Monday, August 23, 2010

இது புதுசு கண்ணா புதுசு!

இன்று உலகம் முழுவதுமே சவாலாக இருக்ககூடிய விசையம் என்றால் அது புகை பிடிப்பதை கட்டுப்படுத்துவது என்பதுதான்.

அந்த அளவுக்கு ஆண் பெண் என்றில்லாமல் உலக மக்கள் புகைக்கு அடிமையாக இருக்கிறார்கள் என்பது மட்டுமில்லாமல்,இறப்பு விகிதமும், மலட்டு தன்மையும் அதிவிரைவாக கூடிக்கொண்டு வருவதற்கு இது ஒரு மிக முக்கிய காரணமாக இருக்கிறது.சிகரட்டை பொறுத்தவரை கடந்த சில வருடங்களாக பல மாற்று வழிகள் கண்டு பிடித்த போதும், சுவிங்கம், மாத்திரை போன்ற எந்த ஒரு மாற்று வழியும் சரியான பலனை தரவில்லை என்பதுதான் உண்மை.

மேலும் உண்மையை சொல்ல வேண்டும் என்றால், தானாக விரும்பி விட்டால் தவிர, புகைப்பதை கைவிட மாற்றுவழி கண்டு பிடிப்பது என்பது ஒரு பெரும் சவாலாகவே இருந்து வருகிறது.

மாற்றுவழியாக கண்டுபிடிக்க படும் பொருட்கள் வெற்றி பெறாத காரணத்தை ஆராய்ந்தால் அதன் அடிப்படை இரண்டாகவே இருக்கும்.

I- புகைத்ததை போல உணர்வே வரவில்லை!.

II- என்னதான் இருந்தாலும் சிகரட்டை கையில் பிடிக்க கூடியதை போல உணர்வும் புகையும் இல்லாததுதான்.

காரணம் புகை வராத ஒரு பொருளை வைத்திருப்பது சிலருக்கு சங்கோஜத்தையும் சிலருக்கு பின் விளைவுகளையும் கொடுத்தது.இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு சந்தைக்கு புதிதாக வந்திருப்பதுதான் இ-சிகரட்(படங்களை சொடுக்கி தெளிவாக பார்க்கவும்).

Electronic Cigarette என்பதின் சுருக்கமே E-Cigarette, பேட்டரியில் இயங்கும் இவை, ஒரு முறை சார்ச் செய்தால் ஆறு மணிநேரம் முதல் இரண்டு நாட்கள் வரை பயன்படுத்தும் வகையில் இருக்கிறது.

மற்ற அனைத்து தயாரிப்பை விட இது குறுகிய காலத்தில் வெற்றி பெற்று இருக்கிறது என்றுதான் நினைக்கிறேன், காரணம் இது சாதாரண சிகரட் போலவே வடிவம், புகை வருகிறது, குறிப்பாக புகைத்ததை போல சுவையும் உணர்வும் இருக்கிறது, பக்க விளைவுகள் எதுவும் இல்லை என்று சொல்லப்படுகிறது.

மேலும் இதன் வெற்றிக்கு முக்கிய காரணம், இதில் தீங்கு வரும் நிக்கோடின், தார் போன்ற எந்த நச்சு பொருட்களும் இல்லை என்று சான்றுகள் தரப்படுகிறது.சாதாரண சிகரட் சுவை முதல் பல்வேறு சுவைகளில் இ-சிகரட் கிடைகிறது, இதில் வரும் புகை அருகில் இருப்பவர்களுக்கு, மற்ற சாதாரண சிகரட் புகை போல எரிச்சலையோ, வெறுப்போ ஏற்படுத்துவது இல்லை, அதனால் இதை அந்த அந்த நாட்டு சட்டத்துக்கு உட்பட்டு எங்கும் புகைக்க முடியும் என்று விளம்பரப்படுத்த படுகிறது..

சில நாடுகளில் அரசாங்கமும் இதை அங்கீகரித்து இருக்கின்றன, சாதாரண சிகரட் புகைக்கு தடை விதித்து இருக்கும் பகுதிகளில் கூட இ-சிகரட் புகைக்க அனுமதி கொடுத்திருக்கிரார்கள். அதே நேரம் சில நாடுகளில் இதை இன்னும் அங்கிகரிக்கவில்லை என்பதும் உண்மை.

எது எப்படியோ புகைப்பதை நிறுத்த இ-சிகரட் ஒரு சிறந்த மாற்று வழியாக இருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.

ஆனாலும், இ-சிகரட் வாங்கும் முன் பொதுவாக சில சுய பரிசோதனை விசையங்களை கருத்தில் கொள்ளவது என்பது அவரவர் சொந்த பொறுப்பாகிறது.

இந்த தயாரிப்பை வாங்கவோ அல்லது பொது இடங்களில் பயன் படுத்தவோ உள்ள விதி முறைகளை நீங்கள் இருக்கும் நாட்டின் சட்டத்தில் இருந்து தெளிவாக முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

மற்றவர்கள் நிறுத்த சொல்கிறார்கள் என்பதற்காக இல்லாமல், உங்கள் அடி மனதில் புகைப்பதை நிறுத்த வேண்டும் என்ற எண்ணம் வேண்டும்.

