Saturday, March 26, 2011

இதுவா என் (தாய்) தமிழ்நாடு...!

வணக்கம் நண்பர்களே,

என்னடா இது...! காணாமல் போனவன் திடீர் என்று வருகிறானே என்று நினைக்க வேண்டாம், அது ஒரு பெரிய கதை அதை தனியாக இன்னொரு சமயம் பார்ப்போம்.

சொர்க்கமே என்றாலும் அது நம்மூரை போல வருமா என்ற மகிழ்ச்சி சற்றும் குறையாமல் ஒரு அருமையான இந்திய பயணத்தை முடித்து கடந்த மாதம் திரும்பி வந்தாலும், சில பல காரணக்களால் பதிவுகள் பக்கம் வர முடியவில்லை.

எப்போதும் போல இல்லாமல் இது ஒரு நீண்ட விடுமுறையாக இருந்த காரணம் நான் இந்த முறை சென்றது தனிப்பட்ட வேறு சில வேலைகளாக என்பதால்தான்.

ஒவ்வொரு முறையும் நம் மண்ணின் வளர்ச்சியை, மாற்றத்தை பார்த்து பெருமை பொங்க திரும்ப வரும் நான், இந்த முறை சற்று மனம் தளர்ந்து வந்ததுதான் உண்மை.

இந்த முறை நான் சென்ற வேலைகளுக்காக, மதுரை, பழனி, திருச்சி, திண்டுக்கல், நத்தம் என்று தென் தமிழ் நாட்டில் என் விடுமுறையை பயன் படுத்தினேன்.

நான் கல்லூரியில் படித்த காலத்தில் இந்த பகுதிகளில் பஸ் பயணம் என்பது எங்கள் நண்பர்கள் அனைவருக்கும் மிக பிடித்த ஒரு விசையமாகும்.

அதற்கு இரண்டு காரணங்கள், ஒன்று நடுவில் வரும் நெடுஞ்சாலை தவிர இரண்டு பக்கமும் பச்சை பாய் விரித்தது போல செழிப்போடு காட்சி அளிக்கும் வயல்வெளிகள், தூரத்தில் தெரியும் தென்னை மரங்கள் என்று மனதை மயக்கும் ஒரு அழகான தமிழ் தாய் நாட்டின் விவசாய அடையாளம்.




மற்றொன்று இந்த சூழ்நிலைக்கு தகுந்து அந்த தனியார் பேருந்துகள் இசைக்கும் தமிழ் பாடல்கள்.

குறிப்பாக மதுரை, பழனி, திண்டுக்கல், திருச்சி, மதுரை ரோட்டில் மதியம் மூன்று மணியளவில் அவர்கள் இசைக்கும் "ஒருநாளும் உனை மறவாத, முத்துமணி மாலை" போன்ற பாடல்களை விரும்பாத யாருமே இருக்க முடியாது.

பல வருடம் கடந்து அதே பழைய நினைவுகளை சுமந்து கொண்டு போன எனக்கு இந்த முறை மிக பெரிய ஏமாற்றம் தான் மிச்சம்...!

நான் பார்த்த வயல்வெளிகள் அனைத்தும் கூந்தலை இழந்த பெண்போல மொட்டையாக இருப்பதை பார்த்ததும், ஏனோ அது என் சொந்த பெண் போல மனம் லேசாக இல்லை, இல்லை கொஞ்சம் அதிகமாகவே வலித்தது.

அதை விட கொடுமை, அது அனைத்தும் வீடு கட்டும் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய பட்டிருப்பதை பார்க்க பார்க்க மன கொதிப்பு மட்டும் ஏனோ அடங்கவே இல்லை.

என்னடா இது நம் மக்களா இப்படி மாறி விட்டார்கள் என்று விசாரித்தால், இந்த முறை நான் பார்த்த அனைவருமே சொன்னது ஒன்றே ஒன்றுதான்.

அட உனக்கு என்னப்பா, கடல்தாண்டி சீமைல இருக்க, இங்க நாய் பேய் கூட சொந்த வீடு வாங்கிருச்சு, நம்ம மட்டும் என்ன குறைச்சலா?

அதான் நம்ம நிலத்தை பிளாட் போட்டு கொடுத்தா சொந்த வீடும் கொடுத்து கையில் பணமும் தருவதாய் ரியல் எஸ்டேட் ஏஜென்ட் சொன்னார்.



