Thursday, February 2, 2012

நாம் நூறாவது குரங்காக கூட இருக்கலாம்!

வணக்கம் நண்பர்களே,

மனிதனோடு மிக நெருங்கிய வாழ்கை முறையை கொண்ட மிருகம் குரங்கு எனபதை நாம் அனைவரும் அறிவோம், சமீபத்தில் இதை பற்றிய ஒரு நல்ல தகவல் எனக்கு கிடைத்தது, அதை இங்கு உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

சிங்கையில் எனக்கு முரளி என்று ஒரு நண்பர் இருக்கிறார், மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கொண்ட அவருடன் அடிக்கடி சந்தித்து கருத்து பரிமாற்றம் செய்வது எங்கள் வழக்கம்.

ஆன்மிகம் மட்டுமின்றி அது போல நேரத்தில் இருவருக்கும் தெரிந்த ஆரோக்கியமான கருத்துக்களை மற்ற உலக நடப்புகளை பற்றி இருவருமே பகிர்ந்து கொள்வோம்.

அது போல பேசிக்கொண்டு இருந்த ஒரு நேரத்தில் அவர் சொன்ன ஒரு தகவல்தான் இது.

அவரின் ஆன்மீக ஆர்வத்தை தொண்டு என்ற போர்வையில் இடைத்தரகர்கள் பயன்படுத்தி கொள்கிறார்கள் என்று நான் சொல்ல, அதற்கு அவர் ஆன்மீகம் பற்றி ஒரு நல்ல விளக்கம் கொடுத்தார்.

மாறுபட்ட நல்ல சமூக சிந்தனை மற்றும் அப்படி மனதில் பட்டதை அதே போல செய்வது சுவாமி விவேகானந்தர் போல ஒரு சிங்கத்தால்தான் முடியும், என்பது எப்படி மறுக்க முடியாத உண்மையோ, அதே போல அனைவருமே அவரைப்போல வீர துறவியாக இருக்க முடியாது என்பதும் உண்மையே.

ஆகவே, இந்த மாதிரி ஒரு வாழ்கை முறையில் இருக்கும் நான் ஒரு நூறாவது குரங்காக இருப்பதில் எனக்கொன்றும் வருத்தமில்லை என்றார்.



அது என்ன நூறாவது குரங்கு என்று நான் கேட்க? அவர் சொன்னது இதுதான்.

கடந்த நூறாண்டின் துவக்கத்தில், குரங்குகளை வைத்து ஒரு ஆராச்சி நடந்ததாம், ஜப்பானுக்கு அருகே உள்ள ஒன்றுகொன்று தொடர்பில்லாத சில மழைகாடு தீவுகளில் பல குரங்குகளை கொண்டு விட்டு விட்டாகளாம், அதன் பின் அந்த குரங்குகள் உணவுக்காக பலவகை பழங்களை அந்த தீவுகளில் இருந்த குப்பைகளில் குறிப்பாக சகதிகளில் கொட்டிவிட்டு நடப்பதை கண்காணிக்க துவங்கினார்களாம்.

பசியின் காரணமாக குரங்குகளும் அந்த பழங்களை எடுத்து உண்டன, இப்படியே நாட்கள் நகர ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு ஒரு குரங்கு சகதியில் இருந்து எடுத்த பழத்தை ஊதி விட்டு பின் சாப்பிட, ஆராய்ச்சியாளர்களின் கண்காணிப்பு ஆர்வம் அதிகரித்ததாம்.

ஒரு சில நாட்களுக்கு பிறகு அந்த கூட்டத்தில் இருந்து வந்த ஒரு குட்டி குரங்கு, தன் உணவை எடுத்துக்கொண்டு தனியாக ஓடுவதை கண்டு அந்த குரங்கை கண்காணிக்க, சகதியில் இருந்து எடுத்த பழத்தை கொண்டு சென்ற குட்டி குரங்கு அருகே இருந்த நீரோடையில் அந்த பழத்தை கழுவி விட்டு பின் சாப்பிட துவங்கியதாம்.

அன்று முதல் அனைவரும் கூர்ந்து கண்காணிக்க, இந்த குரங்கு மட்டும் தொடந்து உணவை கழுவிவிட்டு உண்பதை கைவிடவில்லையாம்.



இப்படியாக ஒரு குறிப்பிட்ட காலம் நகர ஒவ்வொன்றாக மற்ற அனைத்து குரங்குகளும் அதே போல உணவை சகதியில் இருந்து கழுவிவிட்டு உண்பதை கண்டதும் ஆராய்ச்சியாளர்களுக்கு சந்தோசம் ஒரு புறம் இருக்க, ஒரு வேலை இந்த குட்டி குரங்கை பார்த்து மற்ற குரங்குகள் சக்தியை கழுவவேண்டும் என்று பழகி இருக்குமோ என்று சந்தேகமும் வந்ததாம்.

