Friday, April 9, 2010

புது வரவு!

வணக்கம் நண்பர்களே! ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு உங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி (ஓய்...எவுரா அதி!, "இப்படி வருக்கு சந்தோசங்க உண்ணாமு, மீறு அப்புடே ஒச்சேஸ்சாரா" -ன்னு அடுவுரதி?, நோர் மொய் ர தொங்கனா கொடுக்கா).

ஆ...ஆப் சிந்தா மத், ஓ மேரா தோஸ்த்தே, சோடுதோ உஸ்கோ, ஆப் பாக்கி பூரா பட்லோ.

ஓஓஓ...எந்த குருவாயூர்யப்பா, எந்தா இது? ஒரி மாதம் கேப் விடங்கில் எனக்கி இ கீ-போர்டில் அல்லாம் மறந்து போயி, தமிழ் தாயே உன்ட பிள்ளைய நீ தான் ரச்சிக்கணும்.

கொஞ்சம் ஓவராத்தான் போறமோ!, ஓகே...ஓகே பில்டப் போதும், மேட்டருக்கு போவோம்.

குழந்தைகள் கவலை தீர்க்கும் செல்வங்கள் என்னும் பாரதின் சொல் எவ்வளவு உணர்வு பூர்வமான உண்மை என்பது அனுபவிக்கும் போதுதான் புரிகிறது.

ஆம், என் வீட்டில் இன்னொரு புதுவரவு என் மகன் "ஆரிஷ் ஆரா" (இதுலயாவது புரமோசன் வாங்குவோம்).

முன்பே நான் "தென்கொரியா குழந்தைகள் பராமரிப்பை" பற்றி ஒரு இடுகையில் சொல்லி இருக்கிறேன், அது தவிர இனி இதில் என் சொந்த அனுபவத்தை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

எச்சரிக்கை: இது கர்பிணி பெண்களுக்கு தரும் அறிவுரை இடுகை அல்ல, சொந்த அனுபவ பகிர்வு இடுகை மட்டுமே. மேலும் இங்கு சொல்லியுள்ள அனைத்துமே மருத்துவரால் தனிப்பட்ட உடல் நிலையை சேதித்து கொடுத்த அறிவுரையின் பெயரில் கடைபிடிக்க பட்டது. எனவே யாரும் சரியான மருத்துவரின் அறிவுரை இல்லாமல் எதையும் சுய பரிசோதனை செய்து பார்க்க வேண்டாம்.

என் மகள் பிறக்கும் போது எனக்கு இவ்வளவு அனுபவம் கிடைக்கவில்லை என்று சொல்லுவதை விட, நான் என் குடும்பத்துடன் இல்லை என்பதுதான் உண்மை.

அப்போது பணி நிமித்தம் கொரியா - சிங்கை - வியட்நாமுக்கு இடையில் மாறி மாறி பறந்து கொண்டிருந்ததாலும், முதல் பிரசவம் என்பதாலும் நான்காவது மாதமே தங்கமணியை இந்தியாவிற்கு அனுப்பிவிட்டேன்.

அதன் பின் வளைகாப்பு சமயத்தில் ஓரிரு நாட்கள் பார்த்தேன், குழந்தை பிறந்து மூன்று மாதம் கழித்து ஓரிரு நாட்கள் பார்த்தேன், இப்படியே முழுதாக ஆறுமாதம் முடிந்தவுடன்தான் குடும்பத்துடன் சேரும் சந்தர்ப்பம் வாய்த்தது.

ஆக, ஆறுமாத குழந்தையில் இருந்துதான் என் மகளுடன் இருக்கும் அனுபவம் எனக்கு கிடைத்தது.

அதனாலோ என்னமோ, இந்த முறை எனக்கும் சரி, தங்கமணிக்கும் சரி பிரிந்திருக்க மனமில்லை(ரெண்டு பேருக்குமே அப்புறம் யாரு கூட சண்டை போடுவது என்ற கவலைதான்).

மேலும் என் மகளை விட்டு என்னால் அதிக நாட்கள் பிரிந்து இருக்க முடியாது. அதனால் இங்கேயே தென்கொரியாவில் பார்த்து கொள்ளலாம் என்று முடிவாகிவிட்டது.

பின்னால் சில சந்தர்ப்ப சூழ்நிலை மற்றும் உடல் நிலை காரணமாக இருவீட்டில் இருந்தும் பெரியவர்கள் யாரும் இங்கு வர முடியாமல் போக, நாங்களே தனியாக சமாளிக்கும் படியாகிவிட்டது.

