தென்கொரியாவின் விமான நிலையத்தை பற்றி முன்பு "உலகின் சிறந்த விமான நிலையம்" இடுகையில் சொல்லி இருந்தேன்.
இனி இந்த இடுகையில் வேறு சில நல்ல பயனுள்ள தகவல்களை பார்ப்போம்.
இங்கே கொடுக்க பட்டுள்ள படங்களை சொடுக்கி முழு அழகை பார்க்கவும்.
தென்கொரியாவின் பழைய" கிம்போ விமான நிலையம் "இப்போது உள்நாட்டு மற்றும் அருகில் உள்ள தீவுகளுக்கு செல்ல பயன்படும் நிலையமாக செயல்படுகிறது, இது தவிர" சொங்நாம் விமான நிலையம் " ராணுவ, அரசியல் மற்றும் தேச தலைவர்கள் பயன் படுத்தும் "டிப்லமேட்டிக்" விமான நிலையமாக செயல்படுகிறது.
தற்போது உள்ள "இன்ஷான் புதிய பன்னாட்டு விமானநிலையம்" இன்ஷான் நகரத்துக்கு அருகில் உள்ள ஒரு தீவில் அமைக்க பட்டு இருக்கிறது.
குடிஉரிமை சோதனைகளை முடித்து விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தவுடன் குளிருடன் சேர்த்து ஆச்சரியமும் நம்மை ஆட்டி எடுத்து விடும். அது ஒரு தனி தீவு என்பதே தெரியாத அளவு அத்தனை வசதிகளும் மிக எளிதாக கொடுக்கபட்டு இருக்கும்.
பொது போக்குவரத்து (நாம் மெட்ரோ என்று சொல்லும்) ரயில் வசதி இங்கு" சப்வே "என்று அழைக்கப்படுகிறது, அரசு பேருந்து, லிமோசின் பேருந்து, பொது டாக்ஸி மற்றும் லிமோசின் டாக்ஸி என்று எதற்கும் தனி தனியாக தேட தேவை இல்லாதவாறு அனைத்து வசதிகளும் விமான நிலையத்தின் அனைத்து வெளிவாயில் முன்பும் நாம் நிற்கும் இடம் தேடி வருமாறு சாலைகள் வடிவமைக்க பட்டுள்ளது.
இன்ஷான் விமானநிலையத்தில் இருந்து நகரத்துக்குள் வருவது ஒரு அழகிய அனுபவம், முதலில் விமான நிலைய தீவில் இருந்து நகரத்தை இணைக்கும் இருபது நிமிட கடல் வழி பாலம், அதன் பின் நகருக்குள் நுழைந்து ஒவ்வொன்றாக கடந்து இன்ஷான் அல்லது சியோல் முக்கிய பகுதியை அடையும் போது கிட்டதட்ட ஒரு மணி நேரம் நாற்பது நிமிட அரசு பேருந்து அல்லது நாற்பது நிமிட லிமோசின் அல்லது டாக்ஸி பயணமாகி விடும்.
பொது போக்குவரத்தோடு ஒப்பிடும் போது டாக்ஸி கட்டணம் "மலேசியா, சிங்கை" போல இல்லாமல் சற்று அளவுக்கு அதிகமாகவே (ஜப்பானை போல) வருகிறது. விமான நிலையத்தில் இருந்து இன்ஷான் அல்லது சியோல் முக்கிய பகுதியை அடைய அரசு பொது போக்குவரத்தில் கட்டணம் 3500 கொரியன் வோன் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 140 ரூபாய் அல்லது அரசு லிமோசின் பேருந்தில் 8000 கொரியன் வோன் (320 ரூபாய்) தான் வரும், ஆனால் அதுவே டாக்ஸி என்றால் 40000 முதல் 100000 கொரியன் வோன் (1600 முதல் 4000 ரூபாய் ) வரை வந்து விடும்.
இதில் இன்னொரு விசையம் பயண நேரம், ஒரு மணி நேரம் நாற்பது நிமிடம் நகரை சுற்றுவது என்பது சுற்றுலா பயணிகளுக்கு பொருந்தினாலும், வேலை மற்றும் தொழில் விசையமாக அடிக்கடி வருபவர்களுக்கு, இது இரண்டாவது மூன்றாவது முறையாக வரும் போது சலிப்பை தந்து விடும் என்பது உண்மை மற்றும் நேரமும் விரையமாகும்.
