Saturday, December 12, 2009

என் பார்வையில் ரஜினி

பதிவுலகத்தில் இந்தமாதம் முழுவதும் பட்டையை கிளப்பிக்கொண்டு இருக்கும், என் நண்பர்கள் பதிவுகளில் இருப்பதை விட அதிகமாக ரஜினியை பற்றி என்னால் இங்கு வேறு எதுவும் சொல்லிவிட முடியாது என்று நான் நினைக்கிறேன்.



ஆகவே, அதே கருத்தை வேறு வார்த்தைகளை கோர்த்து சொல்வதிற்கு பதிலாக நேரடியாக அவர்களின் பதிவுக்கு இணைப்புகளை இங்கு கொடுத்துள்ளேன்.

I- இந்த வாரம் ரஜினி வாரம்

II- கிரி

III- ஈ ரா


என்னதான் வசதி, பெயர், புகழ் இருந்தாலும் மனதில் பட்டதை நேரடியாக பேசி, இயல்பு வாழ்கையில் எளிமையாக இருப்பதில் ரஜினிக்கு நிகர் ரஜினி-யேதான்.

இல்லாத ஒரு இமேஜை தானாக உருவாக்கிக் கொள்ள துடிக்கும் நடிகர்களுக்கு மத்தியில், தனக்கும் மட்டுமே உள்ள இமேஜை பற்றி கவலை படாமல், அவர் அவராகவே இருப்பதை யாராலும் மறுக்க முடியாது இல்லையா?



அவர் காலில் இருக்கும் செருப்பையும் கையில் இருக்கும் மொபைல் போனையும் பாருங்கள், இத்தனை எளிமையாக இன்று ஒரு நடிகரை பார்க்க முடியுமா?

போராட்டமான வாழ்கையை படிப்படியாக சந்தித்து வெற்றி வாகை சூடிய சூப்பர்ஸ்டாருக்கு, ஒரு நல்ல ரசிகன் என்ற பெருமையோடு இன்று போல் என்றும் வாழ என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

அவரது பிறந்தநாளை கொண்டாடும் ரசிகர்களாகிய அனைத்து சகோதர சகோதரிகளுக்கு என் வாழ்த்துக்கள்.

என்னதான் நமக்கு இடையில் சிலமைல் கடல்களும், சிலமைல் நிலங்களும் இருந்தாலும், உள்ளத்தால் ரஜினி ரசிகர்களாகிய நாம் என்றும் ஒன்று பட்டு இருக்கிறோம் என்ற முறையில் உங்களுடன் இந்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறேன்.


இனி என் பதிவில், என் மனதில் பட்ட சில கருத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

மகிழ்ச்சி என்பதே மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில்தானே இருக்கிறது, ஆகவே இதை தனிப்பட்ட ரஜினி ரசிகர்களுக்கான பதிவாக மட்டுமிலாமல், பொதுவாக சில விசையங்களை இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

எனவே, ஒரு ரஜினி ரசிகனாக இல்லமால் சில பொதுவான கருத்துகளை இங்கு பார்ப்போம்.

ஏன்? என்றால் ரஜினி ரசிகன் என்ற முத்திரையோடு, மற்ற யாரையும் குற்றம் சொல்வதோ காயப்படுத்துவதோ இங்கு என் நோக்கம் அல்ல.



யார் ரஜினி: நான் கடவுளில் "எம்.ஜி.ஆர்" வேடத்தில் ஒருவர், இன்று பார்த்தால் நண்டு சுண்டு நடிகர்கள் எல்லாம் பண்ணும் அலப்பறை இருக்கே, "ஐயோ அம்மா தாங்க முடியவில்லை" என்பார்.

இதை ஏன் இங்கு குறிபிடுகிறேன் என்றால், எதோ ஒரு படத்தில் கவுண்டமணி சொல்லுவார் "உன் மூஞ்சிக்கு கஜோல் மாதிரி துணி தைக்கணுமா, போய் கஜோல் கிட்டயே எதாவது பழசு பட்டையை வாங்கி போட்டுக்கோ" என்று.

