Wednesday, November 4, 2009

நான் ஆத்திகனா! நாத்திகனா! - இறுதி பாகம்.

அருமையான ஒரு சிங்கப்பூர் பயணம், நண்பர் கிரியைத்தான் சந்திக்க முடியவில்லை, மன்னிக்கவும் கிரி.

ஆனால், என் நண்பர் முரளியையும் அவர் நண்பர் விக்னேஷ்சையும் சந்திக்க முடிந்தது, அவர்களுடன் நான்கு நாட்கள் நேரம் போனதே தெரியவில்லை.

சரி, இப்போது போன பதிவில் விட்டதை தொடர்வோம்.


யார், என்ன சொன்னால் நமக்கென்ன, நம் மனதை கேட்டு பார்ப்போம், உண்மைல நீ யாரூடா செல்லம்? என்று எனக்குள் நானே குழம்பியபோது...

ஒரு வேளை நம்மையும் அறியாமல் நமக்குள் ஒரு நாத்திகனோ?

ஈ.வெ.ராவின் கொள்கையைத்தான் விரும்புகிறோமோ? என்று அதில் உள்ளே போக, என்ன ஒரு ஆச்சரியம்!

மனிதனை மதி என்று சொன்ன அந்த பகுத்தறிவு-வாத நாத்திகரின், ஒரே ஒரு கொள்கைதான் கடவுள் இல்லை என்பது.

அது தவிர, சமூக சீர்திருதத்திற்காகவும், சாதி வேற்றுமையினை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் அந்த பகுத்தறிவு தலைவர், இன்னும் எத்தனையோ முத்து முத்தான உயர்ந்த கொள்கைகளுடன் போராடியிருகிறார்.

இதை பற்றி அவரே "குடி அரசு பத்திரிகை மே 1 1927 ம் ஆண்டு "குடிஅரசின் இரண்டு ஆண்டு பணி" என்ற தலைப்பில் எழுதியதில் " என்னென்னவற்றையோ, யார் யாரயோ கண்டித்திருக்கிறேன், எதை கண்டித்திருக்கிறேன், யாரை வையவில்லை என்று எனக்கு ஞாபகத்துக்கு வரவில்லை" என்று எழுதியும் இருக்கிறார்.



அந்த ஒரே ஒரு நாத்திக கொள்கையை தவிர, அவரின் மற்ற அனைத்தும் எனக்கும் பிடித்து இருக்கிறதே.

ஒரு வேளை அவர் வாழ்ந்த காலத்தில் இருந்த வாழ்கை முறை நாகரீகத்தின் படி, கடவுள் நம்பிக்கைதான் மற்ற சமுதாய இன்னல்களுக்கு அடிப்படை, என்று அவர் நினைத்து இருக்கலாம் இல்லையா?

ஆனால், இன்று தலைமுறைகள் மாறிய பின்னும், ஏன்? அவரின் அந்த ஒரே ஒரு நாத்திக கொள்கை மட்டும் முன்னிருத்த படுகிறது என்றேன்?

அப்போது தானே, கடவுளை நம்பும் இந்த முட்டாள்களின் ஓட்டை பெற்று ஆட்சியை பிடிக்க முடியும் என்றது பதில்.

என்னடா இது? அவர் கொள்கையும் திரித்து விட படுகிறதா?

கடவுளை நம்புவர்களை முட்டாள் என்று மட்டும் தான் சொன்னார், ஆனால் இதை பயன் படுத்தி பலன் அடைபவனை மகா மகா அயோக்கியன் என்று சொன்னாரே?

மேலும் நல்ல சமூக சீர்திருத்த பகுத்தறிவு இயக்க தலைவன் என்பவன், எந்த கட்சி, அரசியல் பதவிக்கும் ஆசை பட கூடாது என்று சொல்லிதானே தனக்கு கிடைத்த மற்றும் தன்னை தேடி வந்த பதவிகளை வேண்டாம் என்று மறுத்தார்?

சமூகத்தில் இறங்கி வேலைசெய்து சுத்தப்படுத்த நினைக்கும் பகுத்தறிவு லட்சியவாதியான நாம், ஏன் கட்சி பதவி ஆட்சியை பற்றி கவலைப்பட வேண்டும், போட்டியிட வேண்டும்? மாற்று கொள்கை உள்ள வேறுகட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டும்?

