Monday, October 5, 2009

சித்தர்கள்

பதிவுக்கு முன் SASHIGA மேனகாவின் அன்பு விருதுக்கு என் நன்றி.



முகு:- என் சொந்த அனுபவத்தில் சொல்ல, நான் சித்தர் இல்லை என்பதால், இவை அனைத்தும் நான் படித்து திரட்டிய தகவல் மட்டுமே.

யுகத்தை பற்றி படித்த போது கலியுகத்தில் இறைவனை அடைய சிறந்த வழி சித்தர் வழி போவது என்று பார்தேன், அப்போது சித்தர் என்றால் யார்? சித்தர் வழி என்பது என்ன? மொத்தம் எத்தனை சித்தர்கள் என்று பல கேள்விகள் எழுந்தது?

நான் பல இடங்களில் தேடி படித்த வரை, சித்தர்கள் பற்றி முழுதாக சொல்கிறேன் என்பதும், உலக உருண்டைக்கு பொன்னாடை போர்த்துகிறேன் என்பதும் ஒன்று என்பதை நான் நன்கு புரிந்து கொண்டேன்.

அதனால் எதோ என் அறிவுக்கு திரட்ட முடிந்த தகவல்களை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

சித்தர்கள் யார்?



"சித்தர்" என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்று பொருள்.

சிவத்தை நினைத்து அகக்கண்ணால் கண்டு, தியானித்து தரிசனம் செய்து, ஆத்ம சக்தியை எழுப்பி, மனித சக்திக்கு அப்பார்பட்டு செயற்கரிய காரியங்களை செய்வது சித்த மூர்த்திகளது செயலாகும். இச் செயலை "சித்து விளையாட்டு" என்று ஆன்மீக ஞானிகள் கூறுவர்.

இன்று பல பிரசித்தி பெற்ற ஸ்தலங்களில் மூலவருக்கு அருகிலேயே சித்தர்கள் சன்னதி இருக்கிறது.

சித்தர்கள் யோகசமாதி அடைந்த இடங்கள் மகிமை பெற்ற திருத்தலங்களாக விளங்குகின்றன.

அந்த சன்னதியில் மனதை ஒருமுகப்படுத்தி இறைவனிடம் வேண்டினால் நினைத்தது நடக்கும், செய்வது வெற்றி பெறும் என்பது ஆன்மீகவாதிகளின் அசைக்க முடியாத நம்பிக்கை.

இன்று பழனிமலையின் பிரபலமும், சக்தியும் உலகம் அறிந்த ஒன்றாகும். அந்த ஸ்தலத்தில் நவபாஷானத்தால் குமரன் வடிவேலனை உருவாக்கியவர் யோக சமாதியை விரும்பிய போகர் என்ற சித்தரே.



அதே போன்று பிரசித்தி பெற்ற திருப்பதி மலை மீது கொங்கணவர் என்ற சித்தர் உள்ளார்.

காலத்தை வென்று மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்தும், கூடு விட்டு கூடு பாய்ந்தும், மூச்சடக்கி மனித விமானங்களாக வானத்தில் பறந்தும், நவக்கிரகங்களை வசப்படுத்தியும் பலவாராக சாதனைகளைப் புரிந்த சித்தர்கள் மீவியற்கை (supernatural) சக்திகள் உடையவர்கள், எனினும் இவர்கள் உலகாயுத (material) இயல்புகளை சிறப்பாக அறிந்து பயன்படுத்தினர் என்பதுவே தகும்.

இவர்களின் மருத்துவ, கணித, இரசவாத, தத்துவ, இலக்கிய, ஆத்மீக ஈடுபாடுகள் வெளிப்பாடுகள் இவர்களின் உலகாயுத பண்பை எடுத்தியம்புகின்றன, ஆயினும் இவர்கள் வெறும் பொருளியல் வாதிகள் (materialists) அல்ல, மெய்ப்புலன் காண்பது அறிவு என்பதிற்கிணங்க, உண்மை அல்லது "நிசநிலையை" அடைய முயன்றவர்கள் சித்தர்கள்.

