Wednesday, September 30, 2009

திருநங்கைக(ளை)ளுக்கு எதுவுமே செய்யவேண்டாம்

I - ஆமாம் கண்டிப்பாக, ஏன்? என்றால் அவர்கள் விபச்சாரம் செய்கிறார்கள், அல்லது தகாத முறையில் அணுகி பணம் கேட்டு தொல்லை கொடுக்கிறார்கள் என்று நினைத்த "நல்லவர்கள்".

II - அதெப்படி இவன் இப்படி சொல்லலாம், எதுவுமே செய்யாவிட்டால்! எப்படி அவர்கள் இந்த சமுதாயத்தில் முன்னேற முடியும்?

"மாட்னான்டா மச்சான்"......வா உள்ள போய் பின்னூட்டத்த போட்டு இவன கிழிப்போம் என்று நினைத்த "ரொம்ப நல்லவர்கள்".

தலைப்பில் "(ளை)" விட்டு விட்டு நீங்கள் படித்திருந்தால்! இந்த பதிவிற்குள் நீங்கள் வந்ததன் நோக்கம், மேல் சொன்ன இரண்டில் ஒன்றாகவே இருக்கும் என்பதை நான் அறிவேன், உண்மையில் இந்த இரண்டு காரணமுமே இல்லாமல்! நீங்கள் வந்து இருந்தால் உங்களுக்கு கூடுதலாக ஒரு நன்றி :-)).

இப்படி இந்த இரண்டு நோக்கத்தில், எந்த நோக்கத்தோடு நீங்கள் வந்து இருந்தாலும், பதிவை முழுவதும் படித்ததும் "அடடா வடை போச்சே" என்று பின்னூட்டம் போடும் முன் புலம்ப போவதுதான் உண்மை.

அதனால "ஓவர் டென்சன ஓரமா ஒதுக்கி வச்சுட்டு" முழு பதிவையும் படிங்க மக்களே.



சரி, இனி முதல் I-காரணத்தை பார்போம்.

தகாத முறையில் அணுகி பணம் கேட்டு தொல்லை கொடுக்கிறார்கள் மற்றும் விபச்சாரம் செய்கிறார்கள், என்பது ஏற்றுக்கொள்ள வேண்டிய கருத்தாயினும், அதன் காரணத்தையும் கண்டிப்பாய் நாம் இங்கு பார்க்க வேண்டும் இல்லையா?

திருநங்கை அல்லாத வேறு ஆண் திருடவோ, பிச்சை எடுக்கவோ அல்லது பணம் பிடுங்கவோ செய்யவில்லையா?

திருநங்கை அல்லாத வேறு பெண் பாலியல் தொழில், விபச்சாரம் செய்யவில்லையா?

பின் ஏன்? அப்படி பட்டவர்களுக்கு கொடுக்கும் அடிப்படை அங்கிகாரம் கூட, திருநங்கைகளுக்கு கிடைப்பதில்லை? என்பதை இங்கு நாம் கண்டிப்பாக நினைத்துப்பார்க்க வேண்டும்.

"வாழ வழியில்லாத தன் குடும்பத்தை காப்பாற்ற, கதையின் நாயகி தன் உடலை விற்கிறாள்", அல்லது "கதையின் நாயகன் சிறு வயதில் ஒரு நேர உணவுக்காக திருட ஆரபித்து, தனக்கு பணம் கொடுகாதவர்களை அடித்து, வளர்ந்து பின்னாளில் மிக பெரிய உலக கடத்தல் மன்னனாக வருகிறான்."

இந்த கருவை சார்ந்த திரைகதை எனக்கு தெரிந்த வரை, எல்லா மொழிகளிலும் எடுக்கப்பட்டு வெற்றிவாகை சூடிய திரை படங்கள் ஆகும், இதை நாம் ஏற்றுக்கொள்வோம், கொண்டாடி விருதும் கொடுப்போம், ஏன்? என்றால் அது வெறும் பொழுதுபோக்குகாக மட்டும்.

