Wednesday, October 14, 2009

ஃபாரின் கால்

இனிய தீபாவாளி நல்வாழ்த்துக்களுடன் தொடங்கினாலும், வெளிநாட்டு மோகத்தில் கனவுகளுடன் வாழும் மற்றும் படிக்கும், என் இந்திய சகோதர சகோதரிகளுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்.

மேலும் நாம் நாகரீகமாக நினைக்கும் ஆங்கில தமிழ் எழுத்துக்களுக்கு மன்னிக்கவும்.


வெளியில் குளிர் மைனஸ் பத்து டிகிரி செல்சியஸ்-ல் பனி கொட்டிக்கொண்டு இருப்பதால், இன்று இரவு சரக்கோடு வீட்டுக்கு போ என்று ஐந்து மணிக்கே உள்மனது ஆசையை தூண்டியது.

சரி, சரக்க போடுவோம்ன்னு வாங்க போன போது, கடையில் காலிங் கார்டு கண்ணில் பட, சரி, வீட்டுக்கும் ஒரு போன போடுவோம்ன்னு வழக்கம் போல வாங்குறது எல்லாம் வாங்கிகிட்டு, வீட்டுக்கு போய் போன் பண்ணி பேசி முடிக்கப் போகும் போது, அம்மா சொன்னாள்.

டேய், நம்ம ரமேஷ் வந்துட்டு போனான்டா, நீ எப்ப ஊருக்கு வருவான்னு கேட்டான்? நீ கூட போனே பண்ணுறது இல்லையாமே?!, சின்ன வயசு படிப்போட கிராமத்துல வீடு விவசாயம்னு தங்கிட்டதால! எங்கள எல்லாம் மறந்துட்டானா-ன்னு கேட்டான்?

அப்படி இல்லப்பா, ஏதாவது வேலை பிசியா இருக்கும்ன்னு சொன்னேன், கண்டிப்பா உனக்கு போன் பண்ண சொல்லுறேன்னு சொன்னேன், மறக்காம அவனுக்கு பேசிடுப்பான்னு சொல்லிவிட்டு வைத்தாள்.

சரி, நம்ம மாப்ளதான, சரக்க போட்டுகிட்டே பேசுவோம்ன்னு, ஒரு பெக்க ஊத்திகிட்டே அவனுக்கு போன போட்டேன், தம்மடிக்க ஜன்னலை லேசாக திறந்த போது ஸ்காட்ச்சையும் தாண்டி குளிரியது.

டிங் டிங் டிங் ..."காதல் இருந்தால் சொல்லி அனுப்பு உயிரோடு இருந்தால் வருகிறேன்" என்ற பாடல் அடுத்த வரி போகும் முன் போனை எடுத்துவிட்டான்,

போனை எடுத்துவிட்டு, பக்கத்தில் யாருடனோ பேசினான் "ஏ செத்த சும்மா இருள, பாரின் காலு"

ஹெலோ...யாரு...ஏஏ அந்த மோட்டார அணைங்கப்பா டப டபன்னு ...

கடைசியாக எனக்கு பேச நேரம் கிடைக்க, என்ன மாப்ள வேலையா இருக்கியா? என்றேன் நான்?

திரும்ப எனக்கு பதில் சொல்லும் முன், பக்கத்தில் பேசிக்கொண்டான், அட பார்ரா மாப்ள பாரின்ல இருந்து பேசுறான்?

என்னடா!, இப்பதான் எங்க நியாபகம் வந்ததா? ஜப்பான் எப்படி இருக்கு? என்றான்.



ஜப்பான் அங்கேயே தான் இருக்கும், ஆனா நான் இப்ப கொரியாவுல இருக்கேன்டா தெரியாதா உனக்கு? என்றேன்.

ஓ...அப்படியா, உனெக்கென்ன மாப்ள!, நாடு நாடா சுத்துவ, நமக்கு இந்த வயலும் தென்னந்தோப்பும் விட்டா ஒன்னும் தெரியாது...சரி கொரியா எப்படி இருக்கு?

சூப்பரா...இருக்கு மச்சி, இங்க ரோடு எல்லாம் அவ்வளவு சுத்தம், பெருசு, ஒரே நேரத்துல பத்து பஸ் போகலாம்? கட்டடம் எல்லாம் அவ்வளவு பெருசு...