இப்படி சில காலம் நகர நகர, ஒன்றுகொன்று தொடர்பில்லாத அந்த மழைகாடு தீவுகளில் இருந்த ஒவ்வொரு தீவிலும் இருந்த குரங்குகள் தன் உணவை சகதியில் இருந்து எடுத்து கழுவி விட்டு உண்பதை காண முடிந்ததாம்.

இந்த ஆராய்சியின் முடிவில் அத்தனை குரங்குகளும் இதே போல் செய்வதை கொண்டு மனித நாகரீக வளர்ச்சியை பற்றி ஒரு புத்தகம் வெளிவிட பட்டதாம்.

இதன் மூலம் நமக்கு புரியும் கருத்து என்பது, நல்ல சிந்தனைகள் மற்றும் செயல்கள் செய்யும் போது, அதில் உள்ள குறை நிறைகளை பற்றி கவலை படாமல் தொடந்து செய்வதன் மூலம் அது நீண்ட தூரம் பயணம் செய்து பலரை நல்வழி படுத்தும் என்பதுதான் என்று நண்பர் சொல்லி முடித்தார்.

நண்பர் சென்று நீண்ட நேரம் ஆகியும் எனக்கு இந்த கதையை கேட்ட திருப்தியில் கிடைத்த சந்தோசம் மட்டும் குறையவே இல்லை, காரணம் இதையே வெவ்வேறு மத துறவிகள் அவர்கள் சமூகத்திற்கு வேறு வேறு வார்த்தைகளில் சொல்லி இருப்பதை எப்போதே படித்தது நினைவில் வந்தது.

நபிகள் பற்றி படித்த போது அவர் சொன்ன ஒரு தகவல், எல்லா சமூககத்தினரும் அவர்கள் இனத்தின் மீது பற்று கொண்டு இருக்க வேண்டும், அதே நேரத்தில், தன் இனத்தில் மீது வெறி கொண்டவன் தீவிரவாதியாகிறான்.

அப்படி வெறி கொண்ட யாரையும் எந்த சமூகத்தினரும் மன்னிக்கவே கூடாது, இல்லையெனில் அந்த வெறி தீ பொறிபோல பரவிவிடும்.

இதே கருத்தை சுவாமி விவேகானந்தரும் சொல்லி இருக்கிறார், நாம் யார் என்பதை நம் எண்ணங்களே உருவாக்குகின்றன, ஆகவே நல்ல விசையத்தை பற்றி சிந்தியுங்கள், காரணம் எண்ணங்கள் நீண்ட தூரம் பயணம் செய்யும் சக்தி கொண்டவை, வார்த்தைகள் எல்லாம் இரண்டாம் பட்சம்தான்.

“We are what our thoughts have made us; so take care about what you think. Words are secondary. Thoughts live; they travel far.” - Swami Vivekananda.

அவ்வளவு ஏன், "பெரியதாக கனவு காணுங்கள்" அந்த நல்ல சிந்தனை ஒரு நாள் நிஜமாகும் என்று நம் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் சொல்லி இருக்கிறார் இல்லையா?.

நண்பர்களே, நாம் என்ன செய்கிறோம், ஏன் செய்கிறோம், என்பதை விட, நல்ல விசையங்களை பற்றி சிந்திக்க செய்தாலே போதும். அது தானாகவே காற்றில் கலந்து மற்ற அனைத்து மக்களையும் சென்று சேர்ந்து விடும்.

இதைத்தான் இந்து மதத்தில், இந்த பிரபஞ்சம் அனைத்து கேள்விகளுக்கும் விடையை திறந்து வைத்து இருக்கிறது. அதை நல்ல சிந்தனையுடன் மனதை ஒரு நிலை படுத்தும் யார் வேண்டுமானாலும் பெற முடியும் என்று சொல்லி இருக்கிறார்கள்.

நன்றி மீண்டும் சந்திப்போம்.

Tuesday, January 31, 2012

புகையிலை விரிச்சா போச்சு! பெண் பிள்ளை சிரிச்சா போச்சு!

வணக்கம் நண்பர்களே,

நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.

ஒரு நாட்டை விட்டு இன்னொரு நாட்டுக்கு குடிபெயர்வது எனக்கு ஒன்றும் புதிய அனுபவம் இல்லை என்றாலும், இந்த முறை எனக்கு ஒரு புதிய அனுபவமாகவே இருந்தது.

