Monday, December 13, 2010

தென்கொரியா வரும்முன் கவனிக்கவேண்டியது!

வணக்கம் நண்பர்களே,

தென்கொரியாவில் குளிர் காலம் ஆரமித்துவிட்டது, கடந்த வாரம் முதல் நல்ல பனிபொழிவு துவங்கிவிட்டது.

தென்கொரியாவின் பருவநிலைகளை பற்றி சில பதிவுகளில் நான் குறிப்பிட்டு இருந்தாலும், இந்த பதிவு முழுதாக தென்கொரியாவின் தட்பவெட்ப நிலைகளை மட்டும் வைத்து எழுதுவதால், இனி இங்கு வரவிருக்கும் நம் மக்களுக்கு பயன்படும் என்று நினைக்கிறேன்.

தென்கொரியாவை பொறுத்தவரை, மொழி, உணவு பிரச்சனைக்கு அடுத்த படியாக வருவது இங்குள்ள தட்பவெட்ப நிலைதான்.

ஒரு வருடத்தில் நான்கு வகையான சீதோசன நிலைகள் வருகின்றது, அதை இங்கு பார்ப்போம்.

ஏப்ரல் முதல் ஜூன் வரை (Spring Session), கடும் குளிர் காலம் முடிந்து வருவதால் இது மழையோடு துவங்கும், இதனால் குச்சியாக கிடந்த அத்தனை செடிகளும் மரங்களும் பசுமையாகி விடும்.

இதை மழைகாலம் என்பதை விட பூக்களின் காலம் என்றுதான் சொல்ல வேண்டும், எங்கு பார்த்தாலும் வண்ணமயமாக பூக்கள்தான் தெரியும்.நகரமே அத்தனை அழகாக இருக்கும், சாதாரன உடைகளுடன் ஒரு சுவட்டர் அல்லது லேசான குளிர்தாங்கும் ஜாக்கெட் போதுமானது.

வெட்பநிலை 10 தல் 15 டிகிரி சென்டிகிரேட் போல இருக்கும்.

செர்ரி பிளாசம் வருவதும் இந்த காலத்தில்தான், உலகெங்கும் இருந்து மக்கள் இதைகாண கொரியா, ஜப்பான் வருவது வழக்கம்.

நான் செர்ரி பிளாசம் ஜப்பானில் இருந்த போதுதான் முதன் முதலில் பார்த்தேன். ஆனால் இங்கு வந்தவுடன்தான் என் வீட்டு வாசலிலேயே பார்த்தேன். தென்கொரியாவை பொறுத்தவரை எல்லா இடங்களிலும் பாரம்பரிய பூக்கள் பூக்கும் மரங்கள் இருகின்றன.

இந்த காலத்தில் சீனாவில் இருந்து வரும் தூசி படலம் (Yellow sand dust) அதிகமாக காணப்படும். இது தோலுக்கும் குறிப்பாக கண்களுக்கு பாதிப்புகளை கொடுக்கும், அதனால் எப்போதும் வெளியே சென்று வந்தவுடன், முதலில் கை, கால் முகம் கண்கள் அனைத்தும் சுத்தமாக கழுவவேண்டும். சுத்தமாக கழுவும் முன் குறிப்பாக குழந்தைகளை கொஞ்சவோ முத்தமிடவோ கூடாது.

ஜூன் முதல் ஆகஸ்ட் வரை (Summer), வெட்பநிலை மாறி கோடை காலம் வரும், மொத்தமாக பார்க்கும் போது வெட்ப நிலை 25 முதல் 28.3 டிகிரி சென்டிகிரேட்தான் என்றாலும், காற்றில் ஈர தன்மை வெகுவாக குறைத்திருக்கும்.

சாதாரண உடையில் இருக்கலாம், ஆனால் என்னதான் சாதாரண உடையில் இருந்தாலும் வேர்வையும் பிசு பிசுப்பு தன்மையும் அதிகமாக இருக்கும், வீட்டில் குளிசாதனம் இல்லாமல் இருக்க முடியாது.

தென்கொரியாவை பொறுத்த வரை வீட்டு பொருட்கள் வாங்குவது முதல் குடும்ப வரவு செலவு அனைத்தும் பெண்கள்தான் என்பதால், வெளியில் எங்கும் அதிகமாக பெண்களை மட்டுமே பார்க்க முடியும்.