அப்படியா!, அதெல்லாம் சரி, ஏண்டா ஒரு போன் கூட பண்ணல? எங்கள எல்லாம் மறந்துட்டியா?

இப்ப நாங்க எங்க இருக்கோம் தெரியுமா? நம்ம துர்கா தோப்புலடா சரக்கடிக்க வந்தோம்,

"உன்னோட பேவரிட் துர்கா" இளநீ வெட்ட போயிருக்கு, அப்புறம் நம்ம செந்தில் வீட்டுல கோழி வேகுது, அதான் எல்லாம் இங்க வந்து நம்ம கேப்டனோட பட்டறைய போட்டோம்.

எல்லாம்னா? பசங்க கூட இருக்கானுகளா? ஆமா துர்கா எப்படி இருக்கா என்றேன்?

ஆமாடா, நானு, நம்ம செந்திலு, கோபி, பாலாஜி எல்லாம் இங்கதான் இருக்கோம் ஸ்பீக்கர்ல போடுறேன் பேசு.... துர்காவுக்கு என்னடா எப்பவும் போல கல கல-ன்னு இருக்கு ....

என்று அவன் பேசிக்கொண்டே இருக்கும் போதே, என் மனம் துர்காவை நினைத்தது.

பதிவுல டார்டாய்ஸ் எல்லாம் சுத்த முடியாததுனால, பிளாஷ்பேக் எல்லாம் வேற கலர் எழுத்து ஓகே (சரி,சரி முறைகாதிங்கப்பா).

சின்ன வயதில் அம்மா தவறியதால், அப்பாவோடு தோப்பு வீட்டில் இருந்தாள் அப்படி ஒரு அழகு, நிறம், நீளமான முடி என்று சாமுத்திரிகா லச்சனதுடன் இருப்பவள், நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள்.

அவள் அப்பாவும் நல்ல குணம் ராணுவத்தில் இருந்தவர், எங்களை அவர் பிள்ளைகளாகவே நினைப்பார், நாங்கள் அவருக்கு வைத்த செல்ல பேர் "கேப்டன்" எங்களோடு இருக்கும் போது துர்காவும் அவரை கேப்டன் என்று எங்களை போலவே கூப்பிடுவாள்.

சிறு வயது முதல் நாங்கள் நல்ல நண்பர்கள் என்பதால், எங்களுக்கு அவர் தோப்பில் முழு சுதந்திரம், ஒரு கால கட்டத்திற்கு பிறகு எங்களை வளர்ந்த பிள்ளைகளாக, ஒரு மூத்த நண்பன் போல நடத்தினார் (சரக்கு அவரோடது, சைடிஷ் எங்களோடது, மிக்ஸ்சிங் இளநீர் உபயம் துர்கா)

எனக்கு பிடித்த நெருங்கிய நண்பன் என்ற முறையில், நானும் கட்டுனா துர்கா மாதிரி ஒரு நல்ல பொண்ணைதான் கட்டுவேன் என்றும், அவள் உன்னைபோல ஒருத்தனை (ஒரு குடிகாரனை என்பது இங்கு சைலென்ட்) கட்ட சொன்னா அதுக்கு நான் அந்த கிணத்துல போய் குதிச்சுருவேன்னு (அவள் என்னைவிட நன்றாக நீந்துவாள்) சொல்லி ஒருவரை ஒருவர் காலை வாரி கேலி செய்வோம்.

அதை விட அவுங்கப்பா, எதுக்குடா? நம்ம எல்லோரும் சரக்கடிக்கும் போது, இப்படி முட்டை பொரியல் பண்ணிகொடுக்கவா? என்று நண்பர்களுடன் சேர்ந்து மேலும் என் காலை வாருவார்கள்.


ஹலோ...ஹலோ டேய் மாப்ஸ்?? என்ற குரல் என்னை நினைவிற்கு கொண்டு வர...
(சுத்துன டார்டாய்ஸ்ச நிறுதிக்குவோம்).

சொல்லுடா என்றேன் நான்.