(இந்த கொள்கை பிடிக்கவில்லை என்று, இங்கிருந்து பிரிந்து போனவர்கள்தானே அனைவரும்)

அப்புறம் நமக்கும் மற்ற அரசியல் வாதிகளுக்கும் என்ன வித்தியாசம்?

அப்படி என்றால் ஈ.வெ.ரா என்ற சமூக சீர்திருத்தவாதியின் நல்ல சிந்தனைகள் மற்றும் எண்ணங்கள் இங்கு நம்மாலேயே சிதைக்கப் படுகிறதே? அவரின் உண்மையான அடிப்படை கொள்கை இங்கு அடிபடுகிறதே? என்றேன்?

இந்த முறை அவர்கள் கையை காட்டும் முன் நானே..

இவற்றால் பலனை அடைகிறவன் மகா மகா அயோக்கியன் என்று அந்த தலைவனின் வார்த்தையை திரும்ப ஒரு முறை சொல்லிவிட்டு வர...

என்னப்பா இது ரஜினி மாதிரி சாமி இருக்குன்ன, அப்புறம் கமல் மாதிரி எல்லாமே எல்லோருமே சாமின்ன, இப்ப சத்தியராஜ் மாதிரி மாத்தி மாத்தி பேசுற, ஏதாவது ஒரு முடிவுக்கு வந்தாத்தான, அதுக்கு பொருத்தமான ஒரு பொண்ண பாக்க முடியும்? என்றார்கள் பெற்ற கடைமை தவறாமல்.

ஓ, நம்ம கலாச்சார வாழ்க்கைபடி, பெண் கொடுக்க இது எல்லாம் முக்கிய தகுதியாச்சே! என்று.


போங்கடா...அணு குண்டே போட்டு சுடுகாடானாலும், உழைப்பை நம்பி உயர்ந்த ஜப்பானுக்கு போக போகிறேன் என்று சொல்லிவிட்டு, போய்விட்டேன்.

இடையில் உழைப்பை மட்டும் நம்பும் இவனுக்கு, நம்பி பெண்ணை கொடுக்கலாம்னு, என்னையும் நம்பி ஒரு நல்லவர் என் தங்கமணியை கொடுத்து விட்டார்.

அங்க போனா, செஞ்சது இயந்திரம் என்றாலும், அவர்களும் குனிந்து குனிந்து கும்பிட்டார்கள்! சிறந்த தலைவர் என்றார்கள்! என்னடா இது ஜப்பனுமா? யார் இது எல்லாம் என்றால்?

என்னை, ஏற இறங்க பார்த்து கேட்டார்கள், நீ உண்மையில் இந்தியனா? புத்தரை, சுபாஸ்சந்திரபோசை எல்லாம் யார் என்று கேட்கிறாய்? என்றார்கள்.

ஓ, நம் நாட்டில் உள்ள உள்குத்து பிரச்சனைகளில், நம் நாட்டில் பிறந்த நல்லவர்களை நாம் மறந்தாலும், உலகம் அவர்களை கொண்டாடுகிறது என்று பெருமை பட்டு கொண்டேன்.

சரி, ஜப்பானே கடைபிடிக்கும் போது, நாமும் அம்பேத்காரை போல புத்த கொள்கைகளுக்கு போய்விடுவோம் என்று பார்த்த போது, இலங்கை, ஜப்பான், சீனா, வியட்னாம், தென்கொரியா நாடுகள் என்னை வரவேற்றது.

அன்பே கடவுள் என்று சொல்லும் புத்தரையும், இயற்கை வளமான தகுதியையும் வைத்து இருப்பதால் சிங்கப்பூரை போல, ஆசியாவில் மிகசிறந்த இடமாக வந்து விடும் என்ற பயந்த நாடுகளின் சதியில் சிக்கி, அன்பின் அடையாளமே இல்லாத போர்களமாக மாறி விட்டதால் அப்போது, இலங்கை செல்ல என் மனம் விரும்பவில்லை.

இந்தியாவில் பிறந்த புத்தரின் கொள்கைகளை ஜப்பானில் ஆரமித்து வியட்னாமில் தொடந்து தென்கொரியாவில் வாழ்ந்து பார்க்க, முடிவில் கிடைத்து ஒரு சிறிய கதை.



அதாவது அரண்மனை, நாட்டை விட்டு காட்டுக்கு சென்று, போதி மரத்தடியில் முக்தி பெற்று, புத்தர் பல வருடங்கள் கழித்து தன் சொந்த நாட்டுக்கு வருவதாய் தகவல் வர, நாடே

அந்த மகானை வரவேற்க திருவிழா கோலம் கொண்டது, புத்தரும் வந்தார்.

