Monday, April 25, 2011

சாய்பாபா...!

இது சாய்பாபா கடவுளா இல்லையா என்றோ!, அல்லது அவர் இயற்கை எய்தியதை கிண்டல் செய்யவோ!, அல்லது மதசார்பான ஆன்மீக பதிவோ அல்ல.

என் வாழ்கையில் சாய்பாபாவோடான அனுபவத்தையும் நான் புரிந்து கொண்டதையும் பகிர்ந்து கொள்வதே இங்கு என் நோக்கம்.

எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் பிறப்பின் அடிப்படையில் இந்து மத முறையில் கடவுள் நம்பிக்கை கொண்ட குடும்பமானாலும், உயிரோடு வாழும் எந்த மனிதரையும் கடவுள் என்று காலில் விழும் பழக்கம் இல்லாததுதான் எங்கள் குடும்பம்.

அதே போல நாங்கள் நம்பவில்லை என்பதால் மற்ற யாரையும் விமர்சனமும் செய்ததும் இல்லை.

இந்த நிலையில் எங்கள் பக்கத்துக்கு வீட்டில் குடிவந்தவர்களுடன் எங்களுக்கு மிக நெருங்கிய பழக்கம் வந்தது, அவர்களும் ஆண் பிள்ளை இல்லை என்பதால் என் மீது சொந்த மகன் போல அன்பு செலுத்தினர்.

"சாய்பாபா" என்ற வார்த்தையே முதன் முதலில் கேள்விபட்டது அவர்கள் மூலம்தான், அவர்கள் குடும்பம் அவர் மீது அதீத நம்பிக்கை கொண்டு அவரை கடவுளாக தொழுது வந்தனர்.

அப்போது எனக்கு ஒரு ஐந்து வயதிற்குள்தான் இருக்கும் என்று நினைக்கிறேன், ஒரு முறை வழக்கம் போல சாய்பாபாவின் அற்புதங்களை பற்றி பேசிக்கொண்டு இருந்த அந்த அம்மா, அவர் கொடைக்கானல் வருவதாகவும் அவரை நேரில் சந்திக்க எங்களையும் அழைத்து செல்வதாக சொல்ல...!

அவர்களுடன் இருந்த நட்பின் அடிப்படையில் என் தாயும் சம்மதிக்க, ஒரு விடுமுறை பயணம் போல அனைவரும் தயாரானோம்.கொடைக்கானலில் அது ஒரு அழகான மற்றும் அமைதியான பங்களா, அதுதான் சாய் ஸ்ருதி ஆசிரமா என்று சரியாக எனக்கு நினைவில்லை.

நாங்கள் காத்திருக்க, சிறிது நேரத்தில் முழு காவி உடையுடன் சாய்பாபா நடந்து வந்தார், நடை பாதைக்கு இருபுறமும் மக்கள் அவரை கும்பிட, அவர்களுக்கு ஆசிர்வாதம் செய்தபடி எங்களை கடந்து போனார்.

சிறுவனாக அங்கு கொடுத்த சாய்பாபா படத்தை கையில் வைத்து விளையாடிக்கொண்டு இருந்த நான், என்ன நினைத்தேனோ, அவர் பின்னால் ஓடி, அவர் முன் சென்று பாதையில் நின்று அவரிடம் அந்த படத்தை நீட்டினேன்.

அவர் நடக்கும் பாதையில் யாருமே போகவில்லை என்றாலும் நான் மிக சிறுவன் என்பதால் என்னை யாரும் தடுக்க வில்லை என்றே நினைக்கிறேன்.

என்னை பார்த்து சிரித்த அவர் என் தலையில் தன் கையை வைத்து " பங்காரு...! பங்காரு...!" என்று சொன்னவர்  (தெலுங்கில் பங்காரு என்றால் தங்கம் என்று அர்த்தம்) நான் நீட்டிய படத்தை வாங்கி "With Love Baba" என்று கையப்பமிட்டு மீண்டும் என்னிடமே கொடுத்து விட்டு சென்றார்.

