Tuesday, December 22, 2009

குழந்தைகள் பராமரிப்பில் கொரியா!

தென்கொரியாவை பற்றி சில பதிவுகளில் பார்த்திருந்தாலும், குழந்தைகள் பராமரிப்பில் இவர்களின் கவனம் வியக்கதக்கது என்று சொன்னால் அது மிகையாகாது.

வளர்ந்து வரும் நாகரீகத்தில் குழந்தை பிறப்பை குறைத்துக்கொள்ளும் நாடுகளுக்கு மத்தியில்,தென்கொரியாவில் அனைவரும் குழந்தைகளை விரும்புகிறார்கள், சராசரியாக மூன்று குழந்தைகளாவது ஒரு குடும்பத்தில் காண முடியும்.

அதுவும் இவர்கள் அதிகம் விரும்புவது பெண் குழந்தைகளை என்பது வரவேற்க கூடியது,அதே போல் இங்கு அதிகம் இரட்டை குழந்தைகளை காண முடியும், அதற்கான மருத்துவ வசதிகள் இங்கு இருக்கின்றன என்று கேள்விப்பட்டாலும், அதன் முழு விபரங்கள் எனக்கு இன்னும் கிடைக்கவில்லை.



சாதாரண தெருக்களில் இருந்து அனைத்து இடங்களிலும் இங்கு அழகிய பூங்காக்களை கண் கவரும் ஒளி விளக்குகளுடன் குழந்தைகளை கவரும் அழகிய நீர் வளையங்களுடன் காண முடியும்.

மாலை நேரம் வந்து விட்டால், திறந்து விட்ட பட்டாம் பூச்சிகள் போல் எல்லா இடமும் இங்கு குழந்தைகள் கூட்டம்தான், அதுவும் பருவ காலம் என்றால் வார இறுதியில் பாட்டு கச்சேரி எல்லாம் நடக்கும்.

அதுமட்டும் இல்லாமல், இவர்கள் உணவகம் முதல் மருத்துவமனை வரை எல்லா இடங்களிலும் குழந்தைகள் விளையாட ஒரு தனி பகுதியை அமைத்து உள்ளார்கள்.
செல்லும் எல்லா இடங்களிலும் குழந்தைகளுக்கு பாதிப்பில்லாத வண்ண வண்ண வடிவங்களில் மிட்டாய்களும் பலூன்களும் வைத்து இருப்பதோடு, அங்கு வரும் குழந்தைகளுக்கு கொடுப்பதற்காகவே சிலர் குழந்தைகளுக்கு பிடித்த உடையில் பணியில் இருக்கிறார்கள்.

குழந்தைகள் மருத்துவமனை, பல் பொருள் அங்காடி போன்ற இடங்களில் குழந்தைகளின் வயதிற்கு தகுந்தாற்போல் பயன்படும் வண்ண பென்சில்கள், புத்தகங்கள், படிக்க கூடிய போஸ்டர்கள் போன்றவற்றை இலவசமாக கொடுத்து குழந்தைகளை கல்விகற்க ஊக்க படுத்துகிறார்கள்.



சாதாரணமாகவே இவர்கள் கனிவாக பழக கூடிய குணம் உடையவர்கள். இங்கு ஜாதி, இன குறிப்பாக நிற வெறி பிரச்சனைகள் கிடையாது, சொல்லப்போனால் அது என்ன வென்று கூட இவர்களுக்கு தெரியாது.

நீங்கள் எந்த நாடு இந்துவா, கிறித்துவரா அல்லது இஸ்லாமியரா என்று கேட்டு உங்கள் பழக்க வழக்கங்களை ஆர்வமுடன் கேட்டு தெரிந்து கொள்வார்கள், அது மட்டும் தான் இவர்களுக்கு தெரியும்.

குறிப்பாக நீங்கள் வெளிநாடு என்றால், எங்கு சென்றாலும் உங்களை கனிவாக கவனிப்பதில் இவர்களுக்கு நிகர் இவர்களே என்று சொல்லலாம்.இங்கு குழந்தைகள் பிறப்பில் இருந்து மருத்துவம் வரை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று.

மேல் சொன்ன படி சாதாரணமாகவே கனிவாக பழக கூடிய இவர்கள் குழந்தைகள் மருத்துவமனை என்றால் கேட்கவா வேண்டும், அழகிய வண்ண சீருடை, பார்க்கும் இடங்கள் எல்லாம் குழந்தைகளுக்கு பிடித்த ஓவியம், பொம்மைகள், விளையாட தனிபகுதி, மருத்துவமனை வாசம் இல்லாத ஒரு மெல்லிய நறுமணம் என்று மனதை மயக்கும் ஒரு இடமாகவே இருக்கிறது.




