Wednesday, July 7, 2010

பழைய கதை! புதிய பார்வை!

ஒரு அடர்ந்த காட்டில் வாழ்ந்த முயலுக்கும் ஆமைக்கும் ஓட்டப் பந்தயம் வைத்துக்கொள்ள வெகு நாட்களாக ஆசை.

முயலின் வேகத்துக்கு உன்னால் ஈடு கொடுக்க முடியாது, உன் தகுதியை மறந்து ஆசைப் படாதே என்று மற்றவர்கள் கேலி செய்ய, ஆமைக்கு ஒரே அவமானமாக போய் விட்டது.

சரி,விளையாட்டில் வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு அழகு,முயற்சி எதுவுமே செய்யாமல் இருப்பதை விட முயன்று தோற்பது ஒன்றும் அவமானம் இல்லை என்று நினைத்த ஆமை முயலுடன் போட்டி போட தயாரானது.

போட்டி நாள் அன்று அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்க, போட்டி நேரமும் வந்தது, போட்டியை துவக்க நடுவர் கொடி அசைத்த நொடியில் முயல் ஓடி வெற்றி இலக்கை அடைந்தது.

பொறுமை கதை முடியவில்லை!.

தன் தகுதிக்கு ஆமையை ஒரு முறை வெல்வது எப்படி பெருமையாக முடியும் என்று நினைத்த முயல், ஆமையை அவமான படுத்தும் கர்வத்தோடு மீண்டும் வேறு ஒரு பாதையில் போட்டிக்கு அழைக்க, தன்னம்பிக்கை கொண்ட ஆமையும் சம்மதித்தது.

இந்த முறை கடந்த முறை வெற்றி பெற்ற கர்வத்தில் போட்டி நடிவில் முயல் ஒரு மரத்து அடியில் படுத்துத் தூங்க மனம் தளாரத ஆமை மெது மெதுவாக ஓடி வெற்றி இலக்கை அடைந்தது.



கண் முழித்த முயலுக்கு அவமானமாக போய் தான் என்ற கர்வத்தால் வந்த வினையை நினைத்து வருந்தியது, அதனால் ஆமையை மீண்டும் ஒரு முறை முயல் போட்டிக்கு அழைத்தது, ஆமையும் சம்மதித்தது.

டேய் சிங்கக்குட்ட்ட்ட்டி.... என்று நீங்கள் பல்லை கடிப்பது எனக்கு கேட்கிறது.

பொறுமை பொறுமை! கதை இன்னும் முடியவில்லை!.

இந்த முறை மீண்டும் அதே பாதையில் போட்டி துவங்க, தோல்வியின் அவமானத்தை மறக்காத முயல் முன் போல் சுறுசுறுப்பாக ஓடி வெற்றி இலக்கை அடைந்து ஆமையை கேவலமாக பார்த்தது.

ஆமை சற்றும் மனம் தளராமல், நாம் ஏன் மீண்டும் ஒரு முறை போட்டியை வைத்துக்கொள்ள கூடாது? என்று கேட்க!ஆமையின் மன உறுதியை பார்த்து முயலோடு சேர்ந்து அனைவருமே வியந்துவிட்டார்கள்.

முயலும், நீ தோல்வி அவமானத்தில் உளறுகிறாய்.

எதோ ஒரு முறை நான் தூங்கி விட்டேன், இனி எத்தனை முறை போட்டி வைத்தாலும் என்னை உன்னால் வெற்றி பெறவே முடியாது. இதை உனக்கு நிருபிக்கவே மீண்டும் போட்டிக்கு நான் சம்மதிக்கிறேன் என்று சொன்னது.

முயல் ஆணவத்துடன் சொன்னதை பொறுமையாக கேட்ட ஆமை, கடந்த இரண்டுமுறை நீ ஓடு பாதையை தேர்ந்து எடுத்தாய், ஆகவே இந்த முறை நான் ஓடு பாதையை தேர்ந்து எடுக்கட்டுமா? என்று அமைதியாய் கேட்க, முயலும் சம்மதித்தது.

ஆக, ஆமை தேர்வு செய்த பாதையில் மூன்றாவது முறை போட்டி தயாரானது, போட்டி ஆரமித்ததும் ஓடு தளத்தில் வேகமாக ஓடிய முயல் உடனே வந்த திருப்பத்தில் திரும்பியதும் திகைத்து நின்றது.