இதை தவிர மற்ற புகை பிடிக்கும் சமந்த பட்ட அனைத்து பொருட்களையும் உடனே கண்ணில் படாமல் கடாசி விட்டு, இதை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.இது புகைப்பதை படிப்படியாக குறைத்து ஒரேடியாக நிறுத்துவதற்கான ஒரு சிகிச்சைதான், இதையும் விரைவில் நிறுத்தி விட வேண்டும் என்று ஒவ்வொரு முறை புகைக்கும் போதும் நினைவில் வைத்திருந்து, ஒரு நாள் சுத்தமாக நிறுத்தி விட வேண்டும்.

இறுதியாக, எந்த ஒரு பொருள் சந்தைக்கு வந்தாலும் அதன் அடிப்படை பலனை இழந்து விட்டு, வெறும் விலையை மட்டும் கருத்தில் கொண்டு குறைந்த விலையில் சில போலி தயாரிப்புகளும் உடனே சந்தைக்கு வந்து விடும்.

விலை குறைவு என்பதை மட்டும் பார்க்காமல், தகுந்த நிபுணர்களை அல்லது மருத்துவரை கலந்து ஆலோசித்து சரியான தயாரிப்பை விலை சிறிது அதிகமானாலும் வாங்குவதன் மூலம் மட்டுமே இ-சிகரட்டின் உண்மையான பலன் பெற முடியும்.


இனி சுவாரஸ்சியமான ஒரு குட்டி தயாரிப்பை பற்றி பார்ப்போம்.

எவ்வளவோ பெரிய பெரிய பொருட்கள் சந்தைக்கு வந்தாலும், ஆக சிறிய பொருளை தயாரிப்பதில் இருக்கும் ஆர்வம் எந்த ஒரு நிறுவனத்துக்கும் குறையவே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

இதோ இங்கு படத்தில் இருப்பது ஏதோ பென்சில் சீவ அல்லது விளையாட்டு பொருள் என்று நினைக்க வேண்டாம். இது ஒரு ஆயுதம் என்றால் உங்களால் நம்ப முடியுமா?

ஆனால் உண்மை அதுவே, ஆம் இது "கெனான்" நிறுவம் தயாரித்துள்ள ஆக சிறிய பீரங்கி.

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல, உருவத்தில் சிறிதாக இருந்தாலும் இதன் சக்தி அதிகமாகவே இருக்கிறது.

என்னதான் சொல்லுங்கள், ஆயுதம் என்றாலே ஆபத்துதானே?

அதிலும், இத்தகைய பொருட்கள் தப்பி தவறி கூட குழந்தைகள் கையில் கிடைத்து விட்டால்!, அது உயிருக்கே உலை வைத்து விடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

உங்கள் நேரத்திற்கு நன்றி, மீண்டும் சந்திப்போம்.

Wednesday, August 18, 2010

யார்? ஏன்! எப்படி?

எப்பூடி யார் அழைத்து இருந்தாலும், அது எப்பூடி? என்று கேட்டிருக்க முடியும்!. ஆனால், அழைத்ததே எப்பூடி எனும்போது, அது எப்பூடி, எப்பூடி-கிட்டேயே எப்பூடி என்று எப்பூடி கேட்க முடியும் சொல்லுங்க?

டேய்ய்ய்ய்ய்ய்ய்...அடங்குடா!, உன்னையும் மதிச்சு ஒருத்தர் தொடர் பதிவுக்கு அழைத்ததுக்கு ஓவர் ஆட்டமா? என்று நீங்கள் நினைப்பது புரிவதால், ஹி ஹி ஹி தொடருகிறேன்.

1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

ட்டி......குட்டி.......சிங்கக்குட்டி....!

(நேற்றுதான் வால்டர் வெற்றிவேல் பார்த்துக் கொண்டு இருந்தேன் அந்த பாதிப்புதான்)
2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

என்னப்பா இது விட்டா, சிங்கம் உங்க வீட்டுக்கு வந்துச்சா! இல்ல (ஹேய் நோ நோ மம்மி பாவம் மம்மி பாவம்) உங்கப்பா காட்டுக்கு போனாரான்னு கேட்பீங்க போல?

அந்த கதையை சொல்கிறேன் கேளுங்க..!

எது, சிங்கக்கதையா? ஹேய் என்ன சின்னபுள்ளதனாமா இருக்கு, நான் சொல்ல வந்தது பெயர் கதையை, ஒழுங்கா கேளுங்க.

எனக்கு ஒரு பதினோரு பனிரெண்டு வயசு இருக்கும், அப்ப நான் ஆறாவது படித்துக்கொண்டு இருந்தேன்?

டேய் இப்பவரையும் நீ ஆறாவதுதாண்டா படிச்சிருக்க!.

நோநோநோ...யாரது கூட்டத்துல இருந்து குரல் கொடுக்குறது....! கதைய கேளுங்க.

புலவர் இராமசாமி இராமசாமி-ன்னு ஒரே ஒரு அருமையான தமிழ் ஆசிரியர், ரெட்டை சுழியில் ஒரு சுழி முன் சுழியோடு சாமிக்கு விட்டிருந்த முடி பிடரிவரை தொங்க அழகாக இருந்த என்னை...!(இப்ப இல்லங்க சின்னபுள்ளைல அழகா இருத்தேன், அட எங்கம்மா சத்தியமா அழகாத்தான் இருந்தேன் நம்புங்கையா) எதோ காரணத்தில் அவருக்கு என்னை பிடித்துப்போக, வாடா "சிங்கக்குட்டி" என்றுதான் அழைப்பார்.

