Monday, August 31, 2009

அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்

முகு:- இந்த பதிவில் உள்ள எந்த ஒரு பதிவரின் பக்கத்துக்கு செல்ல வேண்டும் என்றாலும் அவர்களின் பெயரில் மேல் சொடுக்கவும்.

தென்கொரியாவில் இது கோடை காலத்தில் இருந்து இழையுதிர் காலத்திற்கு மாறும் பருவம். உண்மையில் கோடை, இழையுதிர், குளிர் மற்றும் வசந்தம், இந்த நான்கு பருவத்தில் "இழையுதிர்கால காற்று" மற்றும் "வசந்தகாலம்"தான் மனதிற்கு ஆனந்தம் தரும் பருவங்கள்.

இந்த பருவத்தில் மாத இறுதி நெருங்க...நெருங்க...பருவகாற்று அதிகரிப்பதை போல, பதிவுலகிலும் என் பக்க(ம்)த்தில் இதமாக காற்றடிக்கும் பருவமாகி இருக்கிறது.

அன்பு தங்கை பாயிஷாகாதரின் பதிவில் என்னை அறிமுக படுத்தியதும்.

அருமை தோழிகள் ஸ்வர்ணரேக்காவின் விருதும் மேனகாவின் தொடர் பின்னூட்ட ஊக்குவிப்பும்.....மற்றும் நண்பர்கள், முரளிகண்ணன், ஷ‌ஃபிக்ஸ், ஆகாயமனிதன், முக்கோணம், ரஹ்மான், பழனியிலிருந்து சுரேஷ், உண்மைத் தமிழன், பிரியமுடன்வசந்த், கோவி.கண்ணன், நிகழ்காலத்தில், ரம்யா, சக்கரை சுரேஸ், டக்ளஸ், டுபுக்கு, அன்பு, தேவன்மாயம், ராமலக்ஷ்மி, பிரேம்குமார், கீதாஆச்சல், ஷிர்டிசாய்தாசன், Bradpetehoops, நட்புடன் ஜமால், சூர்யா ௧ண்ணன், மகேஷ்வரன், சபிஅஹ்மத், முத்து கணேசன், சதீஷ்பிரபு-க்கும்

அதற்கும் மேல் அறுபத்தி மூன்று நாடுகளில் இருந்து வந்து நாட்டு கொடியை என் பக்கத்தில் நட்டதோடு தமிழிஸ்- ல் ஓட்டளித்தது, என் பதிவுகளை மற்ற நண்பர்களுடன் பகிர்ந்து கொண்ட எல்லா முகம் தெரியாத நண்பர்களுக்கும் சேர்த்து, என் மனமார்ந்த நன்றி...நன்றி...நன்றி.தொடர்ந்து உங்கள் ஆதரவையும், புது நண்பர்களின் அறிமுகத்தையும் என்றும் விரும்பும் உங்கள் நண்பன் - சிங்கக்குட்டி.

இனி ஒரு தங்கையின் விருப்பம், "A" முதல் "Z" வரை.

இதன் விதிமுறைகள்.

1-உங்களின் இந்த விபரங்களை உங்கள் பதிவில் பயன் படுத்தவும்.

2-இது உங்களை பற்றிய "A,B,C" ஆகும்.

3- நான்கு புதிய பதிவுலக நண்பர்களை இதில் அறிமுக படுத்தவும்.

4- நீங்கள் அறிமுக படுத்தும் புதிய நண்பர்களுக்கு அதை பின்னூட்டம் மூலம் தெரியப் படுத்துகள்.

5- மீண்டும், மீண்டும் ஒரே நண்பர்கள் வருவதை தவிர்க்கவும், ஆகயால் இந்த வலை பதிவு வட்டம் மேலும், மேலும் விரிவடையும்.

இதோ இனி என் பங்கு.

1. A – Available/Single? இல்லை, (பின்னாடி இருந்து தங்கமணி "சரியான லூசுடா நீ" "ஆமான்னு" போட்டாதான நிறைய பொண்ணுக படிக்கும்).

2. B – Best friend? : எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் என்னோடு நட்ப்பாய் இருக்கும் இருவர், ஒன்று "நான்" மற்றொன்று "சரவணகுமார்".

3. C – Cake or Pie?: கேக்.

4. D – Drink of choice? : இளநீர், அதிக உப்பில்லாத மோர்.

5. E – Essential item you use every day? : என் சோனி MP3.

6. F – Favorite color? : நீலம்,கருப்பு.

7. G – Gummy Bears Or Worms?: ஜில்ல்ன்னு பீர் (சும்ம்மா :-)).

8. H – Hometown? - இந்தியாவில் சரித்திரத்தில் அசுரர்கள் ஆண்ட, சுதந்திர போராட்ட வீர வரலாறுடைய ஒரு நகரம்.

9. I – Indulgence? - ஓவியம், கவிதை(இப்போது இல்லை).

10. J – January or February? ஜனவரி (இந்த கேள்வியின் அர்த்தம் எனக்கு புரியவில்லை, இருந்தாலும் குளிர் மாத "ஜனவரி" பிடிக்கும்).

11. K – Kids & their names? ஒரு அதிஸ்ட தேவதை "அஹானா".

12. L – Life is incomplete without? - என் தன்நம்பிக்கை.

13. M – Marriage date? 25 அக்டோபர் 2006.

14. N – Number of siblings? மூன்று சகோதரிகள்.

15. O – Oranges or Apples? ஆரஞ்ச்.

16. P – Phobias/Fears? "போபியா" எதுவும் இல்லை, "பயம்" மனசாட்சிக்கும் கடவுளுக்கும் மட்டும்.

17. Q – Quote for today? : There is nothing to lose in this world, but everything to Learn, Gain and Yearn.

18. R – Reason to smile? : அனைவரையும் எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள.

19. S – Season? பனிவிழும் குளிர்காலம்.

20. T – Tag 4 People? ஸ்வர்ணரேக்கா, பிரியமுடன்வசந்த், தேவன் மாயம், முத்துச்சரம்.

21. U – Unknown fact about me? எப்போதும் பாசத்தை தேடுவது.

22. V – Vegetable you don't like? கத்திரிக்காய்.

23. W – Worst habit? முன்கோவம்.

24. X – X-rays you've had? "கைவிரல்" ஜப்பானில் பனியில் விளையாடிய பாதிப்பு.

25. Y – Your favorite food? கோழி, நண்டு.

26. Z – Zodiac sign? சிம்மம்.

வழக்கம் போல உங்கள் கருத்தை பின்னூட்டத்தில் பதிந்து தமிழிஸ்- ல் ஓட்டளிக்க வேண்டுகிறேன், நன்றி.

மீண்டும் ஒரு புதிய பதிவோடு உங்களை விரைவில் சந்திக்கிறேன். அது வரை உங்களிடம் இருந்து அன்புகூறி விடை பெறுவது உங்கள் சிங்கக்குட்டி ...சிங்கக்குட்டி ...சிங்கக்குட்டி ...(எக்கோ எபெக்ட்-ங்க).

Thursday, August 27, 2009

அட்டகாசமான செல்போன்

இங்கு கையில் இருப்பது ஏதோ கண்ணாடி துண்டு என்று நினைக்காதிர்கள், இது ஒரு புதிய செல்போன் வடிவம் என்றால் உங்களால் நம்ப முடியுமா?

ஆனால் உண்மை அதுதான்!தென்கொரியா,ஜப்பான்,அமெரிக்க போன்ற நாடுகள், நம்மை போல ஜி.எஸ்.எம் நெட்வொர்க்கில் இல்லாமல், சி.டி.எம்.ஏ என்ற "சிம்கார்டு" இல்லாத நெட்வொர்க்கில், அதாங்க நம்ம ரிலைன்ஸ் செல்போன் போல இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே.

