Friday, September 10, 2010

பதிவரசியல்!

என்னாங்க நடக்குது இங்க?

ஆனா, ஒன்று மட்டும் உறுதி பிரச்சனயை நோக்கி எறியப்படும் கற்களும், அதற்கு பதிலடி கொடுக்க எறியப்படும் கற்களும், இரண்டுமே பதிவுலகம் என்ற கண்ணாடி வீட்டிற்குள் இருந்துதான் எறியப்படுகிறது என்பதுதான் வேதனை.

நினைவுகள் என்பது நம் மகிழ்ச்சியை பதிந்து வைக்கத்தானே தவிர, நம் தவறுகளை, வருத்தங்களை செதுக்கி வைக்க அல்ல.

தவறுகளை, துக்கத்தை மறப்பதே எப்போதும் நல்லது. எங்காவது கல்யாண நிகழ்ச்சி புகைப்பட ஆல்பம் போல, இது எங்கள் வீட்டு இழவு நிகழ்ச்சி ஆல்பம் என்று பார்க்க முடியுமா?

ஆனால், பதிவுலகில் அடுத்த தலைமுறை பதிவர்கள் அத்தகைய ஆல்ப பதிவுகளை கண்டிப்பாக பார்க்க முடியும்.

(கவனிக்க; தவறுகள் எல்லை மீறும் போது அதை கண்டிக்க, தண்டிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை)

பதிவர்கள் ஒன்று பட வேண்டும் அல்லது குழு வேண்டும் என்பதின் அடிப்படை நோக்கம் என்ன? நாளை பதிவர்கள் ஒரு பெரிய சக்தியாக, சமுதாய வழிகாட்டியாக வர வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் தானே?



பதிவுலகிலும் அது உண்மை எனில், நாளை ஒரு அங்கீகாரத்திற்காக அரசாங்கத்தையோ சம்மந்த பட்ட அதிகார குழுவையோ அணுகும் போது, இதுதானே நீங்கள் சொல்லும் பதிவுலகம் என்று, இன்று எழுதப்படும் பதிவரசியல் இடுகைகளும் மோசமான வார்த்தைகளும் உங்கள் முன் போடப்படுமா இல்லையா? சற்று சிந்தித்து பாருங்கள்.

மேலும் இங்கு என்ன நடக்கிறது!.

"ஆதரிக்கும் குழு, எதிர்க்கும் குழு" என்று எல்லா பிரச்னைகளிலும் குழு சேர்க்கும் முயற்சி மட்டுமே நடக்கிறது, அதில் அடிப்படை உண்மை பிரச்சனை அடிபட்டு போய் விடுகிறது, வழக்கம் போல இதற்கு பகடை காயாக இப்போதும் சில பதிவர்கள் சிக்கி விட்டார்கள்.

இதில் நான் எந்த குழுவையும் சாராதவன் என்ற உடன் சந்தர்ப்பவாதியாகி நடுநிலைமையாக காட்டிக்கொள்ள பார்க்கிறாய் என்று சொல்ல வேண்டாம், அதுவல்ல சரியான காரணம்.

இங்கு பிரச்சனை சித்தரிக்கப்படும் (திசை திருப்ப படும்) அடிப்படை முறையே சரியாக இல்லை என்பதால்தான். ஒரு பிரச்சனையை எழுதும் போது கருத்தின் ஆழம் தேவையே தவிர அதில் அடுக்கு மொழியோ கவிதையோ தேவை இல்லை.

இங்கு இரண்டு பதிவர்களுக்கு நடுவில் மனஸ்தாபம், ஒருவருக்கு ஒரு பதிவர் செய்வது சரி என்று படுவது போல மற்றொருவருக்கு இன்னொரு பதிவர் செய்வது சரி என்று படலாம், அதை அவர் ஆதரிக்கலாம், இதில் எந்த தவறும் இல்லை.



ஆனால் நான் இதில் நான் கவனித்தது என்னவென்றால், பிரச்சனை இரண்டு பதிவர்களுக்கு, இரண்டுமே மனிதர்கள்தான், இருவருமே பதிவர்கள்தான் இதில் பாலினம் எங்கிருந்து வருகிறது?

