Tuesday, September 15, 2009

மத சடங்குகள்

கடவுள், மதம் மட்டுமில்லாமல் இப்போது மத சடங்குகளையும் பற்றி வரும் விமர்ச்சனம் அனைத்தும் நாம் அனைவரும் அறிவோம். அதுவும் இந்து திருமண சடங்கு மற்றும் மந்திரங்களை பற்றித்தான் இணையத்தில் அதிகமாக நாம் காணமுடியும்.

இதில் என் தனிப்பட்ட கருத்தை சொல்லவே இந்த முயற்சியே தவிர, மற்ற யாருடைய கருத்தையும் தவறென்று விவாதிக்க அல்ல.

திருமண கன்னிகா தானம் என்பது ஒரு அருமையான இந்து மத சடங்கு மற்றும் சந்தோசமான குடும்ப நிகழ்ச்சி.

இந்த கன்னிகாதானத்தில், ஒரு தகப்பன் தனது மகளை அக்னி, நிலம், ஆகாயம் மற்றும் அனைத்து சக்திகளையும் சாட்சியாக வைத்து, மணமகனிடம் எனது மகளை உனக்கு மனைவியாக தாரை வார்க்கிறேன், இவளை நீ ஒரு போதும் கண் கலங்காமல் காப்பாற்று என்றும், பின் அந்த மணமகன் அவளை கண் கலங்காமல் காப்பாற்றுவேன் என்பதும்.

அதே போல் மணமகள் ஒருவனுக்கு ஒருத்தி என்ற தத்துவத்தின் அடிப்படையில், தன் சொந்த பந்தங்களை எல்லாம் கணவனுக்கு பின் வைத்து, கணவனுக்கு உண்மையாக வாழ்வேன் என்றும் அனைத்து சக்திகளுக்கு முன் உறுதி கூருவது தான் இந்த சடங்கின் பொருள் மற்றும் நோக்கம்.

இந்து மதமும், தமிழர் வரலாறும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்ததுதான், முதலில் முட்டையா கோழியா என்பது போல், இதில் இந்துமதமா இல்லை தமிழனா? என்ற விவாதம் இங்கு வேண்டாமே "ப்ளீஸ்", மொத்தத்தில் இந்துமத பாரம்பரிய வழிமுறைகளை தமிழர்கள் கடைப்பிடித்து வருகிறோம்.

ஆரம்ப காலத்தில், வெறும் மாலை மாற்றியே திருமணம் நிகழ்ந்ததாகவும், தொல்காப்பியர் காலத்துக்குப் பின்னர், படிப்படியாக, திருமணத்தைச் சடங்காக மாற்றியதாக சொல்லப்படுகிறது.



இன்று நிகழ்வதை போல் இந்த முறை மூலம் திருமணம் ஒரு அந்தனரால் (பிராமினரால்) அக்னி வளர்த்து மந்திரம் சொல்லி நடத்தி வைக்கப்படுகிறது. சிலப்பதிகாரத்தில் கோவலனுக்கும் கண்ணகிக்கும் திருமணம் நிகழ்ந்ததும், பிராமணரை முன் வைத்துதானாம்.

இந்த திருமண வழிமுறையில் உள்ள சடங்குகள், சேலையை வேட்டியுடன் இணைத்து தீயினைச் சுற்றுவதும், அம்மி மிதித்து காலில் மெட்டி அணிவித்து அருந்ததி பார்ப்பதும், தாய்மாமன் முன்னின்று திருமணத்தைச் செய்வதன் அர்த்தம் என்ன? என்று பலர் பலவாறும் கூறுவார்கள்.

தமிழர்களிடத்தே, திருப்பாவை கூறித் திருமணம் செய்வதும் வழக்கில் இருந்துள்ளது, இருக்கின்றது என்றும். இதைத்தான் தாய்லாந்திலும், திருப்பாவையை மொழி பெயர்த்து, அதைப் பாடி திருமணங்களை தாய்லாந்து நாட்டவர் செய்கின்றனர் என்றும் ஒரு தரப்பில் சொல்லப்படுகிறது.

மேலும், தற்பொழுது நடைபெறும் சில தமிழர் திருமணங்களில் தமிழில் மந்திரம் கூறி, திருக்குறள் கூறி, மாங்கல்யம் கட்டுகின்றார்கள், காரணம் என்னவென்றால், சமஸ்கிருதத்தை சரியாக தமிழர் விளங்கிக் கொள்வது சற்றுக் கடினம் என்பதால்.

