Friday, December 25, 2009

வலைபதிவர்கள் அனைவருக்கும்!

நீண்ட இடைவெளிக்கு பிறகு, தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை கிடைத்து உள்ளது, பொதுவாகவே வருட இறுதியில் வேலை அதிகமாக இருக்கும் என் துறையில் இந்தமுறை கடந்த சில நாட்களாக கொஞ்சம் அதிகமாகவே வேலை இருந்தது.

ஒரு வழியாக பண்டிகைகால விடுமுறையாக, இது ஒரு நீண்ட வார இறுதி விடுமுறை.

பண்டிகைகால விடுமுறை என்றதும் வழக்கம் போல, தொலைகாட்சியில் பட்டிமன்றம் பார்க்க மற்றும் ஓடாத உருப்படி இல்லாத மொக்கை படங்களை கூட ஓடுவதாக காட்டும் நோக்கத்தில், தங்கள் சொந்த தொலைகாட்சியில் அதை மட்டுமே திரும்ப திரும்ப காட்டுவதை பார்ப்பது என்பதுதானே நம் கலாச்சாரம்!.

நம் கலாச்சாரம் போல இங்குள்ள மக்களிடம் நல்ல குணங்கள் இல்லை என்பதால், அதில் இருந்து கொஞ்சம் மாறுபட்டு(திருந்தி), வெளியில் சென்று மக்களோடு கலந்து மகிழ்ச்சியை கொண்டாடுவது என்று முடிவு செய்து இருக்கிறேன்.

பண்டிகை மகிழ்ச்சியை மக்களுடன் கலந்து கொண்டாடுவது, என்று முடிவானவுடன், நம் அடுத்த கலாச்சாரம் நினைவுக்கு வர...!

அட! "பனி இல்லாத மார்கழியா!, சரக்கில்லாத பண்டிகையா!" என்று மனம் சொல்ல, மூச்சு காற்று கூட புகையாக போகும் இந்த கொரியா குளிர் காலத்துக்கு தேவையான சரக்கு, மிக்சிங், சைடிஷ் என்று எல்லாம் தயார்.

எல்லாம் இருந்தாலும், தினம் தினம் சந்திக்கும் நம் பதிவர்கள் இல்லாவிட்டால் எப்படி?

ஆகவே, வாங்க சேர்ந்து அடிச்சு வருட இறுதி பண்டிகை தினங்களை கொண்டாடுவோம்.



சரக்கு!



சரக்கு ரெடி, இப்ப மிக்சிங்!.

சரக்கு அடிக்காதவுங்க கூட குடிக்கும் படி சில விசையம் வேண்டும் இல்லையா?



பதிவுகளுக்கு விருது வழங்குவதும் வாங்குவதும் கூட பண்டிகை தினம் போல ஒரு வகை மகிழ்ச்சிதான்.

ஆனால், ஒவ்வொரு முறையும் யாராவது எனக்கு விருது தருகிறேன் என்று அழைத்தவுடன், எனக்குள் மகிழ்ச்சியோடு ஒரு சிறு பதற்றமும் தொற்றிக்கொள்ளும்!.

நம்மதான் படிக்கும் போது இருந்து எப்பவும் கடைசி பெஞ்சு மக்களாச்சே!, மற்றவர்களுக்கு நம்ம எப்படி விருது கொடுப்பது? என்பதோடு எனக்குள் மேலும் சில குழப்பங்கள் வந்து விடும்.

நமக்கு விருது கொடுத்தவர்களுக்கே பதில் விருது கொடுப்பதா?

இவ்வளவு பெரிய பதிவுலகத்தில், அருமையாக இருக்கிறது என்றுதான் சிலரை மட்டும் பின் தொடருகிறோம், அந்த சிலரில் விருதுக்கு என்று தனியாக சிலரை எப்படி தேர்வு செய்வது?

ஏன் என்றால், என் தனிப்பட்ட கொள்கைகளை தவிர்த்து விட்டு பார்த்தால், எல்லோருடைய எழுத்தும், திறமையும் எனக்கு பிடிக்கிறதே!

மேலும், சில பதிவர்கள் விருதுகளை தங்கள் தளத்தில் பயன் படுத்துவது இல்லை, அதனால் அவர்களை விட்டு விடுவதா?

என்று பல வகையாக குழம்பி..., ஒரு வகையான முடிவுக்கு வந்து சிலரை தேர்ந்து எடுத்தால்! நான் தான் முன்னமே சொன்னனே "நம்ம எப்பவும் கடைசி பெஞ்சு கோஷ்டின்னு".

நமக்கே ஒரு விருது கிடைச்சதுனா, நம்ம தேர்ந்து எடுத்த அந்த பதிவருக்கு அதே விருது கிடைச்சு இருக்காதா என்ன?, ஏற்கனவே அந்த விருதை அவருக்கு இருவருக்கும் மேல் கொடுத்து இருக்கிறார்கள்?

இப்ப என்ன செய்வது! என்று நீண்ட குழப்பத்தில் இருந்த நான், ஒரு வகையாக முடிவுக்கு வந்து...!

இந்த நூற்றாண்டு மட்டுமல்ல, வரும் அத்தனை நூற்றாண்டிலும் உலகம் போற்றும் படி, தனது இனிய இசையால் உலகையே கட்டிப் போட்ட "மைக்கேல் ஜாக்ஸன்" இந்த மண்ணை விட்டு பிரிந்த இந்த 2009 வருடத்தின் இறுதியில், அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இந்த விருதுகளை சில பதிவர்களுக்கு கொடுக்க விரும்புகிறேன்.

இது கூல்



கீதாஆச்சல்

மேனகாசத்யா

ஜலீலாவின் சமையல் அட்டகாசங்கள்

சூர்யா ௧ண்ணன்

பிரியமுடன் வசந்த்

முத்துச்சரம் ராமலக்ஷ்மி

சந்தனமுல்லை

ஈ ரா

அம்முவின் சமையல்

தியாவின் பேனா

சுமஜ்லா

கலகலப்ரியா

இது நைஸ்



சுரேஷ்

நட்புடன் ஜமால்

எப்பூடி

ஸ்வர்ணரேகா

வானம்பாடிகள்

நினைவுகளுடன்-நிகே

ஹேமா

ரஹ்மான்

பித்தனின் வாக்கு

ஷ‌ஃபி

பிரியமுடன் பிரபு

அடுத்து யாரு என்று யோசித்து கொண்டு இருக்கும் போது...

"இப்படி எல்லோருக்கும் நீங்களே கொடுத்து விட்டால், அப்புறம் அவர்கள் யாருக்கு கொடுப்பாங்க?" என்று பின்னால் இருந்து தங்கமணியின் குரல் கேட்டது!.

ஆஆ, நான் பல நாள் யோசித்து மும்பரமாக வேலை செய்யும் போது "மொழி படத்தில் வரும் பிரகாஸ்ராஜ்" போல் இப்படி சிந்திக்க உன்னால் மட்டுமே முடியும்.....ஆனாலும் உன் கேள்வியில் நியாயம் இருக்கிறது.

எனவே நான் இத்தோடு நிறுத்திக்கொண்டு, மற்றவையை மேலே விருது பெற்ற பதிவர்கள் விருப்பத்திற்கு விட்டு விடுகிறேன்.

இனி அவர்கள் விருப்பம் போல் அவர்கள் விரும்பிய மற்றும் விரும்பும் பதிவர்களுக்கு, இந்த விருதை கொடுத்து மகிழ, வரும் புத்தாண்டை அனைவருக்கும் நலம் கொடுக்கும் இனிய வருடமாக இருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டி கொண்டாடுவோம்.

அடப்பாவி...சிங்கக்குட்டி...சரக்கு சரக்குன்னு சொல்லி...சரக்கே இல்லாம ஒரு இடுகைய போட்டுட்டியேடா? என்று சொல்லும் உங்கள் "மைன்ட் வாய்ஸ்சை" என்னால் "கேச் பண்ண" முடிகிறது ...!

சரக்கும் அடிக்க மாட்டோம், மிக்சிங்கும் சரி இல்லை, என்று நினைக்கும் உங்களுக்காகவே, ஒரு "சூப்பர் சைடிஷ்" மக்கா கீழ பாருங்க...!



ஏய்... ஏய்...இடுகைக்கு கீழ பாருமா!

இனி பேப்பர் பேனா, பென்சில், சிலேட், பல்பம் எதுவும் தேவை இருக்காது, ஆம் எல்லா துறையிலும் வளர்ந்து வரும் கணினி குழந்தைகளை விட்டு விடுமா என்ன?

இதோ வந்துகொண்டு இருக்கிறது, ஆரம்ப பள்ளி குழந்தைகளுக்கான மடி கணினி, அதுமட்டுமல்ல இதுவே உலகின் ஆக குறைந்த மடி கணினியாக இருக்கும்.



ஆம், இதன் விலை தோராயமாக "மூவாயிரத்து ஐநூறு ரூபாய்" அதாவது "எழுபத்தி ஐந்து அமெரிக்க டாலர்" ."OLPC Laptop" என்று சொல்லப்படும் இந்த மடி கணினியின் பெயர் "XO-3".

இது குழந்தைகளுக்கான அடிப்படை கல்வி தேவைகளை பூர்த்தி செய்யும் படி (மைக்கிரோ சாப்ட் நிறுவனத்தின் மென் பொருளை பயன் படுத்தாத முறையில்) வடிவமைக்க பட்டு இருக்கிறது.



