Saturday, October 10, 2009

பதினெட்டு சித்தர்கள்

சித்தர்கள் என்றல் யார்? என்றும் தமிழ் சித்தர்கள் பதினெட்டு என்றும் கிடைத்த தகவல்களை பார்த்தோம்.

அருளும், அன்பும், சிவமும், அளவற்ற சக்தியையும் ஒருங்கே பெற்றுள்ள அந்த பதினெட்டு சித்தர்கள் திரு உருவங்களும், பெயரும், இன்றும் அவர்கள் அருள் தரும் சன்னதிகளின் விவரம் பற்றி தகவல்களை இங்கு பார்ப்போம்.

1- திருமூலர் - சிதம்பரம்

2- இராமதேவர் - அழகர்மலை

3- அகஸ்தியர் - திருவனந்தபுரம்

4- கொங்கணர் - திருப்பதி

5- கமலமுனி - திருவாரூர்

6- சட்டமுனி - திருவரங்கம்

7- கரூவூரார் - கரூர்

8- சுந்தரனார் - மதுரை

9- வான்மீகர் - எட்டிக்குடி

10- நந்திதேவர் - காசி

11- பாம்பாட்டி சித்தர் - சங்கரன்கோவில்

12- போகர் - பழனி

13- மச்சமுனி - திருப்பரங்குன்றம்

14- பதஞ்சலி - இராமேஸ்வரம்

15- தன்வந்திரி - வைதீஸ்வரன்கோவில்

16- கோரக்கர் - பேரூர்

17- குதம்பை சித்தர் - மாயவரம்

18- இடைக்காடர் - திருவண்ணாமலை

பதினெட்டு சித்தர்கள்களின் திரு உருவங்கள்.மேல் சொன்ன பதினெண் சித்தர்களும் சமாதியான ஸ்தலங்களைப் பற்றி குறிப்பிடும், நெற்கட்டும் செவல் மன்னர் பூலித்தேவர் காலத்தில் உள்ள பழைய ஓலைச்சுவடியின் சான்று.

ஆதி காலத்திலே தில்லை திருமூலர்
அழகுமலை இராமதேவர்
அனந்த சயன கும்பழனி திருப்பதி கொங்கணவர்
கமலமுனி ஆரூர்
சோதி அரங்க சட்டமுனி கருவை கருவூரார்
சுந்தரானந்தர் கூடல்
சொல்லும் எட்டிக்குடியில் வான்மீகரோடு நற்
றாள் காசி நந்திதேவர்
ப்லாதி அரிச்சங்கரன் கோவில் பாம்பாட்டி
பழனி மலை போகநாதர்
திருப்பரங்குன்றமதில் மச்சமுனி
பதஞ்சலி இராமேசுவரம்
சோதி வைத்தீஸ்வரம் கோவில் தன்சந்திரி பேரையூர்
கோரக்கர் மாயூரங்குதம்பர்
திருவருணையோர் இடைக்காட சமாதியிற்
சேர்ந்தனர் எமைக் காக்கவே.

இது தவிர, மதுரை அழகர் கோவிலின் முன்பாக பதினெட்டாம் படி கருப்பண்ணசாமியாக உள்ள "பதினெட்டு படிகளும்", இந்த பதினெட்டு சித்தர்கள் ஆவார்கள். இவர்களுக்கு இங்கு ஆடி பதினெட்டு அன்று சிறப்பு பூசை நடைபெறுகிறது.

முதலில் சொன்னது போல், இந்த பதினெண் சித்தர்கள் பெயரிலும் பல கருத்தக்கள் கிடைக்கின்றன, அவற்றில் எனக்கு கிடைத்த சில,

1. கும்ப முனி, 2. நந்தி முனி, 3. கோரக்கர், 4. புலிப்பாணி, 5. புகண்ட ரிஷி, 6. திருமுலர், 7. தேரையர், 8. யூகி முனி, 9. மச்சமுனி, 10. புண்ணாக்கீசர், 11. இடைக்காடர், 12. பூனைக் கண்ணன், 13. சிவவாக்யர், 14. சண்டிகேசர், 15. உரோமருஷி, 16. சட்டநாதர், 17. காலாங்கி, 18. போகர் என்று கருவூரார் எழுதிய அட்டமாசித்து நூல் கூறுகிறது.