சரி, நாமும் எவ்வளவு நாளுக்குதான் இப்படி சேற்றிலும் குடிசையிலும் கிடப்பது, நமமெக்கென்று ஒரு சொந்த வீடு வேண்டாமா என்று நிலத்தை கொடுத்து விட்டேன் என்பதுதான் அது!.

இப்படி ஒன்றல்ல இரண்டல்ல வரிசையாக எல்லா நிலத்திலும் அந்த நகர், இந்த நகர் என்ற பெயர் பலகையை பார்க்கும் போது வெறுப்பு மட்டுமே மிஞ்சியது.

நான் பார்த்த வரை நம் மக்களிடம் சொந்த வீடு வாங்குவது என்பது இப்போது ஒரு வாழ்க்கை லட்சியத்தில் முக்கிய ஒன்றாக மாறிவிட்டது.

என்ன கொடுமை இது?

நண்பர்களே, வீடு என்பது இயற்கை சீதோசன நிலைகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள மனிதன் கண்டுபிடித்த நாகரீக வளர்ச்சியின் ஒரு பகுதிதானே தவிர, அது சமுதாயத்தில் நம்மை அடையாள படுத்துவது அல்ல அப்படி நாம் மாற்றினால் அது நம் வீழ்ச்சியின் ஆரப்பமே.

மேலும் ஒரு வீட்டின் விலை என்பது, அது கட்ட பட்டிருக்கும் நிலத்தின் அரசால் மதிப்பிட பட்ட விலை, அதின் பயன் படுத்த பட்டிருக்கும் கல் மற்றும் மரத்தின் விலை, அதோடு அதை கட்ட வேலை செய்தவர்களின் கூலி என்பதே ஆகும்.

ஆனால், இன்று அந்த கல்லையும் மணலையும் சேர்த்த கட்டிடத்தின் விலையை கண்மண் தெரியாமல் உயர்த்திக்கொண்டு போவது என்பது கொடுமை, அதை விட கொடுமை அதையும் நம் மக்கள் வங்கியில் கடன் வாங்கி வாங்குவது என்பது மிக மிக கொடுமை.

எந்த ஒரு வங்கியிலும் வீட்டு கடன் வாங்கி இருக்கும் ஒருவர், தன் மாத தவணை மற்றும் தன் மொத்த தவணையின் கூட்டு தொகை என்ன என்பதை ஒரு பத்து நிமிடம் ஒதுக்கி கணக்கிட்டு பாருங்கள், உங்கள் வாழ்நாள் உழைப்பு இப்படியா வீண் போக வேண்டும் என்று தோன்றும்?

இது ஒரு பக்கம் இருக்க, நம் சொந்த தொழிலான விவசாயத்தை அழித்து, அந்த நிலத்தில் கட்டிடம் கட்டுவது என்பது, சொந்த செலவில் சூன்யம் வைத்து நம்மை நாமே அழிப்பதற்கு சமம்.

இப்படி விவசாயம் அழிந்து போவதால் இன்று காய்கறிகளின் விலை வாசி நினைத்து பார்க்க முடியாத அளவு உயர்ந்து இருப்பதோடு நம் தேவைக்கு பக்கத்து மாநிலங்களை நம்பி இருக்க வேண்டி இருக்கிறது.

தற்போது அரசாங்கம் விளைநிலத்தை கட்டிடம் கட்ட விற்பனை செய்ய கூடாது என்று சட்டம் கொண்டு வருவதாக கேள்வி, ஆனாலும் விளைநிலங்களை அழிப்பது குறைந்த மாதிரி தெரியவில்லை.

இப்படி விளை நிலத்தின் விலையை ரியல் எஸ்டேட் ஏற்றி விட்டுக்கொண்டிருக்கும் பண போதையில் நம் மக்கள் விளைநிலங்களை கண் மண் தெரியாமல் விற்பனை சந்தைக்கு கொண்டுவர, இடையில் புகுந்து கேரளா மக்கள் மொத்தமாக இந்த நிலங்களை வாங்கி போட்டு இருக்கிறார்கள்.

இது இப்படியே தொடர்ந்தால் பிற்காலத்தில் நம் சொந்த மண்ணின் விலையை அவர்கள் நிர்ணயிக்ககூடும் அல்லது அவர்கள் விவசாயம் செய்து அதை நமக்கே விற்கக்கூடும், இந்தியன் என்ற தாய் பிள்ளையானாலும் வாயும் வயிறும் வேறுதானே?