என்னடா? லைன் கட் ஆகிடுச்சுன்னு நினைத்தேன் என்றான்!, உன் பேவரிட் வருது கொடுக்கவா? என்று அவன் சொல்லும் போதே, அவள் பேசுவது எனக்கு கேட்டது.

இன்னும் பேவரிட் என்ன பேவரிட், இங்கிட்டு கொடு அந்த போன என்று வாங்கியவள். என்னடா மாப்ள! எப்படி இருக்க என்றாள்?

எனக்கென்ன உங்களை எல்லாம் விட்டு தள்ளி இருக்கிறத தவிர நல்லா இருக்கேன், என்ன அப்படி சொல்லிட்ட, நீ எப்பவும் என் பேவரிட்தான-ன்னு சொன்னேன்.

டேய்...டேய் மச்சா...போதும்டா, கடைசி வரை வெறும் வாய் பேச்சோட சொல்லிட்டு, என்ன வச்சு சமாளிக்க முடியாதுன்னு பயந்துதான இன்னொருத்திய கட்டிகிட்ட, உனக்கு எம் புருஷன் எவ்வளவோ தேவலாம்டா என்றாள்?

(அப்போது தான் அவள் மாமா மகனை பேசி முடித்தாக பத்திரிகை வைத்ததை, என் அப்பா சொல்லியது நினைவில் வந்தது? விடுமுறைக்கு ஊருக்கு வரும் போது எல்லாம் அவனும் எங்கள் நண்பன்தான், துர்காவை போலவே விவசாய படிப்பில் ஆர்வம் கொண்டு பட்ட படிப்பை முடித்தவன்.)

எப்படி இருக்கா? என் தொங்கச்சி, உன்ன நல்லா பாத்துகிறாளா! அப்புறம் நீ போட்ட குட்டி, எம்மக எப்படி இருக்கா?, உம்மேல உச்சா அடிக்கிராளா இல்லையா? என் கல்யாணத்துக்கு கூட வராத உன் கூட பேச கூடாதுன்னு தான் இருந்தேன், என்று வழக்கம் போல மழை அடிப்பதை போல் பேசினாள்.

அப்படி இல்ல துர்கா, இங்க என்னோட ப்ராஜெக்ட் நிலை ரொம்ப மோசமா இருக்கு, அதான் ரெண்டு வருசமாகியும் ஊருக்கு வரமுடியல என்றேன்...வழக்கம் போல அவள் கொஞ்சம் கூட யோசிக்காமல் சொன்னாள்

பார்ரா! வாடி போடின்னு கலாய்ப்பான், இப்ப பேர சொல்லறான்? கல்யாணம் ஆனா உடன் நம்ம மாப்ளைக்கு அந்த பொறுப்பு வந்துருச்சு பாரு! என்று சிரித்துக்கொண்டே சொன்னவள்,
சரி சரி, அடுப்பை பார்க்கனும் வந்து பேசுறேன், நீ பசங்ககிட்ட பேசு, மச்சி என் வீட்டுகாரரும் இருக்கார்டா அவர்கிட்டையும் ரெண்டு வார்த்தை பேசு என்று, என் பதிலை எதிர்பார்க்காமல், போனை கொடுத்துவிட்டு போனாள்.

சொல்றா என்று போனை வாங்கிய நண்பன், ஆமா அங்க வெயில் எல்லாம் எப்படி இருக்கு என்றான்?

வெயிலா? டேய் இங்க ஐஸ் கொட்டுதுடா, ஊரே வெறும் ஐஸா கிடக்கு என்றேன்

அப்படியா மாப்ள, அப்ப சரக்கடிக்க ஐச தேடவேண்டி இருக்காது என்றான் சிரித்துக்கொண்டே.

இல்லடா, இந்த ஐஸ சாப்பிட முடியாது, ரோட்ட விட்டு ஓரமா ஒதிக்கி விட்டுடுவாங்க என்றேன் நான்.

என்னா...மாப்ள நீ, பெரியரோடு, உயரமான கட்டிடம், ரோடெல்லாம் ஐஸ்ன்னு எதுவுமே நமக்கு எந்த பிரயோஜனமும் இல்லாத விசையமா சொல்ற?

