Friday, November 20, 2009

சைபர் கொரியா

டிஜிட்டல் கொரியாவை பற்றி முன்பு ஒரு பதிவில் பார்த்தோம், இனி இந்த பதிவில் சைபர் கொரியாவை பற்றி கொஞ்சம் பார்ப்போம்.

தென்கொரியா ஏற்கனவே இன்டெர்நெட் பயன்பாட்டில் முன்னணியில் இருக்கும் நாடு என்று அறியப்பட்டிருக்கிறது, இப்போது இங்கு 90 சதவீதம் பேர் பிராட்பேண்டு என்று சொல்லப்படும் அகண்ட அலைவரிசை இன்டெர் நெட் வசதியை பெற்றுள்ளனர்.

கொரியாவில் பிராட்பேண்டு வசதி நீக்கமற நிறைந்திருந்தாலும் இதன் கட்டணம் என்னவோ உலகிலேயே மிகவும் குறைவாக இருக்கிறது. உலகம் இன்று மைஸ்பேஸ் பற்றி பேசிக் கொண்டிருக்கிறது. ஆனால் இதற்கு முன்பாகவே கொரியாவில் இவர்களுக்கென்று தனியே ஒரு மைஸ்பேஸ் "சைவேர்ல்டு" எனும் பெயரில் பிரபலமாக இருக்கிறது. இந்த தளத்தில் 43 சதவீதம் பேர் உறுப்பினர்களாக இருக்கின்றனர். அந்த அளவு தென்கொரியா வலைப்பின்னல் தேசமாகவும் இருக்கிறது.

கொரியாவுக்கென்று தனியே ஒரு ஆன்லைன் விளையாட்டு உலகம் இருக்கிறது. "லீனியேஜ்" என்று பெயர். இதன் உறுப்பினர்களோ பிரபலமாக இருக்கும் "வேர்ல்டு ஆப் வார்கிராப்ட்" விளையாட்டு உலகின் உறுப்பினர்களை விட இருமடங்கு அதிகமாகும்.

சரி, இனி சைபர் கொரியாவை பற்றிய விபரங்களை பார்ப்போம், இங்கு படத்தில் உள்ளது ஏதோ "காதலர் தேசம்" போன்ற தமிழ் சினிமாக்களில் வரும் செட்டிங் அல்ல, இது ஒரு நகராச்சிக்கு உட்பட்ட இலவச இணைய பயன்பாட்டு மையம் ஆகும்.நகரத்தில் உள்ள ஒவ்வொரு நகராட்சிக்கும் உட்பட்டு இங்கு இலவச இணையதள மையங்கள் முக்கிய தெருக்களில் இயங்குகிறது.

இலவசம் என்றதும் "ஏனோ தானோ" வாக இருக்கும் என்று நினைத்து உள்ளே போன எனக்கு அடக்க முடியாத ஆச்சரியம்.

அத்தனையும் அதி நவீன கணினிகள் மேலும் அதில் கேமரா, மைக் போன்ற அனைத்து வசதிகளும் உள்ளது, இணையதள வேகமோ வார்த்தைகளில் விவரிக்க முடியாத அளவு உள்ளது, ஒரு முழு திரைபடத்தை எந்த தங்கு தடையும் இல்லாமல் பார்க்க முடிந்தது அதுவும் நம்ம கலாச்சாரத்தின் படி "பாட்டும் பைட்டும் பார்வோர்ட்" பண்ணி பார்க்க முடிகிறது.

இங்கு யார் வேண்டுமானாலும் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அங்குள்ள பதிவேட்டில் பெயரை குறித்து விட்டு பயன் படுத்திக்கொள்ளலாம், மேலும் குறைகளை குறித்து வைக்க அங்கு தனியாக ஒரு பதிவேடு உள்ளது.

நாம் உள்ளே சென்று பெயரை குறித்ததும் அங்கு பணியில் உள்ள இரண்டு அரசாங்க ஊழியர்கள் சிரித்த முகமாக நாம் பயன் படுத்த வேண்டிய கணினி எண்ணை சொல்லுவார்கள், நாம் இருக்கை தெரியாமல் தேடினால், அதில் ஒருவர் அதே சிரித்த முகத்தோடு நம்மை அழைத்து சென்று நம் இருக்கை காட்டுவார்.

(அந்த இடத்தில நிற்கும் போது "மந்திரி வரும் போது மட்டும்" வெள்ளை பொடியில் சுற்றி கோடு போட்ட நம்ம நகராச்சி கட்டிடமும் அதில் பணி புரியும் நம் மக்களின் "சிரித்த முகத்தையும்" ஒரு முறை நினைத்து பார்த்தேன்.)

