என்னடா பொல்லாத வாழ்க்கை...! என்னடா பொல்லாத வாழ்க்கை...!
யாரையும் நம்பி நம்மை பெற்றாளா அம்மா?, அட போகும் இடம் ஒன்னுதானே பொறுங்கடா சும்மா...!
இதுக்கு போயி அலட்டிக்கலாமா...! அட இதுக்கு போயி அலட்டிக்கலாமா...!
வணக்கம் நண்பர்களே, என்ன பாட்டு பலமாக இருக்கிறது என்று நினைக்கிறீர்களா?விசையம் இருக்கிறது.
என் இந்திய பயணம் எப்போதையும் விட இந்த முறை பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் மொத்தத்தில் ஒரு மசாலா படம் பார்த்தது போல மிக அருமையாக இருந்தது.
சாதாரணமாக விடுமுறை முழுவதும் நண்பர்களுடன் என் வீட்டை சுற்றியே இருக்கும் நான், இந்த முறை சென்னை, திருவண்ணாமலை, சதுரகிரி, சிங்கை என்று நேரமே கிடைக்காமல் சுற்றி கருகருத்து திரும்பி இருக்கிறேன்.
தமிழ்நாட்டில் பல வருடங்களாக நடந்து கொண்டிருந்த ஆறு வழி நெடுஞ்சாலை வேலைகள் முடிந்து, இரவில் கூட பளபளவென்று முதலிரவில் நகையோடு ஜொலிக்கும் புது பெண் போல வழு வழுவென்று இருக்கிறது.
இத்தனை செய்தும் எப்போதும் பறந்து கொண்டிருக்கும் தூசியை மட்டும் தண்ணீர் அடித்து கழுவாமல் வைத்திருப்பதன் அர்த்தம் புரியவில்லை.
கார் கண்ணாடி ஏற்றி விடாமல் போக முடியாது, கண்ணாடி ஏற்றினாலும் ஏற்றாவிட்டாலும் ஏசி இல்லாமல் போக முடியாது என்பது போல சூடாகவே இருக்கிறது.
வோடா போன் போல மொபைல் நிறுவனங்கள் வழக்கம் போல, இலவச சேவையில் கேட்கும் கேள்விக்கு அவசரமாக சம்மந்ததா சம்மந்தமில்லாமல் ஏதாவது பேசி (உளறி), இந்த நாள் இனிய நாளாகட்டும்.
உங்களுக்கு வேண்டிய தகவலை அறிய, நிமிடத்திற்கு முப்பது பைசா செலவாகும் இந்த எண்ணுக்கு அழைக்கவும் என்று வேறு எண்ணுக்கு திருப்பிவிட்டு, அங்கு நிதானமாக பேசி கல்லா கட்டுகிறார்கள்.
மற்ற படி முன்பு அரசியல் கட்டவுட்டுகள் போல, இப்போது அவர்கள் வாரிசுகள் தயாரிப்பாளர்கள் போர்வையில் எல்லா சினிமா போஸ்டரிலும் கதாநாயகனை விட பெரிதாக நிற்கிறார்கள்.
ஒரே ஆறுதலான விசையம், மக்களின் ஆடம்பர பண புழக்கம் விலைவாசியை போலவே நிறையவே மாறி இருக்கிறது (போகும் இடமெல்லாம் தேங்காய் விலை கேட்கும் பயணங்கள் முடிவதில்லை கவுண்டமணியை போலத்தான் என்னை பார்த்தார்கள் என்பது வேறு விசையம்).
இவ்வாறாக நான் எழுத சென்ற தேர்வு வேலைகளும் இனிதாக முடிந்தததில் சென்ற வேலை முடிந்த திருப்தி எனக்கு.
இனி மேட்டருக்கு வருவோம், முன்பே இதை பற்றி கொஞ்சம் எழுதி இருந்தாலும்,மனதில் உறுத்துவதை தெளிவாக எழுதவேண்டும் என்று நினைத்துக்கொண்டு இருந்தேன், அதை நானே இந்த முறை அனுபவப்பட்டு உணர்ந்து விட்டேன்.
எனக்கு விபரம் தெரிந்த நாள் முதல் தனியாகவே வளர்ந்தவன் நான், சொந்தங்களும் அதிகமாக இல்லை, நானும் சொந்த ஊரில் அதிகமாக இல்லை.
