நன்றி தட்ஸ் தமிழ்.
நான் நிரந்தரமானவன் என்றும் அழிவதில்லை என்ற சொல்லுக்கு, உலகம் முழுவதும் என்றும் தகுதியன ஒரே இசை புயல் தன் இசை பயணத்தை இன்றோடு முடித்தது.
இது வெறும் வதந்தியாக இருக்க வேண்டும் என்று விரும்பினேன். அவர் மறைந்து விட்டார் என்பதை நம்புவதற்கு ரொம்ப நேரமானாலும் மனமே வரவில்லை .
மைக்கேல் உன் தேகம் மறைந்தாலும், சுவாசத்தோடு கலந்து எங்கள் வாழ்வில் என்றும் நீ இசையாய் மலர்வாய்.
பாப் இசை உலகின் சூப்பர் ஸ்டார், ஒரிஜினல் நடனப் புயல் மைக்கேல் ஜாக்ஸன் இன்று அதிகாலை 2.26 (அமெரிக்க நேரம்) மணிக்கு லாஸ் ஏஞ்சல்ஸ் மருத்துவமனையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 50. அவரது மரணத்தை போலீசாரும், ஜாக்ஸன் குடும்பத்தினரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தனது இனிய இசையால் உலகையே கட்டிப் போட்டவர் மைக்கேல் ஜாக்ஸன். 1958-ல் அமெரிக்காவின் இந்தியானாவில் பிறந்தார். தனது 9 வயதிலேயே இசைத்துறையில் கால் பதித்த ஜாக்ஸன், வெற்றிகரமான பாப் பாடகராக மேடைகளைக் கலக்க ஆரம்பித்தார். தி ஜாக்ஸன் 5 எனும் பெயரில் தனி இசைக் குழுவைத் தொடங்கிய ஜாக்ஸன், 1970-ல் அந்தசக் குழுவின் சூப்பர் ஸ்டாராகவும், உலக பாப் இசையின் மிகச் சிறந்த பாடகராகவும் பார்க்கப்பட்டார். அப்போது அவருக்கு வயது ஜஸ்ட் 12 மட்டுமே.
1972-ம் ஆண்டு 'பென்' எனும் பெயரில் தனது தனி ஆல்பத்தை வெளியிட்டார். 6 வருடங்களுக்குப் பின் தனது முதல் திரைப்படமான 'தி விஸ்'ஸில் நடித்தார்.
பின்னர்தான் தனது நண்பர் ஜோனுடன் இணைந்தார். 1979-ல் ஆஃப் தி வால் மற்றும் 1982-ல் த்ரில்லர் ஆகிய ஜாக்ஸனின் இசை ஆல்பங்கள் சரித்திரம் படைத்தன. ஆஃப் தி வால் ஆல்பம்தான் டிஸ்கோ இசையை உலகம் எங்கும் பிரபலப்படுத்தியது. 10 மில்லியன் இசைத்தட்டுகள் விற்பனையாகின. அன்றைக்கு உலகையே வாய்பிளக்கச் செய்த சாதனை இது.
த்ரில்லருக்கு மட்டும் 8 கிராமி விருதுகள் கிடைத்தன. உலக இசையின் சக்ரவர்த்தியாக அறிவிக்கப்பட்டார் மைக்கேல் ஜாக்ஸன். உலகமே இனம் மொழி நாடு என்ற எல்லைகளைக் கடந்து அவரது இசைக்காக உருகியது.
த்ரில்லர் ஆல்பம் மட்டுமே 41 மில்லியன் விற்றுத் தீர்ந்தன. இன்றும் பாப் இசையில் அதிகம் விற்பனையாகும் ஆல்பங்களில் ஒன்றாகவே த்ரில்லர் திகழ்கிறது. இது உலக சாதனையாக கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெற்றது.
இசையிலும் கூட நிறவெறி கொண்டிருந்த மேற்குலக நாடுகளில் ஜாக்ஸனின் வருகை ஒரு புதிய விடியலாகத் திகழ்ந்தது. வேறு வழியே இல்லாமல் வெள்ளையர்கள், ஜாக்ஸனைக் கொண்டாடும் அளவுக்கு, இசையை தனது வசப்படுத்திக் கொண்டிருந்தார் ஜாக்ஸன். பணம், வியாபாரம் இரண்டிலும் வெல்பவருக்கே உலகம் சொந்தம்... நிறமும் இனமும் ஒரு பிரச்சினையில்லை என்பதை அவரது முன்னேற்றம் உலகுக்கு எடுத்துச் சொன்னது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு புதிய தன்னம்பிக்கை தருவதாகவும் அது அமைந்தது.
1992-ம் ஆண்டு ஹீல் த வேர்ல்டு எனும் அறக்கட்டளையைத் துவங்கினார் மைக்கேல் ஜாக்ஸன். இந்த அமைப்பு மூலம், உடலால் மனதால் நிறவெறியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவிகளை செய்வதாக அறிவித்தார்.