அவரை வரவேற்ற அவரின் மனைவி, கடவுளை தேடி சென்றீர்களே! கண்டுவிட்டீர்களா அந்த கடவுளை என்று கேட்டார்?

புத்தரும் "ஆம்" என்றார்.

அப்படியா மிக்க மகிழ்ச்சி, யார் அந்த கடவுள்! எங்கே அவர்! என்றார்?
புத்தரும் "அன்பே கடவுள்" என்றார்.

அவர் மனைவி மீண்டும் சொன்னார், இதை தேடவா எங்களை எல்லாம் தனியாக தவிக்க விட்டுவிட்டு போனீர்கள்?

நானும், உங்கள் பெற்றோரும், இந்த நாட்டு மக்களும், உங்கள் மீது வைத்துதிருக்கும்
உண்மையான அன்பில் அந்த கடவுள் உங்களுக்கு தெரியவில்லையா என்று?

(கடவுளே ஆனாலும், பொண்டாட்டி கேள்விக்கு பதில் சொல்ல முடியாதுன்னு இங்கதான் புரிஞ்சுகிட்டேன்.)

அட்ரா சக்கை, சோக்கா கேட்டாங்க பாரு கேள்வி? ஆமா உண்மை தான? இதை தேடவா அவரு போதி மரம் தேடி போனாரு என்று நானும் கேட்க?

"குங்பு" தெரிந்து இருந்தாலும், புத்தமத துறவி என்பதால் அடிக்க கூடாது என்று நினைக்கிறேன், என்பது போல அவர் பார்க்க, நானே வீட்டிற்கு ஓடி வந்து விட்டேன்.

ஓடி வந்து, முகம் கழுவி துடைக்கும் போது கண்ணாடியில் பார்த்தால்...பாதி வாழ்கை முப்பது ஆண்டுகள் முடிந்து போய் இருந்தது.

பாதி வாழ்க்கையே முடிந்து விட்டது, இது வரை என்ன கிழித்து விட்டோம் என்று நினைத்து கொண்டு, தின தேதியையாவது கிழிப்போம் என்று கிழித்தபோது கண்ணில் பட்டது, வீரத்துறவி விவேகானந்தரின் படமும் வாக்கும்.

சரி ஆனாது ஆச்சு, இவர் என்ன சொல்கிறார் என்று பார்க்கும் முடிவில், படித்தால் அவர் சொல்கிறார்.

"நீ என்னவாக ஆக நினைக்கிராயோ, அதுவாகவே ஆகிறாய்."

"ஒருவர் சொல்வதை நம்பாதே, ஏன் என்றால் அது இன்னொருவர் சொன்னது,

படித்ததை நம்பாதே, ஏன் என்றால் அது இன்னொருவர் எழுதியது,

உண்மையை நீயாக உணரவேண்டும், அந்த அனுபவமே உண்மை, அப்போது உனக்கே புரியும், நீ யார் என்று."

அட இது நல்லா இருக்கே, நம் அனுபவத்தை நாமே ஏன் உணர்ந்து பார்க்க கூடாது? என்று அத்தனையையும் எழுதி பார்த்தால், நம்ப மறுக்கலாம் ஆனால் அதுவே நிஜம்.

சொல்வது வெவ்வேறு மொழியானாலும், நானறிந்த தமிழில் மொழிபெயர்த்த போது அத்தனைக்கும் அர்த்தம் என்னவோ ஒரே அர்த்தம்தான் வருகிறது.

அதாவது எல்லா சந்தர்ப்ப சூழ்நிலையையும், மாறுபட்ட மனித குணாதிசையங்களையும் தொகுத்து கொடுத்து, ஒரு தனிப்பட்ட மனித வாழ்கையில், எப்படி வாழ வேண்டும், எப்படி வாழ கூடாது, என்பதை மட்டும்தான் அத்தனை வேதமும் சொல்கிறது.

இதில் அடிப்படையாக இருப்பது "நம்பிக்கை", கடவுள் உண்டு, கடவுள் இல்லை, எல்லோரும் கடவுள், இவர் மட்டுமே கடவுள், அன்பே கடவுள் இப்படி கொள்கை எதுவானாலும், அந்த கொள்கைவாதி அதன் மேல் வைத்திருக்கும் நம்பிக்கை மட்டுமே இங்கு பொதுவானது.

