Friday, February 26, 2010

கடவுள் இருக்காரா! இல்லையா?

வா, நண்பா, என்னா ஒரு மாசமா ஆளையே காணோம்? "வா.இ.வா" சங்கத்துக்கும் (வார இறுதி வாலிபர்கள் சங்கம்) சரியா வரல! சரி, இடுகை, பதிவுன்னு வேலையா இருப்பேன்னு பார்த்தா!, அந்த பக்கமும் இப்போ எல்லாம் அவ்வளவா ஆளையே காணோம்? என்ன ஆச்சு?

அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல மாப்ஸ், ரொம்ப நாள் ஆச்சுல அதான் வண்டி கொஞ்சம் மக்கர் பண்ணுச்சு, சரி ஒரு சர்வீஸ் பண்ணலாம்னு போனா "பேட்டரி ஓவர் ஹீட்ன்னு" சொல்லி படுக்க வச்சுடாங்க.

டேய்...காச்சல்ன்னு ஒரு வார்த்தைல சொல்ல வேண்டியதுதான? ஏன்டா இப்படி படுத்துற!. அது ஒண்ணுமில்ல மாப்ள, இப்ப ஓவர் பனியா இருக்குல்ல அதான், நீ சும்மா ஒரு நாலு ரவுண்டு போட்டா எல்லாம் சரியாகிடும் கவலைய விடு.

இது என்ன கொடுமைடா!, அப்ப ராத்திரிபூரா கண்ணு முழிச்சு படிச்சு பத்தாவது, பன்னெண்டாவதுல நல்ல மார்க் வாங்கி பாஸ் பண்ணி, அப்புறம் காலேஜுல சேர தனியா ஒரு பரிச்சைய எழுதி, அதுக்கு அப்புறம் அவர் கூட ஸ்கூல்ல படிச்சவுங்க எல்லாம் கல்யாண பத்திரிகைல இருந்து, குழந்தைக்கு பேரு வைக்கிறதுக்கு கூப்பிடும் வரை, ஒரு அஞ்சு வருஷம் படிச்சு, அதுக்கும் அப்புறம் அரசாங்க கிராம சேவையை முடிச்சுட்டு (யப்பா சொல்லவே மூச்சு முட்டுது) டாக்டர்-ன்னு அங்கங்க உக்காந்து இருக்காங்கலே அவுங்க எல்லாம் எதுக்கு?



வண்டி டிங்கரிங் பண்ணி வந்தாலும் இன்னும் உனக்கு வாய்ல வாஸ்த்து சரியாகல மாப்ஸ்!, ஏன்னா, அப்படியே நீ அவுங்ககிட்ட போனாலும் இருமல் மருந்து, கொஞ்சம் தூக்க மாத்திரை-ன்னு அதுலயும் அதே ஆல்கஹால்தான் இருக்கும். ஆனாலும் நீ அநியாத்துக்கு திருந்திட்டடா!.

இப்ப கச்சேரிக்கு வர்றியா? இல்ல அந்த டாக்டர்கிட்டேயே போய் இன்னும் கொஞ்சம் மருந்து வாங்கி குடிச்சுட்டு வீட்டுக்கு போறியா அத சொல்லு மொதோ?


சரிசரி, ஓவரா பேசாம டோக்கன (வாய) மூடிகிட்டு கொஞ்சமா ஊத்து, சீக்கிரம் வீட்டுக்கு வர சொல்லி தங்கமணி சொல்லிவிட்டா.

அப்படி வா மகனே!, ரொம்ப நல்லவன்டா நீ, வா...வந்து உன் டாடா சுமோவ இப்படி பார்க் பண்ணு.

இந்தா பிடி மொதோ ரவுண்ட் மெதுவா போவோம், நிறைய நேரம் இருக்கு வீக்எண்ட்தான...!

ஆமா மாப்ள, என்னடா இது! போன வருசத்த விட இந்த வருஷம் நல்லா இருக்கும்னு சொன்னாங்க!, இது அத விட மோசமா இருக்கு? நம்ம ஒபாமா வந்த நேரமே சரியில்லடா?


டேய், உனக்கு வருஷம் நல்லா இல்லாததுக்கு ஒபாமா என்னடா பண்ணுவாரு? எல்லா வருசமும் நல்ல வருசம்தான் மாப்ஸ், அது அவுங்கவுங்க உழைப்பை, சேமிப்பை, நம்பிக்கையை பொறுத்து மட்டும்தான் மாறுபடும்.

என்னாடா நீ உலக பொருளாதார அரசியலே தெரியாம இருக்க? இப்படி குடு கிளாஸ அடுத்த ரவுண்ட் போவோம்.

ஆனா, மாப்ள இந்த சீனாகாரங்க போலி தயாரிப்பு தொல்ல தாங்கல, உட்டா இமயமலைக்கு போலி மாதிரி தயாரிச்சு! இந்தியாவுக்கு இந்த பக்கம் வச்சுடுவாணுக போல!, இதுல சைபர் வார் வேற!, அவனுகளுக்கு சரியா ஆப்படிக்கனும்டா!.

ஆனா அவனுகளை மட்டும் சொல்ல முடியாது, நம்ம இப்படி ஜாதி, மதம்ன்னு மூட நம்பிக்கைல இருக்க வரை யாரு வேணா என்ன வேணா பண்ண முடியும்.


டேய் விடுங்கடா, போலி பொருள் தயாரிப்புக்கும் கடவுள் இல்ல மதத்துக்கும் என்னடா சம்மந்தம்?

ஆமாடா விடுங்க, இல்லைனா நம்ம சாமி சரக்கோட சாமியாடிடும், "அகம் பிரம்மாஸ்மி "...ஹ ஹ ஹா!..மாப்ள அந்த தம்ம இந்தபக்கம் கொடு!.

ஏய், நீ நாத்திகன் உன்கிட்ட கடவுளை பத்தி பேச முடியுமா? "சமயமில்லாத மனிதன் கடிவாளம் இல்லாத குதிரை போலன்னு" அங்க உன் காலண்டர்ல போட்டிருக்கு பாரு!.

இதாண்டா, இப்படி யாராவது எதாவது சொல்லி எழுதிவைச்சா அத அப்படியே நம்பி, நம்பாதவுங்கள நாத்திகன்னு புரியாம சொல்ல கூடாது. உண்மைல இது நாத்திகம் இல்லமாப்ள நாங்க எல்லாம் "பகுத்தறிவாதி" புரிஞ்சுக்க.

ஏன்னா, கடவுள் இல்லை என்று சொல்லுகிறவன் என்றவுடன் அவனை நாத்திகன்னு சொல்றீங்களே, அதுக்கு பேருதான் உண்மையான நாத்திகம்.

உனக்கு புரியுறமாதிரி சொல்லனும்னா, ஒரு கடவுள் கரும வினைக்காக ஒருத்தனை பிச்சைக்காரனாக்கி இருக்கும் போது, நீங்கள் அவனுக்கு சோறு போடுவதை என்னவென்று சொல்வது? இது நீ கடவுளுக்கு விரோதமாக செய்யும் காரியம்தானே!, அப்படி பார்த்தால் இதுவும் கடவுளை நம்பாத ஒரு செயலாகிவிடுகிறது. அப்ப இதுவும் நாத்திகம்தானே!.


நான் புரிஞ்சுகிறது இருக்கட்டும், பிச்சை எடுப்பது என்பது வறுமையோ ஒரு தொழிலோ இல்லை, இது இடையில் மனிதனாக கொண்டுவந்த சோம்பேறித்தனம் மட்டுமே.