அது மட்டுமில்லாமல் வரும் போகும் அனைத்து ஊழியர்களும் எல்லா குழந்தைகளுடனும் பாகு பாடு இல்லாமல் விளையாடி விட்டு சிரித்த முகமாக செல்வது என்று அவர்களும், இதை ஒரு வேலையாக மட்டும் நினைக்காமல் அனுபவித்து செய்வது நான் வேறு எங்கும் காணாத ஒன்று.

இவர்கள் போடும் ஊசிக்கு கூட குழந்தைகள் "ஆ" என்ற ஒற்றை வார்த்தையுடன் நிருத்திக்கொள்ளுமே தவிர, அழுது நான் பார்த்தது இல்லை. அதை விட இவர்கள் தரும் மருந்து, குழந்தைகளுக்கு பிடித்த நறுமணத்தில், நல்ல சுவையுடன் சொல்லவே மனம் இனிக்கிறது.

என் மகள் சொட்டாம் போட்டு குடித்து விட்டு, மீண்டும் மீண்டும் கேட்டு அடம் பிடிப்பார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள், காய்ச்சல், வயிற்று பிரச்சனை என்று எதற்கு சென்றாலும், இவர்களால் இதே போல் மருந்தை எப்படி கொடுக்க முடிகிறது என்று நான் பல முறை வியந்ததுண்டு.

இங்கு மருத்துவ காப்பீடு அவசியம் என்பதால், அனைத்து நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களுக்கு குறைந்த கால மற்றும் நீண்ட கால மருத்துவ காப்பீடு வழங்கி விடுகின்றன. இதனால் இவர்கள் வாங்கும் கட்டணமும் மிக குறைவு.

சாதாரண காய்ச்சல் அல்லது வயிற்று பிரச்சனை போல் ஏதாவது என்றால் மருத்துவமும் மருந்தும் சேர்த்து நம் பணத்தில் தோராயமாக ஒரு இரநூறு ரூபாய் வருகிறது.

இவர்கள் பிரசவ முறை அழகான ஒன்று, முதல் முறை மருத்துவமனை சென்றதும் அடிப்படை கர்ப்பகால சோதனை செய்வார்கள், கர்ப்பம் உறுதியான உடன் ஒரு தனி அட்டவணை புத்தகம், கர்ப்பகால அறிவுரைகளுடன் ஒரு மென்பொருள் உள்ள டி.வி.டி என்று கொடுத்து, அதில் நீங்கள் உள்ளே நுழைய உங்களுக்கு ஒரு பயண சொல்லும் கடவு சொல்லும் கொடுத்து விடுகிறார்கள்.



அன்று முதல் பிரசவம் வரை உங்களுக்கான மருத்துவர், அவரின் உதவியாளர் மற்றும் உங்கள் அட்டவணை உதவியாளர் என்று நீங்கள் தேர்வு செய்யும் அனைவரும் தான் உங்களுக்கான மருத்துவ குழு.

இனி நீங்கள் செய்ய வேண்டியது, உங்கள் கணினியில் அந்த மென் பொருளை நிறுவ வேண்டியது தான், இதன் மூலம் உங்கள் சோதனை அறிக்கை, உங்கள் அடுத்த பரிசோதனை நேரம், உங்கள் மருத்துவரின் பணி நேரம் என்று அனைத்தையும் உங்கள் வீட்டில் இருந்தே பார்க்க முடியும், அது போக உங்கள் சந்தேகங்களை மின் அஞ்சல் மூலம் உங்கள் மருத்துவருக்கு அனுப்ப முடியும்.

இது போக, மொத்த கர்ப்பகாலத்தை நாற்பது வாரமாக பிரித்து, ஒவ்வொரு வாரமும் குழந்தையின் வளர்ச்சி, தாயின் மனநிலை, உடல் நிலை மாற்றம் மற்றும் செய்யவேண்டியது செய்யக்கூடாதது, மேலும் தந்தை செய்யவேண்டியது செய்யக்கூடாதது, என அத்தனையும் இதில் உங்களுக்கு கிடைக்கும்.

இதன் உச்ச கட்டமாக உங்கள் ஒவ்வொரு சோதனையின் போதும் எடுக்க பட்ட ஸ்கேனின் வீடியோவை இதில் எப்போது வேண்டுமானாலும் பார்க்க முடியும்.