காரணம் பாதையின் குறுக்கே ஓடிக்கொண்டு இருந்த ஆறு!, எங்கே இறங்கி நீந்தினால் ஆற்றில் அடித்து கொண்டு போய்விடுவோமோ என்ற பயம், மெதுவாக வந்த ஆமை அழகாக ஆற்றில் இறங்கி நீந்தி கரையில் இருந்த வெற்றி இலக்கை அடைந்தது.

தன் பலத்தை மட்டுமே நினைத்திருந்த முயலுக்கு இப்போது ஆமையின் பலமும் தன் பலவீனமும் புரிந்தது.

பொறுமை! பொறுமை! கதை இங்கும் முடியவில்லை!.

ஆமையின் தனம்பிகையும் புத்திசாலி தனமும் புரிந்தாலும், முயலுக்கு ஒரு ஆமையிடம் தன் தோல்வியை தாங்க முடியவில்லை.

சரி, இரண்டுக்கு இரண்டு என்று சம வெற்றியில் இருக்கும் நாம், கடைசியாக ஒரு போட்டியை வைப்போம்.



இதுவே "பெஸ்ட் ஆப் பைவ்" இதன் வெற்றியை பொறுத்து நம்மில் யார் இறுதி வெற்றியை அடைவது என்பது முடிவாகட்டும் என்று ஆமையிடம் சொன்னது.

சற்றும் மனம் தளராத ஆமை, அதே போல் இந்த முறை ஓடு பாதையையும் முன்பு போல் இல்லாமல் இருவரும் சேர்ந்து தீர்மானிப்போம் என்றது.

உடனே கடந்த முறை அனுபவத்தை மனதில் கொண்ட முயல், சரி ஆகட்டும், ஆனால் இப்போது நாம் நல்ல நண்பர்கள் ஆகிவிட்டதால் என் பாதையில் நான் உன்னை என் முதுகில் தூக்கிக்கொண்டு ஓடுகிறேன், அதே போல உன் பாதை வந்ததும் நீ என்னை முதுகில் தூக்கிக்கொண்டு ஓட வேண்டும் சம்மதமா? என்றது.

ஆமையும் சம்மதித்து, போட்டி ஆரமிக்க, முதுகில் ஆமையை சுமந்த படி முயல் பாதையில் ஓடியது, வழியில் காட்டு ஆறு வர, ஆமை இறங்கி முயலை சுமந்த படி ஆற்றில் நீந்தியது.

மறு கரைக்கு சென்று ஆற்றில் இருந்து ஆமையும், ஆமை முதுகில் இருந்து முயலும் தரையில் காலை வைக்க அங்கு வெற்றியின் எல்லை கோடு இருந்தது.

இருவருமே சமமாக வெற்றியின் எல்லை கோட்டை தொட்ட சந்தோசத்துடன், இனி என்றும் நாம் இணை பிரியாத நண்பர்களாக இருப்போம் என்று முடிவெடுத்தன.

இப்படி முடிகிறது இங்கு என் கதை.

நண்பர்களே, பலமும் பலவீனமும் எல்லா இடத்திலும் சமமாகவே இருக்கிறது. இன்று மற்றவருக்கு நீ செய்ததை, நாளை உனக்கு வேறொருவர் செய்வார் என்பதே உலக தத்துவம்.

அது நல்லதா கெட்டதா என்பதை முதலில் நீயே தீர்மானிக்கிறாய் என்பதே இங்கு என் கருத்து.

அது கணவன் மனைவி குடும்பமாகட்டும், வேலை இட சக ஊழியர்களாகட்டும் அல்லது நண்பர்களாகட்டும், ஒருவரின் பலவீனத்தில் குத்தி நம் பலத்தால் அவர்கள் மனதை காய படுத்துவதை விட, நம் பலத்தை கொண்டு அவர்களின் பலவீனத்தில் உதவி, நம் பலவீனத்தில் அவர்கள் பலத்தின் உதவியை தயங்காமல் கேட்டு வாங்கி வாழ்கையை நகர்த்தினால் எல்லாமே மாறிவிடும்.

மற்றொரு சுவையான தகவல்.