அதன் அடுத்த கட்டமாக தென்கொரிய செல்போன் வடிவமைப்பாளர்கள் புதிதாக அறிமுகப்படுத்தி இருக்கும் அதிநவீன தொழிநுட்ப வடிவமே இந்த செல்போன் இதன் பெயர் "விண்டோ மொபைல்".

இனி இந்த செல்போன் சிறப்பு அம்சத்தை பற்றி பாருங்கள்.

இருபக்கமும் ஒளி ஊடுருவும் வகையில் உள்ள ஒரு மெல்லிய கண்ணாடி போல் உள்ளது, இதன் நிறத்தை உங்களுக்கு பிடித்த நிறத்தில் மாற்றிக்கொள்ள முடியும், இதன் வெளி தோற்றம் வெயில், மேகமூட்டம், மழை அன்றைய வானிலைக்கு ஏற்றவாறு மாறிக்கொள்ளும் வகையில் வடிவமைத்து இருகிறார்கள்.

இன்று பனி என்றால்:
____________________இன்று மழை என்றால்:
_____________________இதில் தனியாக கீபோர்டு எதுவும் இல்லை, ஆனால் உங்கள் நண்பரின் பெயரை அல்லது நம்பரை சொல்லி "வாய்ஸ்டயல்" பண்ண முடியும், அல்லது உங்கள் விரலால் வேண்டிய நம்பரை எழுதியோ அல்லது சேமித்த நம்பரை எடுத்தோ தேவையான நபரை அழைக்க முடியும்.மற்றும் இதில் கேமிரா, எஸ்.எம்.எஸ் போன்ற அணைத்து வசதிகளும் இருக்கிறது, உங்கள் எஸ்.எம்.எஸ்-சை விரலால் தொட்டு எழுதியும் வேண்டிய படங்களை வரைந்தும் அனுப்ப முடியும்.இனி இந்த தொழில் நுட்பத்தை எந்த நிறுவனம் வாங்கி இந்த செல்போனை எப்போது வெளியிட போகிறது என்பது தான் இப்போது இங்கு பர பரப்பான பேச்சு.

அனேகமாக "சாம்சாங்" அல்லது "எல்.ஜி" நிறுவனம் இந்த தொழில் நுட்பத்தை வாங்க கூடும் என்று பரவலான பேச்சு தென்கொரியர்கள் இடையே உலவுகிறது.

சமிபத்தில் தான் "சாம்சாங்" நிறுவனம் தன் ஆகசிறிய கைகடிகாரமாக பயன் படுத்த கூடிய S9110 என்ற செல்போன் வடிவத்தை அறிமுகப்படுத்தியது இங்கு குறிப்படதக்கது.தென்கொரிய சமூகத்தில் நவீன தொழிற்நுட்பம் எப்படி வளர்ந்து இருக்கிறது என்பதை இங்கு பாருங்கள் ("டிஜிடல் கொரியா" புத்தகத்தில் இருந்து).

பதினோரு மாத காலம், இதுதான் ஒரு செல்போன் கொரியர்களின் தங்கியிருக்கும் காலம். அதன் பிறகு பழைய போனை தூக்கியெறிந்து விட்டு அதி நவீன புதிய போனை, வாங்கி விடுகிறார்கள்.

செல்போன் வைத்திருப்போர்களில் 99 சதவீதம் பேர் காமிரா போன்ற வசதியுடன் கூடிய நவீன போன்களை வைத்திருக்கின்றனர். இவர்களில் அறுபத்திமூன்று சதவீதம் பேர் செல்போன் மூலமே கட்டணங்களை செலுத்தும் பழக்கம் கொண்டிருக்கின்றனர்.

செல்போன் வைத்திருப்பவர்களில் ஐம்பத்து சதவீததுக்கும் மேல் மூன்றாவது தலைமுறை செல்போன் களுக்கு மாறியிருக்கின்றனர். இதன் காரணமாக பெரும்பாலான தென் கொரியர்கள் செல்போனிலிருந்தே இன்டெர்நெட்டில் உலாவுகின்றனர்.செல்போன் வைத்திருப்பவர்களில் ஒருசிலரை தவிர மற்றவர்கள் எல்லோரும் காசு கொடுத்து ரிங்டோன் வாங்குகின்றனர். ரிங் பேக் டோன் என்று சொல்லப்படும் புதுமையான ரிங்டோன் தென்கொரியாவில் உதயமானதுதான்.

தென்கொரிய மாணவர்களின் நாற்பது சதவீதம் பேர் வகுப்பறையிலிருந்தே எஸ்எம்எஸ் செய்திகளை அனுப்பி கொள்கின்றனர், முப்பது சதவீத மாணவர்கள் நாளொன்றுக்கு தோராயமாக நூறு எஸ்எம்எஸ்க்கு மேல் அனுப்புகின்றனர்.இந்த தகவல்கள் சுவாரசியமாக இருந்தால், "ஓட்டளித்து உங்கள் நண்பர்களுடன்" இந்த பக்கத்தை பகிர்ந்து கொள்ளாமே?

Sunday, August 23, 2009

"அக்காமாலாவையும் கப்சியையும்" விடுங்கையா!"வெற்றிவேல் வீரவேல்" "வந்தேமாதரம்" என்று என் தாய் நாட்டு சுதந்திரத்துக்கு பாடுபட்ட அத்தனை உயிர்களுக்கும் என் இதயம் கனிந்த அஞ்சலி.

தாமதமான சுதந்திர தின வாழ்த்தோடு துவங்கினாலும், வழக்கம் போல பெரிய மொக்கை எதுவும் இல்லாம, உருப்படியா ஏதாவது ஒரு விசையத்த இந்த பதிவில் சொல்ல முயற்ச்சிக்கிறேன். அதனால் தான் இந்த தாமதம்.

தென்கொரியாவில் காலை வேளையில் சாலைகளில் மற்றும் அலுவலகம் செல்லும் பாதை வாசல்களில் அழகிய சீருடை அணிந்த பெண்களை ஒரு வகை விற்பனை வண்டியுடன் காண முடியும், தினம் இவர்களை பார்க்கும் போதெல்லாம் எனக்கு நம்ம ஊரில் "ஐஸ்" வண்டியுடன் விற்பதை போல, இவர்களும் ஏதோ! விர்ப்பதாய் ஒரு நினைப்புடன் இருந்தேன்.

ஆனால், இவர்கள் எல்லா அலுவலகங்களுக்கு உள்ளேயும் வந்து அங்கு வேலை பார்பவர்களில் தினம் குளிர்பானம் குடிக்கும் வாடிகையாளர்களுக்கு "விற்பனை" செய்து விட்டு போவதில் எனக்கு ஆச்சரியம், ஏன் என்றால் சாதரணமாக "வங்கி", "தேசிய சேவை ராணுவ தளம்" போன்ற அலுவலகங்களில் வேலை இல்லாத வெளி ஆட்களை அனுமதிப்பது இல்லை, அதுவும் விற்பனைக்கு என்ற போது, அது எப்படி இவர்களால் மட்டும் சாத்தியமாகிறது என்று எனக்கு புரியவே இல்லை.

இதனால் எனக்கு அதைபற்றி தெரிந்து கொள்ளும் ஆவல் கூடியது, சில நாட்கள் முன் ஒரு முறை அது என்னவென்று பார்க்க ஆவலுடன் அருகில் சென்று பார்த்தேன், அது முழுவதும் கொரியன் மொழியில் எழுதப்பட்ட சிறு சிறு மருந்து பாட்டில் திரவமாக இருந்ததால் அப்போது எனக்கு எதுவும் புரியவில்லை.ஆனால், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வாங்கி குடிப்பதை பார்த்து இருந்ததால், சரி எதுவும் ஆகாது என்ற நம்பிக்கை என்பது மட்டுமில்லாமல் விலையும் ஒன்றும் அதிகம் இல்லை "ஆயிரம் கொரியன்வேன்" இங்கு ஆயிரம் வேன் என்பது, நாம்ம ஊரில் "ஒரு ரூபாயை போல்" என்பதால் (இந்திய மதிப்பில் ஐம்பத்து ரூபாய்) நானும் ஒன்றை வாங்கி குடிக்கும் முன், இதை நான் குடிக்கலாமா என்று அந்த பெண்ணிடம் சைகையில் கேட்டு உறுதி படித்திக்கொண்டு (நாம எப்பவும் அலாட்டுங்க) குடித்து பார்த்தேன்.