இதுவே நம் சமுதயாத்தில் நமக்கு நடுவில் நடந்தால்? நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகிவிடுகிறது இல்லையா?

எப்படி? என்று சிந்தித்து பார்த்தால், சொந்த வீட்டில், சொந்த நாட்டில் வாழ அங்கிகாரம் இல்லை, வேலை செய்ய தயாராய் இருந்தாலும், படித்த படிப்பையே ஏற்க மறுக்கும் சமுதாயம், மொத்தத்தில் உயிர் வாழ வேறு எந்த வழியுமே இல்லை?

இந்த சூழ்நிலையில், இங்கு ஒரு மனித உயிர் என்னதான் செய்யமுடியும்?

இன்னும் சற்று சிந்தித்து பார்த்தால், எங்கோ கண்டம் தாண்டி இந்தியன் தாக்கப்பட்டால் இங்கிருந்து குரல் கொடுக்கிறோம்...கடல் தாண்டி தமிழன் தாக்கப்பட்டால் இங்கிருந்து குரல் கொடுக்கிறோம் (குரல் மட்டும்தான் கொடுக்கிறோம் என்பது வேறு விசையம்)...நம் நாட்டில் நம்மை சுதந்திரமாக வாழவிடவில்லை என்று வெள்ளைகாரனை வரலாறாக்கி, இன்றும் நம் தலைமுறைகளை படிக்க செய்கிறோம் இல்லையா?.

ஆனால், நம் நாட்டில், நம்முடன் பிறந்த மக்களை, நாமே வாழ விடாமல், எல்லா வழிகளையும் நசுக்கி, அவர்களை சமுதாயத்தில் நம்மில் ஒருவராக ஏற்க மறுப்பதை! என்னவென்று சொல்லுவது? இதை ஒழிக்க இன்னும் எந்த "சுபாஸ் சந்திரபோஸ்" பிறப்புக்கு நாம் காத்திருக்கிறோம்?.

உலகிலேயே உயர்ந்த வலி என்று சொல்லப்படும் "பிரசவ வழியை விட அதிகமான உடல் வலியை திருநங்கையாக மாற அவர்கள் அடைகிறார்கள்", ஆனால் தினம் தினம் அதை விட கொடிய மனவலிகளை மட்டுமே இந்த சமுதாயத்தில் நாம் அவர்களுக்கு தருகிறோம் என்பதே மறுக்கமுடியாத உண்மை.

அதனால், முதலில் நல்ல முறையில் வாழ அவர்களுக்கு இந்த சமுதாயத்தில் ஒரு சமஇடத்தை கொடுத்து விட்டு, அதன் பின் கணக்கு எடுத்துப் பார்த்தால், நிச்சியமாக பாலியல் மற்றும் பிச்சை எடுக்கும் திருநங்கைகள் எண்ணிக்கை அதை தொழிலாக செய்யும் மற்ற ஆண், பெண்ணை விட வெகுகுறைவாகவே இருக்கும் என்பது இங்கு என் கருத்து.



இங்கு இடைமறிக்கும் இரண்டாம் - II -காரணத்தை பார்போம்.

அதெல்லாம் சரி, எதுவுமே செய்யவேண்டாம் என்று எப்படி சொல்லலாம்? பின் அவர்கள் எப்படி முன்னேறுவார்கள்? என்பதுதான் இங்கு கேள்வியாகக்கூடும்.

முதலில் தனிப்பட்ட முறையில், நாம் இதுவரை என்ன நல்லது செய்து விட்டோம்? என்று நினைத்து பார்க்கவேண்டும்!

அதனால் திரும்ப சொல்கிறேன் "திருநங்கைகளுக்கு நாம் எதுவுமே செய்யவேண்டாம்!..... அப்படியே கீழே ஒவ்வென்றாக "ஓதாமல் ஒரு நாளும் இருக்கவேண்டாம்" ரைமிங்ள படிங்க.

திருநங்கைகளோடு பேசுவதும் பழகுவதும், அவர்களைப் பற்றி பேசுபவர்களும் திருநங்கையாக மட்டுமே இருக்க முடியும் என்று தவறாக நினைக்க வேண்டாம்.

