Monday, December 13, 2010

தென்கொரியா வரும்முன் கவனிக்கவேண்டியது!

வணக்கம் நண்பர்களே,

தென்கொரியாவில் குளிர் காலம் ஆரமித்துவிட்டது, கடந்த வாரம் முதல் நல்ல பனிபொழிவு துவங்கிவிட்டது.

தென்கொரியாவின் பருவநிலைகளை பற்றி சில பதிவுகளில் நான் குறிப்பிட்டு இருந்தாலும், இந்த பதிவு முழுதாக தென்கொரியாவின் தட்பவெட்ப நிலைகளை மட்டும் வைத்து எழுதுவதால், இனி இங்கு வரவிருக்கும் நம் மக்களுக்கு பயன்படும் என்று நினைக்கிறேன்.

தென்கொரியாவை பொறுத்தவரை, மொழி, உணவு பிரச்சனைக்கு அடுத்த படியாக வருவது இங்குள்ள தட்பவெட்ப நிலைதான்.

ஒரு வருடத்தில் நான்கு வகையான சீதோசன நிலைகள் வருகின்றது, அதை இங்கு பார்ப்போம்.

ஏப்ரல் முதல் ஜூன் வரை (Spring Session), கடும் குளிர் காலம் முடிந்து வருவதால் இது மழையோடு துவங்கும், இதனால் குச்சியாக கிடந்த அத்தனை செடிகளும் மரங்களும் பசுமையாகி விடும்.

இதை மழைகாலம் என்பதை விட பூக்களின் காலம் என்றுதான் சொல்ல வேண்டும், எங்கு பார்த்தாலும் வண்ணமயமாக பூக்கள்தான் தெரியும்.



நகரமே அத்தனை அழகாக இருக்கும், சாதாரன உடைகளுடன் ஒரு சுவட்டர் அல்லது லேசான குளிர்தாங்கும் ஜாக்கெட் போதுமானது.

வெட்பநிலை 10 தல் 15 டிகிரி சென்டிகிரேட் போல இருக்கும்.

செர்ரி பிளாசம் வருவதும் இந்த காலத்தில்தான், உலகெங்கும் இருந்து மக்கள் இதைகாண கொரியா, ஜப்பான் வருவது வழக்கம்.

நான் செர்ரி பிளாசம் ஜப்பானில் இருந்த போதுதான் முதன் முதலில் பார்த்தேன். ஆனால் இங்கு வந்தவுடன்தான் என் வீட்டு வாசலிலேயே பார்த்தேன். தென்கொரியாவை பொறுத்தவரை எல்லா இடங்களிலும் பாரம்பரிய பூக்கள் பூக்கும் மரங்கள் இருகின்றன.

இந்த காலத்தில் சீனாவில் இருந்து வரும் தூசி படலம் (Yellow sand dust) அதிகமாக காணப்படும். இது தோலுக்கும் குறிப்பாக கண்களுக்கு பாதிப்புகளை கொடுக்கும், அதனால் எப்போதும் வெளியே சென்று வந்தவுடன், முதலில் கை, கால் முகம் கண்கள் அனைத்தும் சுத்தமாக கழுவவேண்டும். சுத்தமாக கழுவும் முன் குறிப்பாக குழந்தைகளை கொஞ்சவோ முத்தமிடவோ கூடாது.

ஜூன் முதல் ஆகஸ்ட் வரை (Summer), வெட்பநிலை மாறி கோடை காலம் வரும், மொத்தமாக பார்க்கும் போது வெட்ப நிலை 25 முதல் 28.3 டிகிரி சென்டிகிரேட்தான் என்றாலும், காற்றில் ஈர தன்மை வெகுவாக குறைத்திருக்கும்.

சாதாரண உடையில் இருக்கலாம், ஆனால் என்னதான் சாதாரண உடையில் இருந்தாலும் வேர்வையும் பிசு பிசுப்பு தன்மையும் அதிகமாக இருக்கும், வீட்டில் குளிசாதனம் இல்லாமல் இருக்க முடியாது.

தென்கொரியாவை பொறுத்த வரை வீட்டு பொருட்கள் வாங்குவது முதல் குடும்ப வரவு செலவு அனைத்தும் பெண்கள்தான் என்பதால், வெளியில் எங்கும் அதிகமாக பெண்களை மட்டுமே பார்க்க முடியும்.

இந்த காலத்தில் வெயில் கூட கூட, பெண்கள் ஆடை குறையும், குளியலரையில் இருந்து அப்படியே வந்தது போல அரையும் குறையுமாக வண்ணமயமாக சுற்றிக்கொண்டு இருப்பார்கள். அவ்வளவு சின்ன டிடவுசரில் அவர்களை பார்த்தல் ஆண்களுக்கே வெக்கம் வந்துவிடும்.



ஆனா மக்களே "கபர்தார்" (ஜாக்கரதை)!, நம்ம ஊர் மாதிரி நினைத்துக்கொண்டு தவறாக ஏதாவது செய்தால் போலிஸ் வந்து நம் டிடவுசரை கழட்டிவிடும்.

செப்டம்பர் முதல் நவம்பர் வரை (Autumn), அப்படி இப்படின்னு கண்ணை கழுவி கோடை காலத்தை முடித்தால் வருவது அற்புதமான இலையுதிர் காலம், என்னை பொறுத்தவரை, தென்கொரியாவிற்கு வர இதுதான் சரியான சமயம்.

வெட்பநிலை 10 டிகிரிக்கு கீழே இருந்தாலும், மரங்கள் எல்லாம் இலைகள் பழுத்து மஞ்சள் மற்றும் காப்பி நிறத்தில் நகரமே அவ்வளவு அழகாக இருக்கும்.





ஆசியாவில் இதை போல ஜப்பான் மற்றும் சீனாவில் ஒரு சில பகுதிகளில் மட்டுமே காணமுடியும் என்று நினைக்கிறேன், நகரை சுற்றி பார்க்க இது மிக சிறந்த நேரம்.

இதே சமயத்தில் இங்கு திருவிழாக்கள் வருவதால் விடுமுறை, கேளிக்கை, கொண்டாட்டம் என்று எங்கும் மகிழ்ச்சி மயமாக இருக்கும்.

இலையுதிர் காலம் முடிய போகும் போது ஓரிரு வாரம் காற்று அடிக்கும் பாருங்க, சும்மா நம்ம வீட்டையே நாலு தெரு தள்ளி கொண்டு போய் வைத்துவிடும் அப்படி பகலும் இரவும் பேய் காற்று அடிக்கும்.

சுட்டி பெண்கள் வேண்டும் என்றே (குட்டை)பாவாடையோடு வருவார்கள்.

டிசம்பர் முதல் மார்ச் வரை (Winter), அடித்த காற்றில் எல்லா இலைகளும் உதிர்ந்து நகரமே மொட்டை அடித்தது போல இருக்கும் போது குளிர்காலம் துவங்கும்.

பொதுவாக டிசம்பர் முதல் வாரத்தில் -01 முதல் -03 டிகிரி சென்டிகிரேட் என்று துவங்கும் பனிபொழிவின் அளவு கூடிக்கொண்டே போக போக வெட்ப நிலை எதிர்பார்க்காத அளவு குறைந்து கொண்டே போகும்.

அதிக பட்சமாக -10 முதல் -15 டிகிரி சென்டிகிரேட்வரை போகக்கூடும், முப்பது வருடங்களுக்கு பிறகு கடந்த வருடம் ஜனவரியில் -20+ டிகிரி சென்டிகிரேட் சென்றது.

குளிர் காலத்தின் துவக்கம் டிசம்பர் முதல் ஜனவரி பாதிவரை லேசான பனிபொழிவாக இருப்பதாலும் கிறிஸ்மஸ், புதுவருடம் என்று விடுமுறைகள் வருவதாலும், நகரமே வண்ண மயமாக அதுவும் இரவு நேரம் மிக ரம்யமாக இருக்கும்.

வானில் பனிமழை தூவ, தெருவெங்கும் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு "லாஸ்ட் கிறிஸ்மஸ், ஜிங்கில் பெல்ஸ்" போன்ற பாடல்கள் ஒலிக்க, எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் தங்கள் துணையுடன் கொரியா டக்கீலா "சோஜு" சூட்டில் கட்டியணைத்துக்கொண்டு நடக்க, நாடே திருவிழா கோலத்தில் மிதக்கும்.

வார இறுதி இரவு வாழ்கைக்கு மற்றும் தேனிலவு சுற்றுலாவுக்கு இது அற்புதமான காலம்.

அதன் பின், குளிர் கூட கூட, அதிக அளவு குளிர்தாங்கும் ஆடைகள் இல்லாமல் வெளியே போக முடியாது, வீட்டில் ஹீட்டர் மூலம் வெட்ப நிலையை +20+ டிகிரிக்கு மாற்றாமல் இருக்க முடியாது.

குழந்தைகளை இந்த காலத்தில் அதிக பாதுகாப்புடன் வைத்திருக்க வேண்டும், அடிக்கடி அவர்கள் உடல் வெட்ப நிலையை கண்காணிக்க வேண்டும்.ஜனவரி கடைசி முதல் எப்படா ஏப்ரல் வரும் என்று ஏங்குமளவு குளிர் நம்மை படுத்தி எடுத்து விடும்.



இங்கு கட்டிட அமைப்புகள் இங்குள்ள சீதோசன நிலைக்கு சாதகமாக அமைக்கபட்டுள்ளன, வீட்டின் தரைகள் மரத்தால் செய்து அதன் அடியில் ஹீட்டர் இணைப்பு கொடுக்க பட்டு இருக்கும், நாம் நம் வீட்டின் மின்விசிறியின் அளவை கூட்டுவது போல, ஹீட்டர் மூலம் வீட்டின் தட்பவெட்ப நிலையை மாற்றி அமைத்துக்கொள்ள முடியும்.

குடிநீர் முதல் அனைத்து பயன்பாட்டு நீரும் சூடாக அல்லது குளிர்ந்த நிலையில் என்று நமக்கு வேண்டியவாறு மாற்றி அமைத்துக்கொள்ள முடியும், இவை அனைத்தும் நம் வீட்டின் கேஸ் இணைப்பின் மூலம் செயல்படும். அடுப்பு மற்றும் மின்விளக்கு போன்றவை மட்டுமே மின்சாரத்தை பயன்படுத்தும்.

இங்கு நான் குளிர் காலத்தில் இருந்து பலமுறை எல்லா இடங்களையும் பார்த்து விட்டதால், இந்த முறை புது வருடத்தை வரவேற்க விடுமுறைக்காக நான் இந்தியா செல்கிறேன்.

ஆகவே,நடந்தது நடந்தவையாக இருக்க, இனி நடப்பது நல்லதாக இருக்க, உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தின் மீதும் என்றும் தன் புன்னகையை செலுத்த எல்லாம் வல்ல இறைவனை வேண்டி உங்கள் அனைவருக்கும் என் இனிய கிறிஸ்மஸ், புதுவருட மற்றும் பொங்கல் வாழ்த்துக்களை சொல்லிக் கொள்கிறேன்.

நன்றி!.

Sunday, December 5, 2010

விமான பயணம் கவனம்!

இது நிறுவனங்களின் குறையை சுட்டி காட்டும் பதிவே தவிர, அதில் வேலை செய்யும் ஊழியர்களை குறை கூற அல்ல.

மேலும், இது வாடிக்கையாளர் சேவையை பற்றிய பதிவு என்பதால், அவர்கள் வேலையில் உள்ள கஷ்டத்தை காட்டும் வகையில் மின் அஞ்சலில் வந்த ஒரு பகிர்வுக்கு பின் விசையத்தை பார்க்கலாம்.





பொதுவாகவே நம்மிடம் விமான பயணம் என்றதும் எதோ புதிய அல்லது உயர்தர வாழ்கை முறையை சார்ந்த ஒன்று என்ற எண்ணம் இருக்கிறது, இதை பயன் படுத்திக்கொண்டு இந்த நிறுவங்கள் செய்யும் அட்டகாசம் சொல்ல முடியாத அளவு வந்து விட்டது.

விமான பயணமும் பஸ், ரயில் போல ஒரு பயண முறை மட்டுமே மற்ற பயண துறைகளுக்கு உள்ள எல்லா சட்டமும் இதற்கும் பொருந்தும் என்பதை நம்மில் எத்தனை பேர் கவனிக்கிறோம்?

என்னிடம் இந்தியா செல்ல ஒரு விமான சீட்டு இருந்தது, ஆசியாவின் முன்னணி விமான நிறுவங்களில் அதுவும் ஒன்று, வேலை பளு மற்றும் அலுவலக விடுமுறை படி என்னிடம் இருக்கும் பயண தேதிக்கு இரண்டு நாள் மாறுபட, பயணதேதியை மாற்றி அமைக்க அந்த விமான நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவையை அழைக்க, அந்த பெண் என்னிடம் பேசியது, என்னை ஒரு அடிமுட்டாள் போல நினைப்பதாக இருந்தது.

விமானசீட்டு விலை வேலை நாட்கள், வாரஇறுதி என்று பயண நாட்களை பொருத்து சற்று மாறுபடும் என்பது எனக்கு தெரியும். ஆனால், அவர் சொன்னது கிட்டதட்ட பதினாராயிரம் வித்தியாசம்!, இது கண்டிப்பாக சாத்தியமில்லை என்று எனக்கு புரிய, ஏன் என்று கேட்டேன்?

அந்த பெண் நான் எதோ விமானத்தை முன்பின் பார்த்திராத போல் நீங்கள் வைத்திருக்கும் வகுப்பில் தற்போது இருக்கை காலி இல்லை என்பதால், நான் உங்களுக்கு வேறு வகுப்பில் இருக்கை தருகிறேன் என்று சொல்ல, நானும் "(C) Economy Class, (B) Business / Executive Class, (A) First Class" இதில் எந்த வகுப்பில் தருகிறீர்கள் என்று கேட்க? அவரிடம் பதில் எதுவுமில்லை, சிறிது நேரம் என்னை காக்க வைத்து விட்டு திரும்ப அவர் சொன்ன பதில் என் கோவத்தை இன்னும் அதிகமாகியது.



அதாவது தற்போது நான் வைத்திருக்கும் அதே வகுப்பில் பயண தேதியை இரண்டுநாள் தள்ளி மாற்றி தர இந்த கட்டணமாம், காரணம் நான் கேட்கும் தேதியில் தற்போது இருக்கை காலி இல்லையாம்.

அந்த பெண்ணிடம் பேசிக்கொண்டே என் கணினியில் எனக்கு வேண்டிய தேதியில் புதிதாக சீட்டு வாங்க விலையை பார்த்தல், தற்போது நான் வைத்திருக்கும் சீட்டின் விலையை விட வெறும் நான்காயிரம் மட்டுமே வித்தியாசம் வருகிறது, அத்தனை இருக்கையும் காலியாக இருக்கிறது.

ஏன் என்று மீண்டும் அந்த பெண்ணிடம் கேட்க, மீண்டும் என்னை காத்திருக்க சொல்லிவிட்டு சற்று நேரம் கழித்து வந்தவர், ஏதேதோ சம்மந்தம் இல்லாமல் விளக்கம் தந்தார்?

நான் முடிவாக சரி, இதோ எனக்கு வேண்டிய தேதியில் இணையம் மூலம் நான் ஒரு புதிய சீட்டை வங்கி விட்டேன், அதனால் என் பழைய சீட்டை நான் ரத்து செய்து விடுகிறேன்.

ரத்து செய்ய ஆயிரத்து எண்ணூறு ரூபாய் அபராதம் வரும் என்று எனக்கு தெரியும், அதனால் மீத தொகையை என் வங்கி கணக்குக்கு அனுப்ப சொன்னேன்.

பதினாராயிரம் கொடுத்து தேதியை மாற்றாமல் இப்படி பழைய சீட்டை ரத்து செய்து புது சீட்டு வாங்குவதன் மூலம் நான் ஒன்பதாயிரம் சேமிக்க முடியும் என்று சொன்னேன்.

மீண்டும் என்னை காத்திருக்க சொல்லிவிட்டு சற்று நேரம் கழித்து வந்தவர், உங்கள் பழைய சீட்டை ரத்து செய்ய கட்டணம் ஆயிரத்து எண்ணூறு ரூபாய் அல்ல ஐய்யாயிரத்து ஐநூறு ரூபாய் என்று சொல்ல எனக்கு உச்சிக்கு போய் விட்டது கோபம்.

என் பழைய சீட்டில் ரத்து செய்ய கட்டணம் ஆயிரத்து எண்ணூறு ரூபாய் என்று போட்டு இருக்கிறது, இப்போது நீங்கள் ஐய்யாயிரத்து ஐநூறு ரூபாய் என்று சொன்னால்! அதற்க்கான எழுத்து விளக்கம் எங்கே இந்த சீட்டில் இருக்கிறது என்று கேட்க? அவரிடம் பதில் எதுவும் இல்லை.

இந்த முறை நானே அவரிடம் மீண்டும் என்னை காத்திருக்க சொல்லாமல், நீங்கள் பேசும் நபரிடம் அல்லது உங்கள் மேலாளரிடம் எனக்கு தொடர்பு கொடுத்தால் நானே நேரடியாக அவரிடம் விளக்கம் கேட்பேன் என்று சொல்ல, அதற்கும் அவர் தயாராக இல்லை?