பார்ப்பதற்கு மருந்து பாட்டிலை போல் இருந்தாலும், அதில் இருந்தது என்னவோ நம்ம ஊர் "லசி" (இனிப்பு கலந்த தயிர்) போல நல்ல சுவையுடன் இருந்தது, அதன் பிறகு அதை மறந்து விட்டு வேலையை துவங்க, சாதாரண நாட்களை விட அன்று உற்சாகமாக உணர்ந்தேன், அன்று நல்ல பசியும் எடுத்தது, சரி, இது நம்ம ஊர் "லசி" போல கொரியன் "லசி" என்று நினைத்துக் கொண்டேன்.

இன்னொரு முறை குடித்த போது, அன்றும் இதே போல உணர, இதை பற்றி மேலும் தெரிந்து கொள்ளும் ஆவலுடன், என் அலுவலக நண்பியிடம் (பக்கத்து இருக்கைல இருக்கிறது கொரியன் பொண்ணு-ன்னு தங்கமணிக்கு இன்னும் தெரியாது) விசாரிக்க கிடைத்த தகவல்கள் வியக்க மட்டுமல்ல, மலைக்கவும் வைத்தன.

உண்மையில் அது மருத்துவ குணம் கொண்ட ஒரு குளிர்பானம், இந்த சூத்திரத்தை கண்டு பிடித்தவர் "நோபல் பரிசு" பெற்ற கொரியன் ஒருவர், அவர் தன் "வயிற்று புற்றுநோய்" பற்றிய ஆராய்ச்சிக்கும், அதை தடுக்கும் சூத்திரத்துக்காகவும் மருத்துவ துறை நோபல் பரிசு கிடைத்ததாம்.

அந்த சூத்திரத்தின் அடிப்படையில், கொரிய அரசாங்கத்தின் நேரடி பார்வையில் தயாரிக்க படுவது தான் இந்த குளிர்பானமாம், இதை பல மருத்துவ தனியார் வியாபாரிகளுக்கும் ஒப்பந்த அடிபடையில் தயாரிக்க அரசாங்கம் அனுமதி கொடுத்திருக்கிறதாம்.

அது மட்டுமில்லாமல், இத்தகைய தயாரிப்புகளுக்கு மற்ற குளிர்பானத்தை போல வரி எதுவும் கிடையாது என்பதால், மக்களுக்கு இதை குறைந்த விலையில் கிடைக்க செய்யமுடிகிறது.

மற்ற உடலை கெடுக்கும் குளிர்பானத்தை குடித்து மக்கள் உடலை கெடுத்து கொள்ளாமல் இருக்கவே, இத்தகைய தயாரிப்பை மக்கள் மத்தியில் எளிதில் கிடைக்க செய்கிறார்கள். மேலும் இத்தகைய குளிர்பானங்களை "இரண்டு நாட்களுக்கு மேல் பயன் படுத்த முடியாது" என்பதாலும் தான், இந்த தயாரிப்பை விற்பனை செய்பவர்களால் எந்த அலுவலகங்களுக்கும் நேரில் செல்ல, சென்று விற்பனை செய்ய அனுமதி கிடைத்து இருக்கிறது.இதை குடிப்பதன் மூலம், நல்ல செரிமானமாகுமாம், நல்ல பசி எடுக்குமாம், காலை கடன் உபாதைகள் நீங்குமாம், வயிற்று புற்றுநோய், குடல்நோய் வரும் சந்தர்ப்பம் அதிக அளவில் குறையுமாம், மேலும் இது அரசாங்க நேரடி கண்காணிப்பில் தயாராகும் உள்ளூர் தயாரிப்பு என்பதால், கலப்படம் இருக்காது மற்றும் பின் விளைவுகள் இருக்காது என்பதற்கு உத்திரவாதம் அதிகம் என்று அடித்து சொல்கிறார்கள்.

அதன் பின் தான் நான் கவனித்து பார்த்தேன், இங்கு இது மட்டுமில்லாமல் மற்ற அணைத்து குளிர்பானங்களும் திராச்சை, ஆப்பிள், ஆரஞ்ச் போன்ற நன்மை தரும் உள்ளூர் தயாரிப்பு குளிர்பானங்கள் மட்டுமே அதிக அளவில் விற்பனை செய்ய படுகிறது.

இதை பார்த்த போது எனக்கு நம்ம ஊரில் நினைவில் வந்தது இரண்டு.

ஒன்று தினம் காலை வேலை ஊரில் பச்சை கண்டாங்கி கட்டி, தலையில் கூடையை வைத்துக்கொண்டு தயிர் விற்று வரும் அம்மா, அந்த கூடையில் ஒரு ஓரத்தில் மோர் கிண்ணத்தில் வெண்ணை உருண்டைகளை மிதக்க விட்டு இருக்கும் (நான் வாங்கும் போது ஒரு வெண்ணை உருண்டை ஐம்பது காசு).

இன்னொன்று வெள்ளை துண்டை தலையில் கட்டிக்கொண்டு, சட்டை இல்லாத உடம்புடன் இடுப்பில் வேட்டியுடன் சைக்கிளில் முன்னும் பின்னும் இளநீரை கட்டிக்கொண்டு வரும் முதியவர், இந்த முறை வந்த போது கூட தேசியபுற சாலைகளில் புளிய மரதடியில் விற்பதை பார்த்து போய் வாங்கி குடித்தேன்.

சரி, இப்ப நம்ம விசையத்துக்கு வருவோம், இதுக்கும் "அக்காமாலாவையும் கப்சியையும்" விடுவதற்கும் என்ன சம்மந்தம் என்றால்?

நாமும் இப்படி நமது பாரம்பரிய குளிர்பானமான இளநீர், மோர் என்று தினம் பருகி உடல் நலனை காப்பதுடன், இந்த உடலுக்கு தீங்கு விளைவிக்கும் "அக்காமாலா, கப்சி" போன்ற அந்நிய குளிர்பானத்தை தவிர்க்கலாமே?

இதை மட்டும் ஏன் இங்கு நான் குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்று நினைப்பவர்கள், நம்பிக்கை இல்லாதவர்கள், ஒரு புது "அக்காமாலாவையோ அல்லது கப்சியையோ" வாங்கி அதை திறந்தவுடன் ஒரு "கோழியின் கால் எலும்பை" போட்டு உடனே மூடிவிடவும், இருபத்து நான்கு மணி நேரம் கழித்து அந்த "எலும்பின் நிலையை" பார்த்தல் உண்மை புரியும்.

சரி, இப்படி இந்த குளிர்பானங்களை தவிர்ப்பதால், நம் உடலுக்கு மட்டும் தான் நன்மையா? என்றால் நிச்சியம் இல்லை!, எப்படி என்றால்.

இதனால், அழிந்து வரும் நம் பாரம்பரிய இயற்கை உணவு முறைகள் மீண்டும் வழக்கத்திற்கு வரும் மற்றும் உள்ளூர் விவசாயிகள் நேரடியாக பயன் பெறுவார்கள், இதனால் அழிந்து வரும் விவசாயம் நம் நாட்டில் பெருகும், வீட்டிற்க்கு வரும் விருந்தாளிக்கு கூட இளநீர், மோர், பருத்திப்பால், பழசாறு, தேநீர் தரும் வழக்கம் மீண்டும் வரும்.

