Monday, May 9, 2011

"அட்சய திருதியை + புகைப்படம்"

அட்சயத் திருதியை இரண்டு நாட்களாக மாற்றிவிட்டதாக வந்த செய்தியை படித்து சிரித்தாலும், இது காலப்போக்கில் பல ஆயிரம் ஆண்டுகளாக கொண்டாடி வந்த "சித்திரை தமிழ் புத்தாண்டை" அரசியல் ஆதாயத்துக்காக "தை" முதல் நாள் மாற்றியது போல, வியாபார உள் நோக்கோடு நம் வியாபாரிகளாய் மாற்றிக்கொண்டது என்பதை வரும் தலைமுறைகள் மறந்து தங்கள் சேமிப்பை கரைக்க போகிறார்கள் என்ற வேதனையும் நெருடுகிறது.

யார் கொடுத்தார்கள் இவர்களுக்கு இந்த அதிகாரத்தை? என ஒரு சந்தேகமும் கூடவே வருகிறது?

"அட்சயத் திருதியை" என்று இந்துமதம் சொல்வது என்ன? என்பதை புரிந்து கொள்ள எடுத்த முயற்சியே இந்த பதிவு.

பூரியசஸ் மன்னரின் கதை சிறுவயது முதல் தமிழர் அனைவரும் அறிந்ததே, பூரியசஸ் மன்னருக்கு மகாவிஷ்ணு தரிசனம் கொடுத்த நாள்தான் திரிதியை.

அந்த நல்ல நாளில் செய்யும் தான தருமங்கள் "அட்சய பாத்திரம்" போல அளவற்ற பலனைக் கொடுக்கும் என்பதால் திரிதியை தினத்தை "அட்சய திரிதியை" என்று சொல்லும் வழக்கம் வந்தது.

இந்து மதத்தை பொறுத்தவரை "வளருதல் அல்லது என்றுமே குறையாதது" என்னும் பொருளே "அட்சயம்", பார்வதி தனது பிறந்த வீட்டுக்கு வந்ததும், பரசுராமர் அவதரித்ததும் அட்சய திருதியையன்றுதான்.

கிருதயுகத்தில் வறுமையில் வாடிய குசேலர் தனது பால்ய நண்பர் கிருஷ்ணரை சந்திக்க தனது கந்தலான மேலாடையில் ஒரு படி அவலை எடுத்துக்கொண்டு வந்தபோது, அந்த அவலை பாசத்துடன் உண்ட கிருஷ்ணர் ‘அட்சயம்’ என சொல்ல, குசேலரின் மண் குடிசை மாளிகையாகி குசேலர் வற்றாத பெரும் செல்வத்துக்கு அதிபதியானார், இவை நடந்ததும் அட்சயத் திருதியை அன்றுதான்.

ஆக, சித்திரை வளர்பிறையின் மூன்றாவது நாளான அட்சய திருதியையன்று செய்யும் எந்த ஒரு செயலும் விருத்தியாகும் என்றும், அதனால் அட்சயத் திருதியையன்று கடவுளுக்கு பூஜைகள் செய்து, தன்னால் ஆன தான தருமங்களை செய்து நல்ல முறைகள் வாழவே இந்து மதம் சொல்கிறது.

அட்சய திருதியைக்கு பொருட்கள் மட்டுமே வாங்க வேண்டும் என்பது தவறான நம்பிக்கை.

உண்மையில் அன்று சுமங்கலி பூஜைசெய்வது மற்றும் உணவு, ஆடை போன்ற நம்மால் முடிந்த வாழ்வின் அடிப்படை பொருட்களை தானம் கொடுப்பதுதான் மிக சிறந்த செயலாகும்.

அன்றைய தினம் தானம் கொடுபவர்களிடம் எப்போதும் குறையாத அட்சய பாத்திரம் இருப்பது போல பலன் கிடைக்கும் என்பது இந்துமத நம்பிக்கை.