அது ஆண் பெண் பேதமாகி, பெண்ணடிமை ஆணாதிக்கம் என்று ஏன் திசை திருப்பி விடப்படுகிறது?

ஒன்று மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் நண்பர்களே, ஒரு ஆணை விட, ஒரு பெண்ணுக்கும் தன்னையும் தன் மானத்தையும் காக்கும் சக்தி அதிகமாகவே இறைவனால் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

உடல் அமைப்பில் நம் இனத்தை பெருக்க இருவரும் மாறுபட்டு இருப்பதை தவிர, இருபாலுக்கும் மனித இனம் என்பதுதான் சரியான அடையாளம், பிரச்சனைகளை சந்திக்கும், சமாளிக்கும் திறன் இருவருக்குமே சமமாகத்தான் இருக்கிறது, நல்லவர்கள் கெட்டவர்கள் இரண்டிலும் கலந்துதான் இருக்கிறார்கள்.

அதனால் ஆணாதிக்கம் பெண்ணடிமை என்று பதிவுலகத்திலும் இல்லாத ஒன்றை உருவாக்க தேவை இல்லை, காரணம் யாரும் யாருக்கும் அடிமையும் கிடையாது, அடிமை படுத்தவும் முடியாது.

அன்பை தவிர வேறு எதுவும் யாரையும் அடக்க உதவாது என்பதுதான் உண்மை.

கட்டிய சொந்த மனைவியாக இருந்தாலும், நீ எனக்கு பெண்ணடிமையாக இரு என்றால், நடுவிரலை முகத்துக்கு நேரே காட்டி விட்டு போய் விடும் காலம் இது.

இப்படி இருக்கும் நிலையில் உலகம் மறந்து மாறி போன பெண்ணடிமை, ஆணாதிக்கம் போன்ற போர்வைகளை எடுத்து விடுவோமே!.

மனிதன் நட்பாக பழகி, பின் சேர்ந்து வாழ்ந்து சந்ததிகள் பெருகி, பின் உறவுகள் வந்து, இப்படித்தானே சமயம், மதம், ஜாதி அனைத்தும் வந்திருக்கும், இப்படி அனைத்திற்கும் அடிப்படியாக இருக்கும் நட்புக்கும் மதிப்பு கொடுப்போம், ஆண் பெண் பேதம் வேண்டாம்.

அதில் பதிவர்கள் என்ற வகையில் நமக்கு ஒத்து போகும் கருத்துக்களுடன் சேர்ந்து நடப்போம், அதே நேரத்தில் மற்றவருக்கும் கருத்துரிமை இருக்கிறது என்பதை நாம் ஒரு போதும் மறந்து விடக்கூடாது.

ஆண்மை என்பது தன் துணையை தவிர உதவி, நட்பு நாடி வரும் பெண்ணை தன் குடும்ப பெண்கள் போல சகோதரத்துடன் பார்ப்பதில் தான் இருக்கிறது.

பெண்மை என்பது தன் துணையுடன் உடல் ரீதியாகவும் மற்ற அனைத்து மக்களிடமும் உயிரினதிடமும் மனரீதியாக தாய்மை உணர்வுடன் அன்பாக இருப்பதில்தான் முழுமையடைகிறது.


நல்லது கெட்டது இரண்டு பக்கமும் கலந்துதான் இருக்கிறது, தேவையை பொறுத்து அதன் சதவீதம் மாறுபடுகிறது, இதில் இன்னும் ஏன் இந்த ஆண் பெண் பேதம்?.



பிடித்த பதிவர்களை விரும்பி பின் தொடர்வதை போல, ஒருவரின் நடவடிக்கை மற்றும் கருத்து பிடிக்கவில்லை என்றால் விலகி இருப்பதே நல்லது, அதை விட்டுவிட்டு, அவரையோ அவர் பதிவுகளையோ கொச்சை படுத்தி எழுதுவது என்பது அசிங்கம்.

இதில் யார் வரம்பு மீறினாலும் கண்டிக்க தேவை பட்டால் சட்டரீதியாக தண்டிக்க பட வேண்டும் என்பதில் யாருக்கும் எந்த கருத்து வேறு பாடும் இருக்காது என்று நம்புகிறேன்.