அதை தொடந்து என் நண்பர்கள், அவர்கள் குடும்பம் என்று அதே பெயரில் அழைக்க, பின் அதுவே என் நிரந்தர பெயராகிவிட்டது.

ஹும்ம்... அது ஒரு காலம்...ஒன்ஸ் அப்பான டைம் மண்டை மேலே எவ்ளோ முடி!.

இதன் உச்ச கட்டமாக பல வருடம் சென்றும், என் பால்ய நண்பன் ஒருவன் அவன் கல்லூரி நண்பனுக்கு என்னை அறிமுக படுத்தும் போது கூட "மீட் மை பெஸ்ட் பிரன்ட் மிஸ்டர் சிங்கக்குட்டி" என்று பீட்டர் விட, அவன் நண்பர் என்னை பார்த்த பார்வை எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது.

அவ்ளோதாம்பா என் பெயர் கதை. இப்ப திருப்தியா...! சரி போங்க மிச்சத்தையும் படிங்க.

3) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி....

உண்மையை சொல்லப்போனால் அப்போது வலைபதிவுன்னா எனக்கு என்னான்னே தெரியாது (இப்போது மட்டும் தெரியுமாக்கும் என்றெல்லாம் கேட்க கூடாது, ஓகே).

அடுத்த சில வரிகளை மட்டும் உங்களுக்கு பிடித்த நடிகை குரலில் படிக்கவும்.

நான் வன்ததே ஒரு விப்த்துதான், ஏன்னா அப்பே என்கு டமில் எழத கூட டெரியாது, அப்த்தான் நம்ம கிரி சார் சொல்ச்சு, ஒன்னும் கவ்லை படாதே, உன்கு நல்ல எதிர் காலம் இர்க்கு, நீ நல்லா கோவாப்ரேட் பண்ணி துநிஞ்சு வல்பதிவு உலகில் கால்டி எத்து வைன்னு, அதான் இன்க்கு நாம் உங்க முன்னாடி பதிவரா நிக்து.

அத் மட்ம் நட்கலைனா, அமரிக்காவுல நா பட்ச்சுகிட்டு இருந்த டாக்டர் படிப்பை முடிச்சு, நம்ம பழனி சுரேசுக்கு எதிரா "நினைவுகளே" அப்டின்னு கடை போட்டிருக்கும்.


அப்புறம் என்னாங்க, நான் என்ன சினிமா நடிகையா?

அட எல்லோரையும் போலவே, வழக்கம் போல கூகிளில் எதையோ தேடும் போது, நம்ம கிரி எழுதிய பழைய "சிங்கபூர் தை பூசம்" இடுகை கண்ணில் பட, அதை தொடந்து தமிழில் தேட கற்றுக்கொண்டு தேடும் போது என் கனவில் தென்பட்டது நசரேயன் எழுதிய "அமெரிக்காவில் பீர் குடித்த கதை" பட...!

எப்படி இவர்கள் தமிழில் எழுதுகிறார்கள் என்ற ஆர்வத்தில் அப்படியே படிச்சு படிச்சு, தட்டி தடவி எதை எதையோ எழுதியாச்சு.

ஆனாலும், எழுத வந்த சில மாதங்களிலேயே, நம்ம எழுதுனதையும் மதிச்சு படிச்சு "தமிழ் மணம் 2009" விருதை வாங்கி கொடுத்து ஊக்கப்படுத்திய அத்தனை நண்பர்களுக்கும் இங்கு என் நன்றியை மீண்டும் சொல்ல நான் கடமை பட்டு இருக்கிறேன் (எங்க வச்சேன் பாத்தீங்களா டச்சிங்).4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

என்னது...! என் வலைப்பதிவு பிரபலமடைந்து விட்டதா...! சொல்லவேவேவேயில்ல...!

ஹலோ, என்ன வைச்சு காமிடி கீமிடி பண்ணலையே!

அடடே வடை போச்சே?

இது தெரியாம நான் ஒரு ஆறேழு தடவை சரக்கடிக்கும் போது கூட, எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, எப்படி என் வலைப்பதிவை பிரபலமடையச் செய்யவது என்று யோசித்து இருக்கேனே?

ஆனா! தம்பி, "டீ" இன்னும் வரவில்லை?

நல்லாத்தான் எழுதுறோம் அப்புறம் ஏன் "ஹிட்டு, ஓட்டு" ஒன்னும் தேறமாட்டேங்குது? எப்படித்தான் கண்டு பிடிக்கிறதோ!.

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

இல்லை, காரணம் வலைப்பதிவு என் பொழுது போக்கு மட்டுமே, அது ஒரு போதும் என் சொந்த வாழ்கையை பாதிப்பதை நான் விரும்பவில்லை.

ஆம், "திருமண உறவுகள் சொந்தமாகவா! பகையாகவா?" என்ற குழப்பத்தை தெளிவு படுத்திக்கொள்ள நினைத்து, மற்றவர்கள் அனுபவத்தை தெரிந்து கொள்ள எழுதினேன்.

விளைவு; அனைவருக்குமே இப்படிதான் என்று புரிந்து கொண்டு, வீட்டுக்கு வீடு பல் பொடி...சீ...வாசப்படி என்று மன சமாதானம் ஆகி விட்டேன்,

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

ஏலே யாரப்பத்து நாக்கு மேல பல்ல போட்டு என்ன வார்த்த கேட்டுபுட்ட?