அந்த காலத்தில் துறவிகள், முனிவர்கள் மற்றும் சித்தர்கள்தான் தங்கள் பசிக்கு உணவு கேட்பார்கள். காரணம் யாசகம் துரவத்தின் ஒரு பகுதி என்பது மட்டுமல்ல, அவர்கள் தங்களுக்கு என்று எதையும் சேமிக்கும் மற்ற சாதாரண மக்களை போல இல்லாமல் நிலையில்லாத இந்த மனித வாழ்கையில் எதன் மீதும் பற்று கொள்ளாமல் வாழ்பவர்கள்.

ஆக, இப்படி கடவுளுக்காகவும், மற்றவர்களுக்காகவும் வாழும் அந்த மகான்களின் பசிக்கு நம்மிடம் இருக்கும் உணவை கொடுப்பது ஒரு நல்ல காரியமாக கருதப்பட்டது, இதில் நீங்கள்தான் கடவுளை இழுத்து புரியாதவர்களை குழப்புகிறீர்கள்?


அப்படி பார்த்தால், எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு என்று சொல்கிற யாரும் கடவுளை மட்டும் நம்பி எந்த ஒரு காரியத்தையும் ஏன் கடவுளிடம் விடுவது கிடையாது?

காலில் ஒரு சின்ன முள் குத்தினால் கூட ஓடி ஒரு மருத்துவரிடம் தான் போகிறார்கள், இது எப்படி கடவுள் நம்பிக்கையாக இருக்க முடியும்? அப்ப இவர்கள் சிந்தனையாளராக இல்லாத நாத்திகர்கள்தானே?


யப்பா சிந்தனையாளரே, நீ நிறைய தமிழ் படம் பார்த்து கடவுள் என்றால் எதோ மேஜிக் மாஸ்டர் என்று நினைத்து விட்டாய் போல.



உன் "கடமையை நீ செய் பலன் உன்னை வந்தடையும்" என்று கீதையோ, குரானோ அல்லது பைபிளோ சொன்னால் நீ நம்ப மாட்டாய். ஆனால் எந்த ஒரு செயலுக்கும் அதற்கு சமமான எதிர்மறை செயல் உண்டு என்று நீயுட்டன் சொன்னால் நம்புவாய் அப்படிதானே!.


அப்படி இல்லை நண்பா, நான் சொல்ல வருவது, நாத்திகம் என்பது அவரவர்கள் மன உணர்ச்சி மற்றும் ஆராய்ச்சித் திறன் ஆகியவைகளைக் கொண்டதே தவிர அது ஒரு குணமோ கட்சியோ மதமோ அல்ல என்பதுதான்.

நானும் அதையேதான் சொல்கிறேன், இறை நம்பிக்கை என்பது அவரவர்கள் மன உணர்ச்சி மற்றும் நம்பிக்கை திறன் ஆகுமே தவிர அது ஒரு கொள்கையோ கட்சியோ அல்ல. மேலும் மதம் என்பது அவரவர் சமைய நம்பிக்கைகளை பொருத்து வாழ்கையை நல்வழிப்படுத்த காட்டப்படும் பாதைகள்தான், யாரும் எந்த மத நல்வழியையும் பின்பற்றி ஒழுக்கமான வாழ்கையை வாழ்வதில் தவறேதும் இல்லை.

இது தவிர மற்ற மத, இன அரசியல்கள் இடையில் மனிதர்களால் உருவாக்கபட்டதுதான், உங்களை போலவே குறைகளை மட்டும் சொல்லி வரும் தலைமுறைகளை குழப்ப.


டேய் நீ ஊத்துடா, இவன் புரியாம பேசுறான்!, இதான் இந்த நம்பிக்கை தான் மாப்ஸ் பிரச்சனையே?

ஏன்னா, காரண காரியத்தைத் தெரிந்து அதன்படி நடப்பவன் நாத்திகன், வெறும் நம்பிக்கையை ஆதாரமாக வைத்துச் சாத்திரம் சொல்லுகிறது, பெரியோர்கள் சொல்லுகிறார்கள் என்பதை நம்பி அந்த நம்பிக்கையின் படி நடப்பவன் ஆத்திகன்.

நாத்திகன்னா கடவுள் இல்லை என்று சொல்பவன் என்பது மட்டும் அர்த்தம் இல்லை!.

பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து பார்த்து புராண இதிகாச வேத சாத்திரங்களை ஒப்புக் கொள்ளாதவர்களையே, பார்பனர்கள் நாத்திகர்கள் என்று எழுதி வைத்திருக்கின்றனர்.


சும்மா எதுகெடுத்தாலும் அவங்கள ஏன் மாப்ஸ் இழுகிறீங்க? உனக்கு தெரியும் நான் கூட அந்த வகை இல்லை, ஆனாலும் ஒன்னு கேட்கணும்! கடவுள் நம்பிக்கைன்னு சொல்ற நாங்க கூட ஜாதி வேண்டாம் என்று சொல்லும் நிலைக்கு வந்து விட்டோம்?

ஆனா நீங்க, மனிதனை மனிதனாய் பார்க்கும் பகுத்தறிவாதி என்று சொல்லி விட்டு, நீங்களே ஒருவரை ஜாதியை வைத்து பட்டை பெயர் சொல்லி பிரிக்கலாமா சொல்லு?

சரி அத கூட விடு மாப்ஸ், உன் கருத்து படி நான் கூட பெரியோர்கள் சொல்லுகிறார்கள், என்ற நம்பிக்கையின் படி நடப்பவன்தான்.

எங்க அம்மா பால் கொடுத்து நான்தான் அம்மான்னு சொன்னாங்க "அந்த நம்பிக்கை", அப்புறம் அம்மா இவருதான் அப்பான்னு சொன்னாங்க "அந்த நம்பிக்கை", அப்பா என் கையை பிடித்து கொண்டு போய் உட்காரவைத்து "ஹரி நமத்து சிந்தம்" என்று எழுத சொல்லி, இவர் தான் உன் குரு என்று சொன்னார் "அந்த நம்பிக்கை". அதன் பின் அன்பே கடவுள் அறிவே தெய்வம் என்று அந்த குரு சொல்லி கொடுத்த "நம்பிக்கைதான்" நான் அறிந்த தெய்வம்.

இதைத்தான் சுருக்கமாக நான்கு சொற்களை வைத்து "மாதா, பிதா, தெய்வம், குரு" என்று சொல்வதாக நான் பிறந்த அர்த்தமுள்ள இந்து மதம் சொல்லியது "அந்த நம்பிக்கை" தான் மாப்ஸ் இது!, இதில் எங்க அறிவு குறைந்து விட்டது?, எல்லா மதங்களும் இதே கருத்தைதான் சொல்கிறது.

அவ்வளவு ஏன்? இராமாயணம் போல எல்லா மத இதிகாசங்களும் பல நூற்றாண்டு பெரியவர்கள் வாய் வழி சொல்லி வந்து பின்தான் எழுதப்பட்டு இருக்கிறது இல்லையா, அப்படி இருக்கும் போது அது முழுவதும் எப்படி பொய் என்று சொல்ல முடியும்?

அதெல்லாம் முடியாது, நாங்க பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து பார்த்துதான் முடிவு எடுப்போம் அதனால, இவருதான் அப்பா என்பதற்கு டி.என்.ஏ டெஸ்ட் கொடு!, இவருதான் என் குரு என்பதற்கு முதலில் நான் இவருக்கு சோதனை வைத்து இவர் அறிவை ஆராய்ந்து பார்த்துதான் இவரிடம் படிப்பேன்! என்றா சொல்ல முடியும்?


உன்கிட்ட சும்மாவே பேச முடியாது, இதுல மப்பு வேற சொல்லனுமா? ஒன்னு புரிஞ்சுக்க, அறிவுக்கு எங்கே மரியாதை இல்லையோ, சமத்துவத்திற்கு எங்கே இடம் இல்லையோ அங்கே இருந்துதான் நாத்திகம் பிறக்கிறது.

