Wednesday, April 6, 2011

தேர்தல் கனவு...!

வணக்கம் நண்பர்களே,

உலக கோப்பையை வென்ற இந்திய வீரர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களுடன் இந்த பதிவை துவங்குவோம்.

இந்த வெற்றி விழா கொண்டாட்டத்தில் சச்சினுக்கு இரண்டு புறமும் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் முதல் உலக கோப்பை நாயகன் கபில்தேவ் இருவரையும் அமர்த்தி பெருமை படுத்தினால் இன்னும் அமர்களமாக இருக்கும் என்பது என் விருப்பம்.


தேர்தல் விதிமுறைகள்...!

கட்சி விதிகள்

எந்த ஒரு தனிப்பட்ட கட்சியும் மூன்று தேர்தல்களுக்குள் குறிப்பிட்ட அளவு தொகுதியில், அதாவது அந்த கட்சியை சேர்ந்த மொத்த வேட்பாளர்களில் இருபத்தைந்து சதவீதம் வெற்றி பெறாவிட்டால், அந்த கட்சியின் உரிமை ரத்தாகி, அந்த கட்சியை கலைத்து விடவேண்டும்.

அப்படி ரத்தாகும் கட்சியின் தேர்தல் சின்னம் என்பது இனி யாருமே பயன்படுத்த முடியாமல் தடையாகி விடும்.நாட்டில் ஒரு தனி கட்சி என்பதே தனி கொள்கையின் அடிப்படையில் இருப்பதால், எந்த ஒரு கட்சியும் தேர்தலில் தனித்து மட்டுமே போட்டியிட முடியும்.

அப்படி இன்னொரு கட்சியுடன் கூட்டணியாக இணைய விரும்பும் பட்சத்தில், இரண்டில் ஏதாவது ஒரு கட்சியை கலைத்து அதன் உரிமையை ரத்து செய்து, ஒரே கட்சியாக மட்டுமே செயல்பட, போட்டியிட முடியும்.

ஒரு முறை இணைந்த பின் மீண்டும் பிரிந்தால், அதே கட்சியை துவங்க முடியாது, வேறு கட்சியை துவங்கினாலும், புதிய சின்னம் மட்டுமே கொடுக்க படும்.

மேலும் ஒரு முறை சேர்ந்து பின் பிரிந்து மீண்டும் ஒரே ஒரு முறை மட்டுமே கட்சி துவங்க உரிமை கேட்க முடியும்.

கட்சியின் பொது குழு தலைவர் மற்றும் இதர பொறுப்புகளில் ஒருவர் அறுபத்தைந்து வயது வரை மட்டுமே பதவி வகிக்க முடியும். அதன் பின் அவர் அனுபவத்தின் அடிப்படையில் அக்கட்சியின் வழிகாட்டியாக ஒரு மதியுரை அமைச்சர் பதவிக்கு மட்டுமே தகுதி பெறமுடியும்.

யார் ஆட்சியாயினும் குடும்பத்தின் மொத்த வருமானத்தை, சொத்துக்களை கணக்கில் கொண்டு வறுமை கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு அரசு சலுகைகள் மட்டுமே தர முடியுமே தவிர, இலவசம் என்று எதுவும் கொடுக்க முடியாது.இலவசமாக கொடுக்கும் அனைத்தும் லஞ்ச ஒழிப்பு விதிமுறைகளுக்கு கீழே கொண்டுவரப்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

ஜாதி, மொழி சார்ந்த கட்சிகள் துவங்க முடியாது, எல்லா அரசு ஆவணங்களில் இருந்தும் ஜாதி பற்றிய விபரங்கள் உடனடியாக நீக்கி விடப்படும்.

எந்த கட்சியும் அந்த கட்சி சார்பான தனிப்பட்ட தகவல் தொடர்பு தொலைக்காட்சி, பத்திரிக்கை, வானொலி நடத்த முடியாது, அப்படி வேறு தொடர்புகளில் நடத்தும் தகவல் தொடர்பு எதிலும் கட்சி சார்பான சின்னம், முத்திரை எதையும் பயன்படுத்த கூடாது.

மேலும் அந்த தகவல் தொடர்பு மூலம் வரும் செய்திகள் உண்மையல்ல என்று எந்த ஒரு நிறுவனமும், குடிமகனும் நிரூபிக்கும் பட்சத்தில், அந்த தகவல் தொடர்பு நிறுவன உரிமை உடனடியாக ரத்து செய்வதோடு, அத்துறை சார்ந்த அத்தனை அசையும், அசையாத சொத்துக்களும் அரசாங்க சொத்தாகிவிடும்.

அரசியல் பதவி விதிமுறைகள்

ஜனநாயக நாட்டில் அரசியல் பதவிக்கு போட்டியிட கிரிமினல் வழக்கு இல்லாத மற்றும் வங்கி கடன் மஞ்சள் நோட்டீஸ் கொடுக்காத குடிமகன் யாருக்கும் உரிமை உண்டு என்றாலும், அப்பதவியின் நிலையை கருத்தில் கொண்டு போட்டியிட தகுதியான குடிமகனை சில கட்டுப்பாடுகளுக்குள் உட்பட்டு மட்டுமே தேர்வு செய்யப்பட வேண்டும்.நாட்டின் குடிமகனாக நாள் முதல் இருப்பது வருடங்கள் உள்நாட்டில் வசித்திருக்க வேண்டும் (உயர் கல்விக்காக மட்டும் வெளிநாடு சென்றிருக்கலாம்).