"ஊட்டில டி எஸ்டேட் இருக்கு நமக்கு இருக்கான்னு" கவுண்டமணி சொன்ன மாதிரி அவன் கேட்ட நியாமான கேள்விக்கு விடை தெரியாமல், அப்படி இங்க இல்லைனா ஊர்ல சொந்தமா வீட்ட வாங்க முடியுமான்னு சொல்லி சமாளிச்சேன்.

ஆ, மாப்ள வீடுன்னவுடன் நியாபகம் வந்தது, மேட்டருக்கு போவோம் எதுக்கு கூப்பிட சொன்னேன்னா?

(அடப்பாவி சிங்கக்குட்டி, அப்ப இன்னும் மேட்டரையே தொடாம மொக்கைய போட்டுக்கிட்டு இருக்கியான்னு?! நீங்க கேக்குற வருத்தத்துல, தங்கமணி முறைக்கிறத பாக்காத மாதிரி இரண்டாவது பெக்க ஊத்திகிட்டேன் :-)

நம்ம துர்கா தோப்புக்கு ஒட்டி இருக்கிற மாந்தோப்ப விலை பேசி இருக்கேன், இருபது ஏக்கர் எல்லாம் நல்ல ஜாதி மரம், நானு, துர்கா அப்புறம் நம்ம பாலாஜியும் வாங்க பாத்தோம், ஆனா அவன் மொத்தமா இருபதையும் தான் தர முடியும்னு சொல்றான், அதான் நீயும் சேந்தா முடிசிரலாம்னு துர்கா சொல்லுச்சு.

என்ன நீ ஒரு பத்து இல்ல பதினஞ்சு போட்டா போதும், அதான் கேக்கலாம்னு வீட்டுக்கு போனேன் என்றான்.

எந்த வங்கியில் எந்தனை வட்டி என்று கூகுளில் பார்க்க வேண்டும் என்று நினைத்து கொண்டே சொன்னேன், நான் லோன்தான் போடணும் மாப்ள என்றேன்.



ஐய்யய்யோ, அந்த இழவே வேணாம் மாப்ள! ஒத்த ரூபாய்க்கு ஒன்பது ரூபா வட்டி பிடிங்குவான், ஏண்டா? உன் கைல இல்லயா?-ன்னான்.

இல்ல, மாப்ள இப்ப தான் அமெரிக்காவுல பேங்க் எல்லாம் மூடி பொருளாதாரம் ரொம்ப பாதிச்சு இருக்கு, வேலையே பிரச்சனையா இருக்கு என்றேன்.

அட பாவி! உனக்குமா? ஒரு விசையம் தெரியுமா? இந்த தோப்பே, நம்ம குமார் போன தடவ லண்டன்ல இருந்து வந்தப்ப வாங்க ஆசைப்பட்டு முன் பணம் கொடுத்துட்டு போனதுதான்.

ஆனா, போன அதே வேகத்துல, எனக்கு போன போட்டு, எதோ வியாபார கட்டிடத்த இடிச்சுட்டாங்க (அதாண்டா பின்லேடன் ஆளுங்க), அதுனால எனக்கு வேலை போச்சு, இனி லோனும் கிடைக்காது அதுனால முன் பணத்த எப்படியாவது திருப்பி வாங்கி கொடுத்தாலே போதும்டான்னு சொன்னான்.

தோப்புகாரன் என்னடானா, பொண்ணு கல்யாணம் இருக்குன்னு பணத்த திருப்பி தர யோசிக்க, நாங்கதான் அந்த தோப்ப குத்தகைக்கு எடுத்துகிட்டு, நம்ம குமாருக்கு பணத்த கொடுத்தோம்.

நான் கூட குமார் சொன்னப்ப, அந்த கட்டடத்துலதான் மாப்ளயோட ஆபிஸ் இருக்கு போல, அத திரும்ப கட்டி முடிகிறவரைக்கும் வேலைக்கு என்னடா பண்ணுவேன்னு கேட்டா...?

அப்ப தான் தெரிஞ்சது, அதுவும் அமெரிக்காவுலதான் இடிஞ்தாமே?!.

ஆனா, எனக்கு ஒன்னு மட்டும் புரியல மாப்ள?

