Monday, December 7, 2009

வெளிநாட்டு வேலையும்! உலக சந்தையும்!

முன்பு பாரின் கால் என்ற தலைப்பில் எழுதிய பதிவில் பிரியமுடன் வசந்தின் பின்னூட்டதிற்கு, பின்பு ஒரு பதிவில் இதை பற்றி பார்ப்போம் என்று சொன்னதின் தொடர்ச்சியாக கூட இந்த பதிவை எடுத்துக்கொள்ளலாம்.

உலகசந்தை பொதுமயமாகிவிட்டது என்றால் "என்னது ஒபாமா அமெரிக்க அதிபராகிவிட்டாரா!" என்பது போலத்தான் என்று நான் அறிவேன், அதுவல்ல இப்பதிவின் நோக்கம்.

கடந்த இருபது ஆண்டுகளில் நடந்த வெளிநாட்டு வாழ்க்கை முறை மாற்றத்தை பற்றி முழுதாக புரிந்து கொள்ளாமல், நம் நாட்டில் இன்னும் வெளிநாட்டு வேலை மோகத்தில் இருப்பது வருந்ததக்கது.

வெளிநாட்டு வேலை மூலம், குறுகிய காலத்தில் அதிக பணம் சம்பாதிக்க முடியும் என்ற நம்பிக்கை கூட இதற்க்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம்.

முதலில் ஒன்றை தெளிவு படுத்த வேண்டும், உலகின் இயற்கை தத்துவத்தின் படி ஒரு விதையை இழந்தால்தான் ஒரு விருச்சத்தை பெற முடியும், இதை யாராலும் மாற்ற முடியாது.

ஆனால், இதில் கவனிக்க வேண்டியது இழப்பது ஒரு விதையானாலும் அந்த விருச்சதின் மூலம் கிடைப்பது பல என்பதை கருத்தில் கொள்ளவேண்டும்.

வரலாற்றை திரும்பி பார்த்தால் ரப்பர் தோட்டத்திலும், அடிமட்ட கூலி வேலைக்கும், நம் மக்கள் இடம் பெயர்ந்து சென்றார்கள்.

பின்னாளில் காலம் மாற கல்வி கூட, தகுந்த வசதிகளுடன் கூடிய நாட்டுக்கு வேலைக்கு சென்றார்கள் (இது கூட ஒருவகை ரிமிக்ஸ் கூலி வேலை என்பதுதான் உண்மை).

ஆரம்பத்தில் ஒவ்வொரு நாட்டின் பண வீக்கத்தை பொருத்து, வேலைக்கு சென்ற நாட்டில் அடிப்படை வாழ்க்கையை சிக்கனமாக வாழ்ந்து அதில் மிச்ச படுத்திய பணத்தை நம் நாட்டில் கொண்டு வந்து மாற்றும் போது அது அவர்களுக்கு பெரிய பலனை தந்தது, அது அந்த காலம்.

அப்போது உலகசந்தையும் பொதுமயமாக இல்லை, எனவே ஒரு நாட்டில் தயாரிக்க படும் பிரபல பொருட்கள் அந்தந்த நாட்டில் இருந்து ஏற்றுமதி செய்ய பட்டு, நம் நாட்டில் இறக்குமதி விற்பனையுடன் சேர்த்து சந்தைக்கு வரும் போது அதன் விலை அதிகமாக இருந்தது, இதனால் அப்பொருட்களை அந்தந்த நாட்டில் குறைந்த விலையில் வாங்க முடிந்தது.

அது மட்டுமிலாமல், அப்போது நம் நாட்டில் வெளிநாட்டு பொருள்கள் கிடைப்பது மிக அரிதாக இருந்தது, ஆனால் இன்று மொபைல் போன் முதல் மெர்சிடிஸ்-பென்ஸ் வரை தயாரிக்க படுவதே நம் நாட்டில் என்பது தான் உண்மை .

காரணம் குறைந்த விலையில் தயாரிப்பு பொருட்கள், குறைந்த ஊதியம் மட்டுமிலாமல் குறைந்த சலுகைகள் கொடுத்தாலே கிடைக்கும் தொழிலாளர்கள், இட வசதி, சுற்று புற சூழல் கேடு என அனைத்தும் வேறு நாடுகளை சேர்வதால், இன்று உலக நாடுகளின் பெரும்பாலான தயாரிப்புகள், இந்தியா மற்றும் சீனாவுக்கு மாற்றப்பட்டு விட்டது.

