Friday, June 26, 2009

மைக்கேல் ஜாக்ஸன் இறுதி (யாத்) திரை - I

நன்றி தட்ஸ் தமிழ்.

நான் நிரந்தரமானவன் என்றும் அழிவதில்லை என்ற சொல்லுக்கு, உலகம் முழுவதும் என்றும் தகுதியன ஒரே இசை புயல் தன் இசை பயணத்தை இன்றோடு முடித்தது.

இது வெறும் வதந்தியாக இருக்க வேண்டும் என்று விரும்பினேன். அவர் மறைந்து விட்டார் என்பதை நம்புவதற்கு ரொம்ப நேரமானாலும் மனமே வரவில்லை .மைக்கேல் உன் தேகம் மறைந்தாலும், சுவாசத்தோடு கலந்து எங்கள் வாழ்வில் என்றும் நீ இசையாய் மலர்வாய்.


பாப் இசை உலகின் சூப்பர் ஸ்டார், ஒரிஜினல் நடனப் புயல் மைக்கேல் ஜாக்ஸன் இன்று அதிகாலை 2.26 (அமெரிக்க நேரம்) மணிக்கு லாஸ் ஏஞ்சல்ஸ் மருத்துவமனையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 50. அவரது மரணத்தை போலீசாரும், ஜாக்ஸன் குடும்பத்தினரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

தனது இனிய இசையால் உலகையே கட்டிப் போட்டவர் மைக்கேல் ஜாக்ஸன். 1958-ல் அமெரிக்காவின் இந்தியானாவில் பிறந்தார். தனது 9 வயதிலேயே இசைத்துறையில் கால் பதித்த ஜாக்ஸன், வெற்றிகரமான பாப் பாடகராக மேடைகளைக் கலக்க ஆரம்பித்தார். தி ஜாக்ஸன் 5 எனும் பெயரில் தனி இசைக் குழுவைத் தொடங்கிய ஜாக்ஸன், 1970-ல் அந்தசக் குழுவின் சூப்பர் ஸ்டாராகவும், உலக பாப் இசையின் மிகச் சிறந்த பாடகராகவும் பார்க்கப்பட்டார். அப்போது அவருக்கு வயது ஜஸ்ட் 12 மட்டுமே.

1972-ம் ஆண்டு 'பென்' எனும் பெயரில் தனது தனி ஆல்பத்தை வெளியிட்டார். 6 வருடங்களுக்குப் பின் தனது முதல் திரைப்படமான 'தி விஸ்'ஸில் நடித்தார்.

பின்னர்தான் தனது நண்பர் ஜோனுடன் இணைந்தார். 1979-ல் ஆஃப் தி வால் மற்றும் 1982-ல் த்ரில்லர் ஆகிய ஜாக்ஸனின் இசை ஆல்பங்கள் சரித்திரம் படைத்தன. ஆஃப் தி வால் ஆல்பம்தான் டிஸ்கோ இசையை உலகம் எங்கும் பிரபலப்படுத்தியது. 10 மில்லியன் இசைத்தட்டுகள் விற்பனையாகின. அன்றைக்கு உலகையே வாய்பிளக்கச் செய்த சாதனை இது.

த்ரில்லருக்கு மட்டும் 8 கிராமி விருதுகள் கிடைத்தன. உலக இசையின் சக்ரவர்த்தியாக அறிவிக்கப்பட்டார் மைக்கேல் ஜாக்ஸன். உலகமே இனம் மொழி நாடு என்ற எல்லைகளைக் கடந்து அவரது இசைக்காக உருகியது.

த்ரில்லர் ஆல்பம் மட்டுமே 41 மில்லியன் விற்றுத் தீர்ந்தன. இன்றும் பாப் இசையில் அதிகம் விற்பனையாகும் ஆல்பங்களில் ஒன்றாகவே த்ரில்லர் திகழ்கிறது. இது உலக சாதனையாக கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெற்றது.

இசையிலும் கூட நிறவெறி கொண்டிருந்த மேற்குலக நாடுகளில் ஜாக்ஸனின் வருகை ஒரு புதிய விடியலாகத் திகழ்ந்தது. வேறு வழியே இல்லாமல் வெள்ளையர்கள், ஜாக்ஸனைக் கொண்டாடும் அளவுக்கு, இசையை தனது வசப்படுத்திக் கொண்டிருந்தார் ஜாக்ஸன். பணம், வியாபாரம் இரண்டிலும் வெல்பவருக்கே உலகம் சொந்தம்... நிறமும் இனமும் ஒரு பிரச்சினையில்லை என்பதை அவரது முன்னேற்றம் உலகுக்கு எடுத்துச் சொன்னது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு புதிய தன்னம்பிக்கை தருவதாகவும் அது அமைந்தது.1992-ம் ஆண்டு ஹீல் த வேர்ல்டு எனும் அறக்கட்டளையைத் துவங்கினார் மைக்கேல் ஜாக்ஸன். இந்த அமைப்பு மூலம், உடலால் மனதால் நிறவெறியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவிகளை செய்வதாக அறிவித்தார்.

