Wednesday, August 10, 2011

வணக்கம் சிங்கப்பூர்!

வணக்கம் நண்பர்களே, தென்கொரிய புயல் கரையை கடந்து விட்டது.

வாழ்கை என்பதே ஒரு பயணம், அதில் நமக்கு சொந்தமானது என்பது எதுவுமே இல்லை என்பதை உறுதியாக நம்புகிறவன் நான்.

ஆனால், வாழும்வரை நம்மை சுற்றி இருக்கிற விசையங்கள் மற்றும் நடக்கும் நிகழ்சிகளை பொறுத்தே நம் வாழ்கை முறையும் இருக்கும் என்பதையும் நான் மறப்பதில்லை.

அதனால்தான் என்னவோ, நான் வசிக்கும் ஊர் மற்றும் இருக்கும் இடத்தை தேர்வு செய்வதில் மிக கவனமாக இருப்பேன்.

தென்கொரியாவில் முழுதாக நான்கு ஆண்டுகள் ஓடிவிட்டாலும், தென்கொரியா என்னவோ எனக்கு சலிப்பே தட்டவில்லை, அவ்வளவு நிம்மதியான மற்றும் அழகான வாழ்கை முறை அங்கு.

இருந்தாலும், ஒரு தனிமனிதன் குடும்ப சக்கரத்தில் நுழைந்தவுடன், சில சொந்த விருப்பு வெறுப்புகளை கட்டாயமாக மாற்றி கொள்ள வேண்டிய சூழ்நிலை வந்து விடுகிறது.

இதில் தப்பி விட நான் ஒன்றும் அவதாரம் இல்லை என்பதால், சில தனிப்பட்ட காரணத்தை கருத்தில் கொண்டு தென்கொரியாவை விட்டு வரவேண்டிய நிர்பந்தம் உண்டாகி விட்டது.

இந்த முறை இந்தியா அல்லது இந்தியாவிற்கு அருகில் இருக்கும் நம் தமிழ் கலாச்சாரத்தை கொண்ட இடத்திற்குத்தான் போக வேண்டும் என்ற ஒரு கட்டுப்பாடும் இதில் சேர்ந்து கொண்டது, காரணம் தென்கொரியாவை விட்டு வரும் நோக்கமே குழந்தைகளின் ஆரம்ப கல்விக்காகத்தான்.

வெறும் ஆங்கில வழி அல்லது கொரிய மொழி கல்வி என்பதில் எனக்கும் சரி, என் குடும்பத்தினருக்கும் சரி விருப்பமில்லை,. தாய் மொழி இல்லாத வாழ்கை என்ன ஒரு வாழ்கை என்பதே அதன் உண்மையான காரணம்.

அதன் காரணமாகவே இந்த முறை மிக கவனமாக நான் தேர்ந்து எடுத்தது "சிங்கப்பூர்".



சிங்கப்பூரை பொறுத்த வரை எல்லாம் பார்த்து பழகிய இடங்கள்தான், அதே போல மாற்றம் என்பது சிங்கையில் புதிது இல்லை என்றாலும், நான் பார்த்த சிங்கை இப்போது ரொம்பவே மாறி இருக்கிறது, மக்கள் தொகையும் அதிகமாக தெரிகிறது.

மொத்த சிங்கப்பூரையும் கையடக்க ஆப்பில் தொலைபேசியில் அடக்கி வைத்து இருக்கிறார்கள், போகும் இடம், வழி முதல் அடுத்த பேருந்து வரும் நேரம், அருகில் இருக்கும் இடம், வாடகை வீடு, அங்காடி, மருத்துவமனை என்று அனைத்தையும் தொலைபேசியே சொல்லி விடுகிறது.

மாற்றம் பல இருந்தாலும் எப்போதும் போலவே பொலிவு குறையாத "புது பெண்" போல சிங்கை வழக்கத்தை விட அதிகமாகவே என் மனதை கவர்கிறது,

முதல் நாள் சாலை ஓர உணவு விடுதியில் இரவு உணவுக்காக சென்ற நான், என் தேவையை கேட்டு உதவி செய்ய வந்த பெண்ணிடம் பேசிய போதுதான், கேட்டு பழகிய உள்ளூர் தமிழ் வார்த்தைகள் என்றாலும், கடந்த நான்கு ஆண்டு கொரிய வாழ்கையில் சுத்தமாக அதை நான் மறந்து விட்டேன் என்று புரிந்தது.

கோழி சோறுடன் டைகர் பீர் (புலிப்பால்) கேட்க நினைத்து, ஆன்டி டைகர் பீர் கேன் (beer can) என்று சொல்ல, சற்றும் தன் புன்னகை மாறாமல் "கேன் கேன் லா" (can can la), "போத்தில் ஆர் டின்"(Bottle or Tin) என்று பதில் கேள்வி கேட்க, "பீர் டின்" என்று சொல்லவேண்டும் என்பதை நினைத்து இருவருமே சிரித்து விட்டோம்.

இனி தென்கொரியாவை போல என்னை சுற்றி இருக்கும் நகரத்தை பற்றி எழுதுவது என்பது சற்று சிரமம் என்பதை நான் நன்கு அறிவேன், காரணம் என்னை விட மூத்த பதிவர்கள் இங்கு அதிகம் மற்றும் அவர்கள் எழுதாத புதிய இடம் எதுவும் இங்கு என் கண்ணில் பட்டு விடப்போவதில்லை.

ஆகவே, வழக்கம் போல என்னை சுற்றி நடக்கும் விசையங்களை சார்ந்த நல்ல பதிவுகளுடன் உங்களை இனி அடிக்கடி இணையத்தில் சந்திக்க முயற்சிக்கிறேன்.

மொத்தத்தில் சிங்கையின் நாற்பத்தி ஆறாவது பிறந்தநாளை கொண்டாடும் சிங்கை மக்கள் மற்றும் தமிழ் பதிவர்களுடன் நானும் சேர்ந்து கொண்டேன்.

ஆம், வாழ்கை பயணத்தில் அடுத்தது என்ன என்று தெரியும்வரை...!

இனி நான் சிங்கைவாசி...! மறுபடியும் மறந்து விட்டேன் பாருங்கள், மன்னிக்கவும், இனி நான் சிங்கைவாசி "லா" :-).

நன்றி மீண்டும் சந்திப்போம்.

Sunday, July 3, 2011

தாஜ்மஹாலுக்கு பின்னால்...!

எல்லா மதங்களும் நல்ல மதங்களே, ஆனால் எல்லா மனிதர்களும் நல்ல மனிதர்கள் அல்ல, அதிலும் அவர்களுக்கு "மதம்" என்னும் "மதம்" பிடித்து போகும் போது அவர்கள் மனிதர்களாகவே இருப்பது இல்லை.

இதையே நபிகள் நாயகம் சொன்னார், நல்ல மனிதன் என்பவன் தன் மதத்தின் மீது பற்று கொண்டு இருக்க வேண்டும், ஆனால் தன் மதத்தில் அல்லது மதத்தின் பெயரில் ஒருவன் தவறு செய்யும் போது, அந்த தவறை கண்டிக்காமல் அவனுக்கு துணை போகிறவன் தீவிரவாதியாகிறான் என்று.

இதை ஏன் இங்கு குறிப்பிடுகிறேன் என்றால், இது இன மத ரீதியாகவோ அல்லது இந்தியாவின் அடையாள சின்னங்ககளில் ஒன்றின் பெருமையை குறைக்கவோ எழுதவில்லை.

நான் கடந்து வந்த பாதையில் பல இடங்களில் பல தரப்பட்ட மனிதர்களால் வாய்வழி சொல்லாக கேள்வி பட்ட தகவல்களை இங்கு தொகுப்பதே என் நோக்கமே தவிர, இதில் எது உண்மை, எது உண்மையல்ல என்று எனக்கும் தெரியாது.

