Monday, January 25, 2010

நேர்முக தேர்வு! (நிச்சியம் படிக்க வேண்டியது!)

இன்று பெரும்பாலும் கணினி துறையை சார்ந்த பல நிறுவனங்கள் என் நண்பனின் வேலை விண்ணப்பத்தை பார்த்தவுடன் வியக்க கூடும்.

காரணம் "வேலையை மட்டும் விரும்பும்" அவன் (பெயர் இங்கு முக்கியமில்லை என்று நினைக்கிறேன்) குறுகிய காலத்தில் அடிக்கடி வேலையை மாற்றிக்கொள்வது வழக்கம்.

கடந்த பதினான்கு வருடத்தில் பத்து முறை தானாகவே வேலையை மாற்றிவிட்டான் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!.

இன்று வேலை செய்யும் நிறுவனத்தை விசுவாசத்துடன் காதலிப்பவர்களே தங்கள் வேலையை தக்க வைத்துக்கொள்ள போராடிக்கொண்டு இருக்கும் இந்த சூழ்நிலையிலும், முழு நேர வேலையில் இருந்தாலும், வேலை செய்யும் நிறுவனத்தை விரும்பாமல், அவனுகென்று ஒரு தனி வழியில் பதினான்கு வருடத்தில் பத்து நிறுவனங்களை மாற்றிக்கொண்டு இருக்கிறான்.

சரி, விசையத்துக்கு வருவோம்.

இப்போது நண்பனை தற்போது இருக்கும் நிறுவனம் பொருளியல் மந்தத்தால் வேலையை விட்டு நீக்கி விட்டது, பதினான்கு, பதினைந்து வருட அனுபமுள்ள மற்ற சிலரைப்போல!.

இனி வழக்கம் போல நண்பனுக்கு நடக்கும் ஒரு நேர்முக தேர்வுதான் இந்த இடுகை.



கேள்வி: ஏன் நீங்கள் கடந்த பதினான்கு வருடத்தில் பத்து வேலையை மாற்றியுள்ளீர்கள்?

பதில்: ஏன், என்றால் என் கடன்களை தீர்த்து, சேமிப்பை கூட்டி, இரண்டாவது முறை ஒரு நிறுவனம் என்னை பொருளியல் மந்தத்தை காரணம் காட்டி வேலையை விட்டு அனுப்பும்முன் சொந்த வாழ்கையில் ஒரு நல்ல பொருளியல் நிலைக்கு வரவேண்டும் என்பதற்காக.

கேள்வி: அப்படி என்றால் உங்களுக்கு முன் கூட்டியே தெரியுமா 2009-ம் ஆண்டில் உங்களை உங்கள் நிறுவனம் வேலையை விட்டு அனுப்பபோகிறது என்று?

பதில்: நான் முதல் முறையாக 2002-ம் ஆண்டில், அதாவது முதல் பொருளியல் மந்தத்தை காரணம் காட்டி வேலையை விட்டு நீக்கப்பட்டேன்.

திரும்ப எனக்கு ஒரு முழு நேர வேலை கிடைக்கவில்லை, 2003 ஜனவரி மீண்டும் பொருளியல் மந்தம் மேலே வரும் வரை. இதனால் நான் கிட்ட தட்ட ஒரு வருடம் வேலை செய்ய எந்த நிறுவனமும் கிடைக்காமல் தவிக்கும் படியாகிவிட்டது.


கேள்வி: அது உங்களுக்கு எத்தனையாவது வேலை என்று குறிப்பிட முடியுமா?

பதில்: ம்ம்ம்...அது என்னுடைய மூன்றாவது வேலை.

கேள்வி: அப்படி என்றால் உங்கள் பதினான்கு வருட அனுபவத்தில், ஜனவரி 2003 முதல் ஜனவரி 2009 வரை, இடைப்பட்ட இந்த ஆறு வருட காலத்தில் நீங்களாகவே எட்டு முறை வேலையை மாற்றி உங்கள் வேலை எண்ணிக்கையை பத்தாக உயர்த்தி இருக்கிறீர்கள் இல்லையா?

பதில்: உண்மையை சொல்ல வேண்டும் என்றால், எனக்கு வேறு எந்த வழியும் கிடைக்கவில்லை. என்னுடைய "முதல் எட்டு வருட" அனுபவத்தில் நான் இரண்டு நிருவனங்களுக்காக மட்டுமே கடினமாக வேலை செய்தேன்.