அவ்வை சண்முகி கமல் போல் இது ஒரு அற்புதமான அனுபவமானாலும், உள்ளுக்குள் ஒரு பயம் இருந்ததது.

அந்த வேளையில் எனக்காகவே எழுதியது போல் நம்ம சித்ரா எழுதிய "ஸ்பெஷல் டெலிவரி" இடுகையையும், "ஜலீலா" மற்றும் "துமிழ்" எழுதிய "குழந்தை பிறப்பை பற்றிய இடுகைகளையும்" படித்த போது "எனக்கும் யாரும் இல்லாமல் தனியாக இருக்கிறோம் என்ற உணர்வு போய் இருந்தது."அப்போது அங்கு அவர்களுக்கு பின்னூட்டம் கூட போட இயலாமைக்கு இப்போது இங்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

தென்கொரியாவில் பிரசவ மருத்துவ முறை இதுவரை கேள்விப்படாத வகையில் சற்று மாறுபட்டு இருந்தது.

பொதுவாக நம்ம ஊரில் கர்பிணி பெண்களை அலுங்காமல் குலுங்காமல் பார்த்து கொள்வார்கள், அதிக பட்சமாக மெதுவான நடைதான் பார்த்திருப்போம்.

இங்கு எட்டாவது மாதம் ஆரமித்தவுடன் எங்கள் மருத்துவர் கொடுத்த அறிவுரை தினமும் வேகமான நடை, படி ஏறி இறங்குதல்.

தங்கமணியும் தினம் முப்பது நிமிட நடை மற்றும் ஆறு மாடி ஏறி இறங்க, நான் எதோ நம்மளால் முடிந்த வீட்டு வேலை (சமையல் குறிப்பு உபயம் கீதாஆச்சல், மேனகா, ஜலீலா இடுகைகள்) மற்றும் என் மகளை பார்த்துக் கொள்ள என்று இரண்டு மாதத்தை ஓட்டி விட்டோம்.

நடுவில் வாரம் முப்பத்தி ஆறு, ஏழு, எட்டு என்று நகர நகர பிரசவ வலிக்கான அறியையும் காணோம், குறியையும் காணோம், அதிலும் எங்களை விட தினம் போன் போட்டு என்ன இன்னுமா வலிக்கவில்லை, நீர் குடம் உடையவில்லை(நாங்க ஏதோ கையில் குடத்தை வைத்துக்கொண்டு உடைக்க மாட்டோம் என்று சொன்னது போல) என்று எங்கள் ரத்த ஓட்டத்தை அதிக படுத்தியவர்கள் தான் அதிகம்.

நாங்களும் எதிர் பார்த்து பார்த்து போங்கடா "ஆணியே புடுங்க வேண்டாம்" என்று முப்பத்தி ஒன்பதாவது வாரத்தை கடத்த, அடுத்த ஆறாவது நாள் நடு இரவில் லேசாக பிரசவ வலி துவங்கியது.

அப்பத்தான் புரிந்தது பிரசவ வலி என்பது, நம்ம சூப்பர் ஸ்டார் மாதிரி, எப்ப வரும் எப்டி வரும்னு நாம தேடாக்கூடாது, அதுவா வர வேண்டிய நேரத்துல கரெக்ட்ட வரும்னு.

பிரசவ வலியை எதிர்பார்த்து முன்னமே தேவையான அனைத்தும் தயார் நிலையில் வைத்து இருந்ததால் சீக்கிரம் தயாராகி மருத்துவமனைக்கு சென்று விட்டோம், சோதித்து பார்த்து விட்டு பிரசவத்துக்கு இன்னும் நேரம் இருக்கிறது, நீங்கள் உங்கள் மனைவியுடன் பிரசவ நேரத்தில் இருக்க வேண்டும் என்பதால், உங்கள் மகளை பிரசவத்திற்கு பின் நீங்கள் தங்கும் அறையில் உங்கள் நண்பர்களுடன் விட்டு விடவும் என்று சொல்ல, நான் என் மகளை தூங்க வைத்து நண்பர்கள் பொறுப்பில் விட்டு விட்டு பிரசவ அறைக்கு வரும் போது விடிந்து விட்டது.