இதன் காரணமாக, முன்பு போல் இல்லாமல் அனைத்து தரப்பு வேலைகளும் இப்போது நம் நாட்டில் கிடைக்கிறது, ஊதியமும் கிட்டதட்ட வெளிநாட்டுக்கு நிகராக இப்போது நம் நாட்டிலேயே பெற முடிகிறது.

ஆனால், இப்போதைய தேவை "இளைய தலைமுறைகள்", இவர்கள் வெளிநாட்டில் மட்டும் வேலை செய்ய நினைக்காமல் நம் நாட்டிற்கு தங்கள் உழைப்பை கொடுக்க முன் வர வேண்டும்.



வருடம் ஒருமுறை விடுமுறைக்கு வரும் உறவினர்கள் மற்றும் நண்பர்களை வைத்து வெளிநாட்டு வாழ்கையை எடை போடாதீர்கள் நண்பர்களே!.

தெளிவாக பார்த்தால் அன்றும் இன்றும் நம்மை வெளிநாட்டு நிறுவங்கள் அதிகமாக அங்கிகரிக்கும் முறை இரண்டே இரண்டுதான்.

I - அடிமட்ட கூலி தொழிலாளர்கள்

II - நடுத்தர தகுதி அடிப்படை தொழிலாளர்கள்

இவை இல்லாமல் மேல் தரத்தில் ஆராய்ச்சி போன்ற துறைகளில் செல்பவர்கள் விரல் விட்டு விட்டு எண்ணும் அளவில் தான் இருக்க கூடும், அப்படியே சென்றாலும் அவர்கள் தலைமை அதிகாரியாக இருப்பது அதிசையம் தான்.

அடிமட்ட தொழிலாளர்கள்

முதல் வரியில் சொன்னது போல், இன்றும் நம் மக்கள் இந்த வரிசையில் முன்னிலையில் இருப்பது வேதனைக்குரியது, இவர்களை வெளிநாட்டு ஒப்பந்த வேலைக்கு கவர்வது மிக எளிது. இங்கு இந்தியாவில் மாதம் ஆறாயிரம் கிடைக்கும் வேலைக்கு, அங்கு அறுபதாயிரம் என்ற ஒரு வரி விளம்பரம் போதும்.

இதில் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் தொடர்பில் வருபவர்கள் தேவலம். ஆனால், இடை தரகர்கள் பேச்சை நம்பி இரண்டு முதல் மூன்று லட்சங்கள் செலவு செய்து, அதுவும் கடன் வாங்கி, இந்த வேலைக்கு வருபவர்கள் நிலை சொல்ல முடியாத வலியை கொடுக்கும்.

இவர்களை பொறுத்த வரை தங்கும் இடம் இலவசம், போக மாதம் அறுபதாயிரம் ஊதியம், இதில் மாதம் ஐம்பதாயிரம் மிச்ச படுத்தினால் கூட, வருடம் ஆறு லட்சங்கள் சேர்த்து விடலாம், என்பதுதான் இவர்களின் ஆரம்ப கனவாக இருக்கும்.

ஆனால், இவர்களில் முதல் முறை வரும் பலருக்கும் இங்கு அறுபதாயிரம் என்பது நம் ஊரில் ஆறாயிரம் கிடைப்பதை விட குறைவு என்ற பொருளியல் விபரம் தெரிவதில்லை.

மேலும் இங்குள்ள வேலைமுறை பெரும்பாலும் அவர்களுக்கு சரியான முறையில் எடுத்து சொல்லப்படுவதில்லை, அதிலும் தவறான இடை தரகர்கள் கையில் மாட்டுபவர்களின் நிலை மிக பரிதாபம், குறிப்பாக பெண்கள்.

குறைந்தது பனிரெண்டு மணிநேரம் முதல் பதினெட்டு மணி நேரம் வரை ஓய்வில்லாத கடும் வேலை, மாதத்தில் ஒரு நாள் மட்டும் தங்கி இருக்கும் இடத்தை விட்டு வெளியில் வர அனுமதி, என்று மூன்று வருட இறுதியில் வாங்கிய கடன் வட்டியுடன் கட்டியது போக, மிஞ்சுவது என்னவோ ஒரு ஐம்பது ஆயீரம்தான் என்று சொன்னார்கள்.

