Wednesday, October 27, 2010

விளையாட்டு பொம்மை விளையாட்டல்ல!

இந்தியா என் தாய் நாடு இந்தியர் யாவரும் என் உடன் பிறந்தோர் ...!

என்னாங்க எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கா? உண்மையில் இன்றைய வாழ்கை முறை அப்படித்தான் பரபரப்பாக போய் கொண்டு இருக்கிறது.

ஆனால், கொடுமை என்னவென்றால் எதற்காக நம் வாழ்கையை இத்தனை பரபரப்பாக மாற்றிக்கொண்டோம் என்ற அடிப்படை காரணத்தையே இந்த பரபரப்பில் மறந்து விடுகிறோம்.

பண்டைய காலத்தில் ஒரு நாட்டின் மீது படை எடுத்து அந்த நாட்டின் வளத்தை மற்றும் இடத்தை தன் நாடாக மாற்றி கொண்டார்கள், மக்கள் அடிமைகளாக்க பட்டார்கள்.

நாளைடைவில் நாகரீகம் வளர, கொள்கைகள் ஒத்து வராத நாடுகளுக்கு நடுவில் போர் வந்தது, அதை சரி படுத்த உலக சபைகள் வந்ததும், போர் என்று சண்டை போடுவது குறைந்தாலும், தங்கள் நாட்டை முன்னிலை படுத்த பல முயற்சிகள் கையாளப்பட்டன.



சோவியத் ரஷ்யா இருக்கும் வரை உலகம் இரு வல்லரசு நாடுகளை பார்க்கவேண்டும் என்ற ஒரே காரணத்தால் சோவியத் துண்டானது நாம் அறிந்த கதை.

இதில் வல்லரசு நாடுகளுக்கும் அதன் ஜால்ரா நாடுகளுக்கும் ஒரு பிரச்னையும் கிடையாது, ஏழை நாடுகளுக்கு "சோறு கண்ட இடம் சொர்க்கம் என்பது போல" எவனாவது தங்களை அரவணைக்கும் பட்சத்தில் எந்த கவலையும் கிடையாது.

இரண்டும் இல்லாமல் நடுவில் இருக்கும் அல்லது வளர்ந்து வரும் வல்லரசாகும் வாய்பிருக்கும் நாடுகள் படும் அவஸ்தைதான் மிக கொடுமையானது.

இதெல்லாம் தெரிந்த கதைதானே இதை ஏன் இங்கு சொல்கிறான் என்று நினைக்க வேண்டாம்.

ஒரு பக்கம் தீவிரவாதம், உலகின் தலை சிறந்த சுற்றுலாத்தளம் சிம்லா, ஜம்மு, காஸ்மீர் என்று அத்தனையும் பாகிஸ்தான் தீவிரவாத போரினால் ராணுவதலமாக மட்டுமே உள்ளது.

இந்த பக்கம் அருணாச்சல பிரதேசம் எங்களுடையது என்று சீனா சொந்தம் கொண்டாடி குடைச்சல் கொடுகிறது, கீழே இலங்கை பிரச்னையை வைத்து உள்நாட்டில் அரசியல் நடக்கிறது.

இப்படி எல்லைகளில் பிரச்சனை மட்டும் போதாது என்று, மும்பை, கல்கத்தா கோவை என்று தொழில் நகரங்களில் குண்டு வெடிப்பு தூண்டல் என்றும் அதை சரி கட்ட உலகவங்கி கடன் என்றும், வரலாற்றுப்படி இந்தியா ஒரு "தீபகர்ப்பம்" என்பதை நினைவில் கொண்டு வருகிறார்கள்.

அதாங்க, மூன்று பக்கம் பிரச்சனையும் ஒரு பக்கம் கடனாலும் சூழப்பட்டு இருக்கிறதல்லவா!.

இந்த நிலையில் நாமோ வியாபாரம் என்ற பெயரில் வந்து நூற்றுகணக்கான ஆண்டுகள் நம் நாட்டை ஆண்ட மாவைத்தான் இன்னும் அரைத்துக்கொண்டு இருக்கிறோம்.

ஆனால், உலகம் இன்று போர் இல்லாமல், வியாபாரிகளே வராமல் வியாபார பொருட்கள் மட்டும் வந்து நாட்டை அடிமை படுத்தும் முயற்சியில் அதி வேகமாக எங்கோ போய் கொண்டு இருக்கிறது!.

