Showing posts with label தென்கொரியா. Show all posts
Showing posts with label தென்கொரியா. Show all posts

Monday, December 13, 2010

தென்கொரியா வரும்முன் கவனிக்கவேண்டியது!

வணக்கம் நண்பர்களே,

தென்கொரியாவில் குளிர் காலம் ஆரமித்துவிட்டது, கடந்த வாரம் முதல் நல்ல பனிபொழிவு துவங்கிவிட்டது.

தென்கொரியாவின் பருவநிலைகளை பற்றி சில பதிவுகளில் நான் குறிப்பிட்டு இருந்தாலும், இந்த பதிவு முழுதாக தென்கொரியாவின் தட்பவெட்ப நிலைகளை மட்டும் வைத்து எழுதுவதால், இனி இங்கு வரவிருக்கும் நம் மக்களுக்கு பயன்படும் என்று நினைக்கிறேன்.

தென்கொரியாவை பொறுத்தவரை, மொழி, உணவு பிரச்சனைக்கு அடுத்த படியாக வருவது இங்குள்ள தட்பவெட்ப நிலைதான்.

ஒரு வருடத்தில் நான்கு வகையான சீதோசன நிலைகள் வருகின்றது, அதை இங்கு பார்ப்போம்.

ஏப்ரல் முதல் ஜூன் வரை (Spring Session), கடும் குளிர் காலம் முடிந்து வருவதால் இது மழையோடு துவங்கும், இதனால் குச்சியாக கிடந்த அத்தனை செடிகளும் மரங்களும் பசுமையாகி விடும்.

இதை மழைகாலம் என்பதை விட பூக்களின் காலம் என்றுதான் சொல்ல வேண்டும், எங்கு பார்த்தாலும் வண்ணமயமாக பூக்கள்தான் தெரியும்.



நகரமே அத்தனை அழகாக இருக்கும், சாதாரன உடைகளுடன் ஒரு சுவட்டர் அல்லது லேசான குளிர்தாங்கும் ஜாக்கெட் போதுமானது.

வெட்பநிலை 10 தல் 15 டிகிரி சென்டிகிரேட் போல இருக்கும்.

செர்ரி பிளாசம் வருவதும் இந்த காலத்தில்தான், உலகெங்கும் இருந்து மக்கள் இதைகாண கொரியா, ஜப்பான் வருவது வழக்கம்.

நான் செர்ரி பிளாசம் ஜப்பானில் இருந்த போதுதான் முதன் முதலில் பார்த்தேன். ஆனால் இங்கு வந்தவுடன்தான் என் வீட்டு வாசலிலேயே பார்த்தேன். தென்கொரியாவை பொறுத்தவரை எல்லா இடங்களிலும் பாரம்பரிய பூக்கள் பூக்கும் மரங்கள் இருகின்றன.

இந்த காலத்தில் சீனாவில் இருந்து வரும் தூசி படலம் (Yellow sand dust) அதிகமாக காணப்படும். இது தோலுக்கும் குறிப்பாக கண்களுக்கு பாதிப்புகளை கொடுக்கும், அதனால் எப்போதும் வெளியே சென்று வந்தவுடன், முதலில் கை, கால் முகம் கண்கள் அனைத்தும் சுத்தமாக கழுவவேண்டும். சுத்தமாக கழுவும் முன் குறிப்பாக குழந்தைகளை கொஞ்சவோ முத்தமிடவோ கூடாது.

ஜூன் முதல் ஆகஸ்ட் வரை (Summer), வெட்பநிலை மாறி கோடை காலம் வரும், மொத்தமாக பார்க்கும் போது வெட்ப நிலை 25 முதல் 28.3 டிகிரி சென்டிகிரேட்தான் என்றாலும், காற்றில் ஈர தன்மை வெகுவாக குறைத்திருக்கும்.

சாதாரண உடையில் இருக்கலாம், ஆனால் என்னதான் சாதாரண உடையில் இருந்தாலும் வேர்வையும் பிசு பிசுப்பு தன்மையும் அதிகமாக இருக்கும், வீட்டில் குளிசாதனம் இல்லாமல் இருக்க முடியாது.

தென்கொரியாவை பொறுத்த வரை வீட்டு பொருட்கள் வாங்குவது முதல் குடும்ப வரவு செலவு அனைத்தும் பெண்கள்தான் என்பதால், வெளியில் எங்கும் அதிகமாக பெண்களை மட்டுமே பார்க்க முடியும்.

இந்த காலத்தில் வெயில் கூட கூட, பெண்கள் ஆடை குறையும், குளியலரையில் இருந்து அப்படியே வந்தது போல அரையும் குறையுமாக வண்ணமயமாக சுற்றிக்கொண்டு இருப்பார்கள். அவ்வளவு சின்ன டிடவுசரில் அவர்களை பார்த்தல் ஆண்களுக்கே வெக்கம் வந்துவிடும்.



ஆனா மக்களே "கபர்தார்" (ஜாக்கரதை)!, நம்ம ஊர் மாதிரி நினைத்துக்கொண்டு தவறாக ஏதாவது செய்தால் போலிஸ் வந்து நம் டிடவுசரை கழட்டிவிடும்.

செப்டம்பர் முதல் நவம்பர் வரை (Autumn), அப்படி இப்படின்னு கண்ணை கழுவி கோடை காலத்தை முடித்தால் வருவது அற்புதமான இலையுதிர் காலம், என்னை பொறுத்தவரை, தென்கொரியாவிற்கு வர இதுதான் சரியான சமயம்.

வெட்பநிலை 10 டிகிரிக்கு கீழே இருந்தாலும், மரங்கள் எல்லாம் இலைகள் பழுத்து மஞ்சள் மற்றும் காப்பி நிறத்தில் நகரமே அவ்வளவு அழகாக இருக்கும்.





ஆசியாவில் இதை போல ஜப்பான் மற்றும் சீனாவில் ஒரு சில பகுதிகளில் மட்டுமே காணமுடியும் என்று நினைக்கிறேன், நகரை சுற்றி பார்க்க இது மிக சிறந்த நேரம்.

இதே சமயத்தில் இங்கு திருவிழாக்கள் வருவதால் விடுமுறை, கேளிக்கை, கொண்டாட்டம் என்று எங்கும் மகிழ்ச்சி மயமாக இருக்கும்.

இலையுதிர் காலம் முடிய போகும் போது ஓரிரு வாரம் காற்று அடிக்கும் பாருங்க, சும்மா நம்ம வீட்டையே நாலு தெரு தள்ளி கொண்டு போய் வைத்துவிடும் அப்படி பகலும் இரவும் பேய் காற்று அடிக்கும்.

சுட்டி பெண்கள் வேண்டும் என்றே (குட்டை)பாவாடையோடு வருவார்கள்.

டிசம்பர் முதல் மார்ச் வரை (Winter), அடித்த காற்றில் எல்லா இலைகளும் உதிர்ந்து நகரமே மொட்டை அடித்தது போல இருக்கும் போது குளிர்காலம் துவங்கும்.

பொதுவாக டிசம்பர் முதல் வாரத்தில் -01 முதல் -03 டிகிரி சென்டிகிரேட் என்று துவங்கும் பனிபொழிவின் அளவு கூடிக்கொண்டே போக போக வெட்ப நிலை எதிர்பார்க்காத அளவு குறைந்து கொண்டே போகும்.

அதிக பட்சமாக -10 முதல் -15 டிகிரி சென்டிகிரேட்வரை போகக்கூடும், முப்பது வருடங்களுக்கு பிறகு கடந்த வருடம் ஜனவரியில் -20+ டிகிரி சென்டிகிரேட் சென்றது.

குளிர் காலத்தின் துவக்கம் டிசம்பர் முதல் ஜனவரி பாதிவரை லேசான பனிபொழிவாக இருப்பதாலும் கிறிஸ்மஸ், புதுவருடம் என்று விடுமுறைகள் வருவதாலும், நகரமே வண்ண மயமாக அதுவும் இரவு நேரம் மிக ரம்யமாக இருக்கும்.

வானில் பனிமழை தூவ, தெருவெங்கும் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு "லாஸ்ட் கிறிஸ்மஸ், ஜிங்கில் பெல்ஸ்" போன்ற பாடல்கள் ஒலிக்க, எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் தங்கள் துணையுடன் கொரியா டக்கீலா "சோஜு" சூட்டில் கட்டியணைத்துக்கொண்டு நடக்க, நாடே திருவிழா கோலத்தில் மிதக்கும்.

வார இறுதி இரவு வாழ்கைக்கு மற்றும் தேனிலவு சுற்றுலாவுக்கு இது அற்புதமான காலம்.

அதன் பின், குளிர் கூட கூட, அதிக அளவு குளிர்தாங்கும் ஆடைகள் இல்லாமல் வெளியே போக முடியாது, வீட்டில் ஹீட்டர் மூலம் வெட்ப நிலையை +20+ டிகிரிக்கு மாற்றாமல் இருக்க முடியாது.

குழந்தைகளை இந்த காலத்தில் அதிக பாதுகாப்புடன் வைத்திருக்க வேண்டும், அடிக்கடி அவர்கள் உடல் வெட்ப நிலையை கண்காணிக்க வேண்டும்.ஜனவரி கடைசி முதல் எப்படா ஏப்ரல் வரும் என்று ஏங்குமளவு குளிர் நம்மை படுத்தி எடுத்து விடும்.



இங்கு கட்டிட அமைப்புகள் இங்குள்ள சீதோசன நிலைக்கு சாதகமாக அமைக்கபட்டுள்ளன, வீட்டின் தரைகள் மரத்தால் செய்து அதன் அடியில் ஹீட்டர் இணைப்பு கொடுக்க பட்டு இருக்கும், நாம் நம் வீட்டின் மின்விசிறியின் அளவை கூட்டுவது போல, ஹீட்டர் மூலம் வீட்டின் தட்பவெட்ப நிலையை மாற்றி அமைத்துக்கொள்ள முடியும்.