திருநங்கைகளை கண்டால் அவர்கள் மனம்,உடல் காயப்படும் படி பேசவோ, துன்புருத்தவோ வேண்டாம்.

அவர்கள் எதாவது தேவைப்படும் நோக்கத்தில் நம்மை அணுகினால், பாலியல் நோக்கத்தோடு அல்லது பிச்சை கேட்ட மட்டுமே அணுகுவதாய் நினைக்க வேண்டாம்.

அப்படியே பண உதவி (பிச்சை என்று கூட சொல்ல வேண்டாமே) கேட்டு வந்தால் உதவ மனம் இல்லாவிட்டால், அவர்களை இழிவு படுத்தி பேசவோ அடிக்கவோ வேண்டாம்.

உங்களை நாடி வருபவர்களுக்கு நீங்கள் உதவ நினைத்தாலும், பரிதாபத்தை காட்டி அவர்கள் தாழ்வு மனப்பன்மையை வளர்க்கும் விதமாக எதுவும் செய்துவிட வேண்டாம்.

மனிதனாய் பிறந்த அனைவரும் சமம் அதனால், பொது இடங்களில், நடை முறை வாழ்கையில் அவர்களை வித்தியாசப்படுத்தி தனிமைப் படுத்த வேண்டாம்.

வெறும் அரசியல் ஆதாயம், விளம்பரத்துக்கு மட்டும் அவர்களை பயன்படுத்த வேண்டாம்.

தகுதியும் திறமையும் உள்ளவர்களுக்கு கிடைக்கும் தகுந்த வேலை வாய்ப்பை கெடுக்க வேண்டாம்.

ஆண்கள், பெண்கள் சேர்ந்து போகும் நண்பர்கள் கூட்டத்தில் திருநங்கைகள் இருக்கக்கூடாது என்று நினைக்க வேண்டாம்.

நாம் இப்படி "எதுவுமே செய்யாமல் இருந்தால்", அதுவே அவர்கள் இந்த சமுதாயத்தில் முன்னேற நல்ல வழி வகுக்கும்.

எப்படி என்றால்,

முதலில் இந்த சமுதாயத்தில் நமக்கு இடம் இல்லை என்கிற தாழ்வு மனப்பான்மை விலகும், இதனால் ஒரு ஆணையோ அல்லது பெண்ணையோ போல், நாமமும் இந்த சமுதாயத்தில் வாழ முடியும் என்ற தன்னபிக்கை பிறக்கும்.

வாழ வழியும், சக மக்களின் அன்பும் ஆதரவும் கிடைத்து அவர்களும் இந்த சமுதாயத்தில் சமமாக மதிக்கப்படும் போது, மற்றவர்களைப்போல கண்ணியமான வாழ்கை வாழ அவர்களும் கல்வி, கலையை வளர்த்துக் கொள்வார்கள்.

இதனால் அவர்களுக்கு பிச்சை மற்றும் பாலியல் தொழிலில் ஈடுபடும் அவசியம் இருக்காது.

இப்படி மற்றவர்களை போல அவர்களாகவே தங்களை வளர்த்துக்கொள்ள முடியும், ஆகையால் நம் அன்றாட வாழ்கையை விட்டு விட்டு, திருநங்கைகள் முன்னேற்றத்துக்காக நாம் தனியாக பெரிய தியாகம் எதுவும் செய்ய வேண்டியது இல்லை, அவர்களையும் சமமாக சமுதாயத்தில் நடத்துவதை தவிர.

சரி, இப்படி செய்வதால் என்ன ஆகும்?

ஒவ்வொரு தனி மனிதனும், இப்படி செய்தால், வெகு சீக்கிரத்தில் ஆண், பெண் இருக்கும் எல்லா இடத்திலும் எல்லா துறைகளிலும் நம்மில் ஒருவராக சக்தியின் அம்சமான திருநங்கைகளை பார்க்க முடியும், அதன் பின் தான் நாம் கொண்டாடும் சுதந்திர தினத்துக்கும் ஒரு உண்மையான அர்த்தம் இருக்கும்.