இவர்கள் இயற்கையோடு இயைந்து அதனைக் கருவியாகப் பயன்படுத்தி பல அற்புதங்களைச் செய்திருக்கிறார்கள். வெறும் சித்து விளையாட்டுகளோடு நிற்காமல், யோகம், ஞானம், வைத்தியம் போன்ற பல அரிய விஷயங்களை உலக நன்மைக்காக அருளிச் செய்த சித்தர்கள் தமிழ் மரபின் விதிவிலக்குகள். பொது வாழ்வு முறை, வழி முறைகளில் இருந்து வேறுபட்ட வாழ்வு, வழி முறைகளை உருவாக்கி. சித் - அறிவு, சித்தை உடையவர்கள் சித்தர்கள்.

சித்தர்களை அடையாளப்படுத்துவதோ, வரையறுப்பதோ கடினம். ஏனென்றால், ஒவ்வொருவரின் தனித்துவமும், மரபை மீறிய போக்குமே சித்தர்களின் வரைவிலக்கணம். தரப்படுத்தலுக்கோ, வகைப்படுத்தலுக்கோ இலகுவில் சித்தர்கள் உட்படுவதில்லை. எனினும், தமிழ் சூழலில், வரலாற்றில் சித்தர்கள் என்பவர்கள் என்றும் இருக்கின்றார்கள்.

சாதி, சமயம், சாத்திரம், சடங்குகள் மீறிய உலக நோக்கு, பொது இல்லற, துறவற வாழ்முறைகளில் இருந்து வேறுபட்ட வாழ்வு முறைகள். விந்தையான செயல்கள், பட்டறிவு தமிழ், சீரிய ஆராய்ச்சி ஆகிய அம்சங்கள் சித்தர்களை வருணிப்பன எனலாம். அப்படிப்பட்ட மேலோட்டமான வருணிப்புக்களுக்கு மேலாக, சித்தர்கள் என்பவர்கள் சித்தி அடைந்தவர்கள். தங்கள் இருப்பை (existence), உடம்பை, சிந்தையை, சுற்றத்தை, இவ்வுலகின் இயல்பை நோக்கி தெளிவான புரிதலை (understanding), அறநிலை உணர்வை (external awareness), மெய்யடைதலை (actuality) சித்தி எய்தல் எனலாம்.

இதை பற்றி அறிந்த, ஆராய்ந்த பலர், சித்தர்களை புலவர்கள், பண்டாரங்கள், பண்டிதர்கள், சன்னியாசிகள், ஆழ்வார்கள், நாயன்மார்கள், ஓதுவார்கள், கலைஞர்கள், கவிஞர்கள், அரசர்கள், மறவர்கள், ஆக்கர்கள், புலமையாளர்கள், அறிவியலாளர்கள், பொது மக்கள் ஆகியோரிடம் இருந்து வேறுபடுத்தி அடையாளப்படுத்தலாம் என்று சொல்லி இருக்கிறார்கள்.

இத்தகைய தகவல்கள் மூலம் சித்தர்களின் மரபை, கோயில் வழிபாடு, சாதிய அமைப்பை வலியுறுத்தும் சைவ மரபில் இருந்தும், உடலையும் வாழும்போது முக்தியையும் முன்நிறுத்தாமல் "ஆத்மன்", சம்சாரம் போன்ற எண்ணக்கருக்களை முன்நிறுத்தும் வேதாந்த மரபில் இருந்தும் வேறுபடுத்திப் பார்க்க முடிகிறது.

இன்று, சித்தர் மரபு அறிவியல் வழிமுறைகளுடன் ஒத்து ஆராயப்படுகின்றது. எனினும், சித்தர் மரபை தனி அறிவியல் கண்ணோட்டத்தில் பார்ப்பது அதன் பரந்த வெளிப்படுத்தலை, அது வெளிப்படுத்திய சூழலை புறக்கணித்து குறுகிய ஆய்வுக்கு இட்டு செல்லும் என்பவர்களின் கருத்தும் உண்மையாகிறது.

சித்தர்களின் கொள்கை என்பது, பரமாத்மா எங்கும் தனியாக இல்லை. நமது உடம்பு தான் பரமாத்மாவின் இடம் ஆதலால் கடவுளைத்தேடி எங்கும் அலைய வேண்டாம். உடம்பைப் பேணுவதே கடவுட்பணி, உடம்பினுள்ளேயே பரமாத்மாவைக் கண்டு மகிழ்ந்திரு என்பதே சித்தர் கொள்கை.

