Monday, February 15, 2010

நீங்கள் கேட்டு கொண்டு இருப்பது "டமில்" எப்.எம்!

நான் சிறு வயதாக இருக்கும் போது, எங்கள் வீட்டில் ஒரு பிலிப்ஸ் வானொலி இருக்கும், எங்கள் வீட்டில் எனக்கு மிக பிடித்த ஒரு விசையம் அது. அதிலும் வானொலி கேட்ட இன்னும் விருப்பம், அதற்கு இரண்டு காரணம்.

ஒன்று, எனக்கு தமிழ் பாடல்கள் கேட்க மிக பிடிக்கும். இன்னொன்று, அந்த தொகுப்பாளர்களின் தமிழ் குரல். மனதை மயக்கும் அந்த குரலுக்காகவே ஒரு சில நிகழ்ச்சிகளை தவறாமல் கேட்பது என் முக்கிய வேலைகளில் ஒன்று.

ஒவ்வொருவரும் தங்கள் தனி திறமையுடன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது இன்றும் என் மனதை விட்டு மறையவில்லை.

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், "சரோஜ் நாராயண் சுவாமி", "பி.ஹச்.அப்துல் ஹமிட்" மற்றும் "கே.எஸ்.ராஜா". எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது, நான் கே.எஸ்.ராஜா-வை போல "ஸ்டைலாக" நண்பர்களுடன் பேசி மகிழ்ந்தது.

பி.ஹச்.அப்துல் ஹமிட் அவர்கள் நின்ற இடத்தில் ஒரு லட்சம் பாடல் வரை, கேட்ட நொடியில் பாடல் இடம் பெற்ற படம், பாடியவர் பெயர், இசை அமைத்தவர், படலை எழுதியவர் என்று வரிசை படுத்தும் திறன் கொண்டவர் என்று கேள்விபட்டு இருக்கிறேன்.

நாளடைவில் வானொலி கேட்கும் பழக்கம் எப்போது என்னை விட்டு சென்றது என்று சரியாக நினைவில் இல்லை. வாழ்கையை தேடி ஓடி திரிந்ததில் அத்தனையும் தமிழ் பேசாத நகரங்கள், நாடுகள்.



இன்று போல் அப்போது எல்லாம் இணைய வழி வானொலிகள் இருந்ததில்லை, அந்தந்த வானொலிகள் அந்தந்த குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டுமே கேட்க முடியும்.

அதன் பின், இணைய பயன்பாடு மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியால் தொலைகாட்சி, எம்.பி-3என்று மாற!, வானொலி என்ற வார்த்தையே சுத்தமாக மறந்து போனது.

இப்போதுதான் கணினி, மொபைல் முதல் கைகடிகாரம் வரை வானொலி, தொலைகாட்சி எல்லாம் கேட்க முடியுமே.

இப்படி இணைய தொழில்நுட்பம் வளர்ந்த நீண்ட இடைவெளிக்கு பின், மீண்டும் வானொலி கேட்க சந்தர்ப்பம் கிடைத்தது, நான் முதல் முறையாக சிங்கை சென்று விமான நிலையத்தில் இருந்து டாக்ஸியில் போகும் போது, அது 2005-ல் என்று நினைகிறேன்.

இது என்ன நிகழ்ச்சி என்று அந்த வாகன ஓட்டியிடம் கேட்க!, இது சிங்கையின் தமிழ் வானொலி ஒலி 96.8 என்று அவர் சொன்னார். அப்போது பேசிக்கொண்டு இருந்தவர் பெயர் "மீனாக்ஷி" என்று நினைக்கிறேன்.

இந்த முறை கேட்டவுடன் பிடிக்க காரணம் மூன்று, அமைதியான மற்றும் அருமையான குரல், அந்த மழை தூரும் இரவு நேர நிகழ்ச்சியின் மென்மை, முக்கியமாக அந்த சூழ்நிலையில் அவர்கள் பேசிய அழகிய தமிழ்.