அட்சய திருதியைக்கு செல்வம் (தங்கம்) வாங்க வேண்டும் என்று ஏன் வந்தது என்றால்? அத்தினத்தன்று லட்சுமி குடியிருக்கும் பொருட்களை வாங்கலாம் என்பதும் இந்துமத நம்பிக்கை.

இந்து பெண்கள் தாலி முதல் அனைத்து தங்க ஆபரங்களையும் செல்வத்துக்கு அதிபதியான லட்சுமியாக பார்ப்பதால் வந்த இடை சொருகல்தான் இந்த "தங்கம் வாங்க வேண்டும்" என்பது.

உண்மையில் லட்சுமி குடியிருக்கும் பொருட்கள் என்று பார்த்தால், நாம் வாங்க வேண்டிய பொருட்கள் மஞ்சள், கைக்குத்தலில் வந்த முனை முறியாத பச்சரிசி மற்றும் "கல்"உப்பு போன்றவைதான் (நன்றி தினமலர் ஆன்மீக வினா விடை).

நம் புது வீட்டின் கிரஹப் பிரவேசத்தில் முதன் முதலில் பசு நுழைய அத்துடன் "கல்"உப்பு மற்றும் அரிசியை முதலில் கொண்டு சென்று வைத்து, பின் கறந்த பசுவின்பாலை காய்ச்சுவது என்பது அந்தப் பொருட்களில் லட்சுமி குடியிருப்பதால் என்ற நம்பிக்கையில்தான் (இப்போது பக்கெட் பால்தான் எல்லாம் என்பது வேறு விசையம்).

இது போல அட்சயத் திருதியை தினத்தில் லட்சுமிகரமான எந்த ஒரு மங்களகரமான பொருட்களையும் வாங்குவதே அடிப்படை அட்சயத் திருதியையின் அர்த்தம்.

கற்காலத்தில் இடி, மின்னல், பாம்பு என்று தனக்கு தீங்கு அல்லது தன்னை விட சத்தி கொண்ட இயற்கை, வானம் பூமி என்று அனைத்தும் மனிதனுக்கு கடவுளாக தெரிந்தது.

அந்த வழி வந்த நமக்கு இன்னும் நம் அடிப்படை எண்ணம் மாறாமல் இப்போது தங்கம் அல்லது பணத்தில் அதிக மதிப்பு கொண்டவை மட்டும் லட்சுமியாக(கடவுளாக) தெரிகிறது.

அப்படி பார்த்தல் கூட சுக்கிரனை உரிய கிரகமாக கொண்ட லட்சுமிக்கு பொருத்தமாக அட்சயதிருதியை தினத்தில் வெள்ளி வாங்குவதுதான் குடும்ப நலனுக்கு பொருந்தும் என்பதுதான் சரியான கருத்து.

ஆக, அட்சயதிருதியை அன்று லட்சுமியை மட்டும் மனதில் கொண்டு தங்கம் மட்டுமே வாங்க வேண்டும் என்று நினைப்பது அறியாமை.

அட்சயதிருதியை அன்று லட்சுமி மட்டுமில்லாமல், சிவன் பார்வதி, நாராயணனனையும் மற்றும் நம் நலனுக்காக வாழ்ந்த முன்னோகளையும் நினைத்து பூஜை செய்தால், நம் பாவம் அனைத்தும் விலகி நல்ல வாழ்வை பெறலாம் என்பதை புரிந்து கொண்டு, நம் வாரிசுகளுக்கும் இந்த உண்மை கருத்தை சொல்லி அவர்களை சரியான பாதையில் கொண்டு செல்வது நம் கடமையாகும்.

வழக்கம் போல பொதுவாக தெரிந்த விசையத்தை பற்றி என் சொந்த கருத்தை பகிர்வதோடு முடிக்காமல், இன்று நான் "கிளிக்"யத்தில் பிடித்தவை சில உங்கள் பார்வைக்கு (Sony DSC-H50).