சித்தர்களின் வைத்திய முறைகள் காலம் குறிப்பிட முடியாத பழமையானதாக இருக்கிறது. பண்டைத்தமிழரின் விஞ்ஞான அறிவின் சிகரமே சித்த வைத்தியமாகும் என்று சொல்லப்படுகிறது.

மனித குலத்தைக் காக்கும் பொருட்டு, அன்றைய கலாச்சாரத்திற்கேற்பவும், மனித வாழ்க்கை முறைக்கு தேவையான, அனைத்து ஆரோக்கிய முறைகளையும் மிக எளிய வைத்திய முறைகளை, அனைவரும் செய்துகொள்ளும் பொருட்டு தந்தனர்.

அந்த முறைகளை, அவர்களின் இருப்பிடத்திலே அருகில் கிடைக்கும் மூலிகைகளைக் கொண்டு, மனித குலத்தைக் காத்து வந்தனர். மக்கள் அனைவரும், ஒழுக்கந்தவறாமல் வாழவேண்டும் என்றும், பொய், சூது, கொலை, குடி, விபச்சாரம், கூடா ஒழுக்கம் உடல் நோயை உண்டாக்கும் என்றும், யோகப்பயிற்சியிலே வாழ்வில் வெற்றி பெறமுடியும் என்றும் உடல் வலிமையுடன் நீண்டநாள் வாழ முடியும் என்றும் சித்தர்கள் பல பாடல்கள் பாடியுள்ளனர்.

"சித்தர்களில் சிலர் இரும்பைப் பொன்னாக்கும் (ரசவாதம்) வேலைகளில் ஈடுபட்டிருந்திருக்கின்றனர் என்றும் இந்த வகையான முயற்சி கடந்த நூற்றாண்டுகளில் உலகெங்கிலும் நடந்திருக்கின்றது என்றும் சொல்லப்படுகிறது.

மருந்துகளில் ரசம் முதன்மையானது. இதன் மூலம் இரசபஸ்பம், ரசசெந்தூரம், ரசக்கட்டு, முதலிய மருந்துகள் தயாரிக்கப்பட்டன. தீராத பல கொடிய நோய்களுக்கு இம்மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. ரசவாதம் என்றால் ரசத்தின் மாறுதல்களை அறிவது பொருள்.

போகர் எழுதிய பாடல்கள் வேதியல் தொடர்பான பாடல்களில் முக்கியத்துவம் பெறுகின்றன.

சித்தர்கள் கண்டறிந்த வாத வித்தையே சிறந்த விஞ்ஞான ஆராய்ச்சியாகும். உலோக வகைகள், உப்பு வகைகள், பாஷாண வகைகள், வேர் வகைகள், பட்டை வகைகள், பிராணிகளி்ன் உடம்பிலே உற்பத்தியாகும் கோரோசனை கஸ்தூரி, மூத்திரம், மலம் முதலியவைகளின் குணங்களை ஆராய்ந்து கண்டிருக்கின்றனர்.

காட்டிலும் மலையிலும் குகையிலும் வாழ்ந்து சித்தர்கள் தங்கள் ஆராய்ச்சிகளை நடத்தியிருக்கிறார்கள். நவீன பரிசோதனை சாலைகள் இருக்கவில்லை எனினும் அவர்களின் ஆராய்ச்சிகள் இன்றைய விஞ்ஞான ஆய்வுடன் ஒத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

சித்தர்கள் அவனன்றி ஓரணும் அசையாது என்று நம்பிக்கை உள்ளவர்கள் மக்கள் நூறாண்டுகள் தான் உயிர் வாழமுடியும் என்று நம்புகின்றனர். ஆனால் சித்தர்களின் நம்பிக்கை இதற்கு மாறானது. நூற்றுக் கணக்கான, ஆயிரக்கணக்கான ஆண்டுகள் உயிர் வாழமுடியும் என்பது சித்தர்களின் நம்பிக்கை.

இஸ்லாமிய மதத்தின் சூஃபி மரபினரை தமிழ் சித்தர்களுடன் இணைத்து பார்க்கும் வழக்கும் உண்டு. இது எவ்வளவு பொருந்தும் என்பது கேள்விக்குறியானதே. எனினும் பல இஸ்லாமிய பின்புலம் கொண்டவர்களும் சித்தர்களாக எடுத்துக் கொள்ளப்படுகின்றார்கள்.