குடிநீர் முதல் அனைத்து பயன்பாட்டு நீரும் சூடாக அல்லது குளிர்ந்த நிலையில் என்று நமக்கு வேண்டியவாறு மாற்றி அமைத்துக்கொள்ள முடியும், இவை அனைத்தும் நம் வீட்டின் கேஸ் இணைப்பின் மூலம் செயல்படும். அடுப்பு மற்றும் மின்விளக்கு போன்றவை மட்டுமே மின்சாரத்தை பயன்படுத்தும்.

இங்கு நான் குளிர் காலத்தில் இருந்து பலமுறை எல்லா இடங்களையும் பார்த்து விட்டதால், இந்த முறை புது வருடத்தை வரவேற்க விடுமுறைக்காக நான் இந்தியா செல்கிறேன்.

ஆகவே,நடந்தது நடந்தவையாக இருக்க, இனி நடப்பது நல்லதாக இருக்க, உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தின் மீதும் என்றும் தன் புன்னகையை செலுத்த எல்லாம் வல்ல இறைவனை வேண்டி உங்கள் அனைவருக்கும் என் இனிய கிறிஸ்மஸ், புதுவருட மற்றும் பொங்கல் வாழ்த்துக்களை சொல்லிக் கொள்கிறேன்.

நன்றி!.

Thursday, November 25, 2010

தென்கொரியா போர் பதட்டம்!

எப்போதும் போலத்தான் அன்று மதியமும் இலையுதிர் கால குளிரில் நடுங்காமல் இருக்க அலுவலக ஹீட்டர் எங்களை சூடேற்றிக்கொண்டு இருக்க, மதிய உணவாக உள்ளே சென்ற கோழியும் சிலபல இலைதழைகளும் எங்கள் கண்களை சொருக வைத்துக்கொண்டு இருந்தாலும், நாங்கள் அலுவலக கணினியை வெறித்துக்கொண்டு இருந்தோம்.

திடீரென்று ஒரு பலத்த சத்தம் கட்டடங்கள் ஆடுவதை போல உணர்வு, எங்கும் ஒரே தீ மற்றும் புகை, மக்கள் பதட்டமாக வட கொரியா குண்டு போடுகிறது ஓடி பதுங்குங்கள் என்று கத்தியபடி பதுங்கு குழியை தேடி இங்கும் அங்கும் ஓடும் ஒரு சில நிமிடங்களில் இன்னும் பல குண்டுகள் வந்து விழுகின்றன.

இந்நிலையில் உள்ளே நுழைந்த தென் கொரிய ராணுவ ஹெலிகாப்டர்கள் பதிலுக்கு தாக்க எங்கும் ஒரே குண்டு மழை...!

எனக்கும் வேறு வழி எதுவும் தெரியவில்லை, உடனே குடையை விரித்துக்கொண்டு எடுத்தேன் பாருங்க ஓட்டம்...!

என்ன புரியலையா?

அதான் ஒரே குண்டு "மழைன்னு" சொன்னோம்ல :-)...!

சரி, சரி முறைக்க வேண்டாம், வெட்டி பில்டப்பை முடிந்து கொண்டு விசையத்துக்கு வருவோம்.


கடந்த சில நாட்களாகவே இது போல் ஏதாவது நடக்கக்கூடும் என்று எதிர் பார்த்த தென்கொரிய அரசு மிக சரியாக பாதுகாப்பு முறைகளை தயார் நிலையில் வைத்திருந்தது, போர் கால அவசர நடவடிக்கைகள், பொது மக்கள் தற்பாதுகாப்பு முறைகள் போன்றவை எஸ்.எம்.எஸ் மூலம் அவப்போது வந்த வண்ணம் இருந்தது.

உலக நாடுகள் குறிப்பாக ஜப்பான், ரஷ்யா மற்றும் அமெரிக்கா மிக உன்னிப்பாக இந்த விசையத்தை நேரடியாக கண்காணிப்பதால் அப்படி எதுவும் நடக்காது என்று இருந்த மதிய வேலை, வடகொரியா தன் சேட்டையை துணிந்து காட்டிவிட்டது.

தென்கொரியாவின் இயாங்பியாங் தீவில் ஐம்பது முறை F-16 பீரங்கி குண்டுகளை வீசி திடீர் தக்குதல் நடத்த, அந்த தீவில் இருந்த தென்கொரியாவின் ராணுவ தரப்பில் இருந்து எம்பது ரவுண்டு துப்பாக்கி சூடு தற்காப்புக்காக நடத்த பட்டது.

அதன் பின் இரு நாடுகளும் முதலில் தாக்குதலை தாங்கள் துவக்கவில்லை என்று அறிவித்து இருக்கிறது.



வடகொரியா தென்கொரியா எல்லையை நிலத்திலும் நீரிலும் (DMZ) பிரித்தது முதல் இருநாடுகளுக்கும் பிரச்னை இருந்து கொண்டுதான் இருக்கிறது, இந்த நிலையில் இந்த தக்குதல் போர் வரும் சூழ்நிலையை கொடுத்திருப்பதால், சீனா, ரஷ்யா, ஜப்பான் நாடுகள் இந்த பதட்டத்தைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன, அமெரிக்கா தென்கொரியாவுக்கு ஆதரவாகப் போராடும் என்று அறிவித்து இருக்கிறது.

தென்கொரியா அரசு தரப்பில் இருந்து வடகொரியா தன் செயலை உடனடியாக நிறுத்திக் கொள்ளா விட்டால் மிக மோசமான ஒரு சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டி வரும் என்று எச்சரித்து இருக்கிறது.

எனக்கு புரிந்தவரை, உண்மையில் வடகொரியாவின் இந்த தாக்குதலில் அடிப்படை காரணம் என்பது, இந்த தக்குதல் நடந்த தீவில் இருக்கும் தென்கொரிய ராணுவமும் அமெரிக்கா ராணுவமும் கூட்டுப் பயிற்சி மேற்கொள்ளும் திட்டதின் படி அமெரிக்கா விமானம்தாங்கி போர்க்கப்பல் இங்கு வந்துள்ளது, இதற்கான எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் வடகொரியா செயல் பட்டு இருக்கிறது, காரணம் வடகொரியா மீது அமெரிக்கா பல பொருளாதாரத் தடைகளை விதித்தது இருக்கிறது.



மேலும் கடந்த மார்ச் மாதம் தென்கொரியாவின் போர்க் கப்பல் ஒன்று, வடகொரிய கடல் எல்லைக்கருகில் மர்மமான முறையில் மூழ்கடிக்கப்பட்டு அந்த கப்பலில் இருந்த 49 வீரர்களும் பலியானார்கள். இது வடகொரியாவின் செயல் என்றும் நீர்மூழ்கி குண்டு மூலம் தன் கப்பலை வடகொரியா மூழ்கடித்ததாக தென்கொரிய விசாரணைக் குழு அறிக்கை கடந்த மே மாதம் வடகொரியாவை குற்றம் சாட்டியது போன்றவைதான் காரணம்.

தக்குதல் நடந்த தீவில் வசிக்கும் மக்களோடு தென்கொரியவின் ராணுவ முகாம் இருக்கிறது, குண்டு வீச்சுக்குப் பின் பொது மக்கள் உடனடியாக ராணுவ பாதுகாப்பு கட்டுபாட்டுக்குள் கொண்டு வரப்பட்டனர், காயம் பட்ட மக்கள் சிகிச்சைக்காக அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர் மற்றும் தீவில் இருபவர்களுக்கு தேவையான பொருட்கள் தீவுக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது.

தென் கொரியாவின் இரண்டு வீரர்கள் இந்த தாக்குதலில் தங்கள் தாய் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்து வீர மரணம் அடைந்து இருக்கிறார்கள், அவர்களுக்கு நாடெங்கும் அஞ்சலி செலுத்த படுகிறது.

தாக்குதலில் பதிப்படைந்த பகுதியில் ராணுவம், தீயணைப்பு மற்றும் மருத்துவ குழுக்கள் போர்கால சீரமைப்பு நடவடிக்கைகளில் இறங்கி இருக்கின்றன.

தென்கொரிய மக்கள் நாம் இதற்கு சரியான பதிலடி கொடுத்து வடகொரியாவுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் என்று அங்கங்கே வடகொரியாவுக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள், நேற்று இரவுக்கு மேல் சம்பந்த பட்ட துறைகளை தவிர மற்ற இடங்களில் இயல்பு வாழ்கை பாதிக்காமல் தொடர்கிறது.

























இது போராக மாறும் பட்சத்தில் உடனடியாக பாதிக்க படும் ஜப்பான், ரஷ்யா மற்றும் சீனா நாடுகள் இப்படி துரதிர்ஷ்டவசமான சூழ்நிலையை தவிர்த்து இருநாடுகளும் பேச்சுவார்த்தையின் மூலம் பிரச்னையைத் தீர்த்துக் கொள்ளவேண்டும் என கூறியுள்ளன.

இரு நாடுகளின் போக்கையும் உன்னிப்பாகக் கவனித்து வரும் அரசியல் நிபுணர்கள், வடகொரியாவின் அணுகுண்டு தயாரிப்பில் தீவிரம் மற்றும் அரசியல் தலைமை மாற்ற அறிவிப்பு போன்றவற்றால் இப்பிரச்னை இன்னும் தீவிரமடையக் கூடும் என்று கருதுகின்றனர்.