(புகைப்படத்தை சொடுக்கி பார்த்தல் இன்னும் அழகாக தெரியும்)













நன்றி.

என்றும் அன்புடன்,

Photobucket

Photobucket

Monday, April 25, 2011

சாய்பாபா...!

இது சாய்பாபா கடவுளா இல்லையா என்றோ!, அல்லது அவர் இயற்கை எய்தியதை கிண்டல் செய்யவோ!, அல்லது மதசார்பான ஆன்மீக பதிவோ அல்ல.

என் வாழ்கையில் சாய்பாபாவோடான அனுபவத்தையும் நான் புரிந்து கொண்டதையும் பகிர்ந்து கொள்வதே இங்கு என் நோக்கம்.

எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் பிறப்பின் அடிப்படையில் இந்து மத முறையில் கடவுள் நம்பிக்கை கொண்ட குடும்பமானாலும், உயிரோடு வாழும் எந்த மனிதரையும் கடவுள் என்று காலில் விழும் பழக்கம் இல்லாததுதான் எங்கள் குடும்பம்.

அதே போல நாங்கள் நம்பவில்லை என்பதால் மற்ற யாரையும் விமர்சனமும் செய்ததும் இல்லை.

இந்த நிலையில் எங்கள் பக்கத்துக்கு வீட்டில் குடிவந்தவர்களுடன் எங்களுக்கு மிக நெருங்கிய பழக்கம் வந்தது, அவர்களும் ஆண் பிள்ளை இல்லை என்பதால் என் மீது சொந்த மகன் போல அன்பு செலுத்தினர்.

"சாய்பாபா" என்ற வார்த்தையே முதன் முதலில் கேள்விபட்டது அவர்கள் மூலம்தான், அவர்கள் குடும்பம் அவர் மீது அதீத நம்பிக்கை கொண்டு அவரை கடவுளாக தொழுது வந்தனர்.

அப்போது எனக்கு ஒரு ஐந்து வயதிற்குள்தான் இருக்கும் என்று நினைக்கிறேன், ஒரு முறை வழக்கம் போல சாய்பாபாவின் அற்புதங்களை பற்றி பேசிக்கொண்டு இருந்த அந்த அம்மா, அவர் கொடைக்கானல் வருவதாகவும் அவரை நேரில் சந்திக்க எங்களையும் அழைத்து செல்வதாக சொல்ல...!

அவர்களுடன் இருந்த நட்பின் அடிப்படையில் என் தாயும் சம்மதிக்க, ஒரு விடுமுறை பயணம் போல அனைவரும் தயாரானோம்.



கொடைக்கானலில் அது ஒரு அழகான மற்றும் அமைதியான பங்களா, அதுதான் சாய் ஸ்ருதி ஆசிரமா என்று சரியாக எனக்கு நினைவில்லை.

நாங்கள் காத்திருக்க, சிறிது நேரத்தில் முழு காவி உடையுடன் சாய்பாபா நடந்து வந்தார், நடை பாதைக்கு இருபுறமும் மக்கள் அவரை கும்பிட, அவர்களுக்கு ஆசிர்வாதம் செய்தபடி எங்களை கடந்து போனார்.

சிறுவனாக அங்கு கொடுத்த சாய்பாபா படத்தை கையில் வைத்து விளையாடிக்கொண்டு இருந்த நான், என்ன நினைத்தேனோ, அவர் பின்னால் ஓடி, அவர் முன் சென்று பாதையில் நின்று அவரிடம் அந்த படத்தை நீட்டினேன்.

அவர் நடக்கும் பாதையில் யாருமே போகவில்லை என்றாலும் நான் மிக சிறுவன் என்பதால் என்னை யாரும் தடுக்க வில்லை என்றே நினைக்கிறேன்.