இந்த காலத்தில் வெயில் கூட கூட, பெண்கள் ஆடை குறையும், குளியலரையில் இருந்து அப்படியே வந்தது போல அரையும் குறையுமாக வண்ணமயமாக சுற்றிக்கொண்டு இருப்பார்கள். அவ்வளவு சின்ன டிடவுசரில் அவர்களை பார்த்தல் ஆண்களுக்கே வெக்கம் வந்துவிடும்.ஆனா மக்களே "கபர்தார்" (ஜாக்கரதை)!, நம்ம ஊர் மாதிரி நினைத்துக்கொண்டு தவறாக ஏதாவது செய்தால் போலிஸ் வந்து நம் டிடவுசரை கழட்டிவிடும்.

செப்டம்பர் முதல் நவம்பர் வரை (Autumn), அப்படி இப்படின்னு கண்ணை கழுவி கோடை காலத்தை முடித்தால் வருவது அற்புதமான இலையுதிர் காலம், என்னை பொறுத்தவரை, தென்கொரியாவிற்கு வர இதுதான் சரியான சமயம்.

வெட்பநிலை 10 டிகிரிக்கு கீழே இருந்தாலும், மரங்கள் எல்லாம் இலைகள் பழுத்து மஞ்சள் மற்றும் காப்பி நிறத்தில் நகரமே அவ்வளவு அழகாக இருக்கும்.

ஆசியாவில் இதை போல ஜப்பான் மற்றும் சீனாவில் ஒரு சில பகுதிகளில் மட்டுமே காணமுடியும் என்று நினைக்கிறேன், நகரை சுற்றி பார்க்க இது மிக சிறந்த நேரம்.

இதே சமயத்தில் இங்கு திருவிழாக்கள் வருவதால் விடுமுறை, கேளிக்கை, கொண்டாட்டம் என்று எங்கும் மகிழ்ச்சி மயமாக இருக்கும்.

இலையுதிர் காலம் முடிய போகும் போது ஓரிரு வாரம் காற்று அடிக்கும் பாருங்க, சும்மா நம்ம வீட்டையே நாலு தெரு தள்ளி கொண்டு போய் வைத்துவிடும் அப்படி பகலும் இரவும் பேய் காற்று அடிக்கும்.

சுட்டி பெண்கள் வேண்டும் என்றே (குட்டை)பாவாடையோடு வருவார்கள்.

டிசம்பர் முதல் மார்ச் வரை (Winter), அடித்த காற்றில் எல்லா இலைகளும் உதிர்ந்து நகரமே மொட்டை அடித்தது போல இருக்கும் போது குளிர்காலம் துவங்கும்.

பொதுவாக டிசம்பர் முதல் வாரத்தில் -01 முதல் -03 டிகிரி சென்டிகிரேட் என்று துவங்கும் பனிபொழிவின் அளவு கூடிக்கொண்டே போக போக வெட்ப நிலை எதிர்பார்க்காத அளவு குறைந்து கொண்டே போகும்.

அதிக பட்சமாக -10 முதல் -15 டிகிரி சென்டிகிரேட்வரை போகக்கூடும், முப்பது வருடங்களுக்கு பிறகு கடந்த வருடம் ஜனவரியில் -20+ டிகிரி சென்டிகிரேட் சென்றது.

குளிர் காலத்தின் துவக்கம் டிசம்பர் முதல் ஜனவரி பாதிவரை லேசான பனிபொழிவாக இருப்பதாலும் கிறிஸ்மஸ், புதுவருடம் என்று விடுமுறைகள் வருவதாலும், நகரமே வண்ண மயமாக அதுவும் இரவு நேரம் மிக ரம்யமாக இருக்கும்.

வானில் பனிமழை தூவ, தெருவெங்கும் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு "லாஸ்ட் கிறிஸ்மஸ், ஜிங்கில் பெல்ஸ்" போன்ற பாடல்கள் ஒலிக்க, எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் தங்கள் துணையுடன் கொரியா டக்கீலா "சோஜு" சூட்டில் கட்டியணைத்துக்கொண்டு நடக்க, நாடே திருவிழா கோலத்தில் மிதக்கும்.