1. அகத்தியர், 2. போகர், 3. நந்தீசர், 4. புண்ணாக்கீசர், 5. கருவூரார், 6. சுந்தரானந்தர், 7. ஆனந்தர், 8. கொங்கணர், 9. பிரம்மமுனி, 10. உரோமமுனி, 11. வாசமுனி, 12. அமலமுனி, 13. கமலமுனி, 14. கோரக்கர், 15. சட்டைமுனி, 16. மச்சமுனி, 17. இடைக்காடர், 18. பிரம்மமுனி என்கிறது நிஜானந்த போதம்.

1. அகத்தியர், 2. போகர், 3. கோரக்கர், 4. கைலாசநாதர், 5. சட்டைமுனி, 6. திருமுலர், 7. நந்தி, 8. கூன் கண்ணன், 9. கொங்கனர், 10. மச்சமுனி, 11. வாசமுனி, 12. கூர்மமுனி, 13. கமலமுனி, 14. இடைக்காடர், 15. உரோமருஷி, 16. புண்ணாக்கீசர், 17. சுந்தரனானந்தர், 18. பிரம்மமுனி என்கிறது அபிதான சிந்தாமணி.

இனி இந்த சித்தர்ககள் வாழ்ந்த மற்றும் வாழும் காலத்தை இங்கு பார்ப்போம்.

எண் - சித்தரின் பெயர் - பிறந்த மாதம் - நட்சத்திரம் - வாழ்நாள் - சமாதியடைந்த இடம்.


1- திருமூலர் - புரட்டாதி – அவிட்டம் - 3000 வருடம் 13 நாட்கள் – சிதம்பரம்.

2- இராமதேவர்– மாசி – பூரம் - 700 வருடம் 06 நாட்கள் – அழகர்மலை.

3- அகத்தியர் – மார்கழி – ஆயில்யம் - 4யுகம் 48 நாட்கள் - திருவனந்தபுரம்.

4- கொங்கணர் – சித்திரை – உத்திராடம் - 800 வருடம் 16 நாட்கள் – திருப்பதி.

5- கமலமுனி – வைகாசி – பூசம் - 4000 வருடம் 48 நாட்கள் திருவாரூர்.

6- சட்டமுனி – ஆவணி - மிருகசீரிடம் - 800 வருடம் 14 நாட்கள் – திருவரங்கம்.

7- கருவூரார் – சித்திரை – அஸ்தம் - 300 வருடம் 42 நாட்கள் – கருவூர்(கரூர்).

8- சுந்தரானந்தர் – ஆவணி – ரேவதி - 800 வருடம் 28 நாட்கள் – மதுரை.

9- வான்மீகர் – புரட்டாதி – அனுசம் - 700 வருடம் 32 நாட்கள் – எட்டுக்குடி.

10- நந்திதேவர் –வைகாசி – விசாகம் - 700 வருடம் 03 நாட்கள் – காசி.

11- பாம்பாட்டி சித்தர் – கார்த்திகை – மிருகசீரிடம் - 123 வருடம் 14 நாட்கள் – சங்கரன்கோவில்.

12- போகர் – வைகாசி – பரணி - 300 வருடம் 18 நாட்கள் – பழனி.

13- மச்சமுனி – ஆடி – ரோகிணி - 300 வருடம் 62 நாட்கள் – திருப்பரங்குன்றம்.

14- பதஞ்சலி – பங்குனி – மூலம் - 5யுகம் 7நாட்கள் - இராமேசுவரம்.

15- தன்வந்திரி – ஐப்பசி – புனர்பூசம் - 800 வருடம் 32 நாட்கள் – வைத்தீச்வரன்கோவில்.

16- கோரக்கர் – கார்த்திகை- ஆயில்யம் - 880 வருடம் 11 நாட்கள் – பேரூர்.

17- குதம்பை சித்தர் – ஆடி – விசாகம் - 1800 வருடம் 16 நாட்கள் – மாயவரம்.

18- இடைக்காடர் – புரட்டாதி – திருவாதிரை - 600 வருடம் 18 நாட்கள் – திருவண்ணாமலை.

சித்தர்களின் யோகம் மற்றும் யோக முறைகள்

'யோகம்' என்பது 'யுஜ்' என்பதிலிருந்து 'யோக்' ஆகி வந்திருக்கிறது. அதாவது இணைத்தல் என்ற பொருளில். சிதறும் மனச் சக்தியைக் கூட்டுதல், ஆதியில் இருந்த நிலையில் தன்னைச் சேர்த்தல், யாதுமான சக்தியினிடம் சரணாகதியடைந்து அதனுடன் தன்னைச் சேர்த்தல், விசேஷ புருஷன் அல்லது இறைவனுடன் தன்னை இணைத்தல், - இதுவே யோகம்.