நடப்பதெல்லாம் நன்மைக்கே மற்றும் எல்லா புகழும் இறைவனுக்கே என்ற எண்ணத்தோடு நானும் கவலைகளை விட்டு விட்டு இதை பற்றி பதிவு எழுத வந்து விட்டேன், இதில் என் அனுபவத்தையும் கொஞ்சம் கேளுங்க.

போர் தக்குதல் விசையம் பரவியதும், நம்ம போன் ரொம்ப பிசி, இந்தியா, சிங்கபூர், மலேசியா என்று கோபால் பல்பொடி விளப்பரம் மாதிரி எல்லா பக்கமும் இருந்து அழைப்புகள், அம்மா, அப்பா, நண்பர்கள் என்றும், கிரி போன்று பதிவுலக நண்பர்களும் மாறிமாறி நலம் விசாரிக்க உண்மையில் மனம் லேசாகி விட்டது.

இவ்வளவு பேரை சொல்லிவிட்டு முக்கியமான நம்ம ஆளை சொல்லாமல் விடலாமா?

விசையம் தெரிந்து அவசராக அழைத்த தங்கமணி, என்னா மச்சி ஆரமிச்சிடானுகளா? இவிங்க எப்பவுமே இப்படித்தான், அட விடுங்க பாஸ், இதுக்கெலாம் பயந்தா தொழில் பண்ண முடியுமா?

சரி, சரி, நோட்டு பேனா எல்லாம் ரெடியா இருக்கு, சீக்கிரம் சொல்லுங்க, எங்க எல்லாம் இன்சூரன்ஸ் இருக்கு, எங்கே எல்லாம் இன்வெர்ஸ்மென்ட் இருக்கு, யார் யார் உங்களுக்கு எவ்வளவு தரனும், நீங்க யாருக்காவது தரணுமான்னு, நிறுத்தாம பேசுது என் செல்லம்?

எவ்வளவு கேள்வி? என்ன ஒரு அக்கறைன்னு, நான் அப்டியே ஷாக் ஆகி சொன்னேன்?முடிவே ஆகிடுச்சா? நான் வேணும்னா ஒரு மாப்ளையும் பார்த்து சொல்லவான்னு கேட்டா? அதுக்கும் அசரலையே!

ஐய்யய்யோ...திரும்பவும் மொதல்ல இருந்தாதாதாதா...மீ பாவம்ன்னு சொல்லுது அம்மிணி, ஐய்யோ ஐயோ...இன்னும் சின்ன புள்ளையாவே இருக்கு.

நன்றி.

Friday, April 30, 2010

பள்ளி பள்ளி!

பொதுவாகவே பொது போக்குவரத்தை விட தனியார் டாக்சி போன்றவற்றின் கட்டணம் அதிகமாகவே இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே, அதிலும் வெளிநாட்டில் எவ்வளவு வித்தியாசம் இருக்கும் என்பதை முன்பு ஒரு "இடுகையில்" சொல்லி இருக்கிறேன்.

இதன் காரணமாகவே வெளிநாட்டில் "மெட்ரோ" எனப்படும் உள்ளூர் ரயில்களின் பயன்பாடு பொது மக்களின் அன்றாட வாழ்கையில் ஒரு அங்கமாகிறது, தென்கொரியாவும் அப்படித்தான்.

இந்தியாவில் "மெட்ரோ" என்றும், சிங்கையில் "எஸ்.எம்.ஆர்.டி" என்றும் ஜப்பானில் "ஜே.ஆர்.டி" அழைக்கும் உள்ளூர் ரயில்கள்களுக்கு தென்கொரியாவில் "கோ-ரயில்" "மெட்ரோ" என்று பெயரிருந்தாலும் அவர்கள் இணையதளம் முதல் அனைவராலும் செல்லமாக "சப்வே" என்றே அழைக்கப்படுகிறது.



இதன் காரணம் கொரியாவில் ரயில் பாதைகள் முழுவதும் பூமிக்கு அடியில் மூன்று முதல் நான்கு அடுக்கு வரை அமைக்கப்பட்டு இருப்பதால்தான் என்று நினைக்கிறேன். ஒரு சில இடங்களில் வெளியில் வந்தாலும் (படத்தில் உள்ளது போல) அடுத்த இரு நிமிடத்துக்குள் மீண்டும் பூமிக்கு அடியில் சென்று விடும், காரணம் இங்கு மேடு பள்ளமான மலைப்பகுதிதான் அதிகம்.

முன்பு கொரியன் மொழியில் மட்டுமே எழுதி இருக்கும் அறிவிப்பு பலகைகள் மற்றும் ரயில் பெயர் பலகைகள், இப்போது சில வருடங்களாக ஆங்கிலத்திலும் இருக்கும்படி மாற்றப்பட்டு இருக்கிறது.

இந்த முன்னுரையுடன் இனி இந்த இடுகைக்கான விசையத்தை பார்ப்போம்.

தென்கொரியாவில் வந்து இறங்கியவுடன் உங்கள் காதில் படும் முதல் வார்த்தை "பள்ளி பள்ளி" யாகத்தான் இருக்கும், "ஸ்கூல்" இல்லைங்க, "பள்ளி பள்ளி" என்றால் கொரியன் மொழியில் "வேகமாக வேகமாக" (Hurry-up Hurry-up) என்று அர்த்தம்.

எங்கு பார்த்தாலும் மக்களும் ஓடியவண்ணமே இருப்பார்கள், வந்த புதிதில் எனக்கு அனைவரும் ஏதோ பரபரப்பாக இருப்பதுபோல் வித்தியாசமாக பட்டாலும், இங்கு அனைவருமே இப்படிதான் என்று விரைவில் புரிந்துவிட்டது.

இரயில் நிலையங்களிலும் இப்படிதான், அதிலும் அலுவலக துவக்க மற்றும் முடியும் நேரம், வார இறுதி இரவு நேரம் என்றால் கேட்கவே வேண்டாம், எந்த கப்பலை பிடிக்க இப்படி ஓடுகிறார்கள் என்று நினைக்க தோன்றும்.



இப்படி யோசித்த படி இரயில் நிலையத்தை அடைந்தால் (ஒவ்வொரு பத்து நிமிட நடை தூரத்திலும் சாலை ஓரத்தில் அடுத்தடுத்த நிலையங்கள் இருக்கும்)

அங்கு ஏதோ வித்தியாசமாக படும்!, அது என்னவென்றால் இறங்கி செல்ல படிக்கட்டுகள் மட்டும்தான் இருக்கும் (இது முதல் தளம்), சாலையின் மறு புறத்தில் "லிப்ட்" இருக்கும் அதை பற்றி கீழே சொல்கிறேன்.

சரி, ஒரு இருபது படிகள்தானே என்று இறங்கி திரும்பினால் அங்கிருந்து ஒரு இருபது படிகள் இருக்கும், மீண்டும்அதில் இறங்கினால் ஒரு இரண்டு நிமிட நடை பாதை இருக்கும் அதில் நடந்தால் அங்கே மீண்டும் ஒரு இருபது படிகள் இருக்கும்.

இந்த இடத்தில நகரும் படிக்கட்டுகள் இருக்கும், ஆனால் அது ஒரு நாளில் குறிப்பிட்ட ஒரு இருபது நிமிடம் வேலை செய்தால் அதிசியம்தான், எப்போதும் அனைத்து வைக்க பட்டிருக்கும்.

சரி, வேதாளத்தை தூக்கியாச்சு சுமந்து தொலைப்போம் என்று அதில் இறங்கினால் இங்கே டிக்கெட் எடுக்க மற்றும் டிக்கெட்டை கொடுத்து உள்ளே நுழைய தடுப்புகள் இருக்கும் (இது இரண்டாவது தளம்).

இதை தாண்டி உள்ளே போனால் அங்கே மீண்டும் ஒரு இருபது படிகள் இருக்கும் அதில் இறங்கினால்தான் தெய்வத்தை காண்பது போல ரயில் தண்டவாளங்களை பூமிக்கு அடியில் மூன்றாவது தளத்தில்தான் கண்ணில் காணமுடியும்.



என்ன கொடுமை இது என்றால்!, இளைய மக்கள் நடக்க வேண்டும் என்றும் ஒவ்வொருவருக்கும் நல்ல உடற்பயிற்சியாக இருக்க வேண்டும் என்று இவ்வாறு அமைக்கப்பட்டு இருக்கிறதாம்.

ஆமாம் சரிதானே, நடந்தால் நல்லதுதானே! என்று அவசர பட்டு நினைக்க வேண்டாம், மறு முனையில் இப்போது இறங்கி வந்ததை போலவே ஏறி செல்ல வேண்டும் என்பதை நினைத்து பாருங்கள்?

அதிலும் நான் சொன்னது ஒரு பத்து நிமிட நடையில் போக கூடிய தூரத்தில், ஒரே ஏரியாவில் இருக்கும் இரு சிறு நிலையங்கள்.

பெரிய நிலையங்களில் படிகளும் நடை நிமிடமும் கூடும், அதை விட தூரமாக போகும் போது ஒரு ட்ராக்கிலிருந்து மறு ட்ராக்குக்கு மாறும் போதும் இதே நிலைதான், சுமார் ஒரு முப்பது கிலோமீட்டர் பயணத்தில் மூன்று முறை இது போல் இறங்கி ஏறி "ட்ராக்" மாறவேண்டும்.

எனக்கு வந்த புதிதில் ஒரு முறை ரயிலில் செல்வதே பழனி மலை ஏறி திருப்பதி மலையில் இறங்குவதை போல "கண்ணை கட்டியது".

சாப்பிட இந்திய உணவகம் போனால் சாப்பிட்டு விட்டு ஒரு பார்சல் வாங்கிவர வேண்டும், வீடு வரும் முன் சாப்பிட்டது ஜீரணமாகி விடும், இதுவே விசா, மருத்துவம் என்று ஒரே நாளில் இரண்டு வேலைக்காக சில சமயம் போக நேர்ந்தால் நினைத்து பாருங்கள்?