வார இறுதி இரவு வாழ்கைக்கு மற்றும் தேனிலவு சுற்றுலாவுக்கு இது அற்புதமான காலம்.

அதன் பின், குளிர் கூட கூட, அதிக அளவு குளிர்தாங்கும் ஆடைகள் இல்லாமல் வெளியே போக முடியாது, வீட்டில் ஹீட்டர் மூலம் வெட்ப நிலையை +20+ டிகிரிக்கு மாற்றாமல் இருக்க முடியாது.

குழந்தைகளை இந்த காலத்தில் அதிக பாதுகாப்புடன் வைத்திருக்க வேண்டும், அடிக்கடி அவர்கள் உடல் வெட்ப நிலையை கண்காணிக்க வேண்டும்.ஜனவரி கடைசி முதல் எப்படா ஏப்ரல் வரும் என்று ஏங்குமளவு குளிர் நம்மை படுத்தி எடுத்து விடும்.இங்கு கட்டிட அமைப்புகள் இங்குள்ள சீதோசன நிலைக்கு சாதகமாக அமைக்கபட்டுள்ளன, வீட்டின் தரைகள் மரத்தால் செய்து அதன் அடியில் ஹீட்டர் இணைப்பு கொடுக்க பட்டு இருக்கும், நாம் நம் வீட்டின் மின்விசிறியின் அளவை கூட்டுவது போல, ஹீட்டர் மூலம் வீட்டின் தட்பவெட்ப நிலையை மாற்றி அமைத்துக்கொள்ள முடியும்.

குடிநீர் முதல் அனைத்து பயன்பாட்டு நீரும் சூடாக அல்லது குளிர்ந்த நிலையில் என்று நமக்கு வேண்டியவாறு மாற்றி அமைத்துக்கொள்ள முடியும், இவை அனைத்தும் நம் வீட்டின் கேஸ் இணைப்பின் மூலம் செயல்படும். அடுப்பு மற்றும் மின்விளக்கு போன்றவை மட்டுமே மின்சாரத்தை பயன்படுத்தும்.

இங்கு நான் குளிர் காலத்தில் இருந்து பலமுறை எல்லா இடங்களையும் பார்த்து விட்டதால், இந்த முறை புது வருடத்தை வரவேற்க விடுமுறைக்காக நான் இந்தியா செல்கிறேன்.

ஆகவே,நடந்தது நடந்தவையாக இருக்க, இனி நடப்பது நல்லதாக இருக்க, உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தின் மீதும் என்றும் தன் புன்னகையை செலுத்த எல்லாம் வல்ல இறைவனை வேண்டி உங்கள் அனைவருக்கும் என் இனிய கிறிஸ்மஸ், புதுவருட மற்றும் பொங்கல் வாழ்த்துக்களை சொல்லிக் கொள்கிறேன்.

நன்றி!.

Sunday, December 5, 2010

விமான பயணம் கவனம்!

இது நிறுவனங்களின் குறையை சுட்டி காட்டும் பதிவே தவிர, அதில் வேலை செய்யும் ஊழியர்களை குறை கூற அல்ல.

மேலும், இது வாடிக்கையாளர் சேவையை பற்றிய பதிவு என்பதால், அவர்கள் வேலையில் உள்ள கஷ்டத்தை காட்டும் வகையில் மின் அஞ்சலில் வந்த ஒரு பகிர்வுக்கு பின் விசையத்தை பார்க்கலாம்.

பொதுவாகவே நம்மிடம் விமான பயணம் என்றதும் எதோ புதிய அல்லது உயர்தர வாழ்கை முறையை சார்ந்த ஒன்று என்ற எண்ணம் இருக்கிறது, இதை பயன் படுத்திக்கொண்டு இந்த நிறுவங்கள் செய்யும் அட்டகாசம் சொல்ல முடியாத அளவு வந்து விட்டது.

விமான பயணமும் பஸ், ரயில் போல ஒரு பயண முறை மட்டுமே மற்ற பயண துறைகளுக்கு உள்ள எல்லா சட்டமும் இதற்கும் பொருந்தும் என்பதை நம்மில் எத்தனை பேர் கவனிக்கிறோம்?

