Wednesday, September 30, 2009

திருநங்கைக(ளை)ளுக்கு எதுவுமே செய்யவேண்டாம்

I - ஆமாம் கண்டிப்பாக, ஏன்? என்றால் அவர்கள் விபச்சாரம் செய்கிறார்கள், அல்லது தகாத முறையில் அணுகி பணம் கேட்டு தொல்லை கொடுக்கிறார்கள் என்று நினைத்த "நல்லவர்கள்".

II - அதெப்படி இவன் இப்படி சொல்லலாம், எதுவுமே செய்யாவிட்டால்! எப்படி அவர்கள் இந்த சமுதாயத்தில் முன்னேற முடியும்?

"மாட்னான்டா மச்சான்"......வா உள்ள போய் பின்னூட்டத்த போட்டு இவன கிழிப்போம் என்று நினைத்த "ரொம்ப நல்லவர்கள்".

தலைப்பில் "(ளை)" விட்டு விட்டு நீங்கள் படித்திருந்தால்! இந்த பதிவிற்குள் நீங்கள் வந்ததன் நோக்கம், மேல் சொன்ன இரண்டில் ஒன்றாகவே இருக்கும் என்பதை நான் அறிவேன், உண்மையில் இந்த இரண்டு காரணமுமே இல்லாமல்! நீங்கள் வந்து இருந்தால் உங்களுக்கு கூடுதலாக ஒரு நன்றி :-)).

இப்படி இந்த இரண்டு நோக்கத்தில், எந்த நோக்கத்தோடு நீங்கள் வந்து இருந்தாலும், பதிவை முழுவதும் படித்ததும் "அடடா வடை போச்சே" என்று பின்னூட்டம் போடும் முன் புலம்ப போவதுதான் உண்மை.

அதனால "ஓவர் டென்சன ஓரமா ஒதுக்கி வச்சுட்டு" முழு பதிவையும் படிங்க மக்களே.



சரி, இனி முதல் I-காரணத்தை பார்போம்.

தகாத முறையில் அணுகி பணம் கேட்டு தொல்லை கொடுக்கிறார்கள் மற்றும் விபச்சாரம் செய்கிறார்கள், என்பது ஏற்றுக்கொள்ள வேண்டிய கருத்தாயினும், அதன் காரணத்தையும் கண்டிப்பாய் நாம் இங்கு பார்க்க வேண்டும் இல்லையா?

திருநங்கை அல்லாத வேறு ஆண் திருடவோ, பிச்சை எடுக்கவோ அல்லது பணம் பிடுங்கவோ செய்யவில்லையா?

திருநங்கை அல்லாத வேறு பெண் பாலியல் தொழில், விபச்சாரம் செய்யவில்லையா?

பின் ஏன்? அப்படி பட்டவர்களுக்கு கொடுக்கும் அடிப்படை அங்கிகாரம் கூட, திருநங்கைகளுக்கு கிடைப்பதில்லை? என்பதை இங்கு நாம் கண்டிப்பாக நினைத்துப்பார்க்க வேண்டும்.

"வாழ வழியில்லாத தன் குடும்பத்தை காப்பாற்ற, கதையின் நாயகி தன் உடலை விற்கிறாள்", அல்லது "கதையின் நாயகன் சிறு வயதில் ஒரு நேர உணவுக்காக திருட ஆரபித்து, தனக்கு பணம் கொடுகாதவர்களை அடித்து, வளர்ந்து பின்னாளில் மிக பெரிய உலக கடத்தல் மன்னனாக வருகிறான்."

இந்த கருவை சார்ந்த திரைகதை எனக்கு தெரிந்த வரை, எல்லா மொழிகளிலும் எடுக்கப்பட்டு வெற்றிவாகை சூடிய திரை படங்கள் ஆகும், இதை நாம் ஏற்றுக்கொள்வோம், கொண்டாடி விருதும் கொடுப்போம், ஏன்? என்றால் அது வெறும் பொழுதுபோக்குகாக மட்டும்.

இதுவே நம் சமுதயாத்தில் நமக்கு நடுவில் நடந்தால்? நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகிவிடுகிறது இல்லையா?

எப்படி? என்று சிந்தித்து பார்த்தால், சொந்த வீட்டில், சொந்த நாட்டில் வாழ அங்கிகாரம் இல்லை, வேலை செய்ய தயாராய் இருந்தாலும், படித்த படிப்பையே ஏற்க மறுக்கும் சமுதாயம், மொத்தத்தில் உயிர் வாழ வேறு எந்த வழியுமே இல்லை?