இப்படி ஆரமித்து அங்கு இருந்த நாட்களில் திரும்ப வானொலி கேட்க தொடர்வது (கைதொலைபேசியில்) என் வழக்கமாகிவிட்டது.

அடுத்தடுத்த நாட்களில் என்னை அதிகம் கவர்ந்தது அவர்கள் தமிழ், நிகழ்ச்சிக்கு நடுவில் அவர்கள் கொடுக்கும் வாழ்கை குறிப்புகள், "வானம் வசப்படும்" என்ற ஒரு நிகழ்ச்சி.மற்றும் இரவு சுமார் ஏழு முதல் எட்டு மணியலவில், ஒரு மருத்துவர் தரும் தன்னம்பிக்கை தொடர்பான சொற்பொழிவு. அவர் பெயர் நினைவில் இல்லை அருமையான ஒரு இஸ்லாமிய பெயர்.

இது எல்லாவற்றையும் விட "விமலா", எந்த வேலை இருந்தாலும், தினம் தினம் மாலை நேரம் இவர் நிகழ்ச்சியை மட்டும் தவற விடுவதில்லை, அப்படி ஒரு அழகான (இனிய) குரல் அவருக்கு (அவரும் அழகுதான்).

அதிலும் அவர் கேட்கும் கேள்விக்கு சரியான விடை தெரிந்தாலும், மற்றவர்களை மகிழவைக்கும் அவரை சிரிக்க வைக்குமாறு குறுந்தகவல் மூலம் ஒரு நகைச்சுவை விடையை அங்கிருந்த ஒவ்வொரு நாளும் அனுப்ப தவறியதில்லை.

என் நண்பர்கள் என்னை, நீ வந்திருக்கும் இந்த சில நாட்களில் எங்களுடன் நேரத்தை பகிராமல், கைதொலைபேசியை வைத்துக்கொண்டு "விமலா" பைத்தியமாகி விட்டாய் என்று சொல்லி கேலி செய்யவே தொடங்கி விட்டார்கள். அதன் பின் சிங்கை செல்லும் போது எல்லாம் ஒலி 96.8 நிகழ்ச்சியை நான் ஒரு போதும் தவற விடுவதில்லை.

இதை தவிர வேறு எங்கும் எனக்கு தமிழ் வானொலி கேட்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்று சொல்வதை விட எம்.பி-3 இருப்பதால், நான் அதிகம் விரும்பவில்லை என்பதுதான் உண்மை.

இப்படி மீண்டும் ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு, சமீபத்தில் இணையத்தில் கண்ணை கழுவிக்கொண்டு இருக்கும் போது, தமிழ் எப்.எம் வானொலிகள் "சென்னையில் இருந்து நேரடி ஒளிபரப்பு" என்று எதோ ஒரு விளம்பரம் கண்ணில் பட, வானொலி கேட்கும் ஆர்வம் என்னை தொற்றிக்கொண்டது.

அதில் எதோ ஒரு எப்.எம் நிகழ்ச்சியை சொடுக்க, அடுத்த பத்து நிமிடத்தில் எனக்கு ரத்த ஓட்டம் கூடி விட்டது (மாற்றி மாற்றி வேறு சில நிலையங்களையும் கவனித்தேன்).

ஒரு பெண் நிகழ்ச்சியை தொகுத்து கொடுத்து கொண்டிருந்தார், அப்பப்ப...என்ன ஒரு பேச்சு நடை, எனக்கு இவை உண்மையில் தமிழ் எப்.எம்-தானா? என்று ஒரு சந்தேகம் வந்து விட்டது.