ஆனால், என்னை விட இதை பற்றி அதிகம் தெரிந்தவர்கள், நான் அறிந்த தகவல்களை ஆதாரத்தோட உறுதி படுத்தவோ அல்லது தவறாக எதுவும் இருந்தால் அதை சரியாக மாற்றவோ உதவும் என்ற நோக்கில் இங்கு இதை பகிர்கிறேன்.



இன்று உலக அளவில் மிக பிரபலமாக இருக்கும் இந்திய உணவு "பிரியாணி" இதை கண்டு பிடித்தவர் தாஜ்மஹாலில் உறங்கும் மும்தாஜ்தான், அவர் கறி பிரட்டலில் பிரியாணி சமைக்கும் வாசம் அந்த பகுதியையே மயக்கி பசியை தூண்டுமாம்.

இங்கு ஒரு கிளை தகவல் வந்து சேர்க்கிறது.

இஸ்லாமியர்களில் ஒரு வழக்கம் இருக்கிறது, இளம் மனைவியை விதவையாக்கி விட்டு செல்லும் கணவனின் மூத்த அல்லது இளைய சகோதரர்களில் ஒருவர் அந்த இளம் விதவையின் வாழ்கை தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் அவரை திருமணம் செய்து கொள்ளவேண்டும்.

அப்படி திருமணம் செய்யும் போது அவருக்கு ஏற்கனவே திருமணமாகி இருந்தாலும், இன்னொரு மனைவியாக ஏற்றுக்கொள்வதில் தடையேதும் இல்லை.

இதை இங்கு சொல்ல காரணம், மும்தாஜ் திருமணமாகி இளம் வயதில் தன் கணவனை இழந்ததால் அவர் கணவரின் திருமணமான சகோதரர் மும்தாஜையும் தன் மனைவியாக்கிகொண்டார்.

இவ்வாறு ஒருநாள் தன் வீட்டில் மும்தாஜ் பிரியாணி சமைத்துக்கொண்டு இருக்க, வழக்கம் போல வாசனை அந்த பகுதியை தூக்கியது.

அப்போது அந்த பகுதியில் தன் சுற்றங்களுடன் வலம் வந்த "ஷாஜஹான்" இந்த வாசத்தில் மயங்கி தன் சேவகனை சென்று அது என்ன என்று பார்த்து வர அனுப்பினார்.

அரசாங்க சேவகன் மூலம் அரசர் தான் சமைக்கும் உணவின் வாசத்தில் மயங்கியதை கேட்டு மகிழ்ந்த மும்தாஜ் அவருக்கு ஒரு தட்டில் வைத்து கொடுத்து அனுப்பினார்.

அந்த புது உணவை சுவைத்து மகிழ்ந்த ஷாஜஹான், இத்தனை சுவையான உணவை சமைத்தவருக்கு நான் ஏதாவது பரிசு கொடுக்க வேண்டும் என்று சொல்லி அவரை அழைத்து வர சொன்னார்.

அரசன் முன் வந்து நின்ற மும்தாஜை பார்த்ததும், அவரின் அழகில் மயங்கி மும்தாஜை தன் காதல் மனைவியாக்கி கொள்ளவிரும்புவதாக சொல்லி (கணவரை மிரட்டி என்றும் கேட்டதுண்டு) அவரை தன்னோடு அழைத்து சென்று விட்டார்.

ஷாஜஹானுக்கும் ஏற்கனவே திருமணமாகி இருந்தாலும், அழகில் அதிக நாட்டம் கொண்ட ரசிகனாம் அவர்.



பின்னாளில் மும்தாஜ் மீது மிகுந்த காதல் கொண்டிருந்த ஷாஜஹான், 1631 ஆம் ஆண்டு புர்ஹாம்புரில் உள்ள புலாரா மஹாலில் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்துவிட்டு மும்தாஜ் மரணமடைந்துவிட, அவர் மீது கொண்ட காதலால் மும்தாஜுக்கு ஒரு நினைவு சின்னம் கட்டவேண்டும் என்று ஷாஜகான் விரும்பினார்.

அதன் விளைவாகவே ஆக்ராவில் யமுனையாற்றின் கரையில் தாஜ்மஹால் கட்டப்பட்டது.

தாஜ்மஹால் வேலைகள் முடிந்து மும்தாஜின் உடலை இங்கு அடக்கம் செய்யும் வரை மும்தாஜின் உடல் புர்ஹாம்புரில் உள்ள புலாரா மஹாலில்தான் வைக்கப்பட்டிருந்ததாம்.

முழுவதும் வெள்ளை சலவைகள் மூலம் தாஜ்மஹால் கட்டப்பட்டதால் நாட்டின் பொருளாதரமே பாதிக்கப்பட்டதாம், ஆனாலும் அதை பற்றி வருந்தாமல் யமுனையாற்றின் மறு கரையில் தாஜ்மஹால் போலவே கருப்பு சலவைகள் மூலம் தனக்கு ஒரு நினைவு சின்னம் எழுப்பி தான் இறப்புக்கு பிறகு தான் உடலை மும்தாஜின் சமாதியை பார்ப்பது போல அமைக்கும் வேலையில் இறங்கிவிட்டாராம்.




இதில் கோவம் கொண்ட அவர் பட்டத்து வாரிசான ஷாஜஹானின் மகன் ஓரங்கசிப் தந்தை என்றும் பாராமல் அவரை சிறையில் வைத்து தான் ஆட்சியை எடுத்து நடத்தினாராம்.

தன் கருப்பு தாஜ்மஹால் ஆசை நிறைவேறாமல் போனதால் சிறையில் இருந்த தன் கடைசி காலத்தில் ஷாஜஹான் தன்னையும் மும்தாஜின் சமாதிக்கு அருகில் அடக்கம் செய்யுமாறு கேட்டுகொண்டாராம்.

இது இப்படி போக, இன்னொரு பக்கம் அது தாஜ்மஹாலே அல்ல என்றும், அது ஷாஜஹானின் காலத்துக்கு முன்பே இருந்த ராஜபுத்திர கட்டிடகலை அமைப்பில் உருவாக்க பட்ட கோவில் என்றும் வெவ்வேறு ஆதாரம் மற்றும் புகை படங்களோடு பல கட்டுரைகள் வருகின்றன.

இவர்கள் சொல்வது, கரையான்கள் கட்டிய வீட்டை நல்ல பாம்பு தன் வீடாக்கி கொண்டதை போல, மொகலாய ஆட்சியில் இந்த கோவில் தாஜ்மஹாலாக மாற்ற பட்டு விட்டதாகவும், உலகில் எந்த இஸ்லாமிய கட்டிடகலை அமைப்பிலும் தாஜ்மஹால் போல இல்லை என்றும், மேலும் "மஹால்" என்று முடியும் எந்த கட்டிடமும் தாஜ்மஹாலுக்கு முன் கட்டும் வழக்கம் மொகலாய, இஸ்லாமிய கட்டிடகலையில் இல்லை என்றும் தங்கள் பக்க கருத்துக்களை முன் வைக்கிறார்கள்.

ஒரு கோடி ஆண்டுக்கு முன் விசையங்களை தோண்டி எடுக்கும் ஆய்வாளர்கள், வெறும் முந்நூறு வருடத்துக்கு முன்னய ஆதாரத்தை தோண்டி எடுப்பது என்ன பெரிய விசையமா என்றும் கேள்வி கேட்கிறார்கள்?

இதை பற்றி அதிகம் படிக்க, படங்களை பார்க்க இணைப்பை இங்கு கொடுத்துள்ளேன்.


தாஜ்மஹாலா கோவிலா?


தாஜ்மஹால் பற்றிய கேட்ட சில சுவாரசியமான தகவல்கள்

இருபது ஆண்டுகளாக கட்டி முடிக்க பட்ட தாஜ்மஹாலின் வடிவமைப்பாலரின் கை விரல்களை வெட்டி எடுத்து அவரை சிறையில் அடைத்து விட்டாராம் ஷாஜஹான்.

இனி வரும் நாட்களில் இதுபோல வேறு யாருக்கும் வடிவமைத்து கொடுக்ககூடாது என்பது ஷாஜஹானின் நோக்கம்.