இதை எல்லாம் கணக்கில் கொண்ட தென்கொரியா, நகரில் இருந்து விமான நிலையத்தை இணைக்கும் முழு கடல் வழி பாலத்தை கட்டி முடித்து கடந்த அக்டோபரில் திறந்தது. நடை முறைக்கு வந்த ஒரு சில நாட்களிலேயே இதன் வழியாக பயணிக்கும் அனுபவம் எனக்கு கடந்தமுறை சிங்கை வரும் போது கிடைத்தது.
இன்ஷான் கடல் வழி மேம்பாலம் ஆறு நெடுஞ்சாலை வாகன பகுதிகள் (Six Lane Motorway) கொண்டது, இது 21.38 கிமி (21,380 மீட்டர் அல்லது 70078.7 அடி) நீளம் கொண்டது.
"சொங்தோ" நகரத்தில் இருந்து தென் கொரியாவின் இன்ஷான் உலகவிமான நிலையத்தை இணைக்கிறது.
இதுவே தென் கொரியாவின் ஆக பெரிய பாலம் என்பதோடு, உலகின் ஐந்தாவது மிக பெரிய இரும்புதூண் துணையுடன் (Cable-Stayed Bridge) கட்டப்பட்டுள்ள பாலமாகிறது. 33.4 அகலம் (110 அடி) உள்ள இந்த பாலத்தை 230.5 மீட்டர் (756 அடி) உயரம் கொண்ட இரும்பு தூண்கள் தாங்குகிறது. இதில் மொத்தம் ஐந்து தூண்கள் (Span) ஆக அதிகமாக 800 மீட்டர் (2,600 அடி) இடைவெளியில் உள்ளது.
இது இன்ஷான் விமான நிலையத்தில் இருந்து நகரை அடைய நாற்பது நிமிடமாக இருந்த (டாக்ஸியில்) பயண நேரத்தை பதினைந்து நிமிடமாக குறைத்து விட்டது.
கடந்த ஐந்து வருடமாக 2005 தொடங்கி 2009 வரை நடந்த இதன் கட்டுமான பணி 2.5 ட்ரில்லியன் கொரியன் வோன், அதாவது இந்திய மதிப்பில் 100 பில்லியன் ரூபாய் செலவில் முடிவடைந்து உள்ளது.
தென்கொரியா மற்றும் இங்கிலாந்து வடிவமைப்பாளர்கள் இணைந்து வடிவமைத்த இந்த பாலம், நொடிக்கு 72 மீட்டர் காற்றின் வேகத்தையும், ரிக்டர் அளவில்" 7 ரிக்டர் "நில நடுக்கத்தையும் தாங்கும் சக்தி கொண்டதாக வடிவமைக்க பட்டு உள்ளது, மேலும் இதன் முதல் முறை பயன்பாடே அடுத்த நூறு ஆண்டுகளுக்கு வரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
இந்த பாலம் கட்டுமான பணி நடக்கும் போதே உலகின் மிக சிறந்த பத்து கட்டுமான பணிகளில் ஒன்றாய் 2005 டிசம்பரில் தேர்வு செய்ய பட்டு, 2005 - ம் ஆண்டுக்கான ஆசியாவின் தலை சிறந்த போக்கு வரத்து வடிவமைப்பு விருதை 2006 மார்ச் மாதம் பெற்றது.
முழுவதும் கடல் மீது வடிவமைக்க பட்டு உள்ள இந்த பாலம் அழகிய மனம் குளிரும் இயற்கை காட்சிகளை ரசிக்கும் விதம் இருப்பதோடு, இதில் இரவு பயணம் என்பது வார்த்தையில் விவரிக்க முடியாத ஒரு கண்கவர் ஒளி வண்ணத்தை தருகிறது.
புகை பட கலைஞர்கள் மற்றும் சுற்றுலா விரும்பிகள் முழு பாலத்தின் அழகை தென்கொரியாவின்" யோங்ஜோங் ஹனுள்","முய்-தோ(தீவு)", "வோல்மீதோ" வழி சாலைகள் மற்றும் "புதிய கிழக்கு துறைமுக" பகுதிகளில் இருந்து ரசிக்க முடியும்.
மொத்தத்தில் இந்த பாலம் தென் கொரியாவின் ஒரு அருமையான "அடையாள சின்னமாக" வரும் காலத்தில் கம்பீரமாக நிற்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
தற்போது தென்கொரியாவும், இந்தியாவும் தொழில்நுட்ப ரீதியாக ஒரு நல்ல உறவில் இருப்பது மட்டுமே பலரும் அறிவார், ஆனால் இவ்விரு நாடுகளுக்கும் அரச காலத்தில் இருந்து ஒரு நல்ல தொடர்பு இருப்பது பலருக்கும் தெரியாது.