தமிழ்ச் சித்தர்கள்

தமிழ் நாட்டில் இருந்த சித்தர்கள் பதினெட்டுப் பேர் (பதினெண்சித்தர்கள்) என்று கூறுவர்.

இறையுணர்வில் முழுமையடைந்து, உயரிய இறைநிலை எய்திய, மருத்துவம், ரசாயனம், இயற்கை விஞ்ஞானம், தத்துவம் போன்ற பல துறைகளிலும் சிறந்து விளங்கிய அந்த பதினெட்டு மகான்களை, பதினென் சித்தர்கள் என்று அழைக்கிறோம்.

எனினும் பிற்காலத்தில் "பல சித்தர்கள் இவர்கள் வழியில் தோன்றினர்" என்றும், "ஒரே சித்தர் பல பெயர்களில் அழைக்கப்பட்டார்" என்றும், "பல சித்தர்கள் ஒரே பெயர்களில் அழைக்கப்பட்டார்" என்றும் வெவ்வேறு கருத்துக்கள் உள்ளன.

இந்தப் பதினெட்டுச் சித்தர்கள் யார், யார்? என்பதில் பலரது கூற்றுக்களில், சில பெயர்கள் மாறுபடுகின்றன. இதனால் முற்காலத்தில் உயரிய இறைநிலையை எய்தியவர்களின் எண்ணிக்கை பதினெட்டிற்கும் மேற்படும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை என்று விளக்கம் தரப்படுகிறது.

சித்தர்கள் அனைவருமே, தாம் உயர்நிலை எட்டியது மட்டுமின்றி, உலக மக்கள் நலனுக்காக பல விதங்களிலும், உயரிய நுட்பங்களை வெளிப்படுத்தியதன் மூலமும், தம்முடைய காலத்தில் பிறருக்காக செயல்கள் புரிந்தும், சேவை புரிந்துள்ளனர் என்பதை நம்மால் இத்தகைய கருத்துகளை படிக்கும் போது புரிந்து கொள்ள முடிகிறது.

பதினெட்டுச் சித்தர்களில் ஒருவரான குதம்பைச் சித்தர் ஒரு பெண் என்றும் சொல்லப்படுகிறது.

தமிழர்கள் மட்டும் தான் சித்தர்களா என்றால்?

பதினென் சித்தர்கள் சமாதி அடைந்த இடங்கள் பெரும்பாலும் இன்றையத் தமிழ்நாட்டில் உள்ளது. சித்தர் பாடல்கள் என்றழைக்கப்படுபவை அனைத்தும் தமிழ் பாடல்களே. ஆனால் இந்தச் சித்தர்கள் அனைவரும் தமிழர்கள் என்று கூறமுடியாது என்ற கருத்தும் பரவலாக உள்ளது.

இவர்கள் எண்ணங்களைக் கடந்த உயர்நிலையை எட்டியவர்கள். மொழி, இன பாகுபாடுகளுக்குள் அடைபடுபவர்கள் அல்ல. இவர்களுடைய ரிஷிமூலமும் அறியப்படவில்லை. மேலும் தங்களுடைய இறையுணர்வால், உலகிலுள்ள எந்த மொழியிலும் உடனடியாக தம் கருத்துக்களை இவர்களால் வெளிப்படுத்த முடியும் என்று சில குறிப்புகள் மூலம் சொல்கிறது, நம்பப்படுகிறது.

உதாரணமாக, போகர் ஜப்பான் மற்றும் சீனாவிற்குச் சென்று அங்குள்ள மக்கள் இறைவன்பால் மனத்தை ஈடுபடுத்தப் பணியாற்றியதாக வரலாறு உண்டு.

நான் ஜப்பானில் இருந்த போது அங்கு உள்ள முருகன் கோவிலை பற்றி அறிய முடிந்தது, ஆனால் அது "முருகன் அல்ல போகர்" என்றும்.