தொழில்நுட்ப வளர்ச்சி காரணாமாக, இது பின்னாளில் இன்னும் வளர்ச்சி அடையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

2012 ஆம், வருடத்தில் இதை சந்தைக்கு கொண்டு வரும் வேலை நடந்து வருகிறது,
எனவே மக்களே நாமும் "அ,ஆ,இ" மற்றும் "க,ங,சா" எல்லாம் வரும்படி அடிப்படை கணினி மென்பொருளை வடிவமைக்கும் நேரத்துக்கு வந்து கொண்டு இருக்கிறோம்.


அல்லது, இதையும் நம் மக்களே அமெரிக்க சென்று அங்கு அவர்கள் நிறுவனத்திற்கு இதை வடிவமைத்து கொடுத்து, அதன் காப்புரிமையை அவர்கள் வாங்கும்படி செய்தாலும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை.

சரக்கு, மிக்சிங், சைடிஷ்ன்னு, யாருக்கு என்ன பிடிச்சதோ! என்ன பிடிக்கலையோ! அத சொல்லுங்க, அப்பத்தான வரும் புது வருசத்தில் இன்னமும் நல்லா பண்ணுவோம்!.

நன்றி!.

Tuesday, December 22, 2009

குழந்தைகள் பராமரிப்பில் கொரியா!

தென்கொரியாவை பற்றி சில பதிவுகளில் பார்த்திருந்தாலும், குழந்தைகள் பராமரிப்பில் இவர்களின் கவனம் வியக்கதக்கது என்று சொன்னால் அது மிகையாகாது.

வளர்ந்து வரும் நாகரீகத்தில் குழந்தை பிறப்பை குறைத்துக்கொள்ளும் நாடுகளுக்கு மத்தியில்,தென்கொரியாவில் அனைவரும் குழந்தைகளை விரும்புகிறார்கள், சராசரியாக மூன்று குழந்தைகளாவது ஒரு குடும்பத்தில் காண முடியும்.

அதுவும் இவர்கள் அதிகம் விரும்புவது பெண் குழந்தைகளை என்பது வரவேற்க கூடியது,அதே போல் இங்கு அதிகம் இரட்டை குழந்தைகளை காண முடியும், அதற்கான மருத்துவ வசதிகள் இங்கு இருக்கின்றன என்று கேள்விப்பட்டாலும், அதன் முழு விபரங்கள் எனக்கு இன்னும் கிடைக்கவில்லை.



சாதாரண தெருக்களில் இருந்து அனைத்து இடங்களிலும் இங்கு அழகிய பூங்காக்களை கண் கவரும் ஒளி விளக்குகளுடன் குழந்தைகளை கவரும் அழகிய நீர் வளையங்களுடன் காண முடியும்.

மாலை நேரம் வந்து விட்டால், திறந்து விட்ட பட்டாம் பூச்சிகள் போல் எல்லா இடமும் இங்கு குழந்தைகள் கூட்டம்தான், அதுவும் பருவ காலம் என்றால் வார இறுதியில் பாட்டு கச்சேரி எல்லாம் நடக்கும்.

அதுமட்டும் இல்லாமல், இவர்கள் உணவகம் முதல் மருத்துவமனை வரை எல்லா இடங்களிலும் குழந்தைகள் விளையாட ஒரு தனி பகுதியை அமைத்து உள்ளார்கள்.
செல்லும் எல்லா இடங்களிலும் குழந்தைகளுக்கு பாதிப்பில்லாத வண்ண வண்ண வடிவங்களில் மிட்டாய்களும் பலூன்களும் வைத்து இருப்பதோடு, அங்கு வரும் குழந்தைகளுக்கு கொடுப்பதற்காகவே சிலர் குழந்தைகளுக்கு பிடித்த உடையில் பணியில் இருக்கிறார்கள்.

குழந்தைகள் மருத்துவமனை, பல் பொருள் அங்காடி போன்ற இடங்களில் குழந்தைகளின் வயதிற்கு தகுந்தாற்போல் பயன்படும் வண்ண பென்சில்கள், புத்தகங்கள், படிக்க கூடிய போஸ்டர்கள் போன்றவற்றை இலவசமாக கொடுத்து குழந்தைகளை கல்விகற்க ஊக்க படுத்துகிறார்கள்.



சாதாரணமாகவே இவர்கள் கனிவாக பழக கூடிய குணம் உடையவர்கள். இங்கு ஜாதி, இன குறிப்பாக நிற வெறி பிரச்சனைகள் கிடையாது, சொல்லப்போனால் அது என்ன வென்று கூட இவர்களுக்கு தெரியாது.

நீங்கள் எந்த நாடு இந்துவா, கிறித்துவரா அல்லது இஸ்லாமியரா என்று கேட்டு உங்கள் பழக்க வழக்கங்களை ஆர்வமுடன் கேட்டு தெரிந்து கொள்வார்கள், அது மட்டும் தான் இவர்களுக்கு தெரியும்.

குறிப்பாக நீங்கள் வெளிநாடு என்றால், எங்கு சென்றாலும் உங்களை கனிவாக கவனிப்பதில் இவர்களுக்கு நிகர் இவர்களே என்று சொல்லலாம்.இங்கு குழந்தைகள் பிறப்பில் இருந்து மருத்துவம் வரை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று.

மேல் சொன்ன படி சாதாரணமாகவே கனிவாக பழக கூடிய இவர்கள் குழந்தைகள் மருத்துவமனை என்றால் கேட்கவா வேண்டும், அழகிய வண்ண சீருடை, பார்க்கும் இடங்கள் எல்லாம் குழந்தைகளுக்கு பிடித்த ஓவியம், பொம்மைகள், விளையாட தனிபகுதி, மருத்துவமனை வாசம் இல்லாத ஒரு மெல்லிய நறுமணம் என்று மனதை மயக்கும் ஒரு இடமாகவே இருக்கிறது.




அது மட்டுமில்லாமல் வரும் போகும் அனைத்து ஊழியர்களும் எல்லா குழந்தைகளுடனும் பாகு பாடு இல்லாமல் விளையாடி விட்டு சிரித்த முகமாக செல்வது என்று அவர்களும், இதை ஒரு வேலையாக மட்டும் நினைக்காமல் அனுபவித்து செய்வது நான் வேறு எங்கும் காணாத ஒன்று.

இவர்கள் போடும் ஊசிக்கு கூட குழந்தைகள் "ஆ" என்ற ஒற்றை வார்த்தையுடன் நிருத்திக்கொள்ளுமே தவிர, அழுது நான் பார்த்தது இல்லை. அதை விட இவர்கள் தரும் மருந்து, குழந்தைகளுக்கு பிடித்த நறுமணத்தில், நல்ல சுவையுடன் சொல்லவே மனம் இனிக்கிறது.

என் மகள் சொட்டாம் போட்டு குடித்து விட்டு, மீண்டும் மீண்டும் கேட்டு அடம் பிடிப்பார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள், காய்ச்சல், வயிற்று பிரச்சனை என்று எதற்கு சென்றாலும், இவர்களால் இதே போல் மருந்தை எப்படி கொடுக்க முடிகிறது என்று நான் பல முறை வியந்ததுண்டு.

இங்கு மருத்துவ காப்பீடு அவசியம் என்பதால், அனைத்து நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களுக்கு குறைந்த கால மற்றும் நீண்ட கால மருத்துவ காப்பீடு வழங்கி விடுகின்றன. இதனால் இவர்கள் வாங்கும் கட்டணமும் மிக குறைவு.

சாதாரண காய்ச்சல் அல்லது வயிற்று பிரச்சனை போல் ஏதாவது என்றால் மருத்துவமும் மருந்தும் சேர்த்து நம் பணத்தில் தோராயமாக ஒரு இரநூறு ரூபாய் வருகிறது.

இவர்கள் பிரசவ முறை அழகான ஒன்று, முதல் முறை மருத்துவமனை சென்றதும் அடிப்படை கர்ப்பகால சோதனை செய்வார்கள், கர்ப்பம் உறுதியான உடன் ஒரு தனி அட்டவணை புத்தகம், கர்ப்பகால அறிவுரைகளுடன் ஒரு மென்பொருள் உள்ள டி.வி.டி என்று கொடுத்து, அதில் நீங்கள் உள்ளே நுழைய உங்களுக்கு ஒரு பயண சொல்லும் கடவு சொல்லும் கொடுத்து விடுகிறார்கள்.



அன்று முதல் பிரசவம் வரை உங்களுக்கான மருத்துவர், அவரின் உதவியாளர் மற்றும் உங்கள் அட்டவணை உதவியாளர் என்று நீங்கள் தேர்வு செய்யும் அனைவரும் தான் உங்களுக்கான மருத்துவ குழு.

இனி நீங்கள் செய்ய வேண்டியது, உங்கள் கணினியில் அந்த மென் பொருளை நிறுவ வேண்டியது தான், இதன் மூலம் உங்கள் சோதனை அறிக்கை, உங்கள் அடுத்த பரிசோதனை நேரம், உங்கள் மருத்துவரின் பணி நேரம் என்று அனைத்தையும் உங்கள் வீட்டில் இருந்தே பார்க்க முடியும், அது போக உங்கள் சந்தேகங்களை மின் அஞ்சல் மூலம் உங்கள் மருத்துவருக்கு அனுப்ப முடியும்.