கொரியாவில் இந்திய தூதராக இருந்த அதிகாரி எழுதியுள்ள "இந்தியன் குயின்" என்ற புத்தகத்தில் இதை பற்றி தெளிவான விபரங்கள் கொடுக்க பட்டுள்ளன.
வரலாற்றை பொறுத்தவரை 11 ம் நூற்றாண்டைச் சேர்ந்த கொரிய மொழியில் எழுதப்பட்ட "சம்கக் யுசா 'என்ற நூலில் இந்த செய்தி விரிவாகக் கூறப்பட்டுள்ளது.
அதன்படி, இந்திய இளவரசி (இங்கு அவர் பெயர் ஹியோ வாங் யோக்) தன் கனவில் அடிக்கடி ஒரு அழகான இளைஞரைக் கண்டார். அவரைக் கண்டுபிடிப்பதற்காக தன் பெற்றோர்களின் அனுமதியுடன் கப்பலேறி தென்கொரியா வந்து சேர்ந்தார். அப்படி வரும்போது, தன்னுடன் மீன்கள் படம் பொறித்த கல் ஒன்றையும் கொண்டு வந்தார்.
இப்படி இந்திய அரசபரம்பரையில் பிறந்த ஹியோ தென்கொரியாவுக்கு வந்தபோது, இங்கு அரசாண்ட கயா பேரரசின் மன்னன் சுரோவைக் கண்டார். அவர்தான் தான் கனவில் கண்ட இளைஞர் என்று உணர்ந்த ஹியோ, சுரோ மன்னரை மணந்து கொண்டார். இவர்களுக்குப் பிறந்த வாரிசுகள் மூலம்தான், கொரியாவில் கிம்ஹே கிம்ஸ் பேரரசு அமைந்தது.
கடந்த 2004 ல் கயா அரசர்களின் கல்லறைகளிலிருந்து எடுக்கப்பட்ட மரபணுக்களும், இந்தியாவில் உள்ள குடிகளின் மரபணுக்களும் ஒத்திருந்தன. இதிலிருந்து கொரிய அரச பரம்பரைக்கும், இந்திய அரச பரம்பரைக்கும் தொடர்பு இருந்தது தெரியவந்தது.
மேலும் ஹியோ கொண்டு வந்த அந்த மீன்கள்படம் பொறித்த கல்லையும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த அரச பரம்பரையில் வந்த வாரிசுதான் தற்போதைய தென்கொரிய அதிபர் லீ யுங் மியுங் பக்கின் மனைவி, கிம் யூன் யோக். சமீபத்தில் நடந்த இந்திய குடியரசு தினத்துக்கு இவர்களை
இந்தியா சிறப்பு விருந்தினர்களாக அழைத்து இருந்தது.
அப்போது தென் கொரிய அதிபர் மாளிகை வட்டாரத் தகவல்களின் அடிப்படையில் "தி கொரியா டைம்ஸ் 'வெளியிட்டுள்ள செய்தியில், தற்போதைய அதிபர் மனைவி கிம்மின் முன்னோர் இந்தியாவின்" அயோத்தி அரச பரம்பரையை "சேர்ந்தவர்கள் என்று கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தது.
இனி வரும் காலத்திலும் இந்தியாவும் தென்கொரியாவும் நல்ல நட்பு முறையில் இருக்கும் என்பதையே இது குறிக்கிறது.
நன்றி!.
Tuesday, February 2, 2010
Subscribe to:
Post Comments (Atom)
29 பின்னூட்டம்:
ஐயையோ... தலைப்பே தப்பா இருக்கே...அது பாலம் இல்லையா... =))
யம்மாடி யம்மா.... எம்பூட்டு பெரிய பாலம்.... ஆத்தாடி... எம்பூட்டு அழகு... நல்லாருக்கு சாமி...
விளக்கமாக எழுதியுள்ளீர்கள். படங்கள் அத்தனையும் வெகு அழகு. பாலமே இப்போது அவர்கள் பலம் என்பது போல தலைப்பா:)? திருத்திடுங்கள் சிங்கக்குட்டி!
பலம் இருக்கறதுனால தான் இப்டி பெரிய சாதனை செய்ய முடியுது...
(தலைப்பை திருத்தி விட்டேன் :-))
அழகோ அழகு. காண கண்கள் இரண்டு போதாது.