ஆஆஆ, இப்படின்னு ஒரு "பிட்ட போட்டு" நாங்க ரொம்ப அறிவாளிகள் உண்மையான சிந்தனையாளர்கள் என்று புரியாதவர்களை ஏமாற்றி காலத்தை ஓட்டிக்கொண்டு இருக்கிறீர்கள் அப்படிதானே?

அப்படி இல்லை மாப்ஸ், இதுபோல நாத்திகன் என்று சொல்வதையோ,அழைக்கப்படுவதையோ நினைத்து கலங்காதவனாக இருந்தால் ஒழிய, ஒருவன் சமதர்மம் பேச முடியவே முடியாது என்றேன்.

அடப்பாவி நீ பேசுவதில் சமதர்மம் என்பதே இல்லையேடா?

உன் குறி மற்றும் மொத்த திறனும் கடவுள் இல்லை என்று சொல்வதிலும், குறிப்பாக கடவுள் நம்புபவர்களை கேலி செய்யும் விதத்தில் அல்லது அதில் உள்ள குறைகளை மட்டுமே குறிப்பிட்டு காட்டுவதில் மட்டுமே இருக்கிறது.

குறை இல்லாத இடமோ கொள்கையோ இருக்கவே முடியாது, அப்படி இருக்க, வெறும் குறைகளை மட்டும் பேசி மக்களை குழப்புபவர்களை எப்படி சொல்வது.

கடவுளே இல்லை என்று நம்பியபின்!, இருக்கார் என்று நம்புபவர்களிடம் போய் எங்கே அவர் இருந்தால் காட்டு காட்டு என்று கேட்பது ஏன்? நீ இல்லை என்று சொல்லுபவரை ஏன் தேடுகிறாய்? இது உன் கொள்கை மீது உனக்கு நம்பிக்கை இல்லாததை தானே காட்டுகிறது?

மேலும், கடவுள் இல்லை என்ற உன் கருத்தை விட, இருக்கு என்று சொல்பவர்கள் உணர்ச்சியை தூண்டி அவர்கள் மனதை காயப்படும் படி இருக்கும் உன் செய்கைகளை மட்டுமே குறை சொல்லும் நான்!, உன் மற்ற சமுதாய முன்னேற்றம், மூட நம்பிக்கை, கொத்தடிமை எதிர்ப்பு போன்ற நல்ல கருத்தை ஒத்துக்கொள்ளும் போது? (அதற்காக நீ தனியாக எந்த வேலையும் செய்வதில்லை அது வேறு விசையம்) உன்னால் குறைகளை தவிர கடவுள் மற்றும் இதிகாசங்களில் இருக்கும் எந்த ஒரு நல்லதையும் ஒத்துக்கொள்ளவோ அல்லது சரி என்று சொல்வோ முடியவில்லையே ஏன்?

இதுவா பகுத்தறிவு?

பிச்சை போடுபவனை குறை சொல்வதை விட்டு விட்டு, பிச்சையை தொழிலாக செய்பவனுக்கு உழைத்து வாழ வழி காட்ட நீ ஏன் நினைப்பதில்லை?

இத விடு, சமதர்மம் என்கிறாய்! இதோ, இங்கே தக்காளி இருக்கிறது, இதை வாங்கும் போது என்ன விலை கொடுத்தாய்?

இதில் அந்த தக்காளியை விற்ற பல் பொருள் அங்காடியின் லாபம், மொத்த வியாபாரியின் லாபம், குத்தைகாரர் லாபம், நிலத்துகாரர் லாபம் போக இதை விளைவிக்க பாடு பட்ட அந்த விவசாயின் லாபம் என்னவாக இருக்கும் என்று நினைத்தாயா! அல்லது இதற்கான முயற்சி ஏதாவது செய்தாயா? மற்ற அனைவருக்கும் கிடைக்கும் அதே லாபபங்கு பாடுபட்ட அந்த விவசாயிக்கும் கிடைக்க பாடு படுபவன் சொல்ல வேண்டிய வார்த்தை தான் சமதர்மம்.

அப்படி நீ செய்ய மாட்டாய், செய்தால் அது நாத்திகத்தில் (மற்றவர்களை குறை மட்டும் சொல்வதில்) இருந்து விலகி கம்யூனிசம் ஆகி விடும் என்பது தான் காரணம் இல்லையா?

மேலும் இது சாதாரண மற்றவர்களை போலவே நம் சொந்த சுகமான வாழ்க்கைக்கு நடுவில் போகிற போக்கில், மசூதி,கோவிலில் இருந்து வருபவர்களை பார்த்து கடவுளை நம்பும் நீ முட்டாள் முட்டாள் என்று வெறும் வாயை மென்று மக்களை குழப்பி ஜாதி பிரச்சனையாக்குவது மட்டுமில்லை!.



உழைப்பின் பலன் அதில் உழைத்த மட்டும் முதலீடு செய்த அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும் என்று சமுதாயத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டும், பாடு பட வேண்டும், அதனால் சொந்த வாழ்க்கை இழப்பு அதிகம் எனதுதான் உண்மையான காரணம்.

இப்படி ஆக்கபூர்வமாக எதையுமே செய்யாமல், நான் சிந்தனையாளன், அறிவாளி, பகுத்தறிவாதி, சமதர்மவாதி என்று எப்படி சொல்ல முடியும்?

அப்படியானால், இதை மட்டுமே செய்து காட்டிய "காரல் மார்க்ஸ்" "விளாடிமிர் லெனின்" இவர்களை எல்லாம் என்ன வென்று சொல்வது?


அட போ மச்சி, உனக்கு புரியவே புரியாது? பகுத்தறிவுக்கும் நாத்திகத்திற்கும் உள்ள உறவு என்பது பொது உடைமை என்பதைப் போலவே நாத்திகமும் அறிவின் மற்றும் சமுதாய சீர்திருத்தத்தின் உண்மையான கடைசி எல்லை ஆகும். புரியுதா!, இத்தோட இந்த பேச்ச விடு!.

என்னடா பெருந்தன்மை இது?, அப்படியே அந்த உன் அறிவை வைத்து, எந்த ஒரு ஆராய்ச்சி வசதியும் இல்லாமல் ஒன்பது கோள்கள் அதன் சுற்றுப்பாதை, எந்த நேரத்தில் எந்த இடத்தில் வந்தால் என்ன என்ன கால நிலை மாறுதல் என்று எல்லா தகவல்களையும் அல்லது உலகின் முதல் திறந்த இதய அறுவை சிகிச்சை செய்த முறையையும் இதிகாசத்தில் எப்படி எழுதினார்கள் என்று நிருபித்து காட்டலாமே?

உன்னை போல வெறுமன குறைகளை மட்டும் வைத்து சமுதாயத்தை குழப்பாமல்!, உண்மையான உதாரணத்தை நான் சொல்கிறேன் கேள், நான் கம்யூனிட் இல்லை இருந்தாலும் சொல்கிறேன்.

உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தொழிலாளன் என்பவன் ஒரே வர்க்கத்தைச் சேர்ந்தவனே! அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தால் மட்டுமே தொழிலாளர்கள் வாழ்வில் விடுதலை கிடைக்கும், என கூறியதோடு இல்லாமல், அதற்காகவே பாடுபட்டு அதனால் ஜெர்மன் நாடு கடத்த உத்திரவிட பட்டு, பெல்ஜியம் வந்தபோது, வெறும் 27வயதே ஆன இளைஞன் ஒருவனைப் பார்த்து பெல்ஜியம் நாடே பயந்து நடுநடுங்க!.

“எல்லா நாடும் என் நாடே!, எல்லா மக்களும் என் மக்கள்!, நானோர் உலக மகன்" என்று சொன்ன "காரல் மார்க்ஸ்" போன்றவர்களுக்கு சொந்தமான வார்த்தைதான் சிந்தனையாளன், பகுத்தறிவாதி, சமதர்மவாதி.