ஆதரவற்ற பல சிறுவர்களை இந்த அமைப்பின் மூலம் பராமரிப்பதற்காக அமெரிக்காவில் நெவர்லாண்ட் எனும் பெரிய பண்ணை இல்லத்தை வாங்கினார். அங்கேயே இந்த சிறுவனர்களுடன் பொழுதைக் கழித்தார். இங்குதான் வந்தது வம்பு. சிறுவர்களை அவர் பாலியல் தொந்தரவு செய்வதாக அவர் மீது புகார்கள் எழுந்தன, வழக்குகள் தொடுக்கப்பட்டன, கோர்ட்டுக்கு வெளியே செட்டில்மெண்டுகள் நடந்தன. இந்த சிக்கல்களில் சிக்கித் தவித்த ஜாக்ஸனால் மீண்டும் ஒரு இசை ஆல்பத்தைத் தர முடியாமல் போனது. ஆனாலும் பாப் உலகின் மன்னனாகவே கடைசி வரை அவர் பார்க்கப்பட்டார்.

1994-ல் எல்விஸ் பிரஸ்லேயின் மகள் லிசா மேரியைத் திருமணம் செய்து கொண்டு, தன்மீதான 'சிறுவர் பாலியல் தொந்தரவு' புகார்களுக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க முயன்றார். ஆனால் இந்தத் திருமணமும் இரு ஆண்டுகள்தான் நீடித்தது.

லிசா மேரியை விவாகரத்து செய்த கையோடு 1996-ல் டெபி ரோவை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரு குழந்தைகளும் பிறந்தனர். 1999-ம் வரைதான் இந்தத் திருமண உறவும் நீடித்தது. பின்னர் வேறொரு பெண் மூலம் மூன்றாவது குழந்தையும் பிறந்தது அவருக்கு.

2005-ம் ஆண்டு அனைத்து பாலியல் புகார் வழக்குகளிலிருந்தும் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார் மைக்கேல் ஜாக்ஸன்.

மீண்டும் ஒரு சாதனையைப் படைக்க ஆர்வமாக இருந்த அவர், வரும் ஜூலை 13-ம் தேதி முதல் லண்டன் மற்றும் பிரிட்டனின் குறிப்பிட்ட நகரங்களில் 50 இசை நிகழ்ச்சிகளை நடத்தத் திட்டமிட்டிருந்தார். இதற்காக லாஸ் ஏஞ்சல்ஸில் தீவிரமான ஒத்திகையும் நடந்து வந்தது. இந்த நிகழ்ச்சிகள் மூலம் தனது இமேஜை திரும்பப் பெற முடியும், புதிய இசை ஆல்பத்தை உருவாக்க முடியும் என்று பலமான நம்பிக்கை கொண்டிருந்தார்.

'இறுதித் திரை' எனும் பெயரில் நடக்கவிருந்த இந்த இசை நிகழ்ச்சி இறுதிவரை நடக்காமலே போனது.

ஜாக்ஸன் உடல் நிலை குறித்த வதந்திகள் பல ஆண்டு காலமாகவே இருந்து வருகின்றன. கறுப்பர் இனத்தைச் சேர்ந்தவரான அவர் தன் உடல் முழுவதையுமே தொடர் காஸ்மெடிக் சர்ஜரி மூலம் சிவப்பாக மாற்றிக் கொண்டார். முகத்தில் மட்டும் பல முறை காஸ்மெடிக் சிகிச்சை நடந்துள்ளது. இதனால் அவரது முகம் குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு உரு மாறத் துவங்கியதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த காஸ்மெடிக் சிகிச்சைகளே அவருக்கு தோல் புற்றுநோய் வரவழைத்துவிட்டது என்றும் சொல்கிறார்கள்.

மருத்துவ பரிசோதனைக்காக அவரது உடல் லாஸ் ஏஞ்சல்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மைக்கேல் ஜாக்சன் தானே எழுதி, இசையமைத்த 200 பாடல்களை வைத்து விட்டுச் சென்றுள்ளாராம், இவை ஒருமுறை கூட பாடப்படாதவை. இவை தனக்குப் பின்னால் தனது குழந்தைகளுக்காக இருக்கட்டும் என கூறி வந்தாராம் ஜாக்சன்.

"கிங் ஆப் பாப்" என்று உலகம் முழுவதும் அன்போடு அழைக்கப்பட்ட இசை உலகின் ஒரு மா-மன்னனின் மறைவில், அவரது விண்ணை தொடும் சாதனைகளையும், புகழ்களையும் விட்டு விட்டு அவரின் ஒரு சில அந்தரங்கத்தை மற்றும் வாழ்க்கை காயத்தை மட்டும் ஊடகங்களில் பெரிது படுத்தி காட்டுவது எந்த விதத்தில் நியாயம் என்று புரியவில்லை, நான் புரிந்து கொள்ளவும் விரும்பவில்லை.

மேலும் அவரின் கோடிக்கணக்கான நன்கொடைகளையும், நல்ல மனதையும் உலகிற்கு எடுதுக்காட்டுவதை விட்டுவிட்டு, ஒரு சில கடன் பிரச்னைகளை மட்டும் சுட்டிக்காட்டுவது என்பது மிக வருந்த தக காரியமாகும், அதனால் தான் என்னவோ, அந்த இசை உலகின் தனி ராஜா நமக்கு தன் "இறுதித் திரை" நிகழ்சி மூலம் ஒரு "குட் பை" கூட சொல்லாமல், இந்த உலகை விட்டு பிரிந்து விட்டார்.