உள்ளே வந்ததும் வராததுமாய் தங்கமணி சொன்னது ஏங்க இவ்வளவு பெரிய பிளாஸ்மா டி.வி இருக்கு கொஞ்சம் நல்ல படமா போட சொல்லுங்க! (ரொம்ப அவசியம் என்று நினைத்து கொண்டேன்).இனி நடந்தவைதான் என்னால் இன்னும் மறக்க முடியவில்லை, தாய், குழந்தை என இருவருக்கும் இதய துடிப்பை கண்காணிக்க ஒரு சில இணைப்புகளை தங்கமணி உடலில் பொருத்தினார்கள், பின் பத்து நிமிடத்துக்கு ஒரு முறை இரு பெண்கள் வந்து குழந்தை கீழ் நோக்கி நகரும் படி வயிற்றை அழுத்தினார்கள்.

அழுத்தினார்கள் என்றால், சும்மா லேசா இல்லைங்க, சைக்கிள் பம்பில் காத்தடிப்பது போல, உங்க வீட்டு அழுத்தா? எங்க வீட்டு அழுத்தா! அதிலும் ஒரு பெண் சைடில் ஒரு குட்டி ஸ்டூலை போட்டு அதில் ஏறி தங்கமணி கட்டிலில் ஒரு காலை வைத்து முழு பலத்தையும் கொடுத்து அழுத்தினார் என்றால் பாருங்கள்.

இதுல நம்மள வேற உதவிக்கு கூப்பிட்டு நிற்க வைத்து, உங்கள் மனைவிக்கு தைரியம் கொடுங்கள் என்றார்கள்(க்...க்கும் நம்மளே நடுங்கி போய் இருக்கும் போது, நம்ம எங்க போய் தைரியம் கொடுக்கறது)ஒரு வழியா சமாளிச்சு தங்கமணி தலைய தடவியபடி கையை பிடிச்சு "புஸ்" மா "புஸ்" என்று நானும் கூட்டத்தில் ஒரு கோவிந்தாவை போட்டேன்.

அத விட தங்கமணி, என்னாங்க நம்ம தமிழ் பொண்ணுங்க பிரச நேரத்துல வலி தங்காம உன்னால தானடா இப்படி ஆச்சுன்னு சொல்லி திட்டி கணவரை அடிப்பாங்களாம், நம்ம கலாச்சாரப்படி நானும் உங்கள ...

என்று அவள் சொல்லும் போதே குறுக்கிட்ட நான், அதெல்லாம் பரவாயில்ல விடும்மா என்று சொல்ல!,

அதில்லைங்க திட்டும் போது ஒரு புலோவுல ஏதாவது நாலு கெட்ட வார்த்தை வந்தா கொரியா நர்சுக்கு புரியவா போகுது, அப்படி வந்தா என்ன மன்னிச்சுடுங்க, தண்டிச்சு கை விட்டுறாதீங்க! என்று சந்திரமுகி ஜோதிகா டயலாக்கை ரீமிக்ஸ் செய்து சொல்லி சிரிக்க "இந்த நேரத்திலும் உனக்கு இப்படி எல்லாம் தோணுது பாரு" என்ற வரி நினைவில் வந்தது.

ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை குழந்தை எவ்வளவு கீழ் நோக்கி இறங்கி இருக்கிறது என்று சோதித்தார்கள், ஒரு வழியாக குழந்தையின் தலை லேசாக தெரிந்தவுடன், அந்த இரு பெண்களில் ஒருவர் மருத்துவரை அழைத்து வருவதாக சொல்லி வெளியே சென்றவர்,திரும்ப வரும் போது ஒரு கூட்டத்துடன் வந்தார்.

மருத்துவரும் ஒரு பெண்ணும் குழந்தையை வெளியில் எடுக்கும் முயற்சிக்கு தயாராக, இரு பெண்கள் வழக்கம் போல கட்டிலுக்கு இருபக்கமும் குட்டி ஸ்டூலில் ஏறி வயிற்றை அழுத்த தயாராக (தங்கமணி, திரும்பவும் மொதல்ல இருந்தா! உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...இப்பவே கண்ண கட்டுதேங்க என்றாள்).

மற்றவர்கள் ஏன்? என்று புரியாமல் திரும்பி பார்த்தல், ஒரு பெண் கையில் மொபைல் கடிகாரத்தை வைத்துக்கொண்டு நேரம் பார்கிறார், ஒரு பெண் ஒரு சி.டி-யை பாட விட தயார் நிலையில் இருக்கிறார், மேலும் இரு பெண்கள் அவர் பின்னால் நிற்கிறார்கள் (ஏன் என்று அப்போது புரியவில்லை).