ஆனால், அந்தனர்கள் சமஸ்கிருதத்தில் நன்கு கற்று தெரிந்தவர்கள், அதனால் தான் முறையாக கற்று தேர்ந்தவர்களை அழைப்பது, இப்படி அழைப்பதால் எந்த தவறும் இல்லை என்றே நான் சொல்லுவேன்.



மற்றபடி, இடையில் உள்ள இந்த மொழி இடைவெளியை சாதகமாக்கிக்கொண்டு, இந்து திருமண முறைகளையும் மந்திரங்களையும் ஆபாசமாக்கி எழுதுவதும், மத மாற்றத்துக்காக இதை பெரிதாக்கி ஆபாச படுதிக்காட்டுவதும் இன்று ஒரு நாகரீகமாகி விட்டது என்பதுதான் வருந்ததக்க உண்மை.

ஆன்மீக ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும், ஒவ்வொரு மதத்திலும் வழக்கத்தில் உள்ள புராண வார்த்தைகளுக்கும், செயளுக்கும் இலைமறை காயாக பல அர்த்தங்கள் உண்டு என்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம், அதை நாம் இங்கு மறந்து விடக்ககூடாது.

அன்று மார்கழி மாதத்தில் அதிகாலையில் குளிர்ந்தநீரில் குளித்து விட்டு, வீதியில் பஜனை பாடி சென்றால் இறை அருள்கிட்டும் என்று சொன்னால், அது பிழைப்புக்காக சிலர் சொன்னது, உண்மை என்றால் ஆண்டவன் வந்து நேரில் சொல்லட்டும் என்று இதை ஜாதி,மத மற்றும் நாத்திக பிரச்னையாக்கி நக்கல் பேசிய நல்லவர்கள்,

இன்று ஓசோன் பூமிக்கு மிக அருகில் வரும் டிசம்பார் மாதத்தில் (அதே மார்கழி மாதத்தில்) காலை நேரத்தில் நடந்தால் ரத்த ஓட்டம் சீராகி, மூளை நன்றாக வேலை செய்யும் என்று சொன்ன உடன், தங்களுக்கு இல்லாத ஒன்றை வேலை செய்ய வைக்க முதல் ஆளாய் கடற்கரைக்கு ஓடியது வேடிக்கை இல்லையா?

அது போலத்தான் திருமண சடங்கு மற்றும் மந்திரங்கள், இந்த மந்திரங்கள் எப்படி மற்ற யாருடைய நம்பிக்கைகளை விமர்ச்சிப்பது இல்லையோ, அது போல, இதை நம்புவர்களின் மனதை மற்ற யாரும் காயப்படுத்தக்கூடாது, அதுவே நல்ல மனிதநேயம் ஆகும்.

இவற்றில் சர்சைக்கு உள்ளாகும் இந்து திருமணத்தில் சொல்லப்படுகின்ற சில சமஸ்கிருத மந்திரங்கள் இவை.
 
"சோமஹ ப்ரதமோ
விவேத கந்தர்வ
விவிதே உத்ரஹ
த்ருதியோ அக்னிஸடே
பதிஸ துரியஸதே
மனுஷ்ய ஜாஹ''

"தாம்பூஷன் சிவதாமம் ஏவயஸ்வ
யஸ்யாம் பீஜம் மனுஷ்யா பவந்த்தீ
யான ஊரு உஷதி விஸ்ரயாதை
யஸ்யா முஷந்தஹா ப்ரஷரே பஷேபம்..."

"விஷ்ணுர் யோனி கர்ப்பயது
தொஷ்டா ரூபாணி பீசமிது
ஆசிஞ்சாது ப்ரஜபதி
தாதா கர்ப்பந்தாது..."

எனக்கு சமஸ்கிருதம் தெரியாது, அதனால்....

இந்த மந்திரம் மணமகளை நோக்கி சொல்லப்படலாம்!, இந்த மந்திரங்களை பற்றி சந்தேகம் எழலாம்? இன்னும் சொல்லப்போனால் அந்த சந்தேகங்கள் உண்மையாககூட இருக்கலாம்!.

ஏனென்றால், "தெய்வம் முழுக்க சந்தேகத்துக்கு இடமானது, ஆனால் அடையும்போது அது முழுக்க உண்மையானது" என்று அர்த்தமுல்ல இந்து மதம் சொல்கிறது. அது போலத்தான் இந்து மத சடங்குகளும்.