ஆகவே திருநங்கைகளுக்கு முடிந்த வரை அன்றாட வாழ்கையில் வலியை கொடுத்து, தீண்டாமை கொடுமை பண்ணி, அவர்கள் முன்னேற்றத்க்கு முட்டுகட்டை போடாமல் இருந்தாலே போதும் என்பதே இந்த பதிவவின் நோக்கம்.

இந்த பதிவில் "நாம்" என்று என்னையும் சேர்த்து சொன்னதன் நோக்கம், சமுதாயத்தில் நானும் ஒருவன் என்பது மட்டுமல்லாமல், இந்தியாவில் இருந்த காலத்தில் டெல்லியில், ஒரு சில நூறு ரூபாய் நோட்டுக்களை கொடுத்து உதவியதை தவிர, நானும் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் பெரிதாக ஒன்றும் செய்துவிடவில்லை என்பதே உண்மை.

மேலும் இதுவரை எனக்கு, திருநங்கை(கள்) நட்பு கிடைத்தது இல்லை, இனி கிடைத்தால் ஒரு நல்ல நண்பனாக, அவர்கள் மனதை புரிந்து கொள்ள முயர்ச்சி செய்ய எனக்கு எந்த தயக்கமும் இல்லை.



திருநங்கை வரலாறு, நாம் அனைவரும் அறிந்தது என்றாலும், தெரியாமல் வருபவர்களுக்கு இங்கு சொடுக்கி,"திருநங்கைகள் வரலாறு" தெரிந்து கொண்டு, சக்தியின் அம்சமான திருநங்கைகளை அந்த கடவுளின் குழந்தைகளை வணக்காவிட்டாலும், சமமாக மதித்து நட்புடன் பழக கற்றுக்கொள்ளுங்கள்.

சரி, இவ்வளவு பெரிய பதிவை திருநங்கைகளை பற்றி எழுதி விட்டு, அவர்களுக்கு பயன் படும் எந்த தகவலும் இல்லாமல்! எப்படி பதிவை முடிப்பது?

இதோ திருநங்கைகளுக்கு ஒரு நல்ல தகவல்.

அரவாணிகளுக்கு உதவி செய்வதற்காகவே சென்னை அண்ணாநகர் மேற்குவள்ளலார் காலனியில் “இந்தியன் கம்யூனிட்டி வெல்பர் அசோசியேஷன்” (ஐசிடபிள்யூஓ) செயல்பட்டு வருகிறது.

அரவாணிகள் பற்றி மக்களிடம் உள்ள எண்ணத்தை மாற்றி, அவர்களையும் நம்மில் ஒருவராக நினைத்து பழக இந்த அமைப்பு பல்வேறு விழிப்புணர்வு பிரசாரத்தை செய்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக ஐ.சி.டபிள்யூ.ஓ. சார்பில் அரவாணிகளுக்கு அகில இந்திய அளவில் அழகிப் போட்டி நடத்தப்பட உள்ளது. இதில் வெற்றி பெறும் அழகிக்கு "மிஸ் இந்தியா" பட்டம் வழங்கப்படும். இந்தியாவில் இப்படி ஒரு போட்டி நடக்க இருப்பது இதுவே முதல் தடவையாகும்.

கூவாகம் உள்பட பல இடங்களில் அரவாணி களுக்கு நடத்தப்படும் அழகிப்போட்டிகளில் குறிப்பிட்ட பகுதிகளில் உள்ளவர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். அரவாணி மிஸ் இந்தியா போட்டியில் எல்லா மாநிலங்களில் இருந்தும் சுமார் 150 அரவாணிகள் கலந்து கொள்கிறார்கள்.

அரவாணிகளிடம் உள்ள திறமைகளை வெளிப்படுத்த சென்னையில் டிசம்பர் மாதம் 19-ந்தேதி இந்த அழகிப்போட்டி நடத்தபட உள்ளது.