அவர் பழனியில் மூலவர் சிலை தயார்செய்து கொண்டு இருந்த காலத்தில், தன் சீடரின் ஒரு செய்கையினால் அவர் மீது கோவப்பட்டு காற்றில் நடந்து சென்று, அங்கு ஒரு பெண்ணிடம் வயப்பட்டு குடும்பம் நடத்தியதாகவும், அந்த வழி வந்தவர்கள் தான் ஜப்பானில் இன்றும் "போகர் கொண்டையுடன்"(தளபதி படத்தில் ரஜினி சுந்தரி பாட்டில் வைத்து இருப்பார்)
இருப்பதாகவும், இந்தியா வந்தவுடன் அறிந்தேன்.

ராமதேவர், யாக்கோபு (Jacob) என்ற பெயரில் மெக்காவில் சில வருடங்கள் இறைத் தொண்டு புரிந்ததாகவும் கூறப்படுகிறது.

திருமூலர் வடநாட்டிலிருந்து வந்தவர் என்றும் குறிப்புகள் உண்டு.

கோரக்கரின் முழுப்பெயர் கோரக்நாத் என்றும், ராமாயணத்தை வட மொழியில் எழுதி உலகிற்கு முதன்முதலில் கொடுத்த வால்மீகியும் சிலர் கூற்றுப்படி பதினென் சித்தர்களில் ஒருவராகிறார்.

மேலும் பிறப்பினால் வரும் சாதித் தீட்டுக்கள், சடங்குகள், சிலை வழிபாடு, கோயில் வழிபாடு, போன்றவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது ஆகியவற்றில் உள்ள தவறுகள் பற்றி தெளிவான ஆணித்தரமான கருத்துக்களை முதன்முதலில் சித்தர் பாடல்களில் தான் பார்க்கிறோம்.

இதனாலேயே ஆச்சாரமான இந்துக்கள் சிலர் சித்தர் பாடல்களை ஒதுக்கியதாக சித்தர் வரலாற்றை ஆராய்ந்த ஜ்வெலபில் (Zvelebil) குறிப்பிடுகிறார்.

சித்தர் பாடல்களில் இறைவனை உணர்தல் பற்றிய பல விபரங்களைப் பரிபாஷைகளாக (மறைந்திருக்கும் பொருளாக) வைத்துள்ளனர்.

இந்த பதினெட்டுச் சித்தர்கள் யார்? பதினெட்டுச் சித்தர்களின் பெயர்கள், சித்த சக்திகள், சமாதியான இடம், போன்று திரட்டிய விபரங்களை மற்றொரு சமயத்தில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

என் பதிவில் உங்கள் நேரத்துக்கு நன்றி.

19 பின்னூட்டம்:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//அவர் பழனியில் மூலவர் சிலை தயார்செய்து கொண்டு இருந்த காலத்தில், தன் சீடரின் ஒரு செய்கையினால் அவர் மீது கோவப்பட்டு காற்றில் நடந்து சென்று, அங்கு ஒரு பெண்ணிடம் வயப்பட்டு குடும்பம் நடத்தியதாகவும், அந்த வழி வந்தவர்கள் தான் ஜப்பானில் இன்றும் "போகர் கொண்டையுடன்"(தளபதி படத்தில் ரஜினி சுந்தரி பாட்டில் வைத்து இருப்பார்)
இருப்பதாகவும், இந்தியா வந்தவுடன் அறிந்தேன். //





ஓ ஜப்பான் முன்னேறியதற்கு நம்ம ஊர்ஸ்தான் காரணமா...!

நிகழ்காலத்தில்... said...

\\முகு:- என் சொந்த அனுபவத்தில் சொல்ல, நான் சித்தர் இல்லை என்பதால், இவை அனைத்தும் நான் படித்து திரட்டிய தகவல் மட்டுமே.\\

பகிர்ந்து கொண்டமைக்கு வாழ்த்துக்கள் நண்பரே

Menaga Sathia said...

நல்ல பதிவு.சித்தர்கள் பத்தி தெரிந்துக் கொண்டேன்.நன்றி சிங்கக்குட்டி!!

சிங்கக்குட்டி said...

நன்றி நிகழ்காலத்தில் மற்றும் மேனகா :-))

சிங்கக்குட்டி said...

மன்னிக்கவும் சுரேஷ், உங்கள் பின்னூட்டதை தவறாக புரிந்து கொண்டேன்.