காரணம், அப்போது நான் நினைத்தது கடின உழைப்பு மட்டுமே வேலையின் பலனை அடைய சிறந்த வழி, மற்றும் நமக்கு ஊதியம் கொடுக்கும் நிறுவனத்தை நேசித்து அவர்களுடன் நீண்ட நாள் இருக்கவேண்டும் என்று, ஆனால் அது என் முட்டாள்தனம்.


கேள்வி: ஏன் அப்படி சொல்கிறீர்கள் என்று கொஞ்சம் விளக்க முடியுமா?

பதில்: என்னுடைய ஊதியம் அந்த எட்டு வருடங்களில் மிக அளவாகவே உயர்ந்தது, அதனால் என்னால் எந்த வகையிலும் எதையும் சேமிக்க முடியவில்லை.

நான் நினைத்தது எல்லாம், என் நிறுவனத்திடம் நீண்ட நாள் நல்ல உறவில் உள்ள என்னிடம் ஒரு நிரந்தர வேலை உள்ளது, அதனால் கவலை அடைய தேவை இல்லை என்பது மட்டுமே. ஆனால் என் வேலையை இழந்தால் நான் என்ன செய்ய முடியும்?

என்னால் கற்பனை கூட பண்ணமுடியாத ஒரு விசையம் நான் வேலையை இழந்தது "பொருளியல் மந்தம்" என்ற ஒரே காரணத்தால் மட்டுமே!, எனக்கு வேலைதிறமை இல்லை என்ற காரணத்தால் அல்ல!. இது நடந்தது ஜனவரி 2002-ல்


கேள்வி: ஓ, அப்படியா!, சரி அதன் பின் இந்த இடைப்பட்ட ஜனவரி 2003 முதல் 2009 வரை என்ன நடந்தது என்று கொஞ்சம் விளக்க முடியுமா?

பதில்: கண்டிப்பாக, இந்த அனுபவத்தில் நான் கற்றுக்கொண்ட பாடம் என்பது, ஒரு "நிறுவனத்தில் அல்லது ஒரு வேலையில் திருப்த்தி அடைவது" என்பதும், "பணம் சம்பாதிக்கவோ அல்லது போதுமான சேமிப்பில் திருப்த்தி அடைவது என்பதும்" ஒன்றல்ல என்பதை.

ஆனால், சேமிப்பு என்பது போதுமான வருமானம் இல்லாமல் முடியாதது, ஆகவே நான் என் விருப்பத்தை பணம் சம்பாதிப்பதிலும் சேமிப்பை நோக்கியும் திருப்பினேன். இதனால் ஆறு வருடத்தில் எட்டு நிறுவங்களை மாற்றினேன் "ஒவ்வொன்றும் உறுதியாக என் பொருளியலை நிலையை உயர்த்தும்" பட்சத்தில்.


கேள்வி: அப்படி என்றால் ஒவ்வொரு முறையும் நீங்கள் நேர்முக தேர்வு எடுத்தவர்களிடமும் நீங்கள் பொய் சொல்லியுள்ளீர்கள், அதாவது நீங்கள் முன் கூட்டியே குறிப்பிட்ட இடைவெளியில் திட்டமிட்டு உங்கள் வேலையை மாற்றுவதை மறைத்து விட்டீர்கள் அப்படிதானே?

பதில்: ஆமாம், பொருளியல் சந்தை எப்போது நன்றாக இருக்கிறதோ, எப்போது நிறுவங்கள் வேலைக்கு ஆட்களை எடுக்கிறதோ, அப்போது தானே வேலையை மாற்ற முடியும் அல்லது வேலையில் சேர முடியும்!.

இவ்வளவு ஏன்! நீங்களே சொல்லுங்கள் பொருளியல் மந்தமாக இருக்கும் இந்த நேரத்தில் எனக்கு வேலை கிடைக்குமா? கிடைக்காது இல்லையா!.

ஆகவே, எப்போது சந்தை நன்றாக இருக்கிறதோ அப்போது தான் ஒருவர் தன் வேலையை அதிக ஊதியத்துடன் மாற்றிக்கொள்ள முடியும், காரணம் அப்போதுதான் நிறுவனங்கள் வேலைக்கு ஆட்களை எடுக்கிறார்கள் மற்றும் போதுமான ஊதியத்தை தர சம்மதிக்கிறார்கள் என்பதுதானே உண்மை நிலை.