சரி, இப்போது நீங்கள் எனக்கு இந்த சீட்டை ரத்து செய்ய ஐய்யாயிரத்து ஐநூறு ரூபாய் என்று எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்ப முடியுமா? என்று கேட்டால் அதற்கும் அவர் தயாராக இல்லை?

நான் கடைசியாக சொன்னது, நீங்கள் வாங்கும் கூடுதல் பணத்திற்காக நான் பேசவில்லை, இது முறையாக அரசாங்கத்தின் கணக்கில் வருவதாய் இருந்தால், நீங்கள் இப்படி எந்த எழுத்து விளக்கமும் தராமல் பணம் எடுக்க தேவை இல்லை?

மேலும் எனக்கு இந்த பணத்தால் பெரிய நஷ்டம் ஒன்றும் வந்து விட போவதில்லை, ஆனால் தின கூலி வேலைக்கு குடும்பத்தை நாட்டை விட்டு சென்று உழைக்கும் எத்தனயோ மக்களுக்கு இது மிக பெரிய தொகையல்லவா? இதற்காகத்தானே அவர்கள் இனம் மொழி தெரியாத நாட்டில் கஷ்டப்படுகிறார்கள்? அதனால்தான் கேட்டேன்.

எப்படியோ நீங்கள் எடுக்க வேண்டிய தொகையை எடுத்து விட்டு மீதத்தை அனுப்பவும், ஆனால் அப்போதும் நான் என்னிடம் இருக்கும் பழைய சீட்டையும் நீங்கள் திரும்ப அனுப்பிய தொகையையும் கொண்டு உங்கள் தலைமை அலுவலகத்திலும் மற்றும் இது சம்மந்த பட்ட துறையிலும் புகார் செய்வேன் என்று சொல்லிவிட்டு பதிலை எதிர்பார்க்காமல் வைத்து விட்டேன்.

விமான பயணிகள் ஒரு விமான சீட்டை வாங்கும் போது அதில் உள்ள அத்தனை விதிமுறைகளை பார்த்து வாங்கவும், அதே போல பயணத்தை ரத்து அல்லது மாற்றி அமைக்கும் போது, அவர்கள் எழுத்தில் கொடுத்துள்ள அந்த அபராத தொகைக்கு மேலே போகும் பட்சத்தில் அவர்களிடம் எழுத்து வடிவில் கேளுங்கள். இனம், மொழி தெரியாத நாடு என்று பயம் வேண்டாம், தேவை பட்டால் சம்மந்த பட்ட துறையில் புகார் கொடுக்கவும் அஞ்ச வேண்டாம்.

மொபைல் போன் போல இது அனைவரின் பயன்பாட்டில் இல்லை என்றாலும், ஏமாற்றும் தொகையின் அளவு (3700 ரூபாய்) மிக பெரியது இல்லையா, கவனிக்காமல் நேரடியாக தேதியை மட்டும் நான் மாற்றியிருந்தால் இன்னும் அதிகமாக நஷ்டமாகியிருக்கும்.

மேலும் கணக்கில் வராமல் எழுத்தில் தராமல் எடுக்கும் ஒவ்வொரு பைசாவுமே ஊழல்தானே? அதை சிந்தித்து பார்த்து செயல் படுங்கள் நண்பர்களே.

நன்றி!.

Thursday, November 25, 2010

தென்கொரியா போர் பதட்டம்!

எப்போதும் போலத்தான் அன்று மதியமும் இலையுதிர் கால குளிரில் நடுங்காமல் இருக்க அலுவலக ஹீட்டர் எங்களை சூடேற்றிக்கொண்டு இருக்க, மதிய உணவாக உள்ளே சென்ற கோழியும் சிலபல இலைதழைகளும் எங்கள் கண்களை சொருக வைத்துக்கொண்டு இருந்தாலும், நாங்கள் அலுவலக கணினியை வெறித்துக்கொண்டு இருந்தோம்.

திடீரென்று ஒரு பலத்த சத்தம் கட்டடங்கள் ஆடுவதை போல உணர்வு, எங்கும் ஒரே தீ மற்றும் புகை, மக்கள் பதட்டமாக வட கொரியா குண்டு போடுகிறது ஓடி பதுங்குங்கள் என்று கத்தியபடி பதுங்கு குழியை தேடி இங்கும் அங்கும் ஓடும் ஒரு சில நிமிடங்களில் இன்னும் பல குண்டுகள் வந்து விழுகின்றன.

இந்நிலையில் உள்ளே நுழைந்த தென் கொரிய ராணுவ ஹெலிகாப்டர்கள் பதிலுக்கு தாக்க எங்கும் ஒரே குண்டு மழை...!

எனக்கும் வேறு வழி எதுவும் தெரியவில்லை, உடனே குடையை விரித்துக்கொண்டு எடுத்தேன் பாருங்க ஓட்டம்...!

என்ன புரியலையா?

அதான் ஒரே குண்டு "மழைன்னு" சொன்னோம்ல :-)...!

சரி, சரி முறைக்க வேண்டாம், வெட்டி பில்டப்பை முடிந்து கொண்டு விசையத்துக்கு வருவோம்.


கடந்த சில நாட்களாகவே இது போல் ஏதாவது நடக்கக்கூடும் என்று எதிர் பார்த்த தென்கொரிய அரசு மிக சரியாக பாதுகாப்பு முறைகளை தயார் நிலையில் வைத்திருந்தது, போர் கால அவசர நடவடிக்கைகள், பொது மக்கள் தற்பாதுகாப்பு முறைகள் போன்றவை எஸ்.எம்.எஸ் மூலம் அவப்போது வந்த வண்ணம் இருந்தது.

உலக நாடுகள் குறிப்பாக ஜப்பான், ரஷ்யா மற்றும் அமெரிக்கா மிக உன்னிப்பாக இந்த விசையத்தை நேரடியாக கண்காணிப்பதால் அப்படி எதுவும் நடக்காது என்று இருந்த மதிய வேலை, வடகொரியா தன் சேட்டையை துணிந்து காட்டிவிட்டது.

தென்கொரியாவின் இயாங்பியாங் தீவில் ஐம்பது முறை F-16 பீரங்கி குண்டுகளை வீசி திடீர் தக்குதல் நடத்த, அந்த தீவில் இருந்த தென்கொரியாவின் ராணுவ தரப்பில் இருந்து எம்பது ரவுண்டு துப்பாக்கி சூடு தற்காப்புக்காக நடத்த பட்டது.

அதன் பின் இரு நாடுகளும் முதலில் தாக்குதலை தாங்கள் துவக்கவில்லை என்று அறிவித்து இருக்கிறது.



வடகொரியா தென்கொரியா எல்லையை நிலத்திலும் நீரிலும் (DMZ) பிரித்தது முதல் இருநாடுகளுக்கும் பிரச்னை இருந்து கொண்டுதான் இருக்கிறது, இந்த நிலையில் இந்த தக்குதல் போர் வரும் சூழ்நிலையை கொடுத்திருப்பதால், சீனா, ரஷ்யா, ஜப்பான் நாடுகள் இந்த பதட்டத்தைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன, அமெரிக்கா தென்கொரியாவுக்கு ஆதரவாகப் போராடும் என்று அறிவித்து இருக்கிறது.

தென்கொரியா அரசு தரப்பில் இருந்து வடகொரியா தன் செயலை உடனடியாக நிறுத்திக் கொள்ளா விட்டால் மிக மோசமான ஒரு சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டி வரும் என்று எச்சரித்து இருக்கிறது.

எனக்கு புரிந்தவரை, உண்மையில் வடகொரியாவின் இந்த தாக்குதலில் அடிப்படை காரணம் என்பது, இந்த தக்குதல் நடந்த தீவில் இருக்கும் தென்கொரிய ராணுவமும் அமெரிக்கா ராணுவமும் கூட்டுப் பயிற்சி மேற்கொள்ளும் திட்டதின் படி அமெரிக்கா விமானம்தாங்கி போர்க்கப்பல் இங்கு வந்துள்ளது, இதற்கான எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் வடகொரியா செயல் பட்டு இருக்கிறது, காரணம் வடகொரியா மீது அமெரிக்கா பல பொருளாதாரத் தடைகளை விதித்தது இருக்கிறது.



மேலும் கடந்த மார்ச் மாதம் தென்கொரியாவின் போர்க் கப்பல் ஒன்று, வடகொரிய கடல் எல்லைக்கருகில் மர்மமான முறையில் மூழ்கடிக்கப்பட்டு அந்த கப்பலில் இருந்த 49 வீரர்களும் பலியானார்கள். இது வடகொரியாவின் செயல் என்றும் நீர்மூழ்கி குண்டு மூலம் தன் கப்பலை வடகொரியா மூழ்கடித்ததாக தென்கொரிய விசாரணைக் குழு அறிக்கை கடந்த மே மாதம் வடகொரியாவை குற்றம் சாட்டியது போன்றவைதான் காரணம்.

தக்குதல் நடந்த தீவில் வசிக்கும் மக்களோடு தென்கொரியவின் ராணுவ முகாம் இருக்கிறது, குண்டு வீச்சுக்குப் பின் பொது மக்கள் உடனடியாக ராணுவ பாதுகாப்பு கட்டுபாட்டுக்குள் கொண்டு வரப்பட்டனர், காயம் பட்ட மக்கள் சிகிச்சைக்காக அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர் மற்றும் தீவில் இருபவர்களுக்கு தேவையான பொருட்கள் தீவுக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது.

தென் கொரியாவின் இரண்டு வீரர்கள் இந்த தாக்குதலில் தங்கள் தாய் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்து வீர மரணம் அடைந்து இருக்கிறார்கள், அவர்களுக்கு நாடெங்கும் அஞ்சலி செலுத்த படுகிறது.

தாக்குதலில் பதிப்படைந்த பகுதியில் ராணுவம், தீயணைப்பு மற்றும் மருத்துவ குழுக்கள் போர்கால சீரமைப்பு நடவடிக்கைகளில் இறங்கி இருக்கின்றன.

தென்கொரிய மக்கள் நாம் இதற்கு சரியான பதிலடி கொடுத்து வடகொரியாவுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் என்று அங்கங்கே வடகொரியாவுக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள், நேற்று இரவுக்கு மேல் சம்பந்த பட்ட துறைகளை தவிர மற்ற இடங்களில் இயல்பு வாழ்கை பாதிக்காமல் தொடர்கிறது.

























இது போராக மாறும் பட்சத்தில் உடனடியாக பாதிக்க படும் ஜப்பான், ரஷ்யா மற்றும் சீனா நாடுகள் இப்படி துரதிர்ஷ்டவசமான சூழ்நிலையை தவிர்த்து இருநாடுகளும் பேச்சுவார்த்தையின் மூலம் பிரச்னையைத் தீர்த்துக் கொள்ளவேண்டும் என கூறியுள்ளன.

இரு நாடுகளின் போக்கையும் உன்னிப்பாகக் கவனித்து வரும் அரசியல் நிபுணர்கள், வடகொரியாவின் அணுகுண்டு தயாரிப்பில் தீவிரம் மற்றும் அரசியல் தலைமை மாற்ற அறிவிப்பு போன்றவற்றால் இப்பிரச்னை இன்னும் தீவிரமடையக் கூடும் என்று கருதுகின்றனர்.





நடப்பதெல்லாம் நன்மைக்கே மற்றும் எல்லா புகழும் இறைவனுக்கே என்ற எண்ணத்தோடு நானும் கவலைகளை விட்டு விட்டு இதை பற்றி பதிவு எழுத வந்து விட்டேன், இதில் என் அனுபவத்தையும் கொஞ்சம் கேளுங்க.

போர் தக்குதல் விசையம் பரவியதும், நம்ம போன் ரொம்ப பிசி, இந்தியா, சிங்கபூர், மலேசியா என்று கோபால் பல்பொடி விளப்பரம் மாதிரி எல்லா பக்கமும் இருந்து அழைப்புகள், அம்மா, அப்பா, நண்பர்கள் என்றும், கிரி போன்று பதிவுலக நண்பர்களும் மாறிமாறி நலம் விசாரிக்க உண்மையில் மனம் லேசாகி விட்டது.

இவ்வளவு பேரை சொல்லிவிட்டு முக்கியமான நம்ம ஆளை சொல்லாமல் விடலாமா?

விசையம் தெரிந்து அவசராக அழைத்த தங்கமணி, என்னா மச்சி ஆரமிச்சிடானுகளா? இவிங்க எப்பவுமே இப்படித்தான், அட விடுங்க பாஸ், இதுக்கெலாம் பயந்தா தொழில் பண்ண முடியுமா?

சரி, சரி, நோட்டு பேனா எல்லாம் ரெடியா இருக்கு, சீக்கிரம் சொல்லுங்க, எங்க எல்லாம் இன்சூரன்ஸ் இருக்கு, எங்கே எல்லாம் இன்வெர்ஸ்மென்ட் இருக்கு, யார் யார் உங்களுக்கு எவ்வளவு தரனும், நீங்க யாருக்காவது தரணுமான்னு, நிறுத்தாம பேசுது என் செல்லம்?

எவ்வளவு கேள்வி? என்ன ஒரு அக்கறைன்னு, நான் அப்டியே ஷாக் ஆகி சொன்னேன்?முடிவே ஆகிடுச்சா? நான் வேணும்னா ஒரு மாப்ளையும் பார்த்து சொல்லவான்னு கேட்டா? அதுக்கும் அசரலையே!

ஐய்யய்யோ...திரும்பவும் மொதல்ல இருந்தாதாதாதா...மீ பாவம்ன்னு சொல்லுது அம்மிணி, ஐய்யோ ஐயோ...இன்னும் சின்ன புள்ளையாவே இருக்கு.

நன்றி.

Tuesday, November 23, 2010

கலையாத கனவு!

"இருபத்தி ஒரு வயதிற்கு உட்பட்டவர்கள்" இந்த பதிவை தவிர்க்கவும்.

மின் தடையான பவுர்ணமி இரவில் பாட்டு கேட்பதே சுகம்தான், அதிலும் லேசாக மழை தூறினால்!, ஜன்னலை திறந்து வைத்துக்கொண்டு அந்த மழை வாசத்தோடு பாடல் கேட்கும் சந்தோசம் சொல்லாவா வேண்டும்!.

எங்கே நான் போனாலும் என் வாழ்வில் என்றும்...!, உன் நிழலில் இளைப்பார வருவேன் கண்ணே...!

மரணம்தான் வந்தாலும் பூ செண்டு தந்து...!, உன் மடியில் தலைசாய்த்து இறப்பேன் பெண்ணேணேணே...!


பாடல் ஓடிக்கொண்டு இருந்தாலும், ஏனோ தெரியவில்லை, என்றுமே இல்லாமல் இன்று மட்டும் உடல் லேசாக இருந்தது, மனம் எதோ சொல்ல முடியாத ஒரு உணர்வில் மிதந்தது, சுற்றி இருந்த எதுவுமே தெரியாத ஒரு இருட்டு ஆனாலும் அந்த பவுர்ணமி இரவின் தனிமை எனக்கு ஆனந்தமாகவே இருந்தது.



ஏதோ சத்தம் கேட்டு திரும்பினேன், கதவை திறந்து கொண்டு கையில் மெழுகுவர்த்தியுடன் உள்ளே வந்த அவளை பார்த்ததும் ஒரு நிமிடம் என் மொத்த உடலும் சிலிர்த்து மூச்சு முட்டியது.

என் வாசல் கதவின் பின்புறம் எப்படி குளியலரை போல் தெரிகிறது என்று ஒரு வினாடி யோசித்தாலும்!, அந்த மெழுகு வெளிச்சத்தில் செதுக்கி வைத்த சிலை போல் மின்னிய அவளின் அழகு என் கவனத்தை அவள் மேல் திசை திருப்பியது.

குளித்து முடித்து உடலை சுற்றிய துண்டுடன் இருக்கிறாள், சுருண்ட அவள் முடிகளின் நுனியில் இன்னும் நீர் துளிகள் சொட்டிகொண்டு இருக்கிறது, அவள் உடல் மேல் விழுந்திருந்த நீர் துளிகள் அந்த சிறிய வெளிச்சத்தில் எலுமிச்சை மீது விழுந்த நீர்துளி போல் மின்னியது.

பெரிதாக இருக்கும் அவள் கண்களில் இன்னும் பெரிதாக ஆச்ரியத்தை கொடுத்து, மெதுவாக கேட்டாள் என்ன அப்படி பார்க்கிறாய்! இதற்காதானே ஏங்கினாய் இத்தனை வருடமாய்!, இதோ வந்து விட்டேன்.

இனி "நீ, நான், நாம்" எப்படி வேண்டுமானாலும் விளையாடு என்று சொல்லி சிரிக்கும் போது அவள் கன்னத்தில் விழுந்த குழி என்னை இன்னும் மயக்கினாலும், எனக்கு உடல் தூக்கி வாரி போட்டு அந்த மழை இரவு குளிரையும் தாண்டி குப்பென்று வியர்த்து விட்டது.

அவளை பார்த்து உறைந்து போன மனதுக்கு சட்டென்று பொறி தட்டியதை போல மூளை செய்தியை அனுப்பியது, இந்த நொடியோடு அவளை பார்த்து 5702 நாட்கள் ஆகி விட்டது.ஆம், 15 வருடம், 7 மாதம், 9 நாட்கள்.