மரண படுகையில் இருந்த அந்த வடிவமைப்பாளர், இது போல நடக்கும் என்று தெரிந்துதான், அந்த கட்டிடத்தில் ஒரு குறையை வைத்து உள்ளேன்.

அதாவது மழை வரும் போது ஒரு துளி நீர் மும்தாஜின் சமாதி வரை வடியும் என்றும், அதை தன்னை தவிர வேறு யாரும் இனி எந்த காலத்திலும் சரி செய்ய முடியாது என்பதுதான் அவர் சொன்ன தகவல்.

அதே போல அக்குறையை இன்றுவரை யாராலும் சரி செய்ய அல்ல எப்படி, எங்கே இருந்து நீர் உள்ளே வருகிறது! என்று கூட கண்டு பிடிக்கக்கூட முடியவில்லையாம்.

இதே போல மற்றொரு சுவையான தகவல்.

கடந்த நூற்றாண்டின் நடுவில் தாஜ்மஹாலில் பராமரிப்பு நடை பெற்ற போது, ஒரு இடத்தில ஓட்டை விழுவதை கண்டறிந்த ஆய்வாளர்கள் அதை எப்படி கட்டிடத்தின் மற்ற இடத்திற்கு பாதிப்பு வராமல் சரி செய்வது என்று குழம்பி விடை கண்டு பிடிக்க முடியாமல், தாஜ்மஹாலில் பராமரிப்பு புத்தகத்தை புரட்டினார்களாம்.

அதில் இரநூறு வருடங்களுக்கு முன் இதே போல ஒரு இடத்தில வந்த ஓட்டையை அடைக்க வெள்ளியை காய்ச்சி ஊற்றி அடைத்ததாய் படித்து வியந்து, அதே போல செய்து பிரச்சனையை தாஜ்மஹாலுக்கு வேறு பாதிப்பில்லாமல் சரி செய்தார்களாம்.

எது எப்படியோ, வரலாற்றில் எது உண்மையோ எனக்கு தெரியாது, ஆனால் இன மத காலத்தை கடந்து இந்தியாவின் ஒரு முக்கிய அடையாள சின்னமாக கம்பீரமாக நிற்கும் தாஜ்மஹாலை இன்று பார்த்தாலும் ஒரு நிமிடம் யாருக்கும் மூச்சு முட்டும் என்பது மறுக்க முடியாத உண்மை.

நன்றி மீண்டும் விரைவில் சந்திப்போம்.

Photobucket

Photobucket

Monday, May 9, 2011

"அட்சய திருதியை + புகைப்படம்"

அட்சயத் திருதியை இரண்டு நாட்களாக மாற்றிவிட்டதாக வந்த செய்தியை படித்து சிரித்தாலும், இது காலப்போக்கில் பல ஆயிரம் ஆண்டுகளாக கொண்டாடி வந்த "சித்திரை தமிழ் புத்தாண்டை" அரசியல் ஆதாயத்துக்காக "தை" முதல் நாள் மாற்றியது போல, வியாபார உள் நோக்கோடு நம் வியாபாரிகளாய் மாற்றிக்கொண்டது என்பதை வரும் தலைமுறைகள் மறந்து தங்கள் சேமிப்பை கரைக்க போகிறார்கள் என்ற வேதனையும் நெருடுகிறது.

யார் கொடுத்தார்கள் இவர்களுக்கு இந்த அதிகாரத்தை? என ஒரு சந்தேகமும் கூடவே வருகிறது?

"அட்சயத் திருதியை" என்று இந்துமதம் சொல்வது என்ன? என்பதை புரிந்து கொள்ள எடுத்த முயற்சியே இந்த பதிவு.

பூரியசஸ் மன்னரின் கதை சிறுவயது முதல் தமிழர் அனைவரும் அறிந்ததே, பூரியசஸ் மன்னருக்கு மகாவிஷ்ணு தரிசனம் கொடுத்த நாள்தான் திரிதியை.

அந்த நல்ல நாளில் செய்யும் தான தருமங்கள் "அட்சய பாத்திரம்" போல அளவற்ற பலனைக் கொடுக்கும் என்பதால் திரிதியை தினத்தை "அட்சய திரிதியை" என்று சொல்லும் வழக்கம் வந்தது.

இந்து மதத்தை பொறுத்தவரை "வளருதல் அல்லது என்றுமே குறையாதது" என்னும் பொருளே "அட்சயம்", பார்வதி தனது பிறந்த வீட்டுக்கு வந்ததும், பரசுராமர் அவதரித்ததும் அட்சய திருதியையன்றுதான்.

கிருதயுகத்தில் வறுமையில் வாடிய குசேலர் தனது பால்ய நண்பர் கிருஷ்ணரை சந்திக்க தனது கந்தலான மேலாடையில் ஒரு படி அவலை எடுத்துக்கொண்டு வந்தபோது, அந்த அவலை பாசத்துடன் உண்ட கிருஷ்ணர் ‘அட்சயம்’ என சொல்ல, குசேலரின் மண் குடிசை மாளிகையாகி குசேலர் வற்றாத பெரும் செல்வத்துக்கு அதிபதியானார், இவை நடந்ததும் அட்சயத் திருதியை அன்றுதான்.

ஆக, சித்திரை வளர்பிறையின் மூன்றாவது நாளான அட்சய திருதியையன்று செய்யும் எந்த ஒரு செயலும் விருத்தியாகும் என்றும், அதனால் அட்சயத் திருதியையன்று கடவுளுக்கு பூஜைகள் செய்து, தன்னால் ஆன தான தருமங்களை செய்து நல்ல முறைகள் வாழவே இந்து மதம் சொல்கிறது.

அட்சய திருதியைக்கு பொருட்கள் மட்டுமே வாங்க வேண்டும் என்பது தவறான நம்பிக்கை.

உண்மையில் அன்று சுமங்கலி பூஜைசெய்வது மற்றும் உணவு, ஆடை போன்ற நம்மால் முடிந்த வாழ்வின் அடிப்படை பொருட்களை தானம் கொடுப்பதுதான் மிக சிறந்த செயலாகும்.

அன்றைய தினம் தானம் கொடுபவர்களிடம் எப்போதும் குறையாத அட்சய பாத்திரம் இருப்பது போல பலன் கிடைக்கும் என்பது இந்துமத நம்பிக்கை.



அட்சய திருதியைக்கு செல்வம் (தங்கம்) வாங்க வேண்டும் என்று ஏன் வந்தது என்றால்? அத்தினத்தன்று லட்சுமி குடியிருக்கும் பொருட்களை வாங்கலாம் என்பதும் இந்துமத நம்பிக்கை.

இந்து பெண்கள் தாலி முதல் அனைத்து தங்க ஆபரங்களையும் செல்வத்துக்கு அதிபதியான லட்சுமியாக பார்ப்பதால் வந்த இடை சொருகல்தான் இந்த "தங்கம் வாங்க வேண்டும்" என்பது.

உண்மையில் லட்சுமி குடியிருக்கும் பொருட்கள் என்று பார்த்தால், நாம் வாங்க வேண்டிய பொருட்கள் மஞ்சள், கைக்குத்தலில் வந்த முனை முறியாத பச்சரிசி மற்றும் "கல்"உப்பு போன்றவைதான் (நன்றி தினமலர் ஆன்மீக வினா விடை).

நம் புது வீட்டின் கிரஹப் பிரவேசத்தில் முதன் முதலில் பசு நுழைய அத்துடன் "கல்"உப்பு மற்றும் அரிசியை முதலில் கொண்டு சென்று வைத்து, பின் கறந்த பசுவின்பாலை காய்ச்சுவது என்பது அந்தப் பொருட்களில் லட்சுமி குடியிருப்பதால் என்ற நம்பிக்கையில்தான் (இப்போது பக்கெட் பால்தான் எல்லாம் என்பது வேறு விசையம்).

