகள் அதில்.



ஆனால், எதிரிக்கும் கருணை காட்டு, சுகமோ துக்கமோ, பழரசம் அருந்தி கொண்டாடுங்கள் என்றுதானே சொல்லி இருக்கிறது?

அதாவது தனியாக இனிப்பு, புளிப்பு, கசப்பு என்றில்லாமல், பழரசம் அருந்தும் ஒரு சமமான மன நிலையை, உணர்வை போல, வெற்றியும் தோல்வியும் சமமாக பாருங்கள், நண்பனையும் எதிரியையும் சமமாக மதியுங்கள் என்றுதானே இருக்கிறது.

அதற்க்கு எதுக்கு, நாம் நம் நாட்டில் கிடைக்கும் பழரசமெல்லாம் விட்டு விட்டு, வெளிநாட்டு திராச்சை மதுவகையை தேடுகிறோம்? எந்த ஒரு குறிபிட்ட காலாசாரத்தையும் பின் பற்றுங்கள் என்று இதில் எங்கும் சொல்ல வில்லையே?

அனைவரிடமும், கருணை காட்டு என்று சொன்ன எந்த இடத்திலும் இதில், மற்ற மத ஜாதி பாகுபாடுகளை குறை சுட்டி காட்டி, அவனை என்னிடம் கூட்டிக்கொண்டு வா என்றோ, ஒருவனை தாழ்த்தி என்னை உயர்த்து என்றோ, எங்கும் இதில் காணவே இல்லையே! என்றேன்?

பைபிளை மதிக்க தெரியாத நீ... எப்படி கிரிஸ்துவனாக முடியும் என்று வெளியே கை காட்டப்பட்டது,

"யார் உன்னை விட்டு பிரிந்தாலும் நான் உன்னை விட்டு ஒரு போதும் பிரிவதில்லை" என்ற பைபிள் வாசகத்தை நினைத்து கொண்டு, "தட்டுங்கள் திறக்கப்படும்" என்ற அவரின் சொல்லை சுவற்றில் மட்டும் வைத்திருப்பவர்களை பார்த்து சிரித்து கொண்டே ...

நான் வெழியில் வர, என் வாலிப வயது உள்ளே வந்தது, அது வரை சிறுவர்கள் நட்பாய் இருந்ததால் கவனிக்க தவறியது அப்போது புரிந்தது, என்னை பார்த்தால் முகத்தை மூடிகொண்டாள், இத்தனை வருடமாய் என்னோடு விளையாடிய பக்கத்து வீட்டு சகோதரி. ஏன்? என்று எனக்கு புரியாவிட்டாலும்.

அந்த இனிமையான தொழுகை ராகத்தை கேட்டுகொண்டே சூரியன் அடிவானத்தில் மறைந்து போவதை எப்போதும் போல் அன்றும் பார்க்க மொட்டை மாடிக்கு ஓடிய போது,
இஸ்லாமியத்தை, ஏன் படிக்க மறந்தாய் என்றது அடிமனது.

மாமன் மச்சான் என்று பழகிய, இத்தனை நண்பர்களின் குடியிருப்பு நம்மை சுற்றி இருந்தும், இத்தனை நாள் இது ஏன் தோணாமல் போய்விட்டது என்று?

அரபு புரியாததால் திருமறை குரானில் "லாஇலாஃக "இல்லல்லாஃ முஹம்மதுர் ரசூலுல்லாஃ" என ஆரம்பத்தில் பெரியவர்களிடம் இருந்து கேட்டறிந்தது.

வணக்கத்துக்குரிய நாயன் ஏக ஒருவனைத் தவிர வேறு இல்லை; முஹம்மது (சல்) அவர்கள் இறைவனின் திருத்தூதர் ஆகும்" என்பதை உள்ளப்பூர்வமாக ஏற்றுக்கொள்வதே இஸ்லாமியர் என்பதற்கான அடிப்படை தகுதியாகும், "இதை உறுதிபட ஏற்றுக்கொண்டவன்" திருக்குர்ஆனிலுள்ள ஏனைய மறைவான விடயங்களை ஏற்றுக்கொள்வது கடமையாகிறது என்பதில் தொடங்கி.

மலக்குகள், முன்னைய வேதங்கள் மற்றும் இறைதூதர்கள், இறப்பின் பின் வாழ்க்கை, நம்பிக்கை (கலிமா), பிரார்த்தனை (தொழுகை), நோன்பு (விரதம்), தானம் (சக்காத்து), புனித பயணம் (ஃஅஜ்), மற்ற கடமைகள், இறைவனை நினைவுகூர்தல், சன்னி மற்றும் சியா சுஃபி போன்ற பிரிவுகள், உணவு மற்றும் உடை என்று முஹம்மது நபிக்கு எல்லாம் வல்ல இறைவனால் கொடுக்கப்பட்டதை படிக்கும் போது, எவ்வளவு நல்ல கருத்துக்கள் இந்த 6666 வசனங்களுக்குள், இறைவனை தவிர இதை யாராலும் தர இயலாது என்று புரிந்தது.