ஆனால், அவள் மட்டும் கடைசியாக பார்த்ததை விட இன்னும் இளமையாக, அழகாக, கவர்ச்சியாக இருக்கிறாள்!.

அது சரி, இவள் எப்படி இப்போது இங்கு வந்தாள்?

மின்னல் வெட்டியதை போல பல கேள்விகள் மனதில் தோன்றி வாய் வரை வந்தாலும் சத்தம் மட்டும் வரவே இல்லை!, இன்னும் கொஞ்சம் பேச முயற்சி செய்தால் உள்ளே இருக்கும் உடல் உறுப்புகள் எம்பி வாய் வழியே வந்து விடும் போல ஒரு உணர்வு.

இறுக்கி பிழிவதை போல திடீரென்று என் உடல் ஏன் இத்தனை இருக்கமாகிறது என்று யோசிக்கும் போதே, இன்னும் சிரித்த முகமாய் என்னை நோக்கி அவள் நகர, என் இதய துடிப்பு எனக்கே கேட்கும் அளவு எகிறியது.

ஏய் ஹீரோ!, என்னடா இத்தனை யோசனை என்று கேட்டு என் கையை அவள் தொட்ட வினாடி, அத்தனை எண்ணமும் சிதறி, மீண்டும் உடல் லேசாகி மனம் அவள் மேல் நழுவி விழுந்தது.

எந்த சிந்தனையும் இல்லாமால்அப்படியே என்னை யாரோ தூக்கி செல்வது போல அல்லது காற்றில் மிதப்பது போல நடக்க அவள் இன்னும் நெருக்கமாகி என்னுடல் உரசி நடந்தாள்.

கையில் இருந்த மெழுகுவர்த்தியை சோபாசெட் அருகில் இருந்த மெழுகுவர்த்தி ஸ்டாண்டில் வைக்க, மேலுடை எதுவும் இல்லாமல் இடுப்பில் ஒரு சிறிய துணியை மட்டும் கட்டிய பெண் சிலை கையில் ஒரு குடத்தை தூக்கி பிடித்திருக்கும்படி இத்தனை அழகான ஒரு மெழுகுவர்த்தி ஸ்டாண்டை, என் வீட்டில் இதற்கு முன் பார்த்த நினைவே எனக்கு சுத்தமாக இல்லை.

பக்கவாட்டில் சோபா முழுவதும் கால்களை நீட்டி அமர்ந்த அவள், சிலையாக நான் இங்கிருக்க! அந்த சிலையில் என்ன தேடுகிறாய் என்று என் கையை பிடித்து இழுத்து அவளோடு அமரவைத்தாள்.

அவளுக்கு முன் நான் அமர்திருக்க, பின்னிருந்து கைகளை என் தோளில் போட்டு என் தலையை அவள் மார்போடு சாய்க்க, ஜன்னல் வழியாக முழு நிலவு எங்கள் இருவருக்குமே தெளிவாக தெரிந்தது.

இன்னும் சந்தேகம் தீராமல், நான் தலையை திருப்பி அவள் முகத்தை பார்த்தேன், நிலவும் மெழுகும் கலந்த ஒளியில் அதனை நெருக்கத்தில் அவள் இன்னும் அழகாக தெரிந்தாள்.

எப்படி மறப்பேன் அவள் உடல் வாசம், அதே வாசம், இப்போது இன்னும் அதிகமாய், எதுவும் சொல்ல முடியாமல் அவள் கழுத்தில் என் முகம் புதைய ஆழமாக ஒரு முறை அவளின் வாசத்தை சுவாசித்த பின் மீண்டும் திரும்பி நிலவை பார்க்க தொடங்கி விட்டேன்.

இதை நீ மறந்திருப்பாய் என்று நினைத்தேன்!, இந்த பழக்கத்தை இன்னும் நீ மறக்கவில்லையா என்று சிரித்த படி கேட்டு? என் பதிலுக்காக எதிர்பார்க்காமல் அவளே தொடர்ந்தாள.

இருவரும் இப்படி அமர்ந்து பேசி எந்தனை நாட்கள் இல்லை, இல்லை எத்தனை வருடங்கள் ஆகிவிட்டது என்று பேசிகொண்டே அவள் கைகள் என் மார்பில் விளையாட, அப்போதுதான் நான் ஆடை எதுவும் இல்லாமல் இருப்பதை உணர்ந்தேன்?

எப்போது நான் உடையை கழற்றினேன்? அல்லது இவள் கழற்றினாளா? இது என்ன கனவா? என்று மனம் குழம்பி நான் எழுந்து நிற்க முயற்சித்தாலும், ஏனோ முடியவில்லை.

கல்லூரி நாட்கள் முதல் பழைய நினைவுகள் அத்தனையையும் ஒன்று விடாமல் பேசினாள், அவள் அணைப்பில் இருந்த படி அவள் பேசுவதை கேட்க தோன்றியதே, தவிர எனக்கு எதுவும் பேச வாய் வரவில்லை.

இப்படி அவள் பேசுவதை கேட்பது எப்போதுமே என் விருப்பம் என்பது அவளுக்கும் தெரியும்.

இருவருக்குமே கண்களில் நீர் வடிந்தாலும், இருவருமே சோகமாக இல்லை, சந்தோசமாகவே உணந்தோம், மனமும் உடலும் லேசாக மிதப்பது போல இருக்க, எப்போது, எப்படி கண் மூடினேம் என்றே தெரியவில்லை.

திடீர் என்று நான் கண் விழித்து, இது கனவா என்று தலையை திரும்பி பார்க்க, அதே நேரம் அவளும் கண் முழித்தாள்.

அப்படா...! இது கனவு இல்லை என்று நான் நினைக்கும் போதே, என் உதட்டை அவள் உடதுகளால் லேசாக ஈரமாக்கி விட்டு சொன்னாள்.

என்னமா இங்க கஷ்டமா இருக்கா? சரி, வா படுக்கையில் போய் சாய்வோம் என்றாள்.

அது இரவா பகலா என்றே தெரியாத லேசான வெளிச்சம் கலந்த இருட்டாக இருந்தது, நேரம் பார்க்க தோன்றினாலும், ஏனோ பார்க்காமல் அவளை பின் தொடர்ந்தேன்.

படுகையில் என்னை தள்ளி என் மேல் விழுந்து அழுத்தமாக என் உதட்டில் முத்தமிட்டாள், எனக்கு எதோ புதிதாக பட்டது.

கல்லூரி காலம் முதல் எத்தனையோ நாட்கள் இருவரும் இது போல் சேர்ந்து தூங்கி இருக்கிறோம், எத்தனயோ முத்தங்கள் கொடுத்திருப்பாள், அதில் எல்லாம் ஆழமான அவள் காதல் மட்டுமே தெரியும், ஆனால் இன்றுபோல் எப்போதும் நான் உணர்ந்தது இல்லை.

காரணம் இன்று அவள் நோக்கம் முழுவதும் என் ஆண்மையை தூண்டுவதாய் இருந்தது, இதுவரை இப்படி ஒரு போதும் அவள் நடந்து கொண்டதும் இல்லை, இப்படி நான் யோசிக்கும் ஒரு சில வினாடிகளில் அவள் உதடுகள் என் உடலில் பரவ, நானும் முழுவதும் மனம் மாறி இருந்தேன்.



மனம் மறுக்க சொன்னாலும், ஏனோ புரியவில்லை என்னால் எதுவுமே சொல்ல முடியவில்லை, ஏன் என்றும் புரியவில்லை, எனக்காகவே பிறந்த கன்னி இவள் என்பது புரிந்தாலும், அவள் என்னவோ கலையில் மிக கை தேர்ந்தவளாக என்னை கையாண்டாள் இரவு முழுவதும்.

எத்தனை முறை ஈரமானோம் என்று நினைவில்லை, எழுந்திரிக்க ஏனோ மனமில்லை, போதும் என்ற சொல்லே வராமல் போய்கொண்டே இருந்தது.

இரு ராஜ நாகங்கள் இணைந்தாலும், இப்படி பின்னி பிணைய முடியுமா என்பது சந்தேகம் தான் என்று தோன்றியது.

எனக்கு உண்மையில் இது என்ன உணர்வு என்றே புரியவில்லை? சுகமா, சந்தோசமா இல்லை போதையா என்றே விவரிக்க முடியாத ஒன்றாக இருந்தது, அப்படியே கிடந்தது எப்போது மயங்கி போனேன் என்றே தெரியவில்லை.

ஜில்லென்று காற்று முகத்தில் பட்டு கண் விழிக்கும் போது, எனக்கு முன் அழகாக ஒரு அருவி கொட்டிக்கொண்டு இருக்கிறது சுற்றிலும் பசுமையான அடர்ந்த காடு, அதுவும் மழை அடித்து முடிந்த ஈரமான மரங்கள்.

திரும்பி பார்த்தல் வெற்றுடம்போடு அவள் மரத்தில் சாய்ந்து அமர்திருக்க, அவள் மடியில் நான் படுத்திருக்கிறேன், என்ன பூவென்று தெரியவில்லை, வெண்மையும் ஊதாவும் கலந்த பூவினால் ஒரு மாலை மட்டும் அவள் கழுத்தில் இருக்கிறது.

சட்டென்று எழுந்து, எங்கே இருக்கிறோம் நாம் என்றேன்? எப்படி என்று புரியவில்லை, இப்போது எந்த தடையும் இல்லாமல் பேசமுடிகிறது!.

அவள் கொஞ்சமும் ஆச்சரிய படாமல் சொன்னாள், ஏன் என்னோடு எங்கிருந்தால் என்ன? இந்த இடம் பிடிக்க வில்லையா?

அப்படியல்ல வெற்றுடம்போடு இங்கு என்ன செய்கிறோம்? நட வீட்டிற்கு போவோம் என்றேன்.

அவள் சிரித்த படி சொன்னாள், உனக்கு இன்னும் நேற்று இரவு மயக்கம் தெளியவில்லை, அங்கே பார் என்று கையை காட்டினாள்.

அவள் கை காட்டிய இடத்தில என் படுக்கை அறை தெளிவாக தெரிகிறது, ஆனால் படுகையில் நான்?

ஆடையோடுதான் இருக்கிறேன், ஆனால் நேற்று இரவு நாங்கள் கலைத்தது போலவே படுக்கை மட்டும் கலைந்து கிடக்கிறது.

திகிலோடு திரும்பி அவளிடம் கேட்டேன், எனக்கு என்ன ஆகிவிட்டது?

நான் தான் முதலிலேயே சொன்னேனே, இனி நீ, நான், நாம் என்று சிரித்தாள்.

இல்லை, இல்லை, இங்கு என்ன நடக்கிறது என்று எனக்கு ஒன்றுமே புரியவில்லை!.

அப்படி என்றால் நேற்று நடந்தது உண்மையில்லையா?

அல்லது இன்று நான் இறந்து விட்டேனா?

அல்லது நீ என்னை கொன்று விட்டாயா?

இப்போதும் தன் புன்னகை மாறாமல் பதில் சொன்னாள்.

என் காதலை நானே எப்படி கொல்ல முடியும்?

நேற்று நடந்தது நிஜம் அதில் எந்த மாற்றமும் இல்லை.

ஆனால் நீ இன்று இறந்து விட்டதாக நினைப்பது நிஜமல்ல, ஏன் என்றால்...!

நேற்று இரவு என்னை பார்த்தபோதே நீ எனக்காக மீண்டும் பிறந்து விட்டாய், அதை நீ இறப்பென்று நினைக்கிறாய்!.

வா, நம் வாழ்கையை வாழ்வோம் என்று என் கை பிடித்து அழைத்து சென்றாள்.

இப்போதுதான் எனக்கு புரிகிறது அவள் கழுத்தில் கிடக்கும் பூ மாலையும், நேற்றிரவு நான் கேட்டு கொண்டிருந்த பாடலின் அர்த்தமும்.

இனி இந்த கனவு கலையாது என்று தெளிவான என் மனதில் இப்போது துக்கமோ, ஆடை இல்லை என்ற கூச்சமோ இல்லை, அவளை என்னோடு நெருக்கி அணைத்து நடக்க தொடங்கினேன், அவள் தன் நாவினால் தன் உதடுகளை ஈரபடுத்தி கொண்டே என்னை இன்னும் நெருங்கினாள்.

முற்றும்.

Wednesday, October 27, 2010

விளையாட்டு பொம்மை விளையாட்டல்ல!

இந்தியா என் தாய் நாடு இந்தியர் யாவரும் என் உடன் பிறந்தோர் ...!

என்னாங்க எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கா? உண்மையில் இன்றைய வாழ்கை முறை அப்படித்தான் பரபரப்பாக போய் கொண்டு இருக்கிறது.

ஆனால், கொடுமை என்னவென்றால் எதற்காக நம் வாழ்கையை இத்தனை பரபரப்பாக மாற்றிக்கொண்டோம் என்ற அடிப்படை காரணத்தையே இந்த பரபரப்பில் மறந்து விடுகிறோம்.

பண்டைய காலத்தில் ஒரு நாட்டின் மீது படை எடுத்து அந்த நாட்டின் வளத்தை மற்றும் இடத்தை தன் நாடாக மாற்றி கொண்டார்கள், மக்கள் அடிமைகளாக்க பட்டார்கள்.

நாளைடைவில் நாகரீகம் வளர, கொள்கைகள் ஒத்து வராத நாடுகளுக்கு நடுவில் போர் வந்தது, அதை சரி படுத்த உலக சபைகள் வந்ததும், போர் என்று சண்டை போடுவது குறைந்தாலும், தங்கள் நாட்டை முன்னிலை படுத்த பல முயற்சிகள் கையாளப்பட்டன.



சோவியத் ரஷ்யா இருக்கும் வரை உலகம் இரு வல்லரசு நாடுகளை பார்க்கவேண்டும் என்ற ஒரே காரணத்தால் சோவியத் துண்டானது நாம் அறிந்த கதை.

இதில் வல்லரசு நாடுகளுக்கும் அதன் ஜால்ரா நாடுகளுக்கும் ஒரு பிரச்னையும் கிடையாது, ஏழை நாடுகளுக்கு "சோறு கண்ட இடம் சொர்க்கம் என்பது போல" எவனாவது தங்களை அரவணைக்கும் பட்சத்தில் எந்த கவலையும் கிடையாது.

இரண்டும் இல்லாமல் நடுவில் இருக்கும் அல்லது வளர்ந்து வரும் வல்லரசாகும் வாய்பிருக்கும் நாடுகள் படும் அவஸ்தைதான் மிக கொடுமையானது.

இதெல்லாம் தெரிந்த கதைதானே இதை ஏன் இங்கு சொல்கிறான் என்று நினைக்க வேண்டாம்.

ஒரு பக்கம் தீவிரவாதம், உலகின் தலை சிறந்த சுற்றுலாத்தளம் சிம்லா, ஜம்மு, காஸ்மீர் என்று அத்தனையும் பாகிஸ்தான் தீவிரவாத போரினால் ராணுவதலமாக மட்டுமே உள்ளது.

இந்த பக்கம் அருணாச்சல பிரதேசம் எங்களுடையது என்று சீனா சொந்தம் கொண்டாடி குடைச்சல் கொடுகிறது, கீழே இலங்கை பிரச்னையை வைத்து உள்நாட்டில் அரசியல் நடக்கிறது.

இப்படி எல்லைகளில் பிரச்சனை மட்டும் போதாது என்று, மும்பை, கல்கத்தா கோவை என்று தொழில் நகரங்களில் குண்டு வெடிப்பு தூண்டல் என்றும் அதை சரி கட்ட உலகவங்கி கடன் என்றும், வரலாற்றுப்படி இந்தியா ஒரு "தீபகர்ப்பம்" என்பதை நினைவில் கொண்டு வருகிறார்கள்.

அதாங்க, மூன்று பக்கம் பிரச்சனையும் ஒரு பக்கம் கடனாலும் சூழப்பட்டு இருக்கிறதல்லவா!.

இந்த நிலையில் நாமோ வியாபாரம் என்ற பெயரில் வந்து நூற்றுகணக்கான ஆண்டுகள் நம் நாட்டை ஆண்ட மாவைத்தான் இன்னும் அரைத்துக்கொண்டு இருக்கிறோம்.

ஆனால், உலகம் இன்று போர் இல்லாமல், வியாபாரிகளே வராமல் வியாபார பொருட்கள் மட்டும் வந்து நாட்டை அடிமை படுத்தும் முயற்சியில் அதி வேகமாக எங்கோ போய் கொண்டு இருக்கிறது!.

என்ன சொல்கிறேன் என்று புரியவில்லையா? சமீபத்தில் அனைவரும் அறிந்த சில செய்திகளில் தலைப்பை மட்டும் பார்ப்போம்.

உடைக்க வந்த கப்பல் கழிவு மற்றும் நச்சு பொருட்களுடன் வந்து நாட்டை குப்பை தொட்டியாக்கும் முயற்சி.

இயற்கை விவசாயத்தை கெடுக்கும் நோக்கத்தில் இறக்குமதியாகும் ஒட்டு அல்லது செயற்கை விதைகள்.

இறக்குமதி செய்யப்பட்ட குழந்தைகள் பால் பவுடரில் கலப்படம் அதனால் குழந்தைகள் உயிருக்கு ஆபத்து.

இறக்குமதி ரேடியோவில் உள்நாட்டு அரசாங்க வயர்லெஸ் பேச்சை கேட்க முடிகிறது.