அது போல் ரஜினி நடித்த பழைய வேடத்தில் இருந்து அவர் போடும் துணி முதல் வசனம் வரை அப்படியே அவரை தன் படத்தில் காப்பி அடிப்பது, அதுவும் அப்பா சம்பாதித்த பணத்தில் தானே படம் எடுத்து தனக்குதானே வெற்றி விழா போஸ்டர் அடித்துக்கொள்ளும் அரைகுறை நடிகர்களை எப்படி ரஜினியோடு ஒப்பிட முடியும்?

(இப்படி செய்வதால் இவர்களும் நளினிகாத், சின்னிஜெயந், விவேக் மற்றும் தாமு என்று நகைச்சுவை நடிகர் வரிசையில் வந்து விடமாட்டார்களா?).

ஒரு நடிகனாக ரஜினியை பார்த்தோம் என்றால், அவர் தன் தோற்றத்திற்கும் நடிப்பு திறமைக்கும் சரியாக பொருந்தும் வேடங்களை மட்டுமே அன்றும் இன்றும் செய்கிறார்.

இப்படி சொல்வதால் நான் மற்ற யார் படங்களையும் எனக்கு பிடிக்க வில்லை என்று கண்மூடித்தனமாய் சொல்வதாய் நினைக்க வேண்டாம். நான் சொல்ல வருவது, தங்களுக்கான வழியில் தனக்கு பொருந்தும் வேடத்தில் ஒருவர் நடிக்கும் எந்த படத்தையும் எனக்கும் பிடிக்கும்.

உதாரணமாக, சிம்புவின் - கோவில், தொட்டி ஜெயா, விஜையின் - பூவே உனக்காக, லவ் டுடே, துள்ளாத மனமும் துள்ளும், காதலுக்கு மரியாதை மற்றும் தனுஸின்- காதல் கொண்டேன், யாரடி நீ மோகினி என்று இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

இப்படி அவர்களுக்குரிய வேடத்தில் நடிப்பதை விட்டு விட்டு, அண்ணாமலை-யையும், பாஷா-வையும் திரும்ப திரும்ப எடுத்து விட்டு, நான்தான் சூப்பர் ஸ்டார் என்று தம்பட்டம் அடிக்கும் காமிடி கதாநாயகன்களை எப்படி ரஜினியோடு ஒப்பிட்டு பார்க்க முடியும் சொல்லுங்கள்!.



வெறும் அண்ணாமலை-யும், பாஷா-வும் அல்ல ரஜினி, அபூர்வராகங்கள் முதல் சிவாஜி தி பாஸ் வரை எத்தனயோ முத்திரைகளை பதித்து இந்த இடத்தை அடைந்து இருக்கிறார், அவர் செய்த அதையே திரும்ப செய்து இனியாராலும் அந்த இடத்தை அடைய முடியாது என்பது தான் உண்மை.



சூப்பர்ஸ்டார் நாற்காலி: சினிமா என்பது ஒரு தொழில் இதில் யாரும் நஷ்டப்பட்டு விடக்கூடாது என்பதில் நான் கவனமாக இருக்கிறேன்.

ஆகவே, யார் படம் மக்களுக்கு பிடித்து அதிக வசூலை தருகிறதோ, அவர்தான் சூப்பர் ஸ்டார் நாற்காலியில் உட்கார தகுதியானவர், என்று நடிகர் விக்ரமை ஒரு பாராட்டு விழாவில் ரஜினி சொன்னதுதான் உண்மையில் இப்போது வரும் "அந்த பட வசூலை மிஞ்சி" விட்டது "இந்த பட வசூலை தாண்டி" விட்டது என்ற "வெற்றி விழா" போஸ்டர்களின் ஆரம்பம்.

ரஜினியே இப்படி சொல்லி விட்டார் என்று, தன் சொந்த பணத்தில் போஸ்டர் அடித்து "மூன்று நாள் முழுதாக ஓடாத படத்தை கூட நூறாவது நாள் விழா எடுத்து" என் படம் ஓடி விட்டது, இனி நான்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று படம் காட்டும் நடிகர்களை நினைக்கும் போது என் கவலைகளை மறந்து சிரிக்க முடிகிறது.