சரி, இப்படி உணர்ந்து பார்த்தால், நீ யார் என்று உனக்கே தெரியும் என்றாரே? அப்படி பார்க்கும் போது நான் யார் என்று பார்த்தால்.

முதலில், கஷ்டத்தில் மட்டும் காப்பாற்ற சொல்லி கடவுளை வேண்டும் ஆத்திகனாக, ஒரு பிச்சைகாரனை போல இருந்தேன்.

பின், என் சந்தோசங்களில் மற்றும் நிரந்தரமில்லாத சிற்றின்பம் தான் வாழ்கை என்று, கடவுளை நினைக்காத ஒரு நாத்திகனாக இருப்பதாக நினைத்து, என்னை மறந்த மமதையில் ஒரு மிருகத்தை போல இருந்தேன்.

அதெல்லாம் சரி, இதெல்லாம் உணர்ந்து இப்போது நான் என்னவாக இருக்கிறேன் என்று பார்த்தால்.....

சுகமோ துக்கமோ, காலை எழுத்தவுடன், படுக்கும் முன் மற்றும் ஒவ்வொரு வேலையை துவங்கும் போதும், முடிக்கும் போதும் என் கடமையை நான் ஒழுங்காக செய்து விட்டேன் என்று கடவுளுக்கு நன்றி சொல்லி, மற்ற எல்லா நேரமும் பொய், துரோகம், அரசியல் இல்லாத நேர்மையான வாழ்க்கையை மற்றும் என் உழைப்பே கடவுள் என்று ஜாதி மத பேதம் இல்லாத மனிதனாக இருக்கிறேன்.


இதைத்தான், அவர் எல்லா உயிரினங்களிலும் உயர்ந்தது மனிதன், என்று சொல்லி இருக்கிறார் என்பதும் புரிந்தது.

இப்போது நிமிர்த்து பார்த்தால், நான் என் மதத்தில், இனத்தில் (மனிதஇனம்), நம்பிக்கையில், கொள்கையில் இன்னும் கடை பிடித்து நடக்க எவ்வளவோ நல்ல சிந்தனைகள், செய்கைகள் உள்ளது.

அதை முழுதாக தெரிந்து கொண்டு உண்மையாக கடைபிடிக்கும் முயற்சியில் இறங்கிய போது, மற்ற எந்த மதமும், கொள்கையும் தவறென்று குறை, குற்றம் கண்டுபிடிக்க எனக்கு உண்மையில் நேரம் இல்லை.

ஹலோ, இப்ப எதுக்கு தேவைஇல்லாம, இது எல்லாம் பேசுகிறீர்கள் என்று கேட்பவர்களுக்கும்...

என்ன பேசுவதென்று புரியாமல்தான் இதெல்லாம் பேசுகிறான் என்று புரிந்தவர்களுக்கும்...

சொல்ல நினைத்தது என்னான...

தனிப்பட்ட நாம் ஒவ்வொருவரும் விரும்பும் கொள்கை, நம்பிக்கையில், நாம் எல்லாம் தெரிந்து கொண்டோம் என்று நடிக்காமல், உண்மையில் அதை முழுதாக புரிந்து அறவழி நடக்க, அதில் எவ்வளவோ நல்ல பாதை மற்றும் கருத்துகள் இன்னும் நாம் அறியாமல் இருக்கிறது, முதலில் அதை சரியாக செய்கிறோமா என்று மட்டும் பார்ப்போம்.

உங்கள் கொள்கை, நம்பிக்கை எதுவானாலும், அதன் கருத்துகளை முழுமையாக புரிந்து கொண்டு அது படி நடப்பதை தவிர்த்து, மற்றவர்களின் கொள்கை, நம்பிக்கையில் குறைகளை தேடி, விவாதிக்க முயற்சிப்பது,நான் ஒரு முட்டாள் என்று, நானே என் நெற்றியில் எழுதிகொள்வதற்கு சமமாகும்.

இதன் முடிவில் கிடைப்பது ஒன்றும் இல்லை, ஆனால் இழப்பது நிச்சியம் பொன்னான காலம், வாழ்கை என்பது உறுதி.