இந்த சூழ்நிலையில், இங்கு ஒரு மனித உயிர் என்னதான் செய்யமுடியும்?

இன்னும் சற்று சிந்தித்து பார்த்தால், எங்கோ கண்டம் தாண்டி இந்தியன் தாக்கப்பட்டால் இங்கிருந்து குரல் கொடுக்கிறோம்...கடல் தாண்டி தமிழன் தாக்கப்பட்டால் இங்கிருந்து குரல் கொடுக்கிறோம் (குரல் மட்டும்தான் கொடுக்கிறோம் என்பது வேறு விசையம்)...நம் நாட்டில் நம்மை சுதந்திரமாக வாழவிடவில்லை என்று வெள்ளைகாரனை வரலாறாக்கி, இன்றும் நம் தலைமுறைகளை படிக்க செய்கிறோம் இல்லையா?.

ஆனால், நம் நாட்டில், நம்முடன் பிறந்த மக்களை, நாமே வாழ விடாமல், எல்லா வழிகளையும் நசுக்கி, அவர்களை சமுதாயத்தில் நம்மில் ஒருவராக ஏற்க மறுப்பதை! என்னவென்று சொல்லுவது? இதை ஒழிக்க இன்னும் எந்த "சுபாஸ் சந்திரபோஸ்" பிறப்புக்கு நாம் காத்திருக்கிறோம்?.

உலகிலேயே உயர்ந்த வலி என்று சொல்லப்படும் "பிரசவ வழியை விட அதிகமான உடல் வலியை திருநங்கையாக மாற அவர்கள் அடைகிறார்கள்", ஆனால் தினம் தினம் அதை விட கொடிய மனவலிகளை மட்டுமே இந்த சமுதாயத்தில் நாம் அவர்களுக்கு தருகிறோம் என்பதே மறுக்கமுடியாத உண்மை.

அதனால், முதலில் நல்ல முறையில் வாழ அவர்களுக்கு இந்த சமுதாயத்தில் ஒரு சமஇடத்தை கொடுத்து விட்டு, அதன் பின் கணக்கு எடுத்துப் பார்த்தால், நிச்சியமாக பாலியல் மற்றும் பிச்சை எடுக்கும் திருநங்கைகள் எண்ணிக்கை அதை தொழிலாக செய்யும் மற்ற ஆண், பெண்ணை விட வெகுகுறைவாகவே இருக்கும் என்பது இங்கு என் கருத்து.



இங்கு இடைமறிக்கும் இரண்டாம் - II -காரணத்தை பார்போம்.

அதெல்லாம் சரி, எதுவுமே செய்யவேண்டாம் என்று எப்படி சொல்லலாம்? பின் அவர்கள் எப்படி முன்னேறுவார்கள்? என்பதுதான் இங்கு கேள்வியாகக்கூடும்.

முதலில் தனிப்பட்ட முறையில், நாம் இதுவரை என்ன நல்லது செய்து விட்டோம்? என்று நினைத்து பார்க்கவேண்டும்!

அதனால் திரும்ப சொல்கிறேன் "திருநங்கைகளுக்கு நாம் எதுவுமே செய்யவேண்டாம்!..... அப்படியே கீழே ஒவ்வென்றாக "ஓதாமல் ஒரு நாளும் இருக்கவேண்டாம்" ரைமிங்ள படிங்க.

திருநங்கைகளோடு பேசுவதும் பழகுவதும், அவர்களைப் பற்றி பேசுபவர்களும் திருநங்கையாக மட்டுமே இருக்க முடியும் என்று தவறாக நினைக்க வேண்டாம்.

திருநங்கைகளை கண்டால் அவர்கள் மனம்,உடல் காயப்படும் படி பேசவோ, துன்புருத்தவோ வேண்டாம்.

அவர்கள் எதாவது தேவைப்படும் நோக்கத்தில் நம்மை அணுகினால், பாலியல் நோக்கத்தோடு அல்லது பிச்சை கேட்ட மட்டுமே அணுகுவதாய் நினைக்க வேண்டாம்.

அப்படியே பண உதவி (பிச்சை என்று கூட சொல்ல வேண்டாமே) கேட்டு வந்தால் உதவ மனம் இல்லாவிட்டால், அவர்களை இழிவு படுத்தி பேசவோ அடிக்கவோ வேண்டாம்.