இதை சற்று கவனித்து பார்த்தால், சூப்பர் ஸ்டார் நாற்காலி என்பது விக்ரமாதித்தன் சிம்மாசனம் போல், அவருக்கு பின் யார் வேண்டுமானாலும் அந்த சிம்மாசனத்தில் அமரக் கூடும், ஆனால் விக்ரமாதித்தன் சிம்மாசனத்தில் அமர்ந்தவர் எல்லாம் விக்ரமாதித்தன் கிடையாது என்பதுதான் உண்மை.



அதே போல், நல்ல லாபத்தை கொடுக்க கூடிய படங்களும் நடிகர்களும் இனி வரலாம், ஏன் சூப்பர் ஸ்டார் நாற்காலியில் கூட அவர்கள் அமரலாம், ஆனால், இனி வரும் யாருமே சூப்பர் ஸ்டார் நாற்காலியில் அமர்வதால் சூப்பர் ஸ்டார் ஆகிவிடப்போவதில்லை என்பதுதான் உண்மை.

அன்றும் இன்றும் என்றும் புரட்சி தலைவர், நடிகர் திலகம், நடிகவேல் எப்படி ஒரே ஒருவரோ, அது போல் என்றும் சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினி மட்டும்தானே?

தனிப்பட்ட வாழ்கையை விமர்சிப்பது நாகரீகமா?: நடிகை, நடிகர்களில் பல பெண்களிடம் தொடர்பு வைத்திருந்தவர், பல திருமணம் செய்து கொண்டவர், குடித்தே அழிந்தவர், சொத்து முழுவதும் அழித்தவர்கள் என்று நீண்ட பட்டியல் உண்டு என்பது நம் அனைவருக்கும் நன்றாகவே தெரியும் இல்லையா?

அப்படி இருக்க இதில் ரஜினி என்ன புதிதாக செய்து விட்டார் என்று அவரை மட்டும் குறை சொல்ல வேண்டும்?

உண்மையோ இல்லையோ எனக்கு தெரியாது. ஆனால், மனதை ஒருமுக படுத்தி தொடர்ந்து தியானத்தில் கவனம் செல்ல சில சித்தர்கள் கூட கஞ்சா புகைத்ததாக சில குறிப்புகள் உண்டு.



இப்படி இருக்க, பொதுத்துறையில் இருக்கும் பிரபலம் என்பதற்காக, அவரின் தனிப்பட்ட வாழ்க்கையையும் பொதுவாக்கி விமர்ச்சிப்பது என்பது எவ்வகையில் நாகரீகமாகும்?

நம்மில் யார்தான் குடிக்கவில்லை, தம் அடிக்க வில்லை? மற்றவர்களுக்கு தொல்லை அல்லது துன்பம் தராத விசையங்களை பற்றி விமர்சிப்பது என்பது காட்டுமிராண்டி தனமில்லையா?

இது மட்டுமில்லாமல் கர்நாடகாவில் சொத்து வைத்திருக்கிறார்?

இமயமலையில் சென்றுதான் தியானம் பண்ண வேண்டுமா? ஏன் கடவுள் இங்கு இல்லையா?

என்று அவரின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்ச்சிப்பது வேடிக்கைதான்.

தமிழக அரசியல் தலைவர்களுக்கு கர்நாடகாவில் சொத்து இல்லை என்று நினைத்தால்! அது அவர்களின் அறியாமையையே காட்டுகிறது.

மேலும் நமக்கு தேவை என்ற போது மட்டும், இந்தியா பொதுவானது என்று நமக்கும் பொதுவான தண்ணீரை தராவிட்டால், இந்தியன் என்ற உரிமையை கூறி திட்டும் நாம், தனிப்பட்ட உழைப்பில் ஒருவர், தன் சொத்துக்களை இந்தியாவில் எந்த இடத்திலும வாங்க உரிமை உண்டு என்பதை ஏன் மறந்து விடுகிறோம்?



அதே போல், இந்தியனாகிய ஒருவருக்கு இந்தியாவின் எந்த இடத்துக்கும் செல்ல இருக்கும் உரிமையை, அவர் விசையத்தில் மட்டும் மறுப்பது ஏன்?

அவர் இமயமலை போகிறாரே தவிர யாரையும் போக சொல்லவில்லையே!, மற்றும் மாற்று மத இன நம்பிக்கைகளை குறை சொல்ல வில்லையே? இதை ஏன் நாம் உணர மறுக்கிறோம்?