எப்போதும் எனக்கென்று ஒரு ஊர், எனக்கென்று சில மக்கள் என்று ஒரு பெட்டியுடன் கண் மூடி கண் திறக்கும் முன் கடல் கடந்து இனம் மொழி பாராமல் கிடைப்பதை உணவாக கொண்டு அந்த உள்ளூர் மக்களோடு மக்களாக கலந்து விடுவேன்.

ஆனால் இந்த முறை, புதிய வேலை, மனைவி, குழந்தைகள், அவர்கள் தங்கும் இடம், படிக்கும் இடம் என்று ஒவ்ஒன்றாக பார்த்து பார்த்து செய்து முடிக்கும் முன் போதும் போதும் என்று இருந்தாலும், அதுவும் ஒரு இனம் புரியாத சுகமாகவே இருந்தது.

அது, இது என்று ஒரு வழியாக எல்லாம் முடிந்து இயல்பு வாழ்கைக்கு திரும்பியதும், நம் கிரி (இப்போது இருவர் வீடும் அடுத்தடுத்த தெருவில்) என்ன பாஸ் எழுதுவதை விட்டு விட்டதை போல் தெரிகிறது என்று சொன்ன போதுதான், எனக்கு வலைப்பூ என்று ஒன்று இருப்பதே நினைவில் வந்தது.

என் முன்னைய பதிவில் சொன்னதை போல, சிங்கையை பற்றி என்னால் புதிதாக வேறு யாரும் சொல்லாததை எதுவும் எழுதி விட முடியாது.

என்னை விட பெரிய ஜாம்பவான்கள் நிறைந்த களம் இது. அதே நேரம் என்னை சுற்றி நடக்கும் சில நல்ல விசையங்களை எனக்கு தெரிந்த எழுத்து நடையில் சொல்வதுதான் இந்த வலைப்பூவில் இனி என் நோக்கம்.

சிங்கையில் எனக்கு மிக பிடித்த விசையங்களில் ஒன்று, இரவு உணவுக்கு பிறகு பாடல் கேட்டுக்கொண்டே ஒரு சிறிய நடை பயணம்,

அன்று வானம் மப்பும் மந்தாரமுமாய் பல நிறத்தில் மேகங்கள் முட்டிக்கொண்டு இருந்தது.

அருமையான காற்றுடன் மிக லேசான மழை தூறல் என் மனதை வருட, காதுக்கு "என் மேல் விழுந்த மழை துளியே, இத்தனை நாளாய் எங்கிருந்தாய்!" பாடலை கொடுத்து விட்டு மெதுவாக சாலை ஓரமாக நடக்க துவங்கினேன்.



இரவு நேரம் மட்டுமில்லாது, மழை பெரிதாகி விடும் என்று நினைத்து மக்கள் யாரும் சாலையில் இறங்கவில்லை என்றாலும், காற்றோடு கலந்து மழை நீரையும் கிழித்துக்கொண்டு சர்ர்ர்ர்ர் என்று சொல்லும் சில வாகனங்கள் என் பாடலின் அமைதியை திசை திருப்ப, அடுத்து வந்த சிறிய சாலைக்குள் என் நடையை திருப்பினேன்.

எதிர்பார்த்ததை போலவே கருப்பு போர்வையின் இருபக்கமும் மஞ்சள் புள்ளி வைத்ததை போல நீண்ட சாலையின் இருபக்கமும் தெருவிளக்கின் வெளிச்சத்தை தவிர வேறு யாரும் இல்லை.

ஒரு ஐந்து நிமிடம் கடந்து இருக்கும் சற்று தூரத்தில் தெரிந்த பேருந்து நிறுத்தத்தில் இருவர் அமர்ந்து இருப்பது விளக்கின் வெளிச்சத்தில் நிழலாக தெரிந்தது.

விளக்கின் கீழ் மஞ்சள் ஒளியில் மழைதூறல் அதன் கீழ் பேருந்து நிறுத்த குடை அதன் கீழ் இரு உருவம் நிழலாக பார்க்க அருமையாக இருந்தது.

புகைப்படம் எடுக்க முடியாமல் போன வருத்ததுடன், பாட்டை நிறுத்தி விட்டு ஆப்பிள் கை தொலைபேசியில் பார்த்தால் படம் எடுக்கும் படி ஒன்றுமே தெரியவில்லை.

அப்படியே பார்த்துக்கொண்டே நடந்து எங்களுக்குள் இருந்த தூரம் குறைய, அந்த பெண்ணின் குரல் சற்று சத்தமாகவே அந்த இரவில் எனக்கு கேட்டது.