எப்போதும் நண்பர்களுடன் கலகலப்பாக பொழுதை போக்கி, எதையும் விளையாட்டாகவும், தைரியமாகவும் செய்தே எங்கள் நாட்கள் ஓடின.
ஆனாலும், நிறைய சொந்தம் மற்றும் அவர்கள் உறவுகள், திருவிழா என்று இருக்க முடியவில்லையே என்று ஒரு தனிமை எப்போதும் அடி மனதை பிசையும்.
அந்த வலி முகத்தில் தெரியாமல் உடன் இருந்த நண்பர்கள் நட்பில் ஓடிய நாட்கள் வருடங்களாக மாற இடையில் நண்பர்களும் வெவ்வேறு நாடுகளுக்கு பிரியும் படி அமைந்து விட்டது.
எப்போதும் உடன் இருந்த நண்பர்களும் இல்லாமல் வெளிநாட்டில் சுத்தமாக தனிமை பட, அந்த கொடுமையை சில வருடம் அனுபவிக்கும் படியாகி விட்டது.
நண்பர்களுக்கு திருமணமாக, அவர்களையும் நினைத்த நேரத்தில் அழைத்து தொல்லை பண்ண முடியாது.
சரி, நம் திருமணத்திற்கு பிறகு எல்லாம் சரியாகி விடும் என்று பார்த்தால், சொந்தங்களோடு இருந்த பெண்ணை நம் துணைக்கு கொண்டு வந்து தனிமை படுத்தியதை போல் ஆகிவிட்டது.
இப்படி ஒருவருக்கொருவர் தனிமை கொடுமையை பகிர்ந்து, இதோ வந்து விட்டது விடுமுறை, அதோ வந்து விட்டது விடுமுறை! என்று மாதத்தை, வாரத்தை, நாட்களை எண்ணி சொந்த மண்ணுக்கு சென்றால்! அங்கேயோ நிலைமை இன்னும் தலைகீழாக இருக்கிறது.
அனைவருக்கும் அவரவர் சொந்த குடும்ப வேலைக்கு மட்டும்தான் நேரம்(மனம்) இருக்கும் போல?
நண்பர்களுக்கு சரி, ஆனால், நெருங்கிய சொந்தங்களும் வெறும் கண் துடைப்புக்கு என்று நடந்து கொள்ளும் போது, மனம் தனிமையில் வலித்ததை விட கொஞ்சம் அதிகமாகவே வலித்தது.
நேற்று வரை நம்மை சுற்றி சுற்றி வந்த சிறுசுகள் கூட, இன்று துணை கிடைத்ததும் சொந்தத்தை மறந்துவிடுவது எனக்கு மிக ஆச்சிரியமாகவே இருக்கிறது.
அட, நேரில் வந்து கூட பார்க்க வேண்டாம், ஒரு இருபது பைசா செலவில் ஒரு போன் பண்ணக்கூட யாருக்கும் மனமில்லாமல் போனது என்னை கொஞ்சம் அதிகமாகவே பாதித்துவிட்டது.
அதெல்லாம் சரி, நீ தனியாக இருந்து வருடங்கள் கழித்து வந்திருப்பதால், அனைவரும் உன்னை தேடி வர வேண்டும் என்று நினைப்பது எந்த விதத்தில் நியாயம்? என்று என்னை நானே சொந்த செலவில் மனதை சமாதன படுத்திகொள்ள...!
அவர்கள் அழைக்காவிட்டால் என்ன? நீ அவர்களையும் சேர்த்து அழைத்து விருந்து கொடு அதுதான் "இன்னார் செய்தாரை உறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்" என்று உள்ளே சென்ற "ஜிம்பீம்" வேதாந்தம் சொல்ல, அதையும் ஒரு வார இறுதி ஞாயிறு தினத்தில் செய்து பார்க்கப்போய்!
அது என்னவோ என் சொந்த செலவில் எனக்கே சூன்யம் வைத்துக்கொண்டது போல் இருந்தது.
வெளிநாட்டில் தங்கள் வேலை தேவைக்கு என்னை நாடிய சொந்தங்கள் முதல் மற்றபடி அழைத்தவர்கள் அனைவரும் வராவிட்டால் கூட மனம் சமாதானம் ஆகியிருக்கும்.