அமெரிக்காவுல கட்டடம் இடிஞ்சா, லண்டன்ல அவன் வேலை போச்சுன்னு அழுகிறான், அமெரிக்காவுல பேங்க்க மூடினா, கொரியாவுல நீ வேலை பிரச்னைன்னு பொலம்புற!

அது ஏண்டா மாப்ஸ், அமெரிக்காவுல எது நடந்தாலும், நம்ம ஊருகாரனுகள இப்படி தள்ளாட வைக்கிது? ஆனா, அவிங்க எல்லாம் எப்பவும் போல நல்லா வசதியாத்தான இருக்கானுக?!.



ஏகாதிபத்திய நாடுகளின் உலக பொருளாதார அரசியல் விளையாட்டை, இப்படி ஈசியாக கேட்பான்! என்று கொஞ்சமும் எதிபார்காத நான், மூன்றாவது பெக்கை எடுக்க.

கிச்சனில் இருந்து எட்டி பார்த்த படி என் தங்கமணி, இதோட உங்க வின்டர் கோட்டா மூணு முடிஞ்சது போதுங்க!, இல்லைனா இன்னிக்கு நீங்க சிஸ்டம் ரூம்லதான் என்றாள்.

போனில் என் பதில் இல்லாததால், மீண்டும் அவனே தொடர்ந்தான்.

அது என்னமோ மாப்ள, நமக்கெல்லாம் அமெரிக்காவுல இல்ல, இங்க நம்ம ஊர்லையே ஹைவேஸ் ரோடு போட, அரசாங்கம் நம்ம வீட்ட விலைக்கு எடுத்து, குடியிருக்க வீட்ட இடிச்சப்ப கூட, களத்து மேட்டுல நம்ம வேலை கருது அறுப்பு நிக்காம ஓடுச்சு.

அதுல வந்த காசையும், கையிருப்பையும் போட்டு தோட்டத்துல மாடியோட வீட்ட கட்டி, நாம பழைய அம்பாசிட்டர் காரை மாத்தி இப்பத்தான் புதுசா டாட்டா சபாரி எடுத்தேன், அதான் கொஞ்சம் பணமுடை, இல்லைனா நானே மிச்சத்தையும் ரெடி பண்ணி இருப்பேன் என்றான்.

எனக்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை.

ஆனால் நாகரீக போர்வை, முகமூடி இல்லை என்றாலும், நம் சொந்த நாட்டில் வெளிநாட்டை விட அதிக வசதியுடன், மிகமுக்கியமாக நம் பாரம்பரிய சந்தோசத்துடன் வாழ வழி இருக்கிறது என்பது மட்டும் தெளிவாக புரிந்தது.



என் மவுனம் அவனுக்கு புரிந்து இருக்க வேண்டும்.

சரி, மாப்ள உடம்ப பாத்துக்க, ரொம்ப நேரமாச்சு, இத இங்க பாத்துக்கலாம், நம்ம இன்னொரு நாள் பேசுவோம் வேற யார் கிட்டையாவது பேசுறியா என்றான்?

பேச எதுவும் இல்லாமல், இருக்கட்டும் இன்னொரு நாள் பேசுவோன்னு சொல்லி போனை வைத்து விட்டு, திறந்த என் ஜன்னலுக்கு வெளியில் வெறித்து பார்த்தேன், பனிமழையில் என் முக பிம்பம் என்னை பார்த்து சிரித்துகொண்டே கேட்டது.

எல்லோரும், எல்லாம் இருக்கும் இடத்தை விட்டு விட்டு வந்து, இங்கு யாருமே, எதுவுமே இல்லாத இடத்தில் இயந்திரமாய் எதை தேடுகிறாய் என்று?

தேடுவதாய் நினைத்து வந்து, பாரின் வாழ்க்கை என்ற போர்வைக்குள் ஒளிந்து கொண்டு, நிஜ வாழ்கையை தொலைத்துக்கொண்டு இருக்கிறோமோ? என்ற சிந்தனையில் மெய் மறந்து இருந்த என்னை....

என் கணினி மேஜையில் இருந்து வந்த இனிய பெண் குரலில் பேசும் கடிகாரம் நினைவிற்கு கொண்டு வந்தது.