சரி, இதற்கு இந்துவாகிய தமிழன் என்னதான் செய்ய முடியும்? என்று நினைத்துப் பார்த்தேன், அதில் எனக்கு தோன்றிய கருத்துக்களை இனி பார்ப்போம்.

இங்கு பிரச்சனையின் மையம் மொழி மற்றும் அதன் அர்த்தம், அதனால் அனைவரும் சமஸ்கிருதத்தில் கற்றுத்தேற வேண்டும் என்பது நடவாத ஒன்று, மேலும் நான் பழைய பதிவில் சொன்னபடி "கடவுளின் மொழி இது மட்டுமே" என்று சொல்லி கடவுளையும் ஒரு குறுகிய வட்டத்துக்குள் கொண்டு வரும் முயற்சியாகிவிடும் இது.

திருப்பாவையோ, தேவாரமோ அல்லது திருவாசகமோ பாடி திருமணங்களைச் செய்யச் சொல்லலாம், இதில் தவறு ஏதும் இல்லை, ஏன் என்றால் மதத்தை போலவே, இதுவும் அவரவர் நம்பிகையை பொருத்தது மாறுபடும்.

அதே நேரத்தில் "சமஸ்கிருதத்தில் மந்திரம் சொல்லித் தான்" திருமணம் செய்ய வேண்டும் என்றில்லை, என்ற கருத்தையும் ஒரு வகையில் ஏற்றுக் கொள்ளலாம், ஏன் என்றால் இன்று அது பலருக்கு புரியவில்லை என்பதும் நியாயம்.

ஆனால், சமஸ்கிருதத்தில் மந்திரம் சொல்லி திருமணம் செய்வது தவறு என்றோ முட்டாள் தனம் என்றோ, ஏக மனதாக அதன் மீது நம்பிக்கை வைத்து உள்ளவர்கள் மனம் காயப்படும் படி ஏற்றுகொள்ள முடியாது.

அதற்கு பதிலாக "புரிய வில்லை என்று புரிந்து கொள்ளும் ஆர்வத்தோடு கேட்கும்" நல்ல கேள்விக்கு விளக்கம் கொடுக்கும் முறையில், அதே மந்திரத்தை தமிழில் இன்றைய கால நிலைக்கு ஏற்ற அர்த்ததுடன் சொல்லச் சொல்லலாம்.

அல்லது ஒருவர் சமஸ்கிருதத்தில் சொல்லும் போது மற்றொருவர் கையில் ஒரு மைக்கை கொடுத்து அப்போது நடை பெரும் சடங்கின் காரணத்தையும் விளக்கத்தையும் அனைவரும் கேட்கும் படி தமிழில் சொல்ல செய்யலாம்.

ஏன் என்றால், "தமிழ் வளர்ப்போம்" என்பது எப்படி எல்லா வகையிலும் நியாயமோ, அதுபோல தமிழை வளர்க்க சமஸ்கிருதத்தை கொல்வேன் என்பது எந்த வகையிலும் நியாயம் ஆகாது, என்பதே இங்கு என் கருத்து.

அது சரி, யார் யாருக்கோ புரியவில்லை என்பதற்காக, நான் ஏன்? இதை செய்ய வேண்டும் என்றால்? வெற்று பத்திரத்தில் சாட்சி கையெழுத்து வாங்குவதைப்போல இல்லாமல், நாம் விரும்பி திருமணத்திற்கு அழைத்த அனைவருக்கும் புரியாத ஒன்றை செய்வதை விட, அது என்னவென்று படித்துக்காட்டி அனைவருக்கும் புரிய வைப்பது நம் கடமை தானே?

இதனால் நிச்சயம் நமது பாரம்பரிய கலாச்சாரம் கெட்டு விடாது, மேலும் நமது கலாச்சாரத்தை அனைவரும் புரிந்து கொண்டு, எந்த ஆபாச விமர்ச்சனமும் இல்லாமல் வளரவே இது வழிவகுக்கும்.

இப்படி செய்வதால், இந்த தர்மம் கெட்டு விடும், அந்த கலாச்சாரம் மாறிவிடும் என்று குப்பை காரணம் சொல்லி குட்டையை குழப்பி குதர்க்கம் சொல்லுபவர்களிடம், ஐயா, கால நிலைக்கு ஏற்றவாறு மாறிக் கொண்டே வருவது தான் நமது மனித கலாச்சாரம்! என்று அதன் விளக்கத்தை கொடுக்கவேண்டும்.