இதை விட்டுவிட்டு பதிவர் குட்டையை குழப்பி அதில் மீன் பிடிக்க நினைப்பது, பதிவர் என்ற முறையில், நம் மீது நாமே சேற்றை பூசிக்கொள்வதற்கு சமம்.

கடைசியாக என் மனதில் பட்டது, மன்னிப்பு கேட்பது எப்படி ஒரு நல்ல மனித தன்மையோ, அதே போல் மன்னிப்பது இறை குணம், ஆகவே காயங்களை வடுவாக்கி காலம் முழுவதும் எடுத்து செல்லாமல், மனித நேயத்தோடு கழுவி துடைத்து விட்டு, புதிய பாதையை நிமிர்ந்து பாருங்கள், பதிவுலகில் நீங்களும் பதிவுலகமும் சாதிக்க எவ்வளவோ நல்ல விசையங்கள் இருக்கிறது.

உங்கள் இடுகையால் மற்றவர் மனம் காயப்படும் என்று உங்கள் மனசாட்சி சொன்னால், வேண்டாம் அந்த இடுகை அழித்து விடுங்கள், அது ஒன்றும் கோழைத்தனம் கிடையாது.

இந்த நல்ல நாளில், மன வருத்தம், ஆதங்கத்தில் இருக்கும் பதிவர்களுக்கு பகையை மறந்து மனதில் நல்ல முடிவை தோன்ற செய்து, தவறு செய்தது யாராக இருப்பினும் அதை உணர்ந்து மற்றவரிடம் சமாதானமாக போக அருள் செய்யுமாறு அந்த திருவண்ணாமலை இறைவனை வேண்டுவதோடு!,

பசியின் கொடுமையை உணர்ந்து, இறை அருள் பெற விரதமிருந்து, ஏழை வரியை கொடுத்த பின் தொழுகை முடித்து பெருநாள் பண்டிகையை கொண்டாடும் அனைத்து இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கும், அல்லா உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தின் மீதும் என்றும் தன் புன்னைகையை செலுத்த என் மனமார்ந்த பெருநாள் வாழ்த்துக்களை சொல்லி!,

இன்று படித்த "வேத வரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து" என்ற செய்தி இந்த இடுகைக்கு சரியாக ஒத்து போவதால் அதை உங்களுடன் பகிர்ந்து இந்த இடுகையை முடித்துக்கொள்கிறேன்.

நீதியில் இருந்து பிறழாதீர்!

ஒருவன் தன் சமூகத்து மக்களை நேசிப்பது இனவெறியாகுமா?' என ஒருவர் நபிகள் நாயகம் அவர்களிடம் வினவினார்.

அதற்கு நபிகள் நாயகம் அவர்கள் இல்லை!, மாறாக மனிதன் தன் சமுதாயத்தார் (பிற மனிதன் மீது) கொடுமை செய்ய முற்படும்போது அவர்களுக்குத் துணை புரிவது தான் இனவெறியாகும் என்றார்கள்.

எவன் அநீதியான விஷயத்தில் தன் சமுதாயத்தினருக்கு உதவி புரிகின்றானோ அவன் கிணற்றில் விழுந்து கொண்டிருக்கும் ஒட்டகத்தின் வாலைப் பிடித்துக் கொண்டிருப்பவனைப் போன்றவனாவான். அந்த ஒட்டகத்துடன் சேர்ந்து அவனும் கிணற்றில் வீழ்வான்.

நீதி செலுத்துங்கள்! அது உங்களுக்கோ உங்கள் பெற்றோருக்கோ நெருங்கிய உறவினருக்கோ பாதகமாக இருந்தாலும் சரியே! எந்தவொரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள பகைமை உங்களை நீதியிலிருந்து பிறழச் செய்துவிடக் கூடாது.

இன, மத, மொழி வெறியின் அடிப்படையில் மக்களை அழைப்பவன் நம்மைச் சார்ந்தவன் அல்லன்; அதற்காகப் போராடுபவன் நம்மைச் சார்ந்தவன் அல்லன்; அதற்காக உயிரை விடுபவன் நம்மைச் சார்ந்தவன் அல்லன்.

நன்றி!. மீண்டும் சந்திப்போம்!.