Good evening honey...are you sure still your evening is young?

It’s time to go to bed and you have scheduled server allocation meeting tomorrow morning 09.15 AM....also tomorrow is first of the month, so you have scheduled regular online transactions to India for Housing Loan Due, Marriage Lone Due, LIC Due.... Lets go to sleep early dear...Good Night.

24 பின்னூட்டம்:

இந்தியா உணவு said...

I don't know what to say, but you bring back my Indian life in front of my eyes. Nothing else to say excerpt just Cheers :-)

blogpaandi said...

அருமையான பதிவு.

சிங்கக்குட்டி said...

தொடர்ந்து என் பதிவில் உங்கள் ஊக்கத்துக்கு வெறும் நன்றி போதாது என்பதை நான் அறிந்தாலும், மீண்டும் ஒருமுறை உங்களுக்கு நன்றி இந்தியஉணவு கணேஷ்.

உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ப்ளாக்பாண்டி.

ஸ்வர்ணரேக்கா said...

100 க்கு 100 உண்மைங்க...

Menaga Sathia said...

சிங்கக்குட்டி இந்த பதிவை நான் பொருமையா படித்து பதிவு போடுறேன்.நேரம் சரிய இருக்கு ப்ரதர் அதான்.

Anonymous said...

நீங்கள் சொல்வது ரொம்ப சரி..சொந்த நாட்டை விட்டு வெளி நாட்டிற்கு வந்து..இப்பொழுது இங்கையும் இருக்க முடியாமல் அங்கயும் போக முடியாமல் தவித்து கொண்டு இருக்கிறோம்..ஆனால் இன்னும் வெளிநாட்டு மோகம் நம் நாட்டில் தீர்ந்ததாக தெரியவில்லை..பசுமையாக இருந்தது இந்த பதிவு ..உங்களின் மின்னஞ்சல் முகவரி தெரியவில்லையே ..

ப்ரியமுடன் வசந்த் said...

இதுவும் கடந்து போகும்ன்னு தான் தோணுதுப்பா...

என்ன செய்றது பணம்தானே முக்கியமாயிடுச்சு...

யாசவி said...

சிங்கம்

பின்னிட்டீங்க

ரொம்ப டச்சிங்கா இருந்தது.

:)

சிங்கக்குட்டி said...

நன்றி ஸ்வர்ணரேக்கா,

நீண்ட இடைவெளிக்கு பிறகு என் பக்கத்தில் "பூசலாம்பூ" பூத்ததில் மிக்க மகிழ்சி.

_______________________________________


நன்றி மேனகா,

நேரம் கிடைக்கும் போது படியுங்கள், பிடித்தால் பின்னூட்டம் போடுங்கள் :-).

_______________________________________

நன்றி அம்மு.

உங்கள் பக்கதில் உங்கள் மின்அஞ்சல் முகவரி இருந்ததால், விரைவில் உங்களுக்கு ஒரு மின்அஞ்சல் அனுப்புகிறேன்.

_______________________________________

நன்றி வசந்த்.

//இதுவும் கடந்து போகும்ன்னு தான் தோணுதுப்பா...என்ன செய்றது பணம்தானே முக்கியமாயிடுச்சு//

இதை பற்றிய ஒரு பதிவுடன் விரைவில் உங்களை சந்திக்கிறேன் நண்பா.

_______________________________________

நன்றி யாசவி.

அனுபவ உண்மை எப்போதும் உணர்ச்சி பூர்வமாகவே இருக்கும் போல.

ஈ ரா said...

முதலில் முதல் பாதியை மட்டும் படித்தேன்.. இப்போ தான் முழுதும் படித்தேன்... அருமையாக எழுதி இருக்கிறீர்கள்..

தீபாவளி வாழ்த்துக்கள்

GEETHA ACHAL said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

சிங்கக்குட்டி said...

நன்றி ஈரா.

நன்றி கீதா.

தீபாவளி நல்வாழ்த்துகள் :-)

Menaga Sathia said...

நல்லா சொல்லிருக்கிங்க.வெளிநாட்டு வாழ்க்கைனாலே இப்படிதான் சிங்கக்குட்டி!!