எது எப்படியோ, இனி யார் வந்தாலும் இந்த இசைதேவனின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்பது என் கருத்து.

மைக்கேல் உன் புனித ஆத்மா சாந்தி அடைய, எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கின்றேன்.

Thursday, June 18, 2009

யுனிக்ஸ்சும் யுகமும்

யூனிக்சில் cal என ஒரு கட்டளை உண்டு. இது நாட்காட்டியை உங்களுக்கு காட்டுவதற்காக அமைந்த கட்டளை. உங்கள் யூனிக்சின் $ prompt-ல் cal 1752 என நீங்கள் தட்டினால் 1752-ஆம் ஆண்டிற்கான காலண்டரை காட்டும். இதில் ஆச்சரியம் என்னவென்றால், செப்டம்பர் மாதத்தில் 2-ம் தேதிக்கப்புறம் நேரடியாக பதினான்காம் தேதிக்கு போய்விடும். இடையிலுள்ள 11 நாட்களும் காணமல் போய்விடும்?

ஏன்? என்று தேடிப்பார்த்த போது, அந்த மாதத்தில் தான் பிரிட்டீஷார் தங்கள் காலண்டர்முறையை பழைய ஜூலியன் நாட்காட்டிமுறையிலிருந்து கிரிகோரியன் நாட்காட்டிமுறைக்கு மாற்றினார்களாம். அதனால் அவர்கள் இப்படி சின்ன ஒரு மற்றத்தை செய்யவேண்டி வந்தாம் 1752-ம் வருட காலண்டரில்.

இந்த காலத்தை யார் அமைத்தார்கள் என்று ஆராந்து பார்க்க எனக்குள் ஒரு ஆசை பிறந்தது, அதன் முடிவில் நான் தெரிந்துகொண்ட தகவல்கள் இது.

ஆண்டவரின் படைப்பில் காலம் என்பது மிகவும் அதிசயிக்க தக்க வகையில் விசித்திரமானது. காலம் என்பது ஒரு வரையறைக்கு உட்படாதது. காலத்தின் அடிப்படை அலகு எனும் கை நொடி பொழுது தவிர மற்ற அலகுகள் இடத்திற்கு தக்கவாறு அவ்வப்போது மாறுபடும்.

காலம் என்பது நொடி, வினாடி, நாழிகை, முகூர்த்தம், ஜாமம், நாள், வாரம், திதி, நட்சத்திரம், யோகம், கரணம், பக்சம், மாதம், ருது, அயனம், வருடம், யுகம், மனு, கல்பம், என்று பல்வேறு அடிப்படையில் ஞானிகளால் நிகழ்வுகளைக் கொண்டு நிர்ணயிக்கப்பட்டது.

60 தற்பரை - 1 விநாடி
60 விநாடி - 1 நாடி
60 நாடி - 1 நாள்
29-32 நாள் - 1 மாதம்
12 மாதம் - 1 வருடம் (365 நாள், 15 நாடி, 31 விநாடி, 15 தற்பரை)

யுகம்:-

கிருதயுகம் 4 X 4,32,000 = 17,28,000
திரேதாயுகம் 3 X 4,32,000 = 12,96,000
துவாபரயுகம் 2 X 4,32,000 = 8,64,000
கலியுகம் 1 X 4,32,000 = 4,32,000


நாம் வாழும் பூமியானது உருவாகி கடல்கள் தோன்றியபின் 5 முறை பிரளயம் ஏற்பட்டு கல்ப காலம் முடிந்து அடுத்த கல்பம் ஏற்பட்டது என நமது முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளார்கள். புவியியல் வல்லுநர்களும் அதை உண்மையென ஆய்வின் மூலம் நிருபித்துள்ளார்கள்.மெய்ஞ்ஞானிகள் பிரம்ம கல்பம் என்று கூறும் காலத்தை புவியியல் வல்லுநர்கள் ஆர்க்கியோ சோயிக் என்றும், கூர்ம கல்பம் புரட்டிரோ சோயிக் என்றும், பார்த்திவ கல்பம் பேசியோ சோயிக் என்றும், சாவித்திரி கல்பம் மீச சோயிக் என்றும், பிரளய கல்பம் சென சோயிக் என்றும் பெயரிட்டுள்ளார்கள்.

மெய்ஞ்ஞானிகள் வராஹ கல்பம் எனும் கல்பத்தில் வைவஸ்வத மனுவின் காலம் நடந்து வருகிறது என்று கூறியுள்ளார்கள், வல்லுநர்கள் இதை பிளைஸ்டோசின் காலம் என்று கூறுகிறார்கள். பூமியில் மனிதன் தோன்றி பத்து லட்சம் ஆண்டுகள் ஆகிறது என்கிறார்கள்.

யுகம் என்பது இந்துக்களின் கால அளவை முறையில் காலத்தை அளக்கும் பெரிய அலகுகளில் ஒன்று. 360 மனிதஆண்டுகள் 1 தேவ ஆண்டாக கணக்கிடப்படுகிறது.யுகங்கள் நான்கு வகைப்படும். அவை,

1-கிருதயுகம்
2-திரேதாயுகம்
3-துவாபரயுகம்
4-கலியுகம்

இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு கால அளவுகளைக் கொண்டன.