ஆர்வத்துடன் அவர்கள் பேசுவதை கேட்க சற்று மெதுவாகவே நடந்து அருகே செல்ல, அந்த பெண்ணின் குரலில் இருந்த அளவு இளமை அவர் வயதில் இல்லை.

அது ஒரு தத்தாவும் பாட்டியும் என்று பார்த்தவுடன் புரிந்தது, ஆனால் அந்த பாட்டி சற்று பதட்டத்துடன் இருந்தார்.

பாட்டியின் கையை பிடித்து கொண்டு சாமாதானம் சொன்ன விதத்தில் இருந்து பாட்டியின் அருகே இருந்தவர் அவர் கணவர் என்று புரிந்தது.

இந்த நேரத்தில் இவர்களுக்கு என்னவாக இருக்கும் என்ற ஆர்வத்துடன் பேருந்துக்கு நிற்ப்பதை போல நானும் நின்று அவர்கள் பேசுவதில் என் காதை கொடுத்தேன்.

கேட்டவுடன் புரிந்தது அவர்கள் பேசுவது சீன மொழி என்று, ஆனால் புரியாதது அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பது தான்.

ஒருவேளை உடல் நிலை முடியாமல் மருத்துவமனை செல்ல இருக்கிறார்களோ என்று நினைக்கவும் முடியவில்லை, காரணம் அந்த நேரத்தில் சென்ற இரண்டு வாடகை கார்கள் காலியாகவே சென்றது. எங்கள் அருகில் வந்தபோது மெதுவடைந்து நாங்கள் வரவில்லை என்று உறுதியானவுடன் தான் எங்களை கடந்து சென்றது.

பாட்டி இன்னுமும் படபடப்பாக பேச, அந்த முதியவர் அவரை சமாதான படுத்தும் அதே நேரத்தில் கை தொலை பேசியையும் பேருந்து வரும் சாலையிலும் கண்களை மாற்றிக்கொண்டுதான் இருந்தார்.

ஒருவேளை அவர்களிடம் வாடகை காரில் செல்ல பணமில்லையோ? நாம் வேண்டுமானால் உதவலாமா என்று நினைத்தேன். ஆனால் அவர்கள் பிரச்சனை வேறாக இருந்து நம்மை தவறாக நினைத்துவிடுவார்களோ என்று என் மனம் என் எண்ணங்களுக்கு தடை போட்டது.

சரி, என்னதான் நடக்கிறது என்று இன்னும் சற்று நேரம் பார்ப்போம் என்று நினைத்து கொண்டு, என் பார்வையை முதல் முறையாக அவர்கள் பக்கம் திருப்பும் அதே நேரத்தில், அந்த பாட்டி என்னிடம் எதோ கேட்டார்.

அது சீன மொழியல்ல, மலாய் மொழி என்பது மட்டும்தான் எனக்கு புரிந்தது, அவர் என்னை மலாய் மொழி பேசுபவர் என்று நினைத்து இருக்க வேண்டும்.

என் பார்வையில் இருந்த அர்த்தத்தை புரிந்து கொண்ட தாத்தா, இந்த நேரத்தில் வரவேண்டிய இரவு பேருந்து போயிருக்குமோ? என்று ஆங்கிலத்தில் கேட்டார்.



எனக்கும் தெரியாமல் கையில் இருந்த என் ஆப்பிளை (கை தொலைபேசி) கேட்க, அது இன்னும் ஏழு நிமிடத்தில் ஒரு பேருந்தும் அதற்கடுத்து பதினாறு நிமிடத்தில் ஒரு பேருந்தும் வரும் என்று சொன்னதை சொன்னதோடு, அவர்கள் இருவரும் மீண்டும் படபடப்புடன் பேச தொடங்கி விட்டார்கள்.

நானும் அடுத்தவர் விசையத்தை கேட்பது நாகரீகமாகாது என்று அவர்களிடம் எதுவும் பேசவில்லை.

ஆக, இவர்கள் பேருந்துக்குதான் காத்து இருக்கிறார்கள் எனபது புரிந்தது.

ஒருவேளை குடும்ப சண்டையாக இருக்குமோ?, கோவம் கொண்டு அம்மா வீட்டுக்கு போக இருக்கும் மனைவியை இவர் சமாதான படுத்துகிறாரோ! என்று நினைத்த அதே நேரம், என்னை நானே மனதுக்குள் குட்டிகொண்டேன்.