அப்படியும் மற்றவர் நம்பிக்கையில் குறையை தேடினால், நீங்கள் நம்பும் கொள்கை, மதத்தில் சொல்லி உள்ள எந்த ஒரு பாவத்தையும் செய்யாத (பாவத்தை செய்யாத மாதிரி நடிப்பவர் அல்ல) ஒருவர் வந்து மற்றவர் நம்பிக்கையின் மீது குறை என்னும் முதல் கல்லை எறியட்டும் என்று, அந்த இடத்தை காலியாகவிட்டு பாருங்கள், நிச்சியம் அது காலியாகவே இருக்கும்.

ரமலானுக்கு நோன்பு கஞ்சி வாங்கி குடித்தோமா, தீபாவளிக்கு லட்டு வாங்கி ருசிச்சோமா, கிரிஸ்மஸ்க்கு பிலம்கேக் வாங்கி அடிச்சோமா, என்று எல்லோரும் எல்லா நேரமும் மகிழ்ச்சியாக வாழ்கையை வாழ்வதை விட்டு விட்டு, மதவாதிகளின் அரசியல் சூழ்ச்சிக்கு ஆளாவதில் பயன் ஒன்றும் கிடைக்கபோவதில்லை.

ஆனா ஒன்னு, இப்ப எல்லாம், நான் ஆத்திகனா நாத்திகனா என்று நினைப்பதே இல்லை, அதனால் எனக்கே தெரிகிறது, புரிகிறது, என் வாழ்க்கை என் கையில் மட்டுமே.

பிறப்பில் வருவது யாதென இறைவனை கேட்டேன்?
பிறந்து பாரென்று இறைவன் சொன்னான்!

வாழ்வில் வருவது யாதென கேட்டேன்?
வாழ்ந்து பாரென்று சொன்னான்!

இறப்பில் வருவது யாதென கேட்டேன்?
இறந்து பாரென்று சொன்னான்!

இறைவனை பார்த்து சிரித்து கேட்டேன்...

அனுபவித்தே அத்தனையும் புரிந்து கொண்டால்? ஆண்டவனே நீ எதற்கு?

பலமாய் சிரித்து இறைவன் சொன்னான்...

அந்த அனுபவமே நான்தானடா.


என் பதிவில் உங்கள் நேரத்துக்கு நன்றி.

25 பின்னூட்டம்:

ஜீவன்பென்னி said...

அருமையான கட்டுரை.

தமிழ்மணத்துல ஓட்டு போட்டாச்சு.

ஈ ரா said...

//மற்றவர்களின் கொள்கை, நம்பிக்கையில் குறைகளை தேடி, விவாதிக்க முயற்சிப்பது,நான் ஒரு முட்டாள் என்று, நானே என் நெற்றியில் எழுதிகொள்வதற்கு சமமாகும்.//

அப்பாடா, நான் ஏதும் உங்கள் நம்பிக்கையிலும் பதிவிலும் குறை காணவில்லை.. நான் முட்டாள் இல்லை தானே ?

சிங்கக்குட்டி said...

நன்றி ஜீவன்பென்னி.

சிங்கக்குட்டி said...

ஐயோ ஈ ரா... கோவமா இருந்தா ரெண்டு அடி அடிச்சுருங்க...:-)

நான் என் நம்பிக்கையை சொல்லவில்லை, மற்று மத கொள்கைகளை குறை சொல்வதை சொன்னேன் :-)

Menaga Sathia said...

அருமையான பதிவு!!

சிங்கப்பூர் பயணம் எப்படியிருந்தது?அதை பத்தி ஒரு பதிவு எழுதலாமே சிங்கக்குட்டி.நண்பர்களை சந்திப்பதே ஒரு மகிழ்ச்சியானது.அந்த சந்தோஷத்தை நல்லா அனுபவித்திருப்பீங்கன்னு நினைக்கிறேன்.

பித்தனின் வாக்கு said...

நல்ல பதிவு, நல்ல கருத்துக்கள். மரபு வழியில் விதைக்கப் பட்ட கருத்துக்கள் ஆன்மீகம், அறிவு வழியில் விதைக்கப் பட்ட கருத்துக்கள் பகுத்தறிவு. இரண்டும் குழப்பும் சமயங்களில் இது போன்ற சிந்தனைகளில் நானும் ஈடுபடுவது உண்டு. அன்னம் போல
பிரித்தறியாது போவதும் உண்டு. நன்றி.