இப்படி நாம் அனைவரும் பயன்படுத்தும் விற்பனை தேவை அதிகரிப்பதால் அரசாங்கம் இத்தகைய குளிர்பானங்களை கிராமங்களில் கிடைப்பதை போலவே, பரபரப்பான நகர மக்களுக்கும் தினம் கிடைக்க ஏற்ற வகையில் புட்டிகளில் அடைத்து குறைந்தது "மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு மேல் பயன்படுத்த முடியாத" வகையில் தயாரிக்க வேண்டிய சூழ்நிலை வரும், இப்படி குறிகிய கால பயன் பாட்டினாலும், இயற்கை உணவு முறை என்பதாலும் கலப்படம் இருக்க சந்தர்பம் வெகுவாக குறையும்.

மேலும் இதனால் நம் உள்ளூர் வேலை வாய்ப்பு பெருகும், உள்ளூர் தயாரிப்பு என்பதால் வரி அதிகம் இருக்காது, அதாவது அன்றாடம் நாம் குடிக்கும் குளிர்பானத்திற்கு, நாம் காப்புரிமை எனப்படும் "வரி வெளிநாட்டுக்கு செலுத்த வேண்டி இருக்காது". இதனால் நம் தயாரிப்பின் விலை குறையும், நாட்டின் பண வளர்ச்சி மற்றும் சுழற்சி அடையும்.

நாளடைவில் நம் மக்கள் இருக்கும் இடமெல்லாம் இத்தகைய நம் நாட்டு தயாரிப்புகள் தேவைப்பட, உலக சந்தையில் நம் நாட்டு தயாரிப்பு சர்வதேச உலக தரத்துடன் தயாரிக்கபட்டு, நம் வியாபாரம் அன்னிய செலவாணியில் உயர்வதால், நம் நாட்டு பண மதிப்பு உலக சந்தையில் உயரும்.

நம் பண மதிப்பு அதிகரிக்க அதிகரிக்க ஒவ்-ஒன்றாக, நம் உள்நாட்டு தயாரிப்பு அனைத்தும் நம் நாட்டு மக்களுக்கு வரி இல்லாமல் சகாய விலையில் நிச்சியம் கிடக்கும், அதாவது நம் நாட்டில் விளையும் "பாசுமதி அரிசி" நமக்கு கிலோ ஐந்து ரூபாயில் கிடைக்க கூட வழி வகுக்கும்.

அதன் பின் "என்ன வளம் இல்லை இந்த திரு நாட்டில்? ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்?" என்ற கவிங்கரின் கனவு நினைவாகும்.ஆக, இந்தியா இன்னும் இருபது ஆண்டுகளில் ஒரு வல்லரசு ஆகும் என்று படிப்பதோடு மட்டும் இல்லாமல், அதை நடை முறை படுத்த நாம் தான் முயற்சி எடுக்க வேண்டும் இல்லையா?

இதை தினம் நாம் செலவிடும் ஒரு அந்நிய குளிர்பானத்தில் இருந்து துவங்கலாமே?

அதனால் தான் மீண்டும் ஒரு முறை சொல்கிறேன் இந்த "அக்காமாலாவையும் கப்சியையும்" மொதல்ல விடுங்கையா.

சற்று சிந்தித்து பார்த்தால், இதுகூட இன்றைய நம் சமுதாய நடைமுறைக்கு அவசியமான ஒரு "சுதேசி" தான் நாண்பர்களே.

ஆகவே, நம் நாட்டை உயர்த்த ஒன்றுபடுவோம்,நம் நாட்டோடு சேர்ந்து நாமும் உயர்வோம்.

ஜெய்ஹிந்.


பிகு:- வழக்கம் போல படிச்சிட்டு "ஓட்ட போடாம" போங்க...... எப்பவும் ஓட்டு போடுங்கன்னுதான சொல்லுவோம், அதான் சும்மா ஒரு சேஞ்சுக்கு :-))...

இந்த பதிவின் கருத்து மக்களுக்கு பயன்படும் என்று நீங்கள் நினைத்தால், உங்கள் நண்பர்களுடன் இந்த பக்கத்தை பகிர்ந்து கொள்ளவும்.

Sunday, August 16, 2009

நண்பர்கள் தினம்

சண்டையே இல்லாமல் ஏன் இந்த பிரிவு?!!

நண்பர்கள் தினத்திற்கு ஏன்? மின் அஞ்சல் அனுப்பவில்லை? என்னை மறந்துட்டியா? அப்படி என்னடா கோவம்? என்று கேட்டிருந்த என் நண்பனுக்காகவும் மற்ற நண்பர்களையும் சேர்த்து எழுதிய பதிலில் "னோம்" என்பதை "வோம்" என்று பொதுப்படை மாற்ற அதுவே இந்த பதிவு .

இந்த பதிவு வெளிநாடு போகதுடித்த நண்பர்களின் வழக்கமான பேச்சு மொழி என்பதால், சற்று மாறுபட்ட தமிழாக இருக்கும் .

காயங் காத்தால எழுந்ததும் காப்பி தண்ணிய குடிக்கிரமோ இல்லையோ (சும்மா ரைம்மிங்குக்காக "க" னாவுக்கு "க" னா போட்டு பார்த்தேன்).....ஏ வருது வருது விலகு விலகுன்னு கத்திகிட்டே டவுசர பிடிச்சுக்கிட்டு ஓடுற அவசரத்திலும், எலேய் குமாரு நீ வரலையான்னு கத்திகிட்டே தெரு முக்குக்கு முக்கிகிட்டே (திரும்ப சும்மா ரைம்மிங்குக்காக "மு" னாவுக்கு "மு" னா போட்டு பார்த்தேன்) ஓடுவோம்.

அதையும் ஒழுங்கா முடிக்காம, நடுவுல ரெண்டு ஆட்ட கில்லியோ இல்ல, கவனமா "பச்சா" போடாம "தக்காளி குண்ட" மட்டும் குறி வச்சு அடிச்சு ஒரு ஆட்டாமோ ஆடிகிட்டே வீட்டுக்கு வந்து, எருமமாடே எத்தன தடவ சொல்லுறது வீட்டுல கக்கூஸ் இருக்கில்லன்னு பாட்டு வாங்கிட்டே கக்கா கழுவி, காக்கா குளிய போட்டுட்டு, வீட்டு பாடத்த பண்ணாததுதுக்கு வீட்டுலையும் திட்ட வாங்கி, அத காதுல போட்டுக்காம, கைய சுத்தி தலைக்கு மேல ஜோல்னா பைய முதுகுல ஹோண்டா பேகு நினப்புல போட்டு கிட்டு மறக்காம மதிய சாப்பாட்டு வயர் கூடைய தூக்கிகிட்டு ஓடுவோம்.

நாலு தெருவு தள்ளி இருக்கிற ஸ்கூல்லுக்கு, பத்து தெரு சுத்தி ஒவ் ஒருத்தன் வீட்டு வாசல்லையும் போய் கத்தி கூட்டு சேத்துகிட்டு போனோம், கைலயே பாட்டில் நிறைய தண்ணி இருந்தாலும், போற ஒவ்வொரு வீட்டுலையும் கேட்டு கொஞ்சம் தண்ணி வாங்கி குடிப்போம்.

அந்தா இந்தான்னு, ஒரு வழியா ஆடிகிட்டே ஸ்கூல்லுக்கு போய், வீட்டு பாடத்த பண்ணாததுதுக்கு வீட்ல வாங்குனது போக மிச்சத்த வாத்திகிட்ட வாங்கி கட்டிகிட்டு, கடைசி பெஞ்சுல எப்படா மதிய சாப்பாட்டு பெல் அடிக்கும்னு ஜன்னல பாத்துகிட்டு உக்காருவோம்.