அலுவலக மற்றும் பள்ளி இடைவேளை நேரங்களில் சிறியவர்களும் பெரியவர்களும் எந்த ஒரு சத்தமும் இல்லாமல் மற்றவர்களுக்கு எந்த இடையூறும் இல்லாமல் இந்த சலுகையை பயன் படுத்தி மகிழ்கிறார்கள்.

இது மட்டும் இல்லாமல், இங்கு கணினி துறை அல்லாத படிப்பு படித்தவர்களுக்கும், முதியவர்களுக்கும், அதிகம் படிக்கதவர்களுக்கும் இலவசமாக கணினி வகுப்புகள் எடுகின்றார்கள் அதுவும் "ஏனோ தானோ" என்று இல்லாமல் முறையாக அடிப்படை கணினி பயன்பாடுகளை கற்று கொடுக்கிறார்கள்.

மின் அஞ்சல் பயன் படுத்துவது, இணையத்தில் வங்கி கணக்குகளை பயன்படுத்துவது, இணையத்தின் மூலம் வீட்டு வரி, மின்சார கட்டணம், தொலை பேசி கட்டணம் கட்டுவது மேலும் இணையத்தில் விமான, ரயில் சீட்டுகளை வாங்குவது போன்று அனைத்து அடிப்படை கணினி பயன் பாட்டினை கற்றுகொடுகிறார்கள், இதன் இறுதியில் விருப்பம் உள்ளவர்களுக்கு தேர்வு வைத்து சான்றிதள் கொடுக்கப்படுகிறது.அந்த சான்றிதளை பயன் படுத்தி அதிகம் படிக்காதவர்கள், வேலை தேடவும் இவர்கள் உதவுகிறார்கள், இதற்காக இவர்கள் எந்த கட்டணமோ "குறிப்பாக லஞ்சமோ" வாங்குவது கிடையாது.

(இவர்கள் சேவை செய்யும் விதத்தை படம் பிடித்து நம்ம ஊரு நகராச்சி, வேலை வாய்ப்பு மற்றும் அரசாங்க அலுவலகர்களை தினம் ஒருமுறை தேசியகீதம் பாடுவது போல பார்க்க சொல்ல வேண்டும் என்று தோன்றியது.)

ஏற்கனவே விமான நிலையம் போன்ற சுற்றுலா தளங்கள் அனைத்தும் இலவசமாக இணையத்தை பயன்படுத்துமாறு திறந்த இணைப்பு வசதிகள் உள்ளன, மேலும் சுற்றுலா பயணிகளை கவர நகரை அழகு படுத்துவது, ஆங்கில வசதியுடன் டாக்ஸி போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது என சுறுசுறுப்பாக ஒவ்வொரு அடியையும் திட்டமிட்டு எடுத்து வைக்கிறார்கள்.
2010 ஆம் ஆண்டின் இறுதியில் இங்கு 100 சதவீதம் மக்களும் இணையத்தை பயன்படுத்த வைப்பது இவர்கள் நோக்கமாக இருக்கும் போல தோன்றுகிறது.

தென்கொரியா இது போல தொழிற்நுட்ப விஷயத்தில் முன்னணியில் இருப்பதோடு குடிமக்கள் இதழியல் என்று சொல்லப்படும் பொதுமக்களே பத்திரிகையாளர்களாக செயல்படும் போக்கிலும் முன்னணியில் இருக்கிறது. இதன் "ஓ மை நியூஸ்" செய்திதளம் இன்று இன்டெர்நெட் உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்படும் குடிமக்கள் இதழியலுக்கு முன்னோடியாக கருதப்படுகிறது.

இன்னும் சொல்ல போனால் சமீபத்தில் இரண்டாயிரம் கோடி செலவில் செய்த ஏவுகணை சோதனை வெற்றியில் முடியவில்லை என்றாலும் தோல்வியை கண்டு துவளாமல் தோல்வியை படிக்கட்டாக்கி மீண்டும் சோதிப்போம் நினைத்ததை சாதிப்போம் என்கிறார்கள்.