என்ன சொல்கிறேன் என்று புரியவில்லையா? சமீபத்தில் அனைவரும் அறிந்த சில செய்திகளில் தலைப்பை மட்டும் பார்ப்போம்.

உடைக்க வந்த கப்பல் கழிவு மற்றும் நச்சு பொருட்களுடன் வந்து நாட்டை குப்பை தொட்டியாக்கும் முயற்சி.

இயற்கை விவசாயத்தை கெடுக்கும் நோக்கத்தில் இறக்குமதியாகும் ஒட்டு அல்லது செயற்கை விதைகள்.

இறக்குமதி செய்யப்பட்ட குழந்தைகள் பால் பவுடரில் கலப்படம் அதனால் குழந்தைகள் உயிருக்கு ஆபத்து.

இறக்குமதி ரேடியோவில் உள்நாட்டு அரசாங்க வயர்லெஸ் பேச்சை கேட்க முடிகிறது.

இவை எல்லாம் நம்மை அல்லது நம் நாட்டை உடனே பாதிக்காவிட்டாலும் மெதுவாக கொல்லும் விஷம் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

சும்மா, ஒரு உதாரணத்துக்காக சொல்ல வேண்டும் என்றால் உள்நாட்டில் கேட்கும் ரகசிய அலைகளை அல்லது இணையத்தில் இருக்கும் அவர்கள் தயாரிப்பு கணினி நாம் செய்யும் தகவல் பரிமாற்றத்தையோ சேகரித்து அவர்களுக்கு அனுப்பும் படி வடிவமைப்பது என்ன சிரமமா?

உள்நாட்டில் தயாரிக்க முடியாத செயற்கை விதைகளை குறைந்த விலையில் இன்று கொடுத்து, நம் இயற்கை விவசாயத்தை மெதுவாக அழித்து, பின் நம் நாட்டில் என்ன அல்லது எவ்வளவு விதைக்க வேண்டும் என்பதையும் அதன் விலையையும் அவர்கள் முடிவு செய்யும் படி, மீண்டும் நம்மை வணிக முறையில் அடிமை படுத்தும் ஒரு முயற்சியாகத்தான் இவை அனைத்தும் எனக்கு தோன்றுகிறது.

அது சரி, அப்படி என்றால் அரசு என்ன செய்கிறது அத்தனையையும் தடை செய்ய வேண்டியதுதானே என்று ஒரு கேள்வி இங்கு பொதுவாக வரும், அந்த காரணத்தை புரிந்து கொள்ளவே வல்லரசுகளின் தூண்டுதலில் நம் அண்டை வீட்டுகாரர்கள் கொடுக்கும் "தீபகர்ப்ப" குடைச்சல்களை மேலே சொன்னேன்.

ஒரு பக்கம் உள்நாட்டு ரியல் எஸ்டேட் தேச துரோகிகள் விளை நிலம் முதல் புதை (சுடுகாடு) நிலம் வரை உருமாற்றி விற்று விடுகிறார்கள், மீதம் இருப்பதையும் வெளிநாட்டு கலப்பு விவசாயத்தால் அடிமை படுத்த முயற்சி நடக்கிறது மற்றும் நம் பாரம்பரிய சொந்த மருந்து, மூலிகைகளின் காப்புரிமையை வேறு நாடுகள் வைத்திருகின்றன.

இவை அனைத்தும் கண்டிப்பாக நாளை நம்மை அல்லது நம் சந்ததியை, நம் நாட்டை பாதிக்க போகிற விசையங்கள் தான்.

இதில் இன்று நம் உடனடி கவனம் செலுத்த வேண்டிய, நடப்பில் நம்மை அறியாமலே நம் வருங்கால சந்ததியை பாதித்து கொண்டு இருக்கும் ஒரு விசையம் இருக்கிறது என்றால் அது மலிவு விலையில் சீனாவில் இருந்து இறக்குமதியாகும் விளையாட்டு பொருட்கள்தான்.

சமீபத்தில் ஆசியாவில் பல முன்னணி நாடுகள் இதை பற்றி எச்சரித்து, பலமாக சோதித்து பல கப்பல் பொருட்களை தடை செய்து திருப்பி அனுப்பி இருக்கின்றன.