என்னை பார்த்து சிரித்த அவர் என் தலையில் தன் கையை வைத்து " பங்காரு...! பங்காரு...!" என்று சொன்னவர்  (தெலுங்கில் பங்காரு என்றால் தங்கம் என்று அர்த்தம்) நான் நீட்டிய படத்தை வாங்கி "With Love Baba" என்று கையப்பமிட்டு மீண்டும் என்னிடமே கொடுத்து விட்டு சென்றார்.

அதன் பின் அந்த படம் நீண்ட நாட்கள் எங்கள் வீட்டில் இருந்த நினைவு இருக்கிறது, ஆனால் இன்னும் இருக்கிறதா என்று தெரியவில்லை!. இதுதான் நான் அவரை சந்தித்த அனுபவம்.

அதன் பின் நாட்கள் நகர வளரும் பருவத்தில் விவேகானந்தர் சுபாஸ் முதல் கீதை, குரான் பழைய (புதிய) ஏற்பாடு முதல் ஓசோ வழியாக கண்ணதாசனின் "கம்ப ரசம்" வரை (இது தடை செய்த புத்தகம் என்று நினைக்கிறேன்) கையில் கிடைத்த புத்தகத்தை எல்லாம் படிக்கும் விடலை பருவத்தில் சாய்பாபா மீது எனக்கு பெரிய அபிப்பிராயம் எதுவும் கிடையாது.

காரணம் கையில் இருந்து விபூதி, மோதிரம், வாயில் இருந்து லிங்கம் எல்லாம் எடுத்துதான் ஒரு கடவுள் தன்னை கடவுள் என்று நிரூபிக்க வேண்டுமா? அல்லது ஒரு கடவுள் தன்னை தானே கடவுள் என்று சாதாரண மக்களிடம் உணர்த்த விரும்புவது ஏன்? என்று எனக்குள் பல கேள்விகளை கேட்டு கொள்வேன்.

இப்படியாக நான் என் பாதையில் போக மொத்தமாக சாய்பாபா என்ற வார்த்தையையே மறந்து போனேன், அவர் சார்ந்த செய்திகளை கூட படிப்பதில்லை, ஆனாலும் "திரு.அப்துல்கலாம்" போல அறிவியல் விஞ்ஞானிகள் கூட இவர்கள் காலில் விழுவதை பார்த்து குழம்பி இருக்கிறேன்.



இப்படி வருடங்கள் ஓட, மீண்டும் அவர் விசையத்தில் என் கவனம் போனது தெலுங்கு கங்கை கால்வாய் திட்டம் நடைமுறை படுத்தப்பட்டபோது, ஒரு நாட்டின் தேசிய அரசாங்க பணியில் ஒரு மத சாமியாரின் பங்கு என்னவாக இருக்க போகிறது, இவரை ஏன் முன்னிலை படுத்துகிறார்கள் என்று படிக்கும் போதுதான் புரிந்தது, சாய் சேவா என்று ஆங்காங்கே பஜனைகள் பாடிக்கொண்டு இருந்த ஒரு ஆன்மீக அமைப்பு "சாய் சேவா சமிதி" என்று நாட்டின் மிக பெரிய ஒரு சமூக சேவை அமைப்பாக வளர்ந்து இருப்பது.

இந்த சேவை நிறுவனம் ஆந்திரா-தமிழக அரசுகள் கொண்டு வந்த தெலுங்கு கங்கை திட்ட கால்வாய் அமைக்கும் பணிக்காக அதாவது சென்னை நகரின் குடிநீர் பிரச்சினையை போக்க ரூ.100 கோடி நிதியை அந்த நிறுவனத்தின் தலைவரான சாய்பாபா தனது டிரஸ்ட்டில் இருந்து வழங்கியுள்ளார் என்று தெரிந்த போது, வியப்பை விட அந்த நிறுவனத்தின் மீது ஒரு நல்ல மதிப்பு எனக்கு வந்தது.

எனக்கு தெரிந்து இந்திய வரலாற்றில் வேறு எந்த ஒரு ஆன்மீக மத சார்பான நிறுவனமும் இவ்வளவு பெரிய தொகையை நாட்டு மக்கள் நன்மைக்காக கொடுத்ததில்லை என்றுதான் நினைக்கிறேன்.