ஆம், உங்கள் ஊர் இல்லாத தமிழன் வரலாறு எதுவுமில்லை...

நன்றி!

GEETHA ACHAL said...

சிங்ககுட்டி சூப்பரான பதிவு..

நீங்கள் பதிவு போட்ட அன்றே இதனை பார்த்தேன்...ஆனால் படிக்க நேரம் இல்லை என்பதால் ..இன்று தான் படித்தேன்...மிகவும் நல்ல பதிவு.

அம்மா ஊரில் இருந்து வந்து இருக்காங்க...அம்மாவிடமும் இந்த பதிவினை காட்டினேன்...

சென்னையின், எங்கள் வீட்டின் அருகில் (தாம்பரம்)..18 சித்தர்கள் கோயில் இருக்கின்றது...மிகவும் சக்திவாய்ந்த கோயில்..

எங்கள் வீட்டில் அடிக்கடி இந்த கோயிலுக்கு போவோம்...

Robin said...

உங்கள் பதிவு மிகவும் கருத்து செறிவு மிக்கது.
இது போன்ற நல்ல பதிவுகள் தொடர்ந்து தமிழ் வலைத்தளங்களில் எழுதப்படவேண்டும்.

//பதினென் சித்தர்கள் சமாதி அடைந்த இடங்கள் பெரும்பாலும் இன்றையத் தமிழ்நாட்டில் உள்ளது. சித்தர் பாடல்கள் என்றழைக்கப்படுபவை அனைத்தும் தமிழ் பாடல்களே. ஆனால் இந்தச் சித்தர்கள் அனைவரும் தமிழர்கள் என்று கூறமுடியாது என்ற கருத்தும் பரவலாக உள்ளது. // - இது தமிழர்கள் பெருமை பெற்றுவிடக்கூடாது என்று எண்ணியவர்கள் கிளப்பிய சந்தேகமாக இருக்கலாம்.

சிங்கக்குட்டி said...

நன்றி கீதா,

இந்த அவசர உலகத்தில் அம்மாவுடன் இருப்பது போல ஒரு காலம் கிடைப்பது மிக அரிது, அதனால் மற்ற எல்லா வேலைகளையும் விட்டுவிட்டு, முடிந்த வரை உங்கள் அம்மாவுடன் நேரத்தை செலவிட பாருங்கள்.

உலகில் கிடைக்காதது அது மட்டுமே.

சிங்கக்குட்டி said...

நன்றி ராபின், உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும்.

Jaleela Kamal said...

அருமையான பதிவு.

சிங்கக்குட்டி said...

நன்றி ஜலீலா :-))

சிங்கக்குட்டி said...

மேலும் ராபின்,சித்தர்களை வெறும் தமிழர்கள், இந்துக்கள் என்ற மொழி மத குறுகிய வட்டத்துக்குள் அடைக்க நாம் முயலக் கூடாது.

பூனைக்கண்ணர் எகிப்து அல்லது இங்கிலாந்தைச் சேர்ந்தவர் மற்றும் ரோம ரிஷி, ரோம் நகரைச் சேர்ந்தவர் என்ற நம்பிக்கை மற்றும் குறிப்புகள் உண்டு.

நாடு, நகரம், மொழி, இனம் என அனைத்தையும் கடந்து, இன்னமும் சூட்சுமமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்தான் சித்தர்கள்.

Rajasurian said...

அருமையான பதிவு. இதர தகவல்களையும் விரைவில் பகிரவும்

சிங்கக்குட்டி said...

நன்றி ராஜசூரியன்,அடுத்த பதிவும் பிடித்தது என்று நம்புகிறேன்.

தொடரட்டும் நம் நட்பு.

calmmen said...

super
gurublack.wordpress.com

சிங்கக்குட்டி said...

நன்றி போஸ் :-)

Unknown said...

vilamparam Vendam, Valikadiyaka irukalam.
Ok,Friend.
Sguraja@gmail.com

skpillai said...

நல்லது, ஆனால் இன்னும் இருக்கு முயற்சி செய்யுங்கள், வாழ்த்துக்கள்---சுரேஸ்.ஆருர்.

adangamaru chandru said...

very good information really enjoyed reading. please do refer the books related to this so as to read and to update. please mail me to charles.maxe@gmail.com

Post a Comment

 

Blogger Widgets