கண்ணை கவரும் அடர் பளீர் நிறத்தில் இருக்கும் இந்த பிளாஸ்டிக் பொருட்கள் மெதுவாக இருக்கவும், பளபளப்பு குறையாமல் இருக்கவும், பொம்மைகளின் முடிகள் உண்மையான முடியை போலவும், மெதுவாகவும் தோன்ற கலக்கப்படும் ரசாயன நச்சு பொருட்களின் அளவு அதிகமாக இருப்பதே இதன் அடிப்படை காரணம் என்று கண்டறியப்பட்டு இருக்கிறது.



பொதுவாகவே குழந்தைகள் எந்த ஒரு பொருளையும் வாயில் வைக்கும் பழக்கம் கொண்டவர்கள், அதை அதிகமாக கண்டிக்கும் பட்சத்தில் அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாக்க படுகிறார்கள் என்று குழந்தைகள் நல மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

இந்த நிலையில் இத்தகைய பொம்மைகளை அவர்கள் வாயில் வைக்கும் போது உள்ளே செல்லும் ரசாயனமமோ, முடியோ அல்லது வேறு பொருட்களோ குழந்தைகளை அதி தீவிரமாக பாதிக்கிறது என்று தெரியுமா உங்களுக்கு?

உங்கள் வீட்டில் குழந்தைகள் இருக்கும் பட்சத்தில் உங்கள் குடும்ப நல மருத்துவரிடம் இதனால் என்னென்ன பாதிப்புகள் குழந்தைகளுக்கு வரும் என்று ஒரு முறையாவது உங்கள் நேரத்தை ஒதுக்கி கேட்டு பாருங்கள், நீங்கள் எல்லை இல்லா அதிர்ச்சி அடைவது உறுதி.

ஆம், உயிரே பாதிக்கும் அளவு கூட இந்த விசையம் குழந்தைகளை பாதிக்கலாம்.

இந்த இடத்தில மீண்டும் இந்த பதிவின் முதல் வரியை நினைவு படுத்துகிறேன், நாம் இத்தனை பரபரப்பாக உயிரை கொடுத்து உழைப்பது யாருக்கு நாளை நம் சந்ததி வளமாக வாழத்தானே?

அப்படி இருக்க, நாமே இத்தகைய பொருட்களை வாங்கி தருவது, நம் சொந்த சம்பாத்தியத்தில் சொந்த குழந்தைக்கு விஷம் வாங்கி தருவது போலதான் என்பது என் கருத்து.

இதை நேரடியாக நாடு தடை செய்வதில் இருக்கும் "தீபகர்ப்ப" பக்க விளைவுகளை நாம் அறிவோம், ஆனாலும் இதை தடுக்க நாம் ஏதாவது செய்ய வேண்டும் அல்லவா?

இதை பற்றி நான் யோசித்ததில் எனக்கு கிடைத்த ஒரு வழி இதுதான்.

எப்படி இருந்தாலும் சில்லறை வியாபார பொருட்கள் என்பது பயன்பாட்டு சந்தையை மற்றும் அந்த சந்தையின் பண பலத்தை பொறுத்துதான் ஒரு நாட்டில் நுழைக்க படுகிறது.

இத்தகைய பொருட்களின் வெற்றியும் தோல்வியும் அந்த பொருளுக்கு சந்தையில் கிடைக்கும் வரவேற்பு மற்றும் விற்பனையை பொறுத்துதான் தீர்மானிக்க படுகிறது.

அப்படி இருக்க, விலை கொடுக்கும் நான் ஏன் எனக்கு என்ன வேண்டும் என்பதை தீர்மானிக்க கூடாது?

விலை சற்று அதிகமாக கொடுத்தாலும் அது என் குழந்தைகளின் நலனுக்கு என்று நினைக்கும் போது, என் குழந்தையின் உயிரை, உடல் நலத்தை விட அந்த கூடுதல் தொகை ஒன்றும் எனக்கு முக்கியமாக படவில்லை.