கேள்வி: சரி, இப்படி செய்ததன் மூலம் இன்று என்ன சாதித்து விட்டீர்கள் என்பது இங்கு உங்கள் கருத்து?

பதில்: மிக அருமையான ஒரு கேள்வி, இதைத்தான் நான் எதிர்பார்த்து கொண்டு இருந்தேன். ஜனவரி 2003-ல் எனக்கு ஒரு நிலையான ஊதியம் (எந்த மாறுதலும் இல்லாமல்).

ஒரு பேச்சுக்காக என் ஊதியம் 2003-ம் வருடம் "X" என்று வைத்தால் 2009-ல் என் ஊதியம் "8*X" ஆகிவிட்டது.

உதாரணமாக, 2003-ம் வருடம் மூன்று லட்சமாக இருந்த என் ஊதியம் 2009-ல் இருபத்திநான்கு லட்சமாகி விட்டது (எந்த மாறுதலும் இல்லாமல்).

மேலும், நான் ஒரு போதும் பதவி மாறுதலை பற்றி கவலை பட்டது இல்லை. காரணம், ஒரு வருடம் முழுவதும் வேலை பார்த்து முடிந்து, பின் நிறுவனம் தன் ஊதிய உயர்வு முறையை நடைப்படுத்தி அதன் பின் அவர்கள் தரும் ஊதிய உயர்வு வரும் வரை காத்திருக்கும் எண்ணம் எனக்கு கிடையாது.


கேள்வி: அப்படி என்றால், நீங்களாகவே உங்கள் ஊதிய உயர்வை தீர்மானித்து கொண்டீர்களா?

பதில்: ஆமாம், 2001-2002-வில் வந்ததை போல இனி ஒரு பொருளியல் மந்தம் 2003-ல் இப்போதைக்கு இன்னொரு முறை வருமா என்பதை என்னால் கணிக்க முடியவில்லை. அதனால் அடுத்த பொருளியல் மந்தம் எப்போது வரும் என்பதும் எனக்கு தெரியாது.

ஆனால், நான் ஒரு விசையத்தில் மிக உறுதியாக இருந்தேன். இன்னொரு முறை பொருளியல் மந்தம் காரணமாக நான் வேலையை இழக்கும் முன் நான் எந்த கடனும் இல்லாமல் ஒரு நிலையான சேமிப்போடு இருக்க வேண்டும் என்பதில். ஆகவே நான் வருட முடிவுக்காக காத்திருக்காமல், என் ஊதிய உயர்வை நானே ஏற்படுத்திக் கொண்டேன்.


கேள்வி: அப்படி என்றால், இப்போது உங்களுக்கு எந்த கடனும் நிலுவையில் இல்லையா?

பதில்: ஆமாம், வேலை மாற்ற முறையில் நான் நிறையவே சம்பாதித்து விட்டேன். அதில் என் இன்றைய நிலைக்காக கொஞ்சம் செலவழித்தும் இருக்கிறேன்.

என்னிடம் சொந்தமாக எந்த கடனும் இல்லாத ஒரு மூன்று படுக்கை அறை வீடு (2400 சதுர அடியில்) உள்ளது, மேலும் மாத தவனை பாக்கி எதுவும் இல்லாத ஒரு சொகுசு கார் இருக்கிறது, மீத கையிருப்பு தொகைக்காக வங்கிகள் மாத வட்டி தருகின்றன, அது இப்போது என் இதர தேவைகளை பூர்த்தி செய்கிறது.

நிதி நெருக்கடிகாக ஒரு நிறுவனம் என்னை வேலை விட்டு தூக்கினால், தூக்கட்டும்! இப்போது நிதி நெருக்கடி என்பது எனக்கல்ல, நிதி நெருக்கடி அந்த நிறுவனத்துக்கு மட்டுமே.

இதோ, இன்று மீண்டும் பொருளியல் மந்தம் காரணம் காட்டி நான் வேலையை விட்டு நீக்கபட்டு விட்டேன், இதை நான் மறுக்கவில்லை, அதே நேரத்தில் யாரையும் குறையும் சொல்லவில்லை என்பதில் எனக்கு மகிழ்ச்சி.


கேள்வி: யார் குறை சொல்வது? யாரை குறை சொல்கிறார்கள்?

பதில்: கிட்டதட்ட வேலை இழந்து பொருளியல் மந்தத்தால் திரும்ப வேலை கிடைக்காமல் தங்கள் வீடு, கார் போன்றவற்றின் மாததவணைகளை கட்ட முடியாத அனைவருமே குறை சொல்லுகிறார்கள்!