ஆதரவற்ற பல சிறுவர்களை இந்த அமைப்பின் மூலம் பராமரிப்பதற்காக அமெரிக்காவில் நெவர்லாண்ட் எனும் பெரிய பண்ணை இல்லத்தை வாங்கினார். அங்கேயே இந்த சிறுவனர்களுடன் பொழுதைக் கழித்தார். இங்குதான் வந்தது வம்பு. சிறுவர்களை அவர் பாலியல் தொந்தரவு செய்வதாக அவர் மீது புகார்கள் எழுந்தன, வழக்குகள் தொடுக்கப்பட்டன, கோர்ட்டுக்கு வெளியே செட்டில்மெண்டுகள் நடந்தன. இந்த சிக்கல்களில் சிக்கித் தவித்த ஜாக்ஸனால் மீண்டும் ஒரு இசை ஆல்பத்தைத் தர முடியாமல் போனது. ஆனாலும் பாப் உலகின் மன்னனாகவே கடைசி வரை அவர் பார்க்கப்பட்டார்.
1994-ல் எல்விஸ் பிரஸ்லேயின் மகள் லிசா மேரியைத் திருமணம் செய்து கொண்டு, தன்மீதான 'சிறுவர் பாலியல் தொந்தரவு' புகார்களுக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க முயன்றார். ஆனால் இந்தத் திருமணமும் இரு ஆண்டுகள்தான் நீடித்தது.
லிசா மேரியை விவாகரத்து செய்த கையோடு 1996-ல் டெபி ரோவை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரு குழந்தைகளும் பிறந்தனர். 1999-ம் வரைதான் இந்தத் திருமண உறவும் நீடித்தது. பின்னர் வேறொரு பெண் மூலம் மூன்றாவது குழந்தையும் பிறந்தது அவருக்கு.
2005-ம் ஆண்டு அனைத்து பாலியல் புகார் வழக்குகளிலிருந்தும் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார் மைக்கேல் ஜாக்ஸன்.
மீண்டும் ஒரு சாதனையைப் படைக்க ஆர்வமாக இருந்த அவர், வரும் ஜூலை 13-ம் தேதி முதல் லண்டன் மற்றும் பிரிட்டனின் குறிப்பிட்ட நகரங்களில் 50 இசை நிகழ்ச்சிகளை நடத்தத் திட்டமிட்டிருந்தார். இதற்காக லாஸ் ஏஞ்சல்ஸில் தீவிரமான ஒத்திகையும் நடந்து வந்தது. இந்த நிகழ்ச்சிகள் மூலம் தனது இமேஜை திரும்பப் பெற முடியும், புதிய இசை ஆல்பத்தை உருவாக்க முடியும் என்று பலமான நம்பிக்கை கொண்டிருந்தார்.
'இறுதித் திரை' எனும் பெயரில் நடக்கவிருந்த இந்த இசை நிகழ்ச்சி இறுதிவரை நடக்காமலே போனது.
ஜாக்ஸன் உடல் நிலை குறித்த வதந்திகள் பல ஆண்டு காலமாகவே இருந்து வருகின்றன. கறுப்பர் இனத்தைச் சேர்ந்தவரான அவர் தன் உடல் முழுவதையுமே தொடர் காஸ்மெடிக் சர்ஜரி மூலம் சிவப்பாக மாற்றிக் கொண்டார். முகத்தில் மட்டும் பல முறை காஸ்மெடிக் சிகிச்சை நடந்துள்ளது. இதனால் அவரது முகம் குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு உரு மாறத் துவங்கியதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இந்த காஸ்மெடிக் சிகிச்சைகளே அவருக்கு தோல் புற்றுநோய் வரவழைத்துவிட்டது என்றும் சொல்கிறார்கள்.
மருத்துவ பரிசோதனைக்காக அவரது உடல் லாஸ் ஏஞ்சல்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மைக்கேல் ஜாக்சன் தானே எழுதி, இசையமைத்த 200 பாடல்களை வைத்து விட்டுச் சென்றுள்ளாராம், இவை ஒருமுறை கூட பாடப்படாதவை. இவை தனக்குப் பின்னால் தனது குழந்தைகளுக்காக இருக்கட்டும் என கூறி வந்தாராம் ஜாக்சன்.
"கிங் ஆப் பாப்" என்று உலகம் முழுவதும் அன்போடு அழைக்கப்பட்ட இசை உலகின் ஒரு மா-மன்னனின் மறைவில், அவரது விண்ணை தொடும் சாதனைகளையும், புகழ்களையும் விட்டு விட்டு அவரின் ஒரு சில அந்தரங்கத்தை மற்றும் வாழ்க்கை காயத்தை மட்டும் ஊடகங்களில் பெரிது படுத்தி காட்டுவது எந்த விதத்தில் நியாயம் என்று புரியவில்லை, நான் புரிந்து கொள்ளவும் விரும்பவில்லை.
மேலும் அவரின் கோடிக்கணக்கான நன்கொடைகளையும், நல்ல மனதையும் உலகிற்கு எடுதுக்காட்டுவதை விட்டுவிட்டு, ஒரு சில கடன் பிரச்னைகளை மட்டும் சுட்டிக்காட்டுவது என்பது மிக வருந்த தக காரியமாகும், அதனால் தான் என்னவோ, அந்த இசை உலகின் தனி ராஜா நமக்கு தன் "இறுதித் திரை" நிகழ்சி மூலம் ஒரு "குட் பை" கூட சொல்லாமல், இந்த உலகை விட்டு பிரிந்து விட்டார்.
எது எப்படியோ, இனி யார் வந்தாலும் இந்த இசைதேவனின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்பது என் கருத்து.
மைக்கேல் உன் புனித ஆத்மா சாந்தி அடைய, எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கின்றேன்.
Friday, June 26, 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 பின்னூட்டம்:
Post a Comment