Wednesday, October 13, 2010

"பதிவு" எனப்படுவது யாதெனில்...!

தமிழ் வானொலி கலந்துரையாடல் ஒன்றில் சமீபத்தில் கேட்ட " தமிழ் மொழிபெயர்ப்பு சொல்லும், உருவாக்க பட்ட சொல்லும்" எனும் செய்தியில் "வலைப்பூ" என்று மொழிபெயர்க்க பட்ட தமிழ் சொல்லைவிட, "பதிவு" என்று உருவாக்க பட்ட சொல்லே "ப்ளாக்" என்பதை குறிக்கும் சரியான சொல்லாகும், காரணம் நம் எண்ணங்களை, நடவடிக்கைகளை நம் சொந்த கருத்துக்கள் கொண்டு இணையத்தில் பதிவதே "ப்ளாக்" என்று எடுத்து சொன்னார்கள்.

ஆரம்பத்தில் "கம்ப்யூட்டர்" என்பதை கூட "கணிப்பொறி" என்று மொழிபெயர்க்க பட்டு பின் "கணினி" என்று ஒரு சொல் உருவாக்க படும் போது "கணினி" என்று சொல்லுக்கு எதிர்ப்பு வந்தாலும், பின் அதுவே சரியான வார்த்தையாக ஏற்றுக்கொள்ள பட்டது, அதே போல் "வலைப்பூ" என்பதைவிட "பதிவு" என்ற சொல் விரைவில் ஏற்றுக்கொள்ளபட்டு அதிகம் பயன்படுத்த படும் என்று முடிந்தது அந்த நிகழ்ச்சி.

எனக்கும் இது சரி என்று பட, இனி "பதிவு" என்ற சொல்லை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று நினைத்துக்கொண்டு இருக்கும் போது, என் மனதில் வேறு சில எண்ணங்கள் தோன்ற!, அந்த எண்ணங்களை இங்கு பதிவதே என் நோக்கம்.பொதுவாகவே பதிவு எழுதும் விசையத்தில் நான் அவ்வளவாக அதிக நேரம் செலுத்துவதில்லை, காரணம் இது என் தொழிலோ, குடும்பமோ அல்ல. பதிவு எழுதுவது என்பது என் தனிப்பட்ட பொழுதுபோக்கு மட்டுமே.

ஆகவே வேறு எந்த வேலைகளும் பாதிக்காத என் ஓய்வு நேரத்தில் கொஞ்சத்தை பதிவுக்காக ஒதுக்குவது என் வழக்கம்.

அதனால்தான் தொடர்ந்து என் பதிவுகளை படித்து மறக்காமல் தங்கள் கருத்துக்களை சொல்லும் நண்பர்கள் பதிவுகளை கூட என்னால் தொடர்ந்து படித்து கருத்து சொல்ல முடிவதில்லை, ஒட்டு போடுவது மிக எளிது, ஆனால் பதிவை முழுவதும் படிக்காமல் கருத்து சொல்ல நான் நினைப்பதில்லை.

சுருக்கமாக முன்பு ஒரு பதிவில் "கிரி" சொன்னது போல, பதிவை படிக்காமல் கும்மி பின்னூட்டம் போடுவதைவிட, பின்னூட்டமே கொடுக்காமல் இருப்பது மேல் என்று நினைப்பவன் நான்.

பொதுவாக நான் யாருடைய பெயரையும் என் பதிவுகளில் அவர்கள் அனுமதி இல்லாமல் பயன் படுத்துவது கிடையாது, அதனால் என் பதிவுகளை தொடந்து படித்து என்னுடன் நட்புடன் இருக்கும் நண்பர்களுக்கும், தங்கமணியுடன் நட்புடன் இருக்கும் தோழிகளுக்கும் என் நன்றியை இங்கு தனியாக தெரிவித்து கொள்கிறேன்.

எனக்கு கிடைக்கும் நேரத்தில் எல்லா பதிவுகளையும் படிக்க ஆசை பட்டாலும், இப்போதெல்லாம் எல்லா பதிவுகளையும் படிக்க உண்மையில் எனக்கு நேரம் சாத்திய படவில்லை, மேலும் இன்னொரு விசையம் எனக்கு பெரிய சவாலாக இருக்கிறது.