சொன்னால் வேடிக்கையாக இருக்கும், இவர்களில் பலர் என்னை முன்பு "நான் வெறும் வேலையை விரும்புபவன் எனக்கு வேலை செய்யும் நிறுவனத்தின் மேல் எந்த விசுவாசமும் கிடையாது" என்று சொல்லி கேலி செய்தார்கள்.

இன்று, நான் அவர்களை பார்த்து கேட்கிறேன், அவர்களின் நிறுவன விசுவாசத்தால் அவர்கள் சம்பாதித்தது அல்லது சாதித்தது என்ன? காரணம், இப்போது அவர்களும் என்னைப் போலவே வேலையை விட்டு நீக்கப்பட்டு விட்டார்கள், அவர்கள் நேசித்த அதே நிறுவனத்தால்.

இப்போது அவர்கள் என்னை என்ன சொல்கிறார்கள் தெரியுமா!, நீ ஏன் சொல்ல மாட்டாய் மேலும் கவலை பட போகிறாய்!. உனக்குத்தான் எந்த கடனும் நிலுவையில் இல்லையே என்று!.

காரணம், அவர்கள் அனைவருக்கும் பனிரெண்டு முதல் பதினான்கு லட்சம் கடன் தொகை நிலுவையில் இருந்தது, அவர்கள் நேசித்த நிறுவனமே அவர்களை வேலையை விட்டு நீக்கும் போது.


கேள்வி: சரி, வேலை செய்யும் திறமையான பணியாளர்களுக்கு உங்கள் அனுபவ அறிவுரை என்ன?

பதில்: திரு.நாராயண மூர்த்தியை போல, உங்கள் வேலையை மட்டும் நேசியுங்கள், ஆனால் உங்கள் நிறுவனத்தை அல்ல!.

ஏன் என்றால்? உங்களுக்கு தெரியாது, எப்போது உங்கள் நிறுவனம் உங்களை நேசிப்பதை நிறுத்திவிடும்! என்று அவர் சொன்னார்.

இந்த வரிகளை தொடர்ந்து நான் சொல்வது.

உங்களை நேசியுங்கள், உங்கள் குடும்பத்துக்கு நீங்கள் அதிகம் தேவை, உங்கள் நிறுவனத்துக்கு நீங்கள் தேவைபடும் அளவை விட!.

நிறுவனங்கள் உங்கள் வாழ்கையில் மாறலாம், வரலாம் போகலாம். ஆனால், உங்கள் குடும்பம் அப்படியே மாறாமல் வாழ்நாள் முழுவதும் உங்களுடனேயே இருக்கும்.

முதலில் உங்களுக்கு போதுமான பணத்தை சம்பாதியுங்கள், அதே நேரத்தில் வேலை செய்யும் நிறுவனத்துக்கும் பணம் சம்பாதிக்க உழையுங்கள்.

அப்படி இல்லாமல், இதன் அடுத்த வழியான நிறுவனம் மட்டும் சம்பாதிக்கும் வழியில் வெறும் நிறுவன விசுவாசத்தோடு மட்டும் இருப்பதில் கடைசியில் பாதிக்கப் பட போவது நீங்கள் மட்டுமே, கட்டாயம் நிறுவனம் அல்ல.


கேள்வி: உங்கள் அனுபவத்தில் நீங்கள் நிருவனங்களின் செய்கையில் பெரிதும் வருத்தப்படும் விசையம் என்ன?

பதில்: எப்போதெல்லாம் ஒரு நிறுவனம் லாபகரமாக செயல் படுகிறதோ அப்போது அந்த நிறுவனத்தின் "சி.இ.ஓ (CEO)" பேசுவார்.

அருமையான வேலை மற்றும் கூட்டு முயற்சி நண்பர்களே, வாழ்த்துக்கள்!. இது உங்கள் நிறுவனம், எனவே உங்கள் கடின உழைப்பை இதே போல் தொடருங்கள், உங்களோடு நானும் எப்போதும் இருக்கிறேன் என்று.

ஆனால், எப்போது பொருளியல் மந்தமாகி அந்த நிறுவன லாபம் சரிவை நோக்கி செல்கிறதோ, அப்போது அதே "சி.இ.ஓ (CEO)" சொல்லுவார்.