கிருத யுகம் மொத்தம் 17,28,000 ஆண்டுகள் கொண்டது. இது கலியுகத்தின் நான்கு மடங்கு பெரியதாகும்.

திரேதா யுகம் 12,96,000 ஆண்டுகளையும் கொண்டன. இது கலியுகத்திலும் மூன்றுமடங்கு பெரியதான.

துவாபர யுகம் 8,64,000 ஆண்டுகளை கொண்டன, இது கலியுகத்திலும் இரண்டு மடங்கு கால அளவு கொண்டது.

கலியுகம் சிறிய யுகமாக நான்கு இலட்சத்து முப்பத்து இரண்டாயிரம் (4,32,000) ஆண்டுகள் கொண்டது.

ஆகவே இந்த அடிப்படையில் பார்க்கும் போது,

- 'கிருதாயுகம்' 4800 தேவ ஆண்டுகள் நடந்தது.... (மனித ஆண்டு கணக்குப்படி17,28,000 ஆண்டுகள்).
- 'திரேதாயுகம்' 360 தேவஆண்டுகள் நடந்தது.
- 'துவாபாயுகம்' 2,400 தேவ ஆண்டுகள் நடந்தது.
- 'கலியுகம்' மொத்தம் 432,000 ஆண்டு,

யுகங்களில் கலியுகம் குறைந்த வருடங்களைக் கொண்டது. இப்போது நாம் 5101வது கலியுகத்தில் இருக்கிறோம். அப்படியானால், கலியுகம் இன்னும் 4,26,899ஆண்டுகள் நடைபெறும், இந்த கலியுகத்தில் தான் புத்தன், யேசு, முகம்மது நபி போன்றோர்கள் தோன்றினார்கள்.

கிருதாயுகம், திரேதாயுகம், துவாபாயுகம், கலியுகம் என்ற இந்த நான்கு யுகத்தையும்சேர்த்து 'சதுர்யுகம்' என அழைக்கப்படுகிறது, அதாவது இந்த நான்கு யுகங்களும் ஒரு சுற்றுசுற்றி வருதலின் பெயர் தான் ஒரு சதுர்யுகி (Chaturyugi).


கிருத யுகம் அல்லது சத்திய யுகம்:- இந்து சமயத்தின்படி இது உண்மையின் காலம் எனப்படுகிறது. அக் காலத்தில் மனித இனம் கடவுளரால் ஆளப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு வேலையும், வெளிப்பாடும் தூய இலட்சியத் தன்மைக்கு நெருக்கமாக இருந்தது. இது சில சமயங்களில் பொற்காலம் எனவும் குறிப்பிடப்படுவது உண்டு. கிருத யுகத்தில் மக்கள் நீண்ட வாழ்நாட்களையும் கொண்டிருந்தனராம்.

சுழற்சி முறையில் வருவதாகக் கருதப்படும் நான்கு யுகங்களில் கிருத யுகமே முதல் யுகம். அறிவு, தியானம், தவம் என்பன இந்த யுகத்தில் சிறப்புப் பெற்றிருந்தன. இந்த யுகத்தில் மனிதரின் வாழ்நாள் 100,000 ஆண்டுகளாக இருந்ததாகப் பழங்கால இந்துக்கள் நம்பினர்.

இந்த யுகத்தில் சத்தியம்மும் தர்மமும் நான்கு வழிகளிலும் அனைவருக்கும் பயன்பட்டதாக, அதாவது யாரன்று பாராமல் யாரும் யாருக்கும் எல்லா உதவியும் செய்ததாக வேதங்கள் சொல்கிறது.

திரேதாயுகம்:- திரேதாயுகத்தில் இன்னும் அதிகமாய் 1,296,000 ஆண்டுகள் இருந்தனவெனவும் அக்காலத்தில் தான் இராமனும் வாழ்ந்தான் என்கின்றார்கள். அது ராமாயணகாலம்.

இந்த யுகத்தில் சத்தியம்மும் தர்மமும் மூன்று வழிகளில் பயன்பட்டதாக, அதாவது யாரென்று பார்த்து தன் சொந்த பந்தங்களுக்கும் நண்பர்களுக்கும் உதவிகள் செய்ததாக வேதங்கள் சொல்கிறது.

துவாபாயுகம்:- துவாபரயுகத்தை பார்த்தால் அதில் மொத்தம் 864,000 ஆண்டுகள் இருந்தனவாம்.அது கிருஷ்ணா வாழ்ந்த மகாபாரதகாலம்.

இந்த யுகத்தில் சத்தியம்மும் தர்மமும் இரண்டு வழிகளில் மட்டுமே பயன்பட்டதாக, அதாவது தன் வாரிசு வழி மற்றும் தன் ரத்த சொந்தங்களுக்கும் மட்டும் உதவியதாக வேதங்கள் சொல்கிறது.

கலியுகம்:- வர்த்தமான யுகத்தை கலியுகம் என்பது இந்து மரபு, கலியுகம் என்பது கேடுகளும் தீங்குகளும் நிறைந்த யுகமாகும். நீதி, நியாயம் தலைகீழாக நிற்கும் காலமாகும்.

