Thursday, September 16, 2010

இன்னுமா வெளிநாட்டு மோகம்!

வணக்கம் நண்பர்களே,

எத்தனை முறை எழுதினாலும், நம் மக்களுக்கு மீண்டும் மீண்டும் சீட்டு கட்டி திவால் ஆவதை போல, வெளிநாடு வந்து ஏமாராவிட்டால் அவர்களுக்கு ஒரு திருப்தி இருக்காது என்று நினைக்கிறேன்.

அவரவர் இருக்கும் நாட்டை, பகுதியை பற்றி பதிவிடுவது என்பது வெறும் பொழுது போக்குக்காக நகைக்க மட்டுமல்ல, நாமோ அல்லது நமக்கு தெரிந்தவர்களோ அந்த பகுதிக்கு செல்ல நேர்ந்தால், அதை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளவும்தான்.

வேலை, வீடு என்று ஒப்பந்தம், ஒப்பந்த முறை என்பது ஒவ்வொரு நாட்டிலும் வேறு பட்டு இருக்கும் என்பது அனைவரும் தெரிந்து வைத்து இருக்க வேண்டிய அடிப்படை தகவல்.

நான் கூட கொரியாவில் ஒரு வாடகை வீடு இடுகையில் இதை பற்றி தெளிவாக முன்பு சொல்லி இருந்தேன்.

இப்போது அதே போல மீண்டும் ஒரு உண்மை சம்பவம், அதை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன், மீண்டும் யாரும் இந்த தவறை செய்யாதிருக்க இது பயன்படட்டும்.

என் அலுவலகம் இருக்கும் அதே கட்டிடத்தில் இயங்கும் ஒரு மெக்கானிக்கல் தொழில் சார்ந்த நிறுவனத்தில் வேலை செய்ய இந்தியாவில் இருந்து வந்திருப்பதாக, மதிய உணவு நேரத்தில் இருவரை சந்தித்தேன், சற்று நேரம் பேசிவிட்டு பிரிந்து விட்டோம்.

தங்கமணி ஊரில் இல்லாததால் இரவு வழக்கம் போல இணையத்தில் மேய்ந்து கொண்டிருந்தேன், ஒரு பத்து மணியளவில் யாரோ அழைப்பு மணியை அழுத்த, சென்று பார்த்தல், அந்த இருவரும் நின்று கொண்டிருந்தார்கள்.

உள்ளே அழைத்து பரஸ்பரம் ஜூஸ் கொடுத்து பேச்சை ஆரமிக்க, அவர்கள் நிறுவனம் நான் தங்கி இருக்கும் அதே கட்டிடத்தில் வீடு பிடித்து கொடுத்திருப்பதாகவும், கீழே காவலர்கள் நாங்கள் ஒரு இந்திய குடும்பம் இருப்பதாகவும் சொன்னதால், சில தகவல்கள் கேட்க வந்ததாக சொன்னார்கள்.

இருவரில் ஒருவர் ஐ.ஐ.டி யில் இப்போதுதான் முதுநிலை (M.Tech) புதிதாக முடித்து ஆறு மாதமாகிறது இன்னும் திருமணமாகவில்லை.இன்னொருவர் ஐ.ஐ.டி யில் முதுநிலை, டாக்டர் ஆறாய்ச்சி பட்டம் (M.Tech, PhD)பெற்று எட்டு வருடம் அனுபவம் இருப்பதாகவும், இந்தியாவில் 75000 ரூபாய் மாத ஊதிய அரசாங்க ஆராய்ச்சி வேலையை ராஜினாமா செய்து விட்டு, திருமணமாகி ஒரு வருடமான மனைவியை விட்டு விட்டு வந்திருப்பதாகவும், இந்த வேலைக்கு 120000 ரூபாய் ஊதியத்தில் வந்திருப்பதாகவும் சொல்ல, எனக்கு சரியான கடுப்பாகி விட்டது.