இத்தனை கலோபரதிலும் உங்கள் நடை சற்று மெதுவானால் "பள்ளி பள்ளி" என்று பின்னால் இருந்து குரல் கேட்கும் போது, இதிலும் தினம் ஓடுகிறார்களே என்று வியக்க வைக்கும்.

எனக்கு இப்படி குரல் கேட்கும் போதெல்லாம் "படியேறி படியேறியே பாதி வாழ்கை பாழாய் போவதைத்தான்" சுருக்கி "பள்ளி பள்ளி" என்று வைத்தார்களோ என்ற நினைப்புதான் வரும்.

ஜப்பான், சிங்கை போன்ற நாடுகளில் இருந்து பழகியவர்கள் இங்கே வந்தால் சீக்கிரம் உடல் எடை பாதியாக குறைந்து விடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

சரி, சாலையின் மறு புறம்தான் லிப்ட் இருக்கிறதே அதை பயன் படுத்தி பார்ப்போம் என்றால், அதில் சில விதிமுறைகள் இருக்கிறது, மேலும் இன்னொரு விசையம் எனக்கு இன்னும் புரியவில்லை.

என் குழப்பம் என்னவென்றால், சாலை ஓரமாக இருக்கும் "லிப்ட்" நேராக மூன்றாவது தளரயில் ட்ராக்கை சென்று அடையும் படி அமைக்க பட்டு இருக்கிறது.

நடுவில் நம் பயணஅட்டையில் பணத்தை "டாப் அப்" செய்யவோ அல்லது டிக்கெட் எடுக்கவோ அல்லது டிக்கெட்டை கவுண்டரில் கொடுக்க வேண்டும் என்றால் இரண்டாவது தளத்தில்தான் இறங்க வேண்டும், அப்படி செய்தால் மீண்டும் மூன்றாவது தளத்துக்கு போக படிகளைதான் பயன் படுத்த வேண்டும்.



படிகளின் ஓரத்தில் சக்கர நாற்காலியில் வருபவர்களை சுமந்து செல்லும்படி வசதிகளும் அமைக்கபட்டு இருக்கிறது.ஆனாலும் சாலையில் இருந்து நேராக ட்ராக்கை சென்று அடைவோ அல்லது ட்ராக்கில் இருந்து நேராக சாலைக்கு வரவோ எந்த ஒரு டிக்கெட் பரிசோதிக்கும் முறையும் இல்லாமல், ஏன் இருக்கிறது என்று புரியவில்லை.

இந்த லிப்ட் வசதியை முதியவர்கள், கர்பிணி அல்லது கை-குழந்தையுடன் இருக்கும் பெற்றோர்கள், முடமானவர்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று விதிமுறைகள் இருக்கிறது.

இதை அந்தந்த நிலையத்தில் இருக்கும் கண்காணிப்பு அறையில் இருந்து கேமிரா மூலம் கண்காணிக்கிறார்கள், இளையர்களும் இந்த வசதியை பயன்படுத்துவது இல்லை.

மொத்தத்தில் என்னதான் உடற்பயிற்சியை காரணம் காட்டினாலும், மற்ற தொழில் நுட்பத்தில் எல்லாம் அசுர வேகத்தில் முன்னோடியாகிக்கொண்டு வரும் தென்கொரியாவில் "மெட்ரோ" ரயில் பயணம் என்பது மற்ற நாடுகளை காட்டிலும் கொஞ்சம் கடினமாகவே தெரிகிறது.

மீண்டும் சந்திப்போம், என் பக்கத்தில் உங்கள் நேரத்திற்கு நன்றி!.

Tuesday, February 2, 2010

கொரியாவில் அட்டகாசமான புதிய பாலம்!

தென்கொரியாவின் விமான நிலையத்தை பற்றி முன்பு "உலகின் சிறந்த விமான நிலையம்" இடுகையில் சொல்லி இருந்தேன்.

இனி இந்த இடுகையில் வேறு சில நல்ல பயனுள்ள தகவல்களை பார்ப்போம்.

இங்கே கொடுக்க பட்டுள்ள படங்களை சொடுக்கி முழு அழகை பார்க்கவும்.

 தென்கொரியாவின் பழைய" கிம்போ விமான நிலையம் "இப்போது உள்நாட்டு மற்றும் அருகில் உள்ள தீவுகளுக்கு செல்ல பயன்படும் நிலையமாக செயல்படுகிறது, இது தவிர" சொங்நாம் விமான நிலையம் " ராணுவ, அரசியல் மற்றும் தேச தலைவர்கள் பயன் படுத்தும் "டிப்லமேட்டிக்" விமான நிலையமாக செயல்படுகிறது.

தற்போது உள்ள "இன்ஷான் புதிய பன்னாட்டு விமானநிலையம்" இன்ஷான் நகரத்துக்கு அருகில் உள்ள ஒரு தீவில் அமைக்க பட்டு இருக்கிறது.

குடிஉரிமை சோதனைகளை முடித்து விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தவுடன் குளிருடன் சேர்த்து ஆச்சரியமும் நம்மை ஆட்டி எடுத்து விடும். அது ஒரு தனி தீவு என்பதே தெரியாத அளவு அத்தனை வசதிகளும் மிக எளிதாக கொடுக்கபட்டு இருக்கும்.


பொது போக்குவரத்து (நாம் மெட்ரோ என்று சொல்லும்) ரயில் வசதி இங்கு" சப்வே "என்று அழைக்கப்படுகிறது, அரசு பேருந்து, லிமோசின் பேருந்து, பொது டாக்ஸி மற்றும் லிமோசின் டாக்ஸி என்று எதற்கும் தனி தனியாக தேட தேவை இல்லாதவாறு அனைத்து வசதிகளும் விமான நிலையத்தின் அனைத்து வெளிவாயில் முன்பும் நாம் நிற்கும் இடம் தேடி வருமாறு சாலைகள் வடிவமைக்க பட்டுள்ளது.

இன்ஷான் விமானநிலையத்தில் இருந்து நகரத்துக்குள் வருவது ஒரு அழகிய அனுபவம், முதலில் விமான நிலைய தீவில் இருந்து நகரத்தை இணைக்கும் இருபது நிமிட கடல் வழி பாலம், அதன் பின் நகருக்குள் நுழைந்து ஒவ்வொன்றாக கடந்து இன்ஷான் அல்லது சியோல் முக்கிய பகுதியை அடையும் போது கிட்டதட்ட ஒரு மணி நேரம் நாற்பது நிமிட அரசு பேருந்து அல்லது நாற்பது நிமிட லிமோசின் அல்லது டாக்ஸி பயணமாகி விடும்.

பொது போக்குவரத்தோடு ஒப்பிடும் போது டாக்ஸி கட்டணம் "மலேசியா, சிங்கை" போல இல்லாமல் சற்று அளவுக்கு அதிகமாகவே (ஜப்பானை போல) வருகிறது. விமான நிலையத்தில் இருந்து இன்ஷான் அல்லது சியோல் முக்கிய பகுதியை அடைய அரசு பொது போக்குவரத்தில் கட்டணம் 3500 கொரியன் வோன் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 140 ரூபாய் அல்லது அரசு லிமோசின் பேருந்தில் 8000 கொரியன் வோன் (320 ரூபாய்) தான் வரும், ஆனால் அதுவே டாக்ஸி என்றால் 40000 முதல் 100000 கொரியன் வோன் (1600 முதல் 4000 ரூபாய் ) வரை வந்து விடும்.


இதில் இன்னொரு விசையம் பயண நேரம், ஒரு மணி நேரம் நாற்பது நிமிடம் நகரை சுற்றுவது என்பது சுற்றுலா பயணிகளுக்கு பொருந்தினாலும், வேலை மற்றும் தொழில் விசையமாக அடிக்கடி வருபவர்களுக்கு, இது இரண்டாவது மூன்றாவது முறையாக வரும் போது சலிப்பை தந்து விடும் என்பது உண்மை மற்றும் நேரமும் விரையமாகும்.

இதை எல்லாம் கணக்கில் கொண்ட தென்கொரியா, நகரில் இருந்து விமான நிலையத்தை இணைக்கும் முழு கடல் வழி பாலத்தை கட்டி முடித்து கடந்த அக்டோபரில் திறந்தது. நடை முறைக்கு வந்த ஒரு சில நாட்களிலேயே இதன் வழியாக பயணிக்கும் அனுபவம் எனக்கு கடந்தமுறை சிங்கை வரும் போது கிடைத்தது.

இன்ஷான் கடல் வழி மேம்பாலம் ஆறு நெடுஞ்சாலை வாகன பகுதிகள் (Six Lane Motorway) கொண்டது, இது 21.38 கிமி (21,380 மீட்டர் அல்லது 70078.7 அடி) நீளம் கொண்டது.

"சொங்தோ" நகரத்தில் இருந்து தென் கொரியாவின் இன்ஷான் உலகவிமான நிலையத்தை இணைக்கிறது.

இதுவே தென் கொரியாவின் ஆக பெரிய பாலம் என்பதோடு, உலகின் ஐந்தாவது மிக பெரிய இரும்புதூண் துணையுடன் (Cable-Stayed Bridge) கட்டப்பட்டுள்ள பாலமாகிறது. 33.4 அகலம் (110 அடி) உள்ள இந்த பாலத்தை 230.5 மீட்டர் (756 அடி) உயரம் கொண்ட இரும்பு தூண்கள் தாங்குகிறது. இதில் மொத்தம் ஐந்து தூண்கள் (Span) ஆக அதிகமாக 800 மீட்டர் (2,600 அடி) இடைவெளியில் உள்ளது.