இந்த யுகத்தில் சத்தியம்மும் தர்மமும் ஒரே ஒரு பக்கமாக நொண்டி நொண்டி நடக்கும், அதாவது மனிதன் யாரென்றும் பாராமல் சுயநலமாக தானும் தன் சுகமும் மட்டுமே முக்கியமென்று தன் அழிவிற்கு காரணமான நிரந்தரம் இல்லாத மாய ஆசைகளுக்கு அடிமையாகி மனிதன் தன்னை தானே அழித்துக்கொள்ளும் கலி காலம் என்று என்று வேதங்கள் சொல்கிறது.

இந்த காலத்தில் ரிஷிகளும், சித்தர்களும் பாவங்களில் இருந்து விலகி, இறைவனை தேடி காட்டில் ஓடி ஒளிந்து கொள்வார்கள் என்றும், நாட்டில் வாழும் நால்லவர்களும், புத்திசாலிகளும் இறை நம்பிக்கையோடு அந்த அந்த சரியான வயதுகும் நேரத்துக்கும் தகுந்த மாதிரி மட்டுமே எந்த பெரிய முடிவுகளையும் எடுப்பர்கள் என்றும், அரைகுறையாக தெரிந்த வேதாந்திகள் அதை வைத்து மக்களை ஏமாற்றி பணம் பண்ணுவார்கள் என்றும், ஆக மனிதனே மனிதனை அழிக்கும் காலம் என்று சாஸ்திரங்களும் வேதங்களும் சொல்கிறது.

அப்படியானால் இந்த கலி காலத்தில் இறைவனை அடைய என்னதான் வழி என்றால், சித்தர் வழி போவது, மாய ஆசைகளை துறப்பது, தவம் (Meditation) செய்து ஆசையை துறந்து, புலன்களை அடக்கி இறைவனை நாடும் மனிதனே துன்பமின்றி வாழ முடியும் என்று இந்து சாஸ்திரங்களும் வேதங்களும் சொல்கிறது.

இந்து மதம் மட்டுமல்லால் எனக்கு தெரிந்த மற்ற மத வேதங்களும் இதே அர்த்தத்தை வெவ்வேறு வார்த்தைகளில் சொல்கிறது என்பது என் தனிப்பட்ட கருத்து .

சரி, இந்த கலியுகம் முடிந்ததும் என்னவாகும்?

கலியுகம் பிறந்தது பெப்ரவரி 18, 3102 BCE ல், கலியுகம் முடிந்ததும் மீண்டும் கிருதயுகம் ஆரம்பிக்கும், அடுத்து திரேதாயுகம், துவாபரயுகம், மீண்டும் கலியுகம் இவ்வாறு மீண்டும் மீண்டும் வந்துகொண்டேயிருக்கும்.

இப்படியே நான்கு யுகமும் சேர்ந்தால் ஒரு சதுர்யுகம் அல்லது மகாயுகம் = 4.32 மில்லியன் வருடங்கள்.

- 71 மகாயுகம் = 1 மன்வந்திரம்
- 14 மன்வந்திரம் = 1 கற்பம் (994 மகாயுகம்)

இப்படியே வரும் 2 கற்பம் இந்து கணக்குப்படி பிரம்மாவின் 1 நாள், இதை போல் பிரம்மாவுக்கு 100 வயது ஆனால் அவரின் ஆயுள் முடிந்து அடுத்த பிரம்மா ஆட்சிக்கு வருவார் என்று இந்து சாஸ்திரங்கள் சொல்கின்றன.

Sunday, June 14, 2009

உலக ரத்த தான தினம்

எனக்கு உலக தினத்தில், பல தினத்துக்கு உண்மையான காரணமும் அர்த்தமும் இன்னும் புரியாது?

இப்போ தான் என்னென்னவோ தினம் இருக்கே? இருந்தாலும், ரத்த தான தினம் என்று ஒன்று இருப்பது எனக்கு தெரியும், எல்லா தினம் போல் ரத்த தான தினம்னா அன்னிக்கு மட்டும் "ரத்த தானம்" பண்ணனும்-னு நினச்சு இருந்தேன்.

ஆமா? சுதாந்திர தினம் அன்னிக்கு மட்டும் தான நமக்கு நாடு, நாட்டு கொடி, கதார் ஆடை எல்லாம் தேவை படுது? அது மாதிரி ரத்த தான தினம்-னு எனக்கு ஒரு நினைப்பு.

ஆனா, அதுக்கு என்ன அர்த்தமுன்னு இன்னிக்கு படிச்சப்ப புரிந்து கொண்டேன், நன்றி தட்ஸ் தமிழ்.

உலக ரத்த தான தினம் ஆண்டுதோறும் ஜுன் மாதம் 14ம் தேதி ஐக்கிய நாடுகள் சபையின் ஒத்துழைப்புடன் உலக சுகாதார நிறுவனத்தால் சர்வதேச ரீதியில் அனுஸ்டிக்கப்படுகின்றது. ரத்தப் பிரிவுகளான A, B, O ஆகிய பிரிவுகளைக் கண்டுபிடித்த கார்ல் லென்டினரின் Karl Landsteiner பிறந்த தினத்திலே இத்தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது.

