Thursday, May 7, 2009

அன்னையர் தின வாழ்த்துக்கள்



இந்த உலகில் மதிப்பிட முடியாத ஒரு விஷயம் "அம்மா"
மதிப்பிட முடியாத என் அன்னைக்கு மட்டுமல்ல அன்னையுள்ளம் கொண்ட அனைத்து உள்ளங்களுக்கும் என் "அன்னையர் தின வாழ்த்துக்கள்"



தாய், நம்முடைய பிறப்புக்கு மூலம் அவளே. உலகத்தில் நமக்கு சர்வ நிச்சயமாக தெரிந்தது எது?
தாய், அவள் மட்டுமே......இன்ன தாயின் வயிற்றில் பிறந்தோம் என்பது மட்டுமே நாம் அறிவோம், தாய் காட்டித்தான் தகப்பனை அறிவோம், தகப்பன் கொண்டு போய் உட்காரவைத்து "ஹரி நமத்து சிந்தம்: என்று எழுத சொல்லும்போது தான் நாம் குருவை அறிவோம், அன்பே கடவுள் அறிவே தெய்வம், என்று குரு சொல்லி கொடுத்த பின்னாலேதான் நாம் தெய்வத்தை அறிவோம், அதனலேதான் சுருக்கமாக நான்கு சொற்களைவைத்து "மாதா, பிதா, தெய்வம், குரு" என்று சொன்னார்கள்.

இந்த நான்கினுடைய வரிசையிலே சர்வ நிச்சயமாக நமக்கு தெரிந்த ஒரே உண்மை மாதா, சந்தேகத்துக்கு இடமாக இருப்பது தெய்வம், சர்வ நிச்சயமாகவும், சந்தேகத்துக்கு இடமாகவும் இருப்பது பிதாவும், குருவும் , இந்த இருவர் பற்றி சந்தேகம் எழலாம் இந்த சந்தேகங்கள் உண்மையாகவும் இருக்கலாம், தெய்வம் முழுக்க சந்தேகத்துக்கு இடமானது ஆனால் அடையும் பொது அது முழுக்க உண்மையானது, மாதா, சந்தேகத்துக்கே இடம் இல்லதவள் அவளிடம் இருந்தே நம்முடைய ஜனனம் ஆரம்பம் ஆகின்றது,

அர்த்தமுள்ள இந்து மதம் - கண்ணதாசன்



அன்னையுள்ளம் கொண்ட அனைத்து உள்ளங்களுக்கும் - கவிதைகள், காவியங்கள் நூலிலிருந்து.









அம்மா .
உன்னை உச்சரிக்கும் போதெல்லாம்
எனக்குள்
நேசநதி
அருவியாய் அவதாரமெடுக்கிறது.

மழலைப் பருவத்தின்
விளையாட்டுக் காயங்களுக்காய்
விழிகளில் விளக்கெரித்து
என்
படுக்கைக்குக் காவலிருந்தாய்.

பசி என்னும் வார்த்தை கூட
நான் கேட்டதில்லை
நீ
பசியை உண்டு வாழ்ந்திருக்கிறாய் .

என் புத்தகச் சுமை
முதுகை அழுத்தி அழுதபோது
செருப்பில்லாத பாதங்களேடு
இடுப்பில் என்னை
இரண்டரை மைல் சுமந்திருக்கிறாய்.

அகரம் அறிமுகமான ஆரம்ப நாட்களில்
அன்பின் அகராதியை எனக்கு
அறிமுகப் படுத்தியது
என் தலை கோதிய உன் விரல்களல்லவா ?

எனது சிறு சிறு வெற்றிகளுக்கு
கோப்பைகள் கொடுத்தது
உனது
இதயத் தழுவலும்
பெருமைப் புன்னகையுமல்லவா ?

வேலை தேடும் வேட்டையில்
நகர நெரிசல்களில் கீறல் பட்ட போது
ஆறுதல் கரமானது
உனது ஆறுவரிக் கடிதமல்லவா ?

எனக்கு வேலை கிடைத்தபோது
நான் வெறுமனே மகிழ்ந்தேன்
நீதானே அம்மா
புதிதாய்ப் பிறந்தாய் ?

உனக்கு முதல் சம்பளத்தில்
வாங்கித்தந்த ஒரு புடவையை
விழிகளின் ஈரம் மறைக்க
கண்களில் ஒற்றிக் கொண்டாயே
நினைவிருக்கிறதா ?

இப்போதெல்லாம்
என் கடிதம் காத்து
தொலை பேசியின் ஒலிகாத்து
வாரமிருமுறை
போதிமரப் புத்தனாகிறாய்
வீட்டுத் திண்ணையில்.

எனக்கும்
உன் அருகாமை இல்லாதபோது
காற்றில்லா ஓர் வேற்றுக் கிரகத்துள்
நுழைந்த வெறுமை.

போலியில்லா உன்முகம் பார்த்து
உன் மடியில் தலைசாய்த்து
என் தலை கோதும் விரல்களோடு
வாழத்தான் பிடித்திருக்கிறது எனக்கும்

இந்த
வாழ்க்கை நிர்ப்பந்தங்கள் தான்
வலுக்கட்டாயமாய்
என் சிறகுகளைப் பிடுங்கி
வெள்ளையடிக்கின்றன.


அன்புடன்,
சிங்கக்குட்டி.

1 பின்னூட்டம்:

சிங்கக்குட்டி said...

வாழ்த்துக்கள் நண்பா.

Post a Comment

 

Blogger Widgets