இது இன்ஷான் விமான நிலையத்தில் இருந்து நகரை அடைய நாற்பது நிமிடமாக இருந்த (டாக்ஸியில்) பயண நேரத்தை பதினைந்து நிமிடமாக குறைத்து விட்டது.

கடந்த ஐந்து வருடமாக 2005 தொடங்கி 2009 வரை நடந்த இதன் கட்டுமான பணி 2.5 ட்ரில்லியன் கொரியன் வோன், அதாவது இந்திய மதிப்பில் 100 பில்லியன் ரூபாய் செலவில் முடிவடைந்து உள்ளது.

 தென்கொரியா மற்றும் இங்கிலாந்து வடிவமைப்பாளர்கள் இணைந்து வடிவமைத்த இந்த பாலம், நொடிக்கு 72 மீட்டர் காற்றின் வேகத்தையும், ரிக்டர் அளவில்" 7 ரிக்டர் "நில நடுக்கத்தையும் தாங்கும் சக்தி கொண்டதாக வடிவமைக்க பட்டு உள்ளது, மேலும் இதன் முதல் முறை பயன்பாடே அடுத்த நூறு ஆண்டுகளுக்கு வரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

இந்த பாலம் கட்டுமான பணி நடக்கும் போதே உலகின் மிக சிறந்த பத்து கட்டுமான பணிகளில் ஒன்றாய் 2005 டிசம்பரில் தேர்வு செய்ய பட்டு, 2005 - ம் ஆண்டுக்கான ஆசியாவின் தலை சிறந்த போக்கு வரத்து வடிவமைப்பு விருதை 2006 மார்ச் மாதம் பெற்றது.

முழுவதும் கடல் மீது வடிவமைக்க பட்டு உள்ள இந்த பாலம் அழகிய மனம் குளிரும் இயற்கை காட்சிகளை ரசிக்கும் விதம் இருப்பதோடு, இதில் இரவு பயணம் என்பது வார்த்தையில் விவரிக்க முடியாத ஒரு கண்கவர் ஒளி வண்ணத்தை தருகிறது.

 புகை பட கலைஞர்கள் மற்றும் சுற்றுலா விரும்பிகள் முழு பாலத்தின் அழகை தென்கொரியாவின்" யோங்ஜோங் ஹனுள்","முய்-தோ(தீவு)", "வோல்மீதோ" வழி சாலைகள் மற்றும் "புதிய கிழக்கு துறைமுக" பகுதிகளில் இருந்து ரசிக்க முடியும்.

மொத்தத்தில் இந்த பாலம் தென் கொரியாவின் ஒரு அருமையான "அடையாள சின்னமாக" வரும் காலத்தில் கம்பீரமாக நிற்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

 தற்போது தென்கொரியாவும், இந்தியாவும் தொழில்நுட்ப ரீதியாக ஒரு நல்ல உறவில் இருப்பது மட்டுமே பலரும் அறிவார், ஆனால் இவ்விரு நாடுகளுக்கும் அரச காலத்தில் இருந்து ஒரு நல்ல தொடர்பு இருப்பது பலருக்கும் தெரியாது.

கொரியாவில் இந்திய தூதராக இருந்த அதிகாரி எழுதியுள்ள "இந்தியன் குயின்" என்ற புத்தகத்தில் இதை பற்றி தெளிவான விபரங்கள் கொடுக்க பட்டுள்ளன.

வரலாற்றை பொறுத்தவரை 11 ம் நூற்றாண்டைச் சேர்ந்த கொரிய மொழியில் எழுதப்பட்ட "சம்கக் யுசா 'என்ற நூலில் இந்த செய்தி விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

அதன்படி, இந்திய இளவரசி (இங்கு அவர் பெயர் ஹியோ வாங் யோக்) தன் கனவில் அடிக்கடி ஒரு அழகான இளைஞரைக் கண்டார். அவரைக் கண்டுபிடிப்பதற்காக தன் பெற்றோர்களின் அனுமதியுடன் கப்பலேறி தென்கொரியா வந்து சேர்ந்தார். அப்படி வரும்போது, தன்னுடன் மீன்கள் படம் பொறித்த கல் ஒன்றையும் கொண்டு வந்தார்.

இப்படி இந்திய அரசபரம்பரையில் பிறந்த ஹியோ தென்கொரியாவுக்கு வந்தபோது, இங்கு அரசாண்ட கயா பேரரசின் மன்னன் சுரோவைக் கண்டார். அவர்தான் தான் கனவில் கண்ட இளைஞர் என்று உணர்ந்த ஹியோ, சுரோ மன்னரை மணந்து கொண்டார். இவர்களுக்குப் பிறந்த வாரிசுகள் மூலம்தான், கொரியாவில் கிம்ஹே கிம்ஸ் பேரரசு அமைந்தது.

கடந்த 2004 ல் கயா அரசர்களின் கல்லறைகளிலிருந்து எடுக்கப்பட்ட மரபணுக்களும், இந்தியாவில் உள்ள குடிகளின் மரபணுக்களும் ஒத்திருந்தன. இதிலிருந்து கொரிய அரச பரம்பரைக்கும், இந்திய அரச பரம்பரைக்கும் தொடர்பு இருந்தது தெரியவந்தது.

மேலும் ஹியோ கொண்டு வந்த அந்த மீன்கள்படம் பொறித்த கல்லையும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.


இந்த அரச பரம்பரையில் வந்த வாரிசுதான் தற்போதைய தென்கொரிய அதிபர் லீ யுங் மியுங் பக்கின் மனைவி, கிம் யூன் யோக். சமீபத்தில் நடந்த இந்திய குடியரசு தினத்துக்கு இவர்களை
இந்தியா சிறப்பு விருந்தினர்களாக அழைத்து இருந்தது.

அப்போது தென் கொரிய அதிபர் மாளிகை வட்டாரத் தகவல்களின் அடிப்படையில் "தி கொரியா டைம்ஸ் 'வெளியிட்டுள்ள செய்தியில், தற்போதைய அதிபர் மனைவி கிம்மின் முன்னோர் இந்தியாவின்" அயோத்தி அரச பரம்பரையை "சேர்ந்தவர்கள் என்று கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தது.

இனி வரும் காலத்திலும் இந்தியாவும் தென்கொரியாவும் நல்ல நட்பு முறையில் இருக்கும் என்பதையே இது குறிக்கிறது.

நன்றி!.

Tuesday, December 22, 2009

குழந்தைகள் பராமரிப்பில் கொரியா!

தென்கொரியாவை பற்றி சில பதிவுகளில் பார்த்திருந்தாலும், குழந்தைகள் பராமரிப்பில் இவர்களின் கவனம் வியக்கதக்கது என்று சொன்னால் அது மிகையாகாது.

வளர்ந்து வரும் நாகரீகத்தில் குழந்தை பிறப்பை குறைத்துக்கொள்ளும் நாடுகளுக்கு மத்தியில்,தென்கொரியாவில் அனைவரும் குழந்தைகளை விரும்புகிறார்கள், சராசரியாக மூன்று குழந்தைகளாவது ஒரு குடும்பத்தில் காண முடியும்.

அதுவும் இவர்கள் அதிகம் விரும்புவது பெண் குழந்தைகளை என்பது வரவேற்க கூடியது,அதே போல் இங்கு அதிகம் இரட்டை குழந்தைகளை காண முடியும், அதற்கான மருத்துவ வசதிகள் இங்கு இருக்கின்றன என்று கேள்விப்பட்டாலும், அதன் முழு விபரங்கள் எனக்கு இன்னும் கிடைக்கவில்லை.



சாதாரண தெருக்களில் இருந்து அனைத்து இடங்களிலும் இங்கு அழகிய பூங்காக்களை கண் கவரும் ஒளி விளக்குகளுடன் குழந்தைகளை கவரும் அழகிய நீர் வளையங்களுடன் காண முடியும்.

மாலை நேரம் வந்து விட்டால், திறந்து விட்ட பட்டாம் பூச்சிகள் போல் எல்லா இடமும் இங்கு குழந்தைகள் கூட்டம்தான், அதுவும் பருவ காலம் என்றால் வார இறுதியில் பாட்டு கச்சேரி எல்லாம் நடக்கும்.

அதுமட்டும் இல்லாமல், இவர்கள் உணவகம் முதல் மருத்துவமனை வரை எல்லா இடங்களிலும் குழந்தைகள் விளையாட ஒரு தனி பகுதியை அமைத்து உள்ளார்கள்.
செல்லும் எல்லா இடங்களிலும் குழந்தைகளுக்கு பாதிப்பில்லாத வண்ண வண்ண வடிவங்களில் மிட்டாய்களும் பலூன்களும் வைத்து இருப்பதோடு, அங்கு வரும் குழந்தைகளுக்கு கொடுப்பதற்காகவே சிலர் குழந்தைகளுக்கு பிடித்த உடையில் பணியில் இருக்கிறார்கள்.

குழந்தைகள் மருத்துவமனை, பல் பொருள் அங்காடி போன்ற இடங்களில் குழந்தைகளின் வயதிற்கு தகுந்தாற்போல் பயன்படும் வண்ண பென்சில்கள், புத்தகங்கள், படிக்க கூடிய போஸ்டர்கள் போன்றவற்றை இலவசமாக கொடுத்து குழந்தைகளை கல்விகற்க ஊக்க படுத்துகிறார்கள்.



சாதாரணமாகவே இவர்கள் கனிவாக பழக கூடிய குணம் உடையவர்கள். இங்கு ஜாதி, இன குறிப்பாக நிற வெறி பிரச்சனைகள் கிடையாது, சொல்லப்போனால் அது என்ன வென்று கூட இவர்களுக்கு தெரியாது.

