Wednesday, July 8, 2009

மைக்கேல் ஜாக்ஸன் இறுதி (யாத்) திரை - II

ஜாக்சனின் உடல் அடக்க நிகழ்ச்சி நேற்று ஜூலை 7 2009 நடைபெற்றது.



உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் கண்ணீர் மல்க விடை கொடுக்க, பல்லாயிரக்கணக்கானோரின் நேரடி அஞ்சலியுடன், பாப் உலகின் மன்னன் மைக்கேல் ஜாக்சன் நேற்று இரவு ஜூலை 7 2009 பிரியா விடை பெற்றார்.



இதுவரை உலகில் யாருடைய இறுதிச் சடங்கும் இந்த அளவுக்குப் பிரமாண்டமானதாக இருந்திருக்க முடியாது என்று கூறும் அளவுக்கு மிகப் பிரமாண்டமாக, ஜாக்சனின் இசையை சுவாசித்தபடி, அவருக்கு கண்ணீர் மல்க விடை கொடுத்தனர் ரசிகர்கள்.

தங்க முலாம் பூசப்பட்ட சவப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த மைக்கேல் ஜாக்சனின் உடல், பாரஸ்ட் லான் ஹில்ஸ் பகுதியில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.



இந்த நிகழ்ச்சி தனிப்பட்ட குடும்ப நிகழ்ச்சியாக மட்டும் நடத்தப்பட்டதால், குடும்பத்தினர் தவிர வேறு யாரும் அதில் கலந்து கொள்ளவில்லை. ரசிகர்களும் பார்வையிட அனுமதிக்கப்படவில்லை.



அதன் பின்னர் மைக்கேல் ஜாக்சனின் கடைசி விருப்பப்படி அவரது நினைவு நிகழ்ச்சி பிரபலமான ஸ்டேபிள்ஸ் மையத்தில் பிரமாண்ட கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது.

உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து குவிந்திருந்த 20 ஆயிரம் பேர் இந்த நினைவு நிகழ்ழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

பாதிரியார் லூசியஸ் ஸ்மித் பிரார்த்தனையுடன் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். அதன் பின்னர் மரியா கேரி, டிரே லோரன்ஸுடன் இணைந்து பாடினார்.

இசையுலகைச் சேர்ந்த பாரி கோர்டி, கூடைப்பந்தாட்ட வீரர்கள் மாஜிக் ஜான்சன், கோபே பிரையன்ட், ஜெனிபர் ஹட்சன், ஜான் மேயர் என பிரபலங்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.

பாடகர் ஸ்டீவி ஒன்டர் உருக்கமாக பேசி பாடினார். ஜாக்சனின் நெருங்கிய தோழியான டயானா ரோஸ் மற்றும் நெல்சன் மண்டேலா ஆகியோர் விடுத்த இரங்கல் செய்திகளை பாடகர் ஸ்மோக்கி ராபின்சன் வாசித்தார்.

முன்னதாக ஜாக்சனின் உடல் ஸ்டேபிளஸ் மையத்திற்கு ரசிகர்கள் அஞ்சலிக்காக கொண்டு வரப்பட்டது.

நிகழ்ச்சியில் ஜாக்சனின் ஐந்து சகோதரர்கள், இரு சகோதரிகள், மூன்று குழந்தைகள் உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

ஜாக்சனின் மகள் பாரீஸ் தனது தந்தை குறித்து பேசி முடித்ததும் அடக்க முடியாமல் கதறி அழுதார். அதேபோல ஜாக்சனின் சகோதரரான ஜெர்மைன் ஜாக்சனும் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல், ஸ்மைல் என்கிற பாடலைப் பாடினார்.



உலகம் முழுவதும் ஜாக்சனின் நினைவு நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பு செய்யபப்ட்டது. மொத்தம் 16 டிவி நிறுவனங்கள் இதை நேரடியாக ஒளிபரப்பு செய்தன. கிட்டத்தட்ட உலகம் முழுவதும் உள்ள டிவி நிறுவனங்கள் நேரடி ஒளிபரப்பு செய்தன.

உலகின் மிகப் பெரிய மீடியா நிகழ்ச்சியாக மாறிப் போயிருந்தது ஜாக்சனின் நினைவாஞ்சலி நிகழ்ச்சி, ரசிகர்கள் கண்ணீர் மல்க விடை கொடுக்க பூவுலகிலிருந்து விடை பெற்றார் ஜாக்சன்.

காலத்தால் மறக்க முடியாத ஜாக்சன் இந்த மண்ணை விட்டு பிரிந்தாலும், ஜாக்சனின் நினைவு என்றும் நம் மனதை விட்டு பிரிய போவதில்லை.























2 பின்னூட்டம்:

ராமலக்ஷ்மி said...

ஜாக்சனின் இறுதி யாத்திரையையும் நினைவாஞ்சலி நிகழ்ச்சியையும் விவரமாய் படங்களுடன் தந்து உங்கள் அஞசலியையும் பதிந்து விட்டிருக்கிறீர்கள். சகாப்தம் படைத்த அவரது ஆன்மா இனி சச்சரவுகளுக்கு அப்பாற்பட்டு நிம்மதியாக உறங்கட்டும்.

சிங்கக்குட்டி said...

உங்கள் கருத்துக்கு நன்றி ராமலக்ஷ்மி, அவரது ஆன்மா நிம்மதியாக உறங்க எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுவோம்.

Post a Comment

 

Blogger Widgets