முதல் மூன்று மாதங்கள் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை என்றும், பிறகு மாதம் ஒரு முறை என்றும் பரிசோதிப்பார்கள், இந்த பரிசோதனை நேரம் முன் கூட்டியே உங்கள் தொலைபேசி மற்றும் மின் அஞ்சலில் வந்து விடும்.

ஒவ்வொரு பரிசோதனையின் போதும் எடுக்க பட்ட ஸ்கேன் புகை படத்தை உங்கள் அட்டவணை புத்தகத்தில் மாதம் வாரியாக ஒட்டி கொடுத்து விடுவார்கள். மேலும் தேவையான நேரத்தில் அதன் வீ டியோவை நீங்கள் இணையத்தில் உங்கள் பயண மற்றும் கடவு சொல்லை பயன் படுத்தி சென்று பார்க்கலாம்.

இதற்காக இவர்கள் 2D முதல் 4D வரை ஸ்கேன் (Ultrasound Scan) செய்யும் வசதிகளை பயன் படுத்துகிறார்கள்.

எந்த ஒரு விசையத்தையும் இறுதியில் பணத்தை வைத்து கணக்கிட பழகிய நம் குணம், இதை மட்டும் விட்டு விடுமா என்ன? இந்த விசையத்தையும் அப்படியே நினைத்து, கட்டணம் வைத்து தீட்டி விடுவார்கள் என்று நினைத்து விசாரித்தேன்.

இதில் மருத்துவ காப்பீடு இருக்கும் ஒருவருக்கு அடிப்படை மருத்துவ மற்றும் சோதனை கட்டணம் தவிர மேல் சொன்ன அனைத்து வசதிகளும் குழந்தை பெற்று கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் அரசாங்கம் அல்லது தனியார் என்றால் அந்த மருத்துவமனை இலவசமாக தருகிறது.

ஆக, மாதாமாதம் பரிசோதனை, தடுப்பு ஊசி மற்றும் இரும்பு சத்து மாத்திரையுடன் சேர்த்து கட்டணமாக தோராயமாக ஆயிரத்து இரநூறு ரூபாய் வருகிறது.

அதன் பின் இரண்டுநாள் தனியறையுடன் பிரசவ மற்றும் அடிப்படை தடுப்பு ஊசிகளுடன் சேர்த்து சாதாரண பிரசவம் என்றால் தோராயமாக பதினாறு ஆயிரம் வருகிறது.

அறுவை சிகிச்சை பிரசவம் என்றால் ஒவ்வொரு தனிப்பட்ட தாயின் உடல் நிலையை பொருத்து இது மாறு பட்டாலும், சாதாரணமாக ஏழு நாள் தனியறையுடன் சேர்த்து தோராயமாக நாற்பது ஆயிரமும் வாங்குகிறார்கள்.



இங்கு இருக்கும் காலத்தில் இவர்களின் அன்பான கவனிப்பு மிக நல்ல முறையில் இருக்கும் என்றும் அனுபவ பட்டவர்கள் சொன்னார்கள், குறிப்பாக வெளிநாட்டு மக்களை இன்னும் அதிகமாக நல்ல முறையில் கவனித்து பராமரிப்பார்களாம்.

இது போக சில சுவாரஸ்சியமான தகவல்கள் பாருங்கள்.

குழந்தை பிறப்புக்கு இங்கு Rice Cake என்று சொல்லப்படும் கொழுக்கட்டை (அதாங்க நம்ம விநாயகருக்கு வைய்ப்போமே கொழுக்கட்டை அதேதான்) கொடுப்பது தான் வழக்கம்.
ஒரு முறை என் நண்பரின் நண்பர் ஒருவர், இது எல்லாம் முடிந்து குழந்தை பிறந்தவுடன் அங்கு வேலை செய்த பணியாளர்களுக்கு கொழுக்கட்டையுடன் அன்பளிப்பாக பணம் கொடுக்க முயன்றாராம்.

அவர்கள் ஆச்சிரியமாக, நல்ல முறையில் இறைவன் உங்களுக்கு கொடுத்த அழகான குழந்தைக்கு நாங்கள்தான் அன்பளிப்பாக பணம் கொடுக்க வேண்டும், ஆகவே இந்த இனிப்பு மட்டும் போதும் என்று எடுத்து கொண்டு பணத்தை வாங்க மறுத்து விட்டார்களாம்.