இது போக, மொத்த கர்ப்பகாலத்தை நாற்பது வாரமாக பிரித்து, ஒவ்வொரு வாரமும் குழந்தையின் வளர்ச்சி, தாயின் மனநிலை, உடல் நிலை மாற்றம் மற்றும் செய்யவேண்டியது செய்யக்கூடாதது, மேலும் தந்தை செய்யவேண்டியது செய்யக்கூடாதது, என அத்தனையும் இதில் உங்களுக்கு கிடைக்கும்.

இதன் உச்ச கட்டமாக உங்கள் ஒவ்வொரு சோதனையின் போதும் எடுக்க பட்ட ஸ்கேனின் வீடியோவை இதில் எப்போது வேண்டுமானாலும் பார்க்க முடியும்.

முதல் மூன்று மாதங்கள் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை என்றும், பிறகு மாதம் ஒரு முறை என்றும் பரிசோதிப்பார்கள், இந்த பரிசோதனை நேரம் முன் கூட்டியே உங்கள் தொலைபேசி மற்றும் மின் அஞ்சலில் வந்து விடும்.

ஒவ்வொரு பரிசோதனையின் போதும் எடுக்க பட்ட ஸ்கேன் புகை படத்தை உங்கள் அட்டவணை புத்தகத்தில் மாதம் வாரியாக ஒட்டி கொடுத்து விடுவார்கள். மேலும் தேவையான நேரத்தில் அதன் வீ டியோவை நீங்கள் இணையத்தில் உங்கள் பயண மற்றும் கடவு சொல்லை பயன் படுத்தி சென்று பார்க்கலாம்.

இதற்காக இவர்கள் 2D முதல் 4D வரை ஸ்கேன் (Ultrasound Scan) செய்யும் வசதிகளை பயன் படுத்துகிறார்கள்.

எந்த ஒரு விசையத்தையும் இறுதியில் பணத்தை வைத்து கணக்கிட பழகிய நம் குணம், இதை மட்டும் விட்டு விடுமா என்ன? இந்த விசையத்தையும் அப்படியே நினைத்து, கட்டணம் வைத்து தீட்டி விடுவார்கள் என்று நினைத்து விசாரித்தேன்.

இதில் மருத்துவ காப்பீடு இருக்கும் ஒருவருக்கு அடிப்படை மருத்துவ மற்றும் சோதனை கட்டணம் தவிர மேல் சொன்ன அனைத்து வசதிகளும் குழந்தை பெற்று கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் அரசாங்கம் அல்லது தனியார் என்றால் அந்த மருத்துவமனை இலவசமாக தருகிறது.

ஆக, மாதாமாதம் பரிசோதனை, தடுப்பு ஊசி மற்றும் இரும்பு சத்து மாத்திரையுடன் சேர்த்து கட்டணமாக தோராயமாக ஆயிரத்து இரநூறு ரூபாய் வருகிறது.

அதன் பின் இரண்டுநாள் தனியறையுடன் பிரசவ மற்றும் அடிப்படை தடுப்பு ஊசிகளுடன் சேர்த்து சாதாரண பிரசவம் என்றால் தோராயமாக பதினாறு ஆயிரம் வருகிறது.

அறுவை சிகிச்சை பிரசவம் என்றால் ஒவ்வொரு தனிப்பட்ட தாயின் உடல் நிலையை பொருத்து இது மாறு பட்டாலும், சாதாரணமாக ஏழு நாள் தனியறையுடன் சேர்த்து தோராயமாக நாற்பது ஆயிரமும் வாங்குகிறார்கள்.



இங்கு இருக்கும் காலத்தில் இவர்களின் அன்பான கவனிப்பு மிக நல்ல முறையில் இருக்கும் என்றும் அனுபவ பட்டவர்கள் சொன்னார்கள், குறிப்பாக வெளிநாட்டு மக்களை இன்னும் அதிகமாக நல்ல முறையில் கவனித்து பராமரிப்பார்களாம்.

இது போக சில சுவாரஸ்சியமான தகவல்கள் பாருங்கள்.

குழந்தை பிறப்புக்கு இங்கு Rice Cake என்று சொல்லப்படும் கொழுக்கட்டை (அதாங்க நம்ம விநாயகருக்கு வைய்ப்போமே கொழுக்கட்டை அதேதான்) கொடுப்பது தான் வழக்கம்.
ஒரு முறை என் நண்பரின் நண்பர் ஒருவர், இது எல்லாம் முடிந்து குழந்தை பிறந்தவுடன் அங்கு வேலை செய்த பணியாளர்களுக்கு கொழுக்கட்டையுடன் அன்பளிப்பாக பணம் கொடுக்க முயன்றாராம்.

அவர்கள் ஆச்சிரியமாக, நல்ல முறையில் இறைவன் உங்களுக்கு கொடுத்த அழகான குழந்தைக்கு நாங்கள்தான் அன்பளிப்பாக பணம் கொடுக்க வேண்டும், ஆகவே இந்த இனிப்பு மட்டும் போதும் என்று எடுத்து கொண்டு பணத்தை வாங்க மறுத்து விட்டார்களாம்.

இங்குள்ள தம்பதிகள் குழந்தை உருவான முதல் மாதத்தில் இருந்து ஒவ்வொரு மாதமும் அழகிய புகை படத்தை எடுத்து கொள்கிறார்கள், அதனுடன் மருத்துவமனையில் தரும் ஸ்கேன் படங்களையும் இணைத்து அழகிய குறிப்புகளை எழுதிக்கொள்கிறார்கள்.

இது இப்படியே குழந்தை பிறக்கும் வரை தொடர்ந்து பின் குழந்தையுடன் சேர்த்து பல புகை படங்கள் எடுத்து கொள்கிறார்கள்.

இங்குள்ள புகைப்பட நிலையங்களில் இது ஒரு மொத்த ஒப்பந்த முறையில் (Package Offer) சாதாரணாமாக கிடைக்கிறது, ஒரு சில ஒப்பந்த முறை குழந்தை பிறந்து அடுத்த பிறந்தநாள் வரும் வரை தொடர்கிறது.

அதன் பின் வரும் ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் எடுக்கும் படங்களை, இதில் இணைப்பது என்று இதை அனுபவித்து ஆசை ஆசையாக தொடர்கிறார்கள்.

அதே போல் இவர்கள் வயது கணக்கும் நம்மை போல இல்லமால் மாறுபடுகிறது. அதாவது கருவில் ஒரு உயிர் உருவானது முதல் அதன் வயது தொடங்குகிறது என்றும், ஒரு குழந்தை பிறக்கும் போது அதன் வயது பத்து மாதம் அல்லது ஒரு வயது என்று கணக்கில் எடுத்து கொள்கிறார்கள்.

இனி வரும் குழந்தைகள், தலைமுறை ஆங்கிலத்தில் சிறந்து விளங்க வேண்டும் என்று பெற்றோர்களும் சரி அரசாங்கமும் அதிக அக்கறை எடுத்து கொள்கிறார்கள், ஆங்கில ஆசிரியர் வேலைக்கு தான் இன்று தென் கொரியாவில் ஆக அதிக ஊதியம் என்பது குறிப்பிட தக்கது.



இங்கு தொலைகாட்சியில் குழந்தைகளை அதிகம் கவருவது பெண் குழந்தைகளுக்கு
"போறோரோ" எனப்படும் "பெண்குயின் குழுவும்" ஆண் குழந்தைகளுக்கு "தாமஸ்" எனப்படும் "புகைவண்டி குழுவும்தான்".

இதன் மூலமும் குழந்தைகளை கவரும் மற்ற நிகழ்ச்சிகளின் மூலமும் அடிப்படை முறை கல்வி அனைத்தையும் கற்று கொடுத்து விடுகிறார்கள், மூன்று வயதிற்குள் ஒரு குழந்தை அடுத்து வரும் அடிப்படை கல்வி நிலையங்களில் படிக்க போகும் அத்தனை பாடங்கள் மற்றும் பாடல்களை இதன் மூலம் கற்று கொள்கிறது.



இந்த இடுகையில் மகிழ்ச்சி தரும் நல்ல விசையங்கள் மட்டும் இருந்தால் போதுமா, தொல்லை தரும் விசையம் ஏதாவது வேண்டாம்? அதான் என் சொந்த அனுபவத்தை கீழே சொல்கிறேன் கேளுங்கள்.

இப்படி இருக்கும் எல்லா ரைம்ஸ்சையும் பாடி பழகிட்டு, என் மகள் தினம் படுக்கையில் "டாட் பேபி சிலீப்பி சிங் எ சாங்" என்கிறார்கள்?

நானும் சரி என்று "டிவிங்கில் டிவிங்கில் லிட்டில் ஸ்டார்" என்றால்...
ஹோ... அந்தே ("அந்தே" என்றால் கொரியன் மொழியில் "நோ" வேண்டாம் என்று அர்த்தம்) சிங் போறோரோ சாங் "ரோ ரோ ரோத போட்" என்கிறார்கள்?

"டிவிங்கில் டிவிங்கில் லிட்டில் ஸ்டார்" என்று ஒரு பாட்டு இருப்பதே நான் டிவியில் "தங்க பதக்கம்" படம் பார்த்துத்தான் பழகிக்கொண்டேன் என்று புரியவைப்பதா?

அல்லது நாமும் மகள் தூங்கும் நேரத்தில் "போறோரோ, தாமஸ்" எல்லாம் பார்த்து பாடி பழகி கொள்வதா? என்ற குழப்பத்தில் உள்ளேன்!?.

உங்களுக்கு ஏதாவது அனுபவம் இருந்தா பின்னூட்டத்துல சொல்லிட்டு போங்க மக்கா :-).