இது என் நிறுவனம், என் நிறுவனத்தை காப்பாற்ற நான் பொருளியல் மந்த கால நடவடிக்கைகளை எடுத்து என் நிறுவன செலவுகளை குறைக்கும் திட்டத்தில் (Cost Cutting), உங்களில் சிலரை வேலையை விட்டு அனுப்புவதும் உட்படுகிறது என்று.

இது என்னை "தொழிலுக்கு இதயம் கிடையாது (Business never have Heart)" என்று நினைத்து வருத்தப்பட வைக்கும் ஒரு விசையம் ஆகும்.

ஆகையால், திறமையான பணியாளர்களுக்கு நான் இங்கு சொல்வது, உங்கள் தனிப்பட்ட பொருளியல் நிலையை பற்றி மட்டும் முதலில் சிந்தியுங்கள், காரணம் பெருளியல் மந்தத்தில் நீங்கள் வேலையை இழக்கும் போது,

"தங்கள் தேவைகளை நிறைவேற்ற முடியாத குறைகளோடு உங்கள் முன் நிற்பது உங்கள் குழந்தைகளே தவிர, நிச்சியமாக, உங்கள் நிறுவனமோ அல்லது "சி.இ.ஓ (CEO)" அல்ல."

நன்றி!.


பி.கு:- இந்த அனுபவ அறிவை எனக்குள் புகுத்தி, என் அறிவு கண்ணை திறந்த "காமாச்சிக்கு".

"நீ நட்பின் வடிவமாய் அல்ல, அந்த "காஞ்சி-காமாச்சி"யாகவே என் கண்களுக்கு தெரிகிறாய்", உனக்கும் நம் நட்புக்கும் நன்றி!.

Tuesday, January 19, 2010

அலுவலக அரசியலை சமாளிப்பது எப்படி?

பொதுவாக எல்லாதரப்பு பணியாளர்களும் அலுவலக அரசியலை சந்திக்க நேரிடும், காரணம் அது ஒவ்வொருவரின் உத்தியோக வளர்ச்சியோடு கலந்திருக்கிறது.

அலுவலக அரசியலில் இருந்து விலகி ஓடுவது என்பது ஒரு நல்ல விசையமாக இருந்தாலும், அது நம் உத்தியோக வளர்ச்சி பாதையில் இருந்து நம்மை தனித்து நிறுத்தி ஒரு மோசமான முடிவையே கொடுக்கும் என்பதுதான் உண்மை.



எந்த ஒரு விசையத்தையும் ஆக்கத்துக்கும் பயன் படுத்த முடியும், அதே அளவு அழிவுக்கும் பயன் படுத்த முடியும் என்ற தத்துவத்தின் படி, அலுவலக அரசியலை சரியான முறையில் சந்தித்து, முறையாக தீர்வு காண்பதன் மூலம், அதை நம் உத்தியோக வளர்ச்சிப்பாதைக்கு உரமாக பயன்படுத்த முடியும்.

அலுவலக அரசியலை கையாளும் உங்கள் தனி திறமையை மற்றும் முறையை பொறுத்து, அது நடைமுறையில் உங்கள் வேலை முறையை உயர்திக்கொள்ளவோ அல்லது கெடுத்துக்கொள்ளவோ வழிவகுக்கும்.

நடைமுறை அலுவலக வாழ்கையில் மக்கள் வேலை பளுவையும் மன அழுத்தத்தையும் சகஜமாக சந்தித்து இதை அனுபவ படுக்கிறார்கள்.

இதில் சிலர் அந்த அழுத்தத்தை தாங்க முடியாமல் உடைந்து விடுகிறார்கள், அது அவர்களை "வேலை இழப்பு" அல்லது "வேலை பதவியில்" வளர்ச்சி இல்லாத முடிவில் போய் முடிந்து விடுகிறது.

மற்ற சிலர் இதில் உண்மையாக பாதிக்காவிட்டாலும், அதன் பாதிப்பு இருப்பது போல் பொய்யாக பெரிது படுத்தி காட்டிக்கொள்வதோடு, அவர்கள் செய்வது மட்டுமே சரி என்பது போல் காட்டிக்கொள்வதன் மூலம் இந்த அரசியலை கையாளுவார்கள்.

இத்தகைய அழுத்தம் ஒரு பக்கம் இருக்க, அலுவலக அரசியல் என்பது நம்மை மறைமுக இம்சைக்கு உட்படும் நிலைக்கு கொண்டு வந்து விடும்.