இங்குள்ள தம்பதிகள் குழந்தை உருவான முதல் மாதத்தில் இருந்து ஒவ்வொரு மாதமும் அழகிய புகை படத்தை எடுத்து கொள்கிறார்கள், அதனுடன் மருத்துவமனையில் தரும் ஸ்கேன் படங்களையும் இணைத்து அழகிய குறிப்புகளை எழுதிக்கொள்கிறார்கள்.

இது இப்படியே குழந்தை பிறக்கும் வரை தொடர்ந்து பின் குழந்தையுடன் சேர்த்து பல புகை படங்கள் எடுத்து கொள்கிறார்கள்.

இங்குள்ள புகைப்பட நிலையங்களில் இது ஒரு மொத்த ஒப்பந்த முறையில் (Package Offer) சாதாரணாமாக கிடைக்கிறது, ஒரு சில ஒப்பந்த முறை குழந்தை பிறந்து அடுத்த பிறந்தநாள் வரும் வரை தொடர்கிறது.

அதன் பின் வரும் ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் எடுக்கும் படங்களை, இதில் இணைப்பது என்று இதை அனுபவித்து ஆசை ஆசையாக தொடர்கிறார்கள்.

அதே போல் இவர்கள் வயது கணக்கும் நம்மை போல இல்லமால் மாறுபடுகிறது. அதாவது கருவில் ஒரு உயிர் உருவானது முதல் அதன் வயது தொடங்குகிறது என்றும், ஒரு குழந்தை பிறக்கும் போது அதன் வயது பத்து மாதம் அல்லது ஒரு வயது என்று கணக்கில் எடுத்து கொள்கிறார்கள்.

இனி வரும் குழந்தைகள், தலைமுறை ஆங்கிலத்தில் சிறந்து விளங்க வேண்டும் என்று பெற்றோர்களும் சரி அரசாங்கமும் அதிக அக்கறை எடுத்து கொள்கிறார்கள், ஆங்கில ஆசிரியர் வேலைக்கு தான் இன்று தென் கொரியாவில் ஆக அதிக ஊதியம் என்பது குறிப்பிட தக்கது.



இங்கு தொலைகாட்சியில் குழந்தைகளை அதிகம் கவருவது பெண் குழந்தைகளுக்கு
"போறோரோ" எனப்படும் "பெண்குயின் குழுவும்" ஆண் குழந்தைகளுக்கு "தாமஸ்" எனப்படும் "புகைவண்டி குழுவும்தான்".

இதன் மூலமும் குழந்தைகளை கவரும் மற்ற நிகழ்ச்சிகளின் மூலமும் அடிப்படை முறை கல்வி அனைத்தையும் கற்று கொடுத்து விடுகிறார்கள், மூன்று வயதிற்குள் ஒரு குழந்தை அடுத்து வரும் அடிப்படை கல்வி நிலையங்களில் படிக்க போகும் அத்தனை பாடங்கள் மற்றும் பாடல்களை இதன் மூலம் கற்று கொள்கிறது.



இந்த இடுகையில் மகிழ்ச்சி தரும் நல்ல விசையங்கள் மட்டும் இருந்தால் போதுமா, தொல்லை தரும் விசையம் ஏதாவது வேண்டாம்? அதான் என் சொந்த அனுபவத்தை கீழே சொல்கிறேன் கேளுங்கள்.

இப்படி இருக்கும் எல்லா ரைம்ஸ்சையும் பாடி பழகிட்டு, என் மகள் தினம் படுக்கையில் "டாட் பேபி சிலீப்பி சிங் எ சாங்" என்கிறார்கள்?

நானும் சரி என்று "டிவிங்கில் டிவிங்கில் லிட்டில் ஸ்டார்" என்றால்...
ஹோ... அந்தே ("அந்தே" என்றால் கொரியன் மொழியில் "நோ" வேண்டாம் என்று அர்த்தம்) சிங் போறோரோ சாங் "ரோ ரோ ரோத போட்" என்கிறார்கள்?

"டிவிங்கில் டிவிங்கில் லிட்டில் ஸ்டார்" என்று ஒரு பாட்டு இருப்பதே நான் டிவியில் "தங்க பதக்கம்" படம் பார்த்துத்தான் பழகிக்கொண்டேன் என்று புரியவைப்பதா?

அல்லது நாமும் மகள் தூங்கும் நேரத்தில் "போறோரோ, தாமஸ்" எல்லாம் பார்த்து பாடி பழகி கொள்வதா? என்ற குழப்பத்தில் உள்ளேன்!?.

உங்களுக்கு ஏதாவது அனுபவம் இருந்தா பின்னூட்டத்துல சொல்லிட்டு போங்க மக்கா :-).

நன்றி!.
 

Blogger Widgets