நீங்கள் எந்த நாடு இந்துவா, கிறித்துவரா அல்லது இஸ்லாமியரா என்று கேட்டு உங்கள் பழக்க வழக்கங்களை ஆர்வமுடன் கேட்டு தெரிந்து கொள்வார்கள், அது மட்டும் தான் இவர்களுக்கு தெரியும்.

குறிப்பாக நீங்கள் வெளிநாடு என்றால், எங்கு சென்றாலும் உங்களை கனிவாக கவனிப்பதில் இவர்களுக்கு நிகர் இவர்களே என்று சொல்லலாம்.இங்கு குழந்தைகள் பிறப்பில் இருந்து மருத்துவம் வரை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று.

மேல் சொன்ன படி சாதாரணமாகவே கனிவாக பழக கூடிய இவர்கள் குழந்தைகள் மருத்துவமனை என்றால் கேட்கவா வேண்டும், அழகிய வண்ண சீருடை, பார்க்கும் இடங்கள் எல்லாம் குழந்தைகளுக்கு பிடித்த ஓவியம், பொம்மைகள், விளையாட தனிபகுதி, மருத்துவமனை வாசம் இல்லாத ஒரு மெல்லிய நறுமணம் என்று மனதை மயக்கும் ஒரு இடமாகவே இருக்கிறது.




அது மட்டுமில்லாமல் வரும் போகும் அனைத்து ஊழியர்களும் எல்லா குழந்தைகளுடனும் பாகு பாடு இல்லாமல் விளையாடி விட்டு சிரித்த முகமாக செல்வது என்று அவர்களும், இதை ஒரு வேலையாக மட்டும் நினைக்காமல் அனுபவித்து செய்வது நான் வேறு எங்கும் காணாத ஒன்று.

இவர்கள் போடும் ஊசிக்கு கூட குழந்தைகள் "ஆ" என்ற ஒற்றை வார்த்தையுடன் நிருத்திக்கொள்ளுமே தவிர, அழுது நான் பார்த்தது இல்லை. அதை விட இவர்கள் தரும் மருந்து, குழந்தைகளுக்கு பிடித்த நறுமணத்தில், நல்ல சுவையுடன் சொல்லவே மனம் இனிக்கிறது.

என் மகள் சொட்டாம் போட்டு குடித்து விட்டு, மீண்டும் மீண்டும் கேட்டு அடம் பிடிப்பார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள், காய்ச்சல், வயிற்று பிரச்சனை என்று எதற்கு சென்றாலும், இவர்களால் இதே போல் மருந்தை எப்படி கொடுக்க முடிகிறது என்று நான் பல முறை வியந்ததுண்டு.

இங்கு மருத்துவ காப்பீடு அவசியம் என்பதால், அனைத்து நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களுக்கு குறைந்த கால மற்றும் நீண்ட கால மருத்துவ காப்பீடு வழங்கி விடுகின்றன. இதனால் இவர்கள் வாங்கும் கட்டணமும் மிக குறைவு.

சாதாரண காய்ச்சல் அல்லது வயிற்று பிரச்சனை போல் ஏதாவது என்றால் மருத்துவமும் மருந்தும் சேர்த்து நம் பணத்தில் தோராயமாக ஒரு இரநூறு ரூபாய் வருகிறது.

இவர்கள் பிரசவ முறை அழகான ஒன்று, முதல் முறை மருத்துவமனை சென்றதும் அடிப்படை கர்ப்பகால சோதனை செய்வார்கள், கர்ப்பம் உறுதியான உடன் ஒரு தனி அட்டவணை புத்தகம், கர்ப்பகால அறிவுரைகளுடன் ஒரு மென்பொருள் உள்ள டி.வி.டி என்று கொடுத்து, அதில் நீங்கள் உள்ளே நுழைய உங்களுக்கு ஒரு பயண சொல்லும் கடவு சொல்லும் கொடுத்து விடுகிறார்கள்.



அன்று முதல் பிரசவம் வரை உங்களுக்கான மருத்துவர், அவரின் உதவியாளர் மற்றும் உங்கள் அட்டவணை உதவியாளர் என்று நீங்கள் தேர்வு செய்யும் அனைவரும் தான் உங்களுக்கான மருத்துவ குழு.

இனி நீங்கள் செய்ய வேண்டியது, உங்கள் கணினியில் அந்த மென் பொருளை நிறுவ வேண்டியது தான், இதன் மூலம் உங்கள் சோதனை அறிக்கை, உங்கள் அடுத்த பரிசோதனை நேரம், உங்கள் மருத்துவரின் பணி நேரம் என்று அனைத்தையும் உங்கள் வீட்டில் இருந்தே பார்க்க முடியும், அது போக உங்கள் சந்தேகங்களை மின் அஞ்சல் மூலம் உங்கள் மருத்துவருக்கு அனுப்ப முடியும்.

இது போக, மொத்த கர்ப்பகாலத்தை நாற்பது வாரமாக பிரித்து, ஒவ்வொரு வாரமும் குழந்தையின் வளர்ச்சி, தாயின் மனநிலை, உடல் நிலை மாற்றம் மற்றும் செய்யவேண்டியது செய்யக்கூடாதது, மேலும் தந்தை செய்யவேண்டியது செய்யக்கூடாதது, என அத்தனையும் இதில் உங்களுக்கு கிடைக்கும்.

இதன் உச்ச கட்டமாக உங்கள் ஒவ்வொரு சோதனையின் போதும் எடுக்க பட்ட ஸ்கேனின் வீடியோவை இதில் எப்போது வேண்டுமானாலும் பார்க்க முடியும்.

முதல் மூன்று மாதங்கள் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை என்றும், பிறகு மாதம் ஒரு முறை என்றும் பரிசோதிப்பார்கள், இந்த பரிசோதனை நேரம் முன் கூட்டியே உங்கள் தொலைபேசி மற்றும் மின் அஞ்சலில் வந்து விடும்.

ஒவ்வொரு பரிசோதனையின் போதும் எடுக்க பட்ட ஸ்கேன் புகை படத்தை உங்கள் அட்டவணை புத்தகத்தில் மாதம் வாரியாக ஒட்டி கொடுத்து விடுவார்கள். மேலும் தேவையான நேரத்தில் அதன் வீ டியோவை நீங்கள் இணையத்தில் உங்கள் பயண மற்றும் கடவு சொல்லை பயன் படுத்தி சென்று பார்க்கலாம்.

இதற்காக இவர்கள் 2D முதல் 4D வரை ஸ்கேன் (Ultrasound Scan) செய்யும் வசதிகளை பயன் படுத்துகிறார்கள்.

எந்த ஒரு விசையத்தையும் இறுதியில் பணத்தை வைத்து கணக்கிட பழகிய நம் குணம், இதை மட்டும் விட்டு விடுமா என்ன? இந்த விசையத்தையும் அப்படியே நினைத்து, கட்டணம் வைத்து தீட்டி விடுவார்கள் என்று நினைத்து விசாரித்தேன்.

இதில் மருத்துவ காப்பீடு இருக்கும் ஒருவருக்கு அடிப்படை மருத்துவ மற்றும் சோதனை கட்டணம் தவிர மேல் சொன்ன அனைத்து வசதிகளும் குழந்தை பெற்று கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் அரசாங்கம் அல்லது தனியார் என்றால் அந்த மருத்துவமனை இலவசமாக தருகிறது.

ஆக, மாதாமாதம் பரிசோதனை, தடுப்பு ஊசி மற்றும் இரும்பு சத்து மாத்திரையுடன் சேர்த்து கட்டணமாக தோராயமாக ஆயிரத்து இரநூறு ரூபாய் வருகிறது.

அதன் பின் இரண்டுநாள் தனியறையுடன் பிரசவ மற்றும் அடிப்படை தடுப்பு ஊசிகளுடன் சேர்த்து சாதாரண பிரசவம் என்றால் தோராயமாக பதினாறு ஆயிரம் வருகிறது.

அறுவை சிகிச்சை பிரசவம் என்றால் ஒவ்வொரு தனிப்பட்ட தாயின் உடல் நிலையை பொருத்து இது மாறு பட்டாலும், சாதாரணமாக ஏழு நாள் தனியறையுடன் சேர்த்து தோராயமாக நாற்பது ஆயிரமும் வாங்குகிறார்கள்.



இங்கு இருக்கும் காலத்தில் இவர்களின் அன்பான கவனிப்பு மிக நல்ல முறையில் இருக்கும் என்றும் அனுபவ பட்டவர்கள் சொன்னார்கள், குறிப்பாக வெளிநாட்டு மக்களை இன்னும் அதிகமாக நல்ல முறையில் கவனித்து பராமரிப்பார்களாம்.

இது போக சில சுவாரஸ்சியமான தகவல்கள் பாருங்கள்.

குழந்தை பிறப்புக்கு இங்கு Rice Cake என்று சொல்லப்படும் கொழுக்கட்டை (அதாங்க நம்ம விநாயகருக்கு வைய்ப்போமே கொழுக்கட்டை அதேதான்) கொடுப்பது தான் வழக்கம்.
ஒரு முறை என் நண்பரின் நண்பர் ஒருவர், இது எல்லாம் முடிந்து குழந்தை பிறந்தவுடன் அங்கு வேலை செய்த பணியாளர்களுக்கு கொழுக்கட்டையுடன் அன்பளிப்பாக பணம் கொடுக்க முயன்றாராம்.

அவர்கள் ஆச்சிரியமாக, நல்ல முறையில் இறைவன் உங்களுக்கு கொடுத்த அழகான குழந்தைக்கு நாங்கள்தான் அன்பளிப்பாக பணம் கொடுக்க வேண்டும், ஆகவே இந்த இனிப்பு மட்டும் போதும் என்று எடுத்து கொண்டு பணத்தை வாங்க மறுத்து விட்டார்களாம்.

