Saturday, May 23, 2009

நான் ரசித்து படித்த குட்டிக்கதைகள்

ஒரு சர்கஸ் குழுவிடம் சிக்கி கூண்டில் அடைபட்டுக் கிடந்த அந்த சிங்கத்துக்கு தினமும் சாப்பிட ஒரு கிலோ கரி மட்டுமே கொடுத்தார்கள். கட்டில் சுதந்திரமாக சுற்றி திரிந்து மான்களை கணக்கில்லாமல் வேட்டையாடித்திரிந்த நாட்கள் அதன் நினைவுகளில் வந்து ஏக்கத்தைக் கூட்டியது. அந்த நாட்கள் திரும்பவும் வராதா என்று இறைவனை அது வேண்டியது.

ஒரு நாள் அமெரிக்காவிலிருந்து வந்த மிருகைக்கட்சிசாலை உரிமையாளார் அதை விலைக்கு வாங்கினார். சிங்கம் கப்பலில் ஏற்றப்பட்டு அமரிக்காவுக்கு பயணமானது. தனது பிரார்த்தனைகள் பலித்து விட்டதாக சந்தோசப்பட்டது அது. தனக்கு ஏ.சி அறை கொடுத்து, தினமும் ஒன்றிரண்டு ஆடுகளையாவது சாப்பிட கொடுப்பார்கள் என்று நாக்கை சப்பு கொடிக்கொண்டது.



அமரிக்காவில் சென்று இறங்கிய முதல் நாள் காலையில் அதற்கு அழகாக பேக் செய்யப்பட்ட ஒரு பார்சலில் டிபன் கொடுத்தார்கள். ஆசையோடு அதை பிரித்த சிங்கம், உள்ளே வாழைப்பழங்கள் மட்டுமே இருபத்தை பார்த்து ஏமாந்து போனது. நாடு விட்டு நாடு மாறி வந்திருக்கும் நேரத்தில், கறி கொடுத்தால் வயிறு கெட்டுவிடும் என்ற கவலையில் தருகிறார்கள் என நினைத்தது அது.

ஆனால் அடுத்த நாளும் வாழைப்பழம்தான் கொடுத்தார்கள். மூன்றாவது நாள் பார்சல் கொண்டு வந்து கொடுத்தவனை கொஞ்சம் நிற்கச் சொல்லிவிட்டு பிரித்துப்பார்த்தது. அன்றும் அதே! பார்சல் கொடுத்த ஆசாமியை கோபத்தோடு ஓங்கி அறைந்துவிட்டு, நான் யார் தெரியுமா? காட்டுக்கே ராஜாவான சிங்கம், எத்தனை விலங்குகளை வேட்டையாடி சாப்பிடுவேன் தெரியுமா? கேவலம் எனக்கு வாழைப்பழம் தருகிறீர்கள். என்ன ஆச்சு உங்கள் நிர்வாகத்துக்கு! என்று சத்தம் போட்டது.

பார்சல் கொடுத்தவன் பணிவாக சொன்னான் ...ஐயா ! தாங்கள் சிங்கம் என்பது எனக்கு தெரியும் ஆனால் நீங்கள் இங்கு வந்திருப்பது குரங்கின் விசாவில் அதனால் குரங்குக்கான உணவைத்தான் உங்களுக்கு தரமுடியும்!.

கருத்து:-

தெரியாத இடத்தில் டீம் மெம்பராக அவதிப்படுவதைவிட சொந்த மண்ணில் "பி.எம்"மாக இருப்பது நல்லது-ன்னு சொல்லுவேன்னு நினைக்க கூடாது. தெரியாத இடத்தில் குரங்கு மாதிரி அவதிப்படுவதைவிட, சொந்த மண்ணில் சிங்கமாக இருப்பது நல்லது.


-----------------------------
அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து
-----------------------------

ஊருக்கு ஒதுக்குப் புறமாக ஒரு கொடிய விஷமுள்ள பாம்பு வாழ்ந்து வந்தது. ஊர் மக்கள் யாராவது அதன் புற்றின் பக்கம் போனால் சீறி வந்து கொத்தி விடும். பாம்புப் புற்று இருந்த பாதை அந்த ஊருக்கும் பக்கத்து சந்தைக்கும் குறுக்கு வழி. பாம்புக்கு பயந்தே ஊர் மக்கள் பல தொலைவு சுற்றி அந்த சந்தைக்குப் போய் வந்து கொண்டிருந்தார்கள். வேறு வழியில்லாததால் சலிப்புடனேயே வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தனர்.