அந்த பெண் வீட்டில் ஏதாவது அவசர வேலையை விட்டு விட்டு வந்தாரா! அல்லது அந்த நிறுவனத்தில் விளம்பர தொழில் நோக்கமா! என்று தெரியவில்லை அவ்வளவு ஒரு அவசரமான பேச்சு. அதுவும் வடிவேல் சொன்னா மாதிரி "இப்ப நீ என்ன பேசுன? இதுல தமிழே இல்லையே!" என்று கேட்க தோன்றியது.

தமிழ் எப்.எம் வானொலியில் (அவர்கள் சொந்த நிறுவன விளம்பரத்தில் கூட தமிழ் இல்லை) இப்படி அவசரமாக அதுவும் "ஆங்கிலம்" பேசுவது எனக்கு நாகரீகமாக தெரியவில்லை.

ஒரு அமெரிக்கரை கொதிக்கும் சுடுதண்ணீரில் காலை விட சொல்லி விட்டு, வேகமாக நீ தமிழில் "திருக்குறள்" படித்தால் தான் காலை வெளியே எடுக்க முடியும் என்று சொன்னால்!, அவர் தமிழ் உச்சரிப்பு எப்படி இருக்குமோ!, அப்படிதான் அவர்கள் பேசிய விதம் எனக்கு தோன்றியது.

இங்கு மதவாதி போல் ஆங்கிலம் பேசுவதை தவறு என்று நான் சொல்லவில்லை!.

"ஆங்கிலம்" என்பது ஒரு மொழி மட்டுமே அறிவல்ல!. தமிழ் பேச தெரியாத வேறு மக்களுடன் நாம் சொல்ல வந்ததை பகிர்ந்து கொள்ளும் போது பயன் படுத்துவதில் ஒரு அர்த்தம் இருக்கிறது. அதை விடுத்து ஏன் தேவை இல்லாத எல்லா இடங்களிலும்?

மேலும் ஆங்கிலம் கேட்க எத்தனையோ இணையம், வானொலி மற்றும் தொலைகாட்சி பகுதிகள் இன்று இருக்கிறது, பின் ஏன் ஒரு தமிழ் பகுதியில் இப்படி?

நாங்கள் தமிழ் தலைவர்கள், தமிழ் வளர்ப்போம், இமயத்தில் தமிழ் கொடி பறக்கும், தமிழ் செம்மொழி, இந்திய அரசாங்க ஆவணங்கள் கூட தமிழில் வேண்டும் என்று சொல்லி போராட்டம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றும் யாருக்கும் இது கண்ணில் படவில்லையா? என்று கூட குழம்பி விட்டேன்.

தமிழ் வளர்ப்பது ஒரு பக்கம் இருக்கட்டும், முதலில் நடை முறை பொது வாழ்கையில் தமிழில் ஒழுங்காக பேசுவோம் மற்றும் பேச தூண்டுவோம்.



குறைந்த பட்சம் பொது மக்கள் தினசரி பயன் பாட்டில் இருக்கும் வானொலி மற்றும் தொலைகாட்சிகளில் தமிழ் பயன் படுத்த இவர்கள் முயற்சிக்கலாமே?, தமிழ் மட்டும் என்று கூட அல்ல, தமிழையும் என்று சொன்னால் அது இங்கு மிகை ஆகாது.

இங்கு என் எண்ணங்களின் சில கேள்விகள், சில வேண்டுகோள்!.

தமிழ் "எப்.எம்" வானொலியில் தமிழில் பேசினால் குற்றமா?

தமிழ் வானொலி விளம்பரங்கள் கூட ஆங்கிலத்தில் இருப்பதுதான் நாகரீகமா?

தமிழ் தொகுப்பாளர்கள் நிகழ்ச்சிக்கு நடுவில் கொடுக்கும் தகவல்களில் மக்களுக்கு பயன்படும் படி ஒரு நல்ல தரம் வேண்டாமா?