ரத்த தானம் என்பது இன்னொருவருக்கு ஏற்றுவதற்காக இரத்தத்தை வழங்குவதை பொருள்படுத்தி நிற்கின்றது. இந்த தானத்தின் மூலம் சகல வழங்குநரும் பெருநரும் இதன் பிரதிபலன்களை அவர்களுடைய வாழ்நாளிலேயே அனுபவிக்கிறார்கள். விபத்தினாலோ, யுத்த அனர்த்தங்களினாலோ அல்லது வேறு காரணங்களினாலோ அளவிற்கு அதிகமான குருதி வெளியேற்றத்தினாலும், சத்திரசிகிச்சைகளின் போது குருதி தேவைப்படுமிடத்தும் மற்றும் குருதி மாற்றுச்சிகிச்சைக்கு உட்படுத்தப்படும்போதும் குருதியை தானமாக பெறுபவர்கள் பயன் அடைகிறார்கள். குருதியின் தேவை எச்சந்தர்ப்பத்தில் தேவைப்படும் என்பதை திட்டவட்டமாகக் குறிப்பிட முடியாது.

அதேநேரம், குருதியைப் பெறுபவர் தன் உயிரை மீளப் பெற்றுக் கொள்வதினூடாக நன்மையடைவதைப் போலவே ரத்த தானம் செய்பவர்களும் மறைமுகமாக நன்மையடைகின்றார்கள். இவர்களின் சிறிய செயற்பாடு சில சந்தர்ப்பங்களில் ஒரு உயிரைக் காப்பதற்கு உதவும் மனோநிலை இவர்களிடம் வளர்கின்றது. மறுபுறமாக ரத்த தானம் செய்பவர்களின் உடலில் புதிய குருதி உற்பத்தி செய்யப்படுவதால் அவர்களும் ஆரோக்கியமான வாழ்வை அனுபவிக்கிறார்கள்.

இந்த உண்மையை ரத்த தானம் செய்வோர் என்ற வட்டத்திற்கு அல்லது எல்லைக்கு வெளியே இருந்து பார்ப்போர் புரிந்து கொள்வதில்லை.

உலக ரீதியில் இத்தினத்தை கொண்டாடுவதற்கான முக்கிய நோக்கம் ரத்த தானம் வழங்குபவர்களை கௌரவப்படுத்துவதற்காகவே வேண்டியாகும். உலகில் நவீன தொழில்நுட்பங்கள் எவ்வளவு தூரம் முன்னேறியபோதிலும் இரத்தத்துக்கு மாற்றீடாக வேறு எந்த ஆக்கக்கூறுகளும் கண்டறியப்படவில்லை. இரத்தம் தேவைப்படுவோருக்கு இரத்தமே வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கப்படாவிடின் நோயாளி மரணிக்கவும் கூடும்.

2009ம் ஆண்டில் இத்தினத்தின் கருப்பொருள் இரத்தம் வழங்களின் பாதுகாப்பையும், தன்னிறைவையும் செம்மைப்படுத்தி எவ்வித ஊதியமோ, வெகுமதியோ இன்றி சுயமாக தொண்டு செய்யும் நோக்குடன் ரத்த தானத்தை ஊக்குவிப்பதாகும். வருடாவருடம் பல நாடுகளைச் சேர்ந்த மக்கள் 81 மில்லியனுக்குக் கூடிய அலகுகளை ரத்த தானமாக வழங்கி வருகின்றனர். ஒவ்வொரு மனிதருக்கும் என்றோ ஒருநாள் இரத்தத்தின் மூலம் சிகிச்சைச் செய்ய தேவை ஏற்படலாம் என்ற அடிப்படையில் இந்த வேலைத்திட்டம் மிகவும் பயபக்தியுடன் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது. அதேநேரம், உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை பிரகாரம் உலக சனத்தொகையில் ஒரு வீதத்துக்கும் குறைவானவர்களே ரத்த தானத்தை செய்கின்றனர். எல்லா நோயாளர்களுக்கும் தேவையான இரத்தம் மூலமான சிகிச்சையை உத்தரவாதப்படுத்தி வழங்க ரத்த தானம் செய்வோரின் தொகை அதிகரிக்கப்பட வேண்டுமென குறிப்பிடப்படுகின்றது.

மேலும் உலக மக்கள் வழங்கும் ரத்த தானம் ஆண்டுதோறும் 81 மில்லியன் அலகுகளுக்கும் அதிகமாக இருந்த போதிலும் இதில் 38 வீதமான பங்களிப்பினையே வளர்முக நாடுகளில் வழங்கப்படுகின்றது. ஆனால், உலக சனத்தொகையின் 82வீதமானோர் வளர்முக நாடுகளில் வாழ்கின்றனர். இந்நிலையில் இந்நாடுகள் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி உலக சுகாதார நிறுவனம் மக்களுக்கு பல்வேறுபட்ட வகைகளில் புரிந்துணர்வை ஏற்படுத்த முயன்று வருகின்றது.

அன்று முதல் இன்றுவரை இன மத மொழி வேறுபாடின்றி உலகெல்லாம் வாழும் அனைத்து மக்களும் மாற்றுக்கருத்தின்றி ஏகமனதாக ஏற்றுக்கொண்ட ஒரே ஒரு தானம் ரத்த தானமாகும். ஆனால் இன்றைய விஞ்ஞான யுகத்தில் வைத்தியத்துறை அடைந்துள்ள முன்னேற்றத்தின் காரணமாக குருதிதிரவ இழைய தானம், உடல் உறுப்பு தானம் போன்ற தானங்களும் எதிர்பார்த்தளவிற்கு வெற்றியடைந்துள்ளன. இந்த வெற்றிக்குரிய முக்கியமான காரணம் தானம் செய்யும் கருணையுள்ளம் கொண்ட கொடையாளிகளின் இதயத்தில் இவையும் முக்கிய இடத்தை பிடித்துவிட்டன என்பதேயன்றி வேறு எதுவும் இல்லை.