அதனால் எந்த ஒரு பொருளையும் வாங்கும் முன் அது பொம்மையோ கேமிராவோ கணினியோ, முதலில் நான் கேட்பது எந்த நாட்டு தயாரிப்பு என்பதுதான், சர்ச்சைக்கு மற்றும் சந்தேகத்துக்கு இடமாகும் சீன பொருட்களை கண்டிப்பாக நான் வாங்குவது இல்லை.

சிங்கப்பூர், ஜப்பான், தென்கொரியா போன்ற மக்கள் நலனில் அக்கறை கொண்ட நல்ல தரமான நாடுகளால் தயாரிக்க, அங்கீகரிக்க பட்ட அல்லது பாரம்பரிய இந்திய தயாரிப்பில் புகழ் பெற்ற நிறுவனங்களின் பொருட்களையே வாங்குகிறேன

முதலில் நான் இந்த கொள்கையை கடைபிடிக்க துவங்கிய போது என்னை வித்தியாசமாக பார்த்தாலும், என் குடும்பமும் நண்பர்களும் இதன் பலனை அறிந்து இப்போது இதே போல் பொருட்களை வாங்க துவங்கி உள்ளார்கள்.



நம் தாய்நாட்டுக்கு உடனடி தேவையான தனிமனித சுதேசியை பற்றி என் கருத்தை முன்பே "அக்காமாலாவையும் கப்சியையும்" விடுங்கையா!" பதிவில் எழுதி இருந்தேன், இதுவும் அதை போல ஒன்று தான்.

நீங்கள் தெருவில் வாங்கும் ஒரு ரூபாய் பொம்மை முதல் லட்சத்தில் வாங்கும் ரேடியோ, கணினிவரை முதலில் எந்த நாட்டு தயாரிப்பு என்று பாருங்கள்.

தயாரிப்பு நாட்டு விபரம் இல்லாத பொருட்களை அல்லது பிரச்சனைக்குரிய சீன தயாரிப்பை வாங்காமல் போவதோடு மட்டும் இல்லாமல், தயாரிப்பு நாட்டு பெயர் இல்லாத அல்லது இந்த நாட்டு தயாரிப்பு என்ற காரணத்தால் தான் மட்டுமே இதை வாங்கவில்லை என்பதை அந்த விற்பனையாளரிடம் மறக்காமல் சொல்லுங்கள்.

கூடியவரை உள்ளாட்டு தயாரிப்பை வாங்குவோம் அல்லது அந்தந்த நாட்டு நேரடி தயாரிப்பை மட்டும் கேட்டு வாங்குவோம், "சோனி" என்றால் ஜப்பான் "சாம்சங்" என்றால் தென்கொரியா என்று ஒரு நாட்டின் நேரடி தயாரிப்பை சற்று விலையில் அதிகமானாலும் நலம் கருதி வாங்குவோம்.

சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால், நீங்கள் வேர்கடலையை விலையாக கொடுக்கும் பட்சத்தில் உங்களுக்கு "குரங்குதான்" கிடைக்கும், உங்கள் தேவை "டெடிபீர்" என்றால் நீங்கள் முத்திரி பருப்பைத்தான் விலையாக கொடுக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்திருங்கள்.

இப்படி ஒவ்வொருவரும் துவங்கி அவர்கள் குடும்பம் நண்பர்கள் அவர்களை தொடந்து அவர்கள் குடும்பம் என்று இது சற்று மெதுவாக பரவினாலும் நமக்கும் நம் நாட்டுக்கும் நலம் கிடைப்பது என்னவோ உறுதி.

சற்று சிந்தித்து பாருங்கள் விற்காத அல்லது மக்கள் விரும்பாத பொருட்களை எந்த நிறுவனமும் வாங்க போவதில்லை, விற்பனை ஆகாத பொருட்களை தொடர்ந்து இறக்குமதி அல்லது உற்பத்தி செய்யவும் போவதில்லை.

நாடு சட்டம் அரசாங்கம் என்று அனைத்தும் மேலிருந்து தான் வரவேண்டும் என்று இல்லாமல், நம் நலம் மற்றும் நாட்டின் நலம் கருதி ஒரு நல்ல குடிமகன் என்ற முறையில் இப்படி கீழே இருந்து கூட நாட்டு நலனை காக்க முடியும் (Reverse Mapping) .

நன்றி, மீண்டும் சந்திப்போம்!.
 

Blogger Widgets