Sunday, December 5, 2010

விமான பயணம் கவனம்!

இது நிறுவனங்களின் குறையை சுட்டி காட்டும் பதிவே தவிர, அதில் வேலை செய்யும் ஊழியர்களை குறை கூற அல்ல.

மேலும், இது வாடிக்கையாளர் சேவையை பற்றிய பதிவு என்பதால், அவர்கள் வேலையில் உள்ள கஷ்டத்தை காட்டும் வகையில் மின் அஞ்சலில் வந்த ஒரு பகிர்வுக்கு பின் விசையத்தை பார்க்கலாம்.





பொதுவாகவே நம்மிடம் விமான பயணம் என்றதும் எதோ புதிய அல்லது உயர்தர வாழ்கை முறையை சார்ந்த ஒன்று என்ற எண்ணம் இருக்கிறது, இதை பயன் படுத்திக்கொண்டு இந்த நிறுவங்கள் செய்யும் அட்டகாசம் சொல்ல முடியாத அளவு வந்து விட்டது.

விமான பயணமும் பஸ், ரயில் போல ஒரு பயண முறை மட்டுமே மற்ற பயண துறைகளுக்கு உள்ள எல்லா சட்டமும் இதற்கும் பொருந்தும் என்பதை நம்மில் எத்தனை பேர் கவனிக்கிறோம்?

என்னிடம் இந்தியா செல்ல ஒரு விமான சீட்டு இருந்தது, ஆசியாவின் முன்னணி விமான நிறுவங்களில் அதுவும் ஒன்று, வேலை பளு மற்றும் அலுவலக விடுமுறை படி என்னிடம் இருக்கும் பயண தேதிக்கு இரண்டு நாள் மாறுபட, பயணதேதியை மாற்றி அமைக்க அந்த விமான நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவையை அழைக்க, அந்த பெண் என்னிடம் பேசியது, என்னை ஒரு அடிமுட்டாள் போல நினைப்பதாக இருந்தது.

விமானசீட்டு விலை வேலை நாட்கள், வாரஇறுதி என்று பயண நாட்களை பொருத்து சற்று மாறுபடும் என்பது எனக்கு தெரியும். ஆனால், அவர் சொன்னது கிட்டதட்ட பதினாராயிரம் வித்தியாசம்!, இது கண்டிப்பாக சாத்தியமில்லை என்று எனக்கு புரிய, ஏன் என்று கேட்டேன்?

அந்த பெண் நான் எதோ விமானத்தை முன்பின் பார்த்திராத போல் நீங்கள் வைத்திருக்கும் வகுப்பில் தற்போது இருக்கை காலி இல்லை என்பதால், நான் உங்களுக்கு வேறு வகுப்பில் இருக்கை தருகிறேன் என்று சொல்ல, நானும் "(C) Economy Class, (B) Business / Executive Class, (A) First Class" இதில் எந்த வகுப்பில் தருகிறீர்கள் என்று கேட்க? அவரிடம் பதில் எதுவுமில்லை, சிறிது நேரம் என்னை காக்க வைத்து விட்டு திரும்ப அவர் சொன்ன பதில் என் கோவத்தை இன்னும் அதிகமாகியது.



அதாவது தற்போது நான் வைத்திருக்கும் அதே வகுப்பில் பயண தேதியை இரண்டுநாள் தள்ளி மாற்றி தர இந்த கட்டணமாம், காரணம் நான் கேட்கும் தேதியில் தற்போது இருக்கை காலி இல்லையாம்.

அந்த பெண்ணிடம் பேசிக்கொண்டே என் கணினியில் எனக்கு வேண்டிய தேதியில் புதிதாக சீட்டு வாங்க விலையை பார்த்தல், தற்போது நான் வைத்திருக்கும் சீட்டின் விலையை விட வெறும் நான்காயிரம் மட்டுமே வித்தியாசம் வருகிறது, அத்தனை இருக்கையும் காலியாக இருக்கிறது.

ஏன் என்று மீண்டும் அந்த பெண்ணிடம் கேட்க, மீண்டும் என்னை காத்திருக்க சொல்லிவிட்டு சற்று நேரம் கழித்து வந்தவர், ஏதேதோ சம்மந்தம் இல்லாமல் விளக்கம் தந்தார்?

நான் முடிவாக சரி, இதோ எனக்கு வேண்டிய தேதியில் இணையம் மூலம் நான் ஒரு புதிய சீட்டை வங்கி விட்டேன், அதனால் என் பழைய சீட்டை நான் ரத்து செய்து விடுகிறேன்.

ரத்து செய்ய ஆயிரத்து எண்ணூறு ரூபாய் அபராதம் வரும் என்று எனக்கு தெரியும், அதனால் மீத தொகையை என் வங்கி கணக்குக்கு அனுப்ப சொன்னேன்.