அவராவது தேவலை இப்போதுதான் படிப்பை முடித்து அனுபவம் தேடி வந்ததாக சொல்லலாம், ஆனால் நீங்கள் அப்படி இந்தியாவை விட்டு வர காரணம் என்ன? அப்புறம் எப்படி நம் நாடு உருப்படும் என்று கேட்க நினைத்தாலும், புதிய அறிமுகம் என்பதால் நான் எதுவும் சொல்லவில்லை.

சரி, உங்களுக்கு இப்போது நான் என்ன செய்ய முடியும் என்று கேட்க?

இங்கு யாருக்கும் ஆங்கிலமே தெரியவில்லை, நாங்கள் வந்த தகவலை எங்கள் குடுபத்திற்கு மின்னஞ்சலோ அல்லது தொலைபேசியிலோ சொல்ல வேண்டும், உங்கள் கணினி அல்லது தொலைபேசியை சிறிது பயன் படுத்திகொள்ளலாமா என்று கேட்க? நானும் என் தொலைபேசியை கொடுத்தேன்.

அவர்கள் பேசி முடித்ததும், தன் மனைவியை அழைத்து வர இருப்பதாகவும், இங்கு பாதுகாப்பு மற்றும் குடும்ப வாழ்க்கை முறை பற்றி கேட்க, நானும் எனக்கு தெரிந்ததை சொல்லி தாராளமாக இங்கு இருக்கலாம்.

நாங்கள் தனியாக இருந்து பிரசவமே பார்த்து இருக்கிறோம், தற்போது என் மனைவி மற்றும் குழந்தைகள் விடுமுறைக்காக இந்தியாவில் இருப்பதாக சொல்லி, அன்று எங்கள் பேச்சை முடித்து கொண்டோம்.

அவர்கள் புதிய வீட்டில் இணையம் கேபிள் என்று எந்த இணைப்பும் இன்னும் வராததால், மறுநாள் என் அறைக்கு இருவரும் வந்தார்கள்.

பேசிக்கொண்டு இருக்கும் போது, தன் மனைவியை அழைத்து வர போவதில்லை என்றும் தானும் இங்கு இருக்க விருப்பமில்லை என்றும் அதனால் திரும்ப இந்தியா போக போவதாக சொன்னார்.

மற்றொருவர் தனக்கு எந்த பிரச்னையும் இல்லாததால், இங்கேயே வேலை செய்து ஒரு வருட அனுபவம் தேட போவதாக சொன்னார்.நானும் என்னால் முடிந்த வரை ஒரு நாட்டை பற்றி வெறும் இரண்டு நாளில் முடிவெடுப்பது என்பது முறையல்ல, உங்கள் பிரச்சனைதான் என்ன என்று கேட்க, அவருக்கு இங்கு உணவு, மொழி, கலாச்சாசரம் என்று எதுவுமே ஒத்துவராது என்று சொன்னார்.

அவர் முடிவில் அவர் ஆழமாக இருக்க, நாம் என்ன செய்ய முடியும் என்று நானும் அமைதியாய் இருக்க, நாளையே தன் முடிவை அலுவலகத்தில் சொல்லபோவதாக சொன்னார்.

நானும் அது உங்கள் சொந்த விருப்பம் என்று முடித்துக்கொண்டேன்.

மறுநாள் வெள்ளிகிழமை (ரமலான் தினம்) தன் அலுவலக எண்ணில் இருந்து எனக்கு தொலைபேசியில் அழைத்தார், தன் முடிவை சொல்லி விட்டதாகவும் அதற்கு நிறுவனமும் ஒப்புக்கொண்டதாகவும் சொன்னார்.

மேலும் வந்து இரண்டு நாள்தான் ஆனதால் எனக்கு செய்த விசா கட்டணம் மற்றும் விமானசீட்டு கட்டணத்தை நான் திரும்ப தரவேண்டும் என்று சொன்னார்கள், நானும் அதை ஒப்புக்கொண்டேன் அது எவ்வளவு தொகை என்று கணக்கு பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் என்றார்.