ஆனால், இத்தனை நல்ல புனித கருத்துக்களில், முகத்தை மறைப்பது போல சில நடைமுறை வழக்கங்கள் கட்டாயமாக்கப்படவில்லையே? அப்படி என்றால் முகத்தை மறைகாதவர் இஸ்லாமியர் இல்லையா?

மேலும் இதன் முதல்வரியே "இல்லல்லாஃ முஹம்மதுர் ரசூலுல்லாஃ" என்பதை உள்ளப்பூர்வமாக ஏற்றுக்கொள்வதே இஸ்லாமியர் என்பதற்கான அடிப்படை தகுதியாகும், "இதை உறுதிபட ஏற்றுக்கொண்டவன்" திருக்குர்ஆனிலுள்ள ஏனைய மறைவான விடயங்களை ஏற்றுக்கொள்வது கடமையாகிறது என்று தானே சொல்லி இருக்கிறது.

இதை ஏற்காத மற்றவர்களை பற்றி கவலை பட இதில் எதுவுமே இல்லாத போது, நாம் ஏன்? இதை புரியாத அல்லது ஏற்காதவர்களிடம், நாம் ஏற்றுக்கொண்டது "சரி" என்று வாதிட அல்லது புரியவைக்க முயற்சிக்க வேண்டும்?

மேலும் இதை ஏற்று கொள்வதாய் சொல்லும் ஒருவனோ ஒருத்தியோ, இதை ஏற்காத குடும்பம் என்று தெரிந்தும், அன்பை காதலெனும் விதையாக்கி, இதை ஏற்றால்தான் இணைய முடியும் என்று மற்ற வழிகளை அடைத்து அந்த இருவரின் சந்தோசத்துக்காக, மாறு பட்ட கொள்கையையுடைய இரு குடும்பத்தை ஏன்? துன்பத்துக்கு ஆளாக்க வேண்டும்?

நம்மால் நிகழும் ஒவ்ஒரு துன்பத்துக்கும், எல்லாம் வல்ல இறைவனிடம் தண்டனை உண்டு என்று, இறப்பின் பின் வாழ்க்கை பகுதியில் சொல்லப்பட்டு உள்ளதே?

இது எதோ, கடவுளுக்கு துளியும் சம்மந்தம் இல்லாத, நடுவில் ஒருசில மதவாதிகளின் "சிறுபான்மை பெருபான்மை" தலைமுறை பெருக்க அரசியல் போல உள்ளதே? என்றேன்.

திருக்குரானை மதிக்க தெரியாத நீ... எப்படி இஸ்லாமியனாக முடியும் என்று இங்கும் வெளியே கை காட்டப்பட...

"இந்த குர் ஆனைப்போல ஒன்றை கொண்டு வருவதற்காக, அவர்களில் சிலர், சிலருக்கு உதவி புரிபவர்களாக இருந்தாலும் கூட இது போன்ற ஒன்றை அவர்களால் கொண்டு வர முடியாது. - (திருக் குர்ஆன்-17:88)" - என்ற குரானின் வாசகத்தை நினைத்து கொண்டு வெளியே வரும் போது...

உலக நாயகன் கமல் போல என்னை நானே கேட்டுக்கொண்டேன்!

வெல்... நான் என்ன கீதையை, பைபிளை, குரானை மதிக்க வேண்டாம் என்றா சொன்னேன், அதில் உண்மையாக இருக்கும் கருத்துக்களை எல்லோரும் மதித்து அதன் படி உண்மையாய் நடந்தால்! நல்லா இருக்கும் என்று தானே சொன்னேன்.

சரி, யார் என்ன சொன்னால் நமகென்ன, நம் மனதை கேட்டு பார்ப்போம், உண்மைல நீ யாரூடா செல்லம்? என்று எனக்குள் நானே குழம்பியபோது.

அட என்னப்பா இது? எப்படி சுருக்கினாலும் ஒரே பதிவில் முடிக்க முடியவில்லை?, அதுனால சின்னதா ஒரு சிங்கப்பூர் ட்ரிப் போயிட்டு வந்து நெக்ஸ்ட் மீட் பண்ணுவோம்.

தேடல் தொடரும்...
 

Blogger Widgets