இப்படி பார்த்தால், இங்கு இழப்பது ஒரு விதையல்ல, ஒரு இளைஞனின் மூன்று வருட வாழ்க்கை.

(நூறு இளைஞர்களை கொடு, இந்த நாட்டின் தலைஎழுத்தையே மாற்றி காட்டுகிறேன்!, என்று விவேகானந்தர் சொன்னதை இங்கு சற்று நாம் நினைத்து பார்க்க வேண்டும்).

கர்பமாக இருக்கும் மனைவியை விட்டுவிட்டு வெளிநாடு சென்று, பின் தன் சொந்த குழந்தையை மற்றும் குடும்பத்தை மூன்று வருடம் கழித்து நேரில் பார்த்தவர்களின் கதை எல்லாம் இதில் உண்டு.

இதை பற்றி நான் கேட்டறிந்ததை எழுத முடியுமே தவிர, அதன் உண்மை வலியை, என் வார்த்தைகளால் உணர்த்த முடியாது.

ஆனால், இதை அனுபவித்தவர்கள் ஒரு வழிகாட்டியாக இருந்து, இனி வரும் நம் தலைமுறைக்கு எடுத்து சொல்லி, அவர்களின் வெளிநாட்டு வேலை மோகத்தை அறவே நீக்க முடியும் இல்லையா?.

அப்படியும் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் இது போல செல்ல இருப்பவர்களை, தகுந்த தரகர், நல்ல நிறுவனம், மேலும் சரியான வேலை முறையை தேர்ந்து எடுக்க வேண்டும்.

மேலும் எந்த ஒரு ஒப்பந்தத்திலும் கையப்பம் இடும்முன், அருகில் உள்ள அரசாங்க வெளிநாட்டு வேலை ஆலோசனை மையத்தை தொடர்புகொண்டு, இவை அனைத்தும் சரியான தகவல்களா? மற்றும் தான் செல்ல விருக்கும் விசாமுறை சரியானதா? என்று ஆலோசனை பெற்று, அதன் பிறகு செல்ல வழிகாட்ட வேண்டும்.

நடுத்தர தகுதி அடிப்படை தொழிலாளர்கள்

அடுத்தது படித்த, தொழில் தகுதி அடிப்படையில் வரும் நம் கணினி துறை உட்பட நடுத்தர பணியாளர்கள்.

படித்து முடித்ததும் முடியாததும், தனக்கு மட்டுமே திறமை இருப்பதாகவும் அதை நம் நாடு மதிக்கவில்லை என்று குறை சொல்பவர்களும் இதில் உண்டு.

ஆக, இவர்கள் படித்தவர்கள், நடுதரத்தில் இருந்து மேல் மட்டம் செல்ல துடிப்பவர்கள்.

எதோ ஒரு பதிவில் படித்த படி, "இந்த குடும்பத்தின் எதிர் காலமே உன் கையில் தான் இருக்கிறது என்று தலையில் திருநீறு போட்டு விமான சீட்டை கையில் கொடுத்து அனுப்பிய தமிழ்நாடும், ஆந்திராவும்தான் இதில் அதிகம்".

அடிமட்ட வசதி (அப்பா அம்மா சம்பாதித்தது) இருப்பதால் மேல் சொன்ன முறையில் இவர்களை வெறும் ஊதியத்தை சொல்லி, ஒரு வரி விளம்பரத்தில் கவர முடியாது.

ஆனால், இவர்களை கவர்வது அதை விட எளிது, ஏன் என்றால்! இவர்களின் அடுத்த தேவை, நாகரீக வாழ்க்கை முறை, நவீன வீடு மற்றும் குறிப்பாக "கார்".

எனவே, அதையே சற்று பெரிதாக, சொந்த வீடு, கார், மருத்துவ காப்பீடு மற்றும் வெளி நாட்டு குடியுரிமைக்கு நிறுவ பரிந்துரை என்று அதுவும் ஆங்கிலத்தில் சொன்னால் போதும்.

இதையே வேறு வேறு ஆங்கில வார்த்தைகளை கொண்டு சொல்லி, முடிந்த வரை இவர்கள் ஊதியத்தை குறைக்க அங்கும் ஒரு பச்சை தமிழன் அல்லது பக்கா இந்தியன், மனித வளத்துறை என்ற பெயரில் நுனிநாக்கு ஆங்கிலத்தில் தேனை தடவி பேசி பேசியே விமானத்தில் ஏற்றி விட்டு விடுவார்கள்.