இவரே பாட்டி, இவரின் அம்மா என்றால், அவர் இது வரை இருப்பது இந்நேரம் உலக அதிசியமாக இருந்தால்தான் உண்டு.

அடகெப்பா உன்னை யாரப்பா இப்படியெல்லாம் யோசிக்க சொல்வது? என்று செந்திலை கேட்கும் கவுண்டரின் குரல் மனதுக்குள் ஒலிக்க, மெதுவாக சிரித்துக் கொண்டேன்.

மழை லேசாக வேகம் எடுக்க துவங்கினாலும், குடை இல்லாமல் நடந்து வீட்டுக்கு போக முடியும் என்று தோன்றியதால், அப்படியே நிற்பதை தொடர்ந்தேன்.

சாலை முடிவில் பேருந்து வந்து திரும்பும் வெளிச்சம் தூரத்தில் தெரிந்ததும் இருவருமே படபடப்புடன் எதோ சொல்லிகொண்டே எழுந்து நின்று விட்டார்கள்.

அந்த பேருந்து அருகே வரும் போதே, ஒரு இளம் பெண் படிக்கட்டில் எட்டி பார்த்துகொண்டே வந்தார்.

அருகில் வந்தவுடன் அது ஒரு இளம் வயது பள்ளி மாணவி என்று அவரின் சீருடை சொன்னது. இவர்கள் வயதோடு அந்த பெண்ணின் வயதை பார்த்தால் கண்டிப்பாக மகளாக இருக்க முடியாது, பேத்தியாகத்தான் இருக்கும் என்று எனக்கு புரிந்தது.

பேருந்து முழுவதுமாய் நிற்கும் முன்னவே பாட்டி எதோ கத்த, அதை காதில் வாங்காமல், தன் கை தொலை பேசியை நீட்டி தன் தாத்தாவிடம் எதோ சொல்லிகொண்டே அந்த பெண் இறங்கினாள்.

கை தொலை பேசியில் சார்ஜ் இல்லை என்று சொல்லுகிறாள், என்று எனக்கு நானே புரிந்து கொண்டேன்.

கோபத்துடன் கத்திகொண்டே சென்ற பாட்டி ஒரு அறை வைக்க போகிறார் என்று நான் நினைத்ததை போல எதுவும் இல்லாமல், அவர் தன் பேத்தியை அரவணைத்து தலையை தடவி அந்த பெண்ணை மேலிருந்து கீழ் வரை பார்க்க, தத்தா அவளிடம் இருந்த கை பையை வாங்கி கொண்டார்.

ஆனாலும் பாட்டி இன்னமும் பேசுவதை (கத்துவதை) நிறுத்தவில்லை, அந்த பெண்ணும் இப்போதும் அதை காதில் வாங்காமல் தாத்தாவிடம் பேசுவதை நிறுத்தியபாடில்லை.

என்னவென்று புரியாமல் நின்ற என்னிடம் அந்த தாத்தா, இது தன் மகளின் மகள், இவள் படிப்புக்காக நாங்கள் இவளோடு இங்கு தங்கி இருக்கிறோம், இன்று இவள் வர தாமதமானதால், பாட்டி பயந்து விட்டதாக ஒற்றை வார்த்தையில் சொல்லிகொண்டே மூவரும் பேருந்து நிறுத்தத்தின் பின் புறம் இருந்த பாதையில் நடக்க துவங்கி விட்டார்கள்.

புகையிலை விரிச்சா போச்சு, பெண் பிள்ளை சிரிச்சா போச்சு, ஒரு பெண்ணை வளர்த்து நல்ல ஒருவரிடம் சேர்க்கும் வரை, பெற்றவர்கள் வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு இருப்பது போல, என்று நம்ம ஊர் பாட்டிகள் சொல்லவது நினைவில் வர, எனக்கும் எதோ என் மகள் பத்திரமாக வந்து சேர்ந்ததை போல மனம் இதமாக, சிரித்துக்கொண்டே மீண்டும் நடக்க துவங்கினேன்.

இனம் மொழி நாடு எதுவாக இருந்தாலும் சரி, எல்லா தாய்மையும் பெண்மையை ஒரே பாசத்தோடும் பயத்தோடும் தான் பாதுகாக்கிறார்கள்.

பதிவை முடிக்கும் முன், நான் சிங்கை வந்ததும் என்னை சந்தித்த, தொலை பேசியில் அழைத்து பேசிய நண்பர்கள் கிரி, சத்ரியன் மற்றும் அனைவருக்கும் என் நட்புடன் நன்றி!.

நன்றி, மீண்டும் சந்திப்போம்.

Photobucket

Photobucket
 

Blogger Widgets