இவை எல்லாம் நம்மை அல்லது நம் நாட்டை உடனே பாதிக்காவிட்டாலும் மெதுவாக கொல்லும் விஷம் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

சும்மா, ஒரு உதாரணத்துக்காக சொல்ல வேண்டும் என்றால் உள்நாட்டில் கேட்கும் ரகசிய அலைகளை அல்லது இணையத்தில் இருக்கும் அவர்கள் தயாரிப்பு கணினி நாம் செய்யும் தகவல் பரிமாற்றத்தையோ சேகரித்து அவர்களுக்கு அனுப்பும் படி வடிவமைப்பது என்ன சிரமமா?

உள்நாட்டில் தயாரிக்க முடியாத செயற்கை விதைகளை குறைந்த விலையில் இன்று கொடுத்து, நம் இயற்கை விவசாயத்தை மெதுவாக அழித்து, பின் நம் நாட்டில் என்ன அல்லது எவ்வளவு விதைக்க வேண்டும் என்பதையும் அதன் விலையையும் அவர்கள் முடிவு செய்யும் படி, மீண்டும் நம்மை வணிக முறையில் அடிமை படுத்தும் ஒரு முயற்சியாகத்தான் இவை அனைத்தும் எனக்கு தோன்றுகிறது.

அது சரி, அப்படி என்றால் அரசு என்ன செய்கிறது அத்தனையையும் தடை செய்ய வேண்டியதுதானே என்று ஒரு கேள்வி இங்கு பொதுவாக வரும், அந்த காரணத்தை புரிந்து கொள்ளவே வல்லரசுகளின் தூண்டுதலில் நம் அண்டை வீட்டுகாரர்கள் கொடுக்கும் "தீபகர்ப்ப" குடைச்சல்களை மேலே சொன்னேன்.

ஒரு பக்கம் உள்நாட்டு ரியல் எஸ்டேட் தேச துரோகிகள் விளை நிலம் முதல் புதை (சுடுகாடு) நிலம் வரை உருமாற்றி விற்று விடுகிறார்கள், மீதம் இருப்பதையும் வெளிநாட்டு கலப்பு விவசாயத்தால் அடிமை படுத்த முயற்சி நடக்கிறது மற்றும் நம் பாரம்பரிய சொந்த மருந்து, மூலிகைகளின் காப்புரிமையை வேறு நாடுகள் வைத்திருகின்றன.

இவை அனைத்தும் கண்டிப்பாக நாளை நம்மை அல்லது நம் சந்ததியை, நம் நாட்டை பாதிக்க போகிற விசையங்கள் தான்.

இதில் இன்று நம் உடனடி கவனம் செலுத்த வேண்டிய, நடப்பில் நம்மை அறியாமலே நம் வருங்கால சந்ததியை பாதித்து கொண்டு இருக்கும் ஒரு விசையம் இருக்கிறது என்றால் அது மலிவு விலையில் சீனாவில் இருந்து இறக்குமதியாகும் விளையாட்டு பொருட்கள்தான்.

சமீபத்தில் ஆசியாவில் பல முன்னணி நாடுகள் இதை பற்றி எச்சரித்து, பலமாக சோதித்து பல கப்பல் பொருட்களை தடை செய்து திருப்பி அனுப்பி இருக்கின்றன.

கண்ணை கவரும் அடர் பளீர் நிறத்தில் இருக்கும் இந்த பிளாஸ்டிக் பொருட்கள் மெதுவாக இருக்கவும், பளபளப்பு குறையாமல் இருக்கவும், பொம்மைகளின் முடிகள் உண்மையான முடியை போலவும், மெதுவாகவும் தோன்ற கலக்கப்படும் ரசாயன நச்சு பொருட்களின் அளவு அதிகமாக இருப்பதே இதன் அடிப்படை காரணம் என்று கண்டறியப்பட்டு இருக்கிறது.



பொதுவாகவே குழந்தைகள் எந்த ஒரு பொருளையும் வாயில் வைக்கும் பழக்கம் கொண்டவர்கள், அதை அதிகமாக கண்டிக்கும் பட்சத்தில் அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாக்க படுகிறார்கள் என்று குழந்தைகள் நல மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

இந்த நிலையில் இத்தகைய பொம்மைகளை அவர்கள் வாயில் வைக்கும் போது உள்ளே செல்லும் ரசாயனமமோ, முடியோ அல்லது வேறு பொருட்களோ குழந்தைகளை அதி தீவிரமாக பாதிக்கிறது என்று தெரியுமா உங்களுக்கு?

உங்கள் வீட்டில் குழந்தைகள் இருக்கும் பட்சத்தில் உங்கள் குடும்ப நல மருத்துவரிடம் இதனால் என்னென்ன பாதிப்புகள் குழந்தைகளுக்கு வரும் என்று ஒரு முறையாவது உங்கள் நேரத்தை ஒதுக்கி கேட்டு பாருங்கள், நீங்கள் எல்லை இல்லா அதிர்ச்சி அடைவது உறுதி.

ஆம், உயிரே பாதிக்கும் அளவு கூட இந்த விசையம் குழந்தைகளை பாதிக்கலாம்.

இந்த இடத்தில மீண்டும் இந்த பதிவின் முதல் வரியை நினைவு படுத்துகிறேன், நாம் இத்தனை பரபரப்பாக உயிரை கொடுத்து உழைப்பது யாருக்கு நாளை நம் சந்ததி வளமாக வாழத்தானே?

அப்படி இருக்க, நாமே இத்தகைய பொருட்களை வாங்கி தருவது, நம் சொந்த சம்பாத்தியத்தில் சொந்த குழந்தைக்கு விஷம் வாங்கி தருவது போலதான் என்பது என் கருத்து.

இதை நேரடியாக நாடு தடை செய்வதில் இருக்கும் "தீபகர்ப்ப" பக்க விளைவுகளை நாம் அறிவோம், ஆனாலும் இதை தடுக்க நாம் ஏதாவது செய்ய வேண்டும் அல்லவா?

இதை பற்றி நான் யோசித்ததில் எனக்கு கிடைத்த ஒரு வழி இதுதான்.

எப்படி இருந்தாலும் சில்லறை வியாபார பொருட்கள் என்பது பயன்பாட்டு சந்தையை மற்றும் அந்த சந்தையின் பண பலத்தை பொறுத்துதான் ஒரு நாட்டில் நுழைக்க படுகிறது.

இத்தகைய பொருட்களின் வெற்றியும் தோல்வியும் அந்த பொருளுக்கு சந்தையில் கிடைக்கும் வரவேற்பு மற்றும் விற்பனையை பொறுத்துதான் தீர்மானிக்க படுகிறது.

அப்படி இருக்க, விலை கொடுக்கும் நான் ஏன் எனக்கு என்ன வேண்டும் என்பதை தீர்மானிக்க கூடாது?

விலை சற்று அதிகமாக கொடுத்தாலும் அது என் குழந்தைகளின் நலனுக்கு என்று நினைக்கும் போது, என் குழந்தையின் உயிரை, உடல் நலத்தை விட அந்த கூடுதல் தொகை ஒன்றும் எனக்கு முக்கியமாக படவில்லை.

அதனால் எந்த ஒரு பொருளையும் வாங்கும் முன் அது பொம்மையோ கேமிராவோ கணினியோ, முதலில் நான் கேட்பது எந்த நாட்டு தயாரிப்பு என்பதுதான், சர்ச்சைக்கு மற்றும் சந்தேகத்துக்கு இடமாகும் சீன பொருட்களை கண்டிப்பாக நான் வாங்குவது இல்லை.

சிங்கப்பூர், ஜப்பான், தென்கொரியா போன்ற மக்கள் நலனில் அக்கறை கொண்ட நல்ல தரமான நாடுகளால் தயாரிக்க, அங்கீகரிக்க பட்ட அல்லது பாரம்பரிய இந்திய தயாரிப்பில் புகழ் பெற்ற நிறுவனங்களின் பொருட்களையே வாங்குகிறேன

முதலில் நான் இந்த கொள்கையை கடைபிடிக்க துவங்கிய போது என்னை வித்தியாசமாக பார்த்தாலும், என் குடும்பமும் நண்பர்களும் இதன் பலனை அறிந்து இப்போது இதே போல் பொருட்களை வாங்க துவங்கி உள்ளார்கள்.



நம் தாய்நாட்டுக்கு உடனடி தேவையான தனிமனித சுதேசியை பற்றி என் கருத்தை முன்பே "அக்காமாலாவையும் கப்சியையும்" விடுங்கையா!" பதிவில் எழுதி இருந்தேன், இதுவும் அதை போல ஒன்று தான்.

நீங்கள் தெருவில் வாங்கும் ஒரு ரூபாய் பொம்மை முதல் லட்சத்தில் வாங்கும் ரேடியோ, கணினிவரை முதலில் எந்த நாட்டு தயாரிப்பு என்று பாருங்கள்.

தயாரிப்பு நாட்டு விபரம் இல்லாத பொருட்களை அல்லது பிரச்சனைக்குரிய சீன தயாரிப்பை வாங்காமல் போவதோடு மட்டும் இல்லாமல், தயாரிப்பு நாட்டு பெயர் இல்லாத அல்லது இந்த நாட்டு தயாரிப்பு என்ற காரணத்தால் தான் மட்டுமே இதை வாங்கவில்லை என்பதை அந்த விற்பனையாளரிடம் மறக்காமல் சொல்லுங்கள்.

கூடியவரை உள்ளாட்டு தயாரிப்பை வாங்குவோம் அல்லது அந்தந்த நாட்டு நேரடி தயாரிப்பை மட்டும் கேட்டு வாங்குவோம், "சோனி" என்றால் ஜப்பான் "சாம்சங்" என்றால் தென்கொரியா என்று ஒரு நாட்டின் நேரடி தயாரிப்பை சற்று விலையில் அதிகமானாலும் நலம் கருதி வாங்குவோம்.

சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால், நீங்கள் வேர்கடலையை விலையாக கொடுக்கும் பட்சத்தில் உங்களுக்கு "குரங்குதான்" கிடைக்கும், உங்கள் தேவை "டெடிபீர்" என்றால் நீங்கள் முத்திரி பருப்பைத்தான் விலையாக கொடுக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்திருங்கள்.

இப்படி ஒவ்வொருவரும் துவங்கி அவர்கள் குடும்பம் நண்பர்கள் அவர்களை தொடந்து அவர்கள் குடும்பம் என்று இது சற்று மெதுவாக பரவினாலும் நமக்கும் நம் நாட்டுக்கும் நலம் கிடைப்பது என்னவோ உறுதி.

சற்று சிந்தித்து பாருங்கள் விற்காத அல்லது மக்கள் விரும்பாத பொருட்களை எந்த நிறுவனமும் வாங்க போவதில்லை, விற்பனை ஆகாத பொருட்களை தொடர்ந்து இறக்குமதி அல்லது உற்பத்தி செய்யவும் போவதில்லை.

நாடு சட்டம் அரசாங்கம் என்று அனைத்தும் மேலிருந்து தான் வரவேண்டும் என்று இல்லாமல், நம் நலம் மற்றும் நாட்டின் நலம் கருதி ஒரு நல்ல குடிமகன் என்ற முறையில் இப்படி கீழே இருந்து கூட நாட்டு நலனை காக்க முடியும் (Reverse Mapping) .

நன்றி, மீண்டும் சந்திப்போம்!.

Wednesday, October 13, 2010

"பதிவு" எனப்படுவது யாதெனில்...!

தமிழ் வானொலி கலந்துரையாடல் ஒன்றில் சமீபத்தில் கேட்ட " தமிழ் மொழிபெயர்ப்பு சொல்லும், உருவாக்க பட்ட சொல்லும்" எனும் செய்தியில் "வலைப்பூ" என்று மொழிபெயர்க்க பட்ட தமிழ் சொல்லைவிட, "பதிவு" என்று உருவாக்க பட்ட சொல்லே "ப்ளாக்" என்பதை குறிக்கும் சரியான சொல்லாகும், காரணம் நம் எண்ணங்களை, நடவடிக்கைகளை நம் சொந்த கருத்துக்கள் கொண்டு இணையத்தில் பதிவதே "ப்ளாக்" என்று எடுத்து சொன்னார்கள்.

ஆரம்பத்தில் "கம்ப்யூட்டர்" என்பதை கூட "கணிப்பொறி" என்று மொழிபெயர்க்க பட்டு பின் "கணினி" என்று ஒரு சொல் உருவாக்க படும் போது "கணினி" என்று சொல்லுக்கு எதிர்ப்பு வந்தாலும், பின் அதுவே சரியான வார்த்தையாக ஏற்றுக்கொள்ள பட்டது, அதே போல் "வலைப்பூ" என்பதைவிட "பதிவு" என்ற சொல் விரைவில் ஏற்றுக்கொள்ளபட்டு அதிகம் பயன்படுத்த படும் என்று முடிந்தது அந்த நிகழ்ச்சி.

எனக்கும் இது சரி என்று பட, இனி "பதிவு" என்ற சொல்லை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று நினைத்துக்கொண்டு இருக்கும் போது, என் மனதில் வேறு சில எண்ணங்கள் தோன்ற!, அந்த எண்ணங்களை இங்கு பதிவதே என் நோக்கம்.



பொதுவாகவே பதிவு எழுதும் விசையத்தில் நான் அவ்வளவாக அதிக நேரம் செலுத்துவதில்லை, காரணம் இது என் தொழிலோ, குடும்பமோ அல்ல. பதிவு எழுதுவது என்பது என் தனிப்பட்ட பொழுதுபோக்கு மட்டுமே.

ஆகவே வேறு எந்த வேலைகளும் பாதிக்காத என் ஓய்வு நேரத்தில் கொஞ்சத்தை பதிவுக்காக ஒதுக்குவது என் வழக்கம்.

அதனால்தான் தொடர்ந்து என் பதிவுகளை படித்து மறக்காமல் தங்கள் கருத்துக்களை சொல்லும் நண்பர்கள் பதிவுகளை கூட என்னால் தொடர்ந்து படித்து கருத்து சொல்ல முடிவதில்லை, ஒட்டு போடுவது மிக எளிது, ஆனால் பதிவை முழுவதும் படிக்காமல் கருத்து சொல்ல நான் நினைப்பதில்லை.

சுருக்கமாக முன்பு ஒரு பதிவில் "கிரி" சொன்னது போல, பதிவை படிக்காமல் கும்மி பின்னூட்டம் போடுவதைவிட, பின்னூட்டமே கொடுக்காமல் இருப்பது மேல் என்று நினைப்பவன் நான்.

பொதுவாக நான் யாருடைய பெயரையும் என் பதிவுகளில் அவர்கள் அனுமதி இல்லாமல் பயன் படுத்துவது கிடையாது, அதனால் என் பதிவுகளை தொடந்து படித்து என்னுடன் நட்புடன் இருக்கும் நண்பர்களுக்கும், தங்கமணியுடன் நட்புடன் இருக்கும் தோழிகளுக்கும் என் நன்றியை இங்கு தனியாக தெரிவித்து கொள்கிறேன்.

எனக்கு கிடைக்கும் நேரத்தில் எல்லா பதிவுகளையும் படிக்க ஆசை பட்டாலும், இப்போதெல்லாம் எல்லா பதிவுகளையும் படிக்க உண்மையில் எனக்கு நேரம் சாத்திய படவில்லை, மேலும் இன்னொரு விசையம் எனக்கு பெரிய சவாலாக இருக்கிறது.

நான் இணையத்தில் பொழுதுபோக்க வரும் போது, நான் பின்தொடரும் நண்பர்கள் பதிவை என்னால் என் பதிவு பக்கத்தில் "டாஷ்போர்ட்" பகுதியில் சென்று அவர்கள் புதிதாக எழுதியுள்ள பதிவை படிக்க முடியும், முடிந்த வரை கருத்து சொல்ல முடியும்.

ஆனால், தினம் வருவது எனக்கு சற்று சிரமம் என்பதால், வரும்போது எல்லாம் கண்ணில் படும் பதிவுகளை படித்து விடுவேன், மற்ற எந்த பதிவையும் படிக்க எனக்கு திரட்டிகளின் உதவி அவசியமாகிறது, இங்குதான் எனக்கு கொஞ்சம் சிக்கல்.

மேலே சொன்னது போல, பதிவு என்பது ஒரு தனிமனிதன் தன் சொந்த கருத்துக்களை, நடவடிக்கைகளை, எண்ணங்களை மற்றும் சமையல், கலை போன்ற தங்கள் தனி திறமைகளை இணையத்தில் மற்றவர்களுடன் பதிவதே ஆகும்.

இதனால் பலருடைய திறமைகளை, எண்ணங்களை, கருத்துக்களை மற்றும் நடவடிக்கைகளை நாம் படிக்க முடிகிறது, சுருக்கமாக மனிதர்களை மற்றும் மனிதர் மனதை படிக்க பதிவுகள் பெரிதும் உதவுகின்றன.



இதில் என்னால் எல்லா பதிவுகளையும் படிக்கமுடியாமல் போக என் சிக்கல் என்னவென்றால், இப்போதெல்லாம் திரட்டிகளில் காணும் அனேக பதிவுகள் மேலே குறிப்பிட்ட உண்மையான பதிவு நோக்கத்தை விட்டு விலகி, "தின-செய்திதாள்" வேலையை செய்யும் போதுதான்.