பெல் அடிச்சதும் ஓடி போய் காலியா இருக்க எல்லா மரத்தையும் விட்டுட்டு, நம்ம பக்கத்துக்கு தெரு பசங்க வழக்கமா உக்கார்ர மரத்துக்கு கீழ இடத்த பிடிச்சு அவிங்கள வம்முக்கு இழுத்தாதான் , நமக்கு சாப்பாடு உள்ள இரங்கும். உண்ட மயக்கத்துல மத்தியானம் தூங்கி, வாத்தி கிரவுண்டுல ஓட சொல்லும்போது, நமக்கு முன்னாடியே நம்ம குரூப் முழுசும் அங்க ஓடிக்கிட்டு இருக்கும்.

இப்படி பொழுத போக்கி, "ஸ்கூல்ல எப்பவும் நான் தான் முதல் ஆளுன்னு" நாம சொல்லுறதுக்கு உண்மையான அர்த்தமா பெல் அடிச்சதும் மொதோ ஆளா ஸ்கூல விட்டு வெளில ஓடி வந்தோம். வீட்டுக்கு வந்ததும் வராததுமா பைய தூக்கி போட்டுட்டு...வெளில ஓடி போய் திரும்ப கில்லி, குண்டு, குச்சி தள்ளி, சிப்பி ..தேன் பட்டு பிடிக்கிரதுன்னு, நம்ள மாதிரி பெரிய ஸ்போர்ட்ஸ் மேன் யாருமே அப்போ இல்ல.இப்படி ஒரு அஞ்சு வருசம்தான்......அடுத்து நீங்க ஆறாவது சேரணும்னு நம்ள நாடார் ஸ்கூல், சி.எஸ். ஐ ஸ்கூல், ஆர்.சி ஸ்கூல், இஸ்லாம் அரபி ஸ்கூல்ன்னு பெத்தவிங்க பிரிக்க பாக்க அழுது அடம் பிடிச்சு முடிஞ்சவரை எல்லோரும் ஒரே ஸ்கூல்ல சேருவோம்.... ..சேர முடியாதவனை கவலைப்படாத மாப்ள ...நம்ம பத்தாவது முடிச்சிட்டு ஒரே ஸ்கூல்ல சேருவோம்னு ஆறுதல் சொன்னோம்.

அப்போ எல்லாம், முழு பரிச்சை லீவுக்கு எவனாவது ஊருக்கு போனாலும், போன் இருக்க வீட்ட தேடி போய் எல்லோரும் சேந்து கால் பண்ணி, மாப்ள நீ இல்லாம நாங்க போன மேட்ச்சுல என்ன ஆச்சு தெரியுமான்னு..... போன்கார நண்பனோட அப்பா வந்து விரட்டுற வரைக்கும் கதை அடிப்போம்.

அப்புறம் நாள் ஓட, வருஷம் ஓட, மாப்ள இப்போ நம்ம பெரிய பசங்க ஆகிட்டோம், இனியும் மரத்துல செஞ்சு பச்சை பெயிண்ட் அடிச்ச பேட்ட வச்சுகிட்டு தெரு முக்கு செட்டியார் வீட்டு செவுத்துல கரிக்கோடு போட்டு விளையாண்டா "டோர்னமென்ட்" எல்லாம் போக முடியாதுன்னு பிளான் போட்டு , "ஆபரேஷன் அஞ்சாவது சந்து கிரிகெட் கிட்ஸ்" ஆரபிப்போம், அதாவது லீவு வரதுக்கு முன்னாடி, நம்ம கடலை மிட்டாய், தொக்கு உருண்டை, பால்கோவா வாங்காம காச சேத்து "புல் கிரிகெட் கிட்ஸ்" வாங்கனும்-ன்னு

ஆனா, மூணு வருசமநாளும் அந்த ஆபரேஷன் முடிக்க முடியாது, எல்லாத்துக்கும் காரணமா ஒரு மூணு பேரு, அதாவது நம்ம குரூப்ல காச சேக்க சொல்லி குடுத்து வச்ச ரெண்டு கருப்பு ஆடு, அப்புறம் நம்ம கருப்பு வைரம் அதாங்க ரஜினி .....!!! ?? எஸ்....தலைவர் சூப்பர் ஸ்டார் ...!

ஓகே.. ஓகே ... டேய்ய்ய்ய்ய்....நீங்க கிரிக்கெட் மட்ட வாங்காம இருக்க தலைவர் என்னடா பண்ணுனாருன்னு காண்டு ஆகாதிங்க, பொறுமை பொறுமை மக்களே.....ஓவர் டென்சன் உடம்புக்கு ஆகாது.

எப்படின்னா, அப்பபாத்து தான் தலைவரோட நூறாவது படம் ஸ்ரீ ராகவேந்திராவிலிருந்து வரிசையா படிக்காதவன்,நான் அடிமை இல்லை,மிஸ்டர் பாரத்-ன்னு ரிலீஸ் ஆகும், தலைவர் பட டோக்கன் ஷோவுக்கு இல்லாத காசு என்னடா காசுன்னு, நம்ம கருப்பு ஆடுகள் காச சுட்டு டோக்கன் மட்டும் வாங்காம ...."கருநாகத்தை கொஞ்ச முடியுமா ...ரஜினியை மிஞ்ச முடியுமான்னு" போஸ்டர் எல்லாம் அடிச்சு மொதோ நாள் ராத்திரியே கொடி கட்ட ஓடிடுவோம், இப்படி எங்க கூடத்துல நானும் ஒரு கருப்பு ஆடு :-)).

இப்பதான் யார் யாருக்கோ போஸ்டர் அடிக்கிராங்க .. .... போஸ்டரும் சரி, பன்ச் டயலாக்கும் சரி, தலைவர தவிர வேற யாருனாலும் அது காமெடி லிஸ்ட்ல போய்ரும்.

இப்படியே வண்டிய ஓட்டி அப்புறம் விடுதலை-ரிலீஸ்ல மாட்டி ஆப்பு வாங்கி "ஆபரேஷன் அஞ்சாவது சந்து கிரிகெட் கிட்ஸ்"ச ஊத்தி மூடிடுவோம்.

அப்பவும் சலிக்காம நம்ம டீம் கேப்டன் திரும்ப "ஆபரேஷன் மால்புரோ" ஆரபிச்சு தனி தனியா ஆளுக்கு ஒரு கிட் வாங்கினதான் டீம்ல இடம்னு சொல்லி ஒரு "பேட்" வாங்குவான், நம்மலும் வேற வழி இல்லாம கடைசியா "அப்டானமல்"கிட் மட்டும்தான் வாங்குவோங்கறது வேற விஷயம்.

அந்தா இந்தான்னு அடுத்த லெவல் வரும் போது, நம்ம தெருல்ல இருந்து கிரிகெட் கிரவுண்டு வர ஒவ்வொரு தெரு பொண்ணுகளையும் சைட் அடிக்க ஆரபிப்போம் ..அதுலயும் ஒரே பொண்ண எல்லாரும் காதலிப்போம் ....இதனால நமக்குள்ள அப்பப்போ சண்ட வேற வரும்.

இப்படியே நாளொரு மேனியுமா பொழுதொரு வண்ணமுமா, நம்ம கிரிக்கெட் டீம விட வேகமா நம்ம காதல் வளர வளர.....பத்தாவது பரிச்சை வர்ரவரை எந்த ஒரு பொண்ணு கிட்டையும் பேசி இருக்கவே மாட்டோம்.....அதிகபச்சமா நம்ம குரூப்லயே தைரியமான ஒரு ரெண்டு "தல" அந்த பொண்ணு வீட்டுல போய் கொஞ்சம் தண்ணி வாங்கி குடிச்சு இருக்கும், அதுவும் அந்த பொண்ணு கொண்டு வந்து குடுத்து தொலச்சாக்க அப்புறம் அந்த ரெண்டையும் கைல பிடிக்க முடியாது.