உலக அழகிப்போட்டிகளில் நடத்தப்படுவது போலவே இந்த அழகிப்போட்டி நடக்கும். அரவாணிகளின் அணிவகுப்பு, ஒய்யார நடை, நவீன உடைஅலங்காரம் இடம்பெறும். இறுதியில் கேள்வி- பதில் சுற்றும் உண்டு.

வெற்றிபெறும் அரவாணிக்கு மிஸ் இந்தியாபட்டத்துடன் 10 ஆயிரம் ரூபாய் பரிசு கொடுக்கப்படும். 2-வது இடம் பிடிக்கும் அரவாணிக்கு ரூ.7,400, 3-வது இடம் பிடிப்பவருக்கு ரூ.5,000 பரிசு கொடுக்கப்படும். இதுதவிர அழகான கூந்தல், அழகான கண், அழகான தோல் கொண்ட அரவாணிகளும் தேர்வாகி பரிசு பெறுவார்கள்.

இந்த போட்டியில் பங்கேற்கும் அரவாணிகள் தங்கள் திறமைகளை வெளிபடுத்த வாய்ப்பு கொடுக்கப்படும். அதுமட்டுமின்றி தங்களுக்குள்ள குறைகள், பிரச்சினைகள் சொல்லவும் இந்த மேடை அரவாணிகளுக்கு ஒரு வாய்ப்பாக இருக்கும்.

அரவாணி மிஸ் இந்தியா போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் அரவாணிகள் 26184392, 65515742 மற்றும் 98401 88821 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு ஐ.சி.டபிள்யூ.ஓ. செயலாளர் ஏ.ஜே.ஹரிஹரன் தினசெய்தித்தாள் ஒன்றில் கூறி உள்ளார்.


உங்கள் வருகைக்கு நன்றி!.

24 பின்னூட்டம்:

SUFFIX said...

திருநங்கைகள் குறித்து விளக்கமான பதிவு, ஆனால் என்றோ தொடங்கியது அவர்களின் மீது மாற்றமான மட்டமான பார்வை, இன்றும் தொடர்கிறது அந்த அவலம், தாங்கள் கூறிய "ஐசிடபிள்யூஓ", அவர்களை மறுபடியும் காட்சிப் பொருளாக்கி சந்தையில் கவர்ச்சியை விளம்பரப்படுத்தாமல், வேறு ஏதாவது உபயோகமான முயற்சி செய்து இருக்கலாமே!!

சிங்கக்குட்டி said...

நன்றி ஷ‌ஃபிக்ஸ்.


//இன்றும் தொடர்கிறது அந்த அவலம்//

என்ற உங்கள் கருத்தை மக்கள் மத்தியில் அகற்றவே அவர்களின் இந்த முயற்சியில் இறங்கி இருக்க கூடும் என்பது என் கணிப்பு,

உபயோகமான வேறு நல்ல முயற்சி பற்றிய கருத்து உங்களிடம் இருக்குமாயின் நீங்களும் அவர்களிடம் தெரிவிக்காலாம்.

அல்லது பின்னூட்டத்தில் சொல்லுங்கள், நான் அந்த தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டு சொல்ல முயற்சிக்கிறேன்.

Anonymous said...

திருநங்கைகள் குறித்து நல்லதொரு பதிவு..ஆனால் இப்பொழுதெல்லாம் அவர்க்கு அங்கீகாரம் வழங்கப்படுவதாகவே எண்ணுகிறேன்..முன்னாடி போல் இல்லை இப்பொழுது இன்றே தோன்றுகிறது.என் வீட்டில் பக்கத்தில் உள்ள ஒரு பலசரக்கு கடையில் ஒரு திருநங்கை தான் சூப்பர்வைசர்ராக இருக்கிறார்கள்..ரொம்ப ரொம்ப நல்ல சமுதாயத்திற்கு தேவைப்படுகிற பதிவு சிங்கக்குட்டி..வாழ்த்துக்கள்.


அன்புடன்,

அம்மு.

Anonymous said...

//அரவாணிகளிடம் உள்ள திறமைகளை வெளிப்படுத்த சென்னையில் டிசம்பர் மாதம் 19-ந்தேதி இந்த அழகிப்போட்டி நடத்தபட உள்ளது.