சரி, பிரச்னை முடிந்ததில் மகிழ்ச்சி என்று சொல்லி வைத்துவிட்டேன்.

வேலை முடிந்து வீட்டிற்கு போகும் வழியில் அவர் மழையில் நனைந்து கொண்டே ஓடிவர, நான் அவரை அழைத்து என் குடைக்குள் சேர்ந்து நடந்தோம்.

இன்னும் தொகை எவ்வளவு என்று சொல்லவில்லை என்றும், தனக்கு நாளையே (சனிக்கிழமை) இந்தியா பேகவேண்டும் என்பதால், சில அலுவலக பேப்பர்கள் மற்றும் பாஸ்போர்ட் எடுத்து செல்ல வந்தேன் என்றார்.

சரி போகும் போது நனைந்து கொண்டு போக வேண்டாம் என்று ஒரு குடையை கொடுத்து அனுப்பினேன், வேலை முடிந்ததும் இரவு சாப்பாடு மூவரும் சேர்ந்து போகலாம் என்பது முடிவு.

சிறிது நேரத்தில் பதற்றமாக என் தொலைபேசியில் அழைத்தவர், மொத்தம் கிட்டதட்ட ஒரு லட்சம் பணம் கேட்பதாவும், தன் பாஸ்போர்ட்டையும் வாங்கி வைத்து கொண்டதாகவும் அழுகாத குறையாக சொன்னார்.

தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்றும், கையிருப்பு மற்றும் இந்திய வங்கி கணக்கில் ஒரு 13000 இருக்கிறது, எனக்கு இங்கு வேறு யாரையும் தெரியாது, அதனால் நீங்கள்தான் எப்படியாவது உதவேண்டும், உங்கள் அறைக்கு வருகிறேன் என்று சொல்லி சிறிது நேரத்தில் வந்தார்.

பணம் புரட்டுவது ஒன்றும் பிரச்சனையில்லை என்று அவருக்கு தைரியம் சொல்லி, ஆனால் அவர்கள் பாஸ்போர்ட்டை வாங்கி வைப்பது சட்டப்படி குற்றம், நான் வேண்டுமானால் பேசி பார்கிறேன் என்று சொல்லி என்னுடன் அழைத்து சென்றேன்.

அவர்கள் அலுவலகத்தில் சென்று முறையாக பேசினேன், அவர்களும் இவர் ஒரு வருடம் வேலை செய்ய வந்து விட்டு, இரண்டு நாட்களில் போக வேண்டும் என்கிறார்.

அதனால் தான் நாங்கள் கொடுத்த விமான கட்டணம், விசா கட்டணம், இதர நஷ்டங்களை இவரே கொடுக்கும் பட்சத்தில் இவர் திரும்ப போவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றார்.

ஒரு வழி விமான கட்டணமும் விசா கட்டணமும் எப்படி ஒருலட்சம் வரும் என்று நான் கேட்க?

அவர், உங்களுக்கு வேண்டுமானால் நான் கட்டண ரசீதை தருகிறேன் என்று சொல்லி இரு மடங்கு தொகையில் வாங்கியது போல டம்மி ரசீது ஒன்றையும் காட்டினார்.

மற்றும் இவருக்காக ஏற்பாடு செய்த வீட்டின் கட்டணத்தை யார் தருவார்கள்? உங்களுக்கு கொரியா வீட்டு ஒப்பந்த முறைதான் தெரியுமே என்றார்.

உண்மையில் அவர்கள் ஒரே ஒரு வீடுதான் பேசி இருக்கிறார்கள், அதில் தான் இருவரும் இப்போது இருக்கிறார்கள். ஆனால், இவர் மனைவியோடு தங்க இன்னொரு வீடு பேசி இருப்பதை போல கட்டி கொண்டார்கள்.

