Monday, January 11, 2010

அலுவலக மன உளைச்சலுக்கு குட்பை!

புது வருடம் வந்து விட்டது... கடந்த கால நினைவுகள் மகிழ்ச்சி என்றாலும், கடந்து வந்த சோதனையும் அனுபவமும் இனி வரும் வாழ்க்கையைப் பக்குவப்படுத்திக் கொள்வதற்கு மிக அவசியம் இல்லையா?

(யூத்புல் விகடன் குழுவுக்கு" என் நன்றி!.)



கடத்த வருடத்தில் நடந்த சோதனைகளால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இந்த வருடம் ஒரு நல்ல விடையை கொடுக்க வேண்டியுள்ள இந்தச் சந்தர்பத்தில், சோதனைகளில் சிக்காதவர்களுக்கும் வழக்கம் போல் தொழில் மற்றும் வேலை சார்ந்த போட்டி மேலும் அதிகரிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இந்தச் சூழலில், நாம் கடந்து வந்த அனுபவத்தைக் கொண்டு இனி வரும் காலத்தை நிலைப்படுத்திக் கொள்ள வேண்டும் இல்லையா?

அண்மையில் பத்திரிகையில் படித்த செய்தி ஒன்றை இங்கே பகிர்ந்துகொள்வது மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

'போட்டி' என்பது எப்போதுமே ஓர் அருமையான விஷயம். அது விளையாட்டு, தொழில் அல்லது அலுவலகப் போட்டி என எந்தப் பிரிவைச் சேர்ந்ததாக இருந்தாலும், ஒரு வகையில் ஆரோக்கியமான அம்சம் தான்.

நமக்கு சில அருமையான போட்டியாளர்கள் இருக்க வேண்டும். அதுவே எப்போதும் நம் அடுத்த அடியை எடுத்து வைக்க செய்யும்.

ஆனால், இப்படி போட்டியாக இருப்பது, ஒரு நூலிடை அளவு பிசகினாலும், பொறாமையாக மாறி ஒட்டு மொத்த நோக்கத்தையும் திசை திருப்பி விடுகிறது.

பல சமயங்களில் இது விபரீதமான முடிவுகளையே கொடுத்து, நல்ல நட்பு முதல் உறவு வரை ஒரு நிரந்தர விரிசலை ஏற்படுத்தி விடுகிறது.

ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஸ்டாக்ஹோம் பல்கலைக்கழகம் சார்பில், 'ஸ்ட்ரெஸ் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்' என்ற அமைப்பு, 2,755 பணியாளர்களிடம் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது.

ஆய்வுக்குட்பட்ட பணியாளர்களில் 47 பேர், 1992 ஆம் ஆண்டிலிருந்து 2003 வரையிலான காலகட்டத்தில் மாரடைப்பால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்; அவர்களில் சிலர் உயிரிழந்துள்ளனர் என்பது தெரிய வருகிறது.

இந்த பாதக நிலைக்கு அடிப்படையான காரணம், பணியிடங்களில் மேலதிகாரிகள் அல்லது உடன் பணியாற்றுவோரால் 'ஏளனமாகக் கருதப்படுவது' அல்லது 'தரக்குறைவாக நடத்தப்படுவது' தான். இதன் காரணமாக இவர்கள் மனதில் அளவுக்கு மிஞ்சிய கோபம் ஏற்பட்டு, அதில் இருந்து மீளும் வழி தெரியாததால், அது மாரடைப்புக்கு வழிவகுத்துவிட்டது.



பணியிடங்களில் வரும் மறைமுக இம்சைகளால் அதிக கோபம் கொள்வோருக்கு மாரடைப்பு வரும் அபாயம் இருக்கிறது.

ஆகவே, பணியிடங்களில் வரும் பிரச்சனைகளை நேரடியாக சந்திப்பது மிக நல்லது. அதை விடுத்து அந்தப் பிரச்சனைகளை மனதில் வைத்துக் கொண்டே பணியாற்றுவதாலும் மாரடைப்பு வருவதற்கு இரண்டிலிருந்து ஐந்து மடங்கு வாய்ப்பு உள்ளது.

மேலும் பணியிடங்களில் பிரச்சனை என்று வரும்போது, யாராயிருந்தாலும் வெளிப்படையாகப் பேசுதல், நேரடியாகப் போராடுதல், குறிப்பிட்ட நபரிடம் சரியான வழியில் அணுகுதல் போன்றவற்றின் மூலம் மாரடைப்பு ஏற்படுவதைக் குறைக்க முடியும் என்று வழிகாட்டுகிறது அந்த ஆய்வு.


அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் அரசியலில், நம்மில் பலரும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாதிக்கும் "அலுவலக அரசியலுக்கு" முக்கிய இடம் உண்டு என்பது தெளிவு.

அன்று படிப்பும் வேலையும் படிப்படியாக அந்தந்த காலகட்டதுக்கு ஏற்ப வரிசையாக வந்ததால் ஒருவரின் அனுபவமும், பிரச்சனைகளை எதிர்கொண்டு சமாளிக்கும் திறமையும் அதற்கேற்றபடி சரியான வயதோடு வளர்ந்து கொண்டு வரும்.

ஆனால், இன்றோ கல்வியும் ஒரு வியாபாரமாகி விட்டது, அதே போல் வேலை முறையும் மாறிவிட்டது. வயதுக்கு மீறிய வருமானம் தரக்கூடிய தொழில் முறைகள், சிறிய வயதில் பெரிய பொறுப்புகள் என மாறிவிட்டதால், அனைவரின் வாழ்கையும் ஓர் அவசர கதியாகிவிட்டது.

இதனால், படிப்படியாக இல்லாமல், எடுத்த எடுப்பில் அகல கால் வைக்க வேண்டிய அளவில், வாழ்க்கை முறையும் பொறுப்புகளும் கூடிக்கொண்டிருக்கிறது.

அதைச் சமாளிக்க முற்பட்டு, மன உளைச்சல் அடைவது, சிறிய விஷயங்களுக்குக் கூட பெரிதாக உணர்ச்சிவசப்படுவது என ஒரு சாதாரண பிரச்சனை வந்தால் கூட, சிந்தனையை அடுத்தடுத்து கொண்டு சென்று மனதளவில் மிக பெரிதாக கலங்கிவிடுகிறார்கள், இன்றைய இளம் தலைமுறைகள்.



மேலும், இந்த அலுவலக அரசியலில், எப்போதும் நடுவராகவும் இருக்க முடியாது; பார்வையாளராகவும் இருக்க முடியாது. இருப்பது இரண்டே வழிகள் தான். 'விளையாடி வெற்றி பெரும்' அணி அல்லது 'தோற்று வேலையை அல்லது வாழ்க்கையை துறக்கும்' அணி.

இதில் இன்னொரு வியக்கத்தக்க அம்சம் என்றால், திறந்த மைதானம் போல் இந்த இரு அணிகளும் திறந்தவை தான்; யாரும் எந்த நேரத்திலும் மாற்று அணியாக மாறக்கூடும். மொத்தத்தில் தனிப்பட்ட ஒருவர் தள்ளப்படும் இடம் என்பது ஒரே ஒரு கதவு மட்டும் உள்ள ஒரு பாதையாகும்.

'செய் அல்லது செத்து மடி.' இப்படி வாழ்கைக்காக போராடுவதாய் நினைத்து, ஆரோக்கியமான வாழ்கையை தொலைத்து விட்டு, 'இளமையில் கொடுமை வறுமை' என்பதை மட்டும் மனதில் வைத்து ஓடி ஓடி உழைத்து, இறுதியில் வறுமை வென்று, 'இளமையில் முதுமை'யைப் பெரும் நிலைக்கு கொண்டுவந்து விட்டு விடுகிறது.

இவற்றையெல்லாம் தவிர்த்துவிட்டு, எவ்வித இடையூறுகளுமின்றி வேலையில் சிறந்து விளங்க முடியாதா? முடியும்.

அலுவலக மன உளைச்சலைத் தவிர்க்க சில எளிய வழிகள்...

* அலுவலகத்தில் சக பணியாளர்களிடம் முகமூடி இல்லாத உங்கள் உண்மை முகத்தை மட்டும் பயன்படுத்துங்கள்.

* ஒரு போதும் நெருங்க முடியாத புதிராகவோ அல்லது விளங்காத ரகசியமாகவோ இல்லாமல், அனைவரும் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் திறந்த புத்தகமாய் இருங்கள்.

* உங்கள் வேலைத்திறனில் உறுதியாய் இருப்பது போல் தேவையான நேரங்களிலும், இடங்களிலும் வளைந்து கொடுங்கள்.

* பதவி அதிகாரத்தை வைத்து மட்டும் எடை போடாமல், அனைவருக்கும் சமமாக காது கொடுத்து கவனியுங்கள்.

* உங்கள் 'ஈகோ'வை ஒதுக்கி வைத்து விட்டு, மற்றவர்கள் 'ஈகோ'வை தொடுவதையும் தவிர்த்து விடுங்கள்.