நன்றி!.

Wednesday, December 16, 2009

மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு!

நல்ல விசையங்கள் பொதுவாக அனைவருக்கும் பிடிக்கும், அதுவே அழகாக இருந்தால் கேட்கவா வேண்டும்.

மகிழ்ச்சியான வாழ்கைக்கு என்ற தலைப்பில், என் அலுவலக நண்பர்கள் குழு ஒவ்வொரு நாளும் சில படங்களை மின் அஞ்சலில் அனுப்பினார்கள், நல்ல விசையங்களோடு அழகான படங்களும் இருந்ததால் அவை அனைத்தையும் ஒரு இடுகையாக கொடுக்கலாம் என்று பார்த்தால், அது மிக நீநீநீநீளமாக வந்தது.

என்ன கொடுமை மாமா இது? என்று நம்ம "கூகிள்" மாமாவிடம் ஒரு நல்ல வழியை கேட்க, அவர் காட்டிய ஒரு முறையில் பி.பி.டி வடிவில் இங்கு கொடுத்துள்ளேன்.

முழு திரைக்கு மாற்றி பார்க்கவும்.

.


பிடிச்சு இருந்தா ஓட்ட போடுங்க!, பிடிக்கலைனா "ரெண்டு வரி" பின்னூட்டத்தை போட்டு தாக்குங்க.

என் பதிவில் உங்கள் நேரத்துக்கு நன்றி!.

Saturday, December 12, 2009

என் பார்வையில் ரஜினி

பதிவுலகத்தில் இந்தமாதம் முழுவதும் பட்டையை கிளப்பிக்கொண்டு இருக்கும், என் நண்பர்கள் பதிவுகளில் இருப்பதை விட அதிகமாக ரஜினியை பற்றி என்னால் இங்கு வேறு எதுவும் சொல்லிவிட முடியாது என்று நான் நினைக்கிறேன்.



ஆகவே, அதே கருத்தை வேறு வார்த்தைகளை கோர்த்து சொல்வதிற்கு பதிலாக நேரடியாக அவர்களின் பதிவுக்கு இணைப்புகளை இங்கு கொடுத்துள்ளேன்.

I- இந்த வாரம் ரஜினி வாரம்

II- கிரி

III- ஈ ரா


என்னதான் வசதி, பெயர், புகழ் இருந்தாலும் மனதில் பட்டதை நேரடியாக பேசி, இயல்பு வாழ்கையில் எளிமையாக இருப்பதில் ரஜினிக்கு நிகர் ரஜினி-யேதான்.

இல்லாத ஒரு இமேஜை தானாக உருவாக்கிக் கொள்ள துடிக்கும் நடிகர்களுக்கு மத்தியில், தனக்கும் மட்டுமே உள்ள இமேஜை பற்றி கவலை படாமல், அவர் அவராகவே இருப்பதை யாராலும் மறுக்க முடியாது இல்லையா?



அவர் காலில் இருக்கும் செருப்பையும் கையில் இருக்கும் மொபைல் போனையும் பாருங்கள், இத்தனை எளிமையாக இன்று ஒரு நடிகரை பார்க்க முடியுமா?

போராட்டமான வாழ்கையை படிப்படியாக சந்தித்து வெற்றி வாகை சூடிய சூப்பர்ஸ்டாருக்கு, ஒரு நல்ல ரசிகன் என்ற பெருமையோடு இன்று போல் என்றும் வாழ என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

அவரது பிறந்தநாளை கொண்டாடும் ரசிகர்களாகிய அனைத்து சகோதர சகோதரிகளுக்கு என் வாழ்த்துக்கள்.

என்னதான் நமக்கு இடையில் சிலமைல் கடல்களும், சிலமைல் நிலங்களும் இருந்தாலும், உள்ளத்தால் ரஜினி ரசிகர்களாகிய நாம் என்றும் ஒன்று பட்டு இருக்கிறோம் என்ற முறையில் உங்களுடன் இந்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறேன்.


இனி என் பதிவில், என் மனதில் பட்ட சில கருத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

மகிழ்ச்சி என்பதே மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில்தானே இருக்கிறது, ஆகவே இதை தனிப்பட்ட ரஜினி ரசிகர்களுக்கான பதிவாக மட்டுமிலாமல், பொதுவாக சில விசையங்களை இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

எனவே, ஒரு ரஜினி ரசிகனாக இல்லமால் சில பொதுவான கருத்துகளை இங்கு பார்ப்போம்.

ஏன்? என்றால் ரஜினி ரசிகன் என்ற முத்திரையோடு, மற்ற யாரையும் குற்றம் சொல்வதோ காயப்படுத்துவதோ இங்கு என் நோக்கம் அல்ல.



யார் ரஜினி: நான் கடவுளில் "எம்.ஜி.ஆர்" வேடத்தில் ஒருவர், இன்று பார்த்தால் நண்டு சுண்டு நடிகர்கள் எல்லாம் பண்ணும் அலப்பறை இருக்கே, "ஐயோ அம்மா தாங்க முடியவில்லை" என்பார்.

இதை ஏன் இங்கு குறிபிடுகிறேன் என்றால், எதோ ஒரு படத்தில் கவுண்டமணி சொல்லுவார் "உன் மூஞ்சிக்கு கஜோல் மாதிரி துணி தைக்கணுமா, போய் கஜோல் கிட்டயே எதாவது பழசு பட்டையை வாங்கி போட்டுக்கோ" என்று.

அது போல் ரஜினி நடித்த பழைய வேடத்தில் இருந்து அவர் போடும் துணி முதல் வசனம் வரை அப்படியே அவரை தன் படத்தில் காப்பி அடிப்பது, அதுவும் அப்பா சம்பாதித்த பணத்தில் தானே படம் எடுத்து தனக்குதானே வெற்றி விழா போஸ்டர் அடித்துக்கொள்ளும் அரைகுறை நடிகர்களை எப்படி ரஜினியோடு ஒப்பிட முடியும்?

(இப்படி செய்வதால் இவர்களும் நளினிகாத், சின்னிஜெயந், விவேக் மற்றும் தாமு என்று நகைச்சுவை நடிகர் வரிசையில் வந்து விடமாட்டார்களா?).

ஒரு நடிகனாக ரஜினியை பார்த்தோம் என்றால், அவர் தன் தோற்றத்திற்கும் நடிப்பு திறமைக்கும் சரியாக பொருந்தும் வேடங்களை மட்டுமே அன்றும் இன்றும் செய்கிறார்.

இப்படி சொல்வதால் நான் மற்ற யார் படங்களையும் எனக்கு பிடிக்க வில்லை என்று கண்மூடித்தனமாய் சொல்வதாய் நினைக்க வேண்டாம். நான் சொல்ல வருவது, தங்களுக்கான வழியில் தனக்கு பொருந்தும் வேடத்தில் ஒருவர் நடிக்கும் எந்த படத்தையும் எனக்கும் பிடிக்கும்.

உதாரணமாக, சிம்புவின் - கோவில், தொட்டி ஜெயா, விஜையின் - பூவே உனக்காக, லவ் டுடே, துள்ளாத மனமும் துள்ளும், காதலுக்கு மரியாதை மற்றும் தனுஸின்- காதல் கொண்டேன், யாரடி நீ மோகினி என்று இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

இப்படி அவர்களுக்குரிய வேடத்தில் நடிப்பதை விட்டு விட்டு, அண்ணாமலை-யையும், பாஷா-வையும் திரும்ப திரும்ப எடுத்து விட்டு, நான்தான் சூப்பர் ஸ்டார் என்று தம்பட்டம் அடிக்கும் காமிடி கதாநாயகன்களை எப்படி ரஜினியோடு ஒப்பிட்டு பார்க்க முடியும் சொல்லுங்கள்!.



வெறும் அண்ணாமலை-யும், பாஷா-வும் அல்ல ரஜினி, அபூர்வராகங்கள் முதல் சிவாஜி தி பாஸ் வரை எத்தனயோ முத்திரைகளை பதித்து இந்த இடத்தை அடைந்து இருக்கிறார், அவர் செய்த அதையே திரும்ப செய்து இனியாராலும் அந்த இடத்தை அடைய முடியாது என்பது தான் உண்மை.



சூப்பர்ஸ்டார் நாற்காலி: சினிமா என்பது ஒரு தொழில் இதில் யாரும் நஷ்டப்பட்டு விடக்கூடாது என்பதில் நான் கவனமாக இருக்கிறேன்.

ஆகவே, யார் படம் மக்களுக்கு பிடித்து அதிக வசூலை தருகிறதோ, அவர்தான் சூப்பர் ஸ்டார் நாற்காலியில் உட்கார தகுதியானவர், என்று நடிகர் விக்ரமை ஒரு பாராட்டு விழாவில் ரஜினி சொன்னதுதான் உண்மையில் இப்போது வரும் "அந்த பட வசூலை மிஞ்சி" விட்டது "இந்த பட வசூலை தாண்டி" விட்டது என்ற "வெற்றி விழா" போஸ்டர்களின் ஆரம்பம்.

ரஜினியே இப்படி சொல்லி விட்டார் என்று, தன் சொந்த பணத்தில் போஸ்டர் அடித்து "மூன்று நாள் முழுதாக ஓடாத படத்தை கூட நூறாவது நாள் விழா எடுத்து" என் படம் ஓடி விட்டது, இனி நான்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று படம் காட்டும் நடிகர்களை நினைக்கும் போது என் கவலைகளை மறந்து சிரிக்க முடிகிறது.