இப்படியே போனால், வடிவேல் (அவருக்கும் இப்போது நேரம் சரியில்லை என்று நினைக்கிறேன், இதை பற்றி வேறு பதிவில் பார்ப்போம்) காமிடியில் வருவது போல தமிழ் நாட்டில் விவசாயம் செய்ய தமிழனுக்கு எந்த இடமும் இல்லாமல் போய், ஒரு கேரட் இரநூறு ரூபாய் என்னும் நிலை வந்தாலும் ஆச்சரிய படுவதற்கில்லை.



ஒன்று மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் நண்பர்களே, இப்போதும் நமக்கு சிந்தித்து செயல்பட நேரம் இருக்கிறது. நாம் சேற்றில் "கால்" வைப்பதால் நம் மக்கள் சோற்றில் "கை" வைக்க முடிகிறது என்ற பெருமையோடு நம் பாரம்பரிய விவசாயத்தை அழிந்து விடாமல் காப்பது நம் தாய்மண்ணுக்கு செய்யும் கடமையாகும்.

அப்படி நாம் உணரவில்லை என்றால் அது பணத்துக்காக தாயை விற்பதற்கு சமம் என்று காலம் ஒருநாள் கண்டிப்பாய் உணர்த்தும்.

இயற்கை எவ்வளவு முடியுமோ அவ்வளவு சோதித்தாலும், சற்றும் மனம் தளராமல் ஜப்பானில் விவசாயம் செய்ய இடமில்லாமல் கிடைக்கும் இடத்தை (மலைகளை கூட வெட்டி) விளை நிலமாக்கி பட்ட படிப்பை முடித்த இளைய தலைமுறைகள் கூட விவசாயத்தில் ஆர்வம் காட்டுகிறார்கள்.

ஆனால், நாம் இருக்கும் விளை நிலத்தை மலடாக்கி கட்டிடம் கட்டுகிறோம்?.

நாகரீகத்தில் முன்னேறுகிறோம் என்று நினைத்து, நம் சொந்த அடையாளத்தை தொலைத்துக்கொண்டு இருக்கிறோம் என்று சொன்னால் அது இங்கு தவறாகாது என்று நினைக்கிறேன்.

நான் இந்த முறை சென்ற வேலை என் வாழ்நாள் கனவின் முக்கிய ஒன்றாகும், சில ஏக்கர் நிலத்தை வாங்கி அதில் தென்னை மரங்களை வைத்து நடுவில் ஒரு வீட்டை கட்டி, அந்த வீட்டின் பின்புறம் எனக்கு தேவையான காய்கறிகளை நானே பயிர் செய்து என் முதுமை காலத்தில் வாழவேண்டும் என்பது என் கனவு.

அதற்கான முதல் வேலையாக அமைதியான இடத்தில உள்ள விளை நிலங்களை தேடி சென்றபோது தான் மேல் சொன்ன அனைத்தும் என் கண்ணில் பட்டது.

இந்த பரபரப்பான வாழ்க்கை சூழலில் அனைவரும் சொந்த நிலத்தில் விவசாயம் செய்வது என்பது சாத்தியமாகாது என்பது உண்மை.

ஆனால், விவசாயத்தில் இருப்பவர்கள் அதை தொலைத்து விடாமல் பாதுகாக்கலாமே?

மேலும், விவசாய இடமில்லாமல் நகரத்தில் இருப்பவர்கள் கூட, வீட்டில் ரோஜா தொட்டி வைப்பதை போல நமக்கு தேவையான மிளகாய், தக்காளி, கீரை போன்றவற்றை சொந்தமாக வளர்த்து பயன் படுத்தலாமே?.

நம் குழந்தைகளும் இந்த வீட்டு விவசாய முறை மூலம் நம் பாரம்பரிய விவசாய தொழிலை மறக்காமல் இருக்க இது உதவும் என்பது என் நம்பிக்கை.

நீங்கள் எவ்வளவு படித்து எந்த நாட்டிலும் எந்த நிலையில் இருந்தாலும் சரி, உங்கள் தாய்க்கு செய்யும் பிறவி கடமையை போல, உங்கள் தாய் நாட்டுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தால், அது எந்த ஒரு சூழ்நிலையிலும், விவசாய நிலையத்தை விவசாயத்தை தவிர மற்ற எந்த ஒரு பயன் பாட்டுக்கும் விற்காமல் இருப்பதே ஆகும்.

நன்றி, மீண்டும் விரைவில் சந்திப்போம்.
 

Blogger Widgets