நான் இணையத்தில் பொழுதுபோக்க வரும் போது, நான் பின்தொடரும் நண்பர்கள் பதிவை என்னால் என் பதிவு பக்கத்தில் "டாஷ்போர்ட்" பகுதியில் சென்று அவர்கள் புதிதாக எழுதியுள்ள பதிவை படிக்க முடியும், முடிந்த வரை கருத்து சொல்ல முடியும்.

ஆனால், தினம் வருவது எனக்கு சற்று சிரமம் என்பதால், வரும்போது எல்லாம் கண்ணில் படும் பதிவுகளை படித்து விடுவேன், மற்ற எந்த பதிவையும் படிக்க எனக்கு திரட்டிகளின் உதவி அவசியமாகிறது, இங்குதான் எனக்கு கொஞ்சம் சிக்கல்.

மேலே சொன்னது போல, பதிவு என்பது ஒரு தனிமனிதன் தன் சொந்த கருத்துக்களை, நடவடிக்கைகளை, எண்ணங்களை மற்றும் சமையல், கலை போன்ற தங்கள் தனி திறமைகளை இணையத்தில் மற்றவர்களுடன் பதிவதே ஆகும்.

இதனால் பலருடைய திறமைகளை, எண்ணங்களை, கருத்துக்களை மற்றும் நடவடிக்கைகளை நாம் படிக்க முடிகிறது, சுருக்கமாக மனிதர்களை மற்றும் மனிதர் மனதை படிக்க பதிவுகள் பெரிதும் உதவுகின்றன.இதில் என்னால் எல்லா பதிவுகளையும் படிக்கமுடியாமல் போக என் சிக்கல் என்னவென்றால், இப்போதெல்லாம் திரட்டிகளில் காணும் அனேக பதிவுகள் மேலே குறிப்பிட்ட உண்மையான பதிவு நோக்கத்தை விட்டு விலகி, "தின-செய்திதாள்" வேலையை செய்யும் போதுதான்.

எனக்கு இணையத்தில் உலாவ கிடைக்கும் நேரத்தில் இத்தகைய செய்தி பதிவுகள் ஆனது மற்ற நல்ல பதிவுகளை தேடி கண்டு பிடிக்க முடியாமல் ஒளித்து வைத்து கொள்கிறது (பதிவின் தலைப்பை பொருத்து உள்ளே சென்றவுடன்தான் புரிகிறது).

மற்றொரு காரணம் வீட்டை தவிர மற்ற இடங்களில் இருந்து பொது கணினியில் பதிவுகளை படித்து பின்னூட்டம் எழுத நினைத்தால், பெரும்பாலான இடத்தில பின்னூட்ட பகுதி தடை செய்ய பட்டு இருக்கிறது. சரி, மாலை வீடு திரும்பியது எழுதாலாம் என்று நினைத்தால், அதற்குள் அந்த பதிவையே இத்தகைய செய்தி பதிவுகள் திரட்டியில் எதோ ஒரு பக்கத்துக்குள் காணாமல் போய் விட செய்கிறது.

கவனிக்க, இங்கு யாருடைய பதிவையும் குறை சொல்வது என் நோக்கம் அல்ல.

ஒரு உதாரணத்துக்கு தமிழிஸ் என்ற ஒரு திரட்டியில் ஒரு நாளில் வரும் அத்தனை பதிவுகளையும் சலித்து தினசெய்திதாள்களில் செய்தியாக வராத பதிவுகளை தேடுவது என்பது! மற்றவர்களுக்கு எப்படியோ? ஆனால் எனக்கு கிடைக்கும் கொஞ்ச நேரத்தில் சாத்திய படவில்லை.

இது போல் எத்தனை முன்னணி திரட்டிகள்!, அதில் எத்தனை நல்ல பதிவுகள் நம் கண்ணில் படாமல் தொலைந்து போகக்கூடும்? என்பதைத்தான் இங்கு நான் சிந்தித்து பார்கிறேன்.