எனக்கு இணையத்தில் உலாவ கிடைக்கும் நேரத்தில் இத்தகைய செய்தி பதிவுகள் ஆனது மற்ற நல்ல பதிவுகளை தேடி கண்டு பிடிக்க முடியாமல் ஒளித்து வைத்து கொள்கிறது (பதிவின் தலைப்பை பொருத்து உள்ளே சென்றவுடன்தான் புரிகிறது).

மற்றொரு காரணம் வீட்டை தவிர மற்ற இடங்களில் இருந்து பொது கணினியில் பதிவுகளை படித்து பின்னூட்டம் எழுத நினைத்தால், பெரும்பாலான இடத்தில பின்னூட்ட பகுதி தடை செய்ய பட்டு இருக்கிறது. சரி, மாலை வீடு திரும்பியது எழுதாலாம் என்று நினைத்தால், அதற்குள் அந்த பதிவையே இத்தகைய செய்தி பதிவுகள் திரட்டியில் எதோ ஒரு பக்கத்துக்குள் காணாமல் போய் விட செய்கிறது.

கவனிக்க, இங்கு யாருடைய பதிவையும் குறை சொல்வது என் நோக்கம் அல்ல.

ஒரு உதாரணத்துக்கு தமிழிஸ் என்ற ஒரு திரட்டியில் ஒரு நாளில் வரும் அத்தனை பதிவுகளையும் சலித்து தினசெய்திதாள்களில் செய்தியாக வராத பதிவுகளை தேடுவது என்பது! மற்றவர்களுக்கு எப்படியோ? ஆனால் எனக்கு கிடைக்கும் கொஞ்ச நேரத்தில் சாத்திய படவில்லை.

இது போல் எத்தனை முன்னணி திரட்டிகள்!, அதில் எத்தனை நல்ல பதிவுகள் நம் கண்ணில் படாமல் தொலைந்து போகக்கூடும்? என்பதைத்தான் இங்கு நான் சிந்தித்து பார்கிறேன்.

அதனால் செய்திகளை பதிவாக போடுவது தவறு என்று சொல்ல வரவில்லை, தின செய்திகளை அப்படியே திரும்ப திரும்ப பதிவாக போட்டு திரட்டிகளில் இடத்தை அடைக்காமல், முக்கியமான அல்லது கருத்துக்குரிய ஒரு செய்தியாயின் அந்த செய்திகளை பற்றிய தனிப்பட்ட கருத்துக்களை அல்லது எண்ணங்களை பதிவாக போலாமே என்பதுதான் இங்கு என் நோக்கம்.

அனைவருக்குமே தெரியும், இன்று இணையத்தில் இல்லாத தின பத்திரிகைகளே கிடையாது தினமலர், தினதந்தி, தினகரன்,மாலைமலர், தட்ஸ்தமிழ், தமிழ்சினிமா என்று அத்தனை தின செய்திகளையும் மற்றவர்களும் படிப்பார்கள் அல்லது படித்திருப்பார்கள்.

எனவே எந்த ஒரு தின செய்தியையும் அப்படியே ஒரு பதிவாக பதியும் முன், ஒரு முறை யோசிப்பதே நல்ல பதிவராக நம்மை அடையாளம் காட்ட ஒரு சிறந்த வழி என்று நான் கருதுகிறேன்.

மேலும், அவசியம் இத்தனை நாளுக்கு ஒரு பதிவு போடவேண்டும் என்பது கட்டாயம் இல்லையே?

அப்படி நமக்கு பதிய எதுவும் புது விசையம் இல்லாத பட்சத்தில், தின செய்திதாளில் இருப்பதை, இருந்ததை அப்படியே பதிவாக்காமல்!, அந்த நேரத்தை மற்ற பதிவர்களின் "நல்ல பதிவுகளை" படித்து கருத்து சொல்லி வாக்களிக்க பயன் படுத்தலாமே?

அதனால் அந்த நல்ல பதிவும் அனைவரின் பார்வைக்கும் வரும், மேலும் அப்படி செய்வதால் இணையத்தில் அதிக நேரம் உண்மையில் கிடைக்காதவர்கள் (என்னை போல) கண்ணில் படாமல் அந்த பதிவு காணாமல் போகாமல் நிறுத்தியதில் நமக்கும் ஒரு பெரிய பங்கு இருக்கும்.

அடிப்படையாகவே எந்த ஆதாயமும் இல்லமல் நாம் செய்யும் செய்கைகள் வெகுவாக குறைந்து விட்டன, அதனால் இப்படி செய்வதால் நமக்கு அல்லது நம் பதிவுக்கு என்ன ஆதாயம் என்று நினைக்க வேண்டாம்.

ஒன்று, தினசெய்திதாள்களில் வந்த அதே செய்திகள் திரும்ப திரும்ப திரட்டிகளில் பக்கத்தை அடைத்துக்கொள்ளாமல் அந்த இடங்கள் நல்ல பதிவுகளுக்கு கிடைக்கும்.

இன்னொன்று, நல்ல பதிவுகளை நாம் தொடர்ந்து படித்து கருத்து சொல்லும் பட்சத்தில், நாம் எவ்வளவு இடைவெளி கொடுத்து சொந்த பதிவை பதிந்தாலும் மற்ற நல்ல பதிவர்கள் நம் பதிவை படித்து இன்னும் நம்மை மெருகேற்றுவார்கள்.

அப்படி வரும் பதிவர்கள் அனைவரும் நல்ல மற்றும் தரமான பதிவர்களாக இருக்கும் பட்சத்தில், அவர்கள் வருகை அவர்களை பின் தொடரும் சக பதிவர்களையும் உங்கள் பதிவை நோக்கி திருப்பும், இதனால் நம் பதிவுகள் தரமான பதிவர் வரிசையில் இடம் பெரும்.

அப்புறம் என்ன? அட இன்னுமா புரியல...! பிரபல பதிவர்தான்... :-) .

பதிவர்கள் இதை பற்றி சிந்தித்து ஒரு நல்ல வழியை பின் பற்றினால், நிறைய திறமையுள்ள மற்றும் புதிய புதிய பதிவர்களின் திறமை திரட்டிகளில் முதல் பக்கத்தில் பலரை சென்று அடைய இது வழிவகுக்கும் என்று நம்புகிறேன்.

உங்கள் நேரத்துக்கு என் நன்றி!.

Tuesday, September 21, 2010

கதவை திறந்தால்தானே காற்று வரும்!

இதன் முன் பகுதியை நீங்கள் படிக்கவில்லை என்றால், கதவை திறந்தால் கண்டிப்பாக காற்று வரும்! ஒரு முறை படித்துவிட்டு இதை தொடரலாமே?

முந்தைய பதிவை தொடர்வது,

நமக்கு என்ன தேவை?

ஆரம்ப நிலையில் நம்முடைய தியானம் என்பது என்ன?

குடும்ப வாழ்க்கை சூழலில் இருக்கும் நம்முடைய தேவை என்பது, நம்முடைய மனஉளைச்சலை தவிர்க்க, பிரச்சனைகளை எளிதாக சந்தித்து குழப்பமில்லாத முடிவெடுக்க தேவையான தெளிவான மன, உடல் நிலை மட்டுமே.

இதற்கான சிந்தனையையும் உடல்நிலையையும் தியானம் செய்வதன் மூலம் எளிதாக பெறமுடியும் என்று நம்புகிறேன்.

தியானம் என்றவுடன், ஒரு யோகியை போல உச்ச கட்ட நிலையை பற்றி சிந்திக்காமல், நமக்கு தேவையான ஆரம்ப நிலையை பற்றி மட்டும் தற்போதைக்கு சிந்திப்பதுதான் இங்கு என் நோக்கம்.

சிந்தனைகளும், நினைவுகளும் நிறைந்ததே நம் மூளை, அதை நாம் கட்டுபடுத்த பழக வேண்டும், இதுவே நம் ஆரம்ப நிலை தியானம்.

இதற்காக நமக்கு தேவை ஒரு அமைதியான இடம் மட்டுமே, அது நம் வீட்டின் அல்லது நமக்கு பிடித்த எந்த ஒரு பகுதியாகவும் இருக்கலாம்.



மூளையின் கட்டுபாட்டில் நாம் செல்லாமல் எடுத்தவுடன் நம் சிந்தனை அனைத்தையும் கட்டுபடுத்துவது என்பது சிறிது கடினமாயினும், தொடர்ந்து பயிற்சி செய்யும் போது அது சாத்தியப்படும்.

இங்கு மீண்டும் ஒருமுறை நினைவு படுத்துகிறேன், தியானத்திற்கும் ஜாதி மதத்திற்கும் எவ்வித சம்மந்தமும் கிடையாது, அது நடுவில் வந்த வியாபாரயுக்தி மட்டுமே.

அதனால் இதை பற்றி குழப்பிக்கொள்ளாமல், உங்களுக்கு பிடித்த இடத்தில் வசதியான ஒரு முறையில் அமரவும், காரணம் நீங்கள் அமரும் முறை அல்லது அணிதிருக்கும் உடை உங்களை தொந்தரவு செய்யக்கூடாது.

எனவே உங்களுக்கு ஏதுவான, எளிதான ஒரு முறையில் அமர்ந்து கண்களை மூடி நிதானமாக சுவாசிக்கவும்.

நாம் பார்க்கும் எந்த ஒரு விசையத்தையும் பொருத்து நம் சிந்தனைகள் வளரக்கூடும் என்ற காரணத்தால்தான் கண்களை மூடுவது.

அப்படியே அமைதியாக சுவாசத்தை இழுத்து விடுங்கள், ஆனால் சுவாசிக்கும் முறையை பற்றி சிந்திக்க வேண்டாம்.

இப்படி உங்கள் உடல் ஒரு நிலையை அடைந்ததும், உங்கள் சிந்தனைகள் பலவாறு ஓட தொடங்கும், அந்த சிந்தனைகளை பின்தொடராதீர்கள்.

சிந்தனைகள் நம் கட்டுபாட்டில் இருக்க வேண்டுமே தவிர, சிந்தனைகளின் கட்டுபாட்டில் நாம் ஒரு போதும் இருக்ககூடாது.

We are what our thoughts have made us; So take care about what you think. Words are secondary. Thoughts live; They travel far. - Swami Vivekananda

நிதானமாக சுவாசத்தை தொடருங்கள், உங்கள் சிந்தனைகள் நீங்கள் சுவாசிக்கும் அளவையும் ஆழத்தையும் பின் தொடராமல் பார்த்துக்கொள்ளுங்கள், சுருக்கமாக எந்த ஒரு சிந்தனையும் செயலும் இல்லாத அமைதியான நிலையில் இருக்கவும்.

ஆரம்ப கட்டத்தில் இது சற்று கடினமாக தெரிந்தாலும், நாளடைவில் மிக எளிதாகிவிடும், அப்படி மாற மாற தியானிக்கும் போது உங்கள் சிந்தனைகளின் அளவு குறைய ஆரமிக்கும்.

இப்படி உள்ளும் வெளியும் எந்த ஒரு சிந்தனையும் ,செயலும் இல்லாமல் உங்கள் சிந்தனைகள் குறைய குறைய, உடலின் சக்கரங்களில் சுழலும் உங்கள் சுவாசத்தின் அளவும் தானாக குறையும்.



இதை தொடர்ந்து செய்து வர நாளடைவில் முழு சிந்தனை இல்லாத நிலையை அடையும் போது, நம் சுவாசத்தின் அழுத்தமும் குறைந்து குறைந்து நம்மை தியான நிலைக்கு எடுத்து செல்லும்.

இந்த நிலையை ஒருவர் அடையும் போது அவர் முழு தியான நிலையை அடைகிறார், நாசியில் சுவாசம் இருப்பது போலவே உணரமுடியாது, மனதில் எந்த சிந்தனையும் இருக்காது.

இதுவே முழு தியான நிலை.

இப்படி ஒரு தியான நிலையில் இருக்கும் போது நம் உடல் பிரபஞ்சத்தில் உள்ள சக்தியை (Cosmic Energy) பெறுகிறது, அந்த சக்தி நரம்புகளில் பரவி உடலின் உள்ள எல்லா பகுதிகளுக்கு செல்கிறது.

எவ்வளவு அதிகமாக தியானம் செய்கிறோமோ, அவ்வளவு அதிகமாக நம் உடல் சக்தியை பெறுகிறது, அந்த சக்தி மனஉளைச்சல் மற்றும் உடலில் உள்ள தீமைகளை, நோய்களை அகற்றுகிறது (Cosmic Energy Healing for Health) என்று தியான நூல்களில் சொல்லப்படுகிறது.

சாதாரணமாக ஒரு குடும்ப வாழ்கையில் இருக்கும் யாருக்கும் இதுவே தேவை.

மேலும் இந்த நிலையில் தொடந்து தியானம் செய்து வர, மன நிலையும் உடல் நிலையும் ஒழுங்கு படும், நல்ல சிந்தனைகள் வளரும்.

நம்மை நாமே யாரென்று அறிய இதுவே சிறந்த வழி.

இதை தாண்டிய நிலைதான், மூன்றாவது கண்ணை திறப்பது, ஆன்மீக குருக்களை தியானத்தில் சந்திப்பது, தெரிந்த, தெரியாத புதிர்களுக்கு அவர்களிடம் விடை கேட்பது என்ற யோகியின் நிலை.

அதையும் தாண்டிய நிலைதான் ஆன்மாவை பயணிப்பது, கடந்த, எதிர் காலத்தை பார்ப்பது என்று சித்தர் நிலையை (சமாதி நிலையை) அடைவது.

ஆனால் இவை சாதாரண மனிதர்களுக்கு அத்தனை எளிதில் சாத்தியப்படாதவை.

இதில் மிக தெளிவாக உணரவேண்டியது, இத்தகைய தியானமும், சித்தியும் ஒரு போதும் வியாபாரமாக்க முடியாது.

அதாவது நீங்கள் பணம் கொடுத்து இதில் எந்த ஒரு நிலையையும் கண்டிப்பாக அடைய முடியாது.



அதனால் தான் எல்லா மத வேத நூல்களும் உடல் மற்றும் மன ஒழுக்கத்தை முன்னிறுத்தி தன் கருத்துக்களை சொல்கிறது.

கலிகாலத்தில் அரை குறை வேதாந்திகள் மதத்தின் பெயரால் மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிப்பார்கள் என்று வேத நூல்கள் சொல்கின்றன, அதுதான் இன்று உண்மையில் நடக்கிறது.

அதனால் எடுத்த எடுப்பில் குருவை தேடுகிறேன், பணம் கொடுத்து முக்தி அடைகிறேன் என்று உங்கள் நேரத்தையும், பணத்தையும் வீணடிக்காமல், மனதை ஒரு நிலை படுத்தி சரியான பாதையில் முறையாக தியானிக்கும் போது, உங்களுக்கு மிக சிறந்த தியானம் சாத்தியப்படும்.

இதில் இன்னொரு விசையம் இருக்கிறது, யோகாசனம் என்பது வேறு தியானம் என்பது வேறு.

(இந்த முறை இந்தியாவில் இருந்த போது சில குழந்தைகள் மற்றும் பெரியவர்களும் கூட, ஒரு நிறுவனத்தின் பெயரை சொல்லி நாங்கள் அங்கு தியானமும் யோகாசனமும் படிக்கிறோம் என்று ஒரு வலுவான தொகையை கட்டணமாக சொன்னார்கள்.)

தியானத்தை பற்றி மேலே பார்த்துவிட்டோம். சுவாசத்தை கட்டுபடுத்தி சிந்தனையற்ற நிலைக்கு சென்று பிரபஞ்ச சக்தியை பெற தியானம் உதவும்.

யோகாசனம் என்பது உடற்பயிற்சி, காடுகளில் தியானம் (தவம்) செய்யும் முனிவர்களும் சித்தர்களும். எந்த உபகரணமும் இல்லாமல், உடலையே உபகரணமாக்கி உடற்பயிற்சி செய்து தங்கள் உடல் உறுப்புகளை தங்கள் கட்டுபாட்டில் கொண்டுவர பயன் படுத்தியதுதான் யோகாசனம்.

யோகாசனத்தின் ஒரு பகுதியாக தியானத்தையும் எடுத்துக்கொள்ளலாம், காரணம் மனம் ஒரு நிலையில் இல்லாத போது உடலை கட்டுபடுத்துவது சாத்தியமாகாது, எனவே எந்த ஒரு கலைக்கும் தியானம் மிக அவசியம்.

ஆனால், உடற்பயிற்சி என்று வரும் போது அதை முறையாக தெரியாமல் தானாக முயற்சி செய்வது சரியல்ல.

அதே நேரம் கற்றுக்கொள்ள சரியான (வியாபார நோக்கம் மட்டுமே குறியாக இல்லாத) ஆசிரியரை தேடி தேர்வு செய்வது மிக மிக அவசியம்.

ஆக, இவை அனைத்துக்கும் நம் மனமும் உடலும் முயற்சியும் பயிற்சியும் தான் அடிப்படையே தவிர, மதமும் ஜாதியும் குறிப்பாக பணமும் அல்லது வியாபார குருக்களும் ஒரு போதும் தேவை இல்லை என்பதை உறுதியாக நம்புங்கள்.