இது போல அட்சயத் திருதியை தினத்தில் லட்சுமிகரமான எந்த ஒரு மங்களகரமான பொருட்களையும் வாங்குவதே அடிப்படை அட்சயத் திருதியையின் அர்த்தம்.

கற்காலத்தில் இடி, மின்னல், பாம்பு என்று தனக்கு தீங்கு அல்லது தன்னை விட சத்தி கொண்ட இயற்கை, வானம் பூமி என்று அனைத்தும் மனிதனுக்கு கடவுளாக தெரிந்தது.

அந்த வழி வந்த நமக்கு இன்னும் நம் அடிப்படை எண்ணம் மாறாமல் இப்போது தங்கம் அல்லது பணத்தில் அதிக மதிப்பு கொண்டவை மட்டும் லட்சுமியாக(கடவுளாக) தெரிகிறது.

அப்படி பார்த்தல் கூட சுக்கிரனை உரிய கிரகமாக கொண்ட லட்சுமிக்கு பொருத்தமாக அட்சயதிருதியை தினத்தில் வெள்ளி வாங்குவதுதான் குடும்ப நலனுக்கு பொருந்தும் என்பதுதான் சரியான கருத்து.

ஆக, அட்சயதிருதியை அன்று லட்சுமியை மட்டும் மனதில் கொண்டு தங்கம் மட்டுமே வாங்க வேண்டும் என்று நினைப்பது அறியாமை.

அட்சயதிருதியை அன்று லட்சுமி மட்டுமில்லாமல், சிவன் பார்வதி, நாராயணனனையும் மற்றும் நம் நலனுக்காக வாழ்ந்த முன்னோகளையும் நினைத்து பூஜை செய்தால், நம் பாவம் அனைத்தும் விலகி நல்ல வாழ்வை பெறலாம் என்பதை புரிந்து கொண்டு, நம் வாரிசுகளுக்கும் இந்த உண்மை கருத்தை சொல்லி அவர்களை சரியான பாதையில் கொண்டு செல்வது நம் கடமையாகும்.

வழக்கம் போல பொதுவாக தெரிந்த விசையத்தை பற்றி என் சொந்த கருத்தை பகிர்வதோடு முடிக்காமல், இன்று நான் "கிளிக்"யத்தில் பிடித்தவை சில உங்கள் பார்வைக்கு (Sony DSC-H50).

(புகைப்படத்தை சொடுக்கி பார்த்தல் இன்னும் அழகாக தெரியும்)













நன்றி.

என்றும் அன்புடன்,

Photobucket

Photobucket

Monday, April 25, 2011

சாய்பாபா...!

இது சாய்பாபா கடவுளா இல்லையா என்றோ!, அல்லது அவர் இயற்கை எய்தியதை கிண்டல் செய்யவோ!, அல்லது மதசார்பான ஆன்மீக பதிவோ அல்ல.

என் வாழ்கையில் சாய்பாபாவோடான அனுபவத்தையும் நான் புரிந்து கொண்டதையும் பகிர்ந்து கொள்வதே இங்கு என் நோக்கம்.

எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் பிறப்பின் அடிப்படையில் இந்து மத முறையில் கடவுள் நம்பிக்கை கொண்ட குடும்பமானாலும், உயிரோடு வாழும் எந்த மனிதரையும் கடவுள் என்று காலில் விழும் பழக்கம் இல்லாததுதான் எங்கள் குடும்பம்.

அதே போல நாங்கள் நம்பவில்லை என்பதால் மற்ற யாரையும் விமர்சனமும் செய்ததும் இல்லை.

இந்த நிலையில் எங்கள் பக்கத்துக்கு வீட்டில் குடிவந்தவர்களுடன் எங்களுக்கு மிக நெருங்கிய பழக்கம் வந்தது, அவர்களும் ஆண் பிள்ளை இல்லை என்பதால் என் மீது சொந்த மகன் போல அன்பு செலுத்தினர்.

"சாய்பாபா" என்ற வார்த்தையே முதன் முதலில் கேள்விபட்டது அவர்கள் மூலம்தான், அவர்கள் குடும்பம் அவர் மீது அதீத நம்பிக்கை கொண்டு அவரை கடவுளாக தொழுது வந்தனர்.

அப்போது எனக்கு ஒரு ஐந்து வயதிற்குள்தான் இருக்கும் என்று நினைக்கிறேன், ஒரு முறை வழக்கம் போல சாய்பாபாவின் அற்புதங்களை பற்றி பேசிக்கொண்டு இருந்த அந்த அம்மா, அவர் கொடைக்கானல் வருவதாகவும் அவரை நேரில் சந்திக்க எங்களையும் அழைத்து செல்வதாக சொல்ல...!

அவர்களுடன் இருந்த நட்பின் அடிப்படையில் என் தாயும் சம்மதிக்க, ஒரு விடுமுறை பயணம் போல அனைவரும் தயாரானோம்.



கொடைக்கானலில் அது ஒரு அழகான மற்றும் அமைதியான பங்களா, அதுதான் சாய் ஸ்ருதி ஆசிரமா என்று சரியாக எனக்கு நினைவில்லை.

நாங்கள் காத்திருக்க, சிறிது நேரத்தில் முழு காவி உடையுடன் சாய்பாபா நடந்து வந்தார், நடை பாதைக்கு இருபுறமும் மக்கள் அவரை கும்பிட, அவர்களுக்கு ஆசிர்வாதம் செய்தபடி எங்களை கடந்து போனார்.

சிறுவனாக அங்கு கொடுத்த சாய்பாபா படத்தை கையில் வைத்து விளையாடிக்கொண்டு இருந்த நான், என்ன நினைத்தேனோ, அவர் பின்னால் ஓடி, அவர் முன் சென்று பாதையில் நின்று அவரிடம் அந்த படத்தை நீட்டினேன்.

அவர் நடக்கும் பாதையில் யாருமே போகவில்லை என்றாலும் நான் மிக சிறுவன் என்பதால் என்னை யாரும் தடுக்க வில்லை என்றே நினைக்கிறேன்.

என்னை பார்த்து சிரித்த அவர் என் தலையில் தன் கையை வைத்து " பங்காரு...! பங்காரு...!" என்று சொன்னவர்  (தெலுங்கில் பங்காரு என்றால் தங்கம் என்று அர்த்தம்) நான் நீட்டிய படத்தை வாங்கி "With Love Baba" என்று கையப்பமிட்டு மீண்டும் என்னிடமே கொடுத்து விட்டு சென்றார்.

அதன் பின் அந்த படம் நீண்ட நாட்கள் எங்கள் வீட்டில் இருந்த நினைவு இருக்கிறது, ஆனால் இன்னும் இருக்கிறதா என்று தெரியவில்லை!. இதுதான் நான் அவரை சந்தித்த அனுபவம்.

அதன் பின் நாட்கள் நகர வளரும் பருவத்தில் விவேகானந்தர் சுபாஸ் முதல் கீதை, குரான் பழைய (புதிய) ஏற்பாடு முதல் ஓசோ வழியாக கண்ணதாசனின் "கம்ப ரசம்" வரை (இது தடை செய்த புத்தகம் என்று நினைக்கிறேன்) கையில் கிடைத்த புத்தகத்தை எல்லாம் படிக்கும் விடலை பருவத்தில் சாய்பாபா மீது எனக்கு பெரிய அபிப்பிராயம் எதுவும் கிடையாது.

காரணம் கையில் இருந்து விபூதி, மோதிரம், வாயில் இருந்து லிங்கம் எல்லாம் எடுத்துதான் ஒரு கடவுள் தன்னை கடவுள் என்று நிரூபிக்க வேண்டுமா? அல்லது ஒரு கடவுள் தன்னை தானே கடவுள் என்று சாதாரண மக்களிடம் உணர்த்த விரும்புவது ஏன்? என்று எனக்குள் பல கேள்விகளை கேட்டு கொள்வேன்.