அதன் பின் அந்த படம் நீண்ட நாட்கள் எங்கள் வீட்டில் இருந்த நினைவு இருக்கிறது, ஆனால் இன்னும் இருக்கிறதா என்று தெரியவில்லை!. இதுதான் நான் அவரை சந்தித்த அனுபவம்.

அதன் பின் நாட்கள் நகர வளரும் பருவத்தில் விவேகானந்தர் சுபாஸ் முதல் கீதை, குரான் பழைய (புதிய) ஏற்பாடு முதல் ஓசோ வழியாக கண்ணதாசனின் "கம்ப ரசம்" வரை (இது தடை செய்த புத்தகம் என்று நினைக்கிறேன்) கையில் கிடைத்த புத்தகத்தை எல்லாம் படிக்கும் விடலை பருவத்தில் சாய்பாபா மீது எனக்கு பெரிய அபிப்பிராயம் எதுவும் கிடையாது.

காரணம் கையில் இருந்து விபூதி, மோதிரம், வாயில் இருந்து லிங்கம் எல்லாம் எடுத்துதான் ஒரு கடவுள் தன்னை கடவுள் என்று நிரூபிக்க வேண்டுமா? அல்லது ஒரு கடவுள் தன்னை தானே கடவுள் என்று சாதாரண மக்களிடம் உணர்த்த விரும்புவது ஏன்? என்று எனக்குள் பல கேள்விகளை கேட்டு கொள்வேன்.

இப்படியாக நான் என் பாதையில் போக மொத்தமாக சாய்பாபா என்ற வார்த்தையையே மறந்து போனேன், அவர் சார்ந்த செய்திகளை கூட படிப்பதில்லை, ஆனாலும் "திரு.அப்துல்கலாம்" போல அறிவியல் விஞ்ஞானிகள் கூட இவர்கள் காலில் விழுவதை பார்த்து குழம்பி இருக்கிறேன்.இப்படி வருடங்கள் ஓட, மீண்டும் அவர் விசையத்தில் என் கவனம் போனது தெலுங்கு கங்கை கால்வாய் திட்டம் நடைமுறை படுத்தப்பட்டபோது, ஒரு நாட்டின் தேசிய அரசாங்க பணியில் ஒரு மத சாமியாரின் பங்கு என்னவாக இருக்க போகிறது, இவரை ஏன் முன்னிலை படுத்துகிறார்கள் என்று படிக்கும் போதுதான் புரிந்தது, சாய் சேவா என்று ஆங்காங்கே பஜனைகள் பாடிக்கொண்டு இருந்த ஒரு ஆன்மீக அமைப்பு "சாய் சேவா சமிதி" என்று நாட்டின் மிக பெரிய ஒரு சமூக சேவை அமைப்பாக வளர்ந்து இருப்பது.

இந்த சேவை நிறுவனம் ஆந்திரா-தமிழக அரசுகள் கொண்டு வந்த தெலுங்கு கங்கை திட்ட கால்வாய் அமைக்கும் பணிக்காக அதாவது சென்னை நகரின் குடிநீர் பிரச்சினையை போக்க ரூ.100 கோடி நிதியை அந்த நிறுவனத்தின் தலைவரான சாய்பாபா தனது டிரஸ்ட்டில் இருந்து வழங்கியுள்ளார் என்று தெரிந்த போது, வியப்பை விட அந்த நிறுவனத்தின் மீது ஒரு நல்ல மதிப்பு எனக்கு வந்தது.

எனக்கு தெரிந்து இந்திய வரலாற்றில் வேறு எந்த ஒரு ஆன்மீக மத சார்பான நிறுவனமும் இவ்வளவு பெரிய தொகையை நாட்டு மக்கள் நன்மைக்காக கொடுத்ததில்லை என்றுதான் நினைக்கிறேன்.