ஏ பசுபதி, அந்த கிழக்கால இருக்க தென்ன தோப்பையும், இதோ வடக்க கண்ணுக்கு தெரியுற வரை இருக்க நெல்லு காட்டையும், ஆ அப்படியே உள்ர இருக்க ஆயிரம் பவுனு நகையையும், நம்ம "எப்பூடிக்கு" எப்படியோ போகட்டும்னு தானமா கொடுல...!

நீதில...நேர்மைல...இ பெத்த ராயுடு எந்துக்குல "ப்லாக்குல" சம்பாதிக்கணும், நேனு அத்தனையும் "வைட்ல" சம்பாதிக்கும்ல...!

ஹி ஹி ஹி, பொழுது போக்குக்கே ஒன்னும் ஆணி புடுங்க முடியவில்லை, இதுல "சம்பாதிப்பதற்காகவா" என்று கேட்டால் என்னத்தை சொல்வது?

எனக்கு அப்படி எந்த எண்ணமும் இல்லை.

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

சந்திரமுகி தலைவர் டைலாக்தான் " ஒருத்தனுக்கு எந்திருச்சே நிக்க முடியலையாம், இதுல ஒம்ப்பதெட்டு பொஞ்சாதி கேட்டாதாம்".

ஹுக்ஹும், இருக்க ஒன்னுக்கே முடியலயாம், இதுல இன்னொன்னு!, அதுவும் வேற மொழியில வேற தேவையா?

ஹேய்ய்ய்...! நான் "ப்லாக்க" சொன்னேன்.

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

அத வேற ஏங்க நியாபக படுத்துறீங்க? நேத்து கூட சரக்கடிச்சு மனசு ஏங்குச்சு, கோபம், பொறாமைல பொங்குச்சு.

அது ஒன்னுமில்லீங்க, நம்ம "பிரிட்னி ஸ்பியர்ஸ்"- க்கு பின் தொடருபவர்கள் ஐந்து மில்லியனாம்.

ஹும், அந்த பொண்ணுக்கு இருக்கது, நமக்கு இல்லாம போச்சேன்னு! பொறாமை மற்றும் கோபம்.

என்னது எதுவா? ஹலோ நோ பேட் திங்க்கிங்ஸ், நான் "பின் தொடருபவர்களை" சொன்னேன்...! ஓகே.

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..

முதன் முதலில் பின்னூட்டத்தில் பாராட்டிய மனிதர் கோ.வி.கண்ணன், நல்ல மனிதர், அவர் பாராட்டியதில் மகிழ்ச்சி.

நம்ம பதிவை படிக்கிற கொடுமை போதாதா? இதுல போன் போட்டு வேற இவனோட பேசனுமான்னு நினைத்தார்களோ என்னவோ? என்னை தொடர்புகொள்ள இது வரை யாரும் என் தொலை பேசி எண்ணை கேட்டதில்லை.

ஆனால், துபாயில் இருந்து என் பதிவை விரும்பும் நண்பர் ஒருவர் திருமண அழைப்பு கொடுத்தார்.

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்..

எம்.ஜி.ஆர் உடல்கட்டு, சிவாஜி கர்ஜனை குரல், ரஜினி ஸ்டைல்+சுருசுருப்பு, கமல் கலர் என்று ஒரு கம்பீரமான சிங்கத்தை, இது வரை படத்தில் பார்த்திருப்பீர்கள்...! டி.வி.யில் பார்த்திருப்பீர்கள்...! சினிமாவில் பார்த்திருப்பீர்கள்...! ஏன், ஜூ-வில் பார்த்திருப்பீர்கள்...!

ஆனா, எட்டு டன் எடையில் கம்பீரமாக தெருவில் நடந்து யாராவது பார்த்திருக்கீர்களா...! பார்த்திருக்கீர்களாளா...! பார்த்திருக்கீர்களாளாளாளாளாளா...!

ஹலோ! உங்களைப் பற்றி கேட்டால், இப்ப எதுக்கு தேவை இல்லாமல் ஏதேதோ பேசுகிறீர்கள்? இதுதானே உங்கள் கேள்வி?

இல்லங்க நானும் பாத்ததில்லை, அதான் யாராவது பார்த்திருந்தால்! எங்கேன்னு கேட்டு, ஓடிப்போய் நானும் ஒரு தடவை பார்த்துவிட்டு வரலாம்னு ஒரு ஆசை! ஹி ஹி ஹி!.

நான் யாருன்னு எனக்கே இன்னும் சரியா புரியல? இதுல பதிவுலகத்துக்கு தனியா என்னாத்த சொல்வது?

இந்த பதிவை தொடர நான் அழைப்பவர்கள்.

நீண்ட நாட்கள் கழித்து திரும்ப வந்திருப்பதால், யார் இந்த தொடர் பதிவை எழுதிவிட்டார்கள், யார் இன்னும் எழுதவில்லை என்று தெரியாது, அதனால்!

திருச்சி, திண்டுக்கல், மதுரை,பழனி, பெரியகுளம், தேனி, கம்பம், போடி, நத்தம், காரைக்குடி என்று தென் தமிழ்நாட்டை சேர்ந்த பதிவர்கள் யார் வேண்டுமானாலும் அவர்கள் உள்ளூர் தமிழில் தொடருங்க, நாங்க சந்தோசமா படிக்கிறோம்.

உங்கள் அன்புக்கும் நேரத்திற்கும் மிக்க நன்றி!.

Monday, August 16, 2010

தினம் தினம் உடல் நலம்!