டிஸ்கி: இந்த இடுகை முழுக்க முழுக்க என் மனதில் பட்ட எண்ணமே தவிர, யாரையும் காயப்படுத்துவதவோ அல்லது எந்த பிரச்சனையையும் கிண்டுவதோ இங்கு என் நோக்கமல்ல.

Monday, September 6, 2010

கதவை திறந்தால் கண்டிப்பாக காற்று வரும்!

வணக்கம் நண்பர்களே,

சூட்டோடு சூடாக செய்திகள் பரபரப்பாக இருக்கும் போது, பத்தோடு பதினொன்றாக எழுத விரும்பாத காரணத்தால், பரபரப்பு அடங்கும் வரை காத்திருந்தேன்.

காரணம் இன்றைய பரபரப்பான வாழ்கை சூழலில், காலை காபியுடன் படிக்கும் செய்திதாளிலோ அலுவலகம் போகும் வழியில் காரில் கேட்கும் வானொலி செய்திகளிலோ மக்கள் தங்கள் தூக்கத்தில் இருந்து வெளியே வர மட்டுமே பரபரப்பு செய்திகள் பயன் படுகிறதே தவிர, விசாரணை கமிசன் போல், எந்த ஒரு பரபரப்பான செய்திக்கும் முடிவே இருந்திருக்காது என்பது தான் உண்மை.

ஊடகங்களில் செய்திகள் பழையதானதும் பரபரப்பு குறைகிறது, தூக்கம் கலைய மாறுகிறது, அதனால் விற்பனை குறைகிறது, ஆகவே அடுத்த புது செய்தி பரபரப்புக்காக தேவை படுகிறதை தவிர, இதில் சமூக அக்கறை ஏதும் இருப்பதாய் எனக்கு தெரியவில்லை.

நேற்று வரை காசை கொடுத்தவர்கள் கடவுள் என்று போற்றினார்கள்.

ஏமாற்ற பட்டது தெரிந்ததும் பணம், மானம் போன கோவத்தில் மிருகம் என்று தூற்றினார்கள்.

பரபரப்பு குறைந்ததும், இதோ இயல்பு வாழ்கை திரும்பி விட்டது,

மீண்டும் இன்று காசை வாங்குபவர்கள் கடவுள் என்று போற்றுகிறார்கள்.

அமைதி படை படத்தில் வரும் வசனம் போல், கட்டம் கட்டி போட்டு தள்ளு "உஸ்ஸ்சு"...! மன்னிப்பு கடிதம் கொடுத்து பதவி விலகினால் "புஸ்ஸ்சு"...!

ஆக, மொத்தத்தில் "உஸ்ஸ்சு" "புஸ்ஸ்சு", இவ்வளவுதாம்பா நம்ம நாட்டு அரசியல் என்பதுதான் உண்மை. அதற்கு பிறகு யாரும் அதை பற்றி நினைக்க கூட நேரம் இருப்பதில்லை.

(வரலாறு முக்கியம் மங்குனி பாண்டியரே, இறநூறு வருடம் கழித்து வரப்போகும் முட்டாள்களுக்கு, நாம் இன்று எப்படி இருந்தோம், என்ன செய்தோம் என்று தெரியவா போகிறது!)



சரி, இதற்கு காரணம் அவரா, இவரா என்ற அர்த்தமில்லாத ஆராய்ச்சி நமக்கு இப்போது தேவை இல்லை.

ஆனால், நாம் ஏன் இப்படி படித்தும் பதராய் ஆகிவிட்டோம்? என்று நம்மை நாமே உணர்ந்து மாறுவதுதான் இப்போதைய தேவை.

எனக்கு புரிந்த காரணம் என்னவோ மிக எளிது, அவசர உலகத்தில் எல்லாம் அவசரமாக்க பட்டு அனைத்தையுமே வெறும் பணத்தால் விரைவாக அடைய முடியும் என்ற தவறான கண்ணோட்டம்தான்.

நாம் என்ன செய்கிறோம்!, நமக்கு என்ன தேவை! என்ற அடிப்படை எண்ணம் கூட தெளிவாக இல்லாத நிலையில், நாம் மற்றயாரையும் குறை கூறுவதில் அர்த்தமில்லை.