இப்படி நமக்கு தேவையானதை உணர்ந்து, நம் மனம் என்னும் கதவை திறந்தால், அமைதி, முக்தி, ஞனம் என்னும் காற்று அளவில்லாமல் வந்து உங்கள் வாழ்கை உங்களுக்கு வசப்படும்.

நன்றி!.

Thursday, September 16, 2010

இன்னுமா வெளிநாட்டு மோகம்!

வணக்கம் நண்பர்களே,

எத்தனை முறை எழுதினாலும், நம் மக்களுக்கு மீண்டும் மீண்டும் சீட்டு கட்டி திவால் ஆவதை போல, வெளிநாடு வந்து ஏமாராவிட்டால் அவர்களுக்கு ஒரு திருப்தி இருக்காது என்று நினைக்கிறேன்.

அவரவர் இருக்கும் நாட்டை, பகுதியை பற்றி பதிவிடுவது என்பது வெறும் பொழுது போக்குக்காக நகைக்க மட்டுமல்ல, நாமோ அல்லது நமக்கு தெரிந்தவர்களோ அந்த பகுதிக்கு செல்ல நேர்ந்தால், அதை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளவும்தான்.

வேலை, வீடு என்று ஒப்பந்தம், ஒப்பந்த முறை என்பது ஒவ்வொரு நாட்டிலும் வேறு பட்டு இருக்கும் என்பது அனைவரும் தெரிந்து வைத்து இருக்க வேண்டிய அடிப்படை தகவல்.

நான் கூட கொரியாவில் ஒரு வாடகை வீடு இடுகையில் இதை பற்றி தெளிவாக முன்பு சொல்லி இருந்தேன்.

இப்போது அதே போல மீண்டும் ஒரு உண்மை சம்பவம், அதை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன், மீண்டும் யாரும் இந்த தவறை செய்யாதிருக்க இது பயன்படட்டும்.

என் அலுவலகம் இருக்கும் அதே கட்டிடத்தில் இயங்கும் ஒரு மெக்கானிக்கல் தொழில் சார்ந்த நிறுவனத்தில் வேலை செய்ய இந்தியாவில் இருந்து வந்திருப்பதாக, மதிய உணவு நேரத்தில் இருவரை சந்தித்தேன், சற்று நேரம் பேசிவிட்டு பிரிந்து விட்டோம்.

தங்கமணி ஊரில் இல்லாததால் இரவு வழக்கம் போல இணையத்தில் மேய்ந்து கொண்டிருந்தேன், ஒரு பத்து மணியளவில் யாரோ அழைப்பு மணியை அழுத்த, சென்று பார்த்தல், அந்த இருவரும் நின்று கொண்டிருந்தார்கள்.

உள்ளே அழைத்து பரஸ்பரம் ஜூஸ் கொடுத்து பேச்சை ஆரமிக்க, அவர்கள் நிறுவனம் நான் தங்கி இருக்கும் அதே கட்டிடத்தில் வீடு பிடித்து கொடுத்திருப்பதாகவும், கீழே காவலர்கள் நாங்கள் ஒரு இந்திய குடும்பம் இருப்பதாகவும் சொன்னதால், சில தகவல்கள் கேட்க வந்ததாக சொன்னார்கள்.

இருவரில் ஒருவர் ஐ.ஐ.டி யில் இப்போதுதான் முதுநிலை (M.Tech) புதிதாக முடித்து ஆறு மாதமாகிறது இன்னும் திருமணமாகவில்லை.



இன்னொருவர் ஐ.ஐ.டி யில் முதுநிலை, டாக்டர் ஆறாய்ச்சி பட்டம் (M.Tech, PhD)பெற்று எட்டு வருடம் அனுபவம் இருப்பதாகவும், இந்தியாவில் 75000 ரூபாய் மாத ஊதிய அரசாங்க ஆராய்ச்சி வேலையை ராஜினாமா செய்து விட்டு, திருமணமாகி ஒரு வருடமான மனைவியை விட்டு விட்டு வந்திருப்பதாகவும், இந்த வேலைக்கு 120000 ரூபாய் ஊதியத்தில் வந்திருப்பதாகவும் சொல்ல, எனக்கு சரியான கடுப்பாகி விட்டது.

அவராவது தேவலை இப்போதுதான் படிப்பை முடித்து அனுபவம் தேடி வந்ததாக சொல்லலாம், ஆனால் நீங்கள் அப்படி இந்தியாவை விட்டு வர காரணம் என்ன? அப்புறம் எப்படி நம் நாடு உருப்படும் என்று கேட்க நினைத்தாலும், புதிய அறிமுகம் என்பதால் நான் எதுவும் சொல்லவில்லை.

சரி, உங்களுக்கு இப்போது நான் என்ன செய்ய முடியும் என்று கேட்க?

இங்கு யாருக்கும் ஆங்கிலமே தெரியவில்லை, நாங்கள் வந்த தகவலை எங்கள் குடுபத்திற்கு மின்னஞ்சலோ அல்லது தொலைபேசியிலோ சொல்ல வேண்டும், உங்கள் கணினி அல்லது தொலைபேசியை சிறிது பயன் படுத்திகொள்ளலாமா என்று கேட்க? நானும் என் தொலைபேசியை கொடுத்தேன்.

அவர்கள் பேசி முடித்ததும், தன் மனைவியை அழைத்து வர இருப்பதாகவும், இங்கு பாதுகாப்பு மற்றும் குடும்ப வாழ்க்கை முறை பற்றி கேட்க, நானும் எனக்கு தெரிந்ததை சொல்லி தாராளமாக இங்கு இருக்கலாம்.

நாங்கள் தனியாக இருந்து பிரசவமே பார்த்து இருக்கிறோம், தற்போது என் மனைவி மற்றும் குழந்தைகள் விடுமுறைக்காக இந்தியாவில் இருப்பதாக சொல்லி, அன்று எங்கள் பேச்சை முடித்து கொண்டோம்.

அவர்கள் புதிய வீட்டில் இணையம் கேபிள் என்று எந்த இணைப்பும் இன்னும் வராததால், மறுநாள் என் அறைக்கு இருவரும் வந்தார்கள்.

பேசிக்கொண்டு இருக்கும் போது, தன் மனைவியை அழைத்து வர போவதில்லை என்றும் தானும் இங்கு இருக்க விருப்பமில்லை என்றும் அதனால் திரும்ப இந்தியா போக போவதாக சொன்னார்.

மற்றொருவர் தனக்கு எந்த பிரச்னையும் இல்லாததால், இங்கேயே வேலை செய்து ஒரு வருட அனுபவம் தேட போவதாக சொன்னார்.



நானும் என்னால் முடிந்த வரை ஒரு நாட்டை பற்றி வெறும் இரண்டு நாளில் முடிவெடுப்பது என்பது முறையல்ல, உங்கள் பிரச்சனைதான் என்ன என்று கேட்க, அவருக்கு இங்கு உணவு, மொழி, கலாச்சாசரம் என்று எதுவுமே ஒத்துவராது என்று சொன்னார்.

அவர் முடிவில் அவர் ஆழமாக இருக்க, நாம் என்ன செய்ய முடியும் என்று நானும் அமைதியாய் இருக்க, நாளையே தன் முடிவை அலுவலகத்தில் சொல்லபோவதாக சொன்னார்.

நானும் அது உங்கள் சொந்த விருப்பம் என்று முடித்துக்கொண்டேன்.

மறுநாள் வெள்ளிகிழமை (ரமலான் தினம்) தன் அலுவலக எண்ணில் இருந்து எனக்கு தொலைபேசியில் அழைத்தார், தன் முடிவை சொல்லி விட்டதாகவும் அதற்கு நிறுவனமும் ஒப்புக்கொண்டதாகவும் சொன்னார்.

மேலும் வந்து இரண்டு நாள்தான் ஆனதால் எனக்கு செய்த விசா கட்டணம் மற்றும் விமானசீட்டு கட்டணத்தை நான் திரும்ப தரவேண்டும் என்று சொன்னார்கள், நானும் அதை ஒப்புக்கொண்டேன் அது எவ்வளவு தொகை என்று கணக்கு பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் என்றார்.

சரி, பிரச்னை முடிந்ததில் மகிழ்ச்சி என்று சொல்லி வைத்துவிட்டேன்.

வேலை முடிந்து வீட்டிற்கு போகும் வழியில் அவர் மழையில் நனைந்து கொண்டே ஓடிவர, நான் அவரை அழைத்து என் குடைக்குள் சேர்ந்து நடந்தோம்.

இன்னும் தொகை எவ்வளவு என்று சொல்லவில்லை என்றும், தனக்கு நாளையே (சனிக்கிழமை) இந்தியா பேகவேண்டும் என்பதால், சில அலுவலக பேப்பர்கள் மற்றும் பாஸ்போர்ட் எடுத்து செல்ல வந்தேன் என்றார்.

சரி போகும் போது நனைந்து கொண்டு போக வேண்டாம் என்று ஒரு குடையை கொடுத்து அனுப்பினேன், வேலை முடிந்ததும் இரவு சாப்பாடு மூவரும் சேர்ந்து போகலாம் என்பது முடிவு.

சிறிது நேரத்தில் பதற்றமாக என் தொலைபேசியில் அழைத்தவர், மொத்தம் கிட்டதட்ட ஒரு லட்சம் பணம் கேட்பதாவும், தன் பாஸ்போர்ட்டையும் வாங்கி வைத்து கொண்டதாகவும் அழுகாத குறையாக சொன்னார்.

தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்றும், கையிருப்பு மற்றும் இந்திய வங்கி கணக்கில் ஒரு 13000 இருக்கிறது, எனக்கு இங்கு வேறு யாரையும் தெரியாது, அதனால் நீங்கள்தான் எப்படியாவது உதவேண்டும், உங்கள் அறைக்கு வருகிறேன் என்று சொல்லி சிறிது நேரத்தில் வந்தார்.

பணம் புரட்டுவது ஒன்றும் பிரச்சனையில்லை என்று அவருக்கு தைரியம் சொல்லி, ஆனால் அவர்கள் பாஸ்போர்ட்டை வாங்கி வைப்பது சட்டப்படி குற்றம், நான் வேண்டுமானால் பேசி பார்கிறேன் என்று சொல்லி என்னுடன் அழைத்து சென்றேன்.

அவர்கள் அலுவலகத்தில் சென்று முறையாக பேசினேன், அவர்களும் இவர் ஒரு வருடம் வேலை செய்ய வந்து விட்டு, இரண்டு நாட்களில் போக வேண்டும் என்கிறார்.

அதனால் தான் நாங்கள் கொடுத்த விமான கட்டணம், விசா கட்டணம், இதர நஷ்டங்களை இவரே கொடுக்கும் பட்சத்தில் இவர் திரும்ப போவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றார்.

ஒரு வழி விமான கட்டணமும் விசா கட்டணமும் எப்படி ஒருலட்சம் வரும் என்று நான் கேட்க?

அவர், உங்களுக்கு வேண்டுமானால் நான் கட்டண ரசீதை தருகிறேன் என்று சொல்லி இரு மடங்கு தொகையில் வாங்கியது போல டம்மி ரசீது ஒன்றையும் காட்டினார்.

மற்றும் இவருக்காக ஏற்பாடு செய்த வீட்டின் கட்டணத்தை யார் தருவார்கள்? உங்களுக்கு கொரியா வீட்டு ஒப்பந்த முறைதான் தெரியுமே என்றார்.

உண்மையில் அவர்கள் ஒரே ஒரு வீடுதான் பேசி இருக்கிறார்கள், அதில் தான் இருவரும் இப்போது இருக்கிறார்கள். ஆனால், இவர் மனைவியோடு தங்க இன்னொரு வீடு பேசி இருப்பதை போல கட்டி கொண்டார்கள்.

சரி, இனி இதை இவர்களிடம் பேசுவதில் பலன் எதுவும் இருக்காது என்பதால், நான் சற்று குரலை மாற்றி, எப்படி நீங்கள் பாஸ்போட்டை வங்கி வைக்க முடியும்!, அது குற்றம் முதலில் பாஸ்போர்ட்டை திரும்ப கொடுங்கள் என்றேன்.

என் கோவத்தை புரிந்து கொண்டு என்னை சற்று ஆழமாக பார்த்த அவர், சற்று பொறுங்கள் என்று உள்ளே சென்று ஒரு ஒப்பந்த காதிங்களை எடுத்து வந்து என் முன் போட்டார்.

இவருக்கு வேலை துவங்கிய நாள் (அதாவது இன்று ஒப்பந்தத்தின் மூன்றாவது நாள்) முதல் ஒரு வருடம் வேலை ஒப்பந்தம், இதில் நடுவில் இவர் இந்த ஒப்பந்தை உடைக்க நினைத்தால் அன்று முதல் மீதமிருக்கும் மாதத்தின் ஊதிய அளவை இவர் எங்கள் நிறுவனத்துக்கு கொடுக்க வேண்டும் என்பதே இந்த ஒப்பந்தம்.

உங்களை போல நானும் சட்டம் பேச நினைத்தால், இவர் மூன்றாவது நாளே ஒப்பந்தத்தை உடைப்பதால், மீதமுள்ள பதினோரு மாதம் இருப்பதி ஏழு நாட்களின் ஊதிய பணத்தை இவர் கட்ட வேண்டும் பாருங்கள் என்றார்.

எடுத்து பார்த்தல், ஒப்பு கொண்டதாக இரண்டு பக்கமும் கையப்பம் ஆகி இருக்கிறது.

மேலும் அவர் சொன்னது, இவர் என்னிடம் பாஸ்போர்டை கொடுத்த ஆதாரம் ஏதாவது இருகிறதா? நாங்கள் வாங்கவே இல்லை என்று சொன்னால் என்ன செய்யமுடியும் யோசியுங்கள் என்றார்.

அவர் பக்கம் இருக்கும் நியாயத்தையும் சாதகத்தையும் கருத்தில் கொண்டு சரி, நீங்கள் கேட்ட பணத்தை நாளை இரவுக்குள் கொடுத்து விடுகிறோம் என்று சொல்ல, அவரும் நாளை சனிக்கிழமை அதனால் பணம் தயாரானதும் நீங்கள் அலுவலகம் வரும் நேரத்தை எனக்கு சொல்லுங்கள் நானும் அலுவலகம் வருகிறேன் என்றார்.

திரும்ப மூவரும் என் அறைக்கு சென்று விட்டோம், இப்படி ஒரு ஒப்பந்தத்தில் எப்படியப்பா கையப்பம் இட்டீர்கள் என்றால், ஏதேதோ அழுகாத குறையாக புலம்பினார்.

சரி, இனி புலம்பி புண்ணியம் இல்லை என்று சொல்லி, அவர்களிடம் இருக்கும் பண இருப்பை கேட்டேன், அவர் கையிருப்பு மற்றும் இந்திய வங்கியில் கொஞ்சம் சேமிப்பு மற்றும் ஒரு கடன் அட்டை இதுதான் இருந்தது.



சரி, முதலில் இந்திய வங்கி பணத்தை எடுப்போம் என்று அதற்கான வங்கி ஏ.டி.எம் மை அந்த மழையில் தேடிக்கொண்டு சென்றோம். தென் கொரியாவில் எல்லா வங்கி ஏ.டி.எம்-மிலும் வெளி நட்டு வங்கி சேமிப்பு அல்லது கடன் அட்டையை கொண்டு பணம் எடுக்க முடியாது என்பது இங்கு குறிப்பிடதக்கது.

ஒரு வழியாக வங்கி சேமிப்பில் இருந்த மொத்த பணத்தையும் எடுத்து விட்டு, கடன் அட்டையை போட்டால் அதில் பணம் எடுக்க முடியவில்லை, அங்கிருந்தே இந்திய வங்கி கடன் அட்டை சேவையை அழைத்தபோது, அவர்கள் இந்த கடன் அட்டையை கொண்டு பொருட்கள் மட்டுமே வாங்க முடியும், பணம் எடுக்க முடியாது, அந்த சேவை வேண்டுமென்றால் பகலில் வங்கிக்கு சென்று எழுதி கொடுக்கவும் என்றார்கள்.

சரி, என்று திரும்ப அறைக்கு வந்ததும், அவர் காலில் விழாத குறையாக புலம்ப ஆரமித்து விட்டார்.

நானும் நாளை காலை வாருங்கள் இன்னொரு வழி இருக்கிறது, அதுவும் முடியவில்லை என்றால் நான் பணம் தருகிறேன், நீங்கள் இந்தியா சென்றதும் திரும்ப அனுப்பினால் போதும் என்று சொன்னவுடன்தான் சென்றார்.

மறுநாள் நான் எழும் முன் அவர்கள் இருவரும் வந்து விட்டார்கள், இருவரிடமும் கொஞ்சம் அமெரிக்க டாலர் இருப்பதாகவும், அதையும் மாற்றிய பின், அவர் கடன் அட்டயை பயன் படுத்த முடியாவிட்டால் மீதமுள்ள பணத்தை நான் கொடுக்குமாறு வேண்டினார்.

ஊருக்கு சென்ற மறுநாளே, உங்கள் இருவருக்கும் பணத்தை அனுப்பி விடுகிறேன், வேண்டுமானால் என் படிப்பு சான்றிதல் அனைத்தையும் வைத்துக்கொள்ளுங்கள் என்றார்.