உலக அழகிப்போட்டிகளில் நடத்தப்படுவது போலவே இந்த அழகிப்போட்டி நடக்கும். அரவாணிகளின் அணிவகுப்பு, ஒய்யார நடை, நவீன உடைஅலங்காரம் இடம்பெறும். இறுதியில் கேள்வி- பதில் சுற்றும் உண்டு. //


இப்படியெல்லாம் "அரவாணிகளுக்கும் உண்டு" என்று சொல்வதே அவர்களை சமுதாயத்திலிருந்து பிரிப்பது போல் ஆகிவிட்டதாகவே எண்ணுகிறேன்..பொதுவாக நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் அவர்களும் பங்கு பெரும் நாள் வர வேண்டும்...இப்படி தனியாக வைப்பதற்கு பதிலாக உலக அழகி போட்டியில் அவர்களை பங்கு பெற செய்யலாமே..

என் கருத்தை சொன்னேன்..ஏதேனும் தவறிருப்பின் நீக்கிவிடுங்கள்...

அன்புடன்,

அம்மு.

Anonymous said...

//வளர்த்துக்கொள்ள முடியும், ஆகையால் நம் அன்றாட வாழ்கையை விட்டு விட்டு, திருநங்கைகள் முன்னேற்றத்துக்காக நாம் தனியாக பெரிய தியாகம் எதுவும் செய்ய வேண்டியது இல்லை, அவர்களையும் சமமாக சமுதாயத்தில் நடத்துவதை தவிர. //


உண்மை..


அன்புடன்,

அம்மு.

சிங்கக்குட்டி said...

நன்றி அம்மு.

ஆனால்,

//அங்கீகாரம் வழங்கப்படுவதாகவே எண்ணுகிறேன்//

என்பது உண்மை என்று எனக்கு தோணவில்லை?

எந்த அலுவலகத்தில்,துறையில் திருநங்கை ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமாக மதித்து வேலை கொடுக்க படுகிறாகள்?

சிங்கக்குட்டி said...

அம்மு,

//இப்படியெல்லாம் "அரவாணிகளுக்கும் உண்டு" என்று சொல்வதே அவர்களை சமுதாயத்திலிருந்து பிரிப்பது போல் ஆகிவிட்டதாகவே எண்ணுகிறேன்//

உண்மை, இதில் என்னுடைய கருத்து பதிவு மட்டுமே.

திருநங்கைகளுக்கு ஒரு தகவலாக "ஐசிடபிள்யூஓ"-வின் செய்தியை பகிர்ந்து கொண்டேனே தவிர அது என் சொந்த செய்தி அல்ல, மேலும் உங்கள் கருத்து எனக்கும் சரி என்றே படுகிறது.

ஆனாலும், பிறப்பால் ஆண் அல்லது பெண் என்று குறிப்பிட முடியாத யாரும் எந்த நாட்டு அல்லது உலக போட்டியிலும் கலந்து கொள்ள முடியாது என்ற சட்டம் உங்களுக்கும் தெரியும் என்று நினைக்கிறன்.

சிங்கக்குட்டி said...

//உலக அழகி போட்டியில் அவர்களை பங்கு பெற செய்யலாமே//

யார் செய்வார்கள் என்று நினைகிறீர்கள்?!

நாம் தான் செய்ய வேண்டும் அம்மு.

திருநங்கை பங்கு பெறாத உலக அழகி போட்டியை எந்த நிகழ்சியிலும் வரவேற்க மாட்டோம் என்று எல்லா தொலைகாட்சியும் பத்திரிக்கையும் அறியும் படி நாம் தான் செய்ய வேண்டும்.

மீண்டும் என் பதிவில் உங்கள் நேரத்துக்கு என் நன்றி! தொடரட்டும் நம் நட்பு :-))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

திருநங்கைகளுக்கு வாழ்க்கைதுணையாக வர விரும்புபவர்களுக்கு என்று கல்கி அவர்கள் ஒரு தளம் வடிவமைத்திருப்பதாக லிவிங்ஸ்மைல் பதிவில் பார்த்தேன்.