// கோவமா இருந்தா ரெண்டு அடி அடிச்சுருங்க...:-) //
எனக்கு வர்ற கோபத்திற்கு உங்களை நாலைந்து அடிகள் அடிக்க வேண்டும். சிங்கை வருவதை ஏன் என்னிடம் அறிவிக்கவில்லை. குறைந்த பட்சம் என் பதிவில் பின்னூட்டம் மூலம் தெரியப் படுத்தி இருந்தால், நான் தங்களை சந்தித்து இருப்பேன் அல்லவா. மறுமுறை வரும்போது தெரியப் படுத்தவும். நன்றி.

கோவி.கண்ணன் said...

//அருமையான ஒரு சிங்கப்பூர் பயணம், நண்பர் கிரியைத்தான் சந்திக்க முடியவில்லை, மன்னிக்கவும் கிரி.
//

என்ன கொடுமை சார், எங்களுக்கெல்லாம் ஒரு வார்த்தை சொல்ல மாட்டிங்களா ? வந்து போன பிறகு பதிவில் எழுதுவிங்களா ?
:(

கிரி said...

//அருமையான ஒரு சிங்கப்பூர் பயணம், நண்பர் கிரியைத்தான் சந்திக்க முடியவில்லை, மன்னிக்கவும் கிரி.//

இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது! இவ்வளோ தூரம் வந்துட்டு இப்படி சென்றால் எப்படி!

சிங்கக்குட்டி said...

நன்றி மேனகா.

நீண்ட இடைவெளிக்கு பிறகு சந்தித்த (மனைவி ஊரில் இல்லாத) ஆண்களின் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் சொல்லவா வேண்டும்...

விடிய விடிய போட்கீ என்னும் இடத்தில் Halloween night 2009 அதிர்ந்ததுதான் உண்மை :-)

சிங்கக்குட்டி said...

நன்றி பித்தனின் வாக்கு.

பொய் சொல்ல விரும்பவில்லை, நீங்கள் சிங்கப்பூர் என்பது எனக்கு நினைவில் இல்லை.

கண்டிப்பாக அடுத்த முறை அதி விரைவில் நாம் சந்திப்போம், உங்களுக்கு இது என் வாக்கு.

சிங்கக்குட்டி said...

உங்கள் அன்புக்கு மிக்க நன்றி கோவி.கண்ணன்.

உங்களிடமும் பொய் சொல்ல விரும்பவில்லை, நீங்கள் சிங்கப்பூர் என்பது எனக்கு தெரியும் நாம் தொலைபேசியில் பேசி இருக்கிறோம்,

ஆனால் சொல்லிக்கொள்ளும் அளவு பிரபல பதிவர் இல்லாத என்னை நீங்கள் சந்திக்க விரும்புவீர்களோ மாட்டீர்களோ என்று எனக்குள் ஒரு தயக்கம்.

ஆனால் உங்கள் பின்னூட்டத்தை பார்த்தவுடன், தவறு செய்து விட்டேன் என்று புரிகிறது.

அடுத்த முறை வரும் போது, உங்கள் அனைவரையும் ஒரு விருந்து வைத்து சந்திக்கிறேன்.

சிங்கக்குட்டி said...

மன்னிக்கவும் கிரி, நான் வந்த இடத்தில் கணினி இல்லாததால் தேடி தேடி ஒரே ஒரு நாள் மட்டும் தான் உங்கள் பின்னூட்டத்தை பார்க்க முடிந்தது. மேலும் முதல் பதிவு பின்னூட்டத்தில் சொன்ன படி என் தொலை பேசி எண்ணை உங்கள் மின் அஞ்சலுக்கு அனுப்பி இருந்ததால் நீங்கள் எப்படியும் எண்ணை தொடர்பு கொள்வீர்கள் என்று இருந்தேன்.

மிக முக்கியம் எல்லா நேரமும் வெளியில்தான் சுற்றிக்கொண்டு இருந்தோம்.

மீண்டும் அந்த பின்னூட்டத்தை இங்கு உங்களுக்காக தருகிறேன்.

-------------------------------------------------

November 3, 2009 3:06 AM
சிங்கக்குட்டி said...
இருக்கட்டும் கிரி.

இரண்டு முறை மின்அஞ்சல் அனுப்பினேன், மேலும் எனக்கும் நேரம் கிடைக்கவில்லை.

நான் பதிவுலகத்திற்கு வர காரணமாய் இருந்த பதிவரை சந்திக்க முடியவில்லை :-(

சனி இரவு போட்கீ என்னும் இடத்தில் Halloween night நடந்ததால் உங்கள் பின்னூட்ட பதிலை இங்கு வந்த வந்தவுடன்தான் பார்த்தேன்.