அதன் விளைவே சென்ற பதிவில் பார்த்த "பணியிடங்களில் மேலதிகாரிகள் அல்லது உடன் பணியாற்றுவோரால் ஏளனமாகக் கருதப்படுவது அல்லது தரக்குறைவாக நடத்தப்படுவது" போன்றவையாகும்.

இப்படி இந்த அலுவலக அரசியலை கையாள குறிப்பிட்ட வழிமுறைகளை இங்கு பார்ப்போம்.

கடைசியாக பேசுங்கள்: அலுவலக அரசியல் என்பது பொறுத்துக்கொள்ள முடியாத அல்லது மோசமான விளைவுகளை கொடுக்க கூடியாதாக இருக்கும், குறிப்பாக விவாதிக்கும் போது அல்லது சில விவாதங்களின் போது. அதனால் "யாகாவராயினும் நா காக்க" என்பதை எப்போதும் நினைவில் வைத்து வார்த்தைகளை அடக்குங்கள்.

உண்மையில் இந்த இடத்தில் மிக எளிதாக உணர்ச்சிகளை தூண்டி அடிக்கடி கோவப்பட்டு திரும்ப வார்த்தைகளை விட்டு சண்டையிட தோணும், ஆனால் எவ்வளவு சீக்கிரமாக நீங்கள் வார்த்தைகளை விடுகிறீர்களோ!, அவ்வளவு வேகமாக நீங்கள் இழப்பது உறுதி.



உங்களுக்கு நீங்கள் செய்வது அல்லது உங்கள் தரப்பில் சொல்வது மிக சரி என்று பட்டாலும், அதுவே உண்மையாக இருந்தாலும் கூட சரி, கண்டிப்பாக நீங்கள் அனைத்து தரப்பில் அல்லது அனைவர் சொல்லவதையும் கவனமாக கவனிப்பதன் மூலம், நீங்கள் சரியான இடத்தில் சரியான வார்த்தைகளை மட்டுமே பயன் படுத்துகிறீகள் என்று உறுதி படுத்திக்கொள்ள வேண்டும்.

தேவை இல்லாத வார்த்தை விவாதங்களை தவிர்த்து, அந்த பிரச்சனையை சரியான முறையில் வடிவமைத்து வரிசைபடுத்தி கட்டுக்குள் கொண்டு வருவதன் மூலம், நீங்கள் உங்கள் கூடுதல் திறமையை அல்லது வழிகாட்டி தலைமை தாங்கும் தன்மையை மற்றவர்களுக்கு உணர்த்த முடியும்.

எப்போதுமே சிந்தித்து திட்டமிட்டு செயல்படுங்கள்: எந்த ஒரு விசையதையும் செயல் படுத்தும் முன், நீங்கள் அதை பற்றி தெளிவாக சிந்தித்து திட்டமிட்டுதான் செயல் படுத்துகிறீர்கள் என்பதை உறுதி படுத்த வேண்டும், இதில் மிக குறிப்பாக கவனிக்க வேண்டியது "எப்போதுமே" என்பது, ஒரு போதும் அல்லது எந்த விசையதையும் சிந்திக்க மற்றும் திட்டமிடாமல் ஒதுக்கி விட கூடாது.


அலுவலக அரசியல் மூலம் வர நேரிடும் இழப்பை உங்களிடம் இருந்து ஒதுக்கி வைப்பதற்கு மிக முக்கியம். அரசியல் இழப்பை தவிர்க்க நீங்கள் செய்த அத்தனை தற்காப்பு நடவடிக்கைகளின் நிழலிலேயே நடக்கும் பிரச்சனைகளை மற்றும் வரும் பிரச்சனைகளை எதிர்கொண்டு செல்ல வேண்டும்.

மிக சவாலான விசையமாக இருந்தாலும் நீங்கள் தெரிந்து வைத்து இருக்க வேண்டியது, உங்களுடைய எல்லா நடவடிக்கையும் எல்லா நேரங்களிலும் சரியானதாக இருக்க வேண்டும் என்பதை மட்டுமே.

இது அலுவலக செல்வாக்குடன் அதிகாரத்தில் இருக்கும் அலுவலக அரசியல்வாதிகளை சமாளிக்க மிக சிறந்த ஒரு வழியாகும்.