கடந்த முறை வரை விடுமுறைக்கு செல்லும் போது எல்லாம், பொதுவாக கேள்விப்படும் விசையம் என்பது, அவனுக்கு திருமணம் ஆகிவிட்டது, இவனுக்கும் பெண் பார்த்து நிச்சியம் ஆகி விட்டது, அவளுக்கு வேலை கிடைத்து விட்டது என்றுதான் இருக்கும்.

ஆனால் இந்த முறை நடுத்தர வயதிற்குள் நுழைந்து விட்டதால் என்னவோ, கேள்விப்பட்ட அனைத்தும் இப்படித்தான் இருந்தது.

இல்ல மாப்ஸ், எனக்கு சர்க்கரை இருக்கிறது, அதுவா, அவனுக்கு நீரழிவு, இவனுக்கு ரத்த கொதிப்பு என்றும், அதிக பட்சமாக அவன் மாரடைப்பில் இறந்து விட்டான், இவன் குடிபோதையில் விழுந்து இறந்து விட்டான் என்பதுதான்.

இதில் வேதனை என்னவென்றால், இவை அனைத்தும் முப்பது முதல் முப்பதைந்து என்று நாற்பதை தொடாத நண்பர்கள் வட்டம்தான்.ஏன் இப்படி? என்று ஊரில் இருந்த இருபது நாளும் அவர்கள் வாழ்க்கை முறையை உடன் இருந்து பார்த்ததில் கிடைத்தது இதுதான்.

அளவுக்கு அதிகமான குடி, கட்டுப்பாடில்லாத உணவு முறை, உடற்பயிற்சி எதுவுமே இல்லாத சொகுசு வாழ்கை என்று இதுதான் அடிப்படை காரணமாக தெரிகிறது.

பதினைந்து வருடங்களுக்கு முன் கல்லூரி மாணவனாக இருந்ததை விட இப்போது ஆட்டம் அதிகமாக இருக்கிறதே தவிர எதுவுமே குறையவில்லை.

புகை கூட பிடிக்காத என் நண்பன் ஒருவன் வைத்தவாய் எடுக்காமல் அரை பாட்டில் பிராந்தியை குடிப்பதை கண்டு உண்மையில் நான் அதிர்ந்து விட்டேன்.

நான் ஒன்றும் வாழ்கையை அனுபவிக்க வேண்டாம் என்றோ , மது மாமிசம் இல்லாமல் சாமியாரை போல் இருக்க வேண்டும் என்றோ சொல்ல வரவில்லை.

ஆனால் அற்புதமான இந்த மனித வாழ்கையை வெறும் சிற்றின்பத்தில் குறுகிய காலத்தில் பறிகொடுக்க வேண்டுமா? என்பதுதான் இங்கு என் கேள்வி.

அதே போல் இதற்காக நாம் ஒன்றும் தனியாக உடற்பயிற்சி நிலையம் சென்று கட்டுடல் கொண்டு வரவேண்டும் என்றில்லை.

வயதிற்கு தக்க நம் அன்றாட வாழ்கை முறையை சிறிது மாற்றி அமைத்தாலே போதுமானது.

நண்பர்களே, இளமை வாழ்கையை சந்தோசமாக அனுபவிக்க நம் உணர்ச்சிகள் எவ்வளவு சூடாக இருக்க வேண்டுமோ, அதே அளவு நம் உடல் குளிர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதை நாம் ஒரு போதும் மறந்து விடக்கூடாது.சரி இதற்கும் நம் அன்றாட வாழ்கை முறைக்கும் என்ன சம்மந்தம் என்று கேட்டு விட முடியாது!, நாமும் அதிகமாக ஒன்றும் செய்ய தேவை இல்லை.

குடிப்பது புகைப்பது அவரவர் விருப்பம், ஆனால் அதை அளவே வைத்துக்கொள்வது மிக மிக முக்கியம்.

எல்லா சிறு சிறு வேலைகளுக்கும் பைக், கார் என்று இல்லாமல், ஒரு நாளைக்கு குறைந்தது முப்பது நிமிடம் நடக்கலாமே அல்லது சைக்கிளை பயன் படுத்தலாமே?

இதில் ஒன்றும் அந்தஸ்த்தோ அவமானமோ இல்லை.

அல்லது குழந்தைகளுடன் ஒரு முப்பது நிமிடம் ஓடியாடி விளையாடலாமே.

அவசர தேவை இல்லாத இடங்களில் லிப்ட்டை தவிர்த்து படிக்கட்டுகளை பயன் படுத்துவதும் உடலுக்கு மிக நன்மைதான்.

உணவு முறையில், கலையில் பால் பழச்சாறு என்றும் மற்ற இரண்டு வேலை அதிக கீரை வகைகள், காய் கறிகளுடன் கூடிய அரை வயிறு உணவு மற்றும் கால் வயிறு தண்ணீர் என்று அளவாக பார்த்துக்கொண்டாலே போதுமானது.

எப்போதாவது மாமிசம் உண்பதில் தவறில்லை, ஆனால் எப்போதும் கண்ட கொழுப்பு சத்து கொண்ட உணவுகளை அளவில்லாமல் எடுத்துக்கொள்வது கண்டிப்பாக உடல் நிலையை மோசமடைய செய்யும்.

இதை தவிர தினம் வயதிற்கு தக்க தியானம் (முப்பது வயது என்றால் முப்பது நிமிடம்) என்பது மன அழுத்தத்தை குறைக்க ஒரு சிறந்த வழியாகிறது.