இன்று வெளிநாட்டு தமிழ் வானொலிகள் கூட சுத்தமான தமிழ் மட்டும் பயன் படுத்தும் போது, நம் தமிழ் நாட்டு எப்.எம் மக்கள் ஏன் தமிழை இப்படி கொலையாய் கொல்கிறார்கள்?

இன்னும் கொடுமை அந்த தொகுப்பாளர்கள் நிகழ்ச்சிக்கு நடுவில் கொடுக்கும் கேள்விகள் (தகவல்கள்) யப்பப்பா...

"யாரை அடிக்க மிக பிடிக்கும்", "யாரை திட்ட மிக பிடிக்கும்", "ஓர் நாளுக்கு எத்தனை முறை கண்ணாடியை பார்ப்பீர்கள்?"

இன்றைய நம் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் எவ்வளவு பயனுள்ள தகவல்கள் இது இல்லையா!.

அதை விட கொடுமை, விளம்பரத்துக்காக நேரத்தை ஒதுக்க, அவர்கள் பேச்சில் இருக்கும் அவசரம் (பரபரப்பாக அல்லது சுறுசுறுப்பாக பேசுவதும், அவசரமாக பேசுவதும் ஒன்றாகாது).

காலை அலுவலகம் செல்லும் ஒருவர், கார் ஓட்டும் போது இதை கேட்டால் சுத்தம். ஒன்று ரத்த கொதிப்பு எகிறி கார் மரத்தில் முட்டிவிடும் அல்லது அன்று முழுவதும் அலுவல வேலை "அதோ" கதிதான்.

அப்போதே அவர் எண்ணுக்கு அழைத்து "மறக்க தெரியவில்லை எனது காதலை, மறக்கும் உருவமில்லை எனது காதலி" என்ற 90-களில் வந்த இந்த பாடல் எந்த படம் என்று தெரியுமா? என்று கேட்டு, பத்து வினாடிக்குள் சொல்லாவிட்டால்!, நீ எல்லாம் ஒரு பாடல் தொகுப்பாளரா என்று சொல்ல தோன்றியது.

குறை சொல்வதாய் நினைக்க வேண்டாம் நண்பர்களே!, சற்று சிந்தித்து பாருங்கள்.

இன்று இணையத்தில் கிடைக்காத தமிழ் பாடல்களே கிடையாது. அப்படி இருந்தும் உலக தமிழ் மக்கள் தமிழ் வானொலியை தேடி வருவதற்கு காரணம்!, வெறும் தமிழ் பாடல் கேட்கும் நோக்கில் மட்டுமல்ல.

தாய் மொழி பேச்சு துணைக்கு கூட ஆள் இல்லாத நாடுகளில் இருக்கும் நம் மக்கள், உங்களை போல நம் மக்களின் அன்றாட நடை முறை தமிழை மற்றும் நம் சொந்த நாடு, நகரத்து நடவடிக்கைகளை கேட்டு மகிழத்தான்.

எங்கள் வாழ்வும் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! என்று சொன்ன தமிழ் திருநாடு இல்லையா நம் நாடு.


இப்படி உலகமெங்கும் ஒலிக்கும் உங்கள் குரல் மற்றும் தமிழ் நிகழ்ச்சிகளில், நல்ல தரமான தமிழை பயன்படுத்த வேண்டாமா?

நல்ல தமிழில் பேசுங்கள், உங்களிடம் பேச அழைப்பவர்களிடமும் தமிழில் மட்டும் பேச ஊக்க படுத்துங்கள். நீங்கள் சொல்ல வரும் கருத்துக்கு தேவையான குரல் வேகத்தை மட்டும் கொடுத்து, தகுந்த இடைவெளியில் வார்த்தைகளை உச்சரியுங்கள். மேலும் உங்கள் மற்றும் மற்ற நிறுவன விளம்பரங்கள் தமிழில் இருக்குமாறு தேர்ந்தெடுங்கள்.