சரி, இனி இதை இவர்களிடம் பேசுவதில் பலன் எதுவும் இருக்காது என்பதால், நான் சற்று குரலை மாற்றி, எப்படி நீங்கள் பாஸ்போட்டை வங்கி வைக்க முடியும்!, அது குற்றம் முதலில் பாஸ்போர்ட்டை திரும்ப கொடுங்கள் என்றேன்.

என் கோவத்தை புரிந்து கொண்டு என்னை சற்று ஆழமாக பார்த்த அவர், சற்று பொறுங்கள் என்று உள்ளே சென்று ஒரு ஒப்பந்த காதிங்களை எடுத்து வந்து என் முன் போட்டார்.

இவருக்கு வேலை துவங்கிய நாள் (அதாவது இன்று ஒப்பந்தத்தின் மூன்றாவது நாள்) முதல் ஒரு வருடம் வேலை ஒப்பந்தம், இதில் நடுவில் இவர் இந்த ஒப்பந்தை உடைக்க நினைத்தால் அன்று முதல் மீதமிருக்கும் மாதத்தின் ஊதிய அளவை இவர் எங்கள் நிறுவனத்துக்கு கொடுக்க வேண்டும் என்பதே இந்த ஒப்பந்தம்.

உங்களை போல நானும் சட்டம் பேச நினைத்தால், இவர் மூன்றாவது நாளே ஒப்பந்தத்தை உடைப்பதால், மீதமுள்ள பதினோரு மாதம் இருப்பதி ஏழு நாட்களின் ஊதிய பணத்தை இவர் கட்ட வேண்டும் பாருங்கள் என்றார்.

எடுத்து பார்த்தல், ஒப்பு கொண்டதாக இரண்டு பக்கமும் கையப்பம் ஆகி இருக்கிறது.

மேலும் அவர் சொன்னது, இவர் என்னிடம் பாஸ்போர்டை கொடுத்த ஆதாரம் ஏதாவது இருகிறதா? நாங்கள் வாங்கவே இல்லை என்று சொன்னால் என்ன செய்யமுடியும் யோசியுங்கள் என்றார்.

அவர் பக்கம் இருக்கும் நியாயத்தையும் சாதகத்தையும் கருத்தில் கொண்டு சரி, நீங்கள் கேட்ட பணத்தை நாளை இரவுக்குள் கொடுத்து விடுகிறோம் என்று சொல்ல, அவரும் நாளை சனிக்கிழமை அதனால் பணம் தயாரானதும் நீங்கள் அலுவலகம் வரும் நேரத்தை எனக்கு சொல்லுங்கள் நானும் அலுவலகம் வருகிறேன் என்றார்.

திரும்ப மூவரும் என் அறைக்கு சென்று விட்டோம், இப்படி ஒரு ஒப்பந்தத்தில் எப்படியப்பா கையப்பம் இட்டீர்கள் என்றால், ஏதேதோ அழுகாத குறையாக புலம்பினார்.

சரி, இனி புலம்பி புண்ணியம் இல்லை என்று சொல்லி, அவர்களிடம் இருக்கும் பண இருப்பை கேட்டேன், அவர் கையிருப்பு மற்றும் இந்திய வங்கியில் கொஞ்சம் சேமிப்பு மற்றும் ஒரு கடன் அட்டை இதுதான் இருந்தது.சரி, முதலில் இந்திய வங்கி பணத்தை எடுப்போம் என்று அதற்கான வங்கி ஏ.டி.எம் மை அந்த மழையில் தேடிக்கொண்டு சென்றோம். தென் கொரியாவில் எல்லா வங்கி ஏ.டி.எம்-மிலும் வெளி நட்டு வங்கி சேமிப்பு அல்லது கடன் அட்டையை கொண்டு பணம் எடுக்க முடியாது என்பது இங்கு குறிப்பிடதக்கது.