இன்று உலகில் டிஜிட்டல் மற்றும் சைபர் தேசம் என்று ஏதாவது ஒன்று இருக்குமாயின் அது தென்கொரியாதான் என்று சொன்னால் அது நிச்சியம் மிகையாகாது.இதை எல்லாம் வைத்து பார்க்கும் போது, வரும் ஆண்டுகளில் இந்திய-புலியும் (தேசிய சின்னம்) சீன-ட்ராகனும் வல்லரசாகும் என்று நாம் வெறும் வாயை மென்று அறிக்கை விட்டுக்கொண்டு இருக்கும் அதே வேளையில், சத்தமில்லாமல் கடின உழைப்பை நம்பி "நேர்மையான தலைமையை தேர்ந்தெடுத்து" அசுர வேகத்தில் தென்கொரியா எல்லா துறைகளிலும் முன்னேறி வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை என்று எனக்கு தோன்றுகிறது.

நூறு வருடங்களுக்கு முன் வெள்ளைகாரனை போல நாம் வளர இன்னும் நூறு வருடங்கள் ஆகும் என்று சொல்லி, அதை மட்டுமே குறியாக கொண்டு இதோ அந்த இடத்தை அடைந்து விட்டோம், அதோ அந்த இடத்தை அடைந்து விட்டோம் என்று மக்களை பாதயாத்திரை கூட்டி செல்லும் தலைமைகள், நம் திருநாட்டின் ஜாதி, மத, கொள்கை உள்பூசல்கள் என்னும் பூச்சை கொண்டு இந்த இடைப்பட்ட நூறு வருடத்தில் மற்ற நாடுகள் நம்மை விட இரநூறு வருடம் முன்னோக்கி ஓடிக்கொண்டு இருப்பதை பூசி மொழுகுகின்றன என்பதுதான் உண்மையோ என்றும் நினைக்க தோன்றுகிறது.

இதை வெறும் நாகரிக வளர்ச்சியை மட்டும் வைத்தோ அல்லது மேல் சொன்ன ஒரு சில துறைகளின் முன்னேற்றத்தை வைத்தோ சொல்வதாய் நினைக்க வேண்டாம், இன்னும் சில துறைகளின் வளர்ச்சியையும் அதில் அரசாங்கத்தின் ஒத்துழைப்பையும் பின்பு ஒரு நேரத்தில் சமயம் கிடைக்கும் போது சொல்கிறேன்.

நன்றி.

22 பின்னூட்டம்:

தேவன் மாயம் said...

நல்ல தகவல்கள்!

கலகலப்ரியா said...

//சொல்கிறேன்//

seri...!

ஈ ரா said...

//இவர்கள் சேவை செய்யும் விதத்தை படம் பிடித்து நம்ம ஊரு நகராச்சி, வேலை வாய்ப்பு மற்றும் அரசாங்க அலுவலகர்களை தினம் ஒருமுறை தேசியகீதம் பாடுவது போல பார்க்க சொல்ல வேண்டும் என்று தோன்றியது.//

அருமையான பதிவு..

இது போன்ற விஷயங்களில் இலவசம் கொடுக்கலாம்..நம்மூரில் கொடுத்து மக்களுக்கு நாலு விவரம் தெரிந்து விட்டால் அரசியல்வாதிகளின் முதலுக்கே மோசம் ஆயிடுமே..அதான் வேற மாதிரி அறிவு பூர்வமான இலவசங்கள் வழங்கப்படுகின்றன.அருமையான பதிவு..

இது போன்ற விஷயங்களில் இலவசம் கொடுக்கலாம்..நம்மூரில் கொடுத்து மக்களுக்கு நாலு விவரம் தெரிந்து விட்டால் அரசியல்வாதிகளின் முதலுக்கே மோசம் ஆயிடுமே..அதான் வேற மாதிரி அறிவு பூர்வமான இலவசங்கள் வழங்கப்படுகின்றன.

சிங்கக்குட்டி said...

நன்றி "தேவன் மாயம்" தேவா.

சிங்கக்குட்டி said...

சொல்லிடுவோம் கவலைய விடுங்க கலகலப்ரியா
:-) நன்றி.

சிங்கக்குட்டி said...

நன்றி ஈ ரா.

எல்லா துறைகளிலும் சராசரி மக்களின் வளர்ச்சியை அரசாங்கம் கருத்தில் கொள்ள வேண்டும்.

Josh said...

Very nice info!!!
south korea ranks first in Brodband speed

May i ask you for a link xchng to my blog

http://firyfriends.blogspot.com

சிங்கக்குட்டி said...

நன்றி ஜோஷ்.

இந்த பதிவின் கீழே "இந்த பதிவுடன் இணை (Create a Link)" என்று என் பதிவுகளை இணைக்க லிங்க் கொடுத்துள்ளேன், நீங்கள் விரும்பினால் இணைத்துகொள்லாம்.

ஜீவன்பென்னி said...