தியானம் என்றவுடன் நான் கடவுள் படத்தில் வருவது போல தலைகீழாக நிற்கவோ அல்லது தியான நிலையம் சென்று தனியாக பணம் கட்டி படிக்கவோ வேண்டும் என்று தவறாக நினைக்க வேண்டாம்.

வீட்டிலோ பூஜை அறையிலோ உங்களுக்கு விருப்பப்பட்ட ஒரு இடத்தில் அமர்ந்து, கண்களை மூடி வேறு எதையும் பற்றி நினைக்காமல் (முதலில் கொஞ்சம் கடினம்தான், ஆனால் தொடாந்து முயற்சி செய்யும் போது சாத்தியமாகி விடும்) வெறும் மூச்சை மட்டும் நிதானமாக விட்டால் போதும்.

வெறும் மூச்சு விடுவதில் எப்படி மனஅழுத்தம் குறையும் என்று நினைக்க வேண்டாம், தியானத்தின் அடிப்படை சாவியே இதுதான்.அடுத்து பண மற்றும் வெளி பிரச்னைகளை வீட்டில் காட்டாமல் முடிந்த வரை அனைவரிடமும் அமைதியாகவும் அன்பாகவும் இருந்தாலே போதும்.

இந்த சூழ்நிலையில் வாழ்கை துணையின் அன்பும் அரவணைப்பும் நல்ல தாம்பத்தியமும் இதை எளிதில் சாத்தியமாகி விடும் என்பதும் மறுக்க முடியாத உண்மை.

இது முதலில் சிறிது கடினமாக இருந்தாலும், நாளைடைவில் நல்ல பலனை தரும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

இப்படி நமக்கு நாமே அன்றாடம் எளிதாக செய்யக்கூடிய வேலைகளை செய்து மனதை கட்டு படுத்தினாலே ஆரோக்கியம் என்பது தானாக வரும்.

ஆக, வாழ்கையை அனுபவிப்பதாக நினைத்து அழித்து கொள்ளாமல், நல்ல முறையில் வாழ்கையை அனுபவிக்கவாது நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும் என்று நினைத்து தினம் வாழ்ந்தால், தினம் தினம் உடல் நலம் தான் நண்பர்களே.

உங்கள் நேரத்திற்கு நன்றி!, மீண்டும் சந்திப்போம்.

Tuesday, August 10, 2010

திருமண உறவுகள் சொந்தமாகவா! பகையாகவா?

என்னடா பொல்லாத வாழ்க்கை...! என்னடா பொல்லாத வாழ்க்கை...!

யாரையும் நம்பி நம்மை பெற்றாளா அம்மா?, அட போகும் இடம் ஒன்னுதானே பொறுங்கடா சும்மா...!

இதுக்கு போயி அலட்டிக்கலாமா...! அட இதுக்கு போயி அலட்டிக்கலாமா...!

வணக்கம் நண்பர்களே, என்ன பாட்டு பலமாக இருக்கிறது என்று நினைக்கிறீர்களா?விசையம் இருக்கிறது.

என் இந்திய பயணம் எப்போதையும் விட இந்த முறை பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் மொத்தத்தில் ஒரு மசாலா படம் பார்த்தது போல மிக அருமையாக இருந்தது.

சாதாரணமாக விடுமுறை முழுவதும் நண்பர்களுடன் என் வீட்டை சுற்றியே இருக்கும் நான், இந்த முறை சென்னை, திருவண்ணாமலை, சதுரகிரி, சிங்கை என்று நேரமே கிடைக்காமல் சுற்றி கருகருத்து திரும்பி இருக்கிறேன்.

தமிழ்நாட்டில் பல வருடங்களாக நடந்து கொண்டிருந்த ஆறு வழி நெடுஞ்சாலை வேலைகள் முடிந்து, இரவில் கூட பளபளவென்று முதலிரவில் நகையோடு ஜொலிக்கும் புது பெண் போல வழு வழுவென்று இருக்கிறது.

இத்தனை செய்தும் எப்போதும் பறந்து கொண்டிருக்கும் தூசியை மட்டும் தண்ணீர் அடித்து கழுவாமல் வைத்திருப்பதன் அர்த்தம் புரியவில்லை.கார் கண்ணாடி ஏற்றி விடாமல் போக முடியாது, கண்ணாடி ஏற்றினாலும் ஏற்றாவிட்டாலும் ஏசி இல்லாமல் போக முடியாது என்பது போல சூடாகவே இருக்கிறது.

வோடா போன் போல மொபைல் நிறுவனங்கள் வழக்கம் போல, இலவச சேவையில் கேட்கும் கேள்விக்கு அவசரமாக சம்மந்ததா சம்மந்தமில்லாமல் ஏதாவது பேசி (உளறி), இந்த நாள் இனிய நாளாகட்டும்.

உங்களுக்கு வேண்டிய தகவலை அறிய, நிமிடத்திற்கு முப்பது பைசா செலவாகும் இந்த எண்ணுக்கு அழைக்கவும் என்று வேறு எண்ணுக்கு திருப்பிவிட்டு, அங்கு நிதானமாக பேசி கல்லா கட்டுகிறார்கள்.

மற்ற படி முன்பு அரசியல் கட்டவுட்டுகள் போல, இப்போது அவர்கள் வாரிசுகள் தயாரிப்பாளர்கள் போர்வையில் எல்லா சினிமா போஸ்டரிலும் கதாநாயகனை விட பெரிதாக நிற்கிறார்கள்.