மருத்துவர் வந்து ஒரு இரண்டு முறை "புஸ்" சொல்ல இரு பெண்களும் அழுத்த, அடுத்த இரண்டு நிமிடத்தில் நம்ம ஜூனியர் மெதுவாக தலையை எட்டிப்பார்த்தார், வெளியில் வந்து முதல் சுவாசம் பட, ஒரு பெண் நேரத்தை குறித்தார், ஒரு பெண் சி.டி-யை பாட விட அதில் ஒரு கொரியன் மொழியில் முதல் பிறந்தநாள் பாடல் வர, மற்ற இருவரும் கை தட்ட (இதற்குதான் என்று இப்போதுதான் புரிந்தது) அந்த அறையே ஒரு பிறந்த நாள் கொண்டாட்டம் போல கலை கட்டியது.

இங்கும் ஒரு ஆச்சரியம், குழந்தையை வெளியில் எடுத்தவுடன் மருத்துவர் குழந்தையை பிடித்திருக்க, அவருடன் இருந்த பெண் தொப்புள் கொடியை நீட்டி பிடித்து என் கையில் ஒரு கத்திரியை கொடுத்து வெட்ட சொன்ன போது, சந்தோஷத்தில் லேசாக என் கை நடுங்கியபடி வெட்டினேன்.

அடுத்த இரண்டு நிமிடத்தில் அங்கயே ஜூனியரை தூக்கி பிடித்து வாயில் இருந்து நீர் எடுத்து, ஒரு அவசர சுத்தம் செய்து, ஒரு வெள்ளை நிற துண்டில் சுற்றி தாமரை இதழில் விட்ட நீர்துளி போல் என் கையில் கொடுக்க, கையில் வாங்கியதும் மெதுவாக கண்களை திறந்து என் முகத்தை பார்த்த போது, என் உள்ளங்காலில் உள்ள ரத்த அணுக்கள் கூட "ஜிவ்" என்று எதிர் நீச்சல் போட்டு உச்சி தலைக்கு ஏறியது "இதையம் எம்பி வாய் வழியே வந்து விடுவது போல" விவரிக்க முடியாத ஒரு பரவச அனுபவம்.

சந்தோஷத்தில் சிரி என்று புத்தி உடலுக்கு சொன்னாலும், மனமும் கண்ணும் அதை காதில் வாங்காதது போல லேசாக கண்ணீரை கொட்டியது கூட என் முதல் அனுபவம்.இப்படியாக இதர விசையங்கள் முடிந்து நாங்கள் தங்கும் அறைக்கு வரும் போதே, நண்பர்கள் மற்றும் அலுவலக நண்பர்கள் அழகழகான பூக்கூடைகளை வாழ்த்து அட்டைகளுடன் அனுப்பி மிக சுத்தமான அந்த அறையை இன்னும் அழகுபடுத்தி இருந்ததை பார்த்ததும் எங்கள் மகிழ்ச்சி இன்னும் கூடியது.

இந்த அனுபவத்தில் எனக்கு இருந்த பல சந்தேகங்கள் தீர்ந்தது, இந்தியாவில் இவை சாத்தியமா இல்லையா என்று தெரியாவிட்டாலும் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.

கணவரும் பிரசவ அறையில் இருக்க வேண்டும் என்று சொன்ன போது எனக்கு லேசாக பயம் என்றாலும், தங்கமணிக்கும் அது ஒரு நல்ல மன நிலையை கொடுத்ததை என்னால் உணர முடிந்தது. மேலும் ஒவ்வொரு ஆணும் ஒரு பெண்ணின் பிரசவத்தில் உடன் இருந்து அவர்கள் உடல் வழியை நம் மனதால் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த முறை கையாளப்படுகிறது என்று நினைக்கிறேன்.

மொபைல் போன் பல சமயம் எனக்கு வரும் மின்அஞ்சல்களில் நாள், வருடம், ஊர் குறிப்பிட்டு ஒரு மருத்துவ மனையில் பிரசவம் அல்லது அறுவை சிகிச்சை நடந்து கொண்டிருந்ததாகவும், அந்த அறைக்கு உள்ளே அல்லது வெளியே கதவுக்கு அருகே ஒருவர் தன் மொபைல் போனை பயன் படுத்தியதாகவும் அதனால் வந்த காந்த அலைகள் அல்லது கதிர் வீச்சால், குழந்தைக்கு அல்லது நோயாளிக்கு உயிரிழப்பு ஏற்பட்டு விட்டது என்று சொல்லி, அதனால் குறிப்பிட்ட எல்லைக்கு அருகில் மொபைல் போனை அனைத்து வைக்கவும் என்று வந்ததை நானும் நம்பி இருந்தேன்.