* எந்த சூழ்நிலையிலும் 'வதந்திகளை' சொல்வதையும், கேட்பதையும் அறவே தவிருங்கள்.

* உங்கள் வாழ்க்கை மைல் கல் மீது மட்டும் உறுதியான நோக்கத்தையும், தெளிவான கவனத்தையும் செலுத்துங்கள்.

* உங்கள் தவறுகளுக்கு அப்போதே நியாயப்படுத்த நினைக்காமல், பின்பு சரியான நேரத்தில் மன்னிப்பு கேட்கவும் தவறாதீர்கள், தயங்காதீர்கள்.

* ஒர் அலுவலகத்தில் மாநிலம், மாவட்டம், மொழி, இன்னபிற பிரிவுகளைச் சேர்ந்தவர்களை இனம் கண்டு ஒரு வட்டத்தை அமைத்து, அதற்குள் முடங்கிவிடக் கூடாது.

(வட்டத்துக்குள் நாம் தனித்தனி வட்டமாய் இருப்பது ஒரு பலவீனம் என்றால், 'தான் மட்டும்', 'தனக்கு மட்டும்' என அரசியல் கர்வம் வந்துவிடும் போது, அது நமக்கே ஆபத்தாகிவிடும்.

மேலும் இத்தகைய தவறான அணுகுமுறையால், பல வருட நல்ல நட்பு கூட தோற்றுப் போய் விடுவது மறுக்க முடியாத யதார்த்தம்.)


இதில் என் சொந்த அனுபவத்தில் சில வரிகள்.

தெற்கை விட ஆந்திராவுக்கு மேல் காஸ்மீர் வரை "வடக்கு" எவ்வளவோ தேவலம். அவர்களுக்குள் என்னதான் உட்பூசல் இருந்தாலும், பொது என்று வரும் போது "ஹிந்தி பாத் வாலா" என்ற முறையில் ஒரு வட்டம் அமைத்து, அப்படியே குழுவாக நகர்த்தி கொண்டு செல்வார்கள்.

இதை சற்று கவனித்துப் பார்த்தால், அவர்களில் பதவி அதிகாரத்தில் உயர்வு தாழ்வு இருக்கலாமே தவிர, அலுவலக அரசியலில் அடிபட்டு போவோர்கள் யாருமே இருக்க முடியாது.

இப்படி "ஹிந்தி பாத்" இல்லாத தெற்கு என்று வந்து விட்டால், நமக்கு "ஹிந்தி பாத் வாலா" என்றால் ஒத்து வராது "தார் பூசி" விடுவோம்.

அந்த கடுப்பில் அவர்களும், என்னதான் நாம் ஒரே துறை அல்லது ஒரே அணியில் வேலை பார்த்தாலும், நம்மை கணக்கில் சேர்க்க மாட்டார்கள்.



அது போனால் போகட்டும், நாம் தெற்கு என்று வரும்போது, நமக்குள் தனியாக ஒரு "வடக்கு,தெற்கு மேற்கு கிழக்கு" என்று வந்து விடும் (தெலுகு, கன்னடா, மலையாளம் மற்றும் தமிழ்).

இவை அனைத்தும் ஒரே வட்டத்திற்குள் வருவது என்பது எவ்வளவு சாத்தியம் என்று நமக்கு ரொம்ப நன்றாகவே தெரியும்!

(இப்படித்தான் "சிங்கம்" ஸ்ஸ்ஸ்...ஸாரி..ஸாரி..."சிறுத்தை" சிங்கிளா மாட்டி "எருமை" கூட்டத்தில் மிதி படுவது.)

மேல் சொன்னபடி, இப்படி ஒரு வட்டத்திற்குள் நாம் தனித்தனி வட்டமாய் இருப்பது ஒரு பலவீனம் என்றால், "தான் மட்டும்" "தனக்கு மட்டும்" என்று ஒரு அரசியல் கர்வம் வந்துவிடும் போது, நம் மக்களே நம் மக்களை பலிகடா ஆக்கி விடுவதுதான் இதில் மேலும் சிறப்பம்சமாகி விடுகிறது.

இப்படி சாதாரணமாக ஒரு வேலைக்காக நடக்கும் அலுவலக அரசியலில், பல வருட நல்ல நட்பு கூட தோற்று போய் விடுகிறது என்பதுதான் "மறுக்க முடியாத உண்மை" மற்றும் நம் "அசைக்க முடியாத பலவீனம்".