இப்படியே ஒரு வழியா பத்தாவத முடிச்சுடுவோம், அப்புறம் பாலிடெக்னிக் பாதி, ஹைஸ்கூல் பாதின்னு பிரிஞ்சாலும், பதினொன்னுல பிரிச்சு போனது பனிரெண்டுல ஊத்தி பாலிடெக்னிக் வர .... நம்ம ஆர்சி வாங்க திரும்ப ஒண்ணா சேந்து நாம டைரக்ட் செகண்ட் இயர் பிஇ அல்லது பிடெக் போவோம்டா மச்சான்ன்னு மனச தேத்திக்குவோம், பத்து கிலோமீட்டர்ல வீடு இருந்தாலும், காலேஜ் பக்கத்துல நண்பனோட ரூம்ல தங்கி அடிப்போம், சாரி படிப்போம்.

ஆனாலும் நம் கிரிகெட் டீம் பிரியாது, ஊரே ஜாதி மத கலவரம்னு இருந்தாலும், நம்ம கிசோக் எங்க.... ஜாகிர்காதர் எங்க.... குமார் எங்கன்னு தேடி போய் டோர்னமென்ட் விளையாட கூட்டிட்டு வருவோம்........மீதி நேரம் எல்லாம் ஒரு பொண்ணு விடாம சைட் அடிப்போம்.இப்படியே விளையாடி சைட் அடிச்சா எங்க தேரும், நம்ம கூட படிச்ச பொண்ணு, நம்ம அரியர் எழுத போகும் போது எக்ஸாமினாரா வந்தாலும்.... ...நீ பழசெல்லாம் மறந்துட்ட தங்கமணி-ன்னு ஓட்டுவோம்..... மீதி நேரம் எப்பவும் "நாய்க்கு வேலையே இல்லாட்டியும் ...நாலு தெருவ சுத்தி வந்து, தெரு முக்குல நாக்க தொங்க போட்டுகிட்டு ஒக்காருற மாதிரி" ஊரசுத்தி வந்தா, பஸ்ஸ்டாண்ட் முக்கு "டீ"கடை தான் நம்ம ஸ்பாட்.

அங்க ஒக்காந்து "அமெரிக்க ஏகாதி பத்தியத்தையும், ரஸ்ய பொருளாதாரத்தை பற்றியும்" அக்கவுண்ட்ல தம் அடிச்சுகிட்டே அலசி ஆராய்வோம். இந்த அறிவு நாம பெத்தவிங்களுக்கு பொறுக்காது, சோத்த போடும்போது திட்டையும் சேத்து போட்டாலும், நம்ம சலிக்காம கைய கழுவும் போது எல்லா திட்டையும் சேத்து கழுவிட்டு திரும்ப ஸ்பாட்க்கு போய்ருவோம்.

இப்படியே முக்கியமா பேசிகிட்டு இருக்கும் ஒரு மாலை பொன்னான வேலை, டேய் மாமா, அங்க குழந்தையை கூட்கிட்டு வர ஆண்டி தெரிஞ்ச நடையா இருக்கே? யாருன்னு பாருன்னு ஒருத்தன் சொல்ல, எல்லாரு முகமும் திரும்பும்......

அட இது நம்ம சைட் அடிச்ச பழைய சிவில் பேபி அவ பேருகூட .... கீதாவோ...சீதாவோ-ன்னு நாம பேர கண்டுபிடிக்கும் போதே, அந்த பொண்ணு நேரா நம்ம கிட்ட வந்து .....

ஹாய் டேய்ஸ் (பாய்ஸ்சோட சுருக்கமாம்).... என்னடா? நீங்க எல்லாம் இன்னுமா இங்கயே இருக்கீங்க உருப்பட்ட மாதிரித்தான்? சரி,சரி இது என் பொண்ணு கவிதா, போகும் போது வரும் போதும் ஏதாவது ஓட்டிராதிங்கடா-ன்னு சொல்லி.... "அங்கிளுக்கு பை பை" சொல்லுடா செல்லம்-ன்னு குழைந்தையை கூட்டிகிட்டு போக......ஒருத்தன் முகத்துலையும் "ஈ" ஆடாது.

இந்த "அவமானம் தாங்காம, ஆறு நாள் "பாண்டிசேரி போய் ரூம் போட்டு" அரியர்ஸ்ச முடிக்க பிளான் பண்ணுவோம்", அந்த இந்தான்னு அரியர்ஸ்ச முடிச்சாசுன்னு வீட்டுக்கு போனா அங்க அப்பா ...."அக்கா யூஜி படிக்கும்போது ஆரபிச்சு, தங்கச்சி பீஜி முடிக்கும் போது " எம் மகன் கோர்ஸ்ச முடிச்சிட்டான்னு சொல்ல.....அம்மா ஆரத்தி எடுப்பாங்க.

மீண்டும் அவமானம் .. ... நம்மள வேணாமுன்னு சொன்ன இந்த ஊரு நமக்கு வேணாம்டா மாப்ளன்னு சொல்லி யோசிக்கும் போது, இதே மாதிரி வீட்டில் அவமான படுத்தப்பட்டு மூணு வருசத்துக்கு முன் வட நாட்டுக்கு ஓடி போன நண்பன் அங்க நல்ல வேலைக்கு போறது நியாபகத்துக்கு வர, ஒருத்தன நம்பி ஒன்பது பேரு டெல்லி, பாம்பே-ன்னு கிளம்பிருவோம்.

அடுத்து வரும் வாழ்க்கை என்னவென்று தெரியாத போதும், எதுவுமே சொந்தம் இல்லாம இருந்தாலும் ... .....நாம் எப்போதும் ஒண்ணா இருப்போம், முன் கதவு , பின் கதவு , சைடு கதவு என்று எல்லா முயற்சிக்கும் பலனாக ஒரு நாள் நமக்கும் ஒரு வேலை கிடைத்துவிடும் , ஒரே வீட்டில் இருந்தாலும் அந்த வேலைய செய்ற எட்டு மணி நேரத்தில் ஒன்பது போன் அடித்து பேசும்வோம்.

எனக்கு இன்னும் கூட நியாபகம் இருக்கு நான் காதலிச்ச பொண்ண கேட்டு, எனக்காக ஒவ் ஒருத்தனும் அந்த பொண்ணோட அப்பா அம்மாகிட்ட பேசுனது.

இப்படியே நாள் ஓட... வேலை வளர, ஒவ் ஒருத்தனா வெளிநாடு கிளம்புவோம், போற ஒவ் ஒருத்தனையும் ஏர்போர்ட் வரை கூட்டிகிட்டு போய் சிரித்த முகக்துடன் கண்ணாடிக்கு பின் அவன் முகம் மறையும் வரை கை ஆட்டிவிட்டு கனத்த மனதுடன் வீட்டுக்குள் வரும் போது வீடே வெறிச்ன்னு ஒரு தனிமை இருக்கும் .

அந்த வாரம் தண்ணி அடிக்கும்போது அவனுக்கும் "க்ளாஸ்" வைப்போம், அதுக்கு முன்னாடியே அவன் யாஹூ வெப்கேம்ல வந்து சேந்துவிடுவான், மீதி வாரத்துக்கு மூணு போன், நாலு மெயில் வரும், இப்படியே வரிசைல நாமளும் ஒரு நாள் கடைசியா வெளிநாடு கிளம்புவோம், அடுத்த வருஷம் எல்லோரும் இதே ஊரில் சந்திப்போம்னு ஒரு சத்தியத்தோட.

அதுக்கப்புறம் போன்கார்டு மட்டும் தான் மெயில் இருக்காது, அதுவும் வர வர வாரத்துக்கு மாததுக்குன்னு படிபடியா குறையும், இதுக்கு நடுவுல நம்ம ஊர்ல சேந்தாப்புல ஒரே ஏரியாவுல நம்ம வீடு வாங்கினாலும், நம்ம எல்லோரும் சேந்து எல்லோரோட வீட்டுக்கு போக நேரம் கிடைக்காது.