ஒரு நாள் அந்த ஊருக்கு ஒரு யோகி வந்தார். அவர் மிருகங்களிடம் பேசக் கூடிய வரம் பெற்றவர். ஊர் மக்கள் தங்கள் குறையை அவரிடம் முறையிட்டனர். அவர் பாம்பிடம் பேசி அதற்கு ஊர் மக்களை கடிக்கக் கூடாது என்று கட்டளை இட்டு விட்டு பக்கத்து ஊருக்குச் சென்று விட்டார். பாம்பும் அவர் கட்டளைக்குக் கட்டுப் பட்டு நடந்தது.

ஆனால் ஊர் மக்கள் சும்மாயில்லை. வழியே போகும் சிறுவனுக்குக் கூட பாம்பிடம் இருந்த பயம் போய் விட்டது. பாம்பைக் கண்டால் அதைக் கல்லால் அடிப்பது, துன்புறுத்துவது, விரட்டியடிப்பது என்று அதன் வாழ்க்கையை நிம்மதியில்லாமல் செய்து கொண்டிருந்தனர். உடம்பில் பல காயங்களுடன் குற்றுயிரும் குலையுயிருமாகி விட்டது பாம்பு.

யோகி ஒரு நாள் பாம்புப் புற்று இருந்த வழியாக ஊருக்குள் திரும்ப வரும் போது பாம்பின் பரிதாபமான நிலையைக் கண்டு அதனை விசாரித்தார். பாம்பும் நடந்த கதையையெல்லாம் கூறி அழுதது.

யோகி பாம்பைப் பார்த்து "அட முட்டாள் பாம்பே! உன்னை மக்களைக் கடிக்கவேண்டாம் என்றுதானே கூறிச் சென்றேன். பக்கத்தில் வருபவனைப் பார்த்து சீறாதே என்று ஒரு போதும் சொல்லவில்லையே" என்று கேட்டார். இதற்குப் பின் பாம்பும் பிழைத்துக் கொண்டது.

-----------------------------
உலகத்திற்கு உப்பாய் இரு
-----------------------------

ஒரு காலத்தில் இந்திரத்யும்னன் என்று ஒரு மாமன்னன் இருந்தான். அவன் ஆட்சி காலத்தில் மக்கள் போற்றும் வண்ணம் தான தர்மங்கள் செய்து, சிறப்பாக அரசாண்டு, நேரே சொர்க்கத்திற்குப் போனான். சொர்க்கபுரியின் இன்பத்தில் திளைத்துக் கொண்டிருந்த அவனை ஒரு நாள் சொர்க்கத்தின் 'தலை' கூப்பிடுவதாக தேவதூதன் வந்து சொன்னான். மன்னன் சென்று என்னவென்று கேட்ட போது 'உனக்கு சொர்க்க வாசம் முடிந்து விட்டது. பூலோகத்திற்கு நாளை கிளம்பத் தயாரக இரு' என்று கட்டளை போட்டது 'தலை'. ஏனென்று மன்னன் கேட்டான். 'நீ செய்த நல்ல காரியங்களை நினைவில் வைத்திருக்க யாருமே இனிமேல் பூலோகத்தில் உயிருடன் இல்லை. இன்றுடன் அந்த கணக்குத் தீர்ந்து விடும். ஆகவே கிளம்பும் வழியைப் பார்' என்று பதில் வந்தது. 'இதற்குத் தீர்வே இல்லையா?' என்று மன்னன் முறையிட்டான். 'தலை' முகவாயைச் சொறிந்து கொண்டு யோசித்தது. பிறகு 'மன்னா, நீ கீழே போய் உனது நற்காரியங்களால் இன்னும் பலன் பெறும் ஒரு ஜீவனையாவது கண்டு பிடித்தால் உனக்கு சொர்க்கம் நீடிக்கப் படும்' என்று சொன்னது.