ஒரு வழியாக வண்ண வண்ண கனவுகளுடன் வெளி நாட்டில் வந்து இறங்கியவுடன், அங்கு ஒரு மனிதவளத்துறை குரல் சொல்லும்...

"சார்" (மருவாதி மருவாதியாம்), உங்களுக்கு ஒரு கார், அப்புறம் உங்களுக்கு ஒரு வீடு, நீங்க எந்த மாடல் வேணும்னாலும் தேர்வு செய்யலாம், அதற்கான வங்கி லோன் பணமாற்று, நம் நிறுவன பரிந்துரை மற்றும் உங்கள் ஊதிய சான்று காகிதங்கள் இதில் இருக்கு.

நீங்க வெறும் கையப்பம் மட்டும் போட்டா போதும்னு, படிக்க முடியாத அளவு சின்னதா எழுதி இருக்க ஒரு நூறு காகிதமாவது அதில் "நச்சத்திரம்" போட்ட ஒரு ஆயீரம் ஒப்பத்ததுடன் நம்ம முன்னாடி இருக்கும்.

(இது நாடு, நம்ம நாடும் இருக்கே!, எவனாவது மதிச்சானா? அப்படின்னு மனசுக்கு கீழ பிளாஷ் நியூஸ் ஓடும்).

என்னாடா இது! குடியுரிமை விண்ணப்பம் எதுவுமே இல்லன்னு கேட்டா?

இது எல்லாம் முடிஞ்சு, நீங்க ஒரு மூணு வருஷம் வருமான வரி கட்டியவுடன் வாங்கி விடலாம், அது ஒன்றும் பெரிய விசையம் இல்லை என்று சொல்லி, அப்போதைக்கு சமாளித்து விடுவார்கள்.

நம்மளும் நம்ம கலாச்சார படி "சரி வெள்ளையா இருக்கவன் பொய் சொல்ல மாட்டன்னு நம்பி"... மனசுக்குள்ள "வெற்றி நிச்சியம் இது வேத சத்தியம்" இல்லனா,"வெற்றி கொடி கட்டு"-ன்னு பாட்டு ஓட, சிரிச்ச முகமா (அதுதான் கடைசி சிரிப்பா பலருக்கு இருக்கும்) கையப்பம் போட்டு தள்ளுவோம்.

எல்லாம் முடிஞ்சு, நமக்கு கண்ணு தெளிவா தெரியும் போதுதான், "பிதா மகன் சூர்யா சூதாட வந்த லைலாவிடம் சொல்வது போல் " போல் விசையம் வரும்.

இப்ப பாருங்க (சார் மிஸ்ஸிங்)...கம்பெனி மொதல்லயே சொன்னா மாதிரி...

உங்களோட மாத ஊதியம் இரண்டு லட்சம், இதுல காருக்கான லோனுக்காக மாதம் ஒரு சிறிய தொகையா முப்பது ஆயீரம், இது வெறும் பத்து வருட பிடித்தம்தான்.

அப்புறம் பாருங்க உங்க வீட்டு லோனுக்காக ஒரு சிறிய தொகையா ஒரு தொண்ணூத்தி இரண்டாயீரம் பிடித்தம், இதுவும் ஒரு முப்பது வருடம் தான்.

(இப்படி சொந்த வீடு வாங்காதவர்கள், அதே தொகையை வாடகை வீட்டுக்கு கொடுத்து விட்டு, ரியல் எஸ்டேட் விலையை ராக்கெட் மாதிரி ஏற்றிவிட்ட பெருமையுடன், நம்ம ஊரில் ஒரு மூன்று படுக்கை அறை வீட்டை வாங்கி விட்டு தவணையுடன் வருட பராமரிப்புக்கு ஒரு ஒருலட்சம் வரை கட்டிக்கொண்டு இருப்பார்கள்.)