சாதகமாக நடந்து கொள்ளாதீர்கள்: என்னதான் ஒருவர் அல்லது ஒரு அணி செய்வது சரி என்று உங்களுக்கு பட்டாலும், நீங்கள் அவ்வளவு எளிதாக அதற்கு சாதகமாகி, எதிர் அணி செய்வது தவறென்றோ அல்லது அவர்கள் அதை உணர வேண்டும் என்று முறையிடவோ விவாதிக்கவோ வேண்டாம்.

உங்களை நீங்களே ஒரு நடு நிலமையாக்கி கொள்வது நல்லது, சம்மந்த பட்ட இருவர் அல்லது இரு அணிகள் பேசிக்கொள்ளட்டும் அல்லது விவாதித்து கொள்ளட்டும்.

எப்போதும் அலுவலக அரசியலை நேரடியாக எவ்வித தயக்கமும் இல்லாமல் சந்திக்க பழகுங்கள், மேலும் அதை சரியான முறையில் பயன் படுத்தி உங்கள் வழிநடத்தும் திறமையை காட்டும் சந்தர்ப்பமாக மாற்றிக்கொள்ளுங்கள், இது உங்கள் அலுவலக வேலையில் அடுத்த நிலைக்கு செல்ல அல்லது வளர்ச்சிக்கு உதவும்.

மற்றவர் நெருக்கடியை, உணர்ச்சியை புரிந்து கொண்டு தகுந்த சமயத்தில் உதவுபவராக இருங்கள்: அது யாராக அல்லது எந்த துறையை சார்ந்தவராகட்டும், ஒரு வேலையை முடிக்க முடியாமல் அல்லது அதில் பிரச்சனைகளை சந்திக்கும் போது, நீங்களாகவே முன் வந்து உங்களால் முடிந்த வரை உதவுவது என்பது, உங்களுக்கு அல்லது உங்கள் துறைக்கு சம்மந்தமில்லாதவராக இருந்தாலும், உங்களுக்குள் இருக்கும் ஒரு இடைவெளியை உடைத்து நெருக்கமாக இது வழிவகுக்கும்.

வேலை இடங்களில் நல்ல ஒரு நட்புறவை வளர்க்க இது மிக சிறந்த ஒரு வழிவகுப்பதோடு, உங்கள் உதவிக்கு நன்றியுடன் இருப்பதோடு, அவர் மனதில் நல்ல ஒரு இடத்தை உங்களுக்காக ஒதுக்கும் படி இது உதவும்.

உதவுவதற்கு எப்போதும் எழுந்து நிற்க நீங்களாகவே தயாராக இருங்கள்: வருட ஊதிய உயர்வு நேரத்தில் ஒருவரை ஒருவர் முன் விட்டு பின் பேசுவது என்பது பொதுவாக நடக்க கூடிய ஒன்று தான் என்றாலும், சில நேரங்களில் உங்கள் உடன் அல்லது கீழ் வேலை பார்பவர்களே உங்களுக்கு எதிராக திசை திரும்பி பல மனிதாபிமானமற்ற வதந்திகளை பரப்பி உங்கள் பெயரை கெடுக்க முயற்சிக்கலாம்.


அத்தகைய நேரங்களில் நீங்கள் உறுதியாக நிற்பதோடு மட்டுமில்லாமல், இத்தகைய கீழ்தரமான செயல்களால் நீங்கள் ஒதுங்கிவிட போவதில்லை என்பதை நிரூபிக்க வேண்டும். அதே நேரத்தில் உங்கள் பொறுமையை இழக்காமல் அந்த பிரச்சனையை அல்லது அவர்களை நேரடியாக சந்தித்து ஒரு கட்டுக்குள் கொண்டு வர பழகுங்கள்.

அவர்கள் உங்களால் இம்சைக்கு உட்படுத்த பட்டு இருக்கும் பட்சத்தில், நிலைமையை விளக்கி சொல்லி இறங்கி வர அதாவது மன்னிப்பு கேட்க தயங்காதீர்கள். ஆனால் இத்தகைய நேரங்களில் உங்கள் மேல் அதிகாரிகளையும் நீங்கள் இந்த பிரச்சனை வலையத்திற்குள் வைத்திருப்பதை உறுதிபடுத்திக் கொள்ளுங்கள்.

உங்களை நீங்களே பெருமை படுத்தி கர்வம் கொள்ளாதீர்கள்: ஒரு போதும் வளைந்து கொடுக்காமல் எல்லா சூழ்நிலைகளிலும் மிக துல்லியமாக இருப்பது என்பது, உங்களுக்கு நீங்களே மறைமுக எதிரிகளை வளர்த்து கொள்வதாகும்.