மன்னனும் கிளம்பிப் பூலோகம் வந்தான். பல நூறு ஆண்டுகள் கடந்து விட்டிருந்தன. அவன் வாழ்ந்த இடமே தலை கீழாக மாறிப் போயிருந்தது. மக்களில் யாரையும் அவனால் அடையாளம் கண்டு பிடிக்க முடியவில்லை. மனதைத் தேற்றி நம்பிக்கையை ஏற்றிக் கொண்டு விடாமுயற்சியாகத் தேடி, இருப்பதிலேயே வயதான ஒரு மனிதரை சந்தித்தான். அவரிடம் 'ஐயா! உமக்கு இந்திரத்யும்னன் என்று இந்தப் பகுதியை அரசாண்ட மன்னனைப் பற்றித் தெரியுமா?' என்று ஆர்வத்துடனும் மிகுந்த எதிர்பார்ப்புடனும் கேட்டான். வயோதிகர் இடுங்கிய கண்களால் அவனை மேலும் கீழும் பார்த்து விட்டு உதட்டைப் பிதுக்கி விட்டார். 'வேண்டுமானால் என்னை விட வயதான ஆந்தை ஒன்று பக்கத்து மரப் பொந்தில் தூங்கிக் கொண்டிருக்கிறது. இரவில் அது விழித்த பின் அதனிடம் போய்க் கேள்' என்று சொல்லி விட்டார்.

வேறு வழியில்லாமல் இரவு வரை கோவில் நிழலில் உட்கார்ந்திருந்து விட்டு இரவு ஆந்தையைப் பார்த்தான். தலையை முதுகுப் பக்கம் வைத்து ஒரு இரையைக் குறி வைத்துக் கொண்டிருந்த ஆந்தையிடம் இந்திரத்யும்னனைப் பற்றிக் கேட்டான். இரையைத் தப்ப விட்ட எரிச்சலில் ஆந்தை 'எனக்குத் தெரியாது. இங்கே ஒரு கிழட்டு நாரை தினமும் காலைப் பொழுதில் திரியும். வேண்டுமானால் அதைக் கண்டு பிடித்துக் கேள்' என்று சொல்லி விட்டுத் தன் வேலையைப் பார்க்கப் போய் விட்டது.

காலையில் அலைந்து திரிந்து நாரையைக் கண்டு பிடித்தான். அதனிடம் கேட்டபோது. 'எனக்கு நினைவில்லை. ஆனால் பக்கத்து ஏரியில் ஒரு ஆமை கிடக்கிறது. அதற்கு நினைவிருக்க வாய்ப்பிருக்கிறது' என்று நம்பிக்கையை வளர்த்தி விட்டது.

மன்னன் ஏரியைத் தேடி ஓடினான். அங்கே வயதான ஆமையைப் பார்த்தான். தள்ளாத வயதில் சிரமப் பட்டுக் கொண்டிருந்தது அந்த ஆமை. நம் மன்னன் அதனிடம் இந்திரத்யும்னனைப் பற்றிக் கேட்டான். ஆமை உடனே 'ஆமாம். அவனால்தான் இந்த ஏரியும் இருக்கிறது, அதில் இருக்கும் உயிரினங்களும் நன்றியுடன் உயிர் வாழ்கின்றன' என்று சொன்னது. அப்போது மன்னன் 'நானேதான் அந்த இந்திரத்யும்னன்! எனக்கு இந்த ஏரியை ஏற்படுத்தியதாக நினைவில்லையே. நீ ஏதோ தப்பாகச் சொல்கிறாய்' என்று நம்பிக்கை இழந்து போய் ஆமையிடம் சொன்னான்.
ஆமையும் 'கதை அப்படியில்லையப்பா! நீ அரசாண்ட போது மக்களுக்குத் தினமும் ஏராளமான பசுக்களைத் தானமாக வழங்கினாய். மக்கள் அவற்றையெல்லாம் இந்தப் பகுதியிலுள்ள புல் தரையில் மேய விட்டார்கள். மாடுகள் தினமும் அலைந்து திரிந்து தன் குளம்புகளால் மண்ணைக் கிளப்பி விட்டதால் இந்தப் பகுதி நாளடைவில் பள்ளமாகப் போய் விட்டது. மழை பெய்து நீர் பிடித்ததால் ஏரியாக மாறிவிட்டது. இந்தப் பகுதியின் செழிப்பிற்கே இந்த ஏரிதான் காரணம் என்றும் ஆகி விட்டது. அதைக் கேட்டுத்தான் நான் இங்கே குடியேறினேன். இத்தனை நாள் நன்றியுடன் வாழ்ந்திருக்கிறேன். இன்னமும் பல உயிரினங்களும் வாழ்கின்றன. வாழப் போகின்றன' என்றது.

தூரத்தில் சொர்க்கபுரியில் இருந்து மன்னனைக் கூட்டிப் போக விமானம் வருவது மன்னனுக்குத் தெரிந்தது.

-----------------------------

0 பின்னூட்டம்:

Post a Comment

 

Blogger Widgets