யோக, சமாதி நிலையை அடைய எட்டு அங்கங்களான

1- இயம,
2- நியம,
3- ஆசன,
4- பிராணாயாம,
5- பிரத்தியாகார,
6- தாரண,
7- தியான,
8- சமாதி.

எனப்படும் எட்டு படிகள் கூறப்பட்டதால் இந்த யோகம் 'அஷ்ட்டாங்க யோகம்' எனப்படும், யோக வழியை மனித இனத்துக்குத் தந்தவர் 'ஹிரண்யகர்பர்' என்பவராம். அதை சூத்திரங்களாக்கி வைத்தவர் "மஹரிஷி பதஞ்சலி" என்று சொல்லப்படுகிறது.

அறிவுச் செய்திகளை மறை பொருட்களை உள்ளடக்கி சூத்திரங்களாக வைத்தவர்கள், வேத உண்மைகளை பிரும்ம சூத்திரங்களாக வியாஸரும், பக்தி சூத்திரங்களை நாரதரும்,யோக சூத்திரங்களை பதஞ்சலி முனிவரும் மானிடம் உய்ய செய்துவைத்தனர். இவரை ஆதிசேஷனின் அவதாரமாக சொல்வர். நாரயணனின் படுக்கையே ஆதிசேஷன், சக்தியின் ஒரு விரல் மோதிரமாகியவர், இவ்வுலகை தன் தலையில் தாங்கிக்கொண்டிருப்பவர் எனவும் சொல்கிறார்கள்.

இவர் தந்தை: அத்திரி முனிவர்.
இவர் தாய்: கோணிகா.

இவரின் வேறு பெயர்கள்: அத்ரியின் பிள்ளையாகையால் 'ஆத்திரேயர்', கோணிகாவின் பிள்ளையென்பதால் 'கோணிகாபுத்திரர்'.

இவர் எழுதிய மூன்று நூல்கள்

1- யோகத்தினை விளக்கும் 'யோக சாஸ்திரம்',
2- மொழி இலக்கணமான 'மஹாபாஷ்யம்',
3- ஆயுர் வேத்மாகிய 'சரகம்' என்ற 'ஆத்திரேய சம்ஹிதை'.

ஆக மனம், வாக்கு, உடலு(மெய்)க்கான மூன்று நூல்களைச் செய்தவராகிறார்.

இந்த யோக நிலையை அடையுமுன், உலக வாழ்க்கையில் மேலாக எனப்படும் பொருள், புகழ், திறமை, பலம், சுகம் அடைவதற்கான எட்டு மஹா யோக 'சித்தி'களும் ஏற்படும்

யோக 'சித்தி' என்பது என்ன என்று தேடினால்?

அட்டமா சித்தி என்று மரபாகக் கருதப்படும் எட்டுத் திறமைகள் ஆகும். இவை இயற்கை அளித்த திறமைகள் எனவும் அற்புதத் தன்மை உடையன என்றும் கருதப்படுகின்றன. இவ்வாறான அட்டமா சித்திகளைச் சித்தர்கள் அட்டாங்க யோகப் பயிற்சியினால் பெற்றனர்.

அட்டமா சித்திகள்

1- அணிமா - அணுவைப் போல் சிறிதான தேகத்தை அடைதல்.

2- மகிமா - மலையைப் போல் பெரிதாதல்.

3- இலகிமா - காற்றைப் போல் இலேசாய் இருத்தல்.

4- கரிமா - மலைகளாலும், வாயுவினாலும் அசைக்கவும் முடியாமல் பாரமாயிருத்தல்.

5- பிராத்தி - மனத்தினால் நினைத்தவை யாவும் தன் முன்னே அடைய, அவற்றைப் பெறுதல்.

6- பிராகாமியம் - கூடு விட்டுக் கூடு பாய்தல்.

7- வசித்துவம் - அனைத்தையும் வசப்படுத்தல்.

8- ஈசத்துவம்(இறைத்துவம்) - நான்முகன் முதலான தேவர்களிடத்தும் தன் ஆணையைச் செலுத்தல்.

என்ற பல வியக்க வைக்கும் தகவல்கள் கிடக்கிறது.

ஆகவே, இந்த கலி காலத்தில் இறைவனை அடைய, மேல் சொன்ன சித்தர்களின் வாழ்வை படித்து அவர்கள் வாக்குப்படி நடப்போம்.

என் பதிவில் உங்கள் நேரத்துக்கு நன்றி சொல்லும் அதேவேளையில், எனக்கு தகவல் கொடுத்த அனைத்து புத்தகங்களுக்கும், இணையதளங்களுக்கும், பதிவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றி.
 

Blogger Widgets