என்ன பகையானாலும் கட்டாயம் முறைக்கு வரவேண்டிய சொந்தங்கள் கூட, எந்த பகையும் இல்லாதபோதும் வர நேரமில்லாமல் (மனமில்லாமல்) போனதை பார்த்தவுடன், சாமி இறங்கியதை போல மனம் கன்னா பின்னவென்று வயது வித்தியாசம் பார்க்காமல் அங்கேயே ஆடி தீர்த்து விட்டது.
சும்மாவே நீ சாமியாடுவே, இதுல உடுக்கை அடிச்சு வேப்பிலைய வேற கைல கொடுத்துட்டானுக, இனி அடக்கவா முடியும்! விட்டுருங்க அதுவா மலை ஏறினாத்தான் ஆச்சு! என்று சொல்லி நண்பன் சிரிக்க...!
இன்னொருவனோ, எந்த நாட்ல இருந்து வந்தா என்னா? என்னடா நம்ம கல்யாண, காதுகுத்து கலாச்சாரப்படி குடும்ப விழாவுல எதோ ஒன்னு குறையுதேன்னு பார்த்தேன், அது திருப்தியா முடிஞ்சுருச்சு மாப்ஸ்!, இப்பதான் நமக்கு சாப்பாடு உள்ள இறங்கும் என்றான்.
என்ன நடந்து என்ன? என் மன தவிப்பு மட்டும் அடங்கவேயில்லை.
நாம் எதோ இந்தியாவில் பாடு பட்டு சேர்த்த சொத்தை எல்லாம் வெளிநாட்டில் இருந்து கொள்ளையடிக்க வந்திருப்பதை போல, சொந்த உறவுகளே நடந்து கொண்டது எனக்கு அவமானமாகவே பட்டது.
என்ன கொடுமை இது? இவர்களையா காத்திருந்து தேடிவந்து பார்க்க நினைத்தோம்! என்று என்னை நானே கேவலமாக பார்க்கும் படி இருந்தது.
இப்படி தேடி வந்து மனம் காயப்படுவதை விட, முகம் தெரியாத மக்கள் வசிக்கும் நாட்டில் தனியாக இருப்பது எவ்வளவோ மேல் என்று அடி மனதில் இன்னும் ஆழமாக பதிந்துவிட்டது.
இத்தனை நடந்தும், குடும்ப அரசியல் புரியாத குழந்தையாய் தங்கமணி, இன்னும் சில மாதம் அங்கேயே இருக்க விரும்பி இருப்பது எனக்கு இன்னும் ஆச்சரியமாகவே இருக்கிறது! பின் புத்தி பெண் மனதில் என்னவென்று யாருக்கு தெரியும்?.
பெரிய பெரிய அலுவலக பிரச்னையை மற்றும் கூட்டு அரசியலை கூட சர்வ சாதாரணமாக எதிர்கொள்ளும் எனக்கு, திருமணதிற்கு பிறகு இந்த குட்டி குட்டி சொந்தபந்த குடும்ப அரசியல் மட்டும் ஏனோ புரியவே இல்லை? புரிந்து கொள்ளவும் விரும்பவில்லை.
என்னதான் உள்ளுக்குள்ளேயே உள்ள சொந்தகளோடு மட்டும் பழகிய மக்களாயினும், வெளியில் இருந்து வந்த ஒருவரிடம் பழகாமலேயே, அவர் நல்லவரா கெட்டவரா! என்று மக்களால் எப்படி முடிவடுக்க முடிகிறது? அல்லது இப்படி நடந்து கொள்ளும் சொந்தங்களின் நோக்கம் தான் என்ன?
சொந்த குடும்ப உறவுகளுக்குள் கூட இப்படி உட்பூசல், பகை, ஈகோ தேவையா?
எது எப்படியோ, தாமரை இதழில் விழுந்த நீர் துளி போல, நான் நானாகவே இருக்கிறேன், ஆனால் அது சில நேரங்களில் சிலருக்கு என்னை தவறாக நிறம் காட்டி விடுகிறது,காரணம் அது பார்ப்பவரின் கோணத்தை பொறுத்து மாறுபடுகிறது.