அத்தோட, உங்கள் மருத்துவ காப்பீடு இதர சகிதங்களுக்காக மாதம் ஒரு ஐய்யாயிரம் பிடித்தம் போக, மீதி தொகை மாதா மாதம் உங்கள் வங்கி கணக்கில் வந்து விடும், மேலும் உங்கள் தேவைக்கு கடன் அட்டைகள் வந்து விடும் என்று சொல்ல, நமக்கு கடைசியாக "செருப்பை வைத்து சூதாடும் லைலா முகம்" போல் ஆகிவிடும்.

வேறு வழி, "உள்ளதை அள்ளித்தா படத்தில் மணிவண்ணனிடம் வேலைக்கு சேரும் கார்த்திக் போல" சேரும்படி ஆகிவிடும்.

ஏன் என்றால்? மீதம் வரும் எழுபதாயீரம் என்பது அடிப்படை மாத செலவுகளுக்கு ஆகும் தொகையை விட சற்று குறைவு (அதற்கு தான் அந்த கடன் அட்டைகள் என்பது இப்போது தான் புரியும்).

ஆக, ஒட்டு மொத்தம் முப்பது வருட இளமையுடன் வாழ்கையை அடகு வைத்தாகி விட்டது.

இனி வரும் வாழ்க்கை சூத்திரம் மிக மிக எளிது.

அந்த கடனை எப்படி கட்டுவது!, இந்த கடனை எப்படி கட்டுவது?, கடனை கட்டும் வரை வேலை போகாமல் எப்படி பாதுகாப்பது!, வேலை போய் விட்டால் மாத தவணையை எப்படி கட்டுவது?, மாத தவணையை கட்ட அடுத்த வேலையை எப்படி பிடிப்பது!?

ஆக மொத்தத்தில் "கடன்+கவலை+மனஉளைச்சல்=வெளிநாட்டு வாழ்க்கை" என்று மாறி விடுவதுதான் அதிகம்.

இதில் இன்னும் கொடுமை, நடுவில் பொருளியல் மந்தம், சுனாமி, குண்டு வெடிப்பு, என்று எது நடந்தாலும் வாங்கிய வீட்டின் விலை குறைந்து விடும்.

ஆனால், வங்கிக்கு வாங்கிய தொகை குறையாது, அதனால் வீட்டை விற்றும் கட்ட முடியாது, இப்படி வாழ்கையில் வெளிநாட்டு பெண் வந்தாலும் சரி அல்லது பெண் பெயரில் புயல் வந்தாலும் சரி, வயிற்றை கலக்குவது இவர்களுக்குத்தான்.



அதெல்லாம் சரி!, அப்படியும் ஏன்? அங்கு இருக்க வேண்டும் என்பது, இங்கு ஒரு கேள்வியாக கூடும்?

மேல் சொன்ன படி இளமை துடிப்பில் விளையாட்டாக ஆரமித்து விட்டதை, முடிக்காமல் அல்லது திரும்ப வந்து அங்கு புதிய வேலை தேடி, அதில் கிடைக்கும் வருமானத்தில் இங்கு இருப்பதை கட்டி முடிக்க முடியுமா? என்று குழம்பித்தான், இன்று அதிக சதவீதம்
இருக்கிறார்கள், என்று சொன்னால் அது தவறாகாது என்று நினைக்கிறேன்.

மேலும் இடைப்பட்ட இந்த காலத்தில், இதை சமாளிக்க அதில் எடுக்க, அதை சமாளிக்க இதில் எடுக்க என்று வயது மட்டும் போய் ஆரமித்த இடத்திலேயே இருப்பவர்களும் உண்டு, கூடவே மன அழுத்தம், ரத்த கொதிப்பு, நீரழிவு போன்று அவரவர் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ற பரிசும் உடலில் சேர்ந்து விடும்.

அவ்வளவு ஏன்! வருடம் ஒரு முறை விடுமுறையில் வந்து விட்டு போனால் கூட, அதை சமாளித்து நடை முறை வாழ்க்கைக்கு திரும்ப குறைந்தது நான்கு மாதமாவது ஆகும், என்று சொல்பவர்களும் உண்டு.

இதற்காக இழந்ததுதான் எத்தனை எத்தனை, வாழ்க்கை, வயது, சுற்றம், சொந்தம், நட்பு, இத்யாதி...இத்யாதி...

இது உண்மையா! இல்லையா? என்று சந்தேகம் வந்தால், பத்து வருடங்களுக்கு மேல் வெளிநாட்டில் இருக்கும் யாரையும் கேளுங்கள் (சிங்கப்பூர், மலேசியா போன்று அருகில் இருக்கும் நாட்டை தவிர).