நிகழ்ச்சி நேரம் "காலை, பிற்பகல், மாலை மற்றும் இரவு" என்று நேரத்துக்கும் அன்றைய சூழ்நிலை, (குறைந்தது அந்தந்த நகரத்தின்) வானிலைக்கும் தகுந்த கருத்துகளை தொகுத்து கொடுங்கள்.

அப்போதைய போக்குவரத்து நெரிசல், போக்குவரத்து விதி முறைகள், சாலை விளிப்புணர்வு, தன்னம்பிக்கை கருத்துகள், கணவன் மனைவி ஒற்றுமை, குழந்தைகள் வளர்ப்பு, கல்வி, லஞ்ச ஒழிப்பு, உலக நிகழ்வு, அறிவியல், உலக அரசியல், இந்திய வரலாற்றில் இன்று என உங்கள் நிகழ்ச்சிகளுக்கு நடுவில் பகிர நல்ல விசையங்கள் நிறைய இருக்கிறது.

நம் தாய் நாட்டில் நம் தாய் மொழி பேசினால் அசிங்கம் ஒன்றும் இல்லையே!, இதை பற்றி உங்களை சற்று சிந்தித்து பார்க்கத்தான் இங்கு வேண்டுகிறேன்.

மொத்தத்தில் அன்று நான் பல எப்.எம் வானொலி நிகழ்ச்சிகள் மாற்றி மாற்றி கேட்டதில், ஒரே ஒரு ஆறுதல் அவர்கள் தொகுத்து கொடுத்த நல்ல பாடல்கள். ஆனால் நான்கு நிமிட தமிழ் பாடலில் குறைந்த அழுத்தம், அடுத்த இருபது நொடி அவர்கள் அவசர ஆங்கில பேச்சில் மற்றும் விளம்பரத்தில் அதிகரித்து விடுகிறது.

இன்னொன்று எந்த எப்.எம் அலைவரிசை என்று நினைவில் இல்லை, அந்த தொகுப்பாளர் பெயர் "தீபா" என்று நினைக்கிறேன்!. தானும் "முடிந்த வரை" தமிழில் பேசி, தன்னிடம் பேசியவர்களையும் தமிழில் பேச சொல்லி ஊக்கப்படுத்தினார்.

அவருக்கு என் வாழ்த்துக்களும் நன்றியும். அவர் நிகழ்ச்சியை முழுவதும் தமிழில் தொகுத்தால் நிச்சியம் உலக தமிழர்களை அவர் நிகழ்ச்சி அதிகம் கவரும்.

சரி, எல்லாம் இவர்களை மட்டும் சொன்னால் அது நியாயமாகாது, வானொலியை கேட்கும் நேயர்களுக்கும் இதில் மிக முக்கிய பங்கு உண்டு. இதற்காக நாம் தனியாக எதுவும் செய்ய வேண்டாம்.

குறைந்தது தொலைபேசியில் பேச அழைக்கும் போது அல்லது அவர்களால் அழைக்க படும்போது, ஒவ்வொருவரும் முடிந்த வரை நல்ல தமிழில் பேசுங்கள்.

மேலும் பேசி முடிக்கும் முன் உங்கள் நிகழ்ச்சிகள் மற்றும் விளம்பரங்கள் நல்ல தமிழில் இருப்பதையே நாங்கள் விரும்புகிறோம் என்று அவர்களிடம் குறிப்பிட்டு சொல்லலாமே?.

இப்போது கூட, இந்த இடுகையை படித்து விட்டு நீங்கள் ஓட்டு அல்லது பின்னூட்டம் போடுகிறீர்களோ இல்லையோ!,

ஆனால், உங்களில் யாராவது வானொலி பிரியர்கள் இருந்து, நீங்கள் பேசும் போது இந்த கருத்தை குறிபிட்டால் அதுவே எனக்கு மிக மகிழ்ச்சி.

என் இடுகையில் உங்கள் நேரத்துக்கு நன்றி!.
 

Blogger Widgets