இப்போதான் வரிசயா ஒவ் ஒருத்தனுக்கும் கல்யாணமாகும், எப்பவும் ஒண்ணாவே இருந்த நம்ம ஒவ் ஒருத்தன் கல்யாணத்திலும், நம்ம குரூப்ப தவிர மத்த எல்லோரும் இருந்தாலும் நமக்கு நேரம், லீவு கிடைக்காது, அப்புறம் வேலைல பிசி, வாழ்கையில பிசின்னு, ஒருத்தன ஒருத்தன் பாக்குறதும் பேசுறதும், லீப் இயர் மாதிரி நாலு வருசமானாலும் நடக்காது.....

எதுவுமே இல்லாத போது, எப்போதும் கூடவே இருந்த நண்பர்களுக்குள் யாஹூ, ஆபீஸ் போன் வீட்டு போன், மொபைல் போன், இன்டர்நெட் போன் ,தேவையான பணம், வருட விடுமுறைன்னு ... இப்படி எல்லாமே இருக்கும் போது.... ஏன் இந்த இடைவெளி?

திருமணம், வேலை, வாழ்க்கைனு இருத்தா "நட்புடன் இருக்க முடியாது" என்று ஏதாவது தத்துவமும் இருக்கிறதா என்ன? அப்படியே இருத்தாலும் வருடம் ஒரு முறையாவது நம்மால் சந்திக்க முடியாதா என்ன?

இப்படியே எங்கே போகிறது நம் நட்பு??? சண்டையே இல்லாமல் ஏன் இப்படி ஒரு பிரிவு?

எனக்கு நினைவு தெரித்தது முதல் எல்லாமே மாறிவிட்டது, நாம் பிறந்த ஊர் மாறியது, காதலி மனைவியானாள், மனைவி தாய் ஆனாள், நான் தகப்பன் ஆனேன், அலுவலகம் மாறியது, பதவி மாறியது.......எல்லாமே மாறிவிட்டது, ஆனால் இன்றுவரை மாறாதது நம் நட்பு மட்டும்தானே ?

அப்புறம் நமக்குள் ஏன்? எப்படி? இந்த இடைவெளின்னு கேக்குறத விட்டுட்டு.......ஏண்டா வாழ்த்து சொல்லலன்னு கேட்க வந்துடான் வெங்காயம்.......போங்கடா.....

சரி, மாப்ஸ், போனதெல்லாம் போகட்டும்......... வாங்கடா, வந்து வருசத்துல ஒரு அஞ்சு நாலாவது, நம்ம வளர்ந்த இடத்துல பழைய மாதிரி நம்ம நட்போட நமக்காக வாழ்ந்துதான் பார்ப்போம்.

வருஷம் முழுவதும் உழைத்தாலும் மாட்டுக்கு கூட பொங்கல் வைக்கிற ஊருடா நம்ம ஊரு, நாம நம்ம நட்புக்கு கொஞ்சம் நேரம் வைக்க கூடாதா?

மொத்தத்தில் "வெளிநாட்டில் கிடைத்தது வசதியான வாழ்கை என்றாலும்", இதில் இழந்தது, இழந்துகொண்டு இருப்பது சொந்தவாழ்கை ஆகிறது.

Thursday, August 6, 2009

காதலும் கடவுளும்

மதம் மற்றும், மற்ற மத நம்பிக்கைக்கு மதிப்பு கொடுப்பதை பற்றி பார்த்தோம், இனி இந்த பதிவில் தவறாக பயன் படுத்தப்படும் மத மாற்றம் பற்றியும், அதன் விளைவுகள் பற்றியும் சொல்வதை தவிர, எந்த மதத்தையும் இழிவு படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை என்பதை முதலில் தெளிவு படுத்திக்கொள்கிறேன்.

எனக்கு தெரிந்த ஒரு கதையை சொல்ல விரும்புகிறேன், ஒரு ஆண் தன் மதமில்லாத ஒரு வேறு மத பெண்ணை காதலித்து பெற்றோர்களுக்கும், யாருக்கும் தெரியாமல் அரசாங்க சட்டப்படி பதிவு திருமணம் செய்து கொண்டார்கள்.திருமணத்திற்கு பிறகும், நாம் மட்டுமே புத்திசாலி என்ற நினைப்போடு அவரவர் வீட்டில் இருந்து கொண்டார்கள் (சினிமாவில் வரும் எல்லா நல்ல விசையத்தையும் விட்டு விட்டு, இது போல் சிந்தனைகளை மட்டும் எடுத்துக்கொள்வது தானே இன்று நிஜத்தில் நடக்கிறது).

இது நடந்து சில மாதங்கள் சென்ற பின் இரு வீட்டாருக்கும் விஷயம் தெரிய வர, வழக்கம் போல் இரு வீட்டிலும் பல பிரச்னைகள். சரி, நடந்தது நடந்து விட்டது, இனி என்ன செய்யலாம் என்றும் இரு வீட்டாரும் பேச முன் வரும் போது மணமகன் தரப்பு வேண்டுதல் இது.

எங்கள் மதத்தில் எனக்கு இருநூறு பவுன் முறை செய்ய தயாராய் இருப்பதால் தான், இந்த திருமணத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள், அதனால் நீங்கள் அதில் பாதியாவது செய்து விட்டால் மற்றதை பேசி சரி செய்ய முடியும் என்பது கருத்து.

உண்மையில், அந்த பெண்ணை பெற்ற தகப்பனுக்கு அந்த அளவு வசதி இல்லை, அவர்கள் ஒரு நடுத்தர குடும்பம் என்பது அந்த பெண் மற்றும் பெண்ணை மணந்த ஆண் இருவருக்குமே தெரியும்.எது எப்படியோ, தன்னால் செய்ய முடியாத ஒன்றை கேட்டதாலும், தன் மகள் தனக்கு தெரியாமல் வேறு மதத்தில் திருமணம் செய்து கொண்ட கோவத்திலும், தனக்கு அவ்வளவு வசதி இல்லை என்றும் இதை தன்னால் செய்ய முடியாதென்றும் சொல்ல, அங்கு ஆரபித்தது வினை.

தன் மதத்திற்கு அந்த பெண்ணை மாற்றினால் தான் வாழ முடியும் என்றும், அதற்க்கு இந்த பெண்ணின் தாய் தகப்பன் என்ற முறையில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்று எழுதி தரும் படி பெற்ற தந்தையிடம் சொல்லப்பட்டது.

மத மாற்றத்தில் விருப்பம் இல்லாத அந்த தந்தை, அப்படியானால் அதன் பெயர் "விடுதலை பத்திரம்" அதை இரண்டு பக்கமும் செய்ய வேண்டும் என்று சொல்ல,வாக்கு வதம் வளர்ந்தது, இதில் அந்த பெண்ணும் பிடிவாதமாக இருக்க அந்த பெண்ணினின் வாழ்கைக்காக அந்த தகப்பன் அவர்கள் கேட்ட படி எழுதிக்கொடுத்த பின் தான் அவர்களுடன் அதன் பெண்ணால் வாழ்கையை குடும்ப ஆரம்பிக்க முடிந்தது.

இதில் பெண்ணை பெற்ற அந்த தகப்பன் எதையும் எழுதி வாங்க வில்லை, ஒரு கோபத்தில் கேட்டதோடு சரி.

இத்தகைய முட்டாள்தனமான செய்கைகளில் இன்று வரை எனக்கு புரியாதது என்ன என்றல்?

இதில் காதல் எங்கு இருக்கிறது? அல்லது காதலித்த துணையுடன் வாழ, மதம் ஒரு தடையாய் இருப்பது உண்மயான இறை நம்பிக்கையா?

தான் விரும்பி திருமணம் செய்த ஒருவருடன் குடும்பம் நடத்த, உண்மையில் எந்த மதம் அல்லது எந்த கடவுள் தடை சொல்கிறது?வேறு ஒரு மதத்தில் நீ காதலிக்கலாம், பதிவு திருமணம் செய்யலாம் ஆனால், குடும்பத்தில் சேரும் முன் என்னை வணங்க சொல் என்றோ!, அல்லது என்னை தவிர மற்ற யாரையும் வணங்ககூடாது என்றோ!, எந்த மதம் அல்லது எந்த கடவுள் சொல்கிறது? அப்படி இல்லை என்றால் இதில் காதல் எங்கே இருக்கிறது?