சமமான மனநிலையில் வளர்ந்து வரும் மக்களை, மத, இதிகாச குறைகளை மட்டும் சொல்லி குழப்பி அதில் குளிர் காயும் உனக்கு அல்ல.

இனி மேலாவது வெறும் குறைகளை மட்டும் குறித்து சொல்லி வரும் தலைமுறையை குழப்பாமல் காரியத்தில் இறங்கி செய்து காட்ட பார், அதன் பின் இதை பற்றி பேசுவோம்.

இதோ "பாட்டம்ஸ் அப்", நானும் தங்கமணி போன் அடிக்கிரதுக்கு முன்னாடி கிளம்புறேன்.


டிஸ்கி: ஹலோ...பாட்டம்ஸ் அப் சொன்னதுக்கு அப்புறமும் இன்னும் என்ன தேடுறீங்க!? கடவுள் இருக்காரா இல்லையான்னா? போங்க...போய் வேலையை பாருங்க, விவசாயம் பண்ணுக்க, புள்ள குட்டிகள படிக்க வைங்க அதுதான் கடவுள்.

மனிதாபிமானத்தோட உங்க மனசாட்சிக்கு விரோதமில்லாத மட்டும் பேசுங்க செய்ங்க அதுவும் கடவுள்தான்.

அத விட்டுட்டு இந்த மாதிரி சரக்குக்கு சைடிஷ்ஷா பேசுற இடத்துல!, பொழுது போக்கா எழுதுற இடுகைல இருக்க மத்தவுங்க கருத்துல! கடவுளை தேடுவது என்பது குழந்தை வயதை தாண்டியும் நான் ஆணா, பெண்ணா என்று அடுத்தவர்களை கேட்பது போல!.

மனிதாபிமானத்தோட உங்க மனசாட்சிக்கு விரோதமில்லாத எல்லாமே கடவுள்தான், அது அவுங்க அவுங்க மனசுக்கு முதலில் புரிஞ்சாத்தான் எடுத்து சொல்லாமலே அடுத்தவுங்களுக்கு புரியும்.

இப்போ நான் ஜூட் விட்டு அப்பீட் ஆகிக்கிறேன்.


சில தனிப்பட்ட காரணங்களால் ஓரிரு மாதங்கள் என் பதிவுகள் மற்றும் நண்பர்கள் அனைவருடைய பதிவுகள் பக்கமும் அவ்வளவாக தொடர்ந்து வர இயலாது மன்னிக்கவும்.

நன்றி!.

Monday, February 15, 2010

நீங்கள் கேட்டு கொண்டு இருப்பது "டமில்" எப்.எம்!

நான் சிறு வயதாக இருக்கும் போது, எங்கள் வீட்டில் ஒரு பிலிப்ஸ் வானொலி இருக்கும், எங்கள் வீட்டில் எனக்கு மிக பிடித்த ஒரு விசையம் அது. அதிலும் வானொலி கேட்ட இன்னும் விருப்பம், அதற்கு இரண்டு காரணம்.

ஒன்று, எனக்கு தமிழ் பாடல்கள் கேட்க மிக பிடிக்கும். இன்னொன்று, அந்த தொகுப்பாளர்களின் தமிழ் குரல். மனதை மயக்கும் அந்த குரலுக்காகவே ஒரு சில நிகழ்ச்சிகளை தவறாமல் கேட்பது என் முக்கிய வேலைகளில் ஒன்று.

ஒவ்வொருவரும் தங்கள் தனி திறமையுடன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது இன்றும் என் மனதை விட்டு மறையவில்லை.

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், "சரோஜ் நாராயண் சுவாமி", "பி.ஹச்.அப்துல் ஹமிட்" மற்றும் "கே.எஸ்.ராஜா". எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது, நான் கே.எஸ்.ராஜா-வை போல "ஸ்டைலாக" நண்பர்களுடன் பேசி மகிழ்ந்தது.

பி.ஹச்.அப்துல் ஹமிட் அவர்கள் நின்ற இடத்தில் ஒரு லட்சம் பாடல் வரை, கேட்ட நொடியில் பாடல் இடம் பெற்ற படம், பாடியவர் பெயர், இசை அமைத்தவர், படலை எழுதியவர் என்று வரிசை படுத்தும் திறன் கொண்டவர் என்று கேள்விபட்டு இருக்கிறேன்.

நாளடைவில் வானொலி கேட்கும் பழக்கம் எப்போது என்னை விட்டு சென்றது என்று சரியாக நினைவில் இல்லை. வாழ்கையை தேடி ஓடி திரிந்ததில் அத்தனையும் தமிழ் பேசாத நகரங்கள், நாடுகள்.



இன்று போல் அப்போது எல்லாம் இணைய வழி வானொலிகள் இருந்ததில்லை, அந்தந்த வானொலிகள் அந்தந்த குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டுமே கேட்க முடியும்.

அதன் பின், இணைய பயன்பாடு மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியால் தொலைகாட்சி, எம்.பி-3என்று மாற!, வானொலி என்ற வார்த்தையே சுத்தமாக மறந்து போனது.

இப்போதுதான் கணினி, மொபைல் முதல் கைகடிகாரம் வரை வானொலி, தொலைகாட்சி எல்லாம் கேட்க முடியுமே.

இப்படி இணைய தொழில்நுட்பம் வளர்ந்த நீண்ட இடைவெளிக்கு பின், மீண்டும் வானொலி கேட்க சந்தர்ப்பம் கிடைத்தது, நான் முதல் முறையாக சிங்கை சென்று விமான நிலையத்தில் இருந்து டாக்ஸியில் போகும் போது, அது 2005-ல் என்று நினைகிறேன்.

இது என்ன நிகழ்ச்சி என்று அந்த வாகன ஓட்டியிடம் கேட்க!, இது சிங்கையின் தமிழ் வானொலி ஒலி 96.8 என்று அவர் சொன்னார். அப்போது பேசிக்கொண்டு இருந்தவர் பெயர் "மீனாக்ஷி" என்று நினைக்கிறேன்.

இந்த முறை கேட்டவுடன் பிடிக்க காரணம் மூன்று, அமைதியான மற்றும் அருமையான குரல், அந்த மழை தூரும் இரவு நேர நிகழ்ச்சியின் மென்மை, முக்கியமாக அந்த சூழ்நிலையில் அவர்கள் பேசிய அழகிய தமிழ்.

இப்படி ஆரமித்து அங்கு இருந்த நாட்களில் திரும்ப வானொலி கேட்க தொடர்வது (கைதொலைபேசியில்) என் வழக்கமாகிவிட்டது.

அடுத்தடுத்த நாட்களில் என்னை அதிகம் கவர்ந்தது அவர்கள் தமிழ், நிகழ்ச்சிக்கு நடுவில் அவர்கள் கொடுக்கும் வாழ்கை குறிப்புகள், "வானம் வசப்படும்" என்ற ஒரு நிகழ்ச்சி.மற்றும் இரவு சுமார் ஏழு முதல் எட்டு மணியலவில், ஒரு மருத்துவர் தரும் தன்னம்பிக்கை தொடர்பான சொற்பொழிவு. அவர் பெயர் நினைவில் இல்லை அருமையான ஒரு இஸ்லாமிய பெயர்.

இது எல்லாவற்றையும் விட "விமலா", எந்த வேலை இருந்தாலும், தினம் தினம் மாலை நேரம் இவர் நிகழ்ச்சியை மட்டும் தவற விடுவதில்லை, அப்படி ஒரு அழகான (இனிய) குரல் அவருக்கு (அவரும் அழகுதான்).

அதிலும் அவர் கேட்கும் கேள்விக்கு சரியான விடை தெரிந்தாலும், மற்றவர்களை மகிழவைக்கும் அவரை சிரிக்க வைக்குமாறு குறுந்தகவல் மூலம் ஒரு நகைச்சுவை விடையை அங்கிருந்த ஒவ்வொரு நாளும் அனுப்ப தவறியதில்லை.