ஒரே ஆறுதலான விசையம், மக்களின் ஆடம்பர பண புழக்கம் விலைவாசியை போலவே நிறையவே மாறி இருக்கிறது (போகும் இடமெல்லாம் தேங்காய் விலை கேட்கும் பயணங்கள் முடிவதில்லை கவுண்டமணியை போலத்தான் என்னை பார்த்தார்கள் என்பது வேறு விசையம்).

இவ்வாறாக நான் எழுத சென்ற தேர்வு வேலைகளும் இனிதாக முடிந்தததில் சென்ற வேலை முடிந்த திருப்தி எனக்கு.

இனி மேட்டருக்கு வருவோம், முன்பே இதை பற்றி கொஞ்சம் எழுதி இருந்தாலும்,மனதில் உறுத்துவதை தெளிவாக எழுதவேண்டும் என்று நினைத்துக்கொண்டு இருந்தேன், அதை நானே இந்த முறை அனுபவப்பட்டு உணர்ந்து விட்டேன்.

எனக்கு விபரம் தெரிந்த நாள் முதல் தனியாகவே வளர்ந்தவன் நான், சொந்தங்களும் அதிகமாக இல்லை, நானும் சொந்த ஊரில் அதிகமாக இல்லை.

எப்போதும் நண்பர்களுடன் கலகலப்பாக பொழுதை போக்கி, எதையும் விளையாட்டாகவும், தைரியமாகவும் செய்தே எங்கள் நாட்கள் ஓடின.

ஆனாலும், நிறைய சொந்தம் மற்றும் அவர்கள் உறவுகள், திருவிழா என்று இருக்க முடியவில்லையே என்று ஒரு தனிமை எப்போதும் அடி மனதை பிசையும்.

அந்த வலி முகத்தில் தெரியாமல் உடன் இருந்த நண்பர்கள் நட்பில் ஓடிய நாட்கள் வருடங்களாக மாற இடையில் நண்பர்களும் வெவ்வேறு நாடுகளுக்கு பிரியும் படி அமைந்து விட்டது.எப்போதும் உடன் இருந்த நண்பர்களும் இல்லாமல் வெளிநாட்டில் சுத்தமாக தனிமை பட, அந்த கொடுமையை சில வருடம் அனுபவிக்கும் படியாகி விட்டது.

நண்பர்களுக்கு திருமணமாக, அவர்களையும் நினைத்த நேரத்தில் அழைத்து தொல்லை பண்ண முடியாது.

சரி, நம் திருமணத்திற்கு பிறகு எல்லாம் சரியாகி விடும் என்று பார்த்தால், சொந்தங்களோடு இருந்த பெண்ணை நம் துணைக்கு கொண்டு வந்து தனிமை படுத்தியதை போல் ஆகிவிட்டது.

இப்படி ஒருவருக்கொருவர் தனிமை கொடுமையை பகிர்ந்து, இதோ வந்து விட்டது விடுமுறை, அதோ வந்து விட்டது விடுமுறை! என்று மாதத்தை, வாரத்தை, நாட்களை எண்ணி சொந்த மண்ணுக்கு சென்றால்! அங்கேயோ நிலைமை இன்னும் தலைகீழாக இருக்கிறது.

அனைவருக்கும் அவரவர் சொந்த குடும்ப வேலைக்கு மட்டும்தான் நேரம்(மனம்) இருக்கும் போல?

நண்பர்களுக்கு சரி, ஆனால், நெருங்கிய சொந்தங்களும் வெறும் கண் துடைப்புக்கு என்று நடந்து கொள்ளும் போது, மனம் தனிமையில் வலித்ததை விட கொஞ்சம் அதிகமாகவே வலித்தது.

நேற்று வரை நம்மை சுற்றி சுற்றி வந்த சிறுசுகள் கூட, இன்று துணை கிடைத்ததும் சொந்தத்தை மறந்துவிடுவது எனக்கு மிக ஆச்சிரியமாகவே இருக்கிறது.

அட, நேரில் வந்து கூட பார்க்க வேண்டாம், ஒரு இருபது பைசா செலவில் ஒரு போன் பண்ணக்கூட யாருக்கும் மனமில்லாமல் போனது என்னை கொஞ்சம் அதிகமாகவே பாதித்துவிட்டது.

அதெல்லாம் சரி, நீ தனியாக இருந்து வருடங்கள் கழித்து வந்திருப்பதால், அனைவரும் உன்னை தேடி வர வேண்டும் என்று நினைப்பது எந்த விதத்தில் நியாயம்? என்று என்னை நானே சொந்த செலவில் மனதை சமாதன படுத்திகொள்ள...!

அவர்கள் அழைக்காவிட்டால் என்ன? நீ அவர்களையும் சேர்த்து அழைத்து விருந்து கொடு அதுதான் "இன்னார் செய்தாரை உறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்" என்று உள்ளே சென்ற "ஜிம்பீம்" வேதாந்தம் சொல்ல, அதையும் ஒரு வார இறுதி ஞாயிறு தினத்தில் செய்து பார்க்கப்போய்!

அது என்னவோ என் சொந்த செலவில் எனக்கே சூன்யம் வைத்துக்கொண்டது போல் இருந்தது.