இந்த இடத்தில் நம் மக்களிடம், "டாக்டர் அப்துல் கலாம்" அவர்களே பாராட்டிய "கவிஞர் வைரமுத்துவின்" சில வரிகளை நான் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

"ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் நான்கு "பந்து"களுடன் தன் வாழ்க்கை பயணத்தை தொடங்குகிறான்.

வலக்கையில் ஒரு பந்து, இடக்கையில் ஒரு பந்து, வலதுகக்கத்தில் ஒரு பந்து, இடதுகக்கத்தில் ஒரு பந்து.

இதில், ஒரு பந்துக்கு பெயர் தொழில், ஒரு பந்துக்கு பெயர் குடும்பம், ஒரு பந்துக்கு பெயர் நட்பு, ஒரு பந்துக்கு பெயர் உடல் ஆரோக்கியம்.

இந்த நான்கு பந்துகளும் கீழே விழுந்து விடாமல் கடைசி வரை கரை சேர்ப்பவனே "கடமை வீரன்".

இதில் கவனிக்க வேண்டிய செய்தி என்னவென்றால்!

தொழில் என்னும் ரப்பர் பந்து கீழே விழுந்தாலும் உடையாது, திரும்ப கைக்கு வந்து விடும்.

ஆனால், "குடும்பம், நட்பு, உடல் நலம்" என்ற மூன்றும் கண்ணாடி பந்துகள், கீழே விழுந்தால் விழுந்ததுதான்! உடைந்து சிதறி விடும்.

மனிதா!... உடைந்து போகாத ரப்பர் பந்து மீது இவ்வளவு கவனம் செலுத்துகிறாயே?

உடைந்தால் மீண்டும் கிடைக்காத மற்ற பந்துகள் மீது ஏன்! கவனம் செலுத்தக் கூடாதா?"
என்பதுதான் அந்த வரிகள்.


இதை நம் மக்கள் அனைவரும் உணர வேண்டும் என்பதுதான் இங்கு என் நோக்கம்.


சரி, நாம் இடுகையை தொடருவோம்!

இவற்றைக் கடைபிடித்தால் மட்டும் அலுவலக அரசியலைத் தவிர்த்துவிட முடியுமா? மன உளைச்சல்களில் இருந்து மீண்டு விட முடியுமா?

இப்படி நீங்கள் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

இங்கே குறிப்பிட்டவை அனைத்தும் அடிப்படை அணுகுமுறை மட்டுமே. பொதுவாகவே, வேலை செய்யும் எல்லா இடங்களிலும் சர்வ சாதாரணமாக அனைவரும் சந்திக்க கூடியதுதான், இந்த 'அலவலக அரசியல்'. இதில் பலிகடா ஆகமால் தவிர்ப்பதற்கு, மனிதர்களைப் படிக்கப் பழக வேண்டும். அதற்கேற்ற படி, தேவையான இடத்தில் சமரசம் செய்துகொண்டும், உரிய தருணங்களில் விட்டுக் கொடுக்காமலும் பிரச்னைகளுக்கு சுமுகத் தீர்வு காணும் பக்குவத்தை அடைய வேண்டும்.

இத்தகைய அலுவலக அரசியலை சமாளிப்பதால் சிகரத்தை எட்டக் கூடிய பலன் கிடைத்துவிடும் என நினைக்க வேண்டாம்; மாறாக, இவையெல்லாம் வேலையை தக்க வைத்துக்கொள்ள மட்டுமே.

அத்துடன், மன உளைச்சல் பாதிப்புக்கு ஆளாகாமல் தன்னைத் தானே காத்துக் கொள்வதற்கே, இந்த அலுவலக அரசியல் குறித்த புரிதல் நமக்குத் தேவைப்படுகிறது.

இத்தகைய அலுவலக அரசியலை ஆரோக்கியமாய் சந்தித்து சமாளிப்பது எப்படி என்பதில், எனக்கு தெரிந்ததை பின்பு ஒரு சமயம் பகிர்ந்து கொள்கிறேன்.

பெஸ்ட் ஆஃப் லக்!.

அதுவரை, அதெப்படி சம்மந்தமில்லாத ஒருவரை இந்த அலுவலக அரசியல் பாதிக்கும்! என்று கேட்க தோன்றினால், இந்த வீடியோவை பாருங்கள்.

சிரிக்க வைத்தாலும் உண்மை இதுவே(இது ஒரு சிங்கப்பூர் வீடியோ என்பதால், ஆங்கிலத்தில் சற்று "மலாய்" மற்றும் "சீன" மொழி கலந்தது இருக்கும்).



என் இடுகையில், உங்கள் நேரத்துக்கு என் நன்றி!.
 

Blogger Widgets