இந்தியா ஒரு பன்முக தேசம். சுய ஒழுக்கம் சார்ந்த விசயங்களில் ஒரு சமுதாயம் முன்னேறும் போது வளர்ச்சியை நோக்கிய வழியினில் நாம் முன்னேறலாம்.

சிங்கக்குட்டி said...

கண்டிப்பாக ஜீவன்பென்னி, உங்கள் கருத்துக்கு நன்றி.

"முன்னேறலாம்" அல்ல முன்னேற வேண்டும் என்பதுதான் என் ஆசை.

ஆனால் அதற்கு தடையாக நமக்குள் நாமே வளர்த்து வைத்து இருக்கும் மொழி, ஜாதி, மத, அரசியல் கொள்கைகளை தூக்கி எறிந்து விட்டு ஒன்று பட வேண்டும் என்பதே இந்த பதிவின் நோக்கம்.

Geetha Achal said...

எவ்வளவு நல்ல நாடு...சூப்பர்ப்...

நாம்ம நாடும் இப்படி எப்பொழுது வருமோ...அல்லது வந்ததாலும் அரசியல்வாதிகள் விட்டுவிவாங்களோ...அப்படியே விட்டுவிட்டாலும் பொது சனங்கள் அதனை நல்ல முறையில் தான் பயன்படுத்துவிடுவாங்களா....

இது எல்லா நடக்குமா என்ன...நம்ம நாட்டில்...100 வருடம் என்ன...எத்தனை வருடமானாலும் நம்முடைய நாட்டில் வாய்பேசிய வருடங்கள் உருண்டேடிவிடும்.

சந்தனமுல்லை said...

அருமையான இடுகை! சூப்பரா இருந்தது...நம்ம நாட்டையும் பத்தி ஒரு கவலை வந்தது!

கிரி said...

//தென்கொரியா ஏற்கனவே இன்டெர்நெட் பயன்பாட்டில் முன்னணியில் இருக்கும் நாடு என்று அறியப்பட்டிருக்கிறது//

ஆமாம் எனக்கு இது பற்றி தெரியும் ..சிங்கப்பூர் ரொம்ப பின் தங்கி உள்ளது அடுத்த வருடத்தில் இதன் வேகத்தை பல மடங்கு கூட்டப்போவதாக கூறி உள்ளார்கள்..

சிங்கக்குட்டி பதிவு கலக்கல்.. இது மாதிரியான பதிவுகளை அதிகம் எதிர்பார்க்கிறேன்..

வெளி நாட்டில் உள்ளவர்கள் அந்த நாட்டின் சிறப்பை ஏன் அதிகம் கூறுவதில்லை என்று தெரியவில்லை? கூறினால் அனைவரும் தெரிந்து கொள்ளலாமே!

நான் எனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கூறி வருகிறேன்

சிங்கக்குட்டி said...

நன்றி கீதா.

முயற்சி செய்தால் கண்டிப்பாய் வானம் வசப்படும் :-)

சிங்கக்குட்டி said...

நன்றி சந்தனமுல்லை

கவலையை விட்டு விட்டு, வரும் தலைமுறைக்கு உங்கள் அனுபவத்தை கற்றுக்கொடுங்கள் :-)

சிங்கக்குட்டி said...

நன்றி கிரி.

என்னால் முடிந்த வரை இன்னும் சொல்கிறேன்.

நான் முதன் முதலில் படித்ததே உங்கள் சிங்கப்பூர் தை பூசம் பதிவுதான் :-)

Mrs.Menagasathia said...

pls see this link

http://sashiga.blogspot.com/2009/11/blog-post_25.html

சிங்கக்குட்டி said...

உங்கள் அன்புக்கும் விருதுக்கும் மிக்க நன்றி மேனகா.

Mohamed Rafeek said...

மிக அருமையான பதிவு சிங்கக்குட்டி, ஒவ்வொரு கருத்தும் இன்றைய நம் நாட்டிற்கு அவசியம் தேவையான கருத்து.

உங்கள் நல்ல பகிர்வுக்கு நன்றி, தொடருந்து இது போல நல்ல கருத்துக்களை உங்கள் பதிவில் எதிர்பார்கிறேன்.

அன்புடன் மலிக்கா said...

மிகவும் நல்ல கருத்துள்ள பதிவு தொடர்ந்து எழுதுங்கள், வாழ்த்துக்கள்....

சுசி said...

அருமையான தகவல்கள்.

நல்லா எழுதி இருக்கீங்க.

சிங்கக்குட்டி said...

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

மும்கமது ரபீக்,
மலிக்கா,
சுசி,

தொடரட்டும் நம் நட்பு...

Post a Comment

 

Blogger Widgets