அதனால் செய்திகளை பதிவாக போடுவது தவறு என்று சொல்ல வரவில்லை, தின செய்திகளை அப்படியே திரும்ப திரும்ப பதிவாக போட்டு திரட்டிகளில் இடத்தை அடைக்காமல், முக்கியமான அல்லது கருத்துக்குரிய ஒரு செய்தியாயின் அந்த செய்திகளை பற்றிய தனிப்பட்ட கருத்துக்களை அல்லது எண்ணங்களை பதிவாக போலாமே என்பதுதான் இங்கு என் நோக்கம்.

அனைவருக்குமே தெரியும், இன்று இணையத்தில் இல்லாத தின பத்திரிகைகளே கிடையாது தினமலர், தினதந்தி, தினகரன்,மாலைமலர், தட்ஸ்தமிழ், தமிழ்சினிமா என்று அத்தனை தின செய்திகளையும் மற்றவர்களும் படிப்பார்கள் அல்லது படித்திருப்பார்கள்.

எனவே எந்த ஒரு தின செய்தியையும் அப்படியே ஒரு பதிவாக பதியும் முன், ஒரு முறை யோசிப்பதே நல்ல பதிவராக நம்மை அடையாளம் காட்ட ஒரு சிறந்த வழி என்று நான் கருதுகிறேன்.

மேலும், அவசியம் இத்தனை நாளுக்கு ஒரு பதிவு போடவேண்டும் என்பது கட்டாயம் இல்லையே?

அப்படி நமக்கு பதிய எதுவும் புது விசையம் இல்லாத பட்சத்தில், தின செய்திதாளில் இருப்பதை, இருந்ததை அப்படியே பதிவாக்காமல்!, அந்த நேரத்தை மற்ற பதிவர்களின் "நல்ல பதிவுகளை" படித்து கருத்து சொல்லி வாக்களிக்க பயன் படுத்தலாமே?

அதனால் அந்த நல்ல பதிவும் அனைவரின் பார்வைக்கும் வரும், மேலும் அப்படி செய்வதால் இணையத்தில் அதிக நேரம் உண்மையில் கிடைக்காதவர்கள் (என்னை போல) கண்ணில் படாமல் அந்த பதிவு காணாமல் போகாமல் நிறுத்தியதில் நமக்கும் ஒரு பெரிய பங்கு இருக்கும்.

அடிப்படையாகவே எந்த ஆதாயமும் இல்லமல் நாம் செய்யும் செய்கைகள் வெகுவாக குறைந்து விட்டன, அதனால் இப்படி செய்வதால் நமக்கு அல்லது நம் பதிவுக்கு என்ன ஆதாயம் என்று நினைக்க வேண்டாம்.

ஒன்று, தினசெய்திதாள்களில் வந்த அதே செய்திகள் திரும்ப திரும்ப திரட்டிகளில் பக்கத்தை அடைத்துக்கொள்ளாமல் அந்த இடங்கள் நல்ல பதிவுகளுக்கு கிடைக்கும்.

இன்னொன்று, நல்ல பதிவுகளை நாம் தொடர்ந்து படித்து கருத்து சொல்லும் பட்சத்தில், நாம் எவ்வளவு இடைவெளி கொடுத்து சொந்த பதிவை பதிந்தாலும் மற்ற நல்ல பதிவர்கள் நம் பதிவை படித்து இன்னும் நம்மை மெருகேற்றுவார்கள்.

அப்படி வரும் பதிவர்கள் அனைவரும் நல்ல மற்றும் தரமான பதிவர்களாக இருக்கும் பட்சத்தில், அவர்கள் வருகை அவர்களை பின் தொடரும் சக பதிவர்களையும் உங்கள் பதிவை நோக்கி திருப்பும், இதனால் நம் பதிவுகள் தரமான பதிவர் வரிசையில் இடம் பெரும்.

அப்புறம் என்ன? அட இன்னுமா புரியல...! பிரபல பதிவர்தான்... :-) .

பதிவர்கள் இதை பற்றி சிந்தித்து ஒரு நல்ல வழியை பின் பற்றினால், நிறைய திறமையுள்ள மற்றும் புதிய புதிய பதிவர்களின் திறமை திரட்டிகளில் முதல் பக்கத்தில் பலரை சென்று அடைய இது வழிவகுக்கும் என்று நம்புகிறேன்.

உங்கள் நேரத்துக்கு என் நன்றி!.
 

Blogger Widgets