அதாவது, தந்தையின் தொழிலை செய்யும் அடிமை மகனும், கணவனை இழந்த விதவையை கழு அல்லது உடன்கட்டை ஏற்றி கொள்ளப்படுவதும் கூட நமது கலாச்சாரமாக இருந்ததுதான், அவ்வளவு ஏன், பாரதி வந்து தன் செல்லம்மாளை கையை பிடித்துக்கொண்டு பாருங்கள் முட்டாள்களே என்று வீதியில் நடக்கும் வரை, அது கூட நமது கலாச்சாரம் இல்லைதான்.

ஆக, காலத்துக்கு ஏற்ற ஆரோக்கியமான நடைமுறைகளை மாற்றிக்கொள்வது தான் ஒரு கலாச்சார வளர்ச்சிக்கு உண்மையில் உதவும் இல்லையா?



மேலும், நம் இறை நம்பிக்கை மற்றவர்களின் இறை நம்பிக்கையை பாதிக்காதவாரு அனைவரையும் எளிதில் சென்று அடைய நாம் வழி வகுக்காவிட்டால், வேறு யார் வந்து செய்வார்கள்? என்பதே இங்கு என் கருத்தே தவிர, தனிப்பட்ட மதத்தை பரப்புவதோ அல்லது எந்த ஒரு மதத்தையோ, இறை நம்பிக்கையோ இழிவு படுத்துவது இங்கு என் நோக்கமல்ல.

சரி, இதை ஏன்? நான் சொல்ல வேண்டும் என்றால், மாற்று மதமோ கொள்கையோ உள்ளவர்கள் சொன்னால்தான், இது நாத்திக, சமய, ஜாதி, பிரச்சனை.

ஆனால், என் மதத்தில் எனக்கு இல்லாத உரிமையா? என்ற திமிருடன், ஏற்று கொள்ளக்கூடிய மாற்றத்தை, என் இறை நம்பிக்கை, மதத்தின் புனிதம் கெட்டு விடாமல் நான் வரவேற்கிறேன் என்று சொல்ல முடியும் இல்லையா.

அதுமட்டும் இல்லாமல், என் மத, இறை நம்பிக்கை இழிவு படுத்தப்பட்டு கொச்சை படுத்தப்படும் போது, அங்கு நான் வந்து விளக்கம் கொடுத்து அந்த அழுக்கை கழுவாமல், வேறு ஒருவர் வந்து செய்யும் வரை என்னால் காத்திருக்க முடியாது என்ற கர்வத்துடன் தலை நிமிர்ந்து சொல்லும் போது, நம் நம்பிகையை குறை சொல்லி விட்டானே, என்ற ஆதங்கத்தில் மற்ற எந்த மதமோ, மத நம்பிக்கையோ அவமான படுத்த இங்கு வழி இல்லாமல் போய் விடும் இல்லையா?

அதனால்தான் சொல்கிறேன்.

நன்றி!

இதன் தொடர்புள்ள முந்தைய பதிவுகளை படிக்காதவர்களுக்காக, இங்கு மீண்டும் அந்த தலைப்புகளுக்கு இணைப்பு கொடுத்து இருக்கிறேன்.

மனமும் மதமும்

காதலும் கடவுளும்

ஐய்யய்யோ! இந்த மொக்கைய படிச்சதே பெரிய விசையம்! இதுக்கு முன்கதை வேறயான்னு, நீங்க நினைக்கிறது எனக்கு கேட்கிறது :-)).

ஆக, மக்களுக்கு சொல்லிக்கிறது என்னான...பதிவு பிடிச்சா ஓட்ட போடுங்க, இல்லனா பின்னூட்டத்துல திட்ட போடுங்க .......திட்டு எல்லாம் எங்களுக்கு லட்டு மாதிரி தெரிஞ்சுக்கங்க .....

ஏய்...ஹலோ ... என்ன போன பதிவுல திட்ட வாரேனிங்க...ஆளையே காணோம் ????

18 பின்னூட்டம்:

Unknown said...

ரொம்ப பெரிய பதிவு அண்ணன்... ஓட்டு போட்டாச்சு..

Menaga Sathia said...