இங்குள்ள தம்பதிகள் குழந்தை உருவான முதல் மாதத்தில் இருந்து ஒவ்வொரு மாதமும் அழகிய புகை படத்தை எடுத்து கொள்கிறார்கள், அதனுடன் மருத்துவமனையில் தரும் ஸ்கேன் படங்களையும் இணைத்து அழகிய குறிப்புகளை எழுதிக்கொள்கிறார்கள்.

இது இப்படியே குழந்தை பிறக்கும் வரை தொடர்ந்து பின் குழந்தையுடன் சேர்த்து பல புகை படங்கள் எடுத்து கொள்கிறார்கள்.

இங்குள்ள புகைப்பட நிலையங்களில் இது ஒரு மொத்த ஒப்பந்த முறையில் (Package Offer) சாதாரணாமாக கிடைக்கிறது, ஒரு சில ஒப்பந்த முறை குழந்தை பிறந்து அடுத்த பிறந்தநாள் வரும் வரை தொடர்கிறது.

அதன் பின் வரும் ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் எடுக்கும் படங்களை, இதில் இணைப்பது என்று இதை அனுபவித்து ஆசை ஆசையாக தொடர்கிறார்கள்.

அதே போல் இவர்கள் வயது கணக்கும் நம்மை போல இல்லமால் மாறுபடுகிறது. அதாவது கருவில் ஒரு உயிர் உருவானது முதல் அதன் வயது தொடங்குகிறது என்றும், ஒரு குழந்தை பிறக்கும் போது அதன் வயது பத்து மாதம் அல்லது ஒரு வயது என்று கணக்கில் எடுத்து கொள்கிறார்கள்.

இனி வரும் குழந்தைகள், தலைமுறை ஆங்கிலத்தில் சிறந்து விளங்க வேண்டும் என்று பெற்றோர்களும் சரி அரசாங்கமும் அதிக அக்கறை எடுத்து கொள்கிறார்கள், ஆங்கில ஆசிரியர் வேலைக்கு தான் இன்று தென் கொரியாவில் ஆக அதிக ஊதியம் என்பது குறிப்பிட தக்கது.



இங்கு தொலைகாட்சியில் குழந்தைகளை அதிகம் கவருவது பெண் குழந்தைகளுக்கு
"போறோரோ" எனப்படும் "பெண்குயின் குழுவும்" ஆண் குழந்தைகளுக்கு "தாமஸ்" எனப்படும் "புகைவண்டி குழுவும்தான்".

இதன் மூலமும் குழந்தைகளை கவரும் மற்ற நிகழ்ச்சிகளின் மூலமும் அடிப்படை முறை கல்வி அனைத்தையும் கற்று கொடுத்து விடுகிறார்கள், மூன்று வயதிற்குள் ஒரு குழந்தை அடுத்து வரும் அடிப்படை கல்வி நிலையங்களில் படிக்க போகும் அத்தனை பாடங்கள் மற்றும் பாடல்களை இதன் மூலம் கற்று கொள்கிறது.



இந்த இடுகையில் மகிழ்ச்சி தரும் நல்ல விசையங்கள் மட்டும் இருந்தால் போதுமா, தொல்லை தரும் விசையம் ஏதாவது வேண்டாம்? அதான் என் சொந்த அனுபவத்தை கீழே சொல்கிறேன் கேளுங்கள்.

இப்படி இருக்கும் எல்லா ரைம்ஸ்சையும் பாடி பழகிட்டு, என் மகள் தினம் படுக்கையில் "டாட் பேபி சிலீப்பி சிங் எ சாங்" என்கிறார்கள்?

நானும் சரி என்று "டிவிங்கில் டிவிங்கில் லிட்டில் ஸ்டார்" என்றால்...
ஹோ... அந்தே ("அந்தே" என்றால் கொரியன் மொழியில் "நோ" வேண்டாம் என்று அர்த்தம்) சிங் போறோரோ சாங் "ரோ ரோ ரோத போட்" என்கிறார்கள்?

"டிவிங்கில் டிவிங்கில் லிட்டில் ஸ்டார்" என்று ஒரு பாட்டு இருப்பதே நான் டிவியில் "தங்க பதக்கம்" படம் பார்த்துத்தான் பழகிக்கொண்டேன் என்று புரியவைப்பதா?

அல்லது நாமும் மகள் தூங்கும் நேரத்தில் "போறோரோ, தாமஸ்" எல்லாம் பார்த்து பாடி பழகி கொள்வதா? என்ற குழப்பத்தில் உள்ளேன்!?.

உங்களுக்கு ஏதாவது அனுபவம் இருந்தா பின்னூட்டத்துல சொல்லிட்டு போங்க மக்கா :-).

நன்றி!.

Friday, November 20, 2009

சைபர் கொரியா

டிஜிட்டல் கொரியாவை பற்றி முன்பு ஒரு பதிவில் பார்த்தோம், இனி இந்த பதிவில் சைபர் கொரியாவை பற்றி கொஞ்சம் பார்ப்போம்.

தென்கொரியா ஏற்கனவே இன்டெர்நெட் பயன்பாட்டில் முன்னணியில் இருக்கும் நாடு என்று அறியப்பட்டிருக்கிறது, இப்போது இங்கு 90 சதவீதம் பேர் பிராட்பேண்டு என்று சொல்லப்படும் அகண்ட அலைவரிசை இன்டெர் நெட் வசதியை பெற்றுள்ளனர்.

கொரியாவில் பிராட்பேண்டு வசதி நீக்கமற நிறைந்திருந்தாலும் இதன் கட்டணம் என்னவோ உலகிலேயே மிகவும் குறைவாக இருக்கிறது. உலகம் இன்று மைஸ்பேஸ் பற்றி பேசிக் கொண்டிருக்கிறது. ஆனால் இதற்கு முன்பாகவே கொரியாவில் இவர்களுக்கென்று தனியே ஒரு மைஸ்பேஸ் "சைவேர்ல்டு" எனும் பெயரில் பிரபலமாக இருக்கிறது. இந்த தளத்தில் 43 சதவீதம் பேர் உறுப்பினர்களாக இருக்கின்றனர். அந்த அளவு தென்கொரியா வலைப்பின்னல் தேசமாகவும் இருக்கிறது.

கொரியாவுக்கென்று தனியே ஒரு ஆன்லைன் விளையாட்டு உலகம் இருக்கிறது. "லீனியேஜ்" என்று பெயர். இதன் உறுப்பினர்களோ பிரபலமாக இருக்கும் "வேர்ல்டு ஆப் வார்கிராப்ட்" விளையாட்டு உலகின் உறுப்பினர்களை விட இருமடங்கு அதிகமாகும்.

சரி, இனி சைபர் கொரியாவை பற்றிய விபரங்களை பார்ப்போம், இங்கு படத்தில் உள்ளது ஏதோ "காதலர் தேசம்" போன்ற தமிழ் சினிமாக்களில் வரும் செட்டிங் அல்ல, இது ஒரு நகராச்சிக்கு உட்பட்ட இலவச இணைய பயன்பாட்டு மையம் ஆகும்.



நகரத்தில் உள்ள ஒவ்வொரு நகராட்சிக்கும் உட்பட்டு இங்கு இலவச இணையதள மையங்கள் முக்கிய தெருக்களில் இயங்குகிறது.

இலவசம் என்றதும் "ஏனோ தானோ" வாக இருக்கும் என்று நினைத்து உள்ளே போன எனக்கு அடக்க முடியாத ஆச்சரியம்.

அத்தனையும் அதி நவீன கணினிகள் மேலும் அதில் கேமரா, மைக் போன்ற அனைத்து வசதிகளும் உள்ளது, இணையதள வேகமோ வார்த்தைகளில் விவரிக்க முடியாத அளவு உள்ளது, ஒரு முழு திரைபடத்தை எந்த தங்கு தடையும் இல்லாமல் பார்க்க முடிந்தது அதுவும் நம்ம கலாச்சாரத்தின் படி "பாட்டும் பைட்டும் பார்வோர்ட்" பண்ணி பார்க்க முடிகிறது.

இங்கு யார் வேண்டுமானாலும் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அங்குள்ள பதிவேட்டில் பெயரை குறித்து விட்டு பயன் படுத்திக்கொள்ளலாம், மேலும் குறைகளை குறித்து வைக்க அங்கு தனியாக ஒரு பதிவேடு உள்ளது.

நாம் உள்ளே சென்று பெயரை குறித்ததும் அங்கு பணியில் உள்ள இரண்டு அரசாங்க ஊழியர்கள் சிரித்த முகமாக நாம் பயன் படுத்த வேண்டிய கணினி எண்ணை சொல்லுவார்கள், நாம் இருக்கை தெரியாமல் தேடினால், அதில் ஒருவர் அதே சிரித்த முகத்தோடு நம்மை அழைத்து சென்று நம் இருக்கை காட்டுவார்.

(அந்த இடத்தில நிற்கும் போது "மந்திரி வரும் போது மட்டும்" வெள்ளை பொடியில் சுற்றி கோடு போட்ட நம்ம நகராச்சி கட்டிடமும் அதில் பணி புரியும் நம் மக்களின் "சிரித்த முகத்தையும்" ஒரு முறை நினைத்து பார்த்தேன்.)

அலுவலக மற்றும் பள்ளி இடைவேளை நேரங்களில் சிறியவர்களும் பெரியவர்களும் எந்த ஒரு சத்தமும் இல்லாமல் மற்றவர்களுக்கு எந்த இடையூறும் இல்லாமல் இந்த சலுகையை பயன் படுத்தி மகிழ்கிறார்கள்.