இப்படியாக நான் என் பாதையில் போக மொத்தமாக சாய்பாபா என்ற வார்த்தையையே மறந்து போனேன், அவர் சார்ந்த செய்திகளை கூட படிப்பதில்லை, ஆனாலும் "திரு.அப்துல்கலாம்" போல அறிவியல் விஞ்ஞானிகள் கூட இவர்கள் காலில் விழுவதை பார்த்து குழம்பி இருக்கிறேன்.



இப்படி வருடங்கள் ஓட, மீண்டும் அவர் விசையத்தில் என் கவனம் போனது தெலுங்கு கங்கை கால்வாய் திட்டம் நடைமுறை படுத்தப்பட்டபோது, ஒரு நாட்டின் தேசிய அரசாங்க பணியில் ஒரு மத சாமியாரின் பங்கு என்னவாக இருக்க போகிறது, இவரை ஏன் முன்னிலை படுத்துகிறார்கள் என்று படிக்கும் போதுதான் புரிந்தது, சாய் சேவா என்று ஆங்காங்கே பஜனைகள் பாடிக்கொண்டு இருந்த ஒரு ஆன்மீக அமைப்பு "சாய் சேவா சமிதி" என்று நாட்டின் மிக பெரிய ஒரு சமூக சேவை அமைப்பாக வளர்ந்து இருப்பது.

இந்த சேவை நிறுவனம் ஆந்திரா-தமிழக அரசுகள் கொண்டு வந்த தெலுங்கு கங்கை திட்ட கால்வாய் அமைக்கும் பணிக்காக அதாவது சென்னை நகரின் குடிநீர் பிரச்சினையை போக்க ரூ.100 கோடி நிதியை அந்த நிறுவனத்தின் தலைவரான சாய்பாபா தனது டிரஸ்ட்டில் இருந்து வழங்கியுள்ளார் என்று தெரிந்த போது, வியப்பை விட அந்த நிறுவனத்தின் மீது ஒரு நல்ல மதிப்பு எனக்கு வந்தது.

எனக்கு தெரிந்து இந்திய வரலாற்றில் வேறு எந்த ஒரு ஆன்மீக மத சார்பான நிறுவனமும் இவ்வளவு பெரிய தொகையை நாட்டு மக்கள் நன்மைக்காக கொடுத்ததில்லை என்றுதான் நினைக்கிறேன்.

இப்படி தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் ஆந்திரா,மராட்டியம், ஒரிசா மாநிலங்களிலும் தனது டிரஸ்ட்டின் மூலம் நிதி கொடுத்து குடிநீர் திட்டங்களை செய்து கொடுத்துள்ளார்.

ஆந்திரமாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 750 கிராமங்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுத்து கிட்டத்தட்ட12 லட்சம் மக்களுக்கு மேல் பயன் அடைந்து வருகின்றனர்.

இது தவிர இந்த ஆசிரம நிறுவனத்தின் மூலம் பல்கலைக்கழம், மருத்துவ கல்லூரியும் நடத்தப்பட்டு வருகிறது இதன் மூலம் பொதுமக்களுக்கு இலவச கல்வி, மருத்துவ சிகிச்சை என பல மாநிலங்களில் பிரமாண்டமாக ஏழைகளுக்கு அனைத்தும் இலவச மாக இந்த நிறுவனம் கொடுகிறது என்று தெரிந்த போது...!

அவர் கடவுளோ இல்லையோ!, அது எனக்கு தெரியாது, தேவையும் இல்லை, ஆனால் இந்த நிறுவனத்தின் நல்ல செயல்கள் அனைத்தும் கடவுளின் செயலாகவே என் மனதில் பட்டது.

எத்தனயோ லட்சம் மக்கள் தனி ஒரு நிறுவனத்தால் அல்லது அந்த நிறுவன தலைவரால் பயன் பெறுகிறார்கள் என்றால், அது இருப்பவனிடம் கொள்ளை அடித்து இல்லாதவனுக்கு கொடுக்கும் ஒரு கொள்ளைகார நிறுவனமாக இருந்தால் கூட பாராட்டலாமே...!

அப்படி இருக்கும் போது, இது ஒரு சாதாரண ஆன்மீக அமைப்பு இதை பாராட்டுவதில் எனக்கு தவறாக எதுவுமே தோன்றவில்லை.

தாகத்தை தீர்க்கும் நதி நீருக்கு யாரும் நதிமூலம் பார்ப்பதில்லை, அது போல அது எப்படி வந்த பணமாயினும் எதற்கு பயன் படுகிறது என்ற அடிப்படையில் இங்கு நான் ரிஷிமூலம் பார்க்க விரும்பவில்லை.

ஒரு சில நூறுகளை கொடுத்து ஓட்டு வாங்கி கணக்கிடமுடியாத அளவு ஊழலை செய்யும் அரசியல் கட்சிகள் கூட மக்களுக்கு இப்படி எதுவும் செய்வதில்லையே?

அப்படி இருக்க ஒரு தனிமனிதர் தன் நிறுவனத்தின் மூலம் இதை அனைத்தையும் சாதித்து இருக்கும் போது அவர் அந்த நிறுவன தொண்டர்களுக்கு கடவுளாக தெரிவதில் எந்த தவறும் இல்லை என்றே நினைக்கிறேன்.

இவரால் மருத்துவ உதவி பெற்று உயிர் பிழைத்த அனைவருக்கும் இவர் வேறு எப்படி தோன்ற முடியும் நினைக்கிறீர்கள்?

சற்று சிந்தித்து பாருங்கள்...!, இன்றைய அரசியல் கொள்ளையர்களை விட "சாய்பாபா" ஒன்றும் அத்தனை மோசமாக என் கண்களுக்கு தெரியவில்லை.

எனவே, அவர் கடவுளா இல்லையா என்ற பைசாவுக்கு பெறாத விவாதங்களை ஒதுக்கிவிட்டு, பல நல்ல விசையங்களை செய்த ஒரு நல்ல  நிறுவனத்தின் தலைவர் என்ற முறையில், உடலை விட்டு பிரிந்த அந்த ஆத்மா அமைதியில் உறங்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

Friday, April 8, 2011

அன்னா ஹசாரேவை ஆதரிப்போம்.



இந்த பதிவை பொறுத்த வரை இந்த விளம்பரத்தில் வரும் சிறுவனின் நிலையில் நான் என்னால் முடிந்த ஆதரவை தருகிறேன்.





காரணம் இது வார்த்தை ஜாலம் காட்டி சிரிக்க வைத்து ஓட்டு வாங்க பதிந்த பதிவு அல்ல.

தமிழன் என்பதை தாண்டி இந்தியன் என்ற முறையில், என் நாட்டுக்காக களமிறங்கி இருக்கும் தியாகி "அன்னா ஹசாரேவுக்கு" என் ஆதரவை தெரிவிக்கும் பதிவு மட்டுமே.

அன்னா ஹசாரேவை பற்றியும் அவர் போராட்டம் பற்றியும் நான் புதிதாக உங்களுக்கு சொல்ல வேண்டியது இல்லை என்று நினைக்கிறேன்.

அப்படியும் தெரியாத யாராவது இருந்தால், அவர்களுக்காக நண்பர் கிரி மற்றும் ராமலக்ஷ்மி எழுதிய இணைப்புகளை கீழே கொடுக்கிறேன், படித்து அனைவரும் உங்களால் முடிந்த ஆதரவை உங்கள் தளத்தில் தெரிவிக்க வேண்டுகிறேன்.

கிரியின்

ஊழலுக்கு எதிரான ஒரு போராட்டம்!

அரசியல்வாதிகளுக்குத் தடை – அன்னா ஹசாரே அதிரடி!

அன்னா ஹசாரேவை புறக்கணிக்கும் தமிழகம்

ராமலக்ஷ்மியின்

விதை விருட்சமாகும்,அன்னா ஹசாரேக்கு ஆதரவைத் தருவோம்.

இந்த இணையதளத்தில் உங்கள் ஆதரவை கையெழுத்து மூலம் கொடுக்க முடியும்!

தாய் நாட்டையும் நாட்டுக்காக உண்மையாக பாடுபடும் தலைவர்களையும் நம் இரு கண்களை போல, நம் தாயை போல மதிப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்.