சிங்கக்குட்டி said...

உண்மைதான் மேனகா, அதனால் தான் இனி வரும் தலை முறைகளுக்காக இந்த பதிவு.

மேலும் அம்மு சொன்னது போல், வெளி நாட்டில் இருந்து போகும் நாம், வெறும் வெளிநாட்டு பொருட்களையும் ஆடம்பரத்தையும் மட்டுமில்லாமல், இங்குள்ள கஷ்டங்களையும் மற்றவர்களுக்கு புரிய வைக்க வேண்டும் என்பதே என் நோக்கம்.

அன்புடன் மலிக்கா said...

நல்ல இடுகை நல்ல தொகுப்பு.

ஜீவன்பென்னி said...

அண்ணாச்சி நல்ல பதிவு. இத படிச்சு முடிச்சவுடனே பெருமூச்சுதான் வந்தது. வெளிநாட்ல அதுவும் தனியா இருக்குறது ரொம்ப கொடுமை. துபைக்கு மோத்தமா விடுமுறை விடுற நாளுக்காக காத்திட்டிருக்கேன்.

சிங்கக்குட்டி said...

நன்றி ஜீவன்பென்னி.

குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துக்கள் :-)

HariV is not a aruvujeevi said...

ithu oru vagaiyane valie. nammai pol vellinatil vaazhum indyarigalu (first generation immigrants) than puriyum.

சிங்கக்குட்டி said...

வாங்க ஹரி, சரியாக சொன்னீர்கள்.

நன்றி!.

அமுதா கிருஷ்ணா said...

ரொம்ப அருமையா எழுதி இருக்கீங்க சார்..மனது மிக கஷ்டமாய் இருக்கிறது. எத்தனை சகோதரர்கள் கஷ்டப்படுகிறார்கள் இப்படி. அயல்நாட்டுக்கு வேலை என்று போகவே மாட்டேன் என்று என் பெரிய பையன் எப்பவும் சொல்வான்..

சிங்கக்குட்டி said...

மிக்க நன்றி அமுதா கிருஷ்ணா.

இந்த நன்றியை என் பதிவில் வந்து பின்னூட்டம் கொடுத்தற்காக சொன்னதாக நினைக்க வேண்டாம்.

உங்கள் பெரிய பையன் மனதை புரிந்து கொண்டு அவர் திறமையை நம் நாட்டிற்க்கு கொடுத்திருப்பதால்.

இறைவன் உங்கள் மீதும், உங்கள் குடும்பத்தின் மீதும் எப்போதும் தன் புன்னகையை கொடுக்கட்டும்.
நன்றி.

Unknown said...

நீங்கள் சொல்வது ரொம்ப சரி..சொந்த நாட்டை விட்டு வெளி நாட்டிற்கு வந்து..இப்பொழுது இங்கையும் இருக்க முடியாமல் அங்கயும் போக முடியாமல் தவித்து கொண்டு இருக்கிறோம்..ஆனால் இன்னும் வெளிநாட்டு மோகம் நம் நாட்டில் தீர்ந்ததாக தெரியவில்லை..பசுமையாக இருந்தது இந்த பதிவு ..உங்களின் மின்னஞ்சல் முகவரி தெரியவில்லையே

Unknown said...

நீங்கள் சொல்வது ரொம்ப சரி..சொந்த நாட்டை விட்டு வெளி நாட்டிற்கு வந்து..இப்பொழுது இங்கையும் இருக்க முடியாமல் அங்கயும் போக முடியாமல் தவித்து கொண்டு இருக்கிறோம்..ஆனால் இன்னும் வெளிநாட்டு மோகம் நம் நாட்டில் தீர்ந்ததாக தெரியவில்லை..பசுமையாக இருந்தது இந்த பதிவு ..உங்களின் மின்னஞ்சல் முகவரி தெரியவில்லையே .

சிங்கக்குட்டி said...

@Mansoorஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மன்சூர்.

என் வலைதளத்தின் மேலே "Contact" கொடுத்து இருக்கிறேன், அதை அழுத்தினால் என் மின்னஞ்சல் முகவரி வரும் :-)

Post a Comment

 

Blogger Widgets