சாதாரண எடையுள்ள ஒரு ஆரோக்கியமான மனிதனின் உடலில் 5 முதல் 6 லிட்டர் இரத்தம் உள்ளது. அதில், இருந்து வெறும் 300 முத‌ல் 350 மில்லிலீட்டர் (ஒரு யூனிட்) இரத்தம் மட்டுமே தானத்தின் போது பெறப்படும். அவ்வாறு கொடுத்த இரத்தத்தின் அளவு இரண்டே வாரங்களில் நாம் உண்ணும் சாதாரண உணவிலேயே மீண்டும் உற்பத்தியாகிவிடும். 3 மாதங்களுக்கு ஒரு முறை எந்தவித பாதிப்பும் இன்றி இரத்த தானம் செய்யலாம். இரத்த தானம் செய்வதற்கு 5, 10 நிமிடங்கள் போதும். பொதுவாக 17 - 60 வயதுக்கிடைப்பட்ட சுகதேகிகளால் ரத்த தானம் செய்ய முடியும்.

இரத்த தானம் அளிப்பதால் நமது உடலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. சொல்லப்போனால் நமது உடலில் புதிய இரத்தம் உற்பத்தியாகும். அது உடலுக்கு நன்மையாகத்தான் அமையும். தானமாக அளித்த இரத்த அளவை, நமது உடல் 24 முதல் 48 மணி நேரத்திற்குள் மீண்டும் உற்பத்தி செய்துவிடும். இரத்த தானத்தின் போது நாம் இழக்கும் சிவப்பணுக்களின் எண்ணிக்கை 56 நாட்களிலேயே சீராகிவிடும். இரத்த தானம் அளிப்பதற்கு எந்தவிதமான உணவுக் கட்டுப்பாடோ, மருந்தோ தேவையில்லை.

உடலில் இருந்து இரத்தம் எடுக்க 5 அல்லது 10 நிமிடங்கள் மட்டுமே ஆகும். ஆனால் இரத்த தானம் அளித்த பிறகு 10, 15 நிமிடங்கள் ஓய்வெடுக்கச் சொல்லி பிறகுதான் அங்கிருந்து அனுப்புவார்கள். எனவே மொத்தமாகவே இரத்த தானம் அளிக்க 30 நிமிடங்கள் போதும். இரத்த தானம் அளித்த பிறகும் கூட அவரவர் தங்களது அன்றாட வேலைகளில் எப்போதும் போல் ஈடுபடலாம். எந்த சிக்கலும் இருக்காது.

இரத்த தானம் செய்வதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு வரை எந்த போதைப் பொருளையும் எடுத்திருக்கக் கூடாது. சர்க்கரை நோய், காசரோகம், எய்ட்ஸ் போன்று இரத்தத்தின் மூலம் பரவக்கூடிய நோய்கள் இருக்கக் கூடாது. மேலும் 3 ஆண்டுகளில் மஞ்சள் காமாலை நோய் தாக்கியிருக்கக் கூடாது.

உலக இரத்தான தினத்தின் பிரதான குறிக்கோள்களாக பின்வருவன அமைகின்றன:-

எந்தவொரு வெகுமதியோ அல்லது ஊதியமோ இன்றி ரத்த தானத்தை வழங்குவோருக்கு நன்றி செலுத்துதல்.

நெருக்கடியான சூழ்நிலையில் உயிர்காக்கும் விலைமதிப்பற்ற வளத்தினை ஒழுங்காக வழங்கும் அற்புதமான விசேடமான தொண்டர் அணியைச் சேர்ந்தவர் என்ற மனநிலையை ரத்த தானம் புரிவோருக்கு ஏற்படுத்துதல்.

சுகதேகியாக உள்ள நண்பர்களையும், உறவினர்களையும் எவ்வித வெகுமதியோ அல்லது ஊதியமோ இன்றி இரத்தான நடவடிக்கைகளில் பங்கேற்க ஊக்கமளித்தல்.

ஒரு குடும்ப அங்கத்தவருக்கு இரத்தம் தேவைப்பட்ட சந்தர்ப்பத்தில் ரத்த தானம் செய்தவரை தொடர்ந்தும் இத்தகைய தொண்டர் பணியில் ஈடுபட ஊக்குவித்தல்.

ரத்த தானம் செய்வோருக்கு எவ்வாறு சுகமான வாழ்வினை மேற்கொள்ள முடியும், எவ்வாறு தமது இரத்தத்தை பாதுகாப்பாக வைத்திருக்க முடியும் என்பது பற்றி அறிவுறுத்துதல்.

உலக ரத்த தான இயற்கை நிகழ்ச்சிகள் பற்றிய ஆர்வத்தைத் தூண்டுதல்.