இதை சற்று கவனித்து பார்த்தால், சூப்பர் ஸ்டார் நாற்காலி என்பது விக்ரமாதித்தன் சிம்மாசனம் போல், அவருக்கு பின் யார் வேண்டுமானாலும் அந்த சிம்மாசனத்தில் அமரக் கூடும், ஆனால் விக்ரமாதித்தன் சிம்மாசனத்தில் அமர்ந்தவர் எல்லாம் விக்ரமாதித்தன் கிடையாது என்பதுதான் உண்மை.



அதே போல், நல்ல லாபத்தை கொடுக்க கூடிய படங்களும் நடிகர்களும் இனி வரலாம், ஏன் சூப்பர் ஸ்டார் நாற்காலியில் கூட அவர்கள் அமரலாம், ஆனால், இனி வரும் யாருமே சூப்பர் ஸ்டார் நாற்காலியில் அமர்வதால் சூப்பர் ஸ்டார் ஆகிவிடப்போவதில்லை என்பதுதான் உண்மை.

அன்றும் இன்றும் என்றும் புரட்சி தலைவர், நடிகர் திலகம், நடிகவேல் எப்படி ஒரே ஒருவரோ, அது போல் என்றும் சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினி மட்டும்தானே?

தனிப்பட்ட வாழ்கையை விமர்சிப்பது நாகரீகமா?: நடிகை, நடிகர்களில் பல பெண்களிடம் தொடர்பு வைத்திருந்தவர், பல திருமணம் செய்து கொண்டவர், குடித்தே அழிந்தவர், சொத்து முழுவதும் அழித்தவர்கள் என்று நீண்ட பட்டியல் உண்டு என்பது நம் அனைவருக்கும் நன்றாகவே தெரியும் இல்லையா?

அப்படி இருக்க இதில் ரஜினி என்ன புதிதாக செய்து விட்டார் என்று அவரை மட்டும் குறை சொல்ல வேண்டும்?

உண்மையோ இல்லையோ எனக்கு தெரியாது. ஆனால், மனதை ஒருமுக படுத்தி தொடர்ந்து தியானத்தில் கவனம் செல்ல சில சித்தர்கள் கூட கஞ்சா புகைத்ததாக சில குறிப்புகள் உண்டு.



இப்படி இருக்க, பொதுத்துறையில் இருக்கும் பிரபலம் என்பதற்காக, அவரின் தனிப்பட்ட வாழ்க்கையையும் பொதுவாக்கி விமர்ச்சிப்பது என்பது எவ்வகையில் நாகரீகமாகும்?

நம்மில் யார்தான் குடிக்கவில்லை, தம் அடிக்க வில்லை? மற்றவர்களுக்கு தொல்லை அல்லது துன்பம் தராத விசையங்களை பற்றி விமர்சிப்பது என்பது காட்டுமிராண்டி தனமில்லையா?

இது மட்டுமில்லாமல் கர்நாடகாவில் சொத்து வைத்திருக்கிறார்?

இமயமலையில் சென்றுதான் தியானம் பண்ண வேண்டுமா? ஏன் கடவுள் இங்கு இல்லையா?

என்று அவரின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்ச்சிப்பது வேடிக்கைதான்.

தமிழக அரசியல் தலைவர்களுக்கு கர்நாடகாவில் சொத்து இல்லை என்று நினைத்தால்! அது அவர்களின் அறியாமையையே காட்டுகிறது.

மேலும் நமக்கு தேவை என்ற போது மட்டும், இந்தியா பொதுவானது என்று நமக்கும் பொதுவான தண்ணீரை தராவிட்டால், இந்தியன் என்ற உரிமையை கூறி திட்டும் நாம், தனிப்பட்ட உழைப்பில் ஒருவர், தன் சொத்துக்களை இந்தியாவில் எந்த இடத்திலும வாங்க உரிமை உண்டு என்பதை ஏன் மறந்து விடுகிறோம்?



அதே போல், இந்தியனாகிய ஒருவருக்கு இந்தியாவின் எந்த இடத்துக்கும் செல்ல இருக்கும் உரிமையை, அவர் விசையத்தில் மட்டும் மறுப்பது ஏன்?

அவர் இமயமலை போகிறாரே தவிர யாரையும் போக சொல்லவில்லையே!, மற்றும் மாற்று மத இன நம்பிக்கைகளை குறை சொல்ல வில்லையே? இதை ஏன் நாம் உணர மறுக்கிறோம்?

அரசியல் ஆக்காதீர்கள்: ரஜினி அரசியலுக்கு வரட்டும் அல்லது வராமல் போகட்டும், ஆனால் ரஜினிக்கு அரசியல் தொழில் அல்ல. அதே நேரத்தில் அவருக்கு ஒரு அரசியல் தலைவரை விட அதிக செல்வாக்கும் மதிப்பும் ரசிகர்கள் எண்ணிகையில் இருக்கிறது என்பதுதான் உண்மை.

இதனால், எங்கே நம் பிழைப்புக்கு பங்கம் வந்து விடுமோ? என்று நினைத்து, அரசியல்வாதிகள் அவர் மீது களங்கம் சுமத்துவது அனைவரின் உள்மனதுக்கும் தெரியும், இது இப்படி இருக்க!

மற்ற எந்த ஒரு விசையத்துக்கும் பெரிய ஒரு விளம்பரம் அதன் மூலம் வியாபாரம் தேவை, அதற்கு ரஜினி கண்டிப்பாக தேவை, அங்கு அவர் என்ன பேசினாலும் சரி, பேசாவிட்டாலும் சரி, அதனால் பலருக்கும் பணம், லாபம்.
தொலைக்காட்சி, பத்திரிக்கை என்று பல வியாபாரம் அடுத்த சில நாட்கள் சூடு பிடிக்கும்.



இப்படி அவர் எச்சிலை பணமாக்கி வளருபவர்கள் வளருட்டும், ஒருவருக்கு ரஜினியால் வயிறு நிறைகிறது என்றால் அதை பற்றி அதிகம் விவாத்திக்க வேண்டாம் விட்டு விடுவோம்.

ஆனால், இந்த தொழில் ரகசிய அரசியலை புரியாமல் அவரின் எல்லா செய்கைகளையும் அரசியல் ஆக்குவது எப்படி நியாயம் ஆகும் என்று சிந்தித்து பார்க்க வேண்டாமா?

இனி ஒரு ரசிகனாக ரசிகர்களுடன் சில வார்த்தைகள்: வாழ்த்துக்கள் ரஜினி ரசிகர்களே, அவரின் ரசிகர் என்று சொல்லுவதில் பெருமை படும் நாம், அவர் என்னவோ நம் கையை பிடித்து கூட்டிக் கொண்டு சென்று "கண்ணா இதுதான் கெட்டுபோகும் வழியின் கதவு என்று திறந்து விட்டது போல்", சிலர் அவரை பற்றி பேசும் அளவு நாமே வழிவகுத்து விட்டோம் என்பதில் நாம் பெருமைகொள்ளத்தான் வேண்டும் இல்லையா?

இதுவா நாம் அவரிடம் கற்றுக்கொண்டது? அல்லது இதுவா அவருக்கு பெருமை?

சற்று சிந்திக்க வேண்டும் தோழர்களே, அவர் வீட்டை சுற்றி அல்லது வேலை இடங்களுக்கு சென்று தொல்லை கொடுப்பது என்று இன்னும் ஒரு சமமான மன நிலைக்கு நாமே வராமல் "பொருத்தது போதும் பொங்கி வா தலைவா" என்று போஸ்டர் அடிப்பதில் என்ன நியாயம் இருக்கிறது?.

அவரை பார்ப்பதும், கை குலுக்கி ஒரு புகை படம் எடுத்துகொண்டு அதை படம் போட்டு காட்டுவதில் மட்டும் தான் நம் எண்ணம் முழுவதும் இருக்கும் பட்சத்தில், அவர் நடிகராகவே இருந்து விடுவது தான் நாம் அவருக்கு செய்யும் பெரிய உதவி.

என்ன இப்படி சொல்கிறீர்கள் என்று வருந்த வேண்டாம். பின் வேறு என்ன சொல்வது சற்று சிந்தித்து பாருங்கள்!.



ஒரு நாட்டை தலைமை தாங்கி நடத்துவது என்பது எவ்வளவு பெரிய பொறுப்பு, அந்த பாரத்தை அவர் தலையில் வைக்கும் முன், அதற்கு பக்க பலமாக நம்மை நாமே தயார் படுத்த வேண்டாமா?

முதலில் உங்கள் தொழில், படிப்பு என்று உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை மற்றும் உங்கள் குடும்ப வாழ்கையில் நிலையான இடத்தில்தான் நாமும் இருக்கிறோம் என்றும், மற்ற யாருக்கும் குறைந்து விடவில்லை என்றும் சமுதாயத்துக்கு காட்டுங்கள்.

பின் உங்கள் பகுதியில் இருந்து வாழ்க்கை முறை, வேலை, குடும்ப சூழ்நிலை என்று பிரிந்து கிடக்கும் ரசிகர்களை ஒன்று திரட்டுங்கள், அதன் மூலம் அடிமட்டத்தில் இருந்து தலைமை வரை ஒரு முறையான தொடர்பு முறையை மேம்படுத்துவோம்.

மார்க்கெட்டில் கத்திரிக்காயை விட மலிவாக இன்று தொலை தொடர்பு வசதிகள் இருக்கிறது, உங்கள் மன்றத்தை சார்ந்த உலகமெங்கும் இருக்கும் ரசிகர்களை வரிசைபடுத்தி ஒரு இணைய வட்டத்திற்குள் கொண்டு வருவோம்.