அரசியல் ஆக்காதீர்கள்: ரஜினி அரசியலுக்கு வரட்டும் அல்லது வராமல் போகட்டும், ஆனால் ரஜினிக்கு அரசியல் தொழில் அல்ல. அதே நேரத்தில் அவருக்கு ஒரு அரசியல் தலைவரை விட அதிக செல்வாக்கும் மதிப்பும் ரசிகர்கள் எண்ணிகையில் இருக்கிறது என்பதுதான் உண்மை.

இதனால், எங்கே நம் பிழைப்புக்கு பங்கம் வந்து விடுமோ? என்று நினைத்து, அரசியல்வாதிகள் அவர் மீது களங்கம் சுமத்துவது அனைவரின் உள்மனதுக்கும் தெரியும், இது இப்படி இருக்க!

மற்ற எந்த ஒரு விசையத்துக்கும் பெரிய ஒரு விளம்பரம் அதன் மூலம் வியாபாரம் தேவை, அதற்கு ரஜினி கண்டிப்பாக தேவை, அங்கு அவர் என்ன பேசினாலும் சரி, பேசாவிட்டாலும் சரி, அதனால் பலருக்கும் பணம், லாபம்.
தொலைக்காட்சி, பத்திரிக்கை என்று பல வியாபாரம் அடுத்த சில நாட்கள் சூடு பிடிக்கும்.



இப்படி அவர் எச்சிலை பணமாக்கி வளருபவர்கள் வளருட்டும், ஒருவருக்கு ரஜினியால் வயிறு நிறைகிறது என்றால் அதை பற்றி அதிகம் விவாத்திக்க வேண்டாம் விட்டு விடுவோம்.

ஆனால், இந்த தொழில் ரகசிய அரசியலை புரியாமல் அவரின் எல்லா செய்கைகளையும் அரசியல் ஆக்குவது எப்படி நியாயம் ஆகும் என்று சிந்தித்து பார்க்க வேண்டாமா?

இனி ஒரு ரசிகனாக ரசிகர்களுடன் சில வார்த்தைகள்: வாழ்த்துக்கள் ரஜினி ரசிகர்களே, அவரின் ரசிகர் என்று சொல்லுவதில் பெருமை படும் நாம், அவர் என்னவோ நம் கையை பிடித்து கூட்டிக் கொண்டு சென்று "கண்ணா இதுதான் கெட்டுபோகும் வழியின் கதவு என்று திறந்து விட்டது போல்", சிலர் அவரை பற்றி பேசும் அளவு நாமே வழிவகுத்து விட்டோம் என்பதில் நாம் பெருமைகொள்ளத்தான் வேண்டும் இல்லையா?

இதுவா நாம் அவரிடம் கற்றுக்கொண்டது? அல்லது இதுவா அவருக்கு பெருமை?

சற்று சிந்திக்க வேண்டும் தோழர்களே, அவர் வீட்டை சுற்றி அல்லது வேலை இடங்களுக்கு சென்று தொல்லை கொடுப்பது என்று இன்னும் ஒரு சமமான மன நிலைக்கு நாமே வராமல் "பொருத்தது போதும் பொங்கி வா தலைவா" என்று போஸ்டர் அடிப்பதில் என்ன நியாயம் இருக்கிறது?.

அவரை பார்ப்பதும், கை குலுக்கி ஒரு புகை படம் எடுத்துகொண்டு அதை படம் போட்டு காட்டுவதில் மட்டும் தான் நம் எண்ணம் முழுவதும் இருக்கும் பட்சத்தில், அவர் நடிகராகவே இருந்து விடுவது தான் நாம் அவருக்கு செய்யும் பெரிய உதவி.

என்ன இப்படி சொல்கிறீர்கள் என்று வருந்த வேண்டாம். பின் வேறு என்ன சொல்வது சற்று சிந்தித்து பாருங்கள்!.



ஒரு நாட்டை தலைமை தாங்கி நடத்துவது என்பது எவ்வளவு பெரிய பொறுப்பு, அந்த பாரத்தை அவர் தலையில் வைக்கும் முன், அதற்கு பக்க பலமாக நம்மை நாமே தயார் படுத்த வேண்டாமா?