இப்படி தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் ஆந்திரா,மராட்டியம், ஒரிசா மாநிலங்களிலும் தனது டிரஸ்ட்டின் மூலம் நிதி கொடுத்து குடிநீர் திட்டங்களை செய்து கொடுத்துள்ளார்.

ஆந்திரமாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 750 கிராமங்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுத்து கிட்டத்தட்ட12 லட்சம் மக்களுக்கு மேல் பயன் அடைந்து வருகின்றனர்.

இது தவிர இந்த ஆசிரம நிறுவனத்தின் மூலம் பல்கலைக்கழம், மருத்துவ கல்லூரியும் நடத்தப்பட்டு வருகிறது இதன் மூலம் பொதுமக்களுக்கு இலவச கல்வி, மருத்துவ சிகிச்சை என பல மாநிலங்களில் பிரமாண்டமாக ஏழைகளுக்கு அனைத்தும் இலவச மாக இந்த நிறுவனம் கொடுகிறது என்று தெரிந்த போது...!

அவர் கடவுளோ இல்லையோ!, அது எனக்கு தெரியாது, தேவையும் இல்லை, ஆனால் இந்த நிறுவனத்தின் நல்ல செயல்கள் அனைத்தும் கடவுளின் செயலாகவே என் மனதில் பட்டது.

எத்தனயோ லட்சம் மக்கள் தனி ஒரு நிறுவனத்தால் அல்லது அந்த நிறுவன தலைவரால் பயன் பெறுகிறார்கள் என்றால், அது இருப்பவனிடம் கொள்ளை அடித்து இல்லாதவனுக்கு கொடுக்கும் ஒரு கொள்ளைகார நிறுவனமாக இருந்தால் கூட பாராட்டலாமே...!

அப்படி இருக்கும் போது, இது ஒரு சாதாரண ஆன்மீக அமைப்பு இதை பாராட்டுவதில் எனக்கு தவறாக எதுவுமே தோன்றவில்லை.

தாகத்தை தீர்க்கும் நதி நீருக்கு யாரும் நதிமூலம் பார்ப்பதில்லை, அது போல அது எப்படி வந்த பணமாயினும் எதற்கு பயன் படுகிறது என்ற அடிப்படையில் இங்கு நான் ரிஷிமூலம் பார்க்க விரும்பவில்லை.

ஒரு சில நூறுகளை கொடுத்து ஓட்டு வாங்கி கணக்கிடமுடியாத அளவு ஊழலை செய்யும் அரசியல் கட்சிகள் கூட மக்களுக்கு இப்படி எதுவும் செய்வதில்லையே?

அப்படி இருக்க ஒரு தனிமனிதர் தன் நிறுவனத்தின் மூலம் இதை அனைத்தையும் சாதித்து இருக்கும் போது அவர் அந்த நிறுவன தொண்டர்களுக்கு கடவுளாக தெரிவதில் எந்த தவறும் இல்லை என்றே நினைக்கிறேன்.

இவரால் மருத்துவ உதவி பெற்று உயிர் பிழைத்த அனைவருக்கும் இவர் வேறு எப்படி தோன்ற முடியும் நினைக்கிறீர்கள்?

சற்று சிந்தித்து பாருங்கள்...!, இன்றைய அரசியல் கொள்ளையர்களை விட "சாய்பாபா" ஒன்றும் அத்தனை மோசமாக என் கண்களுக்கு தெரியவில்லை.

எனவே, அவர் கடவுளா இல்லையா என்ற பைசாவுக்கு பெறாத விவாதங்களை ஒதுக்கிவிட்டு, பல நல்ல விசையங்களை செய்த ஒரு நல்ல  நிறுவனத்தின் தலைவர் என்ற முறையில், உடலை விட்டு பிரிந்த அந்த ஆத்மா அமைதியில் உறங்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
 

Blogger Widgets