என் நண்பர்கள் என்னை, நீ வந்திருக்கும் இந்த சில நாட்களில் எங்களுடன் நேரத்தை பகிராமல், கைதொலைபேசியை வைத்துக்கொண்டு "விமலா" பைத்தியமாகி விட்டாய் என்று சொல்லி கேலி செய்யவே தொடங்கி விட்டார்கள். அதன் பின் சிங்கை செல்லும் போது எல்லாம் ஒலி 96.8 நிகழ்ச்சியை நான் ஒரு போதும் தவற விடுவதில்லை.

இதை தவிர வேறு எங்கும் எனக்கு தமிழ் வானொலி கேட்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்று சொல்வதை விட எம்.பி-3 இருப்பதால், நான் அதிகம் விரும்பவில்லை என்பதுதான் உண்மை.

இப்படி மீண்டும் ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு, சமீபத்தில் இணையத்தில் கண்ணை கழுவிக்கொண்டு இருக்கும் போது, தமிழ் எப்.எம் வானொலிகள் "சென்னையில் இருந்து நேரடி ஒளிபரப்பு" என்று எதோ ஒரு விளம்பரம் கண்ணில் பட, வானொலி கேட்கும் ஆர்வம் என்னை தொற்றிக்கொண்டது.

அதில் எதோ ஒரு எப்.எம் நிகழ்ச்சியை சொடுக்க, அடுத்த பத்து நிமிடத்தில் எனக்கு ரத்த ஓட்டம் கூடி விட்டது (மாற்றி மாற்றி வேறு சில நிலையங்களையும் கவனித்தேன்).

ஒரு பெண் நிகழ்ச்சியை தொகுத்து கொடுத்து கொண்டிருந்தார், அப்பப்ப...என்ன ஒரு பேச்சு நடை, எனக்கு இவை உண்மையில் தமிழ் எப்.எம்-தானா? என்று ஒரு சந்தேகம் வந்து விட்டது.

அந்த பெண் வீட்டில் ஏதாவது அவசர வேலையை விட்டு விட்டு வந்தாரா! அல்லது அந்த நிறுவனத்தில் விளம்பர தொழில் நோக்கமா! என்று தெரியவில்லை அவ்வளவு ஒரு அவசரமான பேச்சு. அதுவும் வடிவேல் சொன்னா மாதிரி "இப்ப நீ என்ன பேசுன? இதுல தமிழே இல்லையே!" என்று கேட்க தோன்றியது.

தமிழ் எப்.எம் வானொலியில் (அவர்கள் சொந்த நிறுவன விளம்பரத்தில் கூட தமிழ் இல்லை) இப்படி அவசரமாக அதுவும் "ஆங்கிலம்" பேசுவது எனக்கு நாகரீகமாக தெரியவில்லை.

ஒரு அமெரிக்கரை கொதிக்கும் சுடுதண்ணீரில் காலை விட சொல்லி விட்டு, வேகமாக நீ தமிழில் "திருக்குறள்" படித்தால் தான் காலை வெளியே எடுக்க முடியும் என்று சொன்னால்!, அவர் தமிழ் உச்சரிப்பு எப்படி இருக்குமோ!, அப்படிதான் அவர்கள் பேசிய விதம் எனக்கு தோன்றியது.

இங்கு மதவாதி போல் ஆங்கிலம் பேசுவதை தவறு என்று நான் சொல்லவில்லை!.

"ஆங்கிலம்" என்பது ஒரு மொழி மட்டுமே அறிவல்ல!. தமிழ் பேச தெரியாத வேறு மக்களுடன் நாம் சொல்ல வந்ததை பகிர்ந்து கொள்ளும் போது பயன் படுத்துவதில் ஒரு அர்த்தம் இருக்கிறது. அதை விடுத்து ஏன் தேவை இல்லாத எல்லா இடங்களிலும்?

மேலும் ஆங்கிலம் கேட்க எத்தனையோ இணையம், வானொலி மற்றும் தொலைகாட்சி பகுதிகள் இன்று இருக்கிறது, பின் ஏன் ஒரு தமிழ் பகுதியில் இப்படி?

நாங்கள் தமிழ் தலைவர்கள், தமிழ் வளர்ப்போம், இமயத்தில் தமிழ் கொடி பறக்கும், தமிழ் செம்மொழி, இந்திய அரசாங்க ஆவணங்கள் கூட தமிழில் வேண்டும் என்று சொல்லி போராட்டம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றும் யாருக்கும் இது கண்ணில் படவில்லையா? என்று கூட குழம்பி விட்டேன்.

தமிழ் வளர்ப்பது ஒரு பக்கம் இருக்கட்டும், முதலில் நடை முறை பொது வாழ்கையில் தமிழில் ஒழுங்காக பேசுவோம் மற்றும் பேச தூண்டுவோம்.



குறைந்த பட்சம் பொது மக்கள் தினசரி பயன் பாட்டில் இருக்கும் வானொலி மற்றும் தொலைகாட்சிகளில் தமிழ் பயன் படுத்த இவர்கள் முயற்சிக்கலாமே?, தமிழ் மட்டும் என்று கூட அல்ல, தமிழையும் என்று சொன்னால் அது இங்கு மிகை ஆகாது.

இங்கு என் எண்ணங்களின் சில கேள்விகள், சில வேண்டுகோள்!.

தமிழ் "எப்.எம்" வானொலியில் தமிழில் பேசினால் குற்றமா?

தமிழ் வானொலி விளம்பரங்கள் கூட ஆங்கிலத்தில் இருப்பதுதான் நாகரீகமா?

தமிழ் தொகுப்பாளர்கள் நிகழ்ச்சிக்கு நடுவில் கொடுக்கும் தகவல்களில் மக்களுக்கு பயன்படும் படி ஒரு நல்ல தரம் வேண்டாமா?


இன்று வெளிநாட்டு தமிழ் வானொலிகள் கூட சுத்தமான தமிழ் மட்டும் பயன் படுத்தும் போது, நம் தமிழ் நாட்டு எப்.எம் மக்கள் ஏன் தமிழை இப்படி கொலையாய் கொல்கிறார்கள்?

இன்னும் கொடுமை அந்த தொகுப்பாளர்கள் நிகழ்ச்சிக்கு நடுவில் கொடுக்கும் கேள்விகள் (தகவல்கள்) யப்பப்பா...

"யாரை அடிக்க மிக பிடிக்கும்", "யாரை திட்ட மிக பிடிக்கும்", "ஓர் நாளுக்கு எத்தனை முறை கண்ணாடியை பார்ப்பீர்கள்?"

இன்றைய நம் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் எவ்வளவு பயனுள்ள தகவல்கள் இது இல்லையா!.

அதை விட கொடுமை, விளம்பரத்துக்காக நேரத்தை ஒதுக்க, அவர்கள் பேச்சில் இருக்கும் அவசரம் (பரபரப்பாக அல்லது சுறுசுறுப்பாக பேசுவதும், அவசரமாக பேசுவதும் ஒன்றாகாது).

காலை அலுவலகம் செல்லும் ஒருவர், கார் ஓட்டும் போது இதை கேட்டால் சுத்தம். ஒன்று ரத்த கொதிப்பு எகிறி கார் மரத்தில் முட்டிவிடும் அல்லது அன்று முழுவதும் அலுவல வேலை "அதோ" கதிதான்.

அப்போதே அவர் எண்ணுக்கு அழைத்து "மறக்க தெரியவில்லை எனது காதலை, மறக்கும் உருவமில்லை எனது காதலி" என்ற 90-களில் வந்த இந்த பாடல் எந்த படம் என்று தெரியுமா? என்று கேட்டு, பத்து வினாடிக்குள் சொல்லாவிட்டால்!, நீ எல்லாம் ஒரு பாடல் தொகுப்பாளரா என்று சொல்ல தோன்றியது.