வெளிநாட்டில் தங்கள் வேலை தேவைக்கு என்னை நாடிய சொந்தங்கள் முதல் மற்றபடி அழைத்தவர்கள் அனைவரும் வராவிட்டால் கூட மனம் சமாதானம் ஆகியிருக்கும்.

என்ன பகையானாலும் கட்டாயம் முறைக்கு வரவேண்டிய சொந்தங்கள் கூட, எந்த பகையும் இல்லாதபோதும் வர நேரமில்லாமல் (மனமில்லாமல்) போனதை பார்த்தவுடன், சாமி இறங்கியதை போல மனம் கன்னா பின்னவென்று வயது வித்தியாசம் பார்க்காமல் அங்கேயே ஆடி தீர்த்து விட்டது.

சும்மாவே நீ சாமியாடுவே, இதுல உடுக்கை அடிச்சு வேப்பிலைய வேற கைல கொடுத்துட்டானுக, இனி அடக்கவா முடியும்! விட்டுருங்க அதுவா மலை ஏறினாத்தான் ஆச்சு! என்று சொல்லி நண்பன் சிரிக்க...!

இன்னொருவனோ, எந்த நாட்ல இருந்து வந்தா என்னா? என்னடா நம்ம கல்யாண, காதுகுத்து கலாச்சாரப்படி குடும்ப விழாவுல எதோ ஒன்னு குறையுதேன்னு பார்த்தேன், அது திருப்தியா முடிஞ்சுருச்சு மாப்ஸ்!, இப்பதான் நமக்கு சாப்பாடு உள்ள இறங்கும் என்றான்.

என்ன நடந்து என்ன? என் மன தவிப்பு மட்டும் அடங்கவேயில்லை.

நாம் எதோ இந்தியாவில் பாடு பட்டு சேர்த்த சொத்தை எல்லாம் வெளிநாட்டில் இருந்து கொள்ளையடிக்க வந்திருப்பதை போல, சொந்த உறவுகளே நடந்து கொண்டது எனக்கு அவமானமாகவே பட்டது.

என்ன கொடுமை இது? இவர்களையா காத்திருந்து தேடிவந்து பார்க்க நினைத்தோம்! என்று என்னை நானே கேவலமாக பார்க்கும் படி இருந்தது.

இப்படி தேடி வந்து மனம் காயப்படுவதை விட, முகம் தெரியாத மக்கள் வசிக்கும் நாட்டில் தனியாக இருப்பது எவ்வளவோ மேல் என்று அடி மனதில் இன்னும் ஆழமாக பதிந்துவிட்டது.இத்தனை நடந்தும், குடும்ப அரசியல் புரியாத குழந்தையாய் தங்கமணி, இன்னும் சில மாதம் அங்கேயே இருக்க விரும்பி இருப்பது எனக்கு இன்னும் ஆச்சரியமாகவே இருக்கிறது! பின் புத்தி பெண் மனதில் என்னவென்று யாருக்கு தெரியும்?.

பெரிய பெரிய அலுவலக பிரச்னையை மற்றும் கூட்டு அரசியலை கூட சர்வ சாதாரணமாக எதிர்கொள்ளும் எனக்கு, திருமணதிற்கு பிறகு இந்த குட்டி குட்டி சொந்தபந்த குடும்ப அரசியல் மட்டும் ஏனோ புரியவே இல்லை? புரிந்து கொள்ளவும் விரும்பவில்லை.

என்னதான் உள்ளுக்குள்ளேயே உள்ள சொந்தகளோடு மட்டும் பழகிய மக்களாயினும், வெளியில் இருந்து வந்த ஒருவரிடம் பழகாமலேயே, அவர் நல்லவரா கெட்டவரா! என்று மக்களால் எப்படி முடிவடுக்க முடிகிறது? அல்லது இப்படி நடந்து கொள்ளும் சொந்தங்களின் நோக்கம் தான் என்ன?

சொந்த குடும்ப உறவுகளுக்குள் கூட இப்படி உட்பூசல், பகை, ஈகோ தேவையா?

எது எப்படியோ, தாமரை இதழில் விழுந்த நீர் துளி போல, நான் நானாகவே இருக்கிறேன், ஆனால் அது சில நேரங்களில் சிலருக்கு என்னை தவறாக நிறம் காட்டி விடுகிறது,காரணம் அது பார்ப்பவரின் கோணத்தை பொறுத்து மாறுபடுகிறது.

அதனால் இதில் எல்லாம் நான் அதிக ஆர்வம் காட்ட விரும்பாமல் விடுமுறை முடிந்து திரும்பிவிட்டேன்.

இது உங்களுக்கு மொக்கையா, இல்லை திருமணமாகி போகும் குறிப்பாக வெளிநாட்டில் இருந்து போகும் அனைவருக்கும், பொதுவான பிரச்சனையா (சப்ப மேட்டரா) என்று எனக்கு தெரியவில்லை.

புரிந்தவர்கள் மற்றும் அனுபவப்பட்டவர்கள் அல்லது இது சார்பாக இடுகை இருப்பின் பின்னூட்டத்தில் சொல்லவும்.

இப்போது புரியுமே முதல் வரியின் அர்த்தம்...!

அட, இதுக்கு போயி அலட்டிக்கலாமா...! என்னடா பொல்லாத வாழ்க்கை...!

யாரையும் நம்பி நம்மை பெற்றாளா அம்மா?, அட போகும் இடம் ஒன்னுதானே பொறுங்கடா சும்மா...! இதுக்கு போயி அலட்டிக்கலாமா...!
 

Blogger Widgets