Tuesday, January 5, 2010

அல்லா அருணாச்சலா!

புதுவருட வாழ்த்துக்களுடன் நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருக்கும் போது, எங்கள் பேச்சு பதிவுகள் பக்கம் திரும்பியது.

"சித்தர்கள்" பதிவை நோக்கி வந்த எங்கள் பேச்சு...,

சித்தர்கள்

பதினெட்டு சித்தர்கள்

இதில் சூஃபியர்களை பற்றி சொல்ல நிறைய இருக்கிறது என்று சொல்லி, எனக்கு "சூஃபியர்கள்" பற்றியும் "சித்தர்கள்" பற்றியும் நன்கு தெரிந்தவர்கள் சொன்ன சில நல்ல தகவல்களை அனுப்பி வைத்தார்கள்.

அதில் நான் படித்திராத சில தகவல்கள் அருமையாக இருந்தது. அதை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

சித்தர்களின் புறத்தோற்றம் இயல்பானதாகத்தான் இருக்கும், குறிப்பாகவும் சிறப்பாகவும் எதுவும் தோன்றாது என்பதை,

"வேர்த்தால் குளித்துப், பசித்தால் புசித்து, விழி துயின்று பார்த்தால் உலகத் தவர்போல் இருப்பர் பற்று அற்றவரே!" என்ற பட்டினத்தார் பாடல் தெரிவிக்கிறது.

"மாத்தானவத்தையும்"
என்று தொடங்கும் இப்பாடலைத்தான் குமரி முதல் வேங்கடம் வரையிலுள்ள சுடுகாடுகளில் பாட படுகிறதாம்".

சித்தர்களுக்கு இயல்பு மீறிய(Abnormal) புறத்தோற்றமும் இருக்கக் கூடும் என்பதை,

"பேய்போல் திரிந்து, பிணம்போல் கிடந்து, இட்ட பிச்சையெல்லாம் நாய்போல் அருந்தி, நரிபோல் உழன்று, நன்மங்கையரைத் தாய்போல் கருதித், தமர்போல் அனைவர்க்கும் தாழ்மைசொல்லிச் சேய்போல் இருப்பர்கண்டீர்! உண்மை ஞானம் தெளிந்தவரே!"

என்ற பட்டினத்தார் பாடல் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.

இதே போல, சூஃபியர் என்ற சொல், 'சூஃபி' என்ற அரபுச் சொல்லின் ஆக்கம். அரபுமொழியில் ‘சூஃப்’ என்ற சொல் கம்பளி("Wool")யைக் குறிக்கும்.

பின்னர் அச்சொல்லே ‘கம்பளியை உடையவன்’ ("Man of Wool") என்ற பொருள் கொண்ட "சூஃபி" என்னும் சொல்லை தந்தது.

தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட சூஃபிய மெய்யுணர்வாளர்களில் "பீருமுகம்மது வாவா" என்று நெல்லை மக்களால் அழைக்கப்படும் பீர்முஹம்மத் அப்பா(ரலி) முதலாமவர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தக்கலையில் அவருடைய அடக்கத்தலம் உள்ளது.



"பீர்முஹம்மத் அப்பா(ரலி) அவர்களே தமிழ் சூஃபித்துவ ஞானப் பாடல் வரிசையில் முதலாமவராக விளங்குகிறார்கள்" என்று தேசமானிய டாக்டர் ஏ.எம்.முஹம்மத் சஹாப்தீன் கூறியுள்ளார்.