குறை சொல்வதாய் நினைக்க வேண்டாம் நண்பர்களே!, சற்று சிந்தித்து பாருங்கள்.

இன்று இணையத்தில் கிடைக்காத தமிழ் பாடல்களே கிடையாது. அப்படி இருந்தும் உலக தமிழ் மக்கள் தமிழ் வானொலியை தேடி வருவதற்கு காரணம்!, வெறும் தமிழ் பாடல் கேட்கும் நோக்கில் மட்டுமல்ல.

தாய் மொழி பேச்சு துணைக்கு கூட ஆள் இல்லாத நாடுகளில் இருக்கும் நம் மக்கள், உங்களை போல நம் மக்களின் அன்றாட நடை முறை தமிழை மற்றும் நம் சொந்த நாடு, நகரத்து நடவடிக்கைகளை கேட்டு மகிழத்தான்.

எங்கள் வாழ்வும் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! என்று சொன்ன தமிழ் திருநாடு இல்லையா நம் நாடு.


இப்படி உலகமெங்கும் ஒலிக்கும் உங்கள் குரல் மற்றும் தமிழ் நிகழ்ச்சிகளில், நல்ல தரமான தமிழை பயன்படுத்த வேண்டாமா?

நல்ல தமிழில் பேசுங்கள், உங்களிடம் பேச அழைப்பவர்களிடமும் தமிழில் மட்டும் பேச ஊக்க படுத்துங்கள். நீங்கள் சொல்ல வரும் கருத்துக்கு தேவையான குரல் வேகத்தை மட்டும் கொடுத்து, தகுந்த இடைவெளியில் வார்த்தைகளை உச்சரியுங்கள். மேலும் உங்கள் மற்றும் மற்ற நிறுவன விளம்பரங்கள் தமிழில் இருக்குமாறு தேர்ந்தெடுங்கள்.

நிகழ்ச்சி நேரம் "காலை, பிற்பகல், மாலை மற்றும் இரவு" என்று நேரத்துக்கும் அன்றைய சூழ்நிலை, (குறைந்தது அந்தந்த நகரத்தின்) வானிலைக்கும் தகுந்த கருத்துகளை தொகுத்து கொடுங்கள்.

அப்போதைய போக்குவரத்து நெரிசல், போக்குவரத்து விதி முறைகள், சாலை விளிப்புணர்வு, தன்னம்பிக்கை கருத்துகள், கணவன் மனைவி ஒற்றுமை, குழந்தைகள் வளர்ப்பு, கல்வி, லஞ்ச ஒழிப்பு, உலக நிகழ்வு, அறிவியல், உலக அரசியல், இந்திய வரலாற்றில் இன்று என உங்கள் நிகழ்ச்சிகளுக்கு நடுவில் பகிர நல்ல விசையங்கள் நிறைய இருக்கிறது.

நம் தாய் நாட்டில் நம் தாய் மொழி பேசினால் அசிங்கம் ஒன்றும் இல்லையே!, இதை பற்றி உங்களை சற்று சிந்தித்து பார்க்கத்தான் இங்கு வேண்டுகிறேன்.

மொத்தத்தில் அன்று நான் பல எப்.எம் வானொலி நிகழ்ச்சிகள் மாற்றி மாற்றி கேட்டதில், ஒரே ஒரு ஆறுதல் அவர்கள் தொகுத்து கொடுத்த நல்ல பாடல்கள். ஆனால் நான்கு நிமிட தமிழ் பாடலில் குறைந்த அழுத்தம், அடுத்த இருபது நொடி அவர்கள் அவசர ஆங்கில பேச்சில் மற்றும் விளம்பரத்தில் அதிகரித்து விடுகிறது.

இன்னொன்று எந்த எப்.எம் அலைவரிசை என்று நினைவில் இல்லை, அந்த தொகுப்பாளர் பெயர் "தீபா" என்று நினைக்கிறேன்!. தானும் "முடிந்த வரை" தமிழில் பேசி, தன்னிடம் பேசியவர்களையும் தமிழில் பேச சொல்லி ஊக்கப்படுத்தினார்.

அவருக்கு என் வாழ்த்துக்களும் நன்றியும். அவர் நிகழ்ச்சியை முழுவதும் தமிழில் தொகுத்தால் நிச்சியம் உலக தமிழர்களை அவர் நிகழ்ச்சி அதிகம் கவரும்.

சரி, எல்லாம் இவர்களை மட்டும் சொன்னால் அது நியாயமாகாது, வானொலியை கேட்கும் நேயர்களுக்கும் இதில் மிக முக்கிய பங்கு உண்டு. இதற்காக நாம் தனியாக எதுவும் செய்ய வேண்டாம்.

குறைந்தது தொலைபேசியில் பேச அழைக்கும் போது அல்லது அவர்களால் அழைக்க படும்போது, ஒவ்வொருவரும் முடிந்த வரை நல்ல தமிழில் பேசுங்கள்.

மேலும் பேசி முடிக்கும் முன் உங்கள் நிகழ்ச்சிகள் மற்றும் விளம்பரங்கள் நல்ல தமிழில் இருப்பதையே நாங்கள் விரும்புகிறோம் என்று அவர்களிடம் குறிப்பிட்டு சொல்லலாமே?.

இப்போது கூட, இந்த இடுகையை படித்து விட்டு நீங்கள் ஓட்டு அல்லது பின்னூட்டம் போடுகிறீர்களோ இல்லையோ!,

ஆனால், உங்களில் யாராவது வானொலி பிரியர்கள் இருந்து, நீங்கள் பேசும் போது இந்த கருத்தை குறிபிட்டால் அதுவே எனக்கு மிக மகிழ்ச்சி.

என் இடுகையில் உங்கள் நேரத்துக்கு நன்றி!.

Friday, February 5, 2010

ஆஹா! கெளம்பீட்டாங்கையா கெளம்பீட்டாங்க!

எனக்கு வந்த மின் அஞ்சலை தமிழில் மாற்றி, (சும்மா) நகைக்க இங்கு பகிர்ந்து கொள்வதை தவிர, இதில் உள்குத்து நோக்கம் எதுவும் இல்லை!.

"சற்றுமுன் கிடைத்த அதிர்ச்சி தகவல்"! (இது தான் அந்த மின் அஞ்சலின் தலைப்பு)

இதோ, அந்த அதிர்ச்சி தகவல் மற்றும் படங்கள்!



கணக்கில் அடங்காத மீன் வகைகள், எண்ணிக்கை இல்லாத அளவு, தமிழ் நாட்டு கடல் கரையில் இறந்து கிடக்கின்றன!



பத்திரிக்கையாளர்களும், அரசாங்க அதிகாரிகளும், காவல்துறையும், இதன் காரணத்தை கண்டுபிடிக்க சம்பவ இடத்துக்கு விரைகிறார்கள்!



அங்கு சென்று பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்களுக்கு, எந்த தடையமோ காரணமோ கிடைக்கவில்லை!.

எனவே, தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்படுகிறது.



தீவிர விசாரனையில், இதுவரையில் நடந்திராத அளவு ஒரு(மீன்)இனத்தின் கூட்டு தற்கொலை! என்ற அதிர்ச்சிகரமான தகவல் கிடைத்தது.

இதன் முழு காரணத்தை அறிய விசாரணையை துரித படுத்திய காவல் துறைக்கு, கடைசியாக துப்பு கிடைத்து காரணமும் புரிந்தது!.



அந்த காரணத்தை அறிய துப்(பி)பு கொடுத்த மீன் சொன்னது!...
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;

"விஜய்"-யின் அடுத்த படத்துக்கு "சுறா" என்று பெயர் வைத்திருப்பது, எங்களை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கிவிட்டது.



இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவும், வருங்காலத்தில் எங்கள் இனத்தின் பெயரை "பதிவுலக இடுகைகளில் துவைத்து தொங்க விடாமல்" காக்கும் பொருட்டும்!

அந்த படத்துக்கு வேறு ஏதாவது பெயரை வைக்க சொல்லவே, இன்று எங்கள் உயிரை கொடுக்கிறோம்.

நாங்கள், இங்கு புதைக்க படவில்லை, விதைக்க படுகிறோம், ஏன்னா...

எ...ஏ! நான் தனி ஆளு இல்ல தோ(ஆ)ப்பு!.

இனி வருவது என்னுடைய எண்ணம்,

எப்படி எல்லாம் யோசிக்கிறாங்கையா! அவ்வ்வ்வ்...

இன்னும் படமே முடியவில்லை, அதுக்குள்ளே மின் அஞ்சல் எஸ்(எம்).எம்.எஸ்-ன்னு ஆரமிச்சா எப்புடி?

உங்க ஆர்வம் புரியுது!, ஆனா, பொறுமை பொறுமை மக்களே!. எதையுமே பிளான் பண்ணாம பண்ணக்கூடாது!.

மொதொல்ல படம் முடியோணும், அப்புறம் ஒன்னுக்கு ஒன்னு டிக்கெட் இலவசம்னு போஸ்டர் ஒட்டோணும்..., அதுக்கப்புறமா, "ரெடி ஒன்...டூ...த்ரீ... ஜூட்" சொல்லித்தான் ஆரமிக்கணும், ஓகே-வா?.

ஹயோ..ஹயோ...! என்னது இது! சின்ன புள்ளதனமால்ல இருக்கு? என்று சொல்பவர்களுக்கு, சமீபத்தில் படித்த "சுறா" படம்! பற்றிய செய்தி ஒன்று!.

கடலில் வின்னை தொடுகிற அளவுக்கு சீறிக்கொண்டு வரும் சுனாமி அலையை பார்த்து பயந்து ஊரே அஞ்சி ஓடிக்கொண்டு இருக்கும் போது!...

சீறி வரும் அந்த அலைக்குள் இருந்து படகை ஓட்டிக் கொண்டு விஜய் (ஸ்டைலாக, "ஹயோ..ஹயோ... :-)" ) அறிமுகம் ஆவாராம்!.

இந்த இடத்துல நம்ம "பாஷாவோட ஹோய்...ஹோய்..." பின்னணி பில்டப் உறுதின்னு, இத படிக்கும் போதே உங்களுக்கு புரிஞ்சு இருக்கும், இதுக்கும் மேல வேற என்னத்த சொல்ல ஹும்ம்ம்...

கம்ஷா ஹமிதா!(அதாங்க,...கொரியன் மொழியில் நன்றி!)

டிஸ்கி: கண்ணா!, நான் "பி.எம்"... ஆ.."போஸ்ட் மேன்" மின் அஞ்சலில் வந்ததை அப்டியே கொடுத்துட்டேன், இத புரியாம பின்னூட்டத்துல "பாண்டி" ஆட கூடாது.

Tuesday, February 2, 2010

கொரியாவில் அட்டகாசமான புதிய பாலம்!

தென்கொரியாவின் விமான நிலையத்தை பற்றி முன்பு "உலகின் சிறந்த விமான நிலையம்" இடுகையில் சொல்லி இருந்தேன்.

இனி இந்த இடுகையில் வேறு சில நல்ல பயனுள்ள தகவல்களை பார்ப்போம்.

இங்கே கொடுக்க பட்டுள்ள படங்களை சொடுக்கி முழு அழகை பார்க்கவும்.

 தென்கொரியாவின் பழைய" கிம்போ விமான நிலையம் "இப்போது உள்நாட்டு மற்றும் அருகில் உள்ள தீவுகளுக்கு செல்ல பயன்படும் நிலையமாக செயல்படுகிறது, இது தவிர" சொங்நாம் விமான நிலையம் " ராணுவ, அரசியல் மற்றும் தேச தலைவர்கள் பயன் படுத்தும் "டிப்லமேட்டிக்" விமான நிலையமாக செயல்படுகிறது.

தற்போது உள்ள "இன்ஷான் புதிய பன்னாட்டு விமானநிலையம்" இன்ஷான் நகரத்துக்கு அருகில் உள்ள ஒரு தீவில் அமைக்க பட்டு இருக்கிறது.

குடிஉரிமை சோதனைகளை முடித்து விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தவுடன் குளிருடன் சேர்த்து ஆச்சரியமும் நம்மை ஆட்டி எடுத்து விடும். அது ஒரு தனி தீவு என்பதே தெரியாத அளவு அத்தனை வசதிகளும் மிக எளிதாக கொடுக்கபட்டு இருக்கும்.


பொது போக்குவரத்து (நாம் மெட்ரோ என்று சொல்லும்) ரயில் வசதி இங்கு" சப்வே "என்று அழைக்கப்படுகிறது, அரசு பேருந்து, லிமோசின் பேருந்து, பொது டாக்ஸி மற்றும் லிமோசின் டாக்ஸி என்று எதற்கும் தனி தனியாக தேட தேவை இல்லாதவாறு அனைத்து வசதிகளும் விமான நிலையத்தின் அனைத்து வெளிவாயில் முன்பும் நாம் நிற்கும் இடம் தேடி வருமாறு சாலைகள் வடிவமைக்க பட்டுள்ளது.

இன்ஷான் விமானநிலையத்தில் இருந்து நகரத்துக்குள் வருவது ஒரு அழகிய அனுபவம், முதலில் விமான நிலைய தீவில் இருந்து நகரத்தை இணைக்கும் இருபது நிமிட கடல் வழி பாலம், அதன் பின் நகருக்குள் நுழைந்து ஒவ்வொன்றாக கடந்து இன்ஷான் அல்லது சியோல் முக்கிய பகுதியை அடையும் போது கிட்டதட்ட ஒரு மணி நேரம் நாற்பது நிமிட அரசு பேருந்து அல்லது நாற்பது நிமிட லிமோசின் அல்லது டாக்ஸி பயணமாகி விடும்.

பொது போக்குவரத்தோடு ஒப்பிடும் போது டாக்ஸி கட்டணம் "மலேசியா, சிங்கை" போல இல்லாமல் சற்று அளவுக்கு அதிகமாகவே (ஜப்பானை போல) வருகிறது. விமான நிலையத்தில் இருந்து இன்ஷான் அல்லது சியோல் முக்கிய பகுதியை அடைய அரசு பொது போக்குவரத்தில் கட்டணம் 3500 கொரியன் வோன் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 140 ரூபாய் அல்லது அரசு லிமோசின் பேருந்தில் 8000 கொரியன் வோன் (320 ரூபாய்) தான் வரும், ஆனால் அதுவே டாக்ஸி என்றால் 40000 முதல் 100000 கொரியன் வோன் (1600 முதல் 4000 ரூபாய் ) வரை வந்து விடும்.


இதில் இன்னொரு விசையம் பயண நேரம், ஒரு மணி நேரம் நாற்பது நிமிடம் நகரை சுற்றுவது என்பது சுற்றுலா பயணிகளுக்கு பொருந்தினாலும், வேலை மற்றும் தொழில் விசையமாக அடிக்கடி வருபவர்களுக்கு, இது இரண்டாவது மூன்றாவது முறையாக வரும் போது சலிப்பை தந்து விடும் என்பது உண்மை மற்றும் நேரமும் விரையமாகும்.