ஆனால் இங்கு அதற்கு அவசியமே இல்லை, நீங்கள் தாராளமாக எந்த நேரத்திலும் பிரசவ அறையில் உங்கள் மொபைல் போனை பயன் படுதலாம் அனைத்து வைப்பது உங்கள் இஷ்டம், கட்டாயம் ஒன்றும் இல்லை என்றார்கள். சொல்லபோனால் பிறப்பு நேரம் குறிக்க நேரம் பார்த்த பெண் மொபைல் முதல் அந்த பிரசவ அறைக்குள் மொத்தம் ஒன்பது மொபைல் போன்கள் இருந்தன (சைலென்ட் மோடில்), சில போன் அழைப்புகளும் வந்தன எந்த பாதிப்பும் எனக்கு தெரிந்து வரவில்லை.

பிறப்பு நேரம் பற்றியும் அதிக இடுகைகளில், விவாதங்களில், விமர்சனங்களில் பார்த்த போது, எனக்கும் தலை வெளியே வந்து முதல் சுவாச நேரம், முழு உடல் வெளியே வந்த நேரம், தொப்புள் கொடி துண்டிக்கப்பட்ட நேரம் என இவற்றில் எது சரியான பிறப்பு நேரமாக கூடும் என்று சந்தேகம் இருந்தது, இந்த முறை நேரடியாக பிரசவத்தை பார்க்கும் வரை.

மருத்துவர் குழந்தையின் தலையை வெளியில் எடுத்து முதல் சுவாசம் பட்ட அடுத்த நொடி முழு உடலும் "டக்"என்று வெளியே வந்து விட்டது, அடுத்த சில நொடிகளில் தொப்புள் கொடி துண்டிக்க பட்டு விட்டது, இவை அனைத்தும் நடந்தது ஒரு ஐந்து முதல் பத்து நொடிகளுக்குள்தான். ஆக பிறப்பு நேரம் எனப்படும் மணி மற்றும் நிமிடத்தில் (10:15 அல்லது 11:20 அல்லது 12:28 என்பதில்) எந்த மாற்றமும் இல்லை.

மொத்தத்தில் இது ஒரு அற்புதமான அனுபவமாகவும், கடவுளின் படைப்பில் ஒரு மிக நுணுக்கமான வடிவமைப்பாகவும் இருப்பதை என்னால் நேரில் உணர்வு பூர்வமாக உணர முடிந்தது.
தம்பி வந்ததில் என் மகளுக்கும் நிலை கொள்ளாத சந்தோசம், எனக்கும் இப்போதெல்லாம் வீட்டில் இவர்களுடன் நேரம் போவதே தெரியாமல், இருபத்தி நான்கு மணி நேரம் என்பது ஒரு நாளுக்கு மிக குறைவோ என்று தோன்றுகிறது.

தனிக்காட்டு சிங்கமாக திரிந்த போது பார்த்த வாழ்கையை விட, திருமணம் செய்தபோது அந்த காடு நந்தவனமாக மாறிய வியப்பே தீராத நிலையில், குழந்தைகளுடன் இப்போது என் நந்தவனம் பூத்து குலுங்குகுவது எனக்கு இன்னும் வியப்பை தருகிறது.

ஆண்டவன் படைப்பில் மனிதனின் வாழ்க்கை சக்கரத்தில்தான் எத்தனை எத்தனை மாறு பட்ட நிலைகள், அனுபவங்கள்...நன்றி இறைவா.

முடிக்கும் முன் ஒண்ணே ஒண்ணு சொல்லிக்கிறேனே ப்ளீஸ்!, என்னான்னு கேளேன்... மச்சான் நீ கேளேன்...பங்கு நீ கேளேன்... தங்கமணி நீயாவது கேளேன்...சரி சரி நானே சொல்றேன் (நான் பஞ்ச் டயலாக் சொன்னா மட்டும் பொறுக்காதே)...!

Yes, I'm back :-).
 

Blogger Widgets