இனம், ஜாதி, மதம், மொழி மறந்து இந்தியனாய் இதில் ஒன்றுபடுவோம் வாருங்கள்...!





வந்தே மாதரம்...!

Wednesday, April 6, 2011

தேர்தல் கனவு...!

வணக்கம் நண்பர்களே,

உலக கோப்பையை வென்ற இந்திய வீரர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களுடன் இந்த பதிவை துவங்குவோம்.

இந்த வெற்றி விழா கொண்டாட்டத்தில் சச்சினுக்கு இரண்டு புறமும் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் முதல் உலக கோப்பை நாயகன் கபில்தேவ் இருவரையும் அமர்த்தி பெருமை படுத்தினால் இன்னும் அமர்களமாக இருக்கும் என்பது என் விருப்பம்.


தேர்தல் விதிமுறைகள்...!

கட்சி விதிகள்

எந்த ஒரு தனிப்பட்ட கட்சியும் மூன்று தேர்தல்களுக்குள் குறிப்பிட்ட அளவு தொகுதியில், அதாவது அந்த கட்சியை சேர்ந்த மொத்த வேட்பாளர்களில் இருபத்தைந்து சதவீதம் வெற்றி பெறாவிட்டால், அந்த கட்சியின் உரிமை ரத்தாகி, அந்த கட்சியை கலைத்து விடவேண்டும்.

அப்படி ரத்தாகும் கட்சியின் தேர்தல் சின்னம் என்பது இனி யாருமே பயன்படுத்த முடியாமல் தடையாகி விடும்.



நாட்டில் ஒரு தனி கட்சி என்பதே தனி கொள்கையின் அடிப்படையில் இருப்பதால், எந்த ஒரு கட்சியும் தேர்தலில் தனித்து மட்டுமே போட்டியிட முடியும்.

அப்படி இன்னொரு கட்சியுடன் கூட்டணியாக இணைய விரும்பும் பட்சத்தில், இரண்டில் ஏதாவது ஒரு கட்சியை கலைத்து அதன் உரிமையை ரத்து செய்து, ஒரே கட்சியாக மட்டுமே செயல்பட, போட்டியிட முடியும்.

ஒரு முறை இணைந்த பின் மீண்டும் பிரிந்தால், அதே கட்சியை துவங்க முடியாது, வேறு கட்சியை துவங்கினாலும், புதிய சின்னம் மட்டுமே கொடுக்க படும்.

மேலும் ஒரு முறை சேர்ந்து பின் பிரிந்து மீண்டும் ஒரே ஒரு முறை மட்டுமே கட்சி துவங்க உரிமை கேட்க முடியும்.

கட்சியின் பொது குழு தலைவர் மற்றும் இதர பொறுப்புகளில் ஒருவர் அறுபத்தைந்து வயது வரை மட்டுமே பதவி வகிக்க முடியும். அதன் பின் அவர் அனுபவத்தின் அடிப்படையில் அக்கட்சியின் வழிகாட்டியாக ஒரு மதியுரை அமைச்சர் பதவிக்கு மட்டுமே தகுதி பெறமுடியும்.

யார் ஆட்சியாயினும் குடும்பத்தின் மொத்த வருமானத்தை, சொத்துக்களை கணக்கில் கொண்டு வறுமை கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு அரசு சலுகைகள் மட்டுமே தர முடியுமே தவிர, இலவசம் என்று எதுவும் கொடுக்க முடியாது.



இலவசமாக கொடுக்கும் அனைத்தும் லஞ்ச ஒழிப்பு விதிமுறைகளுக்கு கீழே கொண்டுவரப்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

ஜாதி, மொழி சார்ந்த கட்சிகள் துவங்க முடியாது, எல்லா அரசு ஆவணங்களில் இருந்தும் ஜாதி பற்றிய விபரங்கள் உடனடியாக நீக்கி விடப்படும்.

எந்த கட்சியும் அந்த கட்சி சார்பான தனிப்பட்ட தகவல் தொடர்பு தொலைக்காட்சி, பத்திரிக்கை, வானொலி நடத்த முடியாது, அப்படி வேறு தொடர்புகளில் நடத்தும் தகவல் தொடர்பு எதிலும் கட்சி சார்பான சின்னம், முத்திரை எதையும் பயன்படுத்த கூடாது.

மேலும் அந்த தகவல் தொடர்பு மூலம் வரும் செய்திகள் உண்மையல்ல என்று எந்த ஒரு நிறுவனமும், குடிமகனும் நிரூபிக்கும் பட்சத்தில், அந்த தகவல் தொடர்பு நிறுவன உரிமை உடனடியாக ரத்து செய்வதோடு, அத்துறை சார்ந்த அத்தனை அசையும், அசையாத சொத்துக்களும் அரசாங்க சொத்தாகிவிடும்.

அரசியல் பதவி விதிமுறைகள்

ஜனநாயக நாட்டில் அரசியல் பதவிக்கு போட்டியிட கிரிமினல் வழக்கு இல்லாத மற்றும் வங்கி கடன் மஞ்சள் நோட்டீஸ் கொடுக்காத குடிமகன் யாருக்கும் உரிமை உண்டு என்றாலும், அப்பதவியின் நிலையை கருத்தில் கொண்டு போட்டியிட தகுதியான குடிமகனை சில கட்டுப்பாடுகளுக்குள் உட்பட்டு மட்டுமே தேர்வு செய்யப்பட வேண்டும்.



நாட்டின் குடிமகனாக நாள் முதல் இருப்பது வருடங்கள் உள்நாட்டில் வசித்திருக்க வேண்டும் (உயர் கல்விக்காக மட்டும் வெளிநாடு சென்றிருக்கலாம்).

கண்டிப்பாக முதுகலை பட்டம், அதுவும் ஆரம்ப பள்ளி முதல் அனைத்தும் முழுநேர படிப்பின் மூலம் (மாலை, தொலைதூர மற்றும் திறந்தவெளி எல்லாம் செல்லாது) நாட்டின் அல்லது உலக முன்னணி பல்கலைகழகம் மூலம் பெற்றிருக்க வேண்டும்.

குறைந்தது தாய் மொழி அல்லது போட்டியிடும் மாநில மொழி, இந்தியாவில் அதிகம் பேசும் மொழி ஹிந்தி, உலகில் அதிகம் பேசும் மொழி ஆங்கிலம் என்று மும்மொழிகளில் (செம்மொழி கதை எதுவும் விடாமல்) முறையாக பேச, படிக்க மற்றும் எழுத தகுதி, தகுந்த சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

குறைந்தது பத்து வருடங்கள் அவர் படிப்பு சார்ந்த துறையில் வேலை செய்த அனுபவமும் அதில் "பொதுமக்களிடம்" நல்ல பெயரும் பெற்று இருக்க வேண்டும்.

அப்படி இருந்து ஒருவர் வெற்றி பெரும் வகையில், அவருக்கு அதே துறையை ஒதுக்க வேண்டும். உதாரணமாக ஒரு காவல் அல்லது போக்குவரத்து மந்திரி என்பவர் மற்ற விதிகளுக்கு உட்பட்டு இருந்தாலும், அதே துறையில் குறைந்தது பத்து ஆண்டுகள் நாட்டுக்காக பணி செய்து இருக்க வேண்டும்.

மூன்று முறைக்கு மேல் ஒருவர் பொது தேர்தலில் போட்டியிட முடியாது, அவர் சார்ந்த கட்சியின் மதியுரை பதவிகளில் அவர் இருப்பதில் எந்த தடையும் கிடையாது.



ஒரு கட்சியின் சார்பில் பொது தேர்தலில் நின்று வெற்றி பெற்ற பின், அந்த வெற்றி வேட்பாளர் கட்சி மாறினால், கட்சியை விட்டு விலகும் போதே அவர் பதவியும் அவரை விட்டு விலகும். மேலும் அவர் அடுத்த பத்து தேர்தலில் எந்த ஒரு கட்சி சார்பாகவும் போட்டியிட முடியாது.