இதை எல்லாம் கணக்கில் கொண்ட தென்கொரியா, நகரில் இருந்து விமான நிலையத்தை இணைக்கும் முழு கடல் வழி பாலத்தை கட்டி முடித்து கடந்த அக்டோபரில் திறந்தது. நடை முறைக்கு வந்த ஒரு சில நாட்களிலேயே இதன் வழியாக பயணிக்கும் அனுபவம் எனக்கு கடந்தமுறை சிங்கை வரும் போது கிடைத்தது.

இன்ஷான் கடல் வழி மேம்பாலம் ஆறு நெடுஞ்சாலை வாகன பகுதிகள் (Six Lane Motorway) கொண்டது, இது 21.38 கிமி (21,380 மீட்டர் அல்லது 70078.7 அடி) நீளம் கொண்டது.

"சொங்தோ" நகரத்தில் இருந்து தென் கொரியாவின் இன்ஷான் உலகவிமான நிலையத்தை இணைக்கிறது.

இதுவே தென் கொரியாவின் ஆக பெரிய பாலம் என்பதோடு, உலகின் ஐந்தாவது மிக பெரிய இரும்புதூண் துணையுடன் (Cable-Stayed Bridge) கட்டப்பட்டுள்ள பாலமாகிறது. 33.4 அகலம் (110 அடி) உள்ள இந்த பாலத்தை 230.5 மீட்டர் (756 அடி) உயரம் கொண்ட இரும்பு தூண்கள் தாங்குகிறது. இதில் மொத்தம் ஐந்து தூண்கள் (Span) ஆக அதிகமாக 800 மீட்டர் (2,600 அடி) இடைவெளியில் உள்ளது.

இது இன்ஷான் விமான நிலையத்தில் இருந்து நகரை அடைய நாற்பது நிமிடமாக இருந்த (டாக்ஸியில்) பயண நேரத்தை பதினைந்து நிமிடமாக குறைத்து விட்டது.

கடந்த ஐந்து வருடமாக 2005 தொடங்கி 2009 வரை நடந்த இதன் கட்டுமான பணி 2.5 ட்ரில்லியன் கொரியன் வோன், அதாவது இந்திய மதிப்பில் 100 பில்லியன் ரூபாய் செலவில் முடிவடைந்து உள்ளது.

 தென்கொரியா மற்றும் இங்கிலாந்து வடிவமைப்பாளர்கள் இணைந்து வடிவமைத்த இந்த பாலம், நொடிக்கு 72 மீட்டர் காற்றின் வேகத்தையும், ரிக்டர் அளவில்" 7 ரிக்டர் "நில நடுக்கத்தையும் தாங்கும் சக்தி கொண்டதாக வடிவமைக்க பட்டு உள்ளது, மேலும் இதன் முதல் முறை பயன்பாடே அடுத்த நூறு ஆண்டுகளுக்கு வரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

இந்த பாலம் கட்டுமான பணி நடக்கும் போதே உலகின் மிக சிறந்த பத்து கட்டுமான பணிகளில் ஒன்றாய் 2005 டிசம்பரில் தேர்வு செய்ய பட்டு, 2005 - ம் ஆண்டுக்கான ஆசியாவின் தலை சிறந்த போக்கு வரத்து வடிவமைப்பு விருதை 2006 மார்ச் மாதம் பெற்றது.

முழுவதும் கடல் மீது வடிவமைக்க பட்டு உள்ள இந்த பாலம் அழகிய மனம் குளிரும் இயற்கை காட்சிகளை ரசிக்கும் விதம் இருப்பதோடு, இதில் இரவு பயணம் என்பது வார்த்தையில் விவரிக்க முடியாத ஒரு கண்கவர் ஒளி வண்ணத்தை தருகிறது.

 புகை பட கலைஞர்கள் மற்றும் சுற்றுலா விரும்பிகள் முழு பாலத்தின் அழகை தென்கொரியாவின்" யோங்ஜோங் ஹனுள்","முய்-தோ(தீவு)", "வோல்மீதோ" வழி சாலைகள் மற்றும் "புதிய கிழக்கு துறைமுக" பகுதிகளில் இருந்து ரசிக்க முடியும்.

மொத்தத்தில் இந்த பாலம் தென் கொரியாவின் ஒரு அருமையான "அடையாள சின்னமாக" வரும் காலத்தில் கம்பீரமாக நிற்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

 தற்போது தென்கொரியாவும், இந்தியாவும் தொழில்நுட்ப ரீதியாக ஒரு நல்ல உறவில் இருப்பது மட்டுமே பலரும் அறிவார், ஆனால் இவ்விரு நாடுகளுக்கும் அரச காலத்தில் இருந்து ஒரு நல்ல தொடர்பு இருப்பது பலருக்கும் தெரியாது.

கொரியாவில் இந்திய தூதராக இருந்த அதிகாரி எழுதியுள்ள "இந்தியன் குயின்" என்ற புத்தகத்தில் இதை பற்றி தெளிவான விபரங்கள் கொடுக்க பட்டுள்ளன.

வரலாற்றை பொறுத்தவரை 11 ம் நூற்றாண்டைச் சேர்ந்த கொரிய மொழியில் எழுதப்பட்ட "சம்கக் யுசா 'என்ற நூலில் இந்த செய்தி விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

அதன்படி, இந்திய இளவரசி (இங்கு அவர் பெயர் ஹியோ வாங் யோக்) தன் கனவில் அடிக்கடி ஒரு அழகான இளைஞரைக் கண்டார். அவரைக் கண்டுபிடிப்பதற்காக தன் பெற்றோர்களின் அனுமதியுடன் கப்பலேறி தென்கொரியா வந்து சேர்ந்தார். அப்படி வரும்போது, தன்னுடன் மீன்கள் படம் பொறித்த கல் ஒன்றையும் கொண்டு வந்தார்.

இப்படி இந்திய அரசபரம்பரையில் பிறந்த ஹியோ தென்கொரியாவுக்கு வந்தபோது, இங்கு அரசாண்ட கயா பேரரசின் மன்னன் சுரோவைக் கண்டார். அவர்தான் தான் கனவில் கண்ட இளைஞர் என்று உணர்ந்த ஹியோ, சுரோ மன்னரை மணந்து கொண்டார். இவர்களுக்குப் பிறந்த வாரிசுகள் மூலம்தான், கொரியாவில் கிம்ஹே கிம்ஸ் பேரரசு அமைந்தது.

கடந்த 2004 ல் கயா அரசர்களின் கல்லறைகளிலிருந்து எடுக்கப்பட்ட மரபணுக்களும், இந்தியாவில் உள்ள குடிகளின் மரபணுக்களும் ஒத்திருந்தன. இதிலிருந்து கொரிய அரச பரம்பரைக்கும், இந்திய அரச பரம்பரைக்கும் தொடர்பு இருந்தது தெரியவந்தது.

மேலும் ஹியோ கொண்டு வந்த அந்த மீன்கள்படம் பொறித்த கல்லையும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.


இந்த அரச பரம்பரையில் வந்த வாரிசுதான் தற்போதைய தென்கொரிய அதிபர் லீ யுங் மியுங் பக்கின் மனைவி, கிம் யூன் யோக். சமீபத்தில் நடந்த இந்திய குடியரசு தினத்துக்கு இவர்களை
இந்தியா சிறப்பு விருந்தினர்களாக அழைத்து இருந்தது.

அப்போது தென் கொரிய அதிபர் மாளிகை வட்டாரத் தகவல்களின் அடிப்படையில் "தி கொரியா டைம்ஸ் 'வெளியிட்டுள்ள செய்தியில், தற்போதைய அதிபர் மனைவி கிம்மின் முன்னோர் இந்தியாவின்" அயோத்தி அரச பரம்பரையை "சேர்ந்தவர்கள் என்று கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தது.

இனி வரும் காலத்திலும் இந்தியாவும் தென்கொரியாவும் நல்ல நட்பு முறையில் இருக்கும் என்பதையே இது குறிக்கிறது.

நன்றி!.
 

Blogger Widgets