உங்களுக்கு தெரிந்ததை கற்றுக்கொடுங்கள், தெரியாததை கற்றுக்கொள்ள தயங்காதீர்கள்.

எல்லா இடங்களிலும் நேரங்களிலும் கனிவாக இருக்க பழகுங்கள், உங்கள் கீழ் வேலை பார்ப்பதால், அவர்களை மட்டமாக பார்க்கவோ மறைமுக இம்சை படுத்தவோ வேண்டாம்.

எதுவுமே நிரந்தரமில்லாத இந்த உலகில், ஒரு நாள் உங்கள் கீழ் வேலை பார்த்தவர் கூட உங்களுக்கு அதிகாரியாக வரக்கூடும் இல்லையா?

அதனால் எப்போதும் மற்றவர்களை சமமாக அல்லது உங்களை விட சிறந்தவராக நினைப்பதே சாலச்சிறந்தது.

நேரத்தை கையாளும் கலையில் சிறப்பாய் செயல்படுங்கள்: எவ்வளவு சரியாக செய்கிறோம் என்பதை விட, அதை எந்த நேரத்தில் செய்கிறோம் என்பதுதான் மிக முக்கியம்.

இறைவன் நமக்கு இரண்டு காதுகளையும் ஒரே ஒரு வாயையும் கொடுத்துள்ளார், எனவே நாம் அதிகம் கேட்க முடியும், அதே நேரத்தில் குறைவாக பேச வேண்டும். எதையும் கேட்கவோ அல்லது சொல்லவோ மிக பொறுமையாக சரியான நேரத்திற்காக காத்திருங்கள்.

புதிய நல்ல எண்ணங்களோடு சிறந்த யோசனைகளையும் சொல்ல கற்றுக்கொள்ளுங்கள். மேல் சொன்னது போல் வதந்திகளை கையாளும் போது, குறிப்பாக மேல் அதிகாரிகளை பற்றி யாரிடமும் மோசமாக பேசுவதை தவிருங்கள்.

உங்களுக்கான சரியான நேரம் அமையும் போது, துணிவாக மற்றும் தெளிவாக உங்கள் மனதில் உள்ள சிந்தனைகளை நடக்கும் ஆலோசனையுடன் ஒப்பிட்டு, சரியான மற்றும் தேவையான கருத்துக்களை சொல்லுங்கள்.

மனஉறுதியுடன் இருங்கள்: அலுவலக அரசியலுக்கு பதில் கொடுக்க மிக சிறந்த வழி என்பது, உங்களால் எவ்வளவு சிறப்பாக செயல் பட முடியுமோ, அவ்வளவு சிறப்பாக செயல் படுவது மட்டுமே.

உங்களை நீங்களே நல்ல முறையில் வழிநடத்தி துணிவாகவும், அதே நேரத்தில் உறுதியாகவும் செல்வது என்பது எதிரிகளையும் பொறாமைகளையும் வளர்ப்பதிற்கு பதிலாக எளிதாக மற்றவர்களை கவர்ந்து, உங்கள் வழியை பின் பற்ற வைக்கும்.



அலுவலக அரசியல் எவ்வளவு மோசமாக அல்லது கீழ்த்தரமாக இருக்கப்போவது என்பது, நீங்கள் எவ்வளவு மோசமாக அல்லது கீழ்த்தரமாக அதில் கலந்து கொள்கிறீர்கள் என்பதை பொறுத்துதான் அமைகிறது.

ஆகவே, எப்போதும் மனதில் வைத்திருங்கள், எது வேண்டுமானாலும் வரலாம் போகலாம், ஆனால் கண்டிப்பாக நாம் என்ன செய்தமோ அது நமக்கே ஒரு நாள் திரும்ப கிடைக்கும்.

"நாம் என்ன ஆயுத்தை எடுக்க வேண்டும் என்று நம் எதிரிகளே தீர்மானிக்கிறார்கள்" என்பது மற்ற இடங்களுக்கு பொருந்தினாலும், அலுவல அரசியலை பொறுத்த வரை, "நாம் கையாளும் முறையை பொறுத்தே, நம் எதிரிகள் கையாளும் முறையும் அமைகிறது"

எனவே கவலைகளை விட்டு விட்டு, தெளிவாக உங்கள் பாதையில் நீங்கள் செல்லுங்கள், உறுதியாக உங்களுக்கு "வானம் வசப்படும்".

நன்றி!.
 

Blogger Widgets