அப்பாடாஆஆஆ எவ்வளவு பெரிய பதிவு.உங்களுக்கு பொறுமை ரொம்ப அதிகம்.ஒட்டுப் போட்டாச்சு ப்ரதர்.

சிங்கக்குட்டி said...

நன்றி பாயிஷா, மேனகா.

பதிவின் கரு அப்படி, நம் கருத்து வரும் அதே நேரத்தில், மற்ற யாருடைய நம்பிக்கையும் காயப்படுத்தாமல் கொண்டு செல்ல கொஞ்சம் பெரிய பதிவாகிவிட்டது.

வழிப்போக்கன் said...

நீங்கள் எழுதியதில் உண்மை இருக்கிறது.
சமஸ்க்ருதம் தெரியாதுதான்.
ஆனால் சமஸ்க்ருத மந்திரங்கள் ஒலியை அடிப்டையாகக் கொண்டவை என்பதும் அந்த ஒலிகள் முறைப்படி உச்சரிக்கப்படும்போது பலவித நன்மைகளை உண்டாக்கும் என்பதை நான் நிதர்சனமாக அனுபவித்துள்ளேன்.
வெறுப்பு என்பது மனப்பிறழ்ச்சியால் ஏற்படுவது விஞ்ஞானபூர்வமான உண்மை. மொழிவெறியும் அப்படித்தான். இதை உணர்ந்து செயல்படுவதால், வாழ்க்கை அமைதியாகவும் இன்பகரமாகவும் செல்லும்.
அன்புடன்
கிருஷ்ணமூர்த்தி

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//இதில் என் தனிப்பட்ட கருத்தை சொல்லவே இந்த முயற்சியே தவிர, மற்ற யாருடைய கருத்தையும் //

உங்கள் தனிப்பட்ட கருத்து நன்றாக இருக்கிறது.

சிங்கக்குட்டி said...

உங்கள் கருத்துக்கும் முதல் வருகைக்கும் நன்றி கிருஷ்ணமூர்த்தி.

நன்றி சுரேஷ்.

sundar said...

Excellent.Samskritham is a phonetic based language with intonations.This is evident when you do varuna japam and other rites where pronounciation as well as observance of rules impact the ritual

Anonymous said...

ரொம்ப நல்லா எழுதிருக்கீங்க சிங்க குட்டி.ஆனால் ரொம்ப நீளமா இருக்கு..பாதி தான் படிச்சேன்..வேலை முடிந்ததும் மீதியையும் படிப்பேன்..பூக்மார்க் செய்து வைத்துள்ளேன் இந்த பக்கத்தை..



அன்புடன்,

அம்மு.

சிங்கக்குட்டி said...

நன்றி சுந்தர், அம்மு.

உங்கள் முதல் வருகைக்கு மீண்டும் ஒரு நன்றி சுந்தர் :-)

வால்பையன் said...

பெண் தானம்னு சொல்லலாம்!
அல்லது மகள் தானம்னு சொல்லலாம் ஏன் கன்னிகாதானம்!
என் மகளை பொத்தி பொத்தி கன்னிதன்மையீட வச்சிருக்கேன், நீ கண் கலங்காம பார்த்துகோ என்பதற்காகவா!?

பார்ப்பனர்கள் சமஸ்கிருதத்தில் பாட்டுபாடி திருமணம் செய்யட்டும் அது அவர்கள் இஷ்டம், மற்றவர்களையும் அதே போல் செய்தால் தான் நல்லது என்று ஏன் புருடா விடவேண்டும்!

சிங்கக்குட்டி said...

ஒரு "கன்னி" பெண்ணை உனக்கு தாரை வார்க்கிறேன் என்பதால் அது கன்னிகாதானம்.

என் மகள் "கன்னி இல்லை" ஆனாலும் பெண், அதனால் தான் உன்னை போல் ஒரு முற்போக்கு கொள்கையுள்ள மணமகனுக்கு பெண்தானம் அல்லது மகள் தானம் பண்ண வருகிறேன் என்று சொல்ல உங்களை போல யாருக்கும் தோணவில்லை என்பதற்க்காக நானும் வந்துகிறேன்.

சிங்கக்குட்டி said...

நான் பதிவில் சொல்லிய படி சமஸ்கிருதத்தில் மந்திரம் சொல்லித் தான் "திருமணம் செய்ய வேண்டும் என்றில்லை" அது அவரவர் நம்பிகையை பொருத்தது மாறுபடும்.