உங்களை நாடி வருபவர்களுக்கு நீங்கள் உதவ நினைத்தாலும், பரிதாபத்தை காட்டி அவர்கள் தாழ்வு மனப்பன்மையை வளர்க்கும் விதமாக எதுவும் செய்துவிட வேண்டாம்.

மனிதனாய் பிறந்த அனைவரும் சமம் அதனால், பொது இடங்களில், நடை முறை வாழ்கையில் அவர்களை வித்தியாசப்படுத்தி தனிமைப் படுத்த வேண்டாம்.

வெறும் அரசியல் ஆதாயம், விளம்பரத்துக்கு மட்டும் அவர்களை பயன்படுத்த வேண்டாம்.

தகுதியும் திறமையும் உள்ளவர்களுக்கு கிடைக்கும் தகுந்த வேலை வாய்ப்பை கெடுக்க வேண்டாம்.

ஆண்கள், பெண்கள் சேர்ந்து போகும் நண்பர்கள் கூட்டத்தில் திருநங்கைகள் இருக்கக்கூடாது என்று நினைக்க வேண்டாம்.

நாம் இப்படி "எதுவுமே செய்யாமல் இருந்தால்", அதுவே அவர்கள் இந்த சமுதாயத்தில் முன்னேற நல்ல வழி வகுக்கும்.

எப்படி என்றால்,

முதலில் இந்த சமுதாயத்தில் நமக்கு இடம் இல்லை என்கிற தாழ்வு மனப்பான்மை விலகும், இதனால் ஒரு ஆணையோ அல்லது பெண்ணையோ போல், நாமமும் இந்த சமுதாயத்தில் வாழ முடியும் என்ற தன்னபிக்கை பிறக்கும்.

வாழ வழியும், சக மக்களின் அன்பும் ஆதரவும் கிடைத்து அவர்களும் இந்த சமுதாயத்தில் சமமாக மதிக்கப்படும் போது, மற்றவர்களைப்போல கண்ணியமான வாழ்கை வாழ அவர்களும் கல்வி, கலையை வளர்த்துக் கொள்வார்கள்.

இதனால் அவர்களுக்கு பிச்சை மற்றும் பாலியல் தொழிலில் ஈடுபடும் அவசியம் இருக்காது.

இப்படி மற்றவர்களை போல அவர்களாகவே தங்களை வளர்த்துக்கொள்ள முடியும், ஆகையால் நம் அன்றாட வாழ்கையை விட்டு விட்டு, திருநங்கைகள் முன்னேற்றத்துக்காக நாம் தனியாக பெரிய தியாகம் எதுவும் செய்ய வேண்டியது இல்லை, அவர்களையும் சமமாக சமுதாயத்தில் நடத்துவதை தவிர.

சரி, இப்படி செய்வதால் என்ன ஆகும்?

ஒவ்வொரு தனி மனிதனும், இப்படி செய்தால், வெகு சீக்கிரத்தில் ஆண், பெண் இருக்கும் எல்லா இடத்திலும் எல்லா துறைகளிலும் நம்மில் ஒருவராக சக்தியின் அம்சமான திருநங்கைகளை பார்க்க முடியும், அதன் பின் தான் நாம் கொண்டாடும் சுதந்திர தினத்துக்கும் ஒரு உண்மையான அர்த்தம் இருக்கும்.

ஆகவே திருநங்கைகளுக்கு முடிந்த வரை அன்றாட வாழ்கையில் வலியை கொடுத்து, தீண்டாமை கொடுமை பண்ணி, அவர்கள் முன்னேற்றத்க்கு முட்டுகட்டை போடாமல் இருந்தாலே போதும் என்பதே இந்த பதிவவின் நோக்கம்.

இந்த பதிவில் "நாம்" என்று என்னையும் சேர்த்து சொன்னதன் நோக்கம், சமுதாயத்தில் நானும் ஒருவன் என்பது மட்டுமல்லாமல், இந்தியாவில் இருந்த காலத்தில் டெல்லியில், ஒரு சில நூறு ரூபாய் நோட்டுக்களை கொடுத்து உதவியதை தவிர, நானும் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் பெரிதாக ஒன்றும் செய்துவிடவில்லை என்பதே உண்மை.

மேலும் இதுவரை எனக்கு, திருநங்கை(கள்) நட்பு கிடைத்தது இல்லை, இனி கிடைத்தால் ஒரு நல்ல நண்பனாக, அவர்கள் மனதை புரிந்து கொள்ள முயர்ச்சி செய்ய எனக்கு எந்த தயக்கமும் இல்லை.