சூஃபியாக்கள் (பாரசீக சூஃபி மெய்யுணர்வாளர்) பரம்பொருளை "உண்மை" என்றே சுட்டுகின்றனர். "தன்னுணர்வு கொண்ட விழைவு", "அழகு", "ஒளி" அல்லது "எண்ணம்" என்ற முந்நிலையில் அவர்கள் கடவுளை வைத்துச் சுட்டுவதாக அல்லாமா இக்பால் அவர்கள் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டுச் சூஃபியர்கள் சிலரின் பெயர்கள் - பீர்முஹம்மத் அப்பா(ரலி), கோட்டாறு ஞானியார், குணங்குடி மஸ்தான் சாஹிபு, கலீபத் ஷைகு ஷாஹூல் ஹமீத் அப்பாநாயகம், பரிமளம் முகம்மது காஸிம், இறசூல் பீவி, ஐயம்பேட்டை அப்துல் கரீம் பாவா, குஞ்சலி சாஹிப், இளையான்குடி மஸ்தான் ஸாஹிப், கோட்டாறு சைகுத்தம்பி ஞானியார், அப்துல் காதிர் வாலை மஸ்தான், பெரியநூஹூ லெப்பை ஆலிம், 'காலங்குடி மச்சரேகைச் சித்தன்' என்றழைக்கப்படும் செய்யிது அப்துல்வாரித் ஆலிம்மௌலானா ஐதுரூஸ், மேலைப்பாளையம் முகியித்தீன் பஸீர், மோனகுரு மஸ்தான் ஸாஹிப், முகம்மது ஹம்ஸாலெப்பை ஆகியோர்.

தமிழ்நாட்டு சூஃபியர்களின் தொண்ணூற்றிரண்டு வகைமாதிரி கவிதைகள் "இறைவனும் பிரபஞ்சமும்" நூலில் கொடுக்கப்பட்டுள்ளது.

பொதுவாக, சித்தர்களும் சூஃபியர்களும்

1. மதங்கள் மனிதர்களுக்கிடையே பிளவுகள் ஏற்படுத்தாமல் தலையிட்டு, மக்களை ஒற்றுமைப்படுத்தினார்கள். பல இடங்களிலும் சூஃபிஞானியர்களுக்கு ஸியாரங்கள் கட்டப்பட்டும் அவர்களின் நினைவுதினம் கொண்டாடப்பட்டும் வருவதை அறிகின்றோம்.

இவ்வரிசையில் மிகவும் கீர்த்தி பெற்று விளங்குவது மகாமேதை மீரா சாஹிப் ஆண்டகை அவர்களுடைய இடமாகும். இந்து, கிறிஸ்த்துவ, இஸ்லாமியர் என்று அனைவராலும் வணங்க படுகிறார்.

2. பல்வேறு நுட்பமான முறைகளைப் பின்பற்றி, உட்சமயங்களின் எண்ணிக்கையைப் பெருக்கிக் கொண்டும் தனித்தனிக் கடவுளரைக் கற்பித்துக்கொண்டும் மக்கள் அஞ்ஞானத்தில் அழுந்துவதைத் தடுத்தார்கள்.

3. பக்தியின் பெயரால் மக்கள் மனங்களில் ஏற்பட்ட உருவ வழிபாட்டு முறைகளையும் புறச் சடங்குகளையும், போலிவாழ்வையும் மூடப் பழக்கங்களையும் களைந்து அறிவார்ந்த ஆன்மிக வாழ்விற்கு வழிகாட்டினார்கள்.(முனைவர் க.நாராயணன், சித்தர் சிவவாக்கியர்)

4. எவ்வாறு கலப்புத் திருமணங்களால் சாதிமுறை ஆட்டங்காணுமோ, அவ்வாறு சித்தர் பீடங்களைப் பின்பற்றிய மக்களிடத்தில் சாதிவேற்றுமை மதிப்புப் பெறாதவாறு பாதுகாத்தார்கள்.

5. உடைமைச் சமூகத்தில் இல்லாரும் வாழ வேண்டி, நிலையாமைகள் பலவற்றைத் தம் எளிய, தெளிவான, நேரடியான பாடல்களால் உணர்த்தி, உடைமை,சொத்துக் குவிப்பவர்களின் வேகத்தை மட்டுப்படுத்தினர்.