ஒரு உதாரணத்துக்கு, முன்பு பார்த்தல், ஒரு கடைக்கு பத்து கடை பார்த்து, ஒரு துணியை வாங்குவோம், நமக்கு நன்கு அறிமுகமான தையல்காரரிடம் அதை தைக்க கொடுத்து பத்து நாட்கள் பொறுத்திருந்து வாங்கியபின் தான் நம் புது சட்டை தயாராகிறது.

ஆனால் இன்று, இந்த மொத்த பணத்தை விட சற்று அதிகமாக பணம் கொடுத்தால், ரெடிமேட் சட்டை உடனடியாக கிடைக்கிறது.

இப்படியே உணவு, உடை, தகவல் தொடர்பு வரிசையில் இறுதியாக ஆன்மீகம் என்று எல்லாவற்றிலும் நாம் ஒரு "ரெடிமேட்" கலாச்சாரத்துக்கு பழகிவிட்டேம்.

முன்பெல்லாம் ஒரு புத்தகம் எழுதுவது என்பது மிக பெரிய ஆராய்ச்சி மற்றும் அறிவு சார்ந்த ஒரு விசையம்.

ஆனால், இன்று அது சார்ந்த பத்து புத்தகங்களை புரட்டி, அதில் எடுத்த குறிப்புகளை வெவ்வேறு வார்த்தைகளை கொண்டு தனியாக தொகுத்தால் ஒரு புது புத்தகம் தயாராகி விடுகிறது.

(அப்படியே நமக்கு நாமே கம்பனுக்கு அடுத்து, பாரதி போல, சுஜாதாவுக்கு அப்புறம் என்று சுய விளம்பர பில்டப் கொடுத்துக்கலாம்)

இதை ஏன் இங்கு குறிப்பிடுகிறேன் என்பது உங்களுக்கு இனி வரும் வார்த்தைகளில் புரியும்.

பண்ட மாற்று முறையில், அளவு முறையும் சேமிப்பு முறையும் மாறுபடுகிறதே என்று அதை சமபடுத்த, மனிதனாய் பார்த்து முறையான வாழ்கைக்கு வடிவமைக்க பட்ட பணம்தான், இன்று மனிதனை முறையற்ற வாழ்கைக்கு உள்ள அத்தனை வழியையும் திறந்து விடுகிறது.

பணம் கொடுத்தால் எல்லாம் கிடைத்து விடும், அதுவும் உடனே கிடைத்து விடும் என்ற முட்டாள் தனமான நம்பிகையே இதன் அடிப்படை. இதனால் பெரும்பாலும் நம் எண்ணம் இப்படித்தான் போகிறது.

குடும்ப வாழ்கை வேண்டும், தொழில் வேண்டும், மொத்தத்தில் விடுமுறைக்கு செல்வதை போல பணம் எடுத்துக்கொண்டு ஆசிரமத்தை தேடி போய் பணம் கொடுத்தால் மட்டும் போதும்.

வெளியே வரும் போது நாம் ஒரு விவேகானந்தராய், புத்தராய், நபியாய், கிறிஸ்துவாய் மாறிவிடலாம் (என்ற நினைப்புதான் இன்று பெரும்பாலான மக்களின் பிழைப்பை கெடுக்கிறது).

அதிலும் வேடிக்கை அப்படி ஆனபின், விடுமுறை முடித்ததை போல திரும்பவும் நாம் குடும்ப வாழ்கைக்கு திரும்பி, நம் தொழிலை பார்க்க போய்விடலாம்.

இப்படி பட்ட எண்ணம் மக்கள் மனதில் இருக்கும் வரை, மற்ற யாரையும் நாம் குறை சொல்வதில் என்ன அர்த்தம் இருக்க போகிறது, சிந்தித்து பாருங்கள்!.

சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் எனக்கு தெரிந்த நான்கு ஆன்மீக புத்தகங்கள் உள்ளன, அவற்றில் இல்லாத எந்த ஒரு கருத்தையும், கடந்த சில நூறாண்டில் வந்த எந்த ஒரு புத்தகத்திலும் நீங்கள் காட்ட முடியாது என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும், அந்த புத்தகங்கள் உலகின் அத்தனை மொழியிலும் கிடைகிறது.