ஐக்கிய இராச்சியத்தில் பொதுமக்கள் பெருந்தன்மையுடன் ரத்த தானம் செய்கின்றார்கள் என்று அறிக்கைகள் கூறுகின்றன. இங்கிலாந்திலும், பிரேசிலிலும் நிச்சயிக்கப்பட்ட நோயாளிகளின் சிகிச்சைக்காக தேசிய இரத்த சேவை நிறுவனம் தினமும் 9000 இரத்த அலகுகளை சேகரிக்கின்றது என்றும், கடந்த வருடம் 1.3 மில்லியன் மக்களிடமிருந்து 2.3 மில்லியன் இரத்த அலகுகளை சேகரித்து வழங்கியமையினால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டன என்றும் அற்றிக்கைகளில் குறிப்பிடுகின்றது.

எனவே, இது விஷயமாக நாம் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டிய நிலையில் உள்ளோம். ரத்த தானம் என்பது ஒரு உயிரைக் காக்க நாம் வழங்கும் பங்களிப்பு. இந்த உணர்வினை இத்தினத்தில் உறுதியாக நமது மனங்களில் பதித்துக் கொள்வோம்.

Wednesday, June 10, 2009

உலகின் சிறந்த விமான நிலையம்!

கடந்த இரண்டு ஆண்டுகளில் நான் பல முறை சியோலின் இன்ஷான் விமான நிலையத்தை பயன்படுத்தி இருக்கின்றேன். ஒவ்வொரு முறையும் மாற்றத்தையும், புதுமையும் என்னால் உணர முடியும்.

அப்போதெல்லாம் ஏன்! இது வரை இந்த விமான நிலையம் சிறந்த விமான நிலைய விருதை அடையவில்லை? என என்னை நானே கேட்டுக் கொள்வேன்.அதே நேரத்தில் கடந்த முறை சென்னை விமான நிலையத்தில் இறங்கிய (இனிய) அனுபவத்தையும் என் மனம் நினைத்து, அசை போட்டு நொந்து போகிறது தவிர்க்க முடியாத ஒன்று என்பதை தனியாக இங்கு நான் சொல்ல வேண்டியதில்லை.

இந்த வருட ஸ்கைட்ராக்ஸ் ஆராய்ச்சி நிறுவன முடிவை படித்த போது என் ஆசை தீர்ந்தது.

கடந்த 11 ஆண்டுகளாக உலகின் சிறந்த விமான நிலையங்களைப் பட்டிலிட்டு வருகிறது பிரிட்டனின் ஸ்கைட்ராக்ஸ் (Skytrax) ஆராய்ச்சி நிறுவனம்.

உலகின் மிகச் சிறந்த விமான நிலையமாக தென்கொரிய இன்ஷான் விமான நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இரண்டாவது இடத்தில் ஹாங்காங்கின் சர்வதேச விமான நிலையமும், மூன்றாவது இடத்தில் சிங்கப்பூர் சாங்கி விமான நிலையமும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

2009 ஆம் ஆண்டுக்கான தனது பத்து மாத சிறந்த விமான நிலைய ஆய்வின் முடிவில், தொடர்ந்து எட்டு ஆண்டுகள் முதலிடத்தில் இருந்த ஹாங்காங் விமான நிலைய இடத்தை தென்கொரிய தலைநகர் சியோலின் இன்ஷான் விமான நிலையம் பிடித்தது.

டெர்மினலைப் பராமரிக்கும் பாங்கு, பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பயணிகளுக்கான வசதிகள் என அனைத்திலுமே இன்ஷான் விமான நிலையம் மிகச் சிறப்பாக செயல்படுவதாக ஸ்கைட்ராக்ஸ் தெரிவித்துள்ளது.

4- நான்காவது சிறந்த விமான நிலையமாக ஜூரிச்

5- ஐந்தாவது இடத்தில் மியூனிச் விமான நிலையம்

6- ஜப்பானின் கன்சாய்க்கு 6-வது இடம்

7- கோலாலம்பூருக்கு 7-வது இடமும்

8- ஆம்ஸ்டர்டாம் விமான நிலைத்துக்கு 8-வது இடமும்

9- ஜப்பானின் சென்ட்ரல் ஜப்பான் இன்டர்நேஷனல் ஏர்போர்ட் சென்றீர் நகோயா, 9-வது இடமும்

10- நியூஸிலாந்தின் ஆக்லாந்து விமான நிலையத்துக்கு 10-வது இடமும் தரப்பட்டுள்ளது.

அதிலும் இந்த முறை,

- துபாய் சர்வதேச விமான நிலையம், சிறந்த வரி விலக்கு கடைகளுக்காக பரிதுரைக்கப் பட்டு இருக்கிறது.

- ஹாங்காங் சிறந்த உணவு விடுதிகளுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

- ஜப்பான்னின் கன்சாய் ஆக மிக சுத்தமான கழிவறைகளுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

- மலேசியா தனது கடந்த ஆண்டு இடத்தை இந்த ஆண்டும் தக்க வைத்துக்கொண்டது.

இந்தியாவுக்கு இந்த முறை இடம் கிடைக்கவில்லை என்றாலும், டெல்லி உள்ளிட்ட பல விமான நிலையங்கள் தனியார் மயமாக்கப்பட்டு அழகு படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இனி வரும் காலத்தில் இந்தியா இந்த வரிசையில் இடம் பிடிக்க அரசு மற்றும் விமான நிலைய உழியர்கள் மற்றும் அல்லாமல், பொது மக்களும் அக்கறை எடுப்பது இந்தியராகிய நம் கடமையாகிறது.

நன்றி!.
 

Blogger Widgets