என்னிடம் இந்தியா செல்ல ஒரு விமான சீட்டு இருந்தது, ஆசியாவின் முன்னணி விமான நிறுவங்களில் அதுவும் ஒன்று, வேலை பளு மற்றும் அலுவலக விடுமுறை படி என்னிடம் இருக்கும் பயண தேதிக்கு இரண்டு நாள் மாறுபட, பயணதேதியை மாற்றி அமைக்க அந்த விமான நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவையை அழைக்க, அந்த பெண் என்னிடம் பேசியது, என்னை ஒரு அடிமுட்டாள் போல நினைப்பதாக இருந்தது.

விமானசீட்டு விலை வேலை நாட்கள், வாரஇறுதி என்று பயண நாட்களை பொருத்து சற்று மாறுபடும் என்பது எனக்கு தெரியும். ஆனால், அவர் சொன்னது கிட்டதட்ட பதினாராயிரம் வித்தியாசம்!, இது கண்டிப்பாக சாத்தியமில்லை என்று எனக்கு புரிய, ஏன் என்று கேட்டேன்?

அந்த பெண் நான் எதோ விமானத்தை முன்பின் பார்த்திராத போல் நீங்கள் வைத்திருக்கும் வகுப்பில் தற்போது இருக்கை காலி இல்லை என்பதால், நான் உங்களுக்கு வேறு வகுப்பில் இருக்கை தருகிறேன் என்று சொல்ல, நானும் "(C) Economy Class, (B) Business / Executive Class, (A) First Class" இதில் எந்த வகுப்பில் தருகிறீர்கள் என்று கேட்க? அவரிடம் பதில் எதுவுமில்லை, சிறிது நேரம் என்னை காக்க வைத்து விட்டு திரும்ப அவர் சொன்ன பதில் என் கோவத்தை இன்னும் அதிகமாகியது.அதாவது தற்போது நான் வைத்திருக்கும் அதே வகுப்பில் பயண தேதியை இரண்டுநாள் தள்ளி மாற்றி தர இந்த கட்டணமாம், காரணம் நான் கேட்கும் தேதியில் தற்போது இருக்கை காலி இல்லையாம்.

அந்த பெண்ணிடம் பேசிக்கொண்டே என் கணினியில் எனக்கு வேண்டிய தேதியில் புதிதாக சீட்டு வாங்க விலையை பார்த்தல், தற்போது நான் வைத்திருக்கும் சீட்டின் விலையை விட வெறும் நான்காயிரம் மட்டுமே வித்தியாசம் வருகிறது, அத்தனை இருக்கையும் காலியாக இருக்கிறது.

ஏன் என்று மீண்டும் அந்த பெண்ணிடம் கேட்க, மீண்டும் என்னை காத்திருக்க சொல்லிவிட்டு சற்று நேரம் கழித்து வந்தவர், ஏதேதோ சம்மந்தம் இல்லாமல் விளக்கம் தந்தார்?

நான் முடிவாக சரி, இதோ எனக்கு வேண்டிய தேதியில் இணையம் மூலம் நான் ஒரு புதிய சீட்டை வங்கி விட்டேன், அதனால் என் பழைய சீட்டை நான் ரத்து செய்து விடுகிறேன்.

ரத்து செய்ய ஆயிரத்து எண்ணூறு ரூபாய் அபராதம் வரும் என்று எனக்கு தெரியும், அதனால் மீத தொகையை என் வங்கி கணக்குக்கு அனுப்ப சொன்னேன்.

பதினாராயிரம் கொடுத்து தேதியை மாற்றாமல் இப்படி பழைய சீட்டை ரத்து செய்து புது சீட்டு வாங்குவதன் மூலம் நான் ஒன்பதாயிரம் சேமிக்க முடியும் என்று சொன்னேன்.

மீண்டும் என்னை காத்திருக்க சொல்லிவிட்டு சற்று நேரம் கழித்து வந்தவர், உங்கள் பழைய சீட்டை ரத்து செய்ய கட்டணம் ஆயிரத்து எண்ணூறு ரூபாய் அல்ல ஐய்யாயிரத்து ஐநூறு ரூபாய் என்று சொல்ல எனக்கு உச்சிக்கு போய் விட்டது கோபம்.