நான் நினைத்தது என் மின் அஞ்சலில் தற்காலிக தொலைபேசி எண் இருந்ததால், எப்படியும் நீங்கள் அழைப்பீர்கள் என்று நினைத்தேன்.

அடுத்த முறை மீண்டும் சந்திக்க முயற்சிப்போம்.

-------------------------------------------------

கிரி said...

என்னமோ போங்க! :-(

சிங்கக்குட்டி said...

விடுங்க கிரி, கூடிய விரைவில் நாம் நிச்சியம் சந்திப்போம் சிங்கையில் :-)

Jaleela Kamal said...

சூப்பரா சிங்கப்பூர் பயண‌த்தில் அதுவும் பதிவர்களுடன் கொண்டாடி இருக்கீங்க வாழ்த்துக்கள்.அருமையான விளக்கமான பதிவு.

வாங்க‌ வ‌ந்து என் பிலாக்கில் உங்க‌ள் அவார்டை வாங்கிக்க‌ங்க‌

சிங்கக்குட்டி said...

உங்கள் அன்புக்கு மிக்க நன்றி ஜலீலா :-)

Robin said...

நல்ல சிந்தனை!

சிங்கக்குட்டி said...

உங்கள் அன்புக்கு மிக்க நன்றி ராபின்.

தொடரட்டும் நம் நட்பு.

கோவி.கண்ணன் said...

//உங்களிடமும் பொய் சொல்ல விரும்பவில்லை, நீங்கள் சிங்கப்பூர் என்பது எனக்கு தெரியும் நாம் தொலைபேசியில் பேசி இருக்கிறோம், //

தொலைபேசியில் பேசி இருக்கோமா ? எனக்கு நினைவே இல்லையே :(

சிங்கக்குட்டி said...

நல்லவர்கள் மற்றவர்களுக்கு செய்த உதவியை நினைவில் வைத்து இருக்க மாட்டார்கள் என்று படித்து இருக்கிறேன், அது உண்மை என்று புரிகிறது.

சிங்கை நாதன் விசையமாக ஒரு முறை என் சிங்கை நண்பர் மூலம் நீங்கள் டாக்ஸியில் சென்று கொண்டு இருக்கும் போது நாம் பேசினோம்.

சரி விடுங்கள் அடுத்த முறை நேரில் பேசுவோம்.

Anonymous said...

நல்ல பதிவு சிங்கக்குட்டி.

priyamudanprabu said...

ரமலானுக்கு நோன்பு கஞ்சி வாங்கி குடித்தோமா, தீபாவளிக்கு லட்டு வாங்கி ருசிச்சோமா, கிரிஸ்மஸ்க்கு பிலம்கேக் வாங்கி அடிச்சோமா, என்று எல்லோரும் எல்லா நேரமும் மகிழ்ச்சியாக வாழ்கையை வாழ்வதை விட்டு விட்டு, மதவாதிகளின் அரசியல் சூழ்ச்சிக்கு ஆளாவதில் பயன் ஒன்றும் கிடைக்கபோவதில்லை.
/////

அதே அதே

priyamudanprabu said...

பிறப்பில் வருவது யாதென இறைவனை கேட்டேன்?
பிறந்து பாரென்று இறைவன் சொன்னான்!

வாழ்வில் வருவது யாதென கேட்டேன்?
வாழ்ந்து பாரென்று சொன்னான்!

இறப்பில் வருவது யாதென கேட்டேன்?
இறந்து பாரென்று சொன்னான்!

இறைவனை பார்த்து சிரித்து கேட்டேன்...

அனுபவித்தே அத்தனையும் புரிந்து கொண்டால்? ஆண்டவனே நீ எதற்கு?

பலமாய் சிரித்து இறைவன் சொன்னான்...

அந்த அனுபவமே நான்தானடா.
....

எங்கேயோ படித்தது போல இருக்கே ??!?!? யார் சொன்னது??
கண்ணதாசனா?

priyamudanprabu said...

அருமையான கட்டுரை.

சிங்கக்குட்டி said...

வாங்க பிரபு வருகைக்கு கருத்துக்கும் நன்றி.

ஆம், அது கண்ணதாசனின் வரிகள் தான், பாரதியும், கண்ணதாசனும் எனக்கு பிடித்த கவி.

Post a Comment

 

Blogger Widgets