அந்தந்த மன்றத்தை சேர்ந்த மக்களின் வயது, படிப்பு, வேலை, தொழில், தொலைபேசி, மின்னஞ்சல் தொடர்பு, ஓட்டுரிமை பகுதி என்று வரிசைபடுத்தி அட்டவணையை ஒழுங்கு படுத்துவோம்.

பணம் கொடுத்து கூட்டம் கூட்ட, நாம் ஒன்றும் அரசியல்வாதிகள் இல்லையே!, அதனால் அந்தந்த தொழில் சார்ந்த ரசிக மக்களின் உதவியுடன் அந்தந்த பகுதியில், சட்டத்துக்கு உட்பட்டு நம் பகுதி மக்களுக்கு தேவையானதை அகிம்சை வழியில் பெற்றுதந்து, மக்களுக்கு ரஜினி ரசிகர்களால் ஆக்கத்துக்கும் பாடுபட முடியும் என்று புரிய வைத்து, அவர்கள் ஆதரவும் நம்மோடு சேரும் படி செய்ய வேண்டும்.

முக்கியமாக இவை அனைத்தும் நம் தொழில் குடும்ப வாழ்க்கை பதிக்காமல், பதிவு எழுதுவது போல் தனியாக கொண்டு செல்வோம்.

இதனால் மக்களும் பணத்துக்கு ஓட்டை விற்பது தவறு என்று தலைவர் பாணியில் வேஷ்டி சட்டை வேண்டாம் வேலை வெட்டி கொடுங்கள்! என்று கேட்கும் நிலைக்கு வந்து விடுவார்கள்.



இதுபோல் அரசியலில் இல்லாமல் அத்தனை தொகுதிகளிலும் நம் செல்வாக்கை நம்மை நாமே சோதித்து, அதன் விடையை தலைவருக்கு மக்கள் கொடுக்கும் படி செய்வதுதான் உண்மையில் இப்போது நமக்கு தேவை.

இப்படி இது வெறும் கொடி கட்டி விசிலடிக்கும் கூட்டம் மட்டும் அல்ல என்று மக்களும் மற்ற அரசியல் தலைமைகளும் முழுதாக புரிந்து கொள்ளும்படி முதலில் செய்து விட்டு, அதன் பின் வாங்க தலைவா என்று கூப்பிடுவதில் தான் ஒரு அர்த்தம் இருக்கிறது என்பது என் கருத்து

என் பதிவில் உங்கள் நேரத்துக்கு நன்றி சொல்வதோடு, இவை அனைத்தும் என் தனிப்பட்ட கருத்துக்கள் என்பதால், எதிர் கருத்தாயினும் அதை இங்கு மனம்விட்டு நீங்கள் சொல்வதன் மூலம் உங்கள் எதிர்பார்ப்பை அல்லது மனநிலையை படிக்க உதவும்.

நன்றி!.

Monday, December 7, 2009

வெளிநாட்டு வேலையும்! உலக சந்தையும்!

முன்பு பாரின் கால் என்ற தலைப்பில் எழுதிய பதிவில் பிரியமுடன் வசந்தின் பின்னூட்டதிற்கு, பின்பு ஒரு பதிவில் இதை பற்றி பார்ப்போம் என்று சொன்னதின் தொடர்ச்சியாக கூட இந்த பதிவை எடுத்துக்கொள்ளலாம்.

உலகசந்தை பொதுமயமாகிவிட்டது என்றால் "என்னது ஒபாமா அமெரிக்க அதிபராகிவிட்டாரா!" என்பது போலத்தான் என்று நான் அறிவேன், அதுவல்ல இப்பதிவின் நோக்கம்.

கடந்த இருபது ஆண்டுகளில் நடந்த வெளிநாட்டு வாழ்க்கை முறை மாற்றத்தை பற்றி முழுதாக புரிந்து கொள்ளாமல், நம் நாட்டில் இன்னும் வெளிநாட்டு வேலை மோகத்தில் இருப்பது வருந்ததக்கது.

வெளிநாட்டு வேலை மூலம், குறுகிய காலத்தில் அதிக பணம் சம்பாதிக்க முடியும் என்ற நம்பிக்கை கூட இதற்க்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம்.

முதலில் ஒன்றை தெளிவு படுத்த வேண்டும், உலகின் இயற்கை தத்துவத்தின் படி ஒரு விதையை இழந்தால்தான் ஒரு விருச்சத்தை பெற முடியும், இதை யாராலும் மாற்ற முடியாது.

ஆனால், இதில் கவனிக்க வேண்டியது இழப்பது ஒரு விதையானாலும் அந்த விருச்சதின் மூலம் கிடைப்பது பல என்பதை கருத்தில் கொள்ளவேண்டும்.

வரலாற்றை திரும்பி பார்த்தால் ரப்பர் தோட்டத்திலும், அடிமட்ட கூலி வேலைக்கும், நம் மக்கள் இடம் பெயர்ந்து சென்றார்கள்.

பின்னாளில் காலம் மாற கல்வி கூட, தகுந்த வசதிகளுடன் கூடிய நாட்டுக்கு வேலைக்கு சென்றார்கள் (இது கூட ஒருவகை ரிமிக்ஸ் கூலி வேலை என்பதுதான் உண்மை).

ஆரம்பத்தில் ஒவ்வொரு நாட்டின் பண வீக்கத்தை பொருத்து, வேலைக்கு சென்ற நாட்டில் அடிப்படை வாழ்க்கையை சிக்கனமாக வாழ்ந்து அதில் மிச்ச படுத்திய பணத்தை நம் நாட்டில் கொண்டு வந்து மாற்றும் போது அது அவர்களுக்கு பெரிய பலனை தந்தது, அது அந்த காலம்.

அப்போது உலகசந்தையும் பொதுமயமாக இல்லை, எனவே ஒரு நாட்டில் தயாரிக்க படும் பிரபல பொருட்கள் அந்தந்த நாட்டில் இருந்து ஏற்றுமதி செய்ய பட்டு, நம் நாட்டில் இறக்குமதி விற்பனையுடன் சேர்த்து சந்தைக்கு வரும் போது அதன் விலை அதிகமாக இருந்தது, இதனால் அப்பொருட்களை அந்தந்த நாட்டில் குறைந்த விலையில் வாங்க முடிந்தது.

அது மட்டுமிலாமல், அப்போது நம் நாட்டில் வெளிநாட்டு பொருள்கள் கிடைப்பது மிக அரிதாக இருந்தது, ஆனால் இன்று மொபைல் போன் முதல் மெர்சிடிஸ்-பென்ஸ் வரை தயாரிக்க படுவதே நம் நாட்டில் என்பது தான் உண்மை .

காரணம் குறைந்த விலையில் தயாரிப்பு பொருட்கள், குறைந்த ஊதியம் மட்டுமிலாமல் குறைந்த சலுகைகள் கொடுத்தாலே கிடைக்கும் தொழிலாளர்கள், இட வசதி, சுற்று புற சூழல் கேடு என அனைத்தும் வேறு நாடுகளை சேர்வதால், இன்று உலக நாடுகளின் பெரும்பாலான தயாரிப்புகள், இந்தியா மற்றும் சீனாவுக்கு மாற்றப்பட்டு விட்டது.

இதன் காரணமாக, முன்பு போல் இல்லாமல் அனைத்து தரப்பு வேலைகளும் இப்போது நம் நாட்டில் கிடைக்கிறது, ஊதியமும் கிட்டதட்ட வெளிநாட்டுக்கு நிகராக இப்போது நம் நாட்டிலேயே பெற முடிகிறது.

ஆனால், இப்போதைய தேவை "இளைய தலைமுறைகள்", இவர்கள் வெளிநாட்டில் மட்டும் வேலை செய்ய நினைக்காமல் நம் நாட்டிற்கு தங்கள் உழைப்பை கொடுக்க முன் வர வேண்டும்.



வருடம் ஒருமுறை விடுமுறைக்கு வரும் உறவினர்கள் மற்றும் நண்பர்களை வைத்து வெளிநாட்டு வாழ்கையை எடை போடாதீர்கள் நண்பர்களே!.

தெளிவாக பார்த்தால் அன்றும் இன்றும் நம்மை வெளிநாட்டு நிறுவங்கள் அதிகமாக அங்கிகரிக்கும் முறை இரண்டே இரண்டுதான்.

I - அடிமட்ட கூலி தொழிலாளர்கள்

II - நடுத்தர தகுதி அடிப்படை தொழிலாளர்கள்

இவை இல்லாமல் மேல் தரத்தில் ஆராய்ச்சி போன்ற துறைகளில் செல்பவர்கள் விரல் விட்டு விட்டு எண்ணும் அளவில் தான் இருக்க கூடும், அப்படியே சென்றாலும் அவர்கள் தலைமை அதிகாரியாக இருப்பது அதிசையம் தான்.

அடிமட்ட தொழிலாளர்கள்

முதல் வரியில் சொன்னது போல், இன்றும் நம் மக்கள் இந்த வரிசையில் முன்னிலையில் இருப்பது வேதனைக்குரியது, இவர்களை வெளிநாட்டு ஒப்பந்த வேலைக்கு கவர்வது மிக எளிது. இங்கு இந்தியாவில் மாதம் ஆறாயிரம் கிடைக்கும் வேலைக்கு, அங்கு அறுபதாயிரம் என்ற ஒரு வரி விளம்பரம் போதும்.