"புகுந்துநின் றான்வெளி யாய்இரு ளாகிப் புகுந்துநின் றான்புகழ் வாய்இதழ் வாகிப் புகுந்துநின் றான்உட லாய்உயி ராகிப் புகுந்துநின் றான்புந்தி மன்னிநின் றானே தானே திசையொடு தேவரு மாய்நிற்குந் தானே உடலுயிர் தத்துவ மாய்நிற்குந் தானே கடல்மலை யாதியு மாய்நிற்குந் தானே உலகில் தலைவனு மாமே உடலாய் உயிராய் உலகமே தாகிக் கடலாய்க் கார்முகில் நீர்பொழி வானாய் இடையாய் உலப்பிலி எங்குந் தானாகி அடையார் பெருவழி அண்ணல் நின்றானே"

என்ற பாடல் "சித்தர் திருமூலர்" அவர்கள் பாடியது.

இதே போல் "மஸ்தான் ஸாஹிபு" பாடியவை பின்வருமாறு:

"ஊனாகி ஊனினுயி ராகியெவ் வுலகுமாய் ஒன்றா யிரண்டு மாகி உள்ளாகி வெளியாகி யொளியாகி யிருளாகி ஊருடன் பேருமா கிக் கானாகி மலையாகிவளைகடலு மாகியலை கானக விலங்கு மாகிக் கங்குல்பக லாகிமதி யாகிரவி யாகிவெளி கண்டபொரு ளெவையு மாகி நானாகி நீயாகி அவனாகி அவளாகி நாதமொடு பூத மாகி நாடுமொளி புரியஅடி யேனுமுமை நம்பினேன் நன்மைசெய் தாளு தற்கே வானோரும் அடிபணித லுள்ளநீர் பின்தொடர வள்ளல் இற சூல்வரு கவே வளருமருள் நிறைகுணங் குடிவாழு மென்னிருகண் மணியே முகியித் தீனே"

"திருமூலரின்" பாடலை "மஸ்தான் சாஹிபு" அவர்களின் பாடல் பொருளோடு ஒப்பிட்டு பார்த்தால், தமிழ்நாட்டுச் "சித்தர்களும் சூஃபியர்களும்" எவ்வளவு புரிந்துணர்வுடன் வாழ்ந்து, மக்களை நெறிப்படுத்தினார்கள் என்பது தெளிவாகப் புரியும்.


நல்ல இந்த தகவல்களை கொடுத்த நண்பர்களுக்கு நன்றி!.

சரி, இனி என் எண்ணங்களை பார்ப்போம்.

இறை நம்பிக்கை மட்டும் கொண்டு மதங்களுக்கு அப்பாற்பட்ட சித்தர் வழியை நான் விரும்புகிறேன்.

இந்த மனித வாழ்கையில் எல்லாம் "மாயை" என்று புரியவைக்கும், எனக்கு பிடித்த ஒரு பாடலை இந்த நேரத்தில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

தனிப்பட்ட மதசார்பான படங்களை தவிர்த்து விட்டு "Pray" என்ற பொது வார்த்தையை நீங்கள் விரும்பும் "கடவுளை" அல்லது "கொள்கையை" நினைத்து கண்ணை மூடி பாடல் வரிகளை மட்டும் கவனித்து பாருங்கள்.



என்னடா இது! வருட பிறப்பும் அதுவுமாய், இப்படி அழுகையுடன் கூடிய ஒரு பாடலை தருகிறானே என்று நினைக்க வேண்டாம்.

சுகமும், துக்கமும் சமமாக பார்க்கும் மனம் வேண்டும். கஷ்டத்தில் மட்டுமிலாமல் சந்தோசத்தின் போதும் சமமாக இறைவனை நினைக்கும் மனம் வேண்டும். அதுவே வாழ்கையின் உண்மையை நமக்கு உணர்த்தும்.

சொல்வது "திருமூலரோ" அல்லது "மஸ்தான் சாஹிபோ" அல்லது "ஜான் போப்போ" நாம் யாரென்று உண்மை நிலையை உணர, இந்த நிலையற்ற மனித வாழ்கையில் "சித்தார்" வழி செல்வதுதான் சிறந்தது.

எனவே இறை நம்பிக்கையை, ஜாதி, மத, இன கொள்கைகளுடன் கலந்து குழப்பிக்கொள்வதில் அர்த்தம் இல்லை! என்பது என் எண்ணம்.

உங்கள் நேரத்திற்கு நன்றி!.
 

Blogger Widgets