என் பழைய சீட்டில் ரத்து செய்ய கட்டணம் ஆயிரத்து எண்ணூறு ரூபாய் என்று போட்டு இருக்கிறது, இப்போது நீங்கள் ஐய்யாயிரத்து ஐநூறு ரூபாய் என்று சொன்னால்! அதற்க்கான எழுத்து விளக்கம் எங்கே இந்த சீட்டில் இருக்கிறது என்று கேட்க? அவரிடம் பதில் எதுவும் இல்லை.

இந்த முறை நானே அவரிடம் மீண்டும் என்னை காத்திருக்க சொல்லாமல், நீங்கள் பேசும் நபரிடம் அல்லது உங்கள் மேலாளரிடம் எனக்கு தொடர்பு கொடுத்தால் நானே நேரடியாக அவரிடம் விளக்கம் கேட்பேன் என்று சொல்ல, அதற்கும் அவர் தயாராக இல்லை?சரி, இப்போது நீங்கள் எனக்கு இந்த சீட்டை ரத்து செய்ய ஐய்யாயிரத்து ஐநூறு ரூபாய் என்று எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்ப முடியுமா? என்று கேட்டால் அதற்கும் அவர் தயாராக இல்லை?

நான் கடைசியாக சொன்னது, நீங்கள் வாங்கும் கூடுதல் பணத்திற்காக நான் பேசவில்லை, இது முறையாக அரசாங்கத்தின் கணக்கில் வருவதாய் இருந்தால், நீங்கள் இப்படி எந்த எழுத்து விளக்கமும் தராமல் பணம் எடுக்க தேவை இல்லை?

மேலும் எனக்கு இந்த பணத்தால் பெரிய நஷ்டம் ஒன்றும் வந்து விட போவதில்லை, ஆனால் தின கூலி வேலைக்கு குடும்பத்தை நாட்டை விட்டு சென்று உழைக்கும் எத்தனயோ மக்களுக்கு இது மிக பெரிய தொகையல்லவா? இதற்காகத்தானே அவர்கள் இனம் மொழி தெரியாத நாட்டில் கஷ்டப்படுகிறார்கள்? அதனால்தான் கேட்டேன்.

எப்படியோ நீங்கள் எடுக்க வேண்டிய தொகையை எடுத்து விட்டு மீதத்தை அனுப்பவும், ஆனால் அப்போதும் நான் என்னிடம் இருக்கும் பழைய சீட்டையும் நீங்கள் திரும்ப அனுப்பிய தொகையையும் கொண்டு உங்கள் தலைமை அலுவலகத்திலும் மற்றும் இது சம்மந்த பட்ட துறையிலும் புகார் செய்வேன் என்று சொல்லிவிட்டு பதிலை எதிர்பார்க்காமல் வைத்து விட்டேன்.

விமான பயணிகள் ஒரு விமான சீட்டை வாங்கும் போது அதில் உள்ள அத்தனை விதிமுறைகளை பார்த்து வாங்கவும், அதே போல பயணத்தை ரத்து அல்லது மாற்றி அமைக்கும் போது, அவர்கள் எழுத்தில் கொடுத்துள்ள அந்த அபராத தொகைக்கு மேலே போகும் பட்சத்தில் அவர்களிடம் எழுத்து வடிவில் கேளுங்கள். இனம், மொழி தெரியாத நாடு என்று பயம் வேண்டாம், தேவை பட்டால் சம்மந்த பட்ட துறையில் புகார் கொடுக்கவும் அஞ்ச வேண்டாம்.

மொபைல் போன் போல இது அனைவரின் பயன்பாட்டில் இல்லை என்றாலும், ஏமாற்றும் தொகையின் அளவு (3700 ரூபாய்) மிக பெரியது இல்லையா, கவனிக்காமல் நேரடியாக தேதியை மட்டும் நான் மாற்றியிருந்தால் இன்னும் அதிகமாக நஷ்டமாகியிருக்கும்.

மேலும் கணக்கில் வராமல் எழுத்தில் தராமல் எடுக்கும் ஒவ்வொரு பைசாவுமே ஊழல்தானே? அதை சிந்தித்து பார்த்து செயல் படுங்கள் நண்பர்களே.

நன்றி!.
 

Blogger Widgets