ஒரு வழியாக வங்கி சேமிப்பில் இருந்த மொத்த பணத்தையும் எடுத்து விட்டு, கடன் அட்டையை போட்டால் அதில் பணம் எடுக்க முடியவில்லை, அங்கிருந்தே இந்திய வங்கி கடன் அட்டை சேவையை அழைத்தபோது, அவர்கள் இந்த கடன் அட்டையை கொண்டு பொருட்கள் மட்டுமே வாங்க முடியும், பணம் எடுக்க முடியாது, அந்த சேவை வேண்டுமென்றால் பகலில் வங்கிக்கு சென்று எழுதி கொடுக்கவும் என்றார்கள்.

சரி, என்று திரும்ப அறைக்கு வந்ததும், அவர் காலில் விழாத குறையாக புலம்ப ஆரமித்து விட்டார்.

நானும் நாளை காலை வாருங்கள் இன்னொரு வழி இருக்கிறது, அதுவும் முடியவில்லை என்றால் நான் பணம் தருகிறேன், நீங்கள் இந்தியா சென்றதும் திரும்ப அனுப்பினால் போதும் என்று சொன்னவுடன்தான் சென்றார்.

மறுநாள் நான் எழும் முன் அவர்கள் இருவரும் வந்து விட்டார்கள், இருவரிடமும் கொஞ்சம் அமெரிக்க டாலர் இருப்பதாகவும், அதையும் மாற்றிய பின், அவர் கடன் அட்டயை பயன் படுத்த முடியாவிட்டால் மீதமுள்ள பணத்தை நான் கொடுக்குமாறு வேண்டினார்.

ஊருக்கு சென்ற மறுநாளே, உங்கள் இருவருக்கும் பணத்தை அனுப்பி விடுகிறேன், வேண்டுமானால் என் படிப்பு சான்றிதல் அனைத்தையும் வைத்துக்கொள்ளுங்கள் என்றார்.

நான் சொன்னது , முதலில் கொஞ்சம் பொறுமையாக இருங்கள், நாம் செல்ல வேண்டிய இடம் நாற்பது கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது, நமக்கு இன்று முழுவதும் இருக்கிறது அதற்குள் முடித்து விடலாம் என்று சொல்லி தயாராகி அவர்களையும் அழைத்துக்கொண்டு சென்றேன்.

அங்கு இருவரிடமும் இருந்த அமெரிக்க டாலர் மாற்றிய பின், இவருக்கு திரும்ப செல்ல விமானசீட்டு எடுக்க என் நண்பர் கடையை தேடி சென்று கடன் அட்டையை கொடுத்து சீட்டு வாங்கியபின், அவரை தனியே அழைத்து நிலைமையை எடுத்து சொல்லி கடன் அட்டையை செலுத்தி பணம் கொடுக்குமாறு கேட்டேன்.

அவரும் சற்று யோசித்து விட்டு, கடன் அட்டையை தேய்க்கும் போது வரும் வரியையும் நீங்களே கொடுத்து விட வேண்டும். மேலும் நாளை இவர் நான் எந்த பொருளும் வாங்கவில்லை என்று ஏதாவது எனக்கு பிரச்சனை வந்தால் நீங்கள்தான் பொறுப்பு, காரணம் நான் உங்களை நம்பித்தான் பணம் கொடுக்கிறேன் என்று சொல்ல, நான் பொறுப்பேற்று கொண்டேன்.

இப்படி பணம் கிடைத்ததும் கிட்டதட்ட தேவையான தொகையை நெருங்கி விட்டோம், இன்னும் மிக சிறிய தொகை மற்றும் நாளை மறுநாள் பயணத்தின் போது அவர் கைசெலவுக்கு சிறிது பணம், இதுதான் இப்போதைய தேவை. அதை நான் தருவதாக சொல்ல அப்போதுதான் அவர் முகம் பீதியில் இருந்து வெளியேவந்தது.

ஒரு டாக்ஸ்யை பிடித்து மீண்டும் அவருடைய அலுவலகம் வந்து எல்லா தொகையையும் கட்டிவிட்டு, எல்லா ஒப்பந்த பேப்பர்களையும் சரியாக முடித்து விட்டதாக எழுதி வாங்கிகொண்டு பாஸ்போர்ட்டுடன் திரும்ப வந்து விட்டேம்.