அதனால் இதில் எல்லாம் நான் அதிக ஆர்வம் காட்ட விரும்பாமல் விடுமுறை முடிந்து திரும்பிவிட்டேன்.
இது உங்களுக்கு மொக்கையா, இல்லை திருமணமாகி போகும் குறிப்பாக வெளிநாட்டில் இருந்து போகும் அனைவருக்கும், பொதுவான பிரச்சனையா (சப்ப மேட்டரா) என்று எனக்கு தெரியவில்லை.
புரிந்தவர்கள் மற்றும் அனுபவப்பட்டவர்கள் அல்லது இது சார்பாக இடுகை இருப்பின் பின்னூட்டத்தில் சொல்லவும்.
இப்போது புரியுமே முதல் வரியின் அர்த்தம்...!
அட, இதுக்கு போயி அலட்டிக்கலாமா...! என்னடா பொல்லாத வாழ்க்கை...!
யாரையும் நம்பி நம்மை பெற்றாளா அம்மா?, அட போகும் இடம் ஒன்னுதானே பொறுங்கடா சும்மா...! இதுக்கு போயி அலட்டிக்கலாமா...!
Tuesday, August 10, 2010
Subscribe to:
Post Comments (Atom)
21 பின்னூட்டம்:
சுய நலம் தான் காரணமா இருக்கு. சில பிழைகள் இருக்கு. உறவுகள் என்று வரவேண்டும்.
என் புது மடிகணினி திரை சிறியதாக இருப்பதால் இன்னும் கையாண்டு பழகவில்லை, விரைவில் என் கணினி தயாராகி விடும்.
இது நிஜமும் சகஜமும்.
நாம் இல்லாமலேயே அவர்கள் நல்லது கெட்டது நடத்திவிடுகிறார்கள்... மனதில் ஒரு சிறிய வருத்தம் அதில் அவர்களுக்கு இருக்ககூடும்.
குற்றம் பார்ப்பின் சுற்றம் இல்லைதான்..
நாம் தான் விட்டுக்கொடுத்து போகணும்.. என்ன செய்ய..
- இப்படிக்கு வெளிநாட்டில் 15 வருடமாய்.. தனிமையில்..
i second every word of PUNNAGAI DESAM.
more over lifestyle at back home has changed very dramatically. everybody is busy. jobs, kids school..etc. everything is demanding. even family members like sis/bro/cousins will hardly spend time with you as they are busy with their work. (only on weekends we can have get together-just like westerners)
இப்படிக்கு வெளிநாட்டில் 10 வருடமாய்.. தனிமையில்
மனத தேத்திக்குங்க சொந்தங்கள் இல்லையின்னா என்ன? அதுதான் நண்பர்கள் இருக்கிறார்களே, நினைச்சது அமையலைன்னா கிடைச்சதை அமைச்சிக்கணும். திரிசா இல்லாட்டி திவ்யா:-)
சீடியசான பதிவில் காமடி என்று எண்ண வேண்டாம், எதையும் டேக் ஈத் ஈசியா எடுத்துகோங்க.
இடையில் சொன்ன பழமொழிதான் சரி இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாணநன்னயம் செய்துவிடல்...
குடும்ப உறவுகள் நம்மை தேடிவரவேண்டும் என்பதைவிட நாம் தேடிச்சென்று பார்க்கவேண்டும் என்று எண்ணவேண்டும்..
போன விடுமுறையில் நான் சென்ற பொழுது பின்பற்றியது ...
தனிமை தனிமையோ கொடுமை கொடுமைஒயோ என்ன்று பாடுங்க
உறவினர்களை எப்படி கையால தெரியாதவர்களுக்கு தான் எப்படி ஒரு நிலை.
கூகுளின் புதிய அறிமுகம் ஜெயகு . உங்கள் வலைத்துவை பிரபலபடுத்த சிறந்த வழி
Link:www.secondpen.com/tamil/what is jaiku?
உண்மைதான் "குற்றம் பார்ப்பின் சுற்றம் இல்லை" அதனால் நான் விட்டு கொடுத்து விட்டேன்.
உண்மைதான் "குற்றம் பார்ப்பின் சுற்றம் இல்லை" அதனால் நான் விட்டு கொடுத்து விட்டேன்.
உண்மைதான், ஆனால் தனிமை கொடுமையானது.