நான் சொன்னது , முதலில் கொஞ்சம் பொறுமையாக இருங்கள், நாம் செல்ல வேண்டிய இடம் நாற்பது கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது, நமக்கு இன்று முழுவதும் இருக்கிறது அதற்குள் முடித்து விடலாம் என்று சொல்லி தயாராகி அவர்களையும் அழைத்துக்கொண்டு சென்றேன்.

அங்கு இருவரிடமும் இருந்த அமெரிக்க டாலர் மாற்றிய பின், இவருக்கு திரும்ப செல்ல விமானசீட்டு எடுக்க என் நண்பர் கடையை தேடி சென்று கடன் அட்டையை கொடுத்து சீட்டு வாங்கியபின், அவரை தனியே அழைத்து நிலைமையை எடுத்து சொல்லி கடன் அட்டையை செலுத்தி பணம் கொடுக்குமாறு கேட்டேன்.

அவரும் சற்று யோசித்து விட்டு, கடன் அட்டையை தேய்க்கும் போது வரும் வரியையும் நீங்களே கொடுத்து விட வேண்டும். மேலும் நாளை இவர் நான் எந்த பொருளும் வாங்கவில்லை என்று ஏதாவது எனக்கு பிரச்சனை வந்தால் நீங்கள்தான் பொறுப்பு, காரணம் நான் உங்களை நம்பித்தான் பணம் கொடுக்கிறேன் என்று சொல்ல, நான் பொறுப்பேற்று கொண்டேன்.

இப்படி பணம் கிடைத்ததும் கிட்டதட்ட தேவையான தொகையை நெருங்கி விட்டோம், இன்னும் மிக சிறிய தொகை மற்றும் நாளை மறுநாள் பயணத்தின் போது அவர் கைசெலவுக்கு சிறிது பணம், இதுதான் இப்போதைய தேவை. அதை நான் தருவதாக சொல்ல அப்போதுதான் அவர் முகம் பீதியில் இருந்து வெளியேவந்தது.

ஒரு டாக்ஸ்யை பிடித்து மீண்டும் அவருடைய அலுவலகம் வந்து எல்லா தொகையையும் கட்டிவிட்டு, எல்லா ஒப்பந்த பேப்பர்களையும் சரியாக முடித்து விட்டதாக எழுதி வாங்கிகொண்டு பாஸ்போர்ட்டுடன் திரும்ப வந்து விட்டேம்.

அடுத்த நாள் சிறிது சாக்லேட்களை அவர் வீட்டிற்கு வங்கி கொடுத்து விட்டு, எங்களுடன் தங்க வைத்து ஊருக்கு அனுப்பும் வரை, இந்த அனுபவத்தையும் முன் பின் தெரியாத எனக்கு நீங்கள் செய்த உதவியையும் என் வாழ்நாளில் என்றும் மறக்கவே மாட்டேன் என்பதையே திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டு இருந்தார்.

இவ்வளவு படித்திருந்தும் வெளிநாட்டு மோகத்தால் என்ன நிலை என்று பார்த்தீர்களா, என்று மட்டும்தான் நான் அவருக்கு பதில் சொன்னேன்.

இனி வருவது அவருக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் தேவையான சில அடிப்படை தகவல்கள் கண்டிப்பாக பயன்படும்.

எந்த ஒரு நாட்டுக்கு செல்வதானாலும், ஒரு ஒப்பந்தத்தில் கையப்பம் இடும் முன் தெளிவாக படித்து புரிந்த பின் கையப்பம் இடுங்கள்.

கையப்பம் இடும் இரண்டு தரப்புக்கும் பொது மொழியில் ஒப்பந்தம் இல்லாவிட்டால், அதன் ஆங்கில பதிப்பை கட்டாயம் கேட்டு வாங்குங்கள்.

கையப்பம் இடும் எந்த ஒரு ஒப்பந்த நகலையும் உங்களுடன் ஒப்பந்தம் முடியும் வரை கட்டாயம் வைத்து இருங்கள்.

சில அடிப்படை தொழிலாளர் வேலை முறை தவிர, வேறு எந்த உயர் பதவிக்கும், உங்கள் பாஸ்போட்டை வாங்கிவிட முடியாது. அப்படி வாங்கும் பட்சத்தில் நீங்கள் பாஸ்போட்டை கொடுத்த சான்று ஏதாவது உங்களிடம் கட்டாயம் இருக்க வேண்டும்.

எந்த ஒரு ஒப்பந்தம் அல்லது பாஸ்போர்டையும் யாரிடமும் கொடுக்கும் முன் எல்லா பக்கத்தையும் நகல் எடுத்து வைத்து கொள்ளுங்கள்.

வெளிநாடு செல்லும் போது அங்குள்ள நண்பர்கள் முகவரி, யாருமில்லாத பட்சத்தில் அங்கிருந்து நீங்கள் திரும்ப வர , அதுவரை தேவையான உங்கள் கையிருப்பு பணத்தை வைத்திருங்கள்.

கடன் அட்டையை நம்பி செல்லும் பட்சத்தில், இந்தியாவில் இருந்து வெளியே செல்லும் முன் சம்மந்த பட்ட வங்கியை தொடர்பு கொண்டு உங்கள் கடன் அளவு, நேரடியாக பணம் எடுக்கும் அளவு மற்றும் நீங்கள் செல்லும் நாட்டில் இந்த கடன் அட்டை வேலை செய்யுமா என்று உறுதி படுத்தி கொள்ளுங்கள்.

இவை அனைத்தையும் விட என் சொந்த அனுபாவத்தில் சொல்கிறேன்.

வெளிநாட்டு வேலை என்பது, குடும்ப சூழ்நிலை, வேலையின்மை மற்றும் வேறு வழியில்லாமல் வருபவர்களுக்குதானே தவிர, இப்படி அரசாங்க உயர் பதவிகளை உதறி விட்டு வருவதற்கு அல்ல, என்பதை எப்போதும் மனதில் வைத்திருங்கள், உங்களுக்கு தெரிந்தவர்களிடமும் எடுத்து சொல்லுங்கள்.

நன்றி!.

Friday, September 10, 2010

பதிவரசியல்!

என்னாங்க நடக்குது இங்க?

ஆனா, ஒன்று மட்டும் உறுதி பிரச்சனயை நோக்கி எறியப்படும் கற்களும், அதற்கு பதிலடி கொடுக்க எறியப்படும் கற்களும், இரண்டுமே பதிவுலகம் என்ற கண்ணாடி வீட்டிற்குள் இருந்துதான் எறியப்படுகிறது என்பதுதான் வேதனை.

நினைவுகள் என்பது நம் மகிழ்ச்சியை பதிந்து வைக்கத்தானே தவிர, நம் தவறுகளை, வருத்தங்களை செதுக்கி வைக்க அல்ல.

தவறுகளை, துக்கத்தை மறப்பதே எப்போதும் நல்லது. எங்காவது கல்யாண நிகழ்ச்சி புகைப்பட ஆல்பம் போல, இது எங்கள் வீட்டு இழவு நிகழ்ச்சி ஆல்பம் என்று பார்க்க முடியுமா?

ஆனால், பதிவுலகில் அடுத்த தலைமுறை பதிவர்கள் அத்தகைய ஆல்ப பதிவுகளை கண்டிப்பாக பார்க்க முடியும்.

(கவனிக்க; தவறுகள் எல்லை மீறும் போது அதை கண்டிக்க, தண்டிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை)

பதிவர்கள் ஒன்று பட வேண்டும் அல்லது குழு வேண்டும் என்பதின் அடிப்படை நோக்கம் என்ன? நாளை பதிவர்கள் ஒரு பெரிய சக்தியாக, சமுதாய வழிகாட்டியாக வர வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் தானே?



பதிவுலகிலும் அது உண்மை எனில், நாளை ஒரு அங்கீகாரத்திற்காக அரசாங்கத்தையோ சம்மந்த பட்ட அதிகார குழுவையோ அணுகும் போது, இதுதானே நீங்கள் சொல்லும் பதிவுலகம் என்று, இன்று எழுதப்படும் பதிவரசியல் இடுகைகளும் மோசமான வார்த்தைகளும் உங்கள் முன் போடப்படுமா இல்லையா? சற்று சிந்தித்து பாருங்கள்.

மேலும் இங்கு என்ன நடக்கிறது!.

"ஆதரிக்கும் குழு, எதிர்க்கும் குழு" என்று எல்லா பிரச்னைகளிலும் குழு சேர்க்கும் முயற்சி மட்டுமே நடக்கிறது, அதில் அடிப்படை உண்மை பிரச்சனை அடிபட்டு போய் விடுகிறது, வழக்கம் போல இதற்கு பகடை காயாக இப்போதும் சில பதிவர்கள் சிக்கி விட்டார்கள்.

இதில் நான் எந்த குழுவையும் சாராதவன் என்ற உடன் சந்தர்ப்பவாதியாகி நடுநிலைமையாக காட்டிக்கொள்ள பார்க்கிறாய் என்று சொல்ல வேண்டாம், அதுவல்ல சரியான காரணம்.

இங்கு பிரச்சனை சித்தரிக்கப்படும் (திசை திருப்ப படும்) அடிப்படை முறையே சரியாக இல்லை என்பதால்தான். ஒரு பிரச்சனையை எழுதும் போது கருத்தின் ஆழம் தேவையே தவிர அதில் அடுக்கு மொழியோ கவிதையோ தேவை இல்லை.

இங்கு இரண்டு பதிவர்களுக்கு நடுவில் மனஸ்தாபம், ஒருவருக்கு ஒரு பதிவர் செய்வது சரி என்று படுவது போல மற்றொருவருக்கு இன்னொரு பதிவர் செய்வது சரி என்று படலாம், அதை அவர் ஆதரிக்கலாம், இதில் எந்த தவறும் இல்லை.



ஆனால் நான் இதில் நான் கவனித்தது என்னவென்றால், பிரச்சனை இரண்டு பதிவர்களுக்கு, இரண்டுமே மனிதர்கள்தான், இருவருமே பதிவர்கள்தான் இதில் பாலினம் எங்கிருந்து வருகிறது?

அது ஆண் பெண் பேதமாகி, பெண்ணடிமை ஆணாதிக்கம் என்று ஏன் திசை திருப்பி விடப்படுகிறது?

ஒன்று மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் நண்பர்களே, ஒரு ஆணை விட, ஒரு பெண்ணுக்கும் தன்னையும் தன் மானத்தையும் காக்கும் சக்தி அதிகமாகவே இறைவனால் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

உடல் அமைப்பில் நம் இனத்தை பெருக்க இருவரும் மாறுபட்டு இருப்பதை தவிர, இருபாலுக்கும் மனித இனம் என்பதுதான் சரியான அடையாளம், பிரச்சனைகளை சந்திக்கும், சமாளிக்கும் திறன் இருவருக்குமே சமமாகத்தான் இருக்கிறது, நல்லவர்கள் கெட்டவர்கள் இரண்டிலும் கலந்துதான் இருக்கிறார்கள்.

அதனால் ஆணாதிக்கம் பெண்ணடிமை என்று பதிவுலகத்திலும் இல்லாத ஒன்றை உருவாக்க தேவை இல்லை, காரணம் யாரும் யாருக்கும் அடிமையும் கிடையாது, அடிமை படுத்தவும் முடியாது.

அன்பை தவிர வேறு எதுவும் யாரையும் அடக்க உதவாது என்பதுதான் உண்மை.

கட்டிய சொந்த மனைவியாக இருந்தாலும், நீ எனக்கு பெண்ணடிமையாக இரு என்றால், நடுவிரலை முகத்துக்கு நேரே காட்டி விட்டு போய் விடும் காலம் இது.

இப்படி இருக்கும் நிலையில் உலகம் மறந்து மாறி போன பெண்ணடிமை, ஆணாதிக்கம் போன்ற போர்வைகளை எடுத்து விடுவோமே!.

மனிதன் நட்பாக பழகி, பின் சேர்ந்து வாழ்ந்து சந்ததிகள் பெருகி, பின் உறவுகள் வந்து, இப்படித்தானே சமயம், மதம், ஜாதி அனைத்தும் வந்திருக்கும், இப்படி அனைத்திற்கும் அடிப்படியாக இருக்கும் நட்புக்கும் மதிப்பு கொடுப்போம், ஆண் பெண் பேதம் வேண்டாம்.

அதில் பதிவர்கள் என்ற வகையில் நமக்கு ஒத்து போகும் கருத்துக்களுடன் சேர்ந்து நடப்போம், அதே நேரத்தில் மற்றவருக்கும் கருத்துரிமை இருக்கிறது என்பதை நாம் ஒரு போதும் மறந்து விடக்கூடாது.

ஆண்மை என்பது தன் துணையை தவிர உதவி, நட்பு நாடி வரும் பெண்ணை தன் குடும்ப பெண்கள் போல சகோதரத்துடன் பார்ப்பதில் தான் இருக்கிறது.

பெண்மை என்பது தன் துணையுடன் உடல் ரீதியாகவும் மற்ற அனைத்து மக்களிடமும் உயிரினதிடமும் மனரீதியாக தாய்மை உணர்வுடன் அன்பாக இருப்பதில்தான் முழுமையடைகிறது.


நல்லது கெட்டது இரண்டு பக்கமும் கலந்துதான் இருக்கிறது, தேவையை பொறுத்து அதன் சதவீதம் மாறுபடுகிறது, இதில் இன்னும் ஏன் இந்த ஆண் பெண் பேதம்?.



பிடித்த பதிவர்களை விரும்பி பின் தொடர்வதை போல, ஒருவரின் நடவடிக்கை மற்றும் கருத்து பிடிக்கவில்லை என்றால் விலகி இருப்பதே நல்லது, அதை விட்டுவிட்டு, அவரையோ அவர் பதிவுகளையோ கொச்சை படுத்தி எழுதுவது என்பது அசிங்கம்.

இதில் யார் வரம்பு மீறினாலும் கண்டிக்க தேவை பட்டால் சட்டரீதியாக தண்டிக்க பட வேண்டும் என்பதில் யாருக்கும் எந்த கருத்து வேறு பாடும் இருக்காது என்று நம்புகிறேன்.

இதை விட்டுவிட்டு பதிவர் குட்டையை குழப்பி அதில் மீன் பிடிக்க நினைப்பது, பதிவர் என்ற முறையில், நம் மீது நாமே சேற்றை பூசிக்கொள்வதற்கு சமம்.

கடைசியாக என் மனதில் பட்டது, மன்னிப்பு கேட்பது எப்படி ஒரு நல்ல மனித தன்மையோ, அதே போல் மன்னிப்பது இறை குணம், ஆகவே காயங்களை வடுவாக்கி காலம் முழுவதும் எடுத்து செல்லாமல், மனித நேயத்தோடு கழுவி துடைத்து விட்டு, புதிய பாதையை நிமிர்ந்து பாருங்கள், பதிவுலகில் நீங்களும் பதிவுலகமும் சாதிக்க எவ்வளவோ நல்ல விசையங்கள் இருக்கிறது.

உங்கள் இடுகையால் மற்றவர் மனம் காயப்படும் என்று உங்கள் மனசாட்சி சொன்னால், வேண்டாம் அந்த இடுகை அழித்து விடுங்கள், அது ஒன்றும் கோழைத்தனம் கிடையாது.

இந்த நல்ல நாளில், மன வருத்தம், ஆதங்கத்தில் இருக்கும் பதிவர்களுக்கு பகையை மறந்து மனதில் நல்ல முடிவை தோன்ற செய்து, தவறு செய்தது யாராக இருப்பினும் அதை உணர்ந்து மற்றவரிடம் சமாதானமாக போக அருள் செய்யுமாறு அந்த திருவண்ணாமலை இறைவனை வேண்டுவதோடு!,

பசியின் கொடுமையை உணர்ந்து, இறை அருள் பெற விரதமிருந்து, ஏழை வரியை கொடுத்த பின் தொழுகை முடித்து பெருநாள் பண்டிகையை கொண்டாடும் அனைத்து இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கும், அல்லா உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தின் மீதும் என்றும் தன் புன்னைகையை செலுத்த என் மனமார்ந்த பெருநாள் வாழ்த்துக்களை சொல்லி!,

இன்று படித்த "வேத வரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து" என்ற செய்தி இந்த இடுகைக்கு சரியாக ஒத்து போவதால் அதை உங்களுடன் பகிர்ந்து இந்த இடுகையை முடித்துக்கொள்கிறேன்.

நீதியில் இருந்து பிறழாதீர்!

ஒருவன் தன் சமூகத்து மக்களை நேசிப்பது இனவெறியாகுமா?' என ஒருவர் நபிகள் நாயகம் அவர்களிடம் வினவினார்.

அதற்கு நபிகள் நாயகம் அவர்கள் இல்லை!, மாறாக மனிதன் தன் சமுதாயத்தார் (பிற மனிதன் மீது) கொடுமை செய்ய முற்படும்போது அவர்களுக்குத் துணை புரிவது தான் இனவெறியாகும் என்றார்கள்.

எவன் அநீதியான விஷயத்தில் தன் சமுதாயத்தினருக்கு உதவி புரிகின்றானோ அவன் கிணற்றில் விழுந்து கொண்டிருக்கும் ஒட்டகத்தின் வாலைப் பிடித்துக் கொண்டிருப்பவனைப் போன்றவனாவான். அந்த ஒட்டகத்துடன் சேர்ந்து அவனும் கிணற்றில் வீழ்வான்.