கடந்த மாதம் இரண்டு நாட்கள் ஆறு வருடங்கள் கழித்து மீண்டும் ஜப்பான் தலைநகர் டோக்யோ நகருக்கு சென்று இருந்தேன், அக்கிஹாபாரா என்னும் புகழ் பெற்ற சந்தையில் பொருட்கள் வாங்கி கொண்டு இருக்கும் போது, ஒரு பத்து பனிரெண்டு வயதில் உள்ள மாணவிகள் கூட்டத்தை கண்டேன்.

அனைவரும் ஒரே போல் அடர் நீலம் கலந்த பனியனில் இருந்தார்கள், அதில் " NO DRUG...! NO WAR...!" என்று ரத்த சிகப்பில் எழுதி இருந்தது. பொதுவாக ஜப்பானிய பெண்கள் ஆங்கிலம் கலந்த உடை அணிவதை விரும்ப மாட்டார்கள்.

ஆர்வம் தாங்காமல் அவர்களை அழைத்து, அது ஏன்! எதற்கு? என்று கேட்க, அந்த அழகான பிஞ்சுகள் சொன்ன பதில் கவிதையாய் என் அடி மனதில் பதிந்தது.

அதாவது எங்கள் மூன்றாவது தலைமுறை முன்னோர்கள் போரின் கொடுமை அனுபவித்தார்கள், அந்த வலி எங்கள் மனதில் இன்னும் இருக்கிறது.

அதில் சிதைந்து போன எங்கள் நாட்டை, எங்கள் இரண்டாவது தலைமுறை முன்னோர்களின் கடுமையான உழைப்பு உலகமே திரும்பி பார்க்கும் இயந்திர நாடாக மாற்றியது.

அந்த வெற்றிகளிப்பில் இப்போதுள்ள எங்கள் முதல் தலைமுறை இளையர்ககளின் விருப்பம் சிறிது போதைக்கும் புகைக்கும் போகிறது.

இது இப்படியே தொடராமல், இனிவரும் எங்கள் அடுத்த தலைமுறை "போரும் போதையும்" இல்லாத ஒரு புதிய உலகத்தின் முன்னோடியாக ஜப்பானை கொண்டு செல்வோம்.



இதை எப்போதும் நினைவில் வைத்திருக்கவே இது என்று சொல்லியதை கேட்டதும் எனக்கு ஒரு தேசியகீதம் கேட்டது போல உடல் சிலிர்த்து விட்டது.

அதை விட, நீங்கள் வளர்ந்து என்னவாக வர விரும்புகிறீர்கள் என்று கேட்டதற்கு கிடைத்த பதில்.

இயந்திர மருத்துவ மற்றும் உலக விளையாட்டு நாகரீகத்தை பொறுத்த வரை இப்போதே நாங்கள் அடுத்த நூறு வருட முன்னோடியாக இருக்கிறோம்.

ஆகவே நாங்கள் பாட்டு, நடனம் மற்றும் இயற்கை விவசாயம் என்று அதி விரைவில் ஒரு அழகிய பசுமையான ஜப்பானை இந்த உலகுக்கு காட்டுவோம், இதுவே எங்கள் புதிய தலைமுறை லட்சியம் என்றார்கள்.

அடடா, எப்போதும் கையில் இருக்கும் கேமிரா இப்போது இல்லையே என்று வருந்தியவாறு அவர்களிடம் இருந்து விடைபெற்றேன்.

உலகம் எங்கேயோ அதி வேகமாக போய் கொண்டு இருக்கிறது நண்பர்களே, நமக்கு இப்போதும் நேரம் இருக்கிறது.

நம்மை போல மேல் நாட்டு வேலை, கலாசாரம் என்று நம் சொந்த நாட்டு வேலை மற்றும் கலாசார அடையாளத்தை துலைக்காமல், இனி வரும் தலைமுறைகளுக்கு அதை முறையே மனதில் விதைத்து, அடுத்த தலைமுறையை நம் நாட்டுக்காக வளர்ப்பது நம் கடமையாகிறது.

நன்றி!.

இரண்டு வருடம் கழித்து விடுமுறைக்காகவும், என் தேர்வுக்காகவும் நாளை இந்தியா செல்வதால், திரும்ப வரும் வரை இனிய தமிழ் பாடல்களை கேட்டு மகிழுங்கள்.

என் இணைய பக்கத்தில் உங்கள் நேரத்திற்கு மீண்டும் என் அன்புகலந்த நன்றி!.
 

Blogger Widgets