உங்கள் கருத்து மிக சரி, எதையுமே எளிதாக எடுத்துகொள்ள நான் பழகி விட்டேன்.
உங்கள் கருத்து மிக சரி, எதையுமே எளிதாக எடுத்துகொள்ள நான் பழகி விட்டேன்.
காலம் மாறிப் போச்சுங்க.
உள்நாடோ வெளிநாடோ எல்லா இடத்திலேயும் இதே கதைதான். நமக்காக யாரும் எதுக்காகவும் காத்து நிற்பதில்லை.
வந்தா ....என்ன கொண்டுவந்தே?
போனால்........ என்ன கொடுத்துட்டுப் போகப்போறே?
எல்லாம் பழகிப்போச்சு.
வெளிநாடு & உள்நாட்டில் தன்னந்தனியாக 36 வருசங்கள்.
அனைத்தும் பணத்தை வைத்தே கணக்கிடப்படுகிறது என்பதுதான் வேதனையான உண்மை.
இக்கரைக்கு அக்கறை பச்சை சிங்கக்குட்டி!
இதே சொந்தக்காரங்க தான் என்னோட அப்பாவிற்கு கடன்!! உள்ளது என்று எனக்கு பெண் கொடுக்க கூட மறுத்தார்கள். உறவினர்களை ஒரேயடியாக குறை கூறவில்லை நல்லவர்களும் இருக்கிறார்கள்.. ஆனால் அவர்கள் மிகமிகச்சிலரே. எனக்கு இன்று வரை உதவியாக இருப்பவர்கள் என் நண்பர்களே! இன்னும் கூறப்போனால் நான் இருக்கும் இந்த நிலைமைக்கு என் நண்பர்களே காரணம். உறவினர்களின் பங்கு 5% கூட இல்லை.
ஆனால் இதை ஒரு நல்ல அனுபவமாகத்தான் எடுத்துக்கொண்டேன், காரணம் இப்போதுதான் மனம் கொஞ்சம் கொஞ்சமாக பக்குவப்படுகிறது.
வாழ்க்கை என்பதே ஒரு யாத்ரா, அதில் அத்தனையும் ஒரு நல்ல அனுபவம் தான்.
இனி அவருடைய பின்னூட்டம்.
எனக்கு மட்டும்தான் இப்படி என்று நினைத்தேன், ஆனால் அயல்நாட்டில் பணி புரியும் அனைவருக்குமே இந்த நிலை தான் போல...!
உங்கள் அனுபவத்தை படிக்கும்போது அதை என்னுடய அனுபவமாகவே உணர்ந்தேன், ஊரில் எல்லோரிடமும் நாம் பாசமாக இருக்கிறோம், ஆனால் அவர்கள் நம் மீது வெறுப்பாக இருக்கிறார்களா அல்லது நாம் அதிகம் சம்பாதிக்கிறோம் என்று கோவம், பொறாமை பட்டு அவமானபடுதுகிறார்களா?
எல்லோருடைய வாழ்க்கை தரம் மற்றும் பண புழக்கம் அதிகரித்து விட்டதா? ஒண்ணும் புரியல..! ஆனால் மன வலி மற்றும் கோவமதான் வருகிறது நண்பா.....
இதற்கு நீங்கள் சொன்ன வரிகள் தான் நினைவுக்கு வருது...
//இப்படி தேடி வந்து மனம் காயப்படுவதை விட, முகம் தெரியாத மக்கள் வசிக்கும் நாட்டில் தனியாக இருப்பது எவ்வளவோ மேல் என்று அடி மனதில் இன்னும் ஆழமாக பதிந்துவிட்டது.
யாரையும் நம்பி நம்மை பெற்றாளா அம்மா?, அட போகும் இடம் ஒன்னுதானே பொறுங்கடா சும்மா...! இதுக்கு போயி அலட்டிக்கலாமா...! //
இதையே நானும் நினைப்பேன் நண்பா...! பேசாமல் இங்கயே இருந்து விட்டால்தான் என்ன...! ஆனால் இங்கு இருக்கும் விதி முறைகள் எங்களை வீடு வாங்கி நிரந்தமாக இருக்க விடாதே?
Don't Worry Singa.... Be Happy :-) We Are With You...!
Post a Comment