அது மட்டும் இல்லாமல், அவர் பதவி விலகிய தொகுதியின் இடை தேர்தல் செலவு முழுவதும் அவரோ அல்லது அவர் போகும் புதிய கட்சியோ ஏற்று கொள்ள வேண்டும்.

நாட்டின் அரசியல் தலைமை பொறுப்பில் இருக்கும் எந்த ஒரு அரசியல் தலைவரும் செய்த தவறு, ஊழல் நிரூபிக்கப்பட்டால், அதே தவறை செய்த குடிமகனுக்கு சட்டப்படி கிடைக்கும் தண்டனையை போல மூன்று மடங்கு அதிகமாக கிடைக்கும்.

எந்த ஒரு நேர்மையான அல்லது எப்படி பட்ட அரசியல் தலைவராக இருப்பினும், அதை மட்டுமே தகுதியாக கொண்டு அவரின் வாரீசு அல்லது ரத்த உறவுகள் யாரும் மேலே உள்ள மற்ற அரசியல் தலைமை விதிகள் பொருந்தாத பட்சத்தில், அவர்கள் எந்த ஒரு அரசியல் பதவிகளுக்கும் போட்டியிட முடியாது.

காவல் மற்றும் நீதித்துறை இரண்டும், ஜனாதிபதி மற்றும் மாநில கவர்னர் நேரடி கட்டுபாட்டில் இருக்கவேண்டும், இவர்கள் இருவரையும் நேரடியாக மக்கள் பொது தேர்தலில் மட்டுமே தேர்ந்து எடுக்க முடியும்.



மேலும் "ஜனாதிபதி மற்றும் மாநில கவர்னர்" இருவரும் எந்த கட்சியை சார்ந்தும் இருக்க முடியாது, இவர்கள் "தவறுகளை" முப்படை தளபதிகள், சுபிரீம் கோர்ட் நீதிபதிகள் குழு மற்றும் பிரதமர் ஆகியோர் இணைந்த குழு மட்டுமே கட்டுபடுத்த முடியும்.

நாட்டின் எந்த ஒரு அரசியல் தலைவரையும் தகுந்த முறை மற்றும் காரணத்தோடும் எந்த ஒரு குடிமகனும் சந்திக்க முடியவில்லை என்றால், காவல் மற்றும் நீதித்துறையை நாட அவர்களுக்கு முழு உரிமை உண்டு.

அட போதுங்க, அதான் கனவுன்னு சொல்லியாச்சுல்ல, இத்தோட இப்போதைக்கு முடிச்சுக்குவோம்...!

போங்கப்பா, போய் புள்ள குட்டிகள படிக்க வைங்க, இன்னுமா இந்த உலகம் இதை நம்பிகிட்டு இருக்கு?.


நன்றி, மீண்டும் சந்திப்போம்.

Saturday, March 26, 2011

இதுவா என் (தாய்) தமிழ்நாடு...!

வணக்கம் நண்பர்களே,

என்னடா இது...! காணாமல் போனவன் திடீர் என்று வருகிறானே என்று நினைக்க வேண்டாம், அது ஒரு பெரிய கதை அதை தனியாக இன்னொரு சமயம் பார்ப்போம்.

சொர்க்கமே என்றாலும் அது நம்மூரை போல வருமா என்ற மகிழ்ச்சி சற்றும் குறையாமல் ஒரு அருமையான இந்திய பயணத்தை முடித்து கடந்த மாதம் திரும்பி வந்தாலும், சில பல காரணக்களால் பதிவுகள் பக்கம் வர முடியவில்லை.

எப்போதும் போல இல்லாமல் இது ஒரு நீண்ட விடுமுறையாக இருந்த காரணம் நான் இந்த முறை சென்றது தனிப்பட்ட வேறு சில வேலைகளாக என்பதால்தான்.

ஒவ்வொரு முறையும் நம் மண்ணின் வளர்ச்சியை, மாற்றத்தை பார்த்து பெருமை பொங்க திரும்ப வரும் நான், இந்த முறை சற்று மனம் தளர்ந்து வந்ததுதான் உண்மை.

இந்த முறை நான் சென்ற வேலைகளுக்காக, மதுரை, பழனி, திருச்சி, திண்டுக்கல், நத்தம் என்று தென் தமிழ் நாட்டில் என் விடுமுறையை பயன் படுத்தினேன்.

நான் கல்லூரியில் படித்த காலத்தில் இந்த பகுதிகளில் பஸ் பயணம் என்பது எங்கள் நண்பர்கள் அனைவருக்கும் மிக பிடித்த ஒரு விசையமாகும்.

அதற்கு இரண்டு காரணங்கள், ஒன்று நடுவில் வரும் நெடுஞ்சாலை தவிர இரண்டு பக்கமும் பச்சை பாய் விரித்தது போல செழிப்போடு காட்சி அளிக்கும் வயல்வெளிகள், தூரத்தில் தெரியும் தென்னை மரங்கள் என்று மனதை மயக்கும் ஒரு அழகான தமிழ் தாய் நாட்டின் விவசாய அடையாளம்.




மற்றொன்று இந்த சூழ்நிலைக்கு தகுந்து அந்த தனியார் பேருந்துகள் இசைக்கும் தமிழ் பாடல்கள்.

குறிப்பாக மதுரை, பழனி, திண்டுக்கல், திருச்சி, மதுரை ரோட்டில் மதியம் மூன்று மணியளவில் அவர்கள் இசைக்கும் "ஒருநாளும் உனை மறவாத, முத்துமணி மாலை" போன்ற பாடல்களை விரும்பாத யாருமே இருக்க முடியாது.

பல வருடம் கடந்து அதே பழைய நினைவுகளை சுமந்து கொண்டு போன எனக்கு இந்த முறை மிக பெரிய ஏமாற்றம் தான் மிச்சம்...!

நான் பார்த்த வயல்வெளிகள் அனைத்தும் கூந்தலை இழந்த பெண்போல மொட்டையாக இருப்பதை பார்த்ததும், ஏனோ அது என் சொந்த பெண் போல மனம் லேசாக இல்லை, இல்லை கொஞ்சம் அதிகமாகவே வலித்தது.

அதை விட கொடுமை, அது அனைத்தும் வீடு கட்டும் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய பட்டிருப்பதை பார்க்க பார்க்க மன கொதிப்பு மட்டும் ஏனோ அடங்கவே இல்லை.

என்னடா இது நம் மக்களா இப்படி மாறி விட்டார்கள் என்று விசாரித்தால், இந்த முறை நான் பார்த்த அனைவருமே சொன்னது ஒன்றே ஒன்றுதான்.

அட உனக்கு என்னப்பா, கடல்தாண்டி சீமைல இருக்க, இங்க நாய் பேய் கூட சொந்த வீடு வாங்கிருச்சு, நம்ம மட்டும் என்ன குறைச்சலா?

அதான் நம்ம நிலத்தை பிளாட் போட்டு கொடுத்தா சொந்த வீடும் கொடுத்து கையில் பணமும் தருவதாய் ரியல் எஸ்டேட் ஏஜென்ட் சொன்னார்.



சரி, நாமும் எவ்வளவு நாளுக்குதான் இப்படி சேற்றிலும் குடிசையிலும் கிடப்பது, நமமெக்கென்று ஒரு சொந்த வீடு வேண்டாமா என்று நிலத்தை கொடுத்து விட்டேன் என்பதுதான் அது!.

இப்படி ஒன்றல்ல இரண்டல்ல வரிசையாக எல்லா நிலத்திலும் அந்த நகர், இந்த நகர் என்ற பெயர் பலகையை பார்க்கும் போது வெறுப்பு மட்டுமே மிஞ்சியது.

நான் பார்த்த வரை நம் மக்களிடம் சொந்த வீடு வாங்குவது என்பது இப்போது ஒரு வாழ்க்கை லட்சியத்தில் முக்கிய ஒன்றாக மாறிவிட்டது.

என்ன கொடுமை இது?