(தகவலுக்காக)

ராமலக்ஷ்மி said...

மிக நல்ல இடுகை சிங்கக்குட்டி.

Menaga Sathia said...

திருநங்கைகள் பற்றிய பதிவு நல்லாயிருக்கு சிங்கக்குட்டி.
அவர்களை நினைத்து சிலநேரம் மனம் வருத்தப்படும்.பெற்றோர்கள்+குடும்பாத்தார்கள்+உறவினர்கள்+சமுதாய மக்களால் அவர்கள் புறக்கணிக்கப்படும்போது அவர்கள்மனம் என்னபாடுபடும் என்று நினைப்பேன்.ஆனால் இன்று அந்த நிலை மாறியிருக்கு என்று சொல்வேன்.ஏன்னா அவர்களை 9,அரவாணிகள் என்று அழைத்தகாலம் போய் த்ருநங்கைகள் என்று கூப்பிடுகிறோமே.அதுவே ஒரு சந்தோஷம்+மரியாதை அவர்களுக்கு.எது எப்படியோ அவங்களும் ஒரு நல்ல நிலைக்கு வரணும்.

duraisamy said...

Arumaiyana oru pathivu, ethe ennam enakkum ondu.

சிங்கக்குட்டி said...

நன்றி முத்துலெட்சுமி,ராமலக்ஷ்மி, மேனகா மற்றும் துரைசாமி

சிங்கக்குட்டி said...

தகவலுக்கு நன்றி நானும் அந்த தகவலை தேடி படிக்கிறேன் முத்துலெட்சுமி.

சிங்கக்குட்டி said...

உண்மை மேனகா,

பட்டை பெயரை மாற்றி சொல்ல வைப்தல்ல நம் நோக்கம்.

அவர்களும் நம்மில் ஒருவர் என்ற சகோதர மனப்பான்மையை, அன்றாட வாழ்கையில் உருவாக்குவதே இந்த பதிவின் நோக்கம்.

Unknown said...

yes your padivu is right. But one thing, you forget, the behaviour of thirunangai like paanparag or mava chewing, bad smell/dressing, forcefull with gents or fmly mens in public places, bad spiting these kind of activities they should change, then only comman man can move with them for recognition. Hope i am not hurt any one.

சிங்கக்குட்டி said...

உண்மை ராஜு.

ஆனால் நான் பதிவில் சொன்ன படி...இந்த சமுதாயத்தில் நமக்கு இடம் இல்லை என்கிற தாழ்வு மனப்பான்மை விலகும் படி நாம் அவர்களுக்கு நம்பிக்கை தரும்படி செய்யவேண்டும் இல்லையா?

அதுவே இந்த பதிவின் முயற்சி.

உங்கள் முதல் வருகைக்கு என் நன்றி.

கிரி said...

சிங்கக்குட்டி நல்லா வித்யாசமா யாரும் அதிகம் எழுதாத பகுதிய எழுதி இருக்கீங்க வாழ்த்துக்கள்

திருநங்கைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகள் தவிர்க்க முடியாதது என்று கருதுகிறேன், காரணம் மக்கள் காலம் காலமாக அப்படியே பழகி விட்டார்கள்..அதில் இருந்து வர காலம் எடுக்கும்.

திருநங்கைகள் ஒருசிலர் பொது இடங்களில் ஆபாசமாக நடந்து கொள்வதும் மக்களின் வெறுப்பிற்கு காரணம், இதை போல செய்பவர்களால் அனைவருக்கும் கெட்ட பெயர் ஏற்படுகிறது, நல்ல முறையில் வாழ நினைப்பவர்களுக்கு கூட சங்கடங்கள் ஏற்படுகின்றன.

தற்போது திருநங்கைகள் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே ஏற்பட்டுள்ளது, இருந்தாலும் நமது மக்கள் அடுத்த வீட்டில் சிறு பிரச்சனை ஏற்பட்டால் அதையே மூக்கு முழி வைத்து பேசுபவர்கள் எனவே இதை எல்லாம் ஒதுக்கி நல்ல விதமாக சிந்தித்து அவர்களை ஏற்றுக்கொள்ள நீண்ட காலம் பிடிக்கும், ஆனால் மாறாதது அல்ல.