இப்படி தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் ஆந்திரா,மராட்டியம், ஒரிசா மாநிலங்களிலும் தனது டிரஸ்ட்டின் மூலம் நிதி கொடுத்து குடிநீர் திட்டங்களை செய்து கொடுத்துள்ளார்.

ஆந்திரமாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 750 கிராமங்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுத்து கிட்டத்தட்ட12 லட்சம் மக்களுக்கு மேல் பயன் அடைந்து வருகின்றனர்.

இது தவிர இந்த ஆசிரம நிறுவனத்தின் மூலம் பல்கலைக்கழம், மருத்துவ கல்லூரியும் நடத்தப்பட்டு வருகிறது இதன் மூலம் பொதுமக்களுக்கு இலவச கல்வி, மருத்துவ சிகிச்சை என பல மாநிலங்களில் பிரமாண்டமாக ஏழைகளுக்கு அனைத்தும் இலவச மாக இந்த நிறுவனம் கொடுகிறது என்று தெரிந்த போது...!

அவர் கடவுளோ இல்லையோ!, அது எனக்கு தெரியாது, தேவையும் இல்லை, ஆனால் இந்த நிறுவனத்தின் நல்ல செயல்கள் அனைத்தும் கடவுளின் செயலாகவே என் மனதில் பட்டது.

எத்தனயோ லட்சம் மக்கள் தனி ஒரு நிறுவனத்தால் அல்லது அந்த நிறுவன தலைவரால் பயன் பெறுகிறார்கள் என்றால், அது இருப்பவனிடம் கொள்ளை அடித்து இல்லாதவனுக்கு கொடுக்கும் ஒரு கொள்ளைகார நிறுவனமாக இருந்தால் கூட பாராட்டலாமே...!

அப்படி இருக்கும் போது, இது ஒரு சாதாரண ஆன்மீக அமைப்பு இதை பாராட்டுவதில் எனக்கு தவறாக எதுவுமே தோன்றவில்லை.

தாகத்தை தீர்க்கும் நதி நீருக்கு யாரும் நதிமூலம் பார்ப்பதில்லை, அது போல அது எப்படி வந்த பணமாயினும் எதற்கு பயன் படுகிறது என்ற அடிப்படையில் இங்கு நான் ரிஷிமூலம் பார்க்க விரும்பவில்லை.

ஒரு சில நூறுகளை கொடுத்து ஓட்டு வாங்கி கணக்கிடமுடியாத அளவு ஊழலை செய்யும் அரசியல் கட்சிகள் கூட மக்களுக்கு இப்படி எதுவும் செய்வதில்லையே?

அப்படி இருக்க ஒரு தனிமனிதர் தன் நிறுவனத்தின் மூலம் இதை அனைத்தையும் சாதித்து இருக்கும் போது அவர் அந்த நிறுவன தொண்டர்களுக்கு கடவுளாக தெரிவதில் எந்த தவறும் இல்லை என்றே நினைக்கிறேன்.

இவரால் மருத்துவ உதவி பெற்று உயிர் பிழைத்த அனைவருக்கும் இவர் வேறு எப்படி தோன்ற முடியும் நினைக்கிறீர்கள்?

சற்று சிந்தித்து பாருங்கள்...!, இன்றைய அரசியல் கொள்ளையர்களை விட "சாய்பாபா" ஒன்றும் அத்தனை மோசமாக என் கண்களுக்கு தெரியவில்லை.

எனவே, அவர் கடவுளா இல்லையா என்ற பைசாவுக்கு பெறாத விவாதங்களை ஒதுக்கிவிட்டு, பல நல்ல விசையங்களை செய்த ஒரு நல்ல  நிறுவனத்தின் தலைவர் என்ற முறையில், உடலை விட்டு பிரிந்த அந்த ஆத்மா அமைதியில் உறங்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
 

Blogger Widgets