நீதி செலுத்துங்கள்! அது உங்களுக்கோ உங்கள் பெற்றோருக்கோ நெருங்கிய உறவினருக்கோ பாதகமாக இருந்தாலும் சரியே! எந்தவொரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள பகைமை உங்களை நீதியிலிருந்து பிறழச் செய்துவிடக் கூடாது.

இன, மத, மொழி வெறியின் அடிப்படையில் மக்களை அழைப்பவன் நம்மைச் சார்ந்தவன் அல்லன்; அதற்காகப் போராடுபவன் நம்மைச் சார்ந்தவன் அல்லன்; அதற்காக உயிரை விடுபவன் நம்மைச் சார்ந்தவன் அல்லன்.

நன்றி!. மீண்டும் சந்திப்போம்!.

டிஸ்கி: இந்த இடுகை முழுக்க முழுக்க என் மனதில் பட்ட எண்ணமே தவிர, யாரையும் காயப்படுத்துவதவோ அல்லது எந்த பிரச்சனையையும் கிண்டுவதோ இங்கு என் நோக்கமல்ல.

Monday, September 6, 2010

கதவை திறந்தால் கண்டிப்பாக காற்று வரும்!

வணக்கம் நண்பர்களே,

சூட்டோடு சூடாக செய்திகள் பரபரப்பாக இருக்கும் போது, பத்தோடு பதினொன்றாக எழுத விரும்பாத காரணத்தால், பரபரப்பு அடங்கும் வரை காத்திருந்தேன்.

காரணம் இன்றைய பரபரப்பான வாழ்கை சூழலில், காலை காபியுடன் படிக்கும் செய்திதாளிலோ அலுவலகம் போகும் வழியில் காரில் கேட்கும் வானொலி செய்திகளிலோ மக்கள் தங்கள் தூக்கத்தில் இருந்து வெளியே வர மட்டுமே பரபரப்பு செய்திகள் பயன் படுகிறதே தவிர, விசாரணை கமிசன் போல், எந்த ஒரு பரபரப்பான செய்திக்கும் முடிவே இருந்திருக்காது என்பது தான் உண்மை.

ஊடகங்களில் செய்திகள் பழையதானதும் பரபரப்பு குறைகிறது, தூக்கம் கலைய மாறுகிறது, அதனால் விற்பனை குறைகிறது, ஆகவே அடுத்த புது செய்தி பரபரப்புக்காக தேவை படுகிறதை தவிர, இதில் சமூக அக்கறை ஏதும் இருப்பதாய் எனக்கு தெரியவில்லை.

நேற்று வரை காசை கொடுத்தவர்கள் கடவுள் என்று போற்றினார்கள்.

ஏமாற்ற பட்டது தெரிந்ததும் பணம், மானம் போன கோவத்தில் மிருகம் என்று தூற்றினார்கள்.

பரபரப்பு குறைந்ததும், இதோ இயல்பு வாழ்கை திரும்பி விட்டது,

மீண்டும் இன்று காசை வாங்குபவர்கள் கடவுள் என்று போற்றுகிறார்கள்.

அமைதி படை படத்தில் வரும் வசனம் போல், கட்டம் கட்டி போட்டு தள்ளு "உஸ்ஸ்சு"...! மன்னிப்பு கடிதம் கொடுத்து பதவி விலகினால் "புஸ்ஸ்சு"...!

ஆக, மொத்தத்தில் "உஸ்ஸ்சு" "புஸ்ஸ்சு", இவ்வளவுதாம்பா நம்ம நாட்டு அரசியல் என்பதுதான் உண்மை. அதற்கு பிறகு யாரும் அதை பற்றி நினைக்க கூட நேரம் இருப்பதில்லை.

(வரலாறு முக்கியம் மங்குனி பாண்டியரே, இறநூறு வருடம் கழித்து வரப்போகும் முட்டாள்களுக்கு, நாம் இன்று எப்படி இருந்தோம், என்ன செய்தோம் என்று தெரியவா போகிறது!)



சரி, இதற்கு காரணம் அவரா, இவரா என்ற அர்த்தமில்லாத ஆராய்ச்சி நமக்கு இப்போது தேவை இல்லை.

ஆனால், நாம் ஏன் இப்படி படித்தும் பதராய் ஆகிவிட்டோம்? என்று நம்மை நாமே உணர்ந்து மாறுவதுதான் இப்போதைய தேவை.

எனக்கு புரிந்த காரணம் என்னவோ மிக எளிது, அவசர உலகத்தில் எல்லாம் அவசரமாக்க பட்டு அனைத்தையுமே வெறும் பணத்தால் விரைவாக அடைய முடியும் என்ற தவறான கண்ணோட்டம்தான்.

நாம் என்ன செய்கிறோம்!, நமக்கு என்ன தேவை! என்ற அடிப்படை எண்ணம் கூட தெளிவாக இல்லாத நிலையில், நாம் மற்றயாரையும் குறை கூறுவதில் அர்த்தமில்லை.

ஒரு உதாரணத்துக்கு, முன்பு பார்த்தல், ஒரு கடைக்கு பத்து கடை பார்த்து, ஒரு துணியை வாங்குவோம், நமக்கு நன்கு அறிமுகமான தையல்காரரிடம் அதை தைக்க கொடுத்து பத்து நாட்கள் பொறுத்திருந்து வாங்கியபின் தான் நம் புது சட்டை தயாராகிறது.

ஆனால் இன்று, இந்த மொத்த பணத்தை விட சற்று அதிகமாக பணம் கொடுத்தால், ரெடிமேட் சட்டை உடனடியாக கிடைக்கிறது.

இப்படியே உணவு, உடை, தகவல் தொடர்பு வரிசையில் இறுதியாக ஆன்மீகம் என்று எல்லாவற்றிலும் நாம் ஒரு "ரெடிமேட்" கலாச்சாரத்துக்கு பழகிவிட்டேம்.

முன்பெல்லாம் ஒரு புத்தகம் எழுதுவது என்பது மிக பெரிய ஆராய்ச்சி மற்றும் அறிவு சார்ந்த ஒரு விசையம்.

ஆனால், இன்று அது சார்ந்த பத்து புத்தகங்களை புரட்டி, அதில் எடுத்த குறிப்புகளை வெவ்வேறு வார்த்தைகளை கொண்டு தனியாக தொகுத்தால் ஒரு புது புத்தகம் தயாராகி விடுகிறது.

(அப்படியே நமக்கு நாமே கம்பனுக்கு அடுத்து, பாரதி போல, சுஜாதாவுக்கு அப்புறம் என்று சுய விளம்பர பில்டப் கொடுத்துக்கலாம்)

இதை ஏன் இங்கு குறிப்பிடுகிறேன் என்பது உங்களுக்கு இனி வரும் வார்த்தைகளில் புரியும்.

பண்ட மாற்று முறையில், அளவு முறையும் சேமிப்பு முறையும் மாறுபடுகிறதே என்று அதை சமபடுத்த, மனிதனாய் பார்த்து முறையான வாழ்கைக்கு வடிவமைக்க பட்ட பணம்தான், இன்று மனிதனை முறையற்ற வாழ்கைக்கு உள்ள அத்தனை வழியையும் திறந்து விடுகிறது.

பணம் கொடுத்தால் எல்லாம் கிடைத்து விடும், அதுவும் உடனே கிடைத்து விடும் என்ற முட்டாள் தனமான நம்பிகையே இதன் அடிப்படை. இதனால் பெரும்பாலும் நம் எண்ணம் இப்படித்தான் போகிறது.

குடும்ப வாழ்கை வேண்டும், தொழில் வேண்டும், மொத்தத்தில் விடுமுறைக்கு செல்வதை போல பணம் எடுத்துக்கொண்டு ஆசிரமத்தை தேடி போய் பணம் கொடுத்தால் மட்டும் போதும்.

வெளியே வரும் போது நாம் ஒரு விவேகானந்தராய், புத்தராய், நபியாய், கிறிஸ்துவாய் மாறிவிடலாம் (என்ற நினைப்புதான் இன்று பெரும்பாலான மக்களின் பிழைப்பை கெடுக்கிறது).

அதிலும் வேடிக்கை அப்படி ஆனபின், விடுமுறை முடித்ததை போல திரும்பவும் நாம் குடும்ப வாழ்கைக்கு திரும்பி, நம் தொழிலை பார்க்க போய்விடலாம்.

இப்படி பட்ட எண்ணம் மக்கள் மனதில் இருக்கும் வரை, மற்ற யாரையும் நாம் குறை சொல்வதில் என்ன அர்த்தம் இருக்க போகிறது, சிந்தித்து பாருங்கள்!.

சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் எனக்கு தெரிந்த நான்கு ஆன்மீக புத்தகங்கள் உள்ளன, அவற்றில் இல்லாத எந்த ஒரு கருத்தையும், கடந்த சில நூறாண்டில் வந்த எந்த ஒரு புத்தகத்திலும் நீங்கள் காட்ட முடியாது என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும், அந்த புத்தகங்கள் உலகின் அத்தனை மொழியிலும் கிடைகிறது.

இராமாயணம், பகவத்கீதை, திருகுரான், பைபிள் தான் அந்த புத்தகங்கள், இவற்றில் இல்லாத எந்த ஒரு புது விசையத்தையும் எனக்கு தெரிந்த எந்த ஒரு கார்பரேட் துறவியோ, சாமியாரோ சொன்னதோ எழுதியதோ கிடையாது.

அப்படி என்றால், ஆன்மீகத்தில் ஈடு பாடு கூடாதா? அப்படி ஆன்மீகத்தில் ஈடுபடும் பட்சத்தில், ஒரு குரு இல்லாமல் நாம் எப்படி மனம் அமைதியடைய முடியும்? யார் நமக்கு வழிகாட்டுவார்கள்?

என்று பலதர பட்ட எதிர்வாத கேள்விகள், இங்கு வரக்கூடும்.

நான் சொல்வதின் அர்த்தம் அப்படி இல்லை என்பதை விளக்கி சொல்ல வேண்டியது இங்கு என் பொறுப்பாகிறது.

எனக்கு தெரிந்த ஆன்மீகத்தின் முதல் அடிப்படை மற்றும் உச்சகட்ட கடைசி நிலை, இந்த இரண்டு பாடமுமே "நம்மை நாமே உணர வேண்டும்" என்பதுதான்.

இதன் அடிபடையில் நாம் யார், இப்போது நமக்கு என்ன தேவை என்பதை நாம் முதலில் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

இதில் மிக முக்கியமானது, எந்த ஒரு கால கட்டத்திலும் விளம்பரம் மற்றும் விற்பனை செய்யப்படுவது ஆன்மீகம் ஆகாது.

எடுத்த எடுப்பில் குருவை தேடும் அளவு நாம் முழுநேர மற்றும் பொதுநோக்கு ஆன்மீகவாதி(துறவி) இல்லை.

அப்படியே ஒரு சித்தரை போலவோ விவேகானந்தரை போலவோ ஒரு புனித ஆத்மாவாக யாரேனும் இருப்பின், அந்த ஆத்மா தக்க சமயத்தில் தானே தன் குருவை அடையாளம் கண்டு அவரை வந்து அடையுமே தவிர, பணம் கொடுத்து குருவை வாங்க வேண்டிய அவசியம் இருக்காது.



குடும்ப வாழ்வின் பிரச்சனை சக்கரத்தில் சுற்றி சுற்றி, மூளையின் இடைவிடாத வெவ்வேறு சிந்தனைகளால், நரம்புகளும், நாடி வேர்களும் பாதிக்கப்பட்டு உடல் இயக்கம் சீராக இல்லாமல் மனம் அமைதி பாதிக்க பட்டிருக்கும் பொதுவான மக்களின் ஆன்மீக நாட்டம், தேடல் என்பது மன உளைச்சலை குறைக்க அல்லது தவிர்க்க மட்டுமே என்பதை தெளிவாக நாம் உணர வேண்டும்.

பொதுவாக நமக்கு நாமே கேட்டு பார்த்தல், கஷ்டம் வரும் போது கடவுளை நினைக்கும் அல்லது நாடும் எத்தனை பேர், சந்தோசம் வரும் போது கடவுளை நினைக்கவோ அல்லது நன்றி சொல்லவோ செய்கிறோம்?

ஆக, சுக துக்கத்தை ஒன்றாக பாவித்து பொது நல ஆன்மீக வாழ்கை பயணம் என்பது வேறு, அவை ஒரு போதும் கார்பரேட் நிறுவனங்கள் போல பணத்தின் அடிப்படையில் அல்லது விற்பனை முறையில் நடைபெறாது.

தன் கஷ்டங்களுக்கு மனஅமைதி, வடிகால் தேடும் ஆன்மீக நாட்டம் என்பது வேறு, இதற்காக ஒரு போதும் நிம்மதியை விலை கொடுத்து வாங்க முடியாது.

இந்த நிலையில் நாம் செய்யக்கூடியது தான் என்ன?

பரபரப்பு வாழ்கையின் இடைவிடாத ஓட்டத்தால் தளர்ச்சியடையும் மனதிற்கும் உடலுக்கும் ஒரு அமைதி மற்றும் சக்தி தேவை, அதற்காக சரியான வழி தியானம் மட்டுமே.

ஆனால், அது சரியான முறையா? தியானம் என்ற மிக பெரிய விசையத்தில் உள்ள சூத்திரங்கள் எதுவுமே நமக்கு தெரியாதே என்ற பயமும் குழப்பமுமே நாம்மை தவறான முடிவெடுக்க வைத்து, தவறான மனிதர்களை நாட வைக்கிறது.

இதில் சில அடிப்படை விசையங்களை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

மூளை என்பது வேறு எதுவும் அல்ல, சிந்தனைகளும், நினைவுகளும் நிறைந்ததே நம் மூளை, குடும்ப வாழ்கை சக்கரத்தின் இன்ப துன்பங்களின் இடைவிடாத தொடர் இயக்கத்தால், நம் உடலின் சத்தி குறைகிறது, நாட்கள் இப்படியே பரபரப்பாக நகர நகர, அந்த பாதிப்பு உடலின் நரம்புகள் மூலம் மற்ற பகுதிக்கு சென்று அவையும் தளர்ச்சி அடைகிறது.

ஒரு குழந்தை எப்போதும் உடல் சக்தியுடன் ஓடியாடி சுறுசுறுப்பாக இருக்கிறதே! என்று எப்போதாவது கவனித்து பார்த்ததுண்டா? காரணம் குழந்தையின் மூளையில் நினைவுகள் தங்குவதில்லை.

இளம் கன்று பயமறியாது என்ற சொல் படி, வாழ்கையை பற்றி, அடுத்த நாளை பற்றி குழந்தை ஒரு போதும் சிந்திப்பது கிடையாது, அதனால் பிரபஞ்சத்தில் உள்ள சக்தியை (Cosmic Energy Healing for Health) காற்றில் மூலம் அந்த குழந்தை அதிகமாக பெறுகிறது. அதே போல் எந்த சிந்தனையும் இல்லாமல் படுத்த உடன் தூங்கி (தியான நிலைக்கு போய்) விடுகிறது அப்போது இன்னும் அதிக சக்தியை அந்த உடல் பெறுகிறது.

நாம் கூட தூங்கி எழுந்தவுடன் களைப்பு நீங்கி சுருசுப்பாகி விடுகிறோம் இல்லையா? காரணம் தூக்கமும் ஒரு வகை தியானம் தான், தூக்கம் எப்படி ஒரு நினைவற்ற (Unconcious Mind) தியானமோ, அதே போல தியானம் என்பது ஒரு வகையான நினைவுள்ள தூக்கம் என்று கூட எடுத்துக்கொள்ளலாம்.

தூக்கத்தில் நமக்கு கிடைக்கும் அளவான சக்தியை போல தியானத்தின் மூலம் அளவில்லா உடல் சக்தியை பெற முடியும்.

இப்படி தியானத்தின் மூலம் நம் மன அமைதியை நாமே பெற முடியும்.

இதன் அடுத்த நிலையை அடைந்து நாம் யார் என்று நமக்கு புரியும் போது, நம் குருவை நாமே சரியாக அடையாளம் கண்டுகொள்ள முடியும், அதற்காக நாம்மிடம் குருவும் எந்த பிரதி பலனையும் எதிர் பார்க்க மாட்டார்.

அதெப்படி நானே தியானிக்க முடியும்? குருவில்லாத ஒரு கலை எப்படி முழுமையடைய முடியும் என்று எடுத்த எடுப்பில் முடிவை தேடாமல், முதல் அடியாக நம் முயற்சியை அடிமேல் அடி தொடர்ந்து எடுத்து வைத்தாலே போதும்.

தியானம் பற்றி எனக்கு புரிந்ததை விரைவில் சுருக்கி சொல்ல முயற்சிக்கிறேன்.

நான் மேலே சொன்னபடி இவை அனைத்தும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாக எல்லா ஆன்மீக குறிப்புகளிலும் எழுதி வைக்கப்பட்டது.

அதனால் இதில் நானே சொந்தமாக சொல்ல எதுவும் இல்லை, நான் படித்ததை அதில் எனக்கு புரிந்ததை, சுருக்கமாக ஒரு இடுகைக்குள் வருமாறு உங்களுடன் பகிர்வது மட்டுமே என் நோக்கம்.

நன்றி!, மீண்டும் சந்திப்போம்.
 

Blogger Widgets