முதலில் உங்கள் தொழில், படிப்பு என்று உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை மற்றும் உங்கள் குடும்ப வாழ்கையில் நிலையான இடத்தில்தான் நாமும் இருக்கிறோம் என்றும், மற்ற யாருக்கும் குறைந்து விடவில்லை என்றும் சமுதாயத்துக்கு காட்டுங்கள்.

பின் உங்கள் பகுதியில் இருந்து வாழ்க்கை முறை, வேலை, குடும்ப சூழ்நிலை என்று பிரிந்து கிடக்கும் ரசிகர்களை ஒன்று திரட்டுங்கள், அதன் மூலம் அடிமட்டத்தில் இருந்து தலைமை வரை ஒரு முறையான தொடர்பு முறையை மேம்படுத்துவோம்.

மார்க்கெட்டில் கத்திரிக்காயை விட மலிவாக இன்று தொலை தொடர்பு வசதிகள் இருக்கிறது, உங்கள் மன்றத்தை சார்ந்த உலகமெங்கும் இருக்கும் ரசிகர்களை வரிசைபடுத்தி ஒரு இணைய வட்டத்திற்குள் கொண்டு வருவோம்.

அந்தந்த மன்றத்தை சேர்ந்த மக்களின் வயது, படிப்பு, வேலை, தொழில், தொலைபேசி, மின்னஞ்சல் தொடர்பு, ஓட்டுரிமை பகுதி என்று வரிசைபடுத்தி அட்டவணையை ஒழுங்கு படுத்துவோம்.

பணம் கொடுத்து கூட்டம் கூட்ட, நாம் ஒன்றும் அரசியல்வாதிகள் இல்லையே!, அதனால் அந்தந்த தொழில் சார்ந்த ரசிக மக்களின் உதவியுடன் அந்தந்த பகுதியில், சட்டத்துக்கு உட்பட்டு நம் பகுதி மக்களுக்கு தேவையானதை அகிம்சை வழியில் பெற்றுதந்து, மக்களுக்கு ரஜினி ரசிகர்களால் ஆக்கத்துக்கும் பாடுபட முடியும் என்று புரிய வைத்து, அவர்கள் ஆதரவும் நம்மோடு சேரும் படி செய்ய வேண்டும்.

முக்கியமாக இவை அனைத்தும் நம் தொழில் குடும்ப வாழ்க்கை பதிக்காமல், பதிவு எழுதுவது போல் தனியாக கொண்டு செல்வோம்.

இதனால் மக்களும் பணத்துக்கு ஓட்டை விற்பது தவறு என்று தலைவர் பாணியில் வேஷ்டி சட்டை வேண்டாம் வேலை வெட்டி கொடுங்கள்! என்று கேட்கும் நிலைக்கு வந்து விடுவார்கள்.



இதுபோல் அரசியலில் இல்லாமல் அத்தனை தொகுதிகளிலும் நம் செல்வாக்கை நம்மை நாமே சோதித்து, அதன் விடையை தலைவருக்கு மக்கள் கொடுக்கும் படி செய்வதுதான் உண்மையில் இப்போது நமக்கு தேவை.

இப்படி இது வெறும் கொடி கட்டி விசிலடிக்கும் கூட்டம் மட்டும் அல்ல என்று மக்களும் மற்ற அரசியல் தலைமைகளும் முழுதாக புரிந்து கொள்ளும்படி முதலில் செய்து விட்டு, அதன் பின் வாங்க தலைவா என்று கூப்பிடுவதில் தான் ஒரு அர்த்தம் இருக்கிறது என்பது என் கருத்து

என் பதிவில் உங்கள் நேரத்துக்கு நன்றி சொல்வதோடு, இவை அனைத்தும் என் தனிப்பட்ட கருத்துக்கள் என்பதால், எதிர் கருத்தாயினும் அதை இங்கு மனம்விட்டு நீங்கள் சொல்வதன் மூலம் உங்கள் எதிர்பார்ப்பை அல்லது மனநிலையை படிக்க உதவும்.

நன்றி!.
 

Blogger Widgets