இது மட்டும் இல்லாமல், இங்கு கணினி துறை அல்லாத படிப்பு படித்தவர்களுக்கும், முதியவர்களுக்கும், அதிகம் படிக்கதவர்களுக்கும் இலவசமாக கணினி வகுப்புகள் எடுகின்றார்கள் அதுவும் "ஏனோ தானோ" என்று இல்லாமல் முறையாக அடிப்படை கணினி பயன்பாடுகளை கற்று கொடுக்கிறார்கள்.

மின் அஞ்சல் பயன் படுத்துவது, இணையத்தில் வங்கி கணக்குகளை பயன்படுத்துவது, இணையத்தின் மூலம் வீட்டு வரி, மின்சார கட்டணம், தொலை பேசி கட்டணம் கட்டுவது மேலும் இணையத்தில் விமான, ரயில் சீட்டுகளை வாங்குவது போன்று அனைத்து அடிப்படை கணினி பயன் பாட்டினை கற்றுகொடுகிறார்கள், இதன் இறுதியில் விருப்பம் உள்ளவர்களுக்கு தேர்வு வைத்து சான்றிதள் கொடுக்கப்படுகிறது.



அந்த சான்றிதளை பயன் படுத்தி அதிகம் படிக்காதவர்கள், வேலை தேடவும் இவர்கள் உதவுகிறார்கள், இதற்காக இவர்கள் எந்த கட்டணமோ "குறிப்பாக லஞ்சமோ" வாங்குவது கிடையாது.

(இவர்கள் சேவை செய்யும் விதத்தை படம் பிடித்து நம்ம ஊரு நகராச்சி, வேலை வாய்ப்பு மற்றும் அரசாங்க அலுவலகர்களை தினம் ஒருமுறை தேசியகீதம் பாடுவது போல பார்க்க சொல்ல வேண்டும் என்று தோன்றியது.)

ஏற்கனவே விமான நிலையம் போன்ற சுற்றுலா தளங்கள் அனைத்தும் இலவசமாக இணையத்தை பயன்படுத்துமாறு திறந்த இணைப்பு வசதிகள் உள்ளன, மேலும் சுற்றுலா பயணிகளை கவர நகரை அழகு படுத்துவது, ஆங்கில வசதியுடன் டாக்ஸி போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது என சுறுசுறுப்பாக ஒவ்வொரு அடியையும் திட்டமிட்டு எடுத்து வைக்கிறார்கள்.
2010 ஆம் ஆண்டின் இறுதியில் இங்கு 100 சதவீதம் மக்களும் இணையத்தை பயன்படுத்த வைப்பது இவர்கள் நோக்கமாக இருக்கும் போல தோன்றுகிறது.

தென்கொரியா இது போல தொழிற்நுட்ப விஷயத்தில் முன்னணியில் இருப்பதோடு குடிமக்கள் இதழியல் என்று சொல்லப்படும் பொதுமக்களே பத்திரிகையாளர்களாக செயல்படும் போக்கிலும் முன்னணியில் இருக்கிறது. இதன் "ஓ மை நியூஸ்" செய்திதளம் இன்று இன்டெர்நெட் உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்படும் குடிமக்கள் இதழியலுக்கு முன்னோடியாக கருதப்படுகிறது.

இன்னும் சொல்ல போனால் சமீபத்தில் இரண்டாயிரம் கோடி செலவில் செய்த ஏவுகணை சோதனை வெற்றியில் முடியவில்லை என்றாலும் தோல்வியை கண்டு துவளாமல் தோல்வியை படிக்கட்டாக்கி மீண்டும் சோதிப்போம் நினைத்ததை சாதிப்போம் என்கிறார்கள்.

இன்று உலகில் டிஜிட்டல் மற்றும் சைபர் தேசம் என்று ஏதாவது ஒன்று இருக்குமாயின் அது தென்கொரியாதான் என்று சொன்னால் அது நிச்சியம் மிகையாகாது.



இதை எல்லாம் வைத்து பார்க்கும் போது, வரும் ஆண்டுகளில் இந்திய-புலியும் (தேசிய சின்னம்) சீன-ட்ராகனும் வல்லரசாகும் என்று நாம் வெறும் வாயை மென்று அறிக்கை விட்டுக்கொண்டு இருக்கும் அதே வேளையில், சத்தமில்லாமல் கடின உழைப்பை நம்பி "நேர்மையான தலைமையை தேர்ந்தெடுத்து" அசுர வேகத்தில் தென்கொரியா எல்லா துறைகளிலும் முன்னேறி வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை என்று எனக்கு தோன்றுகிறது.

நூறு வருடங்களுக்கு முன் வெள்ளைகாரனை போல நாம் வளர இன்னும் நூறு வருடங்கள் ஆகும் என்று சொல்லி, அதை மட்டுமே குறியாக கொண்டு இதோ அந்த இடத்தை அடைந்து விட்டோம், அதோ அந்த இடத்தை அடைந்து விட்டோம் என்று மக்களை பாதயாத்திரை கூட்டி செல்லும் தலைமைகள், நம் திருநாட்டின் ஜாதி, மத, கொள்கை உள்பூசல்கள் என்னும் பூச்சை கொண்டு இந்த இடைப்பட்ட நூறு வருடத்தில் மற்ற நாடுகள் நம்மை விட இரநூறு வருடம் முன்னோக்கி ஓடிக்கொண்டு இருப்பதை பூசி மொழுகுகின்றன என்பதுதான் உண்மையோ என்றும் நினைக்க தோன்றுகிறது.

இதை வெறும் நாகரிக வளர்ச்சியை மட்டும் வைத்தோ அல்லது மேல் சொன்ன ஒரு சில துறைகளின் முன்னேற்றத்தை வைத்தோ சொல்வதாய் நினைக்க வேண்டாம், இன்னும் சில துறைகளின் வளர்ச்சியையும் அதில் அரசாங்கத்தின் ஒத்துழைப்பையும் பின்பு ஒரு நேரத்தில் சமயம் கிடைக்கும் போது சொல்கிறேன்.

நன்றி.

Sunday, October 25, 2009

சண்டே ஸ்பெஷல்

இது என் அடுத்த பதிவிற்காக தயார் பண்ணியது இல்லை, அவசர உப்புமா போல் இன்று மதியம்தான் தயார் பண்ணியது. இருந்தாலும் உங்களுக்கு பிடிக்கும் என்று நினைக்கிறேன்.

இன்று மதியம் வழக்கம் போல் என் ஜன்னலுக்கு வெளியில் கண்ணை கழுவிக்கொண்டு இருக்கும் போது, அடுத்த கட்டிடத்தை சுத்தம் செய்வதை பார்த்தேன்.

பல முறை, பல இடங்களில், கட்டிடம் சுத்தம் செய்வதை பார்த்து இருந்தாலும், தென்கொரியாவில் மிக வித்தியாசமாக இருப்பதை பார்த்தேன்.

ஒரு பாதுகாப்பு கயிறு கூட இல்லாமல், அவர்கள் அசாத்தியமாக இந்த வேலையை செய்கிறார்கள். வேலைக்கு நடுவில் ஒருவர் தன் செல்போனில் பேசியது என்னை வியப்பின் உச்சிக்கு கொண்டு சென்றது.

அவர்கள் அந்த வேலையை முடித்துவிட்டு வீட்டிக்கு போகும் முன், அது இங்கு உங்கள் பார்வைக்கு.

தென்கொரியா கட்டிட துப்புரவு வீடியோ



மேல் உள்ள வீடியோவை பார்க்க முடியாதவர்கள், இங்கு சொடுக்கி யு-டியூபில் பார்க்கவும்.


தென்கொரியா கட்டிட துப்புரவு படங்கள்

அசாதரணமாக அந்த கட்டிட உச்சியில், மூவர் வந்து கயிற்றை கட்டினார்கள்.



பலகையை தூக்கி வெளியில் போட்டார்கள்.



ஈர தரையில் கூட நாம் நடக்க யோசிப்போம், ஆனால் அவர்கள் யோசிக்காமல் தண்ணீரை "கண்ணாடி சுவர்" முழுவதும் அடித்தார்கள்.



இடுப்பில் ஒரு பாதுகாப்பு கயிறு கூட இல்லாமல், அசாதரணமாக ஒருவர்
வெளியில் குதித்தார்.



அவர் பலகையில் உக்காரும் வரை வெளியில் இருந்து பார்த்த இன்னொருவரும் குதித்தார்.



இருவரும் பலகையில் அமர்ந்த படி, தங்கள் கயிற்றை தாங்களாகவே இறக்கி கழுவ ஆரமித்தார்கள்.



மூன்றாம் நபர் பக்க வாட்டில் வந்து பின்னால் இவர்களுடன் சேர்ந்து கொண்டார்.



கட்டிடத்தின் உயரத்தை பாருங்கள்.



எவ்வளவு சாதாரணமாக வேலை நடக்கிறது பாருங்கள்.





அவர்கள் கீழே வந்ததும், போய் கையை கொடுத்து விட்டு, வீட்டிற்கு போனவுடன் என் இணையதளத்தை பாருங்கள் என்று சொல்லிவிட்டு (சும்மா ஒரு விளம்பரம்) வந்தேன்.

அப்போது தான் புரிந்து கொண்டேன், இவர்கள் சாதாரண கட்டிட பணியாளர்கள் மட்டுமே (நம்ம சித்தாள் மாதிரி).

இவர்களே இப்படி என்றால், தென்கொரியாவின் தீயணைப்பு படை, ராணுவம், கமாண்டோக்கள் பற்றி நான் சொல்லவா வேண்டும்.

என்ன, பதிவ படிச்சாச்சுல, இன்னைக்கு லீவுதான? சும்மா இணையத்துல கண்ண கழுவாம, போய் வீட்ட கழுவுங்க.

மீண்டும் சந்திப்போம், நன்றி.
 

Blogger Widgets