பதினாராயிரம் கொடுத்து தேதியை மாற்றாமல் இப்படி பழைய சீட்டை ரத்து செய்து புது சீட்டு வாங்குவதன் மூலம் நான் ஒன்பதாயிரம் சேமிக்க முடியும் என்று சொன்னேன்.

மீண்டும் என்னை காத்திருக்க சொல்லிவிட்டு சற்று நேரம் கழித்து வந்தவர், உங்கள் பழைய சீட்டை ரத்து செய்ய கட்டணம் ஆயிரத்து எண்ணூறு ரூபாய் அல்ல ஐய்யாயிரத்து ஐநூறு ரூபாய் என்று சொல்ல எனக்கு உச்சிக்கு போய் விட்டது கோபம்.

என் பழைய சீட்டில் ரத்து செய்ய கட்டணம் ஆயிரத்து எண்ணூறு ரூபாய் என்று போட்டு இருக்கிறது, இப்போது நீங்கள் ஐய்யாயிரத்து ஐநூறு ரூபாய் என்று சொன்னால்! அதற்க்கான எழுத்து விளக்கம் எங்கே இந்த சீட்டில் இருக்கிறது என்று கேட்க? அவரிடம் பதில் எதுவும் இல்லை.

இந்த முறை நானே அவரிடம் மீண்டும் என்னை காத்திருக்க சொல்லாமல், நீங்கள் பேசும் நபரிடம் அல்லது உங்கள் மேலாளரிடம் எனக்கு தொடர்பு கொடுத்தால் நானே நேரடியாக அவரிடம் விளக்கம் கேட்பேன் என்று சொல்ல, அதற்கும் அவர் தயாராக இல்லை?



சரி, இப்போது நீங்கள் எனக்கு இந்த சீட்டை ரத்து செய்ய ஐய்யாயிரத்து ஐநூறு ரூபாய் என்று எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்ப முடியுமா? என்று கேட்டால் அதற்கும் அவர் தயாராக இல்லை?

நான் கடைசியாக சொன்னது, நீங்கள் வாங்கும் கூடுதல் பணத்திற்காக நான் பேசவில்லை, இது முறையாக அரசாங்கத்தின் கணக்கில் வருவதாய் இருந்தால், நீங்கள் இப்படி எந்த எழுத்து விளக்கமும் தராமல் பணம் எடுக்க தேவை இல்லை?

மேலும் எனக்கு இந்த பணத்தால் பெரிய நஷ்டம் ஒன்றும் வந்து விட போவதில்லை, ஆனால் தின கூலி வேலைக்கு குடும்பத்தை நாட்டை விட்டு சென்று உழைக்கும் எத்தனயோ மக்களுக்கு இது மிக பெரிய தொகையல்லவா? இதற்காகத்தானே அவர்கள் இனம் மொழி தெரியாத நாட்டில் கஷ்டப்படுகிறார்கள்? அதனால்தான் கேட்டேன்.

எப்படியோ நீங்கள் எடுக்க வேண்டிய தொகையை எடுத்து விட்டு மீதத்தை அனுப்பவும், ஆனால் அப்போதும் நான் என்னிடம் இருக்கும் பழைய சீட்டையும் நீங்கள் திரும்ப அனுப்பிய தொகையையும் கொண்டு உங்கள் தலைமை அலுவலகத்திலும் மற்றும் இது சம்மந்த பட்ட துறையிலும் புகார் செய்வேன் என்று சொல்லிவிட்டு பதிலை எதிர்பார்க்காமல் வைத்து விட்டேன்.

விமான பயணிகள் ஒரு விமான சீட்டை வாங்கும் போது அதில் உள்ள அத்தனை விதிமுறைகளை பார்த்து வாங்கவும், அதே போல பயணத்தை ரத்து அல்லது மாற்றி அமைக்கும் போது, அவர்கள் எழுத்தில் கொடுத்துள்ள அந்த அபராத தொகைக்கு மேலே போகும் பட்சத்தில் அவர்களிடம் எழுத்து வடிவில் கேளுங்கள். இனம், மொழி தெரியாத நாடு என்று பயம் வேண்டாம், தேவை பட்டால் சம்மந்த பட்ட துறையில் புகார் கொடுக்கவும் அஞ்ச வேண்டாம்.

மொபைல் போன் போல இது அனைவரின் பயன்பாட்டில் இல்லை என்றாலும், ஏமாற்றும் தொகையின் அளவு (3700 ரூபாய்) மிக பெரியது இல்லையா, கவனிக்காமல் நேரடியாக தேதியை மட்டும் நான் மாற்றியிருந்தால் இன்னும் அதிகமாக நஷ்டமாகியிருக்கும்.

மேலும் கணக்கில் வராமல் எழுத்தில் தராமல் எடுக்கும் ஒவ்வொரு பைசாவுமே ஊழல்தானே? அதை சிந்தித்து பார்த்து செயல் படுங்கள் நண்பர்களே.

நன்றி!.
 

Blogger Widgets