இதில் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் தொடர்பில் வருபவர்கள் தேவலம். ஆனால், இடை தரகர்கள் பேச்சை நம்பி இரண்டு முதல் மூன்று லட்சங்கள் செலவு செய்து, அதுவும் கடன் வாங்கி, இந்த வேலைக்கு வருபவர்கள் நிலை சொல்ல முடியாத வலியை கொடுக்கும்.

இவர்களை பொறுத்த வரை தங்கும் இடம் இலவசம், போக மாதம் அறுபதாயிரம் ஊதியம், இதில் மாதம் ஐம்பதாயிரம் மிச்ச படுத்தினால் கூட, வருடம் ஆறு லட்சங்கள் சேர்த்து விடலாம், என்பதுதான் இவர்களின் ஆரம்ப கனவாக இருக்கும்.

ஆனால், இவர்களில் முதல் முறை வரும் பலருக்கும் இங்கு அறுபதாயிரம் என்பது நம் ஊரில் ஆறாயிரம் கிடைப்பதை விட குறைவு என்ற பொருளியல் விபரம் தெரிவதில்லை.

மேலும் இங்குள்ள வேலைமுறை பெரும்பாலும் அவர்களுக்கு சரியான முறையில் எடுத்து சொல்லப்படுவதில்லை, அதிலும் தவறான இடை தரகர்கள் கையில் மாட்டுபவர்களின் நிலை மிக பரிதாபம், குறிப்பாக பெண்கள்.

குறைந்தது பனிரெண்டு மணிநேரம் முதல் பதினெட்டு மணி நேரம் வரை ஓய்வில்லாத கடும் வேலை, மாதத்தில் ஒரு நாள் மட்டும் தங்கி இருக்கும் இடத்தை விட்டு வெளியில் வர அனுமதி, என்று மூன்று வருட இறுதியில் வாங்கிய கடன் வட்டியுடன் கட்டியது போக, மிஞ்சுவது என்னவோ ஒரு ஐம்பது ஆயீரம்தான் என்று சொன்னார்கள்.

இப்படி பார்த்தால், இங்கு இழப்பது ஒரு விதையல்ல, ஒரு இளைஞனின் மூன்று வருட வாழ்க்கை.

(நூறு இளைஞர்களை கொடு, இந்த நாட்டின் தலைஎழுத்தையே மாற்றி காட்டுகிறேன்!, என்று விவேகானந்தர் சொன்னதை இங்கு சற்று நாம் நினைத்து பார்க்க வேண்டும்).

கர்பமாக இருக்கும் மனைவியை விட்டுவிட்டு வெளிநாடு சென்று, பின் தன் சொந்த குழந்தையை மற்றும் குடும்பத்தை மூன்று வருடம் கழித்து நேரில் பார்த்தவர்களின் கதை எல்லாம் இதில் உண்டு.

இதை பற்றி நான் கேட்டறிந்ததை எழுத முடியுமே தவிர, அதன் உண்மை வலியை, என் வார்த்தைகளால் உணர்த்த முடியாது.

ஆனால், இதை அனுபவித்தவர்கள் ஒரு வழிகாட்டியாக இருந்து, இனி வரும் நம் தலைமுறைக்கு எடுத்து சொல்லி, அவர்களின் வெளிநாட்டு வேலை மோகத்தை அறவே நீக்க முடியும் இல்லையா?.

அப்படியும் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் இது போல செல்ல இருப்பவர்களை, தகுந்த தரகர், நல்ல நிறுவனம், மேலும் சரியான வேலை முறையை தேர்ந்து எடுக்க வேண்டும்.

மேலும் எந்த ஒரு ஒப்பந்தத்திலும் கையப்பம் இடும்முன், அருகில் உள்ள அரசாங்க வெளிநாட்டு வேலை ஆலோசனை மையத்தை தொடர்புகொண்டு, இவை அனைத்தும் சரியான தகவல்களா? மற்றும் தான் செல்ல விருக்கும் விசாமுறை சரியானதா? என்று ஆலோசனை பெற்று, அதன் பிறகு செல்ல வழிகாட்ட வேண்டும்.

நடுத்தர தகுதி அடிப்படை தொழிலாளர்கள்

அடுத்தது படித்த, தொழில் தகுதி அடிப்படையில் வரும் நம் கணினி துறை உட்பட நடுத்தர பணியாளர்கள்.

படித்து முடித்ததும் முடியாததும், தனக்கு மட்டுமே திறமை இருப்பதாகவும் அதை நம் நாடு மதிக்கவில்லை என்று குறை சொல்பவர்களும் இதில் உண்டு.

ஆக, இவர்கள் படித்தவர்கள், நடுதரத்தில் இருந்து மேல் மட்டம் செல்ல துடிப்பவர்கள்.

எதோ ஒரு பதிவில் படித்த படி, "இந்த குடும்பத்தின் எதிர் காலமே உன் கையில் தான் இருக்கிறது என்று தலையில் திருநீறு போட்டு விமான சீட்டை கையில் கொடுத்து அனுப்பிய தமிழ்நாடும், ஆந்திராவும்தான் இதில் அதிகம்".

அடிமட்ட வசதி (அப்பா அம்மா சம்பாதித்தது) இருப்பதால் மேல் சொன்ன முறையில் இவர்களை வெறும் ஊதியத்தை சொல்லி, ஒரு வரி விளம்பரத்தில் கவர முடியாது.

ஆனால், இவர்களை கவர்வது அதை விட எளிது, ஏன் என்றால்! இவர்களின் அடுத்த தேவை, நாகரீக வாழ்க்கை முறை, நவீன வீடு மற்றும் குறிப்பாக "கார்".

எனவே, அதையே சற்று பெரிதாக, சொந்த வீடு, கார், மருத்துவ காப்பீடு மற்றும் வெளி நாட்டு குடியுரிமைக்கு நிறுவ பரிந்துரை என்று அதுவும் ஆங்கிலத்தில் சொன்னால் போதும்.

இதையே வேறு வேறு ஆங்கில வார்த்தைகளை கொண்டு சொல்லி, முடிந்த வரை இவர்கள் ஊதியத்தை குறைக்க அங்கும் ஒரு பச்சை தமிழன் அல்லது பக்கா இந்தியன், மனித வளத்துறை என்ற பெயரில் நுனிநாக்கு ஆங்கிலத்தில் தேனை தடவி பேசி பேசியே விமானத்தில் ஏற்றி விட்டு விடுவார்கள்.



ஒரு வழியாக வண்ண வண்ண கனவுகளுடன் வெளி நாட்டில் வந்து இறங்கியவுடன், அங்கு ஒரு மனிதவளத்துறை குரல் சொல்லும்...

"சார்" (மருவாதி மருவாதியாம்), உங்களுக்கு ஒரு கார், அப்புறம் உங்களுக்கு ஒரு வீடு, நீங்க எந்த மாடல் வேணும்னாலும் தேர்வு செய்யலாம், அதற்கான வங்கி லோன் பணமாற்று, நம் நிறுவன பரிந்துரை மற்றும் உங்கள் ஊதிய சான்று காகிதங்கள் இதில் இருக்கு.

நீங்க வெறும் கையப்பம் மட்டும் போட்டா போதும்னு, படிக்க முடியாத அளவு சின்னதா எழுதி இருக்க ஒரு நூறு காகிதமாவது அதில் "நச்சத்திரம்" போட்ட ஒரு ஆயீரம் ஒப்பத்ததுடன் நம்ம முன்னாடி இருக்கும்.

(இது நாடு, நம்ம நாடும் இருக்கே!, எவனாவது மதிச்சானா? அப்படின்னு மனசுக்கு கீழ பிளாஷ் நியூஸ் ஓடும்).

என்னாடா இது! குடியுரிமை விண்ணப்பம் எதுவுமே இல்லன்னு கேட்டா?

இது எல்லாம் முடிஞ்சு, நீங்க ஒரு மூணு வருஷம் வருமான வரி கட்டியவுடன் வாங்கி விடலாம், அது ஒன்றும் பெரிய விசையம் இல்லை என்று சொல்லி, அப்போதைக்கு சமாளித்து விடுவார்கள்.

நம்மளும் நம்ம கலாச்சார படி "சரி வெள்ளையா இருக்கவன் பொய் சொல்ல மாட்டன்னு நம்பி"... மனசுக்குள்ள "வெற்றி நிச்சியம் இது வேத சத்தியம்" இல்லனா,"வெற்றி கொடி கட்டு"-ன்னு பாட்டு ஓட, சிரிச்ச முகமா (அதுதான் கடைசி சிரிப்பா பலருக்கு இருக்கும்) கையப்பம் போட்டு தள்ளுவோம்.

எல்லாம் முடிஞ்சு, நமக்கு கண்ணு தெளிவா தெரியும் போதுதான், "பிதா மகன் சூர்யா சூதாட வந்த லைலாவிடம் சொல்வது போல் " போல் விசையம் வரும்.

இப்ப பாருங்க (சார் மிஸ்ஸிங்)...கம்பெனி மொதல்லயே சொன்னா மாதிரி...

உங்களோட மாத ஊதியம் இரண்டு லட்சம், இதுல காருக்கான லோனுக்காக மாதம் ஒரு சிறிய தொகையா முப்பது ஆயீரம், இது வெறும் பத்து வருட பிடித்தம்தான்.