சக நிகழ்வாக, அவர்கள் வந்திருக்கும் நேரத்தில் நடந்ததை தவிர, இந்த இடைப்பட்ட வருடங்களில் எத்தனை திருவிழாக்ளில், திருமணங்களில் அல்லது துக்கத்தில் கலந்து கொண்டீர்கள் என்று?.

இப்படி, தன்னை தானே தனிமை படுத்தி, இங்கு இருபதாயிரம் வாங்கும் ஒருவர் வாழும் அதே வாழ்கையை அங்கு இரண்டு லட்சம் என்ற பெயரில் வாழ்வதுதான் இன்றைய வெளிநாட்டு வாழ்கை.

இதில் நம் கலாச்சாரத்தின் வாடையே இல்லாமால், இயந்திரத்தோடு இயந்திரமாய் வளரும் குழந்தைகளின் நிலை சொல்லவா வேண்டும்.

கொஞ்சி மடியில் விளையாட வேண்டிய உறவுகளை, மாமா, தாத்தா, பாட்டி என்று தனக்கு தானே தனியாக தொலைபேசியில் நலம் விசாரித்து விளையாடுவது வார்த்தைகளில் சொல்ல முடியாத ஒன்று.

உலகிலேயே நாம்தான் மென் பொருள் தயாரிப்பில் சிறந்த அறிவாளிகள், ஆனால் நம் நாட்டை விட வெளிநாடுதான் நம்மை மதிக்கிறது என்று சொன்ன அனைவரிடமும் நான் கேட்டது ஒன்றே ஒன்றுதான்.

உலகிலேயே மென் பொருள் தயாரிப்பில் நாம்தான் சிறந்த அறிவாளிகள் என்பது உண்மையானால், நம்மை விட மென்பொருள் தயாரிப்பு அறிவில் குறைந்தவர்கள், எப்படி நம் தயாரிப்பை சோதித்து உலக தரமானது என்று ISO, BS சான்றிதழ் கொடுக்க முடியும்?

அதை வாங்க நாம் அல்லது நம் நிறுவனங்கள், ஏன் போட்டா போட்டி போட வேண்டும்?

ஆக, நமக்கு அன்றும் இன்றும் சிறந்த தொழிலாளியாக இருக்க மட்டுமே தெரியும், அவர்களுக்கு சிறந்த முதலாளியாக இருக்க தெரியும் என்பதுதான் உண்மை.

இதை வரும் தலைமுறைகளுக்கு எடுத்து சொல்லி, அதே உழைப்பை நாம், நம் சொந்த நாட்டுக்கு செய்வதன் மூலம், அடுத்து வரும் நம் தலைமுறை நம்மை போல சிறந்த தொழிலாளியாக மட்டும் இல்லாமல், உலக தரம் வாய்ந்த முதலாளியாக இருக்க முடியும் இல்லையா?

அதன் பின் நாம் ICIS (Indian Certified International Standard) என்று மற்றவர்களுக்கு சான்றிதழ் கொடுக்க முடியும் இல்லையா?

இனி வரும் நம் தேசத்தின் வருங்கால தூண்கள், இதை சற்று சிந்தித்து பார்க்க வேண்டும் என்பதே என் விருப்பம், நோக்கம்.

பதிவை முடிக்கும் முன் கடைசியாக, ஒரு முறை விமானத்தில் சந்தித்த சீக்கியர் ஒருவர் சொன்ன வார்த்தை, என் மனதை விட்டு இன்றுவரை நீங்கவே இல்லை.

நம் தென்இந்தியாவில் காலில் செருப்பு கூட இல்லாமல் வெறும் வேட்டி துண்டுடன் வரும் ஒரு விவசாயியை பார்த்தால், அவரிடம் அத்தனை நில சொத்துக்களும் கையிருப்பு பணமும் தானியமும் இருக்கும்.

ஆனால், என்னதான் நாம் காரில் வெளிநாட்டு முத்திரையோடு சுற்றி வந்தாலும், நம் தபால் பெட்டியில் கடிதத்தை விட கடன் தவனை ரசீதுதான் அதிகம் இருக்கும்.

என்றுதான் மாறுமோ இந்த வெளிநாட்டு மோகம்?.
 

Blogger Widgets