அடுத்த நாள் சிறிது சாக்லேட்களை அவர் வீட்டிற்கு வங்கி கொடுத்து விட்டு, எங்களுடன் தங்க வைத்து ஊருக்கு அனுப்பும் வரை, இந்த அனுபவத்தையும் முன் பின் தெரியாத எனக்கு நீங்கள் செய்த உதவியையும் என் வாழ்நாளில் என்றும் மறக்கவே மாட்டேன் என்பதையே திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டு இருந்தார்.

இவ்வளவு படித்திருந்தும் வெளிநாட்டு மோகத்தால் என்ன நிலை என்று பார்த்தீர்களா, என்று மட்டும்தான் நான் அவருக்கு பதில் சொன்னேன்.

இனி வருவது அவருக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் தேவையான சில அடிப்படை தகவல்கள் கண்டிப்பாக பயன்படும்.

எந்த ஒரு நாட்டுக்கு செல்வதானாலும், ஒரு ஒப்பந்தத்தில் கையப்பம் இடும் முன் தெளிவாக படித்து புரிந்த பின் கையப்பம் இடுங்கள்.

கையப்பம் இடும் இரண்டு தரப்புக்கும் பொது மொழியில் ஒப்பந்தம் இல்லாவிட்டால், அதன் ஆங்கில பதிப்பை கட்டாயம் கேட்டு வாங்குங்கள்.

கையப்பம் இடும் எந்த ஒரு ஒப்பந்த நகலையும் உங்களுடன் ஒப்பந்தம் முடியும் வரை கட்டாயம் வைத்து இருங்கள்.

சில அடிப்படை தொழிலாளர் வேலை முறை தவிர, வேறு எந்த உயர் பதவிக்கும், உங்கள் பாஸ்போட்டை வாங்கிவிட முடியாது. அப்படி வாங்கும் பட்சத்தில் நீங்கள் பாஸ்போட்டை கொடுத்த சான்று ஏதாவது உங்களிடம் கட்டாயம் இருக்க வேண்டும்.

எந்த ஒரு ஒப்பந்தம் அல்லது பாஸ்போர்டையும் யாரிடமும் கொடுக்கும் முன் எல்லா பக்கத்தையும் நகல் எடுத்து வைத்து கொள்ளுங்கள்.

வெளிநாடு செல்லும் போது அங்குள்ள நண்பர்கள் முகவரி, யாருமில்லாத பட்சத்தில் அங்கிருந்து நீங்கள் திரும்ப வர , அதுவரை தேவையான உங்கள் கையிருப்பு பணத்தை வைத்திருங்கள்.

கடன் அட்டையை நம்பி செல்லும் பட்சத்தில், இந்தியாவில் இருந்து வெளியே செல்லும் முன் சம்மந்த பட்ட வங்கியை தொடர்பு கொண்டு உங்கள் கடன் அளவு, நேரடியாக பணம் எடுக்கும் அளவு மற்றும் நீங்கள் செல்லும் நாட்டில் இந்த கடன் அட்டை வேலை செய்யுமா என்று உறுதி படுத்தி கொள்ளுங்கள்.

இவை அனைத்தையும் விட என் சொந்த அனுபாவத்தில் சொல்கிறேன்.

வெளிநாட்டு வேலை என்பது, குடும்ப சூழ்நிலை, வேலையின்மை மற்றும் வேறு வழியில்லாமல் வருபவர்களுக்குதானே தவிர, இப்படி அரசாங்க உயர் பதவிகளை உதறி விட்டு வருவதற்கு அல்ல, என்பதை எப்போதும் மனதில் வைத்திருங்கள், உங்களுக்கு தெரிந்தவர்களிடமும் எடுத்து சொல்லுங்கள்.

நன்றி!.
 

Blogger Widgets