இராமாயணம், பகவத்கீதை, திருகுரான், பைபிள் தான் அந்த புத்தகங்கள், இவற்றில் இல்லாத எந்த ஒரு புது விசையத்தையும் எனக்கு தெரிந்த எந்த ஒரு கார்பரேட் துறவியோ, சாமியாரோ சொன்னதோ எழுதியதோ கிடையாது.

அப்படி என்றால், ஆன்மீகத்தில் ஈடு பாடு கூடாதா? அப்படி ஆன்மீகத்தில் ஈடுபடும் பட்சத்தில், ஒரு குரு இல்லாமல் நாம் எப்படி மனம் அமைதியடைய முடியும்? யார் நமக்கு வழிகாட்டுவார்கள்?

என்று பலதர பட்ட எதிர்வாத கேள்விகள், இங்கு வரக்கூடும்.

நான் சொல்வதின் அர்த்தம் அப்படி இல்லை என்பதை விளக்கி சொல்ல வேண்டியது இங்கு என் பொறுப்பாகிறது.

எனக்கு தெரிந்த ஆன்மீகத்தின் முதல் அடிப்படை மற்றும் உச்சகட்ட கடைசி நிலை, இந்த இரண்டு பாடமுமே "நம்மை நாமே உணர வேண்டும்" என்பதுதான்.

இதன் அடிபடையில் நாம் யார், இப்போது நமக்கு என்ன தேவை என்பதை நாம் முதலில் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

இதில் மிக முக்கியமானது, எந்த ஒரு கால கட்டத்திலும் விளம்பரம் மற்றும் விற்பனை செய்யப்படுவது ஆன்மீகம் ஆகாது.

எடுத்த எடுப்பில் குருவை தேடும் அளவு நாம் முழுநேர மற்றும் பொதுநோக்கு ஆன்மீகவாதி(துறவி) இல்லை.

அப்படியே ஒரு சித்தரை போலவோ விவேகானந்தரை போலவோ ஒரு புனித ஆத்மாவாக யாரேனும் இருப்பின், அந்த ஆத்மா தக்க சமயத்தில் தானே தன் குருவை அடையாளம் கண்டு அவரை வந்து அடையுமே தவிர, பணம் கொடுத்து குருவை வாங்க வேண்டிய அவசியம் இருக்காது.



குடும்ப வாழ்வின் பிரச்சனை சக்கரத்தில் சுற்றி சுற்றி, மூளையின் இடைவிடாத வெவ்வேறு சிந்தனைகளால், நரம்புகளும், நாடி வேர்களும் பாதிக்கப்பட்டு உடல் இயக்கம் சீராக இல்லாமல் மனம் அமைதி பாதிக்க பட்டிருக்கும் பொதுவான மக்களின் ஆன்மீக நாட்டம், தேடல் என்பது மன உளைச்சலை குறைக்க அல்லது தவிர்க்க மட்டுமே என்பதை தெளிவாக நாம் உணர வேண்டும்.

பொதுவாக நமக்கு நாமே கேட்டு பார்த்தல், கஷ்டம் வரும் போது கடவுளை நினைக்கும் அல்லது நாடும் எத்தனை பேர், சந்தோசம் வரும் போது கடவுளை நினைக்கவோ அல்லது நன்றி சொல்லவோ செய்கிறோம்?

ஆக, சுக துக்கத்தை ஒன்றாக பாவித்து பொது நல ஆன்மீக வாழ்கை பயணம் என்பது வேறு, அவை ஒரு போதும் கார்பரேட் நிறுவனங்கள் போல பணத்தின் அடிப்படையில் அல்லது விற்பனை முறையில் நடைபெறாது.

தன் கஷ்டங்களுக்கு மனஅமைதி, வடிகால் தேடும் ஆன்மீக நாட்டம் என்பது வேறு, இதற்காக ஒரு போதும் நிம்மதியை விலை கொடுத்து வாங்க முடியாது.

இந்த நிலையில் நாம் செய்யக்கூடியது தான் என்ன?

பரபரப்பு வாழ்கையின் இடைவிடாத ஓட்டத்தால் தளர்ச்சியடையும் மனதிற்கும் உடலுக்கும் ஒரு அமைதி மற்றும் சக்தி தேவை, அதற்காக சரியான வழி தியானம் மட்டுமே.