அப்புறம் பாருங்க உங்க வீட்டு லோனுக்காக ஒரு சிறிய தொகையா ஒரு தொண்ணூத்தி இரண்டாயீரம் பிடித்தம், இதுவும் ஒரு முப்பது வருடம் தான்.

(இப்படி சொந்த வீடு வாங்காதவர்கள், அதே தொகையை வாடகை வீட்டுக்கு கொடுத்து விட்டு, ரியல் எஸ்டேட் விலையை ராக்கெட் மாதிரி ஏற்றிவிட்ட பெருமையுடன், நம்ம ஊரில் ஒரு மூன்று படுக்கை அறை வீட்டை வாங்கி விட்டு தவணையுடன் வருட பராமரிப்புக்கு ஒரு ஒருலட்சம் வரை கட்டிக்கொண்டு இருப்பார்கள்.)

அத்தோட, உங்கள் மருத்துவ காப்பீடு இதர சகிதங்களுக்காக மாதம் ஒரு ஐய்யாயிரம் பிடித்தம் போக, மீதி தொகை மாதா மாதம் உங்கள் வங்கி கணக்கில் வந்து விடும், மேலும் உங்கள் தேவைக்கு கடன் அட்டைகள் வந்து விடும் என்று சொல்ல, நமக்கு கடைசியாக "செருப்பை வைத்து சூதாடும் லைலா முகம்" போல் ஆகிவிடும்.

வேறு வழி, "உள்ளதை அள்ளித்தா படத்தில் மணிவண்ணனிடம் வேலைக்கு சேரும் கார்த்திக் போல" சேரும்படி ஆகிவிடும்.

ஏன் என்றால்? மீதம் வரும் எழுபதாயீரம் என்பது அடிப்படை மாத செலவுகளுக்கு ஆகும் தொகையை விட சற்று குறைவு (அதற்கு தான் அந்த கடன் அட்டைகள் என்பது இப்போது தான் புரியும்).

ஆக, ஒட்டு மொத்தம் முப்பது வருட இளமையுடன் வாழ்கையை அடகு வைத்தாகி விட்டது.

இனி வரும் வாழ்க்கை சூத்திரம் மிக மிக எளிது.

அந்த கடனை எப்படி கட்டுவது!, இந்த கடனை எப்படி கட்டுவது?, கடனை கட்டும் வரை வேலை போகாமல் எப்படி பாதுகாப்பது!, வேலை போய் விட்டால் மாத தவணையை எப்படி கட்டுவது?, மாத தவணையை கட்ட அடுத்த வேலையை எப்படி பிடிப்பது!?

ஆக மொத்தத்தில் "கடன்+கவலை+மனஉளைச்சல்=வெளிநாட்டு வாழ்க்கை" என்று மாறி விடுவதுதான் அதிகம்.

இதில் இன்னும் கொடுமை, நடுவில் பொருளியல் மந்தம், சுனாமி, குண்டு வெடிப்பு, என்று எது நடந்தாலும் வாங்கிய வீட்டின் விலை குறைந்து விடும்.

ஆனால், வங்கிக்கு வாங்கிய தொகை குறையாது, அதனால் வீட்டை விற்றும் கட்ட முடியாது, இப்படி வாழ்கையில் வெளிநாட்டு பெண் வந்தாலும் சரி அல்லது பெண் பெயரில் புயல் வந்தாலும் சரி, வயிற்றை கலக்குவது இவர்களுக்குத்தான்.



அதெல்லாம் சரி!, அப்படியும் ஏன்? அங்கு இருக்க வேண்டும் என்பது, இங்கு ஒரு கேள்வியாக கூடும்?

மேல் சொன்ன படி இளமை துடிப்பில் விளையாட்டாக ஆரமித்து விட்டதை, முடிக்காமல் அல்லது திரும்ப வந்து அங்கு புதிய வேலை தேடி, அதில் கிடைக்கும் வருமானத்தில் இங்கு இருப்பதை கட்டி முடிக்க முடியுமா? என்று குழம்பித்தான், இன்று அதிக சதவீதம்
இருக்கிறார்கள், என்று சொன்னால் அது தவறாகாது என்று நினைக்கிறேன்.

மேலும் இடைப்பட்ட இந்த காலத்தில், இதை சமாளிக்க அதில் எடுக்க, அதை சமாளிக்க இதில் எடுக்க என்று வயது மட்டும் போய் ஆரமித்த இடத்திலேயே இருப்பவர்களும் உண்டு, கூடவே மன அழுத்தம், ரத்த கொதிப்பு, நீரழிவு போன்று அவரவர் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ற பரிசும் உடலில் சேர்ந்து விடும்.

அவ்வளவு ஏன்! வருடம் ஒரு முறை விடுமுறையில் வந்து விட்டு போனால் கூட, அதை சமாளித்து நடை முறை வாழ்க்கைக்கு திரும்ப குறைந்தது நான்கு மாதமாவது ஆகும், என்று சொல்பவர்களும் உண்டு.

இதற்காக இழந்ததுதான் எத்தனை எத்தனை, வாழ்க்கை, வயது, சுற்றம், சொந்தம், நட்பு, இத்யாதி...இத்யாதி...

இது உண்மையா! இல்லையா? என்று சந்தேகம் வந்தால், பத்து வருடங்களுக்கு மேல் வெளிநாட்டில் இருக்கும் யாரையும் கேளுங்கள் (சிங்கப்பூர், மலேசியா போன்று அருகில் இருக்கும் நாட்டை தவிர).

சக நிகழ்வாக, அவர்கள் வந்திருக்கும் நேரத்தில் நடந்ததை தவிர, இந்த இடைப்பட்ட வருடங்களில் எத்தனை திருவிழாக்ளில், திருமணங்களில் அல்லது துக்கத்தில் கலந்து கொண்டீர்கள் என்று?.

இப்படி, தன்னை தானே தனிமை படுத்தி, இங்கு இருபதாயிரம் வாங்கும் ஒருவர் வாழும் அதே வாழ்கையை அங்கு இரண்டு லட்சம் என்ற பெயரில் வாழ்வதுதான் இன்றைய வெளிநாட்டு வாழ்கை.

இதில் நம் கலாச்சாரத்தின் வாடையே இல்லாமால், இயந்திரத்தோடு இயந்திரமாய் வளரும் குழந்தைகளின் நிலை சொல்லவா வேண்டும்.

கொஞ்சி மடியில் விளையாட வேண்டிய உறவுகளை, மாமா, தாத்தா, பாட்டி என்று தனக்கு தானே தனியாக தொலைபேசியில் நலம் விசாரித்து விளையாடுவது வார்த்தைகளில் சொல்ல முடியாத ஒன்று.

உலகிலேயே நாம்தான் மென் பொருள் தயாரிப்பில் சிறந்த அறிவாளிகள், ஆனால் நம் நாட்டை விட வெளிநாடுதான் நம்மை மதிக்கிறது என்று சொன்ன அனைவரிடமும் நான் கேட்டது ஒன்றே ஒன்றுதான்.

உலகிலேயே மென் பொருள் தயாரிப்பில் நாம்தான் சிறந்த அறிவாளிகள் என்பது உண்மையானால், நம்மை விட மென்பொருள் தயாரிப்பு அறிவில் குறைந்தவர்கள், எப்படி நம் தயாரிப்பை சோதித்து உலக தரமானது என்று ISO, BS சான்றிதழ் கொடுக்க முடியும்?

அதை வாங்க நாம் அல்லது நம் நிறுவனங்கள், ஏன் போட்டா போட்டி போட வேண்டும்?

ஆக, நமக்கு அன்றும் இன்றும் சிறந்த தொழிலாளியாக இருக்க மட்டுமே தெரியும், அவர்களுக்கு சிறந்த முதலாளியாக இருக்க தெரியும் என்பதுதான் உண்மை.

இதை வரும் தலைமுறைகளுக்கு எடுத்து சொல்லி, அதே உழைப்பை நாம், நம் சொந்த நாட்டுக்கு செய்வதன் மூலம், அடுத்து வரும் நம் தலைமுறை நம்மை போல சிறந்த தொழிலாளியாக மட்டும் இல்லாமல், உலக தரம் வாய்ந்த முதலாளியாக இருக்க முடியும் இல்லையா?

அதன் பின் நாம் ICIS (Indian Certified International Standard) என்று மற்றவர்களுக்கு சான்றிதழ் கொடுக்க முடியும் இல்லையா?

இனி வரும் நம் தேசத்தின் வருங்கால தூண்கள், இதை சற்று சிந்தித்து பார்க்க வேண்டும் என்பதே என் விருப்பம், நோக்கம்.

பதிவை முடிக்கும் முன் கடைசியாக, ஒரு முறை விமானத்தில் சந்தித்த சீக்கியர் ஒருவர் சொன்ன வார்த்தை, என் மனதை விட்டு இன்றுவரை நீங்கவே இல்லை.

நம் தென்இந்தியாவில் காலில் செருப்பு கூட இல்லாமல் வெறும் வேட்டி துண்டுடன் வரும் ஒரு விவசாயியை பார்த்தால், அவரிடம் அத்தனை நில சொத்துக்களும் கையிருப்பு பணமும் தானியமும் இருக்கும்.

ஆனால், என்னதான் நாம் காரில் வெளிநாட்டு முத்திரையோடு சுற்றி வந்தாலும், நம் தபால் பெட்டியில் கடிதத்தை விட கடன் தவனை ரசீதுதான் அதிகம் இருக்கும்.

என்றுதான் மாறுமோ இந்த வெளிநாட்டு மோகம்?.
 

Blogger Widgets