நண்பர்களே, வீடு என்பது இயற்கை சீதோசன நிலைகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள மனிதன் கண்டுபிடித்த நாகரீக வளர்ச்சியின் ஒரு பகுதிதானே தவிர, அது சமுதாயத்தில் நம்மை அடையாள படுத்துவது அல்ல அப்படி நாம் மாற்றினால் அது நம் வீழ்ச்சியின் ஆரப்பமே.

மேலும் ஒரு வீட்டின் விலை என்பது, அது கட்ட பட்டிருக்கும் நிலத்தின் அரசால் மதிப்பிட பட்ட விலை, அதின் பயன் படுத்த பட்டிருக்கும் கல் மற்றும் மரத்தின் விலை, அதோடு அதை கட்ட வேலை செய்தவர்களின் கூலி என்பதே ஆகும்.

ஆனால், இன்று அந்த கல்லையும் மணலையும் சேர்த்த கட்டிடத்தின் விலையை கண்மண் தெரியாமல் உயர்த்திக்கொண்டு போவது என்பது கொடுமை, அதை விட கொடுமை அதையும் நம் மக்கள் வங்கியில் கடன் வாங்கி வாங்குவது என்பது மிக மிக கொடுமை.

எந்த ஒரு வங்கியிலும் வீட்டு கடன் வாங்கி இருக்கும் ஒருவர், தன் மாத தவணை மற்றும் தன் மொத்த தவணையின் கூட்டு தொகை என்ன என்பதை ஒரு பத்து நிமிடம் ஒதுக்கி கணக்கிட்டு பாருங்கள், உங்கள் வாழ்நாள் உழைப்பு இப்படியா வீண் போக வேண்டும் என்று தோன்றும்?

இது ஒரு பக்கம் இருக்க, நம் சொந்த தொழிலான விவசாயத்தை அழித்து, அந்த நிலத்தில் கட்டிடம் கட்டுவது என்பது, சொந்த செலவில் சூன்யம் வைத்து நம்மை நாமே அழிப்பதற்கு சமம்.

இப்படி விவசாயம் அழிந்து போவதால் இன்று காய்கறிகளின் விலை வாசி நினைத்து பார்க்க முடியாத அளவு உயர்ந்து இருப்பதோடு நம் தேவைக்கு பக்கத்து மாநிலங்களை நம்பி இருக்க வேண்டி இருக்கிறது.

தற்போது அரசாங்கம் விளைநிலத்தை கட்டிடம் கட்ட விற்பனை செய்ய கூடாது என்று சட்டம் கொண்டு வருவதாக கேள்வி, ஆனாலும் விளைநிலங்களை அழிப்பது குறைந்த மாதிரி தெரியவில்லை.

இப்படி விளை நிலத்தின் விலையை ரியல் எஸ்டேட் ஏற்றி விட்டுக்கொண்டிருக்கும் பண போதையில் நம் மக்கள் விளைநிலங்களை கண் மண் தெரியாமல் விற்பனை சந்தைக்கு கொண்டுவர, இடையில் புகுந்து கேரளா மக்கள் மொத்தமாக இந்த நிலங்களை வாங்கி போட்டு இருக்கிறார்கள்.

இது இப்படியே தொடர்ந்தால் பிற்காலத்தில் நம் சொந்த மண்ணின் விலையை அவர்கள் நிர்ணயிக்ககூடும் அல்லது அவர்கள் விவசாயம் செய்து அதை நமக்கே விற்கக்கூடும், இந்தியன் என்ற தாய் பிள்ளையானாலும் வாயும் வயிறும் வேறுதானே?

இப்படியே போனால், வடிவேல் (அவருக்கும் இப்போது நேரம் சரியில்லை என்று நினைக்கிறேன், இதை பற்றி வேறு பதிவில் பார்ப்போம்) காமிடியில் வருவது போல தமிழ் நாட்டில் விவசாயம் செய்ய தமிழனுக்கு எந்த இடமும் இல்லாமல் போய், ஒரு கேரட் இரநூறு ரூபாய் என்னும் நிலை வந்தாலும் ஆச்சரிய படுவதற்கில்லை.



ஒன்று மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் நண்பர்களே, இப்போதும் நமக்கு சிந்தித்து செயல்பட நேரம் இருக்கிறது. நாம் சேற்றில் "கால்" வைப்பதால் நம் மக்கள் சோற்றில் "கை" வைக்க முடிகிறது என்ற பெருமையோடு நம் பாரம்பரிய விவசாயத்தை அழிந்து விடாமல் காப்பது நம் தாய்மண்ணுக்கு செய்யும் கடமையாகும்.

அப்படி நாம் உணரவில்லை என்றால் அது பணத்துக்காக தாயை விற்பதற்கு சமம் என்று காலம் ஒருநாள் கண்டிப்பாய் உணர்த்தும்.

இயற்கை எவ்வளவு முடியுமோ அவ்வளவு சோதித்தாலும், சற்றும் மனம் தளராமல் ஜப்பானில் விவசாயம் செய்ய இடமில்லாமல் கிடைக்கும் இடத்தை (மலைகளை கூட வெட்டி) விளை நிலமாக்கி பட்ட படிப்பை முடித்த இளைய தலைமுறைகள் கூட விவசாயத்தில் ஆர்வம் காட்டுகிறார்கள்.

ஆனால், நாம் இருக்கும் விளை நிலத்தை மலடாக்கி கட்டிடம் கட்டுகிறோம்?.

நாகரீகத்தில் முன்னேறுகிறோம் என்று நினைத்து, நம் சொந்த அடையாளத்தை தொலைத்துக்கொண்டு இருக்கிறோம் என்று சொன்னால் அது இங்கு தவறாகாது என்று நினைக்கிறேன்.

நான் இந்த முறை சென்ற வேலை என் வாழ்நாள் கனவின் முக்கிய ஒன்றாகும், சில ஏக்கர் நிலத்தை வாங்கி அதில் தென்னை மரங்களை வைத்து நடுவில் ஒரு வீட்டை கட்டி, அந்த வீட்டின் பின்புறம் எனக்கு தேவையான காய்கறிகளை நானே பயிர் செய்து என் முதுமை காலத்தில் வாழவேண்டும் என்பது என் கனவு.

அதற்கான முதல் வேலையாக அமைதியான இடத்தில உள்ள விளை நிலங்களை தேடி சென்றபோது தான் மேல் சொன்ன அனைத்தும் என் கண்ணில் பட்டது.

இந்த பரபரப்பான வாழ்க்கை சூழலில் அனைவரும் சொந்த நிலத்தில் விவசாயம் செய்வது என்பது சாத்தியமாகாது என்பது உண்மை.

ஆனால், விவசாயத்தில் இருப்பவர்கள் அதை தொலைத்து விடாமல் பாதுகாக்கலாமே?

மேலும், விவசாய இடமில்லாமல் நகரத்தில் இருப்பவர்கள் கூட, வீட்டில் ரோஜா தொட்டி வைப்பதை போல நமக்கு தேவையான மிளகாய், தக்காளி, கீரை போன்றவற்றை சொந்தமாக வளர்த்து பயன் படுத்தலாமே?.

நம் குழந்தைகளும் இந்த வீட்டு விவசாய முறை மூலம் நம் பாரம்பரிய விவசாய தொழிலை மறக்காமல் இருக்க இது உதவும் என்பது என் நம்பிக்கை.

நீங்கள் எவ்வளவு படித்து எந்த நாட்டிலும் எந்த நிலையில் இருந்தாலும் சரி, உங்கள் தாய்க்கு செய்யும் பிறவி கடமையை போல, உங்கள் தாய் நாட்டுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தால், அது எந்த ஒரு சூழ்நிலையிலும், விவசாய நிலையத்தை விவசாயத்தை தவிர மற்ற எந்த ஒரு பயன் பாட்டுக்கும் விற்காமல் இருப்பதே ஆகும்.

நன்றி, மீண்டும் விரைவில் சந்திப்போம்.
 

Blogger Widgets