திருநங்கை வரலாறு, நாம் அனைவரும் அறிந்தது என்றாலும், தெரியாமல் வருபவர்களுக்கு இங்கு சொடுக்கி,"திருநங்கைகள் வரலாறு" தெரிந்து கொண்டு, சக்தியின் அம்சமான திருநங்கைகளை அந்த கடவுளின் குழந்தைகளை வணக்காவிட்டாலும், சமமாக மதித்து நட்புடன் பழக கற்றுக்கொள்ளுங்கள்.

சரி, இவ்வளவு பெரிய பதிவை திருநங்கைகளை பற்றி எழுதி விட்டு, அவர்களுக்கு பயன் படும் எந்த தகவலும் இல்லாமல்! எப்படி பதிவை முடிப்பது?

இதோ திருநங்கைகளுக்கு ஒரு நல்ல தகவல்.

அரவாணிகளுக்கு உதவி செய்வதற்காகவே சென்னை அண்ணாநகர் மேற்குவள்ளலார் காலனியில் “இந்தியன் கம்யூனிட்டி வெல்பர் அசோசியேஷன்” (ஐசிடபிள்யூஓ) செயல்பட்டு வருகிறது.

அரவாணிகள் பற்றி மக்களிடம் உள்ள எண்ணத்தை மாற்றி, அவர்களையும் நம்மில் ஒருவராக நினைத்து பழக இந்த அமைப்பு பல்வேறு விழிப்புணர்வு பிரசாரத்தை செய்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக ஐ.சி.டபிள்யூ.ஓ. சார்பில் அரவாணிகளுக்கு அகில இந்திய அளவில் அழகிப் போட்டி நடத்தப்பட உள்ளது. இதில் வெற்றி பெறும் அழகிக்கு "மிஸ் இந்தியா" பட்டம் வழங்கப்படும். இந்தியாவில் இப்படி ஒரு போட்டி நடக்க இருப்பது இதுவே முதல் தடவையாகும்.

கூவாகம் உள்பட பல இடங்களில் அரவாணி களுக்கு நடத்தப்படும் அழகிப்போட்டிகளில் குறிப்பிட்ட பகுதிகளில் உள்ளவர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். அரவாணி மிஸ் இந்தியா போட்டியில் எல்லா மாநிலங்களில் இருந்தும் சுமார் 150 அரவாணிகள் கலந்து கொள்கிறார்கள்.

அரவாணிகளிடம் உள்ள திறமைகளை வெளிப்படுத்த சென்னையில் டிசம்பர் மாதம் 19-ந்தேதி இந்த அழகிப்போட்டி நடத்தபட உள்ளது.

உலக அழகிப்போட்டிகளில் நடத்தப்படுவது போலவே இந்த அழகிப்போட்டி நடக்கும். அரவாணிகளின் அணிவகுப்பு, ஒய்யார நடை, நவீன உடைஅலங்காரம் இடம்பெறும். இறுதியில் கேள்வி- பதில் சுற்றும் உண்டு.

வெற்றிபெறும் அரவாணிக்கு மிஸ் இந்தியாபட்டத்துடன் 10 ஆயிரம் ரூபாய் பரிசு கொடுக்கப்படும். 2-வது இடம் பிடிக்கும் அரவாணிக்கு ரூ.7,400, 3-வது இடம் பிடிப்பவருக்கு ரூ.5,000 பரிசு கொடுக்கப்படும். இதுதவிர அழகான கூந்தல், அழகான கண், அழகான தோல் கொண்ட அரவாணிகளும் தேர்வாகி பரிசு பெறுவார்கள்.

இந்த போட்டியில் பங்கேற்கும் அரவாணிகள் தங்கள் திறமைகளை வெளிபடுத்த வாய்ப்பு கொடுக்கப்படும். அதுமட்டுமின்றி தங்களுக்குள்ள குறைகள், பிரச்சினைகள் சொல்லவும் இந்த மேடை அரவாணிகளுக்கு ஒரு வாய்ப்பாக இருக்கும்.

அரவாணி மிஸ் இந்தியா போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் அரவாணிகள் 26184392, 65515742 மற்றும் 98401 88821 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு ஐ.சி.டபிள்யூ.ஓ. செயலாளர் ஏ.ஜே.ஹரிஹரன் தினசெய்தித்தாள் ஒன்றில் கூறி உள்ளார்.


உங்கள் வருகைக்கு நன்றி!.
 

Blogger Widgets