கண்டிப்பாக முதுகலை பட்டம், அதுவும் ஆரம்ப பள்ளி முதல் அனைத்தும் முழுநேர படிப்பின் மூலம் (மாலை, தொலைதூர மற்றும் திறந்தவெளி எல்லாம் செல்லாது) நாட்டின் அல்லது உலக முன்னணி பல்கலைகழகம் மூலம் பெற்றிருக்க வேண்டும்.

குறைந்தது தாய் மொழி அல்லது போட்டியிடும் மாநில மொழி, இந்தியாவில் அதிகம் பேசும் மொழி ஹிந்தி, உலகில் அதிகம் பேசும் மொழி ஆங்கிலம் என்று மும்மொழிகளில் (செம்மொழி கதை எதுவும் விடாமல்) முறையாக பேச, படிக்க மற்றும் எழுத தகுதி, தகுந்த சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

குறைந்தது பத்து வருடங்கள் அவர் படிப்பு சார்ந்த துறையில் வேலை செய்த அனுபவமும் அதில் "பொதுமக்களிடம்" நல்ல பெயரும் பெற்று இருக்க வேண்டும்.

அப்படி இருந்து ஒருவர் வெற்றி பெரும் வகையில், அவருக்கு அதே துறையை ஒதுக்க வேண்டும். உதாரணமாக ஒரு காவல் அல்லது போக்குவரத்து மந்திரி என்பவர் மற்ற விதிகளுக்கு உட்பட்டு இருந்தாலும், அதே துறையில் குறைந்தது பத்து ஆண்டுகள் நாட்டுக்காக பணி செய்து இருக்க வேண்டும்.

மூன்று முறைக்கு மேல் ஒருவர் பொது தேர்தலில் போட்டியிட முடியாது, அவர் சார்ந்த கட்சியின் மதியுரை பதவிகளில் அவர் இருப்பதில் எந்த தடையும் கிடையாது.ஒரு கட்சியின் சார்பில் பொது தேர்தலில் நின்று வெற்றி பெற்ற பின், அந்த வெற்றி வேட்பாளர் கட்சி மாறினால், கட்சியை விட்டு விலகும் போதே அவர் பதவியும் அவரை விட்டு விலகும். மேலும் அவர் அடுத்த பத்து தேர்தலில் எந்த ஒரு கட்சி சார்பாகவும் போட்டியிட முடியாது.

அது மட்டும் இல்லாமல், அவர் பதவி விலகிய தொகுதியின் இடை தேர்தல் செலவு முழுவதும் அவரோ அல்லது அவர் போகும் புதிய கட்சியோ ஏற்று கொள்ள வேண்டும்.

நாட்டின் அரசியல் தலைமை பொறுப்பில் இருக்கும் எந்த ஒரு அரசியல் தலைவரும் செய்த தவறு, ஊழல் நிரூபிக்கப்பட்டால், அதே தவறை செய்த குடிமகனுக்கு சட்டப்படி கிடைக்கும் தண்டனையை போல மூன்று மடங்கு அதிகமாக கிடைக்கும்.

எந்த ஒரு நேர்மையான அல்லது எப்படி பட்ட அரசியல் தலைவராக இருப்பினும், அதை மட்டுமே தகுதியாக கொண்டு அவரின் வாரீசு அல்லது ரத்த உறவுகள் யாரும் மேலே உள்ள மற்ற அரசியல் தலைமை விதிகள் பொருந்தாத பட்சத்தில், அவர்கள் எந்த ஒரு அரசியல் பதவிகளுக்கும் போட்டியிட முடியாது.

காவல் மற்றும் நீதித்துறை இரண்டும், ஜனாதிபதி மற்றும் மாநில கவர்னர் நேரடி கட்டுபாட்டில் இருக்கவேண்டும், இவர்கள் இருவரையும் நேரடியாக மக்கள் பொது தேர்தலில் மட்டுமே தேர்ந்து எடுக்க முடியும்.மேலும் "ஜனாதிபதி மற்றும் மாநில கவர்னர்" இருவரும் எந்த கட்சியை சார்ந்தும் இருக்க முடியாது, இவர்கள் "தவறுகளை" முப்படை தளபதிகள், சுபிரீம் கோர்ட் நீதிபதிகள் குழு மற்றும் பிரதமர் ஆகியோர் இணைந்த குழு மட்டுமே கட்டுபடுத்த முடியும்.

நாட்டின் எந்த ஒரு அரசியல் தலைவரையும் தகுந்த முறை மற்றும் காரணத்தோடும் எந்த ஒரு குடிமகனும் சந்திக்க முடியவில்லை என்றால், காவல் மற்றும் நீதித்துறையை நாட அவர்களுக்கு முழு உரிமை உண்டு.

அட போதுங்க, அதான் கனவுன்னு சொல்லியாச்சுல்ல, இத்தோட இப்போதைக்கு முடிச்சுக்குவோம்...!

போங்கப்பா, போய் புள்ள குட்டிகள படிக்க வைங்க, இன்னுமா இந்த உலகம் இதை நம்பிகிட்டு இருக்கு?.


நன்றி, மீண்டும் சந்திப்போம்.
 

Blogger Widgets