படங்கள் பிரமிக்கவைக்கின்றன.விரிவான கட்டுரை.
வாவ்வ்வ்வ் போட்டோஸ் கொள்ளை அழுகு சிங்கக்குட்டி..இது ஒரு பெரிய சாதனை தான்..
மேலும் ஹியோ கொண்டு வந்த அந்த மீன்கள்படம் பொறித்த கல்லையும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளன"//
அட...!
பிரமிக்க வைக்கும் படங்கள்...
படங்கள் மிக அருமை.. உங்கள் விவரிப்பும் நன்றாக இருந்தது..
//இனி வரும் காலத்திலும் இந்தியாவும் தென்கொரியாவும் நல்ல நட்பு முறையில் இருக்கும் என்பதையே இது குறிக்கிறது.//
நட்பு பாலமா இருந்தா சரிதான்
ஆஹா.. என்ன அழகு...
அழகு!
அப்புறமா வாசிச்சிட்டு கமண்டு போடுறன், படங்கள் சூப்பர்.
பாலம் - கட்டுரையும் புகைப்படங்களும் அருமை.
தமிழ் உதயம்,
மாதேவி,
மேனகா,
ஸ்ரீராம், கொரியா வந்து பாருங்கள் "அடடே" என்று சொல்வீர்கள் :-).
முத்துலெட்சுமி,
நசரேயன், நானும் அப்படித்தான் நினைக்கிறேன், காரணம் இப்போது இந்திய பாஸ்போர்ட்களுக்கு நேரடியாக வந்து இறங்கியவுடன் விசா கொடுக்கும் முறை பற்றி பேச்சு வார்த்தை நடந்து கொண்டு இருக்கிறது.
பாயிஷா,
வினிதா,
எப்பூடி, பொறுமையா படிங்க, ஆனா மறக்காம கருத்தை சொல்லுங்க :-)
மற்றும் சித்ரா. :-)
அழகான பாலம் அருமையான இடுகை
Marvel of Engineering!! படங்கள் அருமையா இருக்கு சிங்கக்குட்டி, பகிர்விற்கு மிக்க நன்றி. நட்பு பாலம் இதை விட பலமா இருக்கட்டும்.
நன்ரசிதா (அழகான பெயர் :-) )
ஷஃபி கண்டிப்பாக இருக்கும் என்பது என் எண்ணம் :-)
புதிய தகவல்கள்.அழகான படங்களுடன் அருமையாக எழுதி உள்ளீர்கள்.நம்ம ஊரில எப்போ இப்படி ( ஊழல் செய்யாம முழுசா ) கட்டபோறாங்களோ என்ற ஆதங்கத்தை தவிர்க்க முடியவில்லை.
உண்மைதான், நம்ம ஊரில் அரசியல் முறை மாறும் வரை அல்லது படித்தவர்கள் அனைவரும் ஓட்டு போடும் வரை! எனக்கு இது சாத்தியமாய் படவில்லை :-)
தகவல்களும் குறிப்பாக 11 ஆம் நூற்றாண்டுக்கு முன்னைய காலத்திலிருந்து இன்றுவரையான இந்திய தென்கொரிய உறவும், புகைப்படங்களும் அருமை.
please check the details below.. 21.38km = 21380 meter..= 70078.74 feet.. please correct me if am wrong..
இது 21.38 கிமி (12,300 மீட்டர் அல்லது 40,000 அடி) நீளம் கொண்டது.
வாங்க nsebse81, நாம கணக்குல வீக்குன்னு நீங்களும் கண்டு பிடிச்சுடிங்களா!...மிக்க நன்றி!.
சிங்கக்குட்டி நீங்க அடிக்கடி உங்க பகுதி பற்றி தகவல்கள் தருவது மகிழ்ச்சி! இது போல வாய்ப்புகள் கிடைக்கும் போது பதிவிடுங்கள்.
அவர்கள் செய்த செலவு பிரம்மிக்க வைக்கிறது. மக்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் ஏதாகினும் சரி.
இந்த கொரியாவை விட்டு வருவதற்கு முன் கொரியா பற்றி முழுவதும் எழுதி விட வேண்டும் என்பது என் ஆசை.
நாளை நம் தமிழ் மக்கள் யாராவது இங்கு வரும் முன் அவர்களுக்கு தேவையான அனைத்து தகவல்களும் இங்கு கிடைக்க வேண்டும் என்பது தான் நோக்கம்.
ரொம்ப அழகா,பிரமிப்பா இருக்கு.
Post a Comment