உங்களுக்கு வேண்டும் என்றால் "அப்படி போடு போடு" பட்டை போட்டுக்கூட உங்கள் திருமணத்தை நடத்தாலாம், யாரும் கேட்க முடியாது, அதே போல் மற்றவர்கள் முறையையும் நீங்கள் கேட்க முடியாது என்பது நியாயம் என்று நினைக்கிறன்

சிங்கக்குட்டி said...

அதெல்லாம் சரி வால்பையன், உங்கள் பதிவில் நான் போட்ட பின்னூட்டம் எங்கே? ஆக,என் கருத்து உங்களுக்கு புரிகிறதால், விளக்க பதிவு எழுதும் வேலை எனக்கு இல்லை! நன்றி.

வால்பையன் said...

// உங்கள் பதிவில் நான் போட்ட பின்னூட்டம் எங்கே?//

அதை பார்த்து தான் நான் இங்கே வந்தேன்!

சிங்கக்குட்டி said...

நீங்கள் பார்த்தது சரி! மற்றவர்களும் பார்க்க வேண்டாமா?

எப்படியோ என் வேலையை குறைத்தற்க்கு நன்றி :-)

ஈ ரா said...

//அதே நேரத்தில் "சமஸ்கிருதத்தில் மந்திரம் சொல்லித் தான்" திருமணம் செய்ய வேண்டும் என்றில்லை, என்ற கருத்தையும் ஒரு வகையில் ஏற்றுக் கொள்ளலாம், ஏன் என்றால் இன்று அது பலருக்கு புரியவில்லை என்பதும் நியாயம். //

//நம் இறை நம்பிக்கை மற்றவர்களின் இறை நம்பிக்கையை பாதிக்காதவாரு அனைவரையும் எளிதில் சென்று அடைய நாம் வழி வகுக்காவிட்டால், வேறு யார் வந்து செய்வார்கள்? என்பதே இங்கு என் கருத்தே தவிர, தனிப்பட்ட மதத்தை பரப்புவதோ அல்லது எந்த ஒரு மதத்தையோ, இறை நம்பிக்கையோ இழிவு படுத்துவது இங்கு என் நோக்கமல்ல.//

//ஏன் என்றால், "தமிழ் வளர்ப்போம்" என்பது எப்படி எல்லா வகையிலும் நியாயமோ, அதுபோல தமிழை வளர்க்க சமஸ்கிருதத்தை கொல்வேன் என்பது எந்த வகையிலும் நியாயம் ஆகாது, என்பதே இங்கு என் கருத்து.//

முதல் முறையாக வருகிறேன்.. நல்ல கருத்துக்கள்... வாழ்த்துக்கள்...

// அல்லது ஒருவர் சமஸ்கிருதத்தில் சொல்லும் போது மற்றொருவர் கையில் ஒரு மைக்கை கொடுத்து அப்போது நடை பெரும் சடங்கின் காரணத்தையும் விளக்கத்தையும் அனைவரும் கேட்கும் படி தமிழில் சொல்ல செய்யலாம். //

முதலில் மணமக்கள் அதை தெரிந்து கொள்ள வேண்டும்.. அவர்களுக்கத் தான் நம்பிக்கையும் அக்கறையும் வேண்டும்..

ஈ ரா said...

முதலில் திருமணத்தை நடத்தும்போது, முக்கியமான நம் நலம்விரும்பி நபர்களை மட்டுமே அழைத்து எளிமையாக முழுமனதுடன் மணமக்களும் அவர்கள் பெற்றோர்களும் நல்ல எண்ணங்களோடு மகிழ்ச்சியாக செய்தலே நல்லது... போடோகிராபர், சாப்பாட்டு பிரச்சினை, அலங்காரப்ரசினை , கூட்டத்தையும் விருந்தினர்களையும் சமாளிக்க வேண்டியது என்று எல்லாவற்றையும் தலையில் போட்டுக்கொண்டு டென்சன் ஆவதால், திருமணம் என்னும் சடங்கு அதன் முக்கிய நிகழ்விலிருந்து தடம் மாறித்தான் போகிறது...

சிங்கக்குட்டி said...

முதல் வருகைக்கு நன்றி ஈ ரா.

உங்கள் கருத்து உண்மை, இன்றைய அவசர உலகத்தில் திருமணசடங்கு அதன் உண்மை நிகழ்விலிருந்து தடம் மாறித்தான் போகிறது.

Post a Comment

 

Blogger Widgets