ஆனால், அது சரியான முறையா? தியானம் என்ற மிக பெரிய விசையத்தில் உள்ள சூத்திரங்கள் எதுவுமே நமக்கு தெரியாதே என்ற பயமும் குழப்பமுமே நாம்மை தவறான முடிவெடுக்க வைத்து, தவறான மனிதர்களை நாட வைக்கிறது.

இதில் சில அடிப்படை விசையங்களை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

மூளை என்பது வேறு எதுவும் அல்ல, சிந்தனைகளும், நினைவுகளும் நிறைந்ததே நம் மூளை, குடும்ப வாழ்கை சக்கரத்தின் இன்ப துன்பங்களின் இடைவிடாத தொடர் இயக்கத்தால், நம் உடலின் சத்தி குறைகிறது, நாட்கள் இப்படியே பரபரப்பாக நகர நகர, அந்த பாதிப்பு உடலின் நரம்புகள் மூலம் மற்ற பகுதிக்கு சென்று அவையும் தளர்ச்சி அடைகிறது.

ஒரு குழந்தை எப்போதும் உடல் சக்தியுடன் ஓடியாடி சுறுசுறுப்பாக இருக்கிறதே! என்று எப்போதாவது கவனித்து பார்த்ததுண்டா? காரணம் குழந்தையின் மூளையில் நினைவுகள் தங்குவதில்லை.

இளம் கன்று பயமறியாது என்ற சொல் படி, வாழ்கையை பற்றி, அடுத்த நாளை பற்றி குழந்தை ஒரு போதும் சிந்திப்பது கிடையாது, அதனால் பிரபஞ்சத்தில் உள்ள சக்தியை (Cosmic Energy Healing for Health) காற்றில் மூலம் அந்த குழந்தை அதிகமாக பெறுகிறது. அதே போல் எந்த சிந்தனையும் இல்லாமல் படுத்த உடன் தூங்கி (தியான நிலைக்கு போய்) விடுகிறது அப்போது இன்னும் அதிக சக்தியை அந்த உடல் பெறுகிறது.

நாம் கூட தூங்கி எழுந்தவுடன் களைப்பு நீங்கி சுருசுப்பாகி விடுகிறோம் இல்லையா? காரணம் தூக்கமும் ஒரு வகை தியானம் தான், தூக்கம் எப்படி ஒரு நினைவற்ற (Unconcious Mind) தியானமோ, அதே போல தியானம் என்பது ஒரு வகையான நினைவுள்ள தூக்கம் என்று கூட எடுத்துக்கொள்ளலாம்.

தூக்கத்தில் நமக்கு கிடைக்கும் அளவான சக்தியை போல தியானத்தின் மூலம் அளவில்லா உடல் சக்தியை பெற முடியும்.

இப்படி தியானத்தின் மூலம் நம் மன அமைதியை நாமே பெற முடியும்.

இதன் அடுத்த நிலையை அடைந்து நாம் யார் என்று நமக்கு புரியும் போது, நம் குருவை நாமே சரியாக அடையாளம் கண்டுகொள்ள முடியும், அதற்காக நாம்மிடம் குருவும் எந்த பிரதி பலனையும் எதிர் பார்க்க மாட்டார்.

அதெப்படி நானே தியானிக்க முடியும்? குருவில்லாத ஒரு கலை எப்படி முழுமையடைய முடியும் என்று எடுத்த எடுப்பில் முடிவை தேடாமல், முதல் அடியாக நம் முயற்சியை அடிமேல் அடி தொடர்ந்து எடுத்து வைத்தாலே போதும்.

தியானம் பற்றி எனக்கு புரிந்ததை விரைவில் சுருக்கி சொல்ல முயற்சிக்கிறேன்.

நான் மேலே சொன்னபடி இவை அனைத்தும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாக எல்லா ஆன்மீக குறிப்புகளிலும் எழுதி வைக்கப்பட்டது.

அதனால் இதில் நானே சொந்தமாக சொல்ல எதுவும் இல்லை, நான் படித்ததை அதில் எனக்கு புரிந்ததை, சுருக்கமாக ஒரு இடுகைக்குள் வருமாறு உங்களுடன் பகிர்வது மட்டுமே என் நோக்கம்.

நன்றி!, மீண்டும் சந்திப்போம்.
 

Blogger Widgets