சரி, இப்படி வைத்துக்கொள்வோம், மேல் சொன்னபடி பெண்ணின் தகப்பனால் அந்த மணமகன் கேட்ட முறையை செய்ய முடிந்து இருந்தால், அப்போது இந்த மத மாற்றம் தேவை இல்லையா? அப்படி இல்லை என்றால் இதில் இறை நம்பிக்கை எங்கே இருக்கிறது?

இது எல்லாவற்றையும் தாண்டி, ஒரே ஒரு கேள்வி?

காதலின் பெயரால் விரும்பிய ஒருவரை அதுவும் பதிவு திருமணம் செய்த பின், எப்படி காதலித்தமோ அப்டியே ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றால் அது காதலாகுமா? அல்லது தன் வாழ்கை துணையுடன் (பதிவு) திருமணத்திற்கு பின் குடும்பம் நடத்துவதற்காக ஒரு மதமோ, மதமாற்றமோ தேவைப்பட்டால், அது உண்மையான பக்தியாகுமா?

ஆனாலும் இத்தகைய நல்ல!!! உணர்வுக்கு நாம் வைத்துக்கொள்ளும் பெயர் தான் என் " காதல்" என் " கடவுள்" என்"மதம்".

இதுவா காதல் அல்லது இதுவா மதம், இறை நம்பிக்கை?

நான் போன பதிவில் சொன்ன படி, நம் நம்பிக்கைக்காக அல்லது சொந்த சுக, துக்கங்களுக்காக மற்றவர் நம்பிக்கையை உடைப்பதுதானே இது?

ஒருவர் விருப்பபட்டு மதம் மாறுவதில் என்ன பின் விளைவுகள் இருக்கப்போகிறது, அல்லது தனிப்பட்ட ஒருவர் மதம் மாறுவதில் மற்ற யாருடைய நம்பிக்கை கெட போகிறது என்று, எதிர் வாதம் செய்ய முடியும்? பதில் சொல்கிறேன்.

மேல்சொன்ன மாதிரியான ஒரு நிகழ்ச்சிக்கு பின், அந்த (ஆணோ அல்லது பெண்ணோ) பிறந்த குடும்பமும் அவர்கள் உடன் பிறந்தவர்களும், இன்றைய நம் சமுதாயத்தில் எவ்வாறெல்லாம் பெருமை படுத்த படுவார்கள் (கேலிக் கூத்தாக) என்பதை இங்கு நினைத்து பார்க்க வேண்டும், இது நம் எல்லோருக்கும் தெரியாத ஒரு விசயமல்ல.

இதை மட்டுமில்லாமல் இதில் தனிப்பட்ட ஒருவரை தவிர மற்ற யாருடைய நம்பிக்கை உடைகிறது என்றால், மதம் என்ன அரசியல் கட்சி அல்லது கொள்கையா? நினைத்து நினைத்து மாற்றிக்கொள்ள?

ஒரு குழந்தை பிறந்தது முதல் ஒவ்வொரு சடங்கு சம்பிரதாயங்களையும் பார்த்து பார்த்து பண்ணிய ஒரு ஒட்டு மொத்த குடும்பத்தில் உள்ள மற்ற எல்லாருடைய நம்பிக்கையும் இங்கு ஒருவரின் சுய நலத்துக்காக உடைகப்படுகிரதல்லவா?

மற்றும் இதனால் அந்த குடும்பத்தில் உள்ள மற்ற உடன் பிறந்தவர்களின் எதிர்கால வாழ்கை பாதிக்கப்படுமா இல்லையா? அந்த அளவு ஒரு முற்போக்கான சமுதாயத்திலா வசிக்கிறோம் நாம்!? இதை யாரவது இங்கு மறுக்கமுடியுமா?

சரி, இதன் பிறகு, இப்படி மதம் மாறிய ஒரு பெண்ணோ ஆணோ, தன் குடும்பம், சுற்றம், சொந்தத்தில் ஒரு மாற்று மத கலாச்சாரத்துடன், எப்படி எந்த ஒரு சுக அல்லது துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியும்? அப்படி செய்தால் அந்த நிகழ்ச்சியை விட இவர்கள் அங்கு பெரிய காட்சிப்பொருளாகி விடுவார்கள் இல்லையா?

இதனால் அவர்கள் அந்த நிகழ்ச்சிக்கு வாரமல் இருந்து விட்டால், தன் குடும்ப உறுப்பினர் ஒருவர் இல்லாத அந்த நிகழ்ச்சியில் மற்றவர்கள் எப்படி சந்தோசமாக இருக்க முடியும்?

இதனால் அந்த தாய் தந்தை குடும்பத்தினர் எப்படி கலங்காமல் இருக்க முடியும்?

இப்படி செய் என்று எந்த கடவுள் எந்த வேதத்தில் சொல்கிறது?

அல்லது உன் சொந்த நம்பிக்கை மற்றும் சுக, துக்கங்களுக்காக, நீ இத்தனை நாளும் நம்பி வந்த நம்பிக்கைக்கு புறம்பான வார்த்தையையோ செயலையோ, உன் தாய் தந்தை குடும்பத்தினர் முன் அல்லது அவர்கள் கவனிக்கும்படி செய் என்று எந்த கடவுள் எங்கு சொல்லி இருக்கிறார்?

இதைத்தான் நான் "இது கடவுளின் பெயரால் மற்றவர்களை ஏமற்றுவதாக நினைத்து, கடவுளிடம் நாம் ஏமாந்து போகும் ஒரு செயல்" என்று சொன்னேன்.

சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், நாம் ஒரு மதத்தின் நம்பிக்கைக்கு புறம்பான பாவம் அனைத்தையும் செய்து விட்டு, இன்னொரு மதத்திற்கு ஓடி விட்டால்? அது எந்த மதமாக இருந்தாலும் சரி, அந்த மதத்தின் கர்மவினையோ அல்லது இஸ்முர்-ரோ அல்லது சாத்தானின் நரகமோ நம்மை விட்டு விடுமா?

சிந்தித்து பார்த்து, இனி வரும் தலைமுறையாவது தங்கள் சுயநலத்துக்காக கடவுளையும், காதலையும் கலக்காமல் இருக்க வேண்டுகிறேன்.இங்கு மீண்டும் சத்தம் போட்டு சொல்கிறேன் "மதம் என்பது அதன் புனித அறநெறி வழிகளை கடைப்பிடித்து நடப்பதர்க்காக மட்டுமே தவிர மற்றவர் முன் நடிப்பதர்க்காக அல்ல".

எனவே மத மாற்றம் என்னும் பாவம் தவிர்த்து, எல்லா மத நம்பிக்கைக்கும் சம மதிப்பு கொடுத்து, நம்மை மட்டுமில்லாமல் நம் வருங்கால சந்ததியையும் பாவத்தில் இருந்து காப்பாற்றி எல்லாம் வல்ல இறை அருள் பெறுவோம்.

இல்லை நான் கடவுள் நம்பிக்கை இல்லாத நாத்திகவாதி என்றால், இங்கு கடவுளின் பெயரை சொல்லி நடிக்க வேண்டி இருக்காது, ஆனால் மனிதனை மதிக்க தெரிந்து இருக்க வேண்டும்.
அதாவது நம்மை சுற்றி இருக்கும் மனித உறவுகளை நம்சுயநலத்துக்காக காயப்படுத்த கூடாது, மற்றும் நம் நம்பிக்கையை மற்றவர்கள் மதிப்பது போல், மற்றவர்கள் நம்பிக்கைக்கு நாம் மதிப்பு கொடுக்க தெரிந்து இருக்க வேண்டும்.

உங்கள் வருகைக்கும், நேரத்திற்கும் நன்றி.
 

Blogger Widgets