நம்மை பல நூறு ஆண்டுகள் ஆண்ட ஆங்கிலேயன் சென்ற பிறகும் இன்னும் படித்தவர்கள் நன்கு திறமை உள்ளவர்கள் கூட ஒரு ஆங்கிலேயனிடம் வழிந்து பேசுவதில்லையா! மொக்கை ஜோக்கிற்கு சிரிப்பது இல்லையா....இன்னும் நம் மனதில் அந்த அடிமை புத்தி போகாததையே காட்டுகிறது.. இதற்க்கு காலம் எடுக்கும்.

அது போல திருநங்கைகளை சாதாரணமாக என்னும் காலமும் வரும் ஆனால் அதற்கும் காலம் எடுக்கும்..உடனே நடக்காது..எதிர்ப்பார்க்கவும் முடியாது.

இதை போல பதிவுகளையும் அவ்வப்போது எழுத உங்களை கேட்டுக்கொள்கிறேன்

சிங்கக்குட்டி said...

உங்கள் அன்புக்கு மிக்க நன்றி மேனகா :-)

சிங்கக்குட்டி said...

உண்மை கிரி.

ஒதுக்கப்படும் வெறுப்பின் உச்சதில் "ஒருசில" திருநங்கைகள் பொது இடங்களில் ஆபாசமாக நடந்து கொள்வது உண்டு, இந்த நிலை இரு பக்கமும் ஒரு நாள் மாறும்.

மேலும் ஆங்கிலேய காலம் போல் இல்லாமல் இப்போது படித்த மக்கள் சதவீதம் அதிகம் இருக்கும் மாறு பட்ட தலைமுறை இருப்பதால், அதை போல இது நீண்ட காலம் எடுக்காது என்பது என் நம்பிக்கை.

என்னால் முடிந்த வரை இது போல பதிவுகளை எழுத் முயற்சிக்கிறேன், உங்கள் ஊக்கத்துக்கு மீண்டும் என் நன்றி.

ரவி said...

சிறப்பாக எழுதியிருக்கீங்க சிங்கக்குட்டி. உங்களிடமிருந்து இதுபோல நிறைய எதிர்பார்க்கிறேன்...!!!!

சிங்கக்குட்டி said...

வாங்க செந்தழல் ரவி, உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

(காதல் பட வசனம் மாதிரி சொல்லலைன்னு நினைக்கிறன் :-))...)

நீங்கள் கொரியாவில் இருப்பதாய் யாரோ ஒரு பதிவில் அல்லது பின்னூட்டத்தில் படித்த நியாபகம்?? அப்படியா?

cheena (சீனா) said...

அன்பின் சிங்கக்குட்டி

சமுதாயப் பார்வை அருமை - பல ஆண்டுகளாக துன்பத்தையே அனுபவித்த திருநங்கைகள் கொஞ்சம் கொஞ்சமாக கவனிக்கப்பட்டு - அரசாலும் சில நல்ல உள்ளங்களாலும் - மதிக்கப்படும் நிலையினை அடைந்திருக்கிறார்கள் - இன்னும் காலம் செல்லச் செல்ல நிலை மாறும். ஆண் பெண் போலவே மூன்றாம் இனம் உருவாகும். சம அந்தஸ்து அடையும் காலம் வரும்.

நல்ல சிந்தனை - நல்வாழ்த்துகள்

சிங்கக்குட்டி said...

உங்கள் வருகைக்கும் நல்ல கருத்துக்கும் மிக்க நன்றி சீனா.

பல நாடுகளில் அவர்கள் மற்ற மக்களுக்கு சமமாக மதிக்கப்படுவதை பார்க்கும் போதெல்லாம் நம் நாடு எப்போது இப்படி மாறும் என்ற எண்ணம் வரும்.

Post a Comment

 

Blogger Widgets