Wednesday, October 13, 2010

"பதிவு" எனப்படுவது யாதெனில்...!

தமிழ் வானொலி கலந்துரையாடல் ஒன்றில் சமீபத்தில் கேட்ட " தமிழ் மொழிபெயர்ப்பு சொல்லும், உருவாக்க பட்ட சொல்லும்" எனும் செய்தியில் "வலைப்பூ" என்று மொழிபெயர்க்க பட்ட தமிழ் சொல்லைவிட, "பதிவு" என்று உருவாக்க பட்ட சொல்லே "ப்ளாக்" என்பதை குறிக்கும் சரியான சொல்லாகும், காரணம் நம் எண்ணங்களை, நடவடிக்கைகளை நம் சொந்த கருத்துக்கள் கொண்டு இணையத்தில் பதிவதே "ப்ளாக்" என்று எடுத்து சொன்னார்கள்.

ஆரம்பத்தில் "கம்ப்யூட்டர்" என்பதை கூட "கணிப்பொறி" என்று மொழிபெயர்க்க பட்டு பின் "கணினி" என்று ஒரு சொல் உருவாக்க படும் போது "கணினி" என்று சொல்லுக்கு எதிர்ப்பு வந்தாலும், பின் அதுவே சரியான வார்த்தையாக ஏற்றுக்கொள்ள பட்டது, அதே போல் "வலைப்பூ" என்பதைவிட "பதிவு" என்ற சொல் விரைவில் ஏற்றுக்கொள்ளபட்டு அதிகம் பயன்படுத்த படும் என்று முடிந்தது அந்த நிகழ்ச்சி.

எனக்கும் இது சரி என்று பட, இனி "பதிவு" என்ற சொல்லை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று நினைத்துக்கொண்டு இருக்கும் போது, என் மனதில் வேறு சில எண்ணங்கள் தோன்ற!, அந்த எண்ணங்களை இங்கு பதிவதே என் நோக்கம்.



பொதுவாகவே பதிவு எழுதும் விசையத்தில் நான் அவ்வளவாக அதிக நேரம் செலுத்துவதில்லை, காரணம் இது என் தொழிலோ, குடும்பமோ அல்ல. பதிவு எழுதுவது என்பது என் தனிப்பட்ட பொழுதுபோக்கு மட்டுமே.

ஆகவே வேறு எந்த வேலைகளும் பாதிக்காத என் ஓய்வு நேரத்தில் கொஞ்சத்தை பதிவுக்காக ஒதுக்குவது என் வழக்கம்.

அதனால்தான் தொடர்ந்து என் பதிவுகளை படித்து மறக்காமல் தங்கள் கருத்துக்களை சொல்லும் நண்பர்கள் பதிவுகளை கூட என்னால் தொடர்ந்து படித்து கருத்து சொல்ல முடிவதில்லை, ஒட்டு போடுவது மிக எளிது, ஆனால் பதிவை முழுவதும் படிக்காமல் கருத்து சொல்ல நான் நினைப்பதில்லை.

சுருக்கமாக முன்பு ஒரு பதிவில் "கிரி" சொன்னது போல, பதிவை படிக்காமல் கும்மி பின்னூட்டம் போடுவதைவிட, பின்னூட்டமே கொடுக்காமல் இருப்பது மேல் என்று நினைப்பவன் நான்.

பொதுவாக நான் யாருடைய பெயரையும் என் பதிவுகளில் அவர்கள் அனுமதி இல்லாமல் பயன் படுத்துவது கிடையாது, அதனால் என் பதிவுகளை தொடந்து படித்து என்னுடன் நட்புடன் இருக்கும் நண்பர்களுக்கும், தங்கமணியுடன் நட்புடன் இருக்கும் தோழிகளுக்கும் என் நன்றியை இங்கு தனியாக தெரிவித்து கொள்கிறேன்.

எனக்கு கிடைக்கும் நேரத்தில் எல்லா பதிவுகளையும் படிக்க ஆசை பட்டாலும், இப்போதெல்லாம் எல்லா பதிவுகளையும் படிக்க உண்மையில் எனக்கு நேரம் சாத்திய படவில்லை, மேலும் இன்னொரு விசையம் எனக்கு பெரிய சவாலாக இருக்கிறது.

நான் இணையத்தில் பொழுதுபோக்க வரும் போது, நான் பின்தொடரும் நண்பர்கள் பதிவை என்னால் என் பதிவு பக்கத்தில் "டாஷ்போர்ட்" பகுதியில் சென்று அவர்கள் புதிதாக எழுதியுள்ள பதிவை படிக்க முடியும், முடிந்த வரை கருத்து சொல்ல முடியும்.

ஆனால், தினம் வருவது எனக்கு சற்று சிரமம் என்பதால், வரும்போது எல்லாம் கண்ணில் படும் பதிவுகளை படித்து விடுவேன், மற்ற எந்த பதிவையும் படிக்க எனக்கு திரட்டிகளின் உதவி அவசியமாகிறது, இங்குதான் எனக்கு கொஞ்சம் சிக்கல்.

மேலே சொன்னது போல, பதிவு என்பது ஒரு தனிமனிதன் தன் சொந்த கருத்துக்களை, நடவடிக்கைகளை, எண்ணங்களை மற்றும் சமையல், கலை போன்ற தங்கள் தனி திறமைகளை இணையத்தில் மற்றவர்களுடன் பதிவதே ஆகும்.

இதனால் பலருடைய திறமைகளை, எண்ணங்களை, கருத்துக்களை மற்றும் நடவடிக்கைகளை நாம் படிக்க முடிகிறது, சுருக்கமாக மனிதர்களை மற்றும் மனிதர் மனதை படிக்க பதிவுகள் பெரிதும் உதவுகின்றன.



இதில் என்னால் எல்லா பதிவுகளையும் படிக்கமுடியாமல் போக என் சிக்கல் என்னவென்றால், இப்போதெல்லாம் திரட்டிகளில் காணும் அனேக பதிவுகள் மேலே குறிப்பிட்ட உண்மையான பதிவு நோக்கத்தை விட்டு விலகி, "தின-செய்திதாள்" வேலையை செய்யும் போதுதான்.

எனக்கு இணையத்தில் உலாவ கிடைக்கும் நேரத்தில் இத்தகைய செய்தி பதிவுகள் ஆனது மற்ற நல்ல பதிவுகளை தேடி கண்டு பிடிக்க முடியாமல் ஒளித்து வைத்து கொள்கிறது (பதிவின் தலைப்பை பொருத்து உள்ளே சென்றவுடன்தான் புரிகிறது).

மற்றொரு காரணம் வீட்டை தவிர மற்ற இடங்களில் இருந்து பொது கணினியில் பதிவுகளை படித்து பின்னூட்டம் எழுத நினைத்தால், பெரும்பாலான இடத்தில பின்னூட்ட பகுதி தடை செய்ய பட்டு இருக்கிறது. சரி, மாலை வீடு திரும்பியது எழுதாலாம் என்று நினைத்தால், அதற்குள் அந்த பதிவையே இத்தகைய செய்தி பதிவுகள் திரட்டியில் எதோ ஒரு பக்கத்துக்குள் காணாமல் போய் விட செய்கிறது.

கவனிக்க, இங்கு யாருடைய பதிவையும் குறை சொல்வது என் நோக்கம் அல்ல.

ஒரு உதாரணத்துக்கு தமிழிஸ் என்ற ஒரு திரட்டியில் ஒரு நாளில் வரும் அத்தனை பதிவுகளையும் சலித்து தினசெய்திதாள்களில் செய்தியாக வராத பதிவுகளை தேடுவது என்பது! மற்றவர்களுக்கு எப்படியோ? ஆனால் எனக்கு கிடைக்கும் கொஞ்ச நேரத்தில் சாத்திய படவில்லை.

இது போல் எத்தனை முன்னணி திரட்டிகள்!, அதில் எத்தனை நல்ல பதிவுகள் நம் கண்ணில் படாமல் தொலைந்து போகக்கூடும்? என்பதைத்தான் இங்கு நான் சிந்தித்து பார்கிறேன்.

அதனால் செய்திகளை பதிவாக போடுவது தவறு என்று சொல்ல வரவில்லை, தின செய்திகளை அப்படியே திரும்ப திரும்ப பதிவாக போட்டு திரட்டிகளில் இடத்தை அடைக்காமல், முக்கியமான அல்லது கருத்துக்குரிய ஒரு செய்தியாயின் அந்த செய்திகளை பற்றிய தனிப்பட்ட கருத்துக்களை அல்லது எண்ணங்களை பதிவாக போலாமே என்பதுதான் இங்கு என் நோக்கம்.

அனைவருக்குமே தெரியும், இன்று இணையத்தில் இல்லாத தின பத்திரிகைகளே கிடையாது தினமலர், தினதந்தி, தினகரன்,மாலைமலர், தட்ஸ்தமிழ், தமிழ்சினிமா என்று அத்தனை தின செய்திகளையும் மற்றவர்களும் படிப்பார்கள் அல்லது படித்திருப்பார்கள்.

எனவே எந்த ஒரு தின செய்தியையும் அப்படியே ஒரு பதிவாக பதியும் முன், ஒரு முறை யோசிப்பதே நல்ல பதிவராக நம்மை அடையாளம் காட்ட ஒரு சிறந்த வழி என்று நான் கருதுகிறேன்.

மேலும், அவசியம் இத்தனை நாளுக்கு ஒரு பதிவு போடவேண்டும் என்பது கட்டாயம் இல்லையே?

அப்படி நமக்கு பதிய எதுவும் புது விசையம் இல்லாத பட்சத்தில், தின செய்திதாளில் இருப்பதை, இருந்ததை அப்படியே பதிவாக்காமல்!, அந்த நேரத்தை மற்ற பதிவர்களின் "நல்ல பதிவுகளை" படித்து கருத்து சொல்லி வாக்களிக்க பயன் படுத்தலாமே?

அதனால் அந்த நல்ல பதிவும் அனைவரின் பார்வைக்கும் வரும், மேலும் அப்படி செய்வதால் இணையத்தில் அதிக நேரம் உண்மையில் கிடைக்காதவர்கள் (என்னை போல) கண்ணில் படாமல் அந்த பதிவு காணாமல் போகாமல் நிறுத்தியதில் நமக்கும் ஒரு பெரிய பங்கு இருக்கும்.

அடிப்படையாகவே எந்த ஆதாயமும் இல்லமல் நாம் செய்யும் செய்கைகள் வெகுவாக குறைந்து விட்டன, அதனால் இப்படி செய்வதால் நமக்கு அல்லது நம் பதிவுக்கு என்ன ஆதாயம் என்று நினைக்க வேண்டாம்.

ஒன்று, தினசெய்திதாள்களில் வந்த அதே செய்திகள் திரும்ப திரும்ப திரட்டிகளில் பக்கத்தை அடைத்துக்கொள்ளாமல் அந்த இடங்கள் நல்ல பதிவுகளுக்கு கிடைக்கும்.

இன்னொன்று, நல்ல பதிவுகளை நாம் தொடர்ந்து படித்து கருத்து சொல்லும் பட்சத்தில், நாம் எவ்வளவு இடைவெளி கொடுத்து சொந்த பதிவை பதிந்தாலும் மற்ற நல்ல பதிவர்கள் நம் பதிவை படித்து இன்னும் நம்மை மெருகேற்றுவார்கள்.

அப்படி வரும் பதிவர்கள் அனைவரும் நல்ல மற்றும் தரமான பதிவர்களாக இருக்கும் பட்சத்தில், அவர்கள் வருகை அவர்களை பின் தொடரும் சக பதிவர்களையும் உங்கள் பதிவை நோக்கி திருப்பும், இதனால் நம் பதிவுகள் தரமான பதிவர் வரிசையில் இடம் பெரும்.

அப்புறம் என்ன? அட இன்னுமா புரியல...! பிரபல பதிவர்தான்... :-) .

பதிவர்கள் இதை பற்றி சிந்தித்து ஒரு நல்ல வழியை பின் பற்றினால், நிறைய திறமையுள்ள மற்றும் புதிய புதிய பதிவர்களின் திறமை திரட்டிகளில் முதல் பக்கத்தில் பலரை சென்று அடைய இது வழிவகுக்கும் என்று நம்புகிறேன்.

உங்கள் நேரத்துக்கு என் நன்றி!.

Tuesday, September 21, 2010

கதவை திறந்தால்தானே காற்று வரும்!

இதன் முன் பகுதியை நீங்கள் படிக்கவில்லை என்றால், கதவை திறந்தால் கண்டிப்பாக காற்று வரும்! ஒரு முறை படித்துவிட்டு இதை தொடரலாமே?

முந்தைய பதிவை தொடர்வது,

நமக்கு என்ன தேவை?

ஆரம்ப நிலையில் நம்முடைய தியானம் என்பது என்ன?

குடும்ப வாழ்க்கை சூழலில் இருக்கும் நம்முடைய தேவை என்பது, நம்முடைய மனஉளைச்சலை தவிர்க்க, பிரச்சனைகளை எளிதாக சந்தித்து குழப்பமில்லாத முடிவெடுக்க தேவையான தெளிவான மன, உடல் நிலை மட்டுமே.

இதற்கான சிந்தனையையும் உடல்நிலையையும் தியானம் செய்வதன் மூலம் எளிதாக பெறமுடியும் என்று நம்புகிறேன்.

தியானம் என்றவுடன், ஒரு யோகியை போல உச்ச கட்ட நிலையை பற்றி சிந்திக்காமல், நமக்கு தேவையான ஆரம்ப நிலையை பற்றி மட்டும் தற்போதைக்கு சிந்திப்பதுதான் இங்கு என் நோக்கம்.

சிந்தனைகளும், நினைவுகளும் நிறைந்ததே நம் மூளை, அதை நாம் கட்டுபடுத்த பழக வேண்டும், இதுவே நம் ஆரம்ப நிலை தியானம்.

இதற்காக நமக்கு தேவை ஒரு அமைதியான இடம் மட்டுமே, அது நம் வீட்டின் அல்லது நமக்கு பிடித்த எந்த ஒரு பகுதியாகவும் இருக்கலாம்.



மூளையின் கட்டுபாட்டில் நாம் செல்லாமல் எடுத்தவுடன் நம் சிந்தனை அனைத்தையும் கட்டுபடுத்துவது என்பது சிறிது கடினமாயினும், தொடர்ந்து பயிற்சி செய்யும் போது அது சாத்தியப்படும்.

இங்கு மீண்டும் ஒருமுறை நினைவு படுத்துகிறேன், தியானத்திற்கும் ஜாதி மதத்திற்கும் எவ்வித சம்மந்தமும் கிடையாது, அது நடுவில் வந்த வியாபாரயுக்தி மட்டுமே.

அதனால் இதை பற்றி குழப்பிக்கொள்ளாமல், உங்களுக்கு பிடித்த இடத்தில் வசதியான ஒரு முறையில் அமரவும், காரணம் நீங்கள் அமரும் முறை அல்லது அணிதிருக்கும் உடை உங்களை தொந்தரவு செய்யக்கூடாது.

எனவே உங்களுக்கு ஏதுவான, எளிதான ஒரு முறையில் அமர்ந்து கண்களை மூடி நிதானமாக சுவாசிக்கவும்.

நாம் பார்க்கும் எந்த ஒரு விசையத்தையும் பொருத்து நம் சிந்தனைகள் வளரக்கூடும் என்ற காரணத்தால்தான் கண்களை மூடுவது.

அப்படியே அமைதியாக சுவாசத்தை இழுத்து விடுங்கள், ஆனால் சுவாசிக்கும் முறையை பற்றி சிந்திக்க வேண்டாம்.

இப்படி உங்கள் உடல் ஒரு நிலையை அடைந்ததும், உங்கள் சிந்தனைகள் பலவாறு ஓட தொடங்கும், அந்த சிந்தனைகளை பின்தொடராதீர்கள்.

சிந்தனைகள் நம் கட்டுபாட்டில் இருக்க வேண்டுமே தவிர, சிந்தனைகளின் கட்டுபாட்டில் நாம் ஒரு போதும் இருக்ககூடாது.

We are what our thoughts have made us; So take care about what you think. Words are secondary. Thoughts live; They travel far. - Swami Vivekananda

நிதானமாக சுவாசத்தை தொடருங்கள், உங்கள் சிந்தனைகள் நீங்கள் சுவாசிக்கும் அளவையும் ஆழத்தையும் பின் தொடராமல் பார்த்துக்கொள்ளுங்கள், சுருக்கமாக எந்த ஒரு சிந்தனையும் செயலும் இல்லாத அமைதியான நிலையில் இருக்கவும்.

ஆரம்ப கட்டத்தில் இது சற்று கடினமாக தெரிந்தாலும், நாளடைவில் மிக எளிதாகிவிடும், அப்படி மாற மாற தியானிக்கும் போது உங்கள் சிந்தனைகளின் அளவு குறைய ஆரமிக்கும்.

இப்படி உள்ளும் வெளியும் எந்த ஒரு சிந்தனையும் ,செயலும் இல்லாமல் உங்கள் சிந்தனைகள் குறைய குறைய, உடலின் சக்கரங்களில் சுழலும் உங்கள் சுவாசத்தின் அளவும் தானாக குறையும்.



இதை தொடர்ந்து செய்து வர நாளடைவில் முழு சிந்தனை இல்லாத நிலையை அடையும் போது, நம் சுவாசத்தின் அழுத்தமும் குறைந்து குறைந்து நம்மை தியான நிலைக்கு எடுத்து செல்லும்.

இந்த நிலையை ஒருவர் அடையும் போது அவர் முழு தியான நிலையை அடைகிறார், நாசியில் சுவாசம் இருப்பது போலவே உணரமுடியாது, மனதில் எந்த சிந்தனையும் இருக்காது.

இதுவே முழு தியான நிலை.

இப்படி ஒரு தியான நிலையில் இருக்கும் போது நம் உடல் பிரபஞ்சத்தில் உள்ள சக்தியை (Cosmic Energy) பெறுகிறது, அந்த சக்தி நரம்புகளில் பரவி உடலின் உள்ள எல்லா பகுதிகளுக்கு செல்கிறது.

எவ்வளவு அதிகமாக தியானம் செய்கிறோமோ, அவ்வளவு அதிகமாக நம் உடல் சக்தியை பெறுகிறது, அந்த சக்தி மனஉளைச்சல் மற்றும் உடலில் உள்ள தீமைகளை, நோய்களை அகற்றுகிறது (Cosmic Energy Healing for Health) என்று தியான நூல்களில் சொல்லப்படுகிறது.

சாதாரணமாக ஒரு குடும்ப வாழ்கையில் இருக்கும் யாருக்கும் இதுவே தேவை.

மேலும் இந்த நிலையில் தொடந்து தியானம் செய்து வர, மன நிலையும் உடல் நிலையும் ஒழுங்கு படும், நல்ல சிந்தனைகள் வளரும்.

நம்மை நாமே யாரென்று அறிய இதுவே சிறந்த வழி.

இதை தாண்டிய நிலைதான், மூன்றாவது கண்ணை திறப்பது, ஆன்மீக குருக்களை தியானத்தில் சந்திப்பது, தெரிந்த, தெரியாத புதிர்களுக்கு அவர்களிடம் விடை கேட்பது என்ற யோகியின் நிலை.

அதையும் தாண்டிய நிலைதான் ஆன்மாவை பயணிப்பது, கடந்த, எதிர் காலத்தை பார்ப்பது என்று சித்தர் நிலையை (சமாதி நிலையை) அடைவது.

ஆனால் இவை சாதாரண மனிதர்களுக்கு அத்தனை எளிதில் சாத்தியப்படாதவை.

இதில் மிக தெளிவாக உணரவேண்டியது, இத்தகைய தியானமும், சித்தியும் ஒரு போதும் வியாபாரமாக்க முடியாது.

அதாவது நீங்கள் பணம் கொடுத்து இதில் எந்த ஒரு நிலையையும் கண்டிப்பாக அடைய முடியாது.



அதனால் தான் எல்லா மத வேத நூல்களும் உடல் மற்றும் மன ஒழுக்கத்தை முன்னிறுத்தி தன் கருத்துக்களை சொல்கிறது.

கலிகாலத்தில் அரை குறை வேதாந்திகள் மதத்தின் பெயரால் மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிப்பார்கள் என்று வேத நூல்கள் சொல்கின்றன, அதுதான் இன்று உண்மையில் நடக்கிறது.

அதனால் எடுத்த எடுப்பில் குருவை தேடுகிறேன், பணம் கொடுத்து முக்தி அடைகிறேன் என்று உங்கள் நேரத்தையும், பணத்தையும் வீணடிக்காமல், மனதை ஒரு நிலை படுத்தி சரியான பாதையில் முறையாக தியானிக்கும் போது, உங்களுக்கு மிக சிறந்த தியானம் சாத்தியப்படும்.

இதில் இன்னொரு விசையம் இருக்கிறது, யோகாசனம் என்பது வேறு தியானம் என்பது வேறு.

(இந்த முறை இந்தியாவில் இருந்த போது சில குழந்தைகள் மற்றும் பெரியவர்களும் கூட, ஒரு நிறுவனத்தின் பெயரை சொல்லி நாங்கள் அங்கு தியானமும் யோகாசனமும் படிக்கிறோம் என்று ஒரு வலுவான தொகையை கட்டணமாக சொன்னார்கள்.)

தியானத்தை பற்றி மேலே பார்த்துவிட்டோம். சுவாசத்தை கட்டுபடுத்தி சிந்தனையற்ற நிலைக்கு சென்று பிரபஞ்ச சக்தியை பெற தியானம் உதவும்.

யோகாசனம் என்பது உடற்பயிற்சி, காடுகளில் தியானம் (தவம்) செய்யும் முனிவர்களும் சித்தர்களும். எந்த உபகரணமும் இல்லாமல், உடலையே உபகரணமாக்கி உடற்பயிற்சி செய்து தங்கள் உடல் உறுப்புகளை தங்கள் கட்டுபாட்டில் கொண்டுவர பயன் படுத்தியதுதான் யோகாசனம்.

யோகாசனத்தின் ஒரு பகுதியாக தியானத்தையும் எடுத்துக்கொள்ளலாம், காரணம் மனம் ஒரு நிலையில் இல்லாத போது உடலை கட்டுபடுத்துவது சாத்தியமாகாது, எனவே எந்த ஒரு கலைக்கும் தியானம் மிக அவசியம்.

ஆனால், உடற்பயிற்சி என்று வரும் போது அதை முறையாக தெரியாமல் தானாக முயற்சி செய்வது சரியல்ல.

அதே நேரம் கற்றுக்கொள்ள சரியான (வியாபார நோக்கம் மட்டுமே குறியாக இல்லாத) ஆசிரியரை தேடி தேர்வு செய்வது மிக மிக அவசியம்.

ஆக, இவை அனைத்துக்கும் நம் மனமும் உடலும் முயற்சியும் பயிற்சியும் தான் அடிப்படையே தவிர, மதமும் ஜாதியும் குறிப்பாக பணமும் அல்லது வியாபார குருக்களும் ஒரு போதும் தேவை இல்லை என்பதை உறுதியாக நம்புங்கள்.

இப்படி நமக்கு தேவையானதை உணர்ந்து, நம் மனம் என்னும் கதவை திறந்தால், அமைதி, முக்தி, ஞனம் என்னும் காற்று அளவில்லாமல் வந்து உங்கள் வாழ